ஞாயிறு, 30 ஜூன், 2019

ஏழைகளை மதிப்போம்

ஏழைகளை நேசிப்போம்

நூல் அறிமுகம்


பணி நிறைவு பெற்ற டிஐஜி ஏ.பீ. முஹம்மது அலீ அவர்கள், தமது ஓய்வான நேரத்தில் சமுதாய முன்னேற்றத்திற்கு ஏதாவது செய்ய வேண்டுமென்ற ஆர்வத்திலும் அக்கறையிலும் அவ்வப்போது சமுதாயச் சிந்தனையையும் உணர்வுகளையும் தூண்டும் விதமான கட்டுரைகளை எழுதிவருவது குறிப்பிடத்தக்கது. அவர் எழுதிய பல கட்டுரைகள் இனிய திசைகள் மாத இதழிலும் வெளிவந்துள்ளன. 

சமுதாயத்தில் புரையோடிப்போய்க் கிடக்கின்ற பழக்கங்கள், அறியாமைகள், மூடப்பழக்கங்கள் முதலானவற்றைக் கண்டித்தும் இயக்க வெறியர்களைக் கடிந்தும் கட்டுரைகள் எழுதுவது அவரது வழக்கம். அத்தோடு மாற வேண்டிய நம் சமுதாயம், எவ்வித உணர்வுமின்றி அப்படியே சென்று  கொண்டிருப்பது குறித்து மனம் வருந்தி எழுதியவையும் இந்நூலினுள் உள்ளன.

சமுதாய முன்னேற்றம் குறித்துச் சிறிதும் அக்கறையின்றிச் சுயநலப்போக்கோடு செயல்படும் இயக்கங்களைக் கண்டிக்கிறார். பிரிந்து கிடக்கும் நம் சமுதாய மக்களை ஒன்றிணைப்பதற்கான எந்த முயற்சியும் செய்யாமல், மேன்மேலும் சமுதாயத்தைக் கூறுபோடும் செயல்களில் ஈடுