புதன், 20 ஜூன், 2018

கேட்டல் கலை


என்ஜாய் யுவர் லைஃப் எனும் ஆங்கில நூலைத் தமிழாக்கம் செய்துகொண்டிருக்கிறேன். (மூலநூலாசிரியர்:  டாக்டர் மௌலானா அப்துர் ரஹ்மான் அரீஃபீ-சவூதி) அதில் கேட்டல் கலை எனும் தலைப்பில் ஒரு பகுதி இதோ உங்கள் பார்வைக்கு...

சிறப்புவாய்ந்த இஸ்லாமியப் பிரச்சாரகர் ஒருவரை நான் நினைவுகூர்கிறேன். அவர் ஆழமான அறிவுடையவர்; இலக்கியப் பேச்சாளர்; சொற்பொழிவுக்காக அடிக்கடி அழைக்கப்படுபவர்; வெள்ளிக்கிழமை உரையாகட்டும்; ஃபிக்ஹ் வகுப்பாகட்டும்; பல்கலைக் கழகத்தில் நிகழ்த்தும் உரையாகட்டும் அவர் தொடர்படியாகப் பேசுவார். அவர் பேசுவதை மக்கள் நேரடியாகவும் தொலைக்காட்சி வாயிலாகவும் ஆர்வத்துடன் கேட்பார்கள். அவருடைய மனைவியைத் தவிர. ஏனென்றால் அவர் தம் மனைவியிடம் இருக்கும்போதும் வழமைபோல் அவர்தாம் பேசிக்கொண்டே இருப்பாரே தவிர, மனைவி சொல்வதைக் காதுகொடுத்துக் கேட்கமாட்டார்.

அவரைப் பற்றி அவர்தம் மனைவி அவரிடமே புகார் தெரிவிப்பார். ஆனால் தம் மனைவி எதற்காகத் தம்மைப் பற்றிப் புகார் கூறுகிறார் என்பதை அறியாமலே இருந்துவந்தார். அவருடைய மனைவியைத் தவிர ஒவ்வொருவரும் அவரை மதிக்கிறார்கள்; பாராட்டுகிறார்கள். எனவே அவர் ஒரு நாள் தம்முடைய சொற்பொழிவைக் கேட்கத் தம் மனைவியையும் தம்மோடு அழைத்துச் செல்ல முடிவெடுத்தார். அப்போதாவது அவர் தம்மைப் பாராட்டுவார் அல்லவா என எண்ணிக்கொண்டார்.

"நீ என்னோடு வருகிறாயா?'' என்று கேட்டார். "எங்கே?'' என்று அவர் கேட்க, "ஒரு சொற்பொழிவாளர் ஆற்றுகின்ற உரையைக் கேட்பதற்காக உன்னை அழைத்துச் செல்ல விரும்புகிறேன். அதன்மூலம் நாம் மிகுந்த பயனடையலாம். நீ வருகிறாயா?'' என்று கேட்டார்.

அவள் தன் கணவருடன் காரில் ஏறி அமர்ந்தாள். குறிப்பிட்ட இடத்தை அவர்கள் அடைந்தவுடன் காரிலிருந்து இறங்கி, பள்ளிவாசலின் கதவு வரை நடந்து சென்றனர். ஒரு மிகப்பெரும் கூட்டம் அவருடைய சொற்பொழிவைக் கேட்க வருகை தந்திருந்தது. அவர்தம் மனைவி பெருங்கூட்டத்தின் இடையே நடந்து சென்று, பெண்கள் பகுதியில் அமர்ந்துகொண்டாள். சொற்பொழிவு தொடங்கியது. மக்கள் அனைவரும் மிகவும் கவனத்துடன் அவரது உரையைக் கேட்டனர். அவருடைய மனைவியும்கூட வியப்போடு கேட்டாள்.  சொற்பொழிவு முடிந்ததும் அவர் தமது காரில் ஏறி அமர்ந்துகொண்டார். தம்முடைய சொற்பொழிவை எண்ணி மகிழ்ந்துகொண்டார். அவருடைய மனைவியும் வந்து காரில் அமர்ந்தார். அவர்கள் இருவரும் அமர்ந்ததும், வழமைபோல் அவர் அவளுக்குப் பேச வாய்ப்புக் கொடுக்காமல், அங்கிருந்த கூட்டத்தைப் பற்றியும் மஸ்ஜிதின் அழகைப் பற்றியும் பேசத் தொடங்கிவிட்டார்.

பிறகு அவர் தம் மனைவியிடம், "இன்றைய சொற்பொழிவைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய்?'' என்று கேட்க,  "அது நன்றாகவும் பயனுள்ளதாகவும் இருந்தது. அது சரி! சொற்பொழிவாளர் யார்?'' என்று கேட்டார். அவர் ஆச்சரியத்துடன், ''என்ன! உனக்கு யாருடைய குரல் என்று தெரியவில்லையா?'' என்று கேட்க,  ''சரிதான்! கூட்டத்தில், ஒலிபெருக்கி சரியில்லாததால், என்னால் சரியாகக் கவனம் செலுத்த முடியவில்லை'' என்றாள்.

அவர் பெருமையோடு, "நான்தான் உரையாற்றினேன்'' என்றார். அதற்கவள், "ஓ! அப்படியா! பேசிக்கொண்டிருந்தபோதே, இவர் எப்போது முடிப்பார் என்றுதான் நான் நினைத்துக்கொண்டிருந்தேன்'' என்றாள்.

எனவே மற்றவர் பேசுவதைக் கேட்பதும் ஒரு கலைதான். அது எல்லோருக்கும் வாய்க்காது என்பதை நாம் உணரலாம்...

-தமிழாக்கம்: முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி (ஆலங்குடி) 



ஞாயிறு, 17 ஜூன், 2018

வழக்குகளையும் சிக்கல்களையும் எதிர்கொள்ள...



ஆங்காங்கே முஸ்லிம்களுக்கு ஏற்படும் இன்னல்கள், சிக்கல்கள், பள்ளிவாசல் தொடர்பான பிரச்சனைகள், வழக்குகள் இவற்றையெல்லாம் தீர்ப்பதற்கும் தனிக்கவனம் செலுத்தி எதிர்கொள்வதற்கும் முஸ்லிம்கள்மீது அவ்வப்போது போடப்படுகின்ற பொய்வழக்குகளை எதிர்கொண்டு சந்திப்பதற்கும் முழுநேரம் பணியாற்றும் ஒரு குழு தேவை. 

அக்குழுவினருக்கான பொருளாதாரத் தேவையை முஸ்லிம் சமுதாயம் பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டும். அவர்கள் தமிழக முஸ்லிம்களுக்கு எங்கு, என்ன பிரச்சனையானாலும் நேரடியாகச் சென்று அதைப் பேசித் தீர்க்க, அல்லது காவல் நிலையத்தில் புகார் கொடுக்க, அல்லது அதற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்க முயல்வார்கள். பொய் வழக்குகளுள் சிக்குண்ட முஸ்லிம்களை மீட்பதற்குரிய வேலைகளைச் செய்வார்கள். 

பள்ளிவாசல் நிலத்தை ஆக்கிரமித்தல், புதிதாகப் பள்ளிவாசல் கட்டுவதற்கு ஏற்படும் தடை, பொய்வழக்குகள் உள்ளிட்ட அனைத்தையும் கவனித்துக்கொள்வார்கள். இக்குழுவில் ஆலிம்கள், வழக்கறிஞர்கள், படித்த இளைஞர்கள் இருப்பார்கள். இத்தகைய ஒரு குழுவினர் முஸ்லிம்களுக்கு அவசிய அவசரத் தேவை என்பதை நாம் எப்போது உணரப்போகிறோம்?  

ஜமாஅத்துல் உலமா சபை இதற்கான ஏற்பாட்டைச் செய்ய முன்வந்தால் சமுதாயம்  வரவேற்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அதேநேரத்தில் சமுதாயம் இதற்கான பொருளாதார உதவி செய்வது முற்றிலும் அவசியம்.  

இதன் முக்கியத்துவத்தை உணர்ந்து உடனடியாக ஆலோசனை செய்து, செயல்பட முன்வருமா ஜமாஅத்துல் உலமா சபை?

-மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி  

திருமண விருந்தை மாற்றுவோம்!



பொதுவாக முஸ்லிம்கள் நடத்தும் திருமணத்தில் அவர்கள் பிறமதச் சகோதரர்களையும் விருந்துக்கு அழைப்பதுண்டு. திருமணத்திற்கு வருகை தருவோருள் பிரியாணியை விரும்பி உண்போரும் சைவ உணவை மட்டுமே சாப்பிடுவோரும் உண்டு. ஏன், இன்று முஸ்லிம்களே நிறையப் பேர் மருத்துவர்களின் அறிவுறுத்தலால் (அல்லது அச்சுறுத்தலால்) சைவ உணவைச் சாப்பிடத் தொடங்கிவிட்டனர். எனவே விருந்து ஏற்பாடு செய்வோர் அசைவ உணவையும் சைவ உணவையும் தனித்தனியே ஏற்பாடு செய்து கொடுக்கின்றனர். விருந்துக்கு அழைப்போருக்கு இது இரட்டைச் சுமைதான் என்றால் மிகையில்லை. ஆனாலும் ஒரு சுகமான சுமையாக அதைச் செய்துவருகின்றனர். 

இந்தச் சிரமத்தை நீக்கும் முகமாக எல்லோருக்கும் சைவ உணவையே ( வெஜிடபிள் பிரியாணி) ஏற்பாடு செய்துவிட்டு, அத்தோடு பக்க உணவாக (சைடு டிஷ்) அசைவப் பொரியல் செய்துவிட்டால் எல்லோரையும் ஒரே மொத்தமாக அமர வைத்துவிடலாம். சைவம் தனி, அசைவம் தனி எனப் பிரிக்கத் தேவை ஏற்படாது. அசைவம் தேவைப்படுவோருக்கு மட்டும் அதை வழங்கலாம். சைவம் சாப்பிடுவோருக்கு அதைத் தவிர்த்துவிடலாம்.

இதனால் வேலைப்பளு குறைவதோடு, சைவ உணவு எவ்வளவு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கணக்குத்  தெரியாமல் வாங்கி அல்லது ஆக்கி, விரயம் செய்வது தவிர்க்கப்படும்.

இனி வரும் காலங்களில் எல்லோருக்கும் ஒரே உணவு என்ற முறையைக் கடைப்பிடிக்கலாமே!

-மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி


புதன், 13 ஜூன், 2018

நபிவழியில் பள்ளிவாசல் நிர்வாகம்!


-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.

தமிழ்நாட்டில் ஏறத்தாழ பத்தாயிரம் பள்ளிவாசல்கள் உள்ளன. அவற்றில் ஒவ்வொரு நாளும் ஐவேளைத் தொழுகை நடைபெற்று வருவதோடு பெரும்பாலான பள்ளிவாசல்களில் சிறுவர்-சிறுமியருக்கான திருக்குர்ஆன் வகுப்பும் நடைபெற்றுவருவதை நாம் அறிவோம். ஆனால் ஒரு பள்ளிவாசலில் நடைபெற வேண்டிய செயல்பாடுகள் இவ்வளவுதானா?
இதைத் தாண்டி எவ்வளவோ சேவைகளைப் பள்ளிவாசல்கள்மூலம் செய்வதற்கு வாய்ப்பிருக்கும்போது அவை எதையும் செய்யாமல் பள்ளிநிர்வாகிகள் காலத்தைக் கடத்துவது இஸ்லாமியச் சமுதாயத்திற்கு எவ்வளவு பெரிய இழப்பு என்பதை அவர்கள் உணர வேண்டும்! அது மட்டுமின்றி அவர்கள் தம் பொறுப்பைச் செவ்வனே செய்யவில்லை என்ற குற்றச்சாட்டிற்கும் ஆளாகின்றார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழியில் ஒரு பள்ளிவாசலை எவ்வாறு நிர்வாகம் செய்வது, அதன்மூலம் இந்தச் சமுதாயத்திற்கு என்னென்ன பயன்களைக் கொடுக்கலாம் என்பதைத் தெரிந்துகொண்டு அதன்படி செயல்பட்டால் பள்ளிநிர்வாகிகள் ஈருலகப் பயன்களைப் பெறுவதோடு சமுதாய மக்களும் தமக்குத் தேவையான பயன்களை அடைந்துகொள்வார்கள்.

கல்வி, பொருளாதாரம், அரசியல் கட்டமைப்பு, சமூகப் பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்திற்கும் அடிப்படையாகப் பள்ளிவாசலையே ஆக்க வேண்டும். மக்களுக்கு எந்தத் தேவையாக இருந்தாலும் அவர்கள் முதலில் பள்ளிவாசலையே அணுக வேண்டும். அத்தகைய சூழலை ஏற்படுத்திவிட்டால் மக்களின் தொடர்பும் பள்ளியைச் சார்ந்தே இருக்கும். அவர்களின் வருகை எப்போதும் தொடர்ந்துகொண்டே இருக்கும்.

கல்வி என்பது இருவகைக் கல்வியையும் எடுத்துக்கொள்ளும். இஸ்லாமிய மார்க்கத்தில் பாகுபாடு இல்லை. குர்ஆன் வகுப்பு நடைபெறுவது ஒருபுறம் இருந்தாலும் மறுபுறம் 1ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரையிலான தொடக்கக் கல்வி வழங்குகின்ற பள்ளிக்கூடத்தையும் நிறுவ வேண்டும்.  அதற்கான வாய்ப்பு பெரும்பாலான பள்ளிவாசல்களில் உள்ளன.
நம் பிள்ளைகளுக்குப் பள்ளிவாசலிலேயே தொடக்கக் கல்விக்கான ஏற்பாட்டைச் செய்வதன்மூலம்  அப்பிள்ளைகள் லுஹர், அஸ்ர் தொழுகைகளைத் தொழ வாய்ப்புக் கிடைப்பதோடு மார்க்கம் சார்ந்த கல்வியையும் அரபிமொழியையும் ஒரு பாடமாகப் படிக்கவும் வாய்ப்புண்டு.

பத்ருப் போரில் பிடிபட்ட எதிரிப் படையைச் சார்ந்த எழுபது பேரில் சிலர் பிணைத்தொகை  கொடுத்து விடுதலையாகிச் சென்றனர். "பிணைத்தொகை கொடுக்க இயலாதோர், எங்கள் தோழர்களுக்குக் கல்வியைக் கற்பித்துவிட்டு விடுதலை பெற்றுச் செல்லலாம்'' என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள். அதன்படி அவர்கள் முஸ்லிம்களுக்குக் கல்வி கற்பித்துவிட்டு விடுதலை பெற்றுச் சென்றார்கள் என்பது வரலாறு.

இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளாத அவர்கள் முஸ்லிம்களுக்கு என்ன கற்றுக் கொடுத்திருப்பார்கள்? ஆகவே உலகக் கல்விக்கும் நபி (ஸல்) அவர்கள் முக்கியத்துவம் கொடுத்துள்ளார்கள் என்பதை இவ்வரலாற்று நிகழ்விலிருந்து அறிய முடிகிறது.

மாலைநேரச் சிறப்பு வகுப்பு: நம் பிள்ளைகள் டியூஷன் எனும் பெயரில் மாலைநேரச் சிறப்பு வகுப்பிற்குச் சென்றுவிடுவதால் அவர்கள் பள்ளிவாசலில் நடைபெறும் பாலர் வகுப்பிற்கு வர இயலாமல் போய்விடுகிறது. எனவே இப்பிள்ளைகளும் திருக்குர்ஆனைக் கற்றுக்கொள்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்த வேண்டியது ஒவ்வொரு பள்ளிவாசல் நிர்வாகத்தினரின் பொறுப்பும் கடமையும் ஆகும். இதனை மனத்தில்கொண்டு, தமிழகத்தின் சில பள்ளிவாசல்களில் டியூஷனுக்கான ஏற்பாடும் உள்ளது. எனவே அவர்கள் அதற்காக வெளியே செல்ல வேண்டியதில்லை. இது பரவலாக்கப்பட்டால் எல்லாப் பிள்ளைகளும் திருக்குர்ஆனைக் கற்றுக்கொள்ள ஒரு நல்வாய்ப்பை ஏற்படுத்திய நன்மை அந்தந்த நிர்வாகத்தினரைச் சாரும்.

முதலில் அவர்கள் குர்ஆன் வகுப்பில் கலந்துகொண்டு, அதனைக் கற்றுக்கொண்டபின் அங்கேயே அவர்கள் தம் பள்ளிக்கூடப் பாடங்களைப் படிக்கலாம். அதற்கென அந்தந்தத் துறை ஆசிரியர்களை நியமனம் செய்யலாம். பள்ளி நிர்வாகத்தினர் முயற்சி செய்தால் இது ஒன்றும் இயலாத செயல்பாடு அல்ல. பள்ளிப் பாடங்களை நடத்த முஸ்லிம் ஆசிரியர்கள் கிடைக்காத பட்சத்தில் முஸ்லிமல்லாத ஆசிரியர்களையும் பயன்படுத்திக்கொள்ளலாம்.  அல்லது பத்து, பன்னிரண்டாம் வகுப்புப் படிக்கும் மாணவ, மாணவியரைப் பயன்படுத்தி ஐந்து முதல் ஒன்பதாம் வகுப்பு வரையுள்ள மாணவ மாணவிகளுக்குக் கற்பிக்கச் செய்யலாம். ஆக இரண்டும் ஒரே இடத்தில் கிடைத்துவிடுவதால் பெற்றோரும் மிகுந்த ஆர்வத்துடன் தம் பிள்ளைகளைச் சேர்க்க முன்வருவார்கள். வெளியில் டியூஷன் படித்தால் எவ்வளவு கட்டணமோ அதையே பெற்றுக்கொண்டு நிர்வாகத்தினரால் நியமிக்கப்பெற்றுள்ள ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்கலாம். மேலும் மாணவ, மாணவியர் மாலை முதல் இரவு எட்டு மணி வரை பள்ளிவாசலிலேயே இருக்க நேரிடுவதால் அஸ்ர், மஃக்ரிப், இஷா ஆகிய தொழுகைகளையும் அங்கேயே நிறைவேற்றிக்கொள்ள ஒரு வாய்ப்பு அமைகிறது. இதனால் பிள்ளைகள் இருவகைக் கல்விகளையும் பெற்றுக்கொள்வதோடு ஒழுக்கமானவர்களாக உருவாகவும் வழியமைத்துக் கொடுக்கப்படுகிறது. 

பைத்துல்மால்: ஒவ்வொரு மஹல்லா பள்ளிவாசலிலும் பைத்துல்மால் எனும் பொது நிதியகம் ஏற்படுத்தி, செல்வந்தர்களிடமிருந்து வசூல் செய்யப்படுகின்ற ஸகாத், மனமுவந்து வழங்குகின்ற தர்மம் ஆகியவற்றை முதலீடாகக் கொண்டு, அந்தந்த மஹல்லாவில் உள்ள ஏழைகள், விதவைகள், கணவனால் கைவிடப்பட்டோர், ஊனமுற்றோர் உள்ளிட்டோருக்கு உதவி செய்யலாம். பொருளாதாரத்தில் தன்னிறைவு பெற்றவர்களாக  மாற்ற முற்படலாம். இலவசத் திருமணங்களை நடத்தி வைப்பதோடு, கல்வி உதவித்தொகையும் வழங்கலாம். மேலும் பல்வேறு சேவைகள் செய்வதற்கு பைத்துல்மால் உதவும்.

ஆனால் இத்திட்டம் பல்வேறு மஹல்லாக்களில் இல்லாதது மிகப்பெரும் குறையே ஆகும். இதனால்தான் ரமளான் மாதம் பிறந்துவிட்டால் நம் சமுதாயத்தைச் சேர்ந்த பலர் பள்ளிகள்தோறும் கையேந்தி நிற்கின்றார்கள். இந்த இழிநிலைக்குக் காரணம் யார்? பொறுப்பிலுள்ளோர் தம் பொறுப்பை முறையாகக் கையாளாததும் திட்டங்களைத் தீட்டாததுமே ஆகும்.
மக்கள்தொகை கணக்கெடுப்பு: ஒவ்வொரு பள்ளிவாசல் நிர்வாகத்தினரும் செய்ய வேண்டிய மற்றொரு முக்கியப் பணி மக்கள்தொகை கணக்கெடுப்பாகும். ஒவ்வொரு பள்ளி நிர்வாகமும் தத்தம் மஹல்லாவில் எத்தனை பேர் வசிக்கின்றனர், அவர்களுள் படித்தோர் எத்தனைபேர், படிக்காதோர் எத்தனைபேர், ஜகாத் வழங்குவோர் எத்தனைபேர், ஜகாத் பெறத் தகுதியுடையோர் எத்தனைபேர், உதவி தேவைப்படுவோர் எத்தனைபேர் உள்ளிட்ட பல்வேறு புள்ளிவிவரங்களைத் தொகுத்து  வைத்திருக்க வேண்டும்.

அவர்களுள் ஒவ்வொருவருக்கும் ஓர் அடையாள அட்டை (ஐ.டி. கார்டு) கொடுக்க வேண்டும். அதன்மூலம் அவர் அந்த மஹல்லாவைச் சார்ந்தவர் என்று உறுதிசெய்யப்பட வேண்டும். அதன்மூலமே பள்ளிவாசல் சார்ந்த அவரது எல்லா நடவடிக்கைகளும் அமைய வேண்டும். அதாவது திருமணத்திற்கான என்.ஓ.சி., ஜாதிச்சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், மரணித்த பின் இறப்புச் சான்றிதழ் உள்ளிட்டவை வழங்க ஏதுவாக அமையும். அது மட்டுமின்றி, நம் மஹல்லாவைச் சார்ந்த ஒருவரைக் காவல்துறை சந்தேக வழக்கில் பிடித்துச் சென்றால், அவர் தம் அடையாள அட்டையைக் காட்டி நான் இந்த மஹல்லாவைச் சார்ந்தவர் என்று தெரிவிக்கலாம். அல்லது தகவல் அறிந்து அப்பள்ளியின் நிர்வாகத்தினரே சென்று அவரை மீட்கலாம். இப்படி எத்தனையோ பயன்கள் இதில் உண்டு.

ஹுதைஃபா (ரளி) அவர்கள் கூறியதாவது: (ஒரு நாள்) நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தோம். அப்போது அவர்கள், "எத்தனை பேர் இஸ்லாத்தை ஏற்றுள்ளார்கள்? என்பதை எனக்குக் கணக்கிட்டுச் சொல்லுங்கள்!'' என்று கூறினார்கள். நாங்கள் அறுநூறு முதல் எழுநூறு பேர் வரை இருக்க, எங்களைப் பற்றி அஞ்சுகிறீர்களா, அல்லாஹ்வின் தூதரே?'' என்று கேட்டோம்... (நூல்: முஸ்லிம்: 235)

நபித்தோழர்கள் மதீனாவின் மக்கள்தொகையைக் கணக்கிட்டு, 600 முதல் 700 பேர் முஸ்லிம்கள் இருப்பதாகக் கூறினார்கள். ஆக, இது நம்முடைய தொன்மையான வரலாற்றில் உள்ள, நாம் மறந்துவிட்ட ஒன்றுதான் என்பதைப் பள்ளி நிர்வாகிகள் புரிந்துகொண்டு செயல்பட முனைய வேண்டும்.

ஷரீஅத் கோர்ட்: ஒவ்வொரு மஹல்லாவிலும் அல்லது நான்கைந்து மஹல்லாவாழ் மக்களுக்கு ஒரு ஷரீஅத் கோர்ட் என்ற ஏற்பாடு செய்யப்பட வேண்டும். நம் சமுதாய மக்களின் குடும்பப் பிரச்சனைகளைக் காவல் நிலையம் வரை கொண்டு செல்லாமல் நமக்குள் சுமூகமாகப் பேசித் தீர்த்துக்கொள்ளும் முயற்சியே இதுவாகும். அந்தந்த மஹல்லாவில் உள்ள நிர்வாகக் குழுவினரும் அப்பள்ளியின் இமாமும் இணைந்து ஷரீஅத் ரீதியான தீர்ப்பை வழங்கினால், அம்முடிவுக்கு அவர் கட்டுப்பட வேண்டும். அத்தகைய சூழ்நிலை அமைந்துவிட்டால் நம் சமுதாய மக்கள் தேவையின்றி காவல்நிலையத்திற்கும் நீதிமன்றத்திற்கும் அலைந்து திரிய வேண்டியதில்லை. பொருளாதாரமும் வீணாகும் வாய்ப்பில்லை.

நபி (ஸல்) அவர்களின் காலத்தில் பல்வேறு குடும்பப் பிரச்சனைகளுக்குப் பள்ளிவாசலில்தான் தீர்ப்பு வழங்கியுள்ளார்கள். அம்முடிவுக்கு அவர்கள் கட்டுப்பட்டுத்தான் நடந்தார்கள் என்பதை நாம் எண்ணிப் பார்க்கத் தவறக்கூடாது.

அரசியல் கட்டமைப்பு: மஹல்லா மக்கள் அனைவரும் ஒரு குடையின்கீழ் வந்துவிட்டால் நமக்கான வார்டு கவுன்சிலர் யார் என்பதை நாமே தீர்மானிக்கலாம். அதுபோல் ஓர் எம்.எல்.ஏ.வைத் தேர்ந்தெடுக்க, அத்தொகுதியில் உள்ள பள்ளிவாசல்களின் தலைவர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து ஒரு முடிவெடுத்து, குறிப்பிட்ட நபரை நமக்கான எல்.எல்.ஏ.வாகத் தேர்ந்தெடுக்கலாம். களத்தில் நிற்கின்ற யாருமே சரியில்லையென்றால், நாமே ஒருவரை நியமித்து, அவருக்கே அனைவரையும் வாக்களிக்குமாறு மக்களிடம் எடுத்துக் கூறி, அவரைத் தேர்ந்தெடுக்கலாம். பிறகு அவர்மூலம் நமக்குத் தேவையான திட்டங்களை நிறைவேற்றிக்கொள்ளலாம். இதன்மூலம் அரசியல் ரீதியாகவும் சமூக ரீதியாகவும் ஒரு பாதுகாப்பு நம் சமுதாயத்திற்கு ஏற்படும்.

பெண்கல்வி: ஒவ்வொரு பள்ளிவாசலிலும் பெண்களுக்கான கல்விக்கு முக்கியத்துவம் அளிக்க  வேண்டும். தொழுதல், பயான் கேட்டல், குர்ஆன் கற்றுக்கொள்ளல், உள்ளிட்டவற்றிற்கான வாய்ப்பு பெண்களுக்கு ஏற்படுத்தப்பட வேண்டும். அதனால் அவர்கள் தம் பிள்ளைகளை நல்ல முறையில் பேணி வளர்ப்பதற்கும் தம் கணவனிடம் ஒழுக்கமாக நடந்துகொள்வதற்கும் வாய்ப்பு ஏற்படும். பெண்களுக்கான ஆலிமா மத்ரஸா ஏற்படுத்தப்பட்டு, மூன்றாண்டுகளில் அவர்கள் ஆலிமாவாக வெளியேறினால் எதிர்காலச் சமுதாயப் பிள்ளைகள் சீரான முறையில் வளர்வதற்கும் உருவாவதற்கும் மிகப்பெரும் வாய்ப்பாக அமையும். இஸ்லாமியப் பண்பாடுகளையும் ஒழுக்கங்களையும் ஊட்டி வளர்க்கும் அன்னையர்களாக அவர்கள் மாறிவிடுவார்கள். இதனால் சமுதாயத்திற்கு எத்தனையெத்தனை பயன்கள் என்பதைச் சொல்லவும் வேண்டுமா?

நபி (ஸல்) அவர்கள் ஆண்களுக்கே எல்லா நேரங்களிலும் உரையாற்றிக்கொண்டிருந்ததைக் கண்ட பெண்கள் சிலர், "அல்லாஹ்வின் தூதரே! எங்களுக்கும் வாய்ப்புக் கொடுங்கள். எங்களுக்கும் உரையாற்றுங்கள்'' என்று கேட்டுக்கொண்டதன் பயனாக, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பெண்களுக்குத் தனிநேரம் ஒதுக்கி, அவர்களுக்கு உரையாற்றினார்கள் என்பது வரலாறு.

இப்படி எத்தனையெத்தனையோ சேவைகளைச் செய்ய வேண்டிய பொறுப்புதான் "பள்ளிவாசல் தலைவர்' பொறுப்பாகும். இவ்வளவு பெரிய பொறுப்பைச் சுமந்துகொண்டுள்ள இன்றைய பள்ளித் தலைவர்கள் தம் பொறுப்பின் மேன்மையையும் முக்கியத்துவத்தையும் உணராது, வெறும் சுயகௌரவத்திற்காகப் பதவி வகிப்பதைக் கண்டு மனம் வெதும்பாமல் இருக்க முடியவில்லை.  

அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறுகின்றான்: யார் அல்லாஹ்வையும் இறுதிநாளையும் நம்பிக்கை கொண்டு தொழுகையையும் கடைப்பிடித்து, ஸகாத்தும் கொடுத்து வருவதுடன், அல்லாஹ்வையன்றி மற்றெவருக்கும் பயப்படாமலும் இருக்கிறார்களோ, அவர்கள்தாம் அல்லாஹ்வுடைய பள்üகளைப் பராமரிக்கத் தகுதி உடையவர்கள். இத்தகையவர்கள்தாம் நேரான வழியில் இருப்பவர்கள். (9: 18)  பள்ளிவாசல் நிர்வாகப் பொறுப்பில் இருப்போர் எப்படி இருக்க வேண்டும் என்பதையும் என்னென்ன தன்மைகளைக் கொண்டிருக்க வேண்டும் என்பதையும் உயர்ந்தோன் அல்லாஹ் தெளிவாகக் கூறியுள்ள இவ்வசனத்தைப் படித்த பிறகேனும் ஒவ்வொரு பள்ளிவாசல் தலைவரும் தம் பொறுப்பின் முக்கியத்துவத்தை உணர்ந்து நபியவர்கள் செயல்படுத்திய திட்டங்களையெல்லாம் தத்தம் மஹல்லாக்களில் செயல்படுத்துவார்களா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.
======================================================