-முனைவர்
மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.
இமாம் மதீனா
பள்ளிவாசல், பட்டினம்பாக்கம், சென்னை-28
---------------------
பிற
மதங்களில் கடவுளை வணங்குவதற்கான சட்டதிட்டங்களோ குறிப்பிட்ட நேரமோ கிடையாது.
அதாவது இப்படித்தான் வணங்கிவழிபட வேண்டும் என்ற முறையோ இந்தந்த நேரத்தில்தான்
வணங்கி வழிபட வேண்டும் என்ற நேரக்கட்டுப்பாடோ இல்லை. ஆனால் இஸ்லாமிய மார்க்கத்தை
மட்டுமே ‘தீன்’ என்று ஏற்றுக்கொண்ட இறைவன், மனிதன் தன்னை இப்படித்தான் வணங்கி வழிபட வேண்டும்; இந்தந்த நேரத்தில்தான் தொழ வேண்டும் என்று
தன் தூதர்மூலம் கற்பித்தான். அதன்படி இன்று உலகில் வாழும் இருநூறு கோடி
முஸ்லிம்கள் அல்லாஹ்வை நம்பிக்கைகொண்டு அவனையே வணங்கி வழிபட்டு வருகின்றனர். அந்த
வகையில் முஸ்லிம்கள் பாக்கியசாலிகள் என்றுதான் கூறவேண்டும்.
இறைவனை
எப்படி வணங்க வேண்டும் என்று தெரியாமல் நின்றவாறும், நடந்தவாறும் வாகனத்தில் சென்றவாறும் கையைக் காட்டி முத்தமிட்டுக்
கொள்கின்றார்கள். ஆனால் முஸ்லிம்கள் ஒரு நாளில் ஐந்து தடவை இறைவனை வணங்கி
வழிபடுகின்றார்கள். தொழுவதற்குமுன்
தம்மைச் சுத்தம் செய்துகொள்கின்றார்கள். அதனால் வெளிப்புறச் சுத்தம் கிடைத்து
விடுகின்றது. இறைவனை வணங்கி வழிபடுவதால் உள்ளத்திற்கு அமைதி கிடைக்கின்றது. அதனால்
முஸ்லிம்கள் மற்றோரைவிட மகிழ்ச்சியாகவே வாழ்கின்றார்கள்.
ஐவேளைத்
தொழுகை: முஸ்லிம்கள் அனைவரும் படைத்தோன் அல்லாஹ்வை ஒவ்வொரு நாளும் ஐவேளை வணங்கி
வழிபடுவது கட்டாயக் கடமையாகும். இது குறித்து அல்லாஹ் கூறுகின்றான்: (நபியே!)
சூரியன் சாய்ந்ததிலிருந்து இரவின் இருள் சூழும் வரை (ளுஹர், அஸர், மஃக்ரிப்,
இஷா ஆகிய நேரத்)
தொழுகைகளைத் தொழுது வாருங்கள். ஃபஜ்ர் தொழுகையும் தொழுது வாருங்கள். ஏனென்றால், நிச்சயமாக ஃபஜ்ர் தொழுகையானது மலக்குகள்
கலந்துகொள்ளும் தொழுகையாகும். (17: 78) “உங்கள் பிள்ளைகளை-அவர்கள் ஏழு வயதினராக
இருக்கும்போது தொழுக ஏவுங்கள்... என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி
வஸல்லம் கூறினார்கள். (அபூதாவூத்: 495)
ஐவேளைத்
தொழுகையைக் கூட்டாகப் பள்ளிவாசலில் தொழுவதே சிறந்தது. பள்ளிவாசலில் அதற்காகவே
பாங்கு சொல்லப்படுகிறது. பாங்கு சொல்லப்பட்டால் அதற்குப் பதிலளிப்பது
ஒவ்வொருவர்மீதும் கடமையாகும். ஒருவர் தனியாகத் தொழுதாலும் தொழுகை
நிறைவேறிவிடும். என்றாலும் தனியாகத் தொழுவதைவிடக் கூட்டாகத் தொழுவதே
இருபத்தைந்து மடங்கு நன்மையைத் தரும். அது குறித்து அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு
அலைஹி வஸல்லம் கூறினார்கள்: கூட்டாக (ஜமாஅத்துடன்) தொழுவது, உங்களுள் ஒருவர் தனியாகத் தொழுவதைவிட
இருபத்தைந்து பங்கு அதிகச் சிறப்புடையதாகும். (முஸ்லிம்: 1147)
யாராக
இருந்தாலும் கூட்டாகத்தான் தொழ வேண்டும் என்பதை உணர்த்துமுகமாகப் பின்வரும்
செய்தி அமைகிறது. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் பார்வையற்ற ஒரு மனிதர்
வந்து, "அல்லாஹ்வின் தூதரே! என்னைப்
பள்ளிவாசலுக்கு அழைத்து வரக்கூடிய வழிகாட்டி எவரும் எனக்கு இல்லை'' என்று கூறி, வீட்டிலேயே தொழுதுகொள்ளத் தமக்கு அனுமதியளிக்குமாறு கோரினார்.
அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவருக்கு அனுமதியளித்தார்கள். பிறகு அவர்
திரும்பிச் சென்றபோது அவரை அழைத்து, "தொழுகை
அறிவிப்புச் சத்தம் உமக்குக் கேட்கிறதா?'' என்று
கேட்டார்கள். அவர் "ஆம்'
(கேட்கிறது) என்றார்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் "அப்படியானால் நீர் அதற்குச் செவிசாய்ப்பீராக!'' (கூட்டுத்தொழுகையில் வந்து கலந்துகொள்வீராக!)
என்று கூறினார்கள். (முஸ்லிம்: 1157) பார்வையற்றவரே கூட்டுத் தொழுகையில்
கலந்துகொள்ள வேண்டும் எனும்போது மற்றவர்கள் கட்டாயம் அதில் கலந்துகொள்ள
வேண்டும் என்பது தெளிவாகிறது.
சுன்னத்
தொழுகை: கடமையான தொழுகை மட்டுமின்றி, சுன்னத்தான
தொழுகைகளும் உள்ளன. ஒவ்வொரு தொழுகைக்கும் முன்னும் பின்னும் நபியவர்கள்
தொழுதுள்ள தொழுகைகள் இரண்டு வகைகளாக உள்ளன.
அவ்வப்போது தொழுதவை (சுன்னத்), தொடர்ந்து
தொழுதவை (சுன்னத் முஅக்கதா). உறுதி செய்யப்பட்ட சுன்னத்துகள் பன்னிரண்டு
ரக்அத்துகள் உள்ளன. அது குறித்து அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
கூறியதாவது: யார் சுன்னத்தான பன்னிரண்டு ரக்அத்துகளைப் பின்பற்றிவந்தாரோ
அவருக்குச் சொர்க்கத்தில் ஒரு வீடு கட்டப்படுகிறது. அவை: ளுஹ்ர் தொழுகைக்குமுன்
நான்கு ரக்அத்; ளுஹ்ர் தொழுகைக்குப்பின் இரண்டு
ரக்அத்; மஃக்ரிப் தொழுகைக்குப்பின் இரண்டு
ரக்அத்; இஷாவுக்குப்பின் இரண்டு ரக்அத்; ஃபஜ்ருக்குமுன் இரண்டு ரக்அத் ஆகும். (இப்னுமாஜா:
1140 / 1130)
வாஜிப்
தொழுகை: இது கட்டாயத்திற்கு மிக அருகிலான, நிச்சயமான ஆதாரத்தால் நிரூபிக்கப்பட்ட வழிபாடு
ஆகும். இது பெரும்பாலும் ஹனஃபி மத்ஹபில் தனியாக வகைப்படுத்தப்படுகிறது. மற்ற
மத்ஹப்களில் பெரும்பாலும் இது ஃபர்ளுடன் சேர்த்தே பார்க்கப்படுகிறது. ஹனஃபி
மத்ஹபில் இஷா தொழுகைக்குப் பிறகு தொழவேண்டிய வித்ரு 3 ரக்அத் வாஜிப் ஆகும்.
அதில் குனூத் (துஆ) ஓதுதல் வாஜிப் ஆகும்.
வித்ரு
தொழுகை குறித்து அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியுள்ள செய்தி:
“அல்லாஹ் உங்களுக்கு ஒரு தொழுகையைக் கூடுதலாக வழங்கியுள்ளான். அது வித்ரு ஆகும்.”
(முஸ்னது அஹ்மத்: 6693) வித்ரு தொழுகை
குறித்து மற்றொரு செய்தி: “இரவில் உங்களது கடைசித் தொழுகையாக வித்ரை
ஆக்கிக்கொள்ளுங்கள்” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். (புகாரீ:
998)
ஹனஃபி
மத்ஹபில் ஈதுல் ஃபித்ர்,
ஈதுல் அள்ஹா ஆகிய இரண்டு
தொழுகைகளும் வாஜிப் பட்டியலில் இடம்பெறுகின்றன. இதை முஸ்லிம் ஆண்கள் ஜமாஅத்துடன்
தொழுவது வாஜிப் ஆகும்.
நஃபில்
தொழுகை: நஃபில் தொழுகை என்பது கடமையற்ற (வாஜிபு அல்லாத), ஆனால் அல்லாஹ்வுக்கு மிக விருப்பமான கூடுதல் தொழுகையாகும்.
ஃபர்ளு தொழுகைகளுக்கு மேலாக,
ஒரு முஸ்லிம் தன்
ஈமானையும் அல்லாஹ்வுடன் உள்ள நெருக்கத்தையும் அதிகரித்துக்கொள்ள
சுயவிருப்பத்துடன் தொழும் தொழுகைகள்தாம் நஃபில். இது அல்லாஹ்வின்
நெருக்கத்தையும் அன்பையும் பெற வழிவகுப்பதோடு, மறுமை நாளில் ஃபர்ளு தொழுகைகளில் உள்ள குறைகளை நிறைவு செய்யவும்
உதவும். நஃபில் தொழுகை குறித்து அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், அல்லாஹ் சொன்னதாகத் தெரிவித்த செய்தி: எனக்கு
விருப்பமான செயல்களில் நான் கடமையாக்கிய ஒன்றைவிட வேறு எதன் மூலமும் என் அடியான்
என்னுடன் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்வதில்லை. என் அடியான் கூடுதலான (நஃபிலான)
வணக்கங்களால் என் பக்கம் நெருங்கி வந்துகொண்டேயிருப்பான். இறுதியில் அவனை நான்
நேசிப்பேன்... (புகாரீ: 6502)
நஃபில்
தொழுகைகளின் வரிசையில்,
தஹஜ்ஜுத் தொழுகை, இஷ்ராக் தொழுகை, ளுஹா தொழுகை,
அவ்வாபீன் தொழுகை, தஹிய்யதுல் மஸ்ஜித் (மஸ்ஜிதுக்குள்
நுழைந்ததும் தொழுகின்ற) தொழுகை,
தஸ்பீஹ் தொழுகை, இஸ்திகாரா தொழுகை, ஷுக்ர் (நன்றி செலுத்தும்) தொழுகை முதலானவை இடம்பெறுகின்றன.
அவ்வாபீன்:
கடமையான தொழுகையைத் தவிர,
நஃபிலான-உபரியான
தொழுகைகள் நிறைய உண்டு. அதை நாம் விரும்பியவாறு எவ்வளவு வேண்டுமானாலும் தொழலாம்.
அதேநேரத்தில் குறிப்பிடத்தக்க நஃபிலான தொழுகைகளும் உண்டு. அவற்றுள் ஒன்றுதான்
மஃக்ரிப் தொழுகைக்குப்பின் தொழுகின்ற ஆறு ரக்அத்துகள் கொண்ட அவ்வாபீன்
தொழுகையாகும். அவ்வாபீன் என்றால் ‘பாவமன்னிப்புத் தேடுவோர்’ என்று பொருள். இந்தத் தொழுகையைத் தொழுவோருக்கு அல்லாஹ்
பாவமன்னிப்பு வழங்குகிறான். “யார் மஃக்ரிப் தொழுகைக்குப் பின் ஆறு ரக்அத்கள்
தொழுகின்றாரோ அவருடைய பாவங்கள்-அவை கடல் நுரையளவு இருந்தாலும்- மன்னிக்கப்படும்”
என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்.
தராவீஹ்
தொழுகை: ரமளான் மாதத்தில் அதிகமான நன்மைகளை ஈட்டிக்கொள்ளும் ஆர்வத்தில்
முஸ்லிம்கள் அனைவரும் தத்தம் மஹல்லா பள்ளிவாசலில் கூட்டாக இத்தொழுகையில்
ஈடுபடுவார்கள். குர்ஆனை மனனம் செய்த ஹாஃபிழ் ஒருவர் அல்லது இருவர் இத்தொழுகையை
நடத்துவர். ஒரு மாதத்தில் குர்ஆன் முழுவதும் ஓதி முடிக்கப்படும். இந்நடைமுறை காலம்
காலமாக உள்ளது. அந்த அடிப்படையில் இத்தொழுகை இரண்டு ஹரம்களிலும் இருபது ரக்அத்களே
இதுவரை தொழுவிக்கப்படுகின்றன.
“யார்
ரமளானில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் (தொழுது) வணங்குகிறாரோ அவர்
(அதற்கு) முன் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும்” என்று அல்லாஹ்வின் தூதர்
ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்: (புகாரீ: 2008-2009)
இஷ்ராக்
தொழுகை: இது சூரிய உதயத்திற்குப்பின் 15 முதல் 20 நிமிடங்களுக்குப் பின்
தொழப்படுகிற தொழுகையாகும். இதன் அளவு இரண்டு ரக்அத் ஆகும். இதனைத் தொழுவதால்
என்ன நன்மை கிடைக்கும்? “ஒருவர் அதிகாலைத் தொழுகையை ஜமாஅத்துடன் தொழுதுவிட்டு சூரியன்
உதயமாகும் வரை (அந்த இடத்திலேயே) இறைவனை நினைவுகூர்ந்த வண்ணம்
அமர்ந்திருந்துவிட்டுப் பிறகு இரண்டு ரக்அத்கள் (இஷ்ராக்) தொழுதால் அவருக்கு ஒரு
ஹஜ் ஓர் உம்ராவின் நன்மை போன்றது கிடைக்கும் என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு
அலைஹி வஸல்லம் கூறினார்கள். மேலும் முழுக்க முழுக்க முழுக்க (ஹஜ், உம்ராவின் நன்மை கிடைக்கும்) என்றும்
கூறினார்கள். (திர்மிதீ: 535)
ளுஹா
தொழுகை: முற்பகல் 11 மணியளவில் தொழுகின்ற தொழுகையாகும். அல்லாஹ்வின் தூதர்
ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறுகின்றார்கள்: உங்களுள் ஒருவர் ஒவ்வொரு காலையிலும்
(தமது உடலிலுள்ள) ஒவ்வொரு மூட்டிற்காகவும் தர்மம் செய்வது கடமையாகும்; இறைவனைத் துதிக்கும் ஒவ்வொரு துதிச்
சொல்லும் (-சுப்ஹானல்லாஹ்) தர்மமாகும். ஒவ்வொரு புகழ்மாலையும் (-அல்ஹம்து
லில்லாஹ்) தர்மமாகும். ஒவ்வோர் "ஓரிறை உறுதிமொழி'யும் (-லா இலாஹ இல்லல்லாஹ்) தர்மமாகும்; அவனைப் பெருமைப்படுத்தும் ஒவ்வொரு சொல்லும் (-அல்லாஹு அக்பர்)
தர்மமே! நல்லதை ஏவுதலும் தர்மமே! தீமைகளைத் தடுத்தலும் தர்மமே! இவை அனைத்திற்கும்
(ஈடாக) முற்பகல் நேரத்தில் (ளுஹா) இரண்டு ரக்அத்கள் தொழுவது போதுமானதாக அமையும்.
(முஸ்லிம்: 1302)
தஹஜ்ஜுத்
தொழுகை: இது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு உபரியான கடமையாக இருந்தது.
அது குறித்து அல்லாஹ் கூறுகின்றான்: தஹஜ்ஜுத் தொழுகை (உங்கள்மீது கடமையாக
இல்லாவிடினும்) நீங்கள்,
நஃபிலாக இரவில் ஒரு
(சிறிது) பாகத்தில் தொழுது வாருங்கள்! (இதன் அருளால் "மகாமே மஹ்மூத்' என்னும்) மிக்க புகழ்பெற்ற இடத்தில் உங்கள்
இறைவன் உங்களை அமர்த்தலாம். (17: 79)
அதேநேரத்தில்
அல்லாஹ்வின்மீது அன்புகொண்ட முஃமின்கள் வைகறைப் பொழுதில் தொழுகின்ற உபரியான
தொழுகையே தஹஜ்ஜுத் ஆகும். மக்கள் எல்லோரும் துயில் கொண்டிருக்கும்போது
அல்லாஹ்வின் மீது அன்பு கொண்ட அடியார்கள், எழுந்து தொழுவார்கள். அவனிடம் பாவமன்னிப்புக் கோருவார்கள். அது
குறித்து உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: அவர்கள் (நித்திரையில்
ஆழ்ந்திருக்கும்போது) படுக்கையிலிருந்து தங்கள் விலாக்களை உயர்த்தியும், தங்கள் இறைவனிடம் நம்பிக்கை வைத்தும், பயந்தும் (அவனைப்) பிரார்த்தனை செய்வார்கள்.
(32: 16)
அல்லாஹ்வின்
தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்: மக்களே! ஸலாமைப் பரப்புங்கள்; (பசித்தோருக்கு) உணவளியுங்கள்; மக்கள் உறங்கும் (நடுநிசி நேரத்தில்) இரவில்
தொழுகுங்கள்; (அவ்வாறு செய்தால்) அமைதியாகச் சொர்க்கத்தில்
நுழைவீர்கள். (இப்னுமாஜா: 1334/1324)
ஜுமுஆ
தொழுகை: இது வெள்ளிக்கிழமைதோறும் உலக முஸ்லிம்கள் அனைவரும் அவரவர் சார்ந்துள்ள
பள்ளிவாசலில் ஒன்றுகூடி,
கூட்டாகத் தொழுகின்ற
தொழுகையாகும். பருவ வயதை அடைந்த ஒவ்வொருவரும் இந்தக் கூட்டுத் தொழுகையில்
கலந்துகொள்வது அவர்களின்மீது கட்டாயக் கடமையாகும். இது குறித்து அல்லாஹ்
கூறுகின்றான்: இறை நம்பிக்கைகொண்டோரே! வெள்ளிக்கிழமையன்று ஜுமுஆ தொழுகைக்காக
(பாங்கு சொல்லி) நீங்கள் அழைக்கப்பட்டால், வியாபாரத்தை விட்டுவிட்டு, அல்லாஹ்வை நினைவுகூர நீங்கள் விரைந்து செல்லுங்கள். (62: 9)
இஸ்த்திகாரா
தொழுகை: ஒருவர் தம் வாழ்வில் எடுக்க வேண்டிய முக்கிய முடிவுகளில் அல்லாஹ்வின்
வழிகாட்டுதலைத் தேடுவதாகும். இது ஒரு சுன்னத் தொழுகையாகும். நல்லதைத்
தேர்ந்தெடுத்தல்’ என்பது இதன் பொருளாகும். இதைத் தொழுது, துஆ செய்துவிட்டுச் சென்றால், அச்செயல் அவருக்கு நல்லதாக இருந்தால் அதைச் செய்ய
வழியேற்படுத்துவான். அது அவருக்குத் தீங்கானதாக இருந்தால் அதை அவரைச் செய்யவிடாமல்
தடுத்துவிடுவான். இது இரண்டு ரக்அத் தொழுகையாகும். இது குறித்த செய்தி புகாரீ
நூலில் பதிவுசெய்யபட்டுள்ளது: ஜாபிர் பின் அப்தில்லாஹ் ரளியல்லாஹு அன்ஹு
கூறியதாவது:
நபி
ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் எங்களுக்கு எல்லாச் செயல்களிலும் நல்லதைத் தேர்வு
செய்யப் பிரார்த்தனை செய்யும் முறையைத் திருக்குர்ஆனின் அத்தியாயங்களை
எங்களுக்குக் கற்றுத் தருவது போன்று கற்றுத் தருபவர்களாய் இருந்தார்கள். நபி
ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்: உங்களுள் ஒருவர் ஒரு செயலைச் செய்ய
நினைத்தால் கடமையல்லாத இரண்டு ரக்அத்களை (உபரியாகத்) தொழட்டும். பின்னர்
(பின்வருமாறு) பிரார்த்தனை செய்யட்டும்: அல்லாஹும்ம! இன்னீ அஸ்தகீருக்க பி இல்மிக்க.
வ அஸ்தக்திருக்க பி குத்ரத்திக்க. வ அஸ்அலுக்க மின் ஃபள்லிக்கல் அழீம். ஃபஇன்னக்க
தக்திரு, வலா அக்திரு... என்று ஓதிக்கொள்ள
வேண்டும். (புகாரீ: 1162)
தஸ்பீஹ்
தொழுகை: அல்லாஹ்வை அதிகமாக தஸ்பீஹ் (ஸுப்ஹானல்லாஹ்), தஹ்மீத்,
தக்பீர், தஹ்லீல் கூறுவதற்காக நபி ஸல்லல்லாஹு அலைஹி
வஸல்லம் கற்றுக் கொடுத்த நஃபில் தொழுகைதான் தஸ்பீஹ் தொழுகையாகும். இதை நபி
ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தம் சிறிய தந்தை அப்பாஸ் ரளியல்லாஹு அவர்களுக்குக் கற்றுக் கொடுத்தார்கள். இதோ
அந்த நபிமொழி: இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அறிவித்துள்ளார்கள்: அல்லாஹ்வின்
தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அப்பாஸ் பின் அப்தில் முத்தலிப் ரளியல்லாஹு அன்ஹு
அவர்களிடம், “அப்பாஸ்! என் சிற்றப்பா! நான் உமக்கு
வழங்கவேண்டாமா? நான் உம்மை விரும்ப வேண்டாமா? பத்துப் பண்புகளை நான் உமக்கு (அறிவிப்பு)ச்
செய்ய வேண்டாமா? அவற்றை நீர் செய்தால், அல்லாஹ் உம்முடைய முந்தைய-பிந்தைய, பழைய-புதிய, தவறுதலாகச் செய்த-வேண்டுமென்றே செய்த, சிறிய-பெரிய,
இரகசியமாக-வெளிப்படையாகச்
செய்த பாவங்களை மன்னிக்கிறான். ஆக, அவை
பத்துத் தன்மைகள் (அவை எவ்வாறு இருந்தாலும் அவன் மன்னிக்கிறான்).
நான்கு
ரக்அத்துகள் தொழுவீர். ஒவ்வொரு ரக்அத்திலும் அல்ஃபாத்திஹா அத்தியாயமும்
(வேறோர்) அத்தியாயமும் ஓதுவீர். நீர் ஓதி முடித்ததும், முதல் ரக்அத்தில் நின்ற நிலையில், ‘சுப்ஹானல்லாஹி வல்ஹம்து லில்லாஹி வலாஇலாஹ இல்லல்லாஹு வல்லாஹு
அக்பர்’ என்று பதினைந்து தடவை கூறுவீர்.
பின்னர் ருகூஉ செய்வீர். நீர் ருகூஉ செய்த நிலையிலேயே அதைப் பத்துத் தடவை
கூறுவீர். பின்னர் ருகூஉவிலிருந்து உம் தலையை உயர்த்தி (நின்று) அதைப் பத்துத்
தடவை கூறுவீர். பின்னர் சஜ்தா செய்யச் செல்வீர். சஜ்தா செய்த நிலையிலேயே அதைப்
பத்துத் தடவை கூறுவீர். பின்னர் (சஜ்தாவிலிருந்து) உம் தலையை உயர்த்தி அதைப்
பத்துத் தடவை கூறுவீர். பின்னர் (இரண்டாம்) சஜ்தா செய்வீர். (சஜ்தா செய்த
நிலையிலேயே) அதைப் பத்துத் தடவை கூறுவீர். பின்னர் (சஜ்தாவிலிருந்து) உம் தலையை
உயர்த்தி அதைப் பத்துத் தடவை கூறுவீர். (ஆக) ஒவ்வொரு ரக்அத்திலும் எழுபத்தைந்து
தடவை ஆகும். நான்கு ரக்அத்துகளிலும் அவ்வாறு செய்வீர்.
உம்மால்
இயன்றால் ஒவ்வொரு நாளும் ஒரு தடவை அதைத் தொழுதுகொள்வீர். (அவ்வாறு நாள்தோறும்
தொழுக) இயலவில்லையானால் அதை ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஒரு தடவை
தொழுதுகொள்வீர். அதுவும் தங்களால் இயலவில்லையானால் ஒரு மாதத்தில் ஒரு தடவை அதைத்
தொழுதுகொள்வீர். அதையும் செய்யவில்லையென்றால் உம் வாழ்நாளில் ஒரு தடவை(யேனும்)
அதைத் தொழுதுகொள்வீர் என்று கூறினார்கள்.
(இப்னுமாஜா: 1377)
அதாவது
நின்ற நிலையில் (கியாமில் ஸூரா முடிந்த பின்) 15 முறை, ருகூவில் 10 முறை, ருகூவிலிருந்து
எழுந்து நின்று 10 முறை,
முதல் சஜ்தாவில் 10 முறை, இரண்டு சஜ்தாக்களுக்கு இடையே அமர்ந்தநிலையில்
10 முறை, இரண்டாம் சஜ்தாவில் 10 முறை, அடுத்த ரக்அத்திற்கு எழுமுன் உட்கார்ந்து 10
முறை, ஆக மொத்தம் 75. நான்கு ரக்அத்தில்
300 தஸ்பீஹ்கள் ஓதித் தொழ வேண்டும்.
இவை தவிர
மழைக்காகத் தொழும் தொழுகை,
சூரிய கிரகணம், சந்திர கிரகணம் ஏற்படும்போது தொழும் தொழுகை
உள்ளிட்ட பல்வேறு தொழுகைகள் உள்ளன. நாம் கடமையான ஐவேளைத் தொழுகைகளைத்
தொடர்படியாகத் தொழுது வருவதோடு, மற்ற
தொழுகைகளையும் நம்மால் இயன்ற அளவுக்குத் தொழுதுவந்தால், நம் வினைச்சுவடியில் ஏராளமான நன்மைகளைச் சேர்த்துக்கொள்ளலாம்.
தொழுகை எவ்வாறு நமக்கு வழங்கப்பட்டது என்பதை ஆய்வு செய்தால் அதன் முக்கியத்துவம்
நமக்குப் புரியும். ஆகவே நாம் அனைவரும் ஐவேளைத் தொழுகைகளைப் பேணி தொழுவதோடு
உபரியான தொழுகைகளையும் உவப்போடு தொழுது உயர்ந்தோன் அல்லாஹ்வின் உவப்பையும்
திருப்தியையும் பெறுவதற்கு அவனே அருள்புரிவானாக.














.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)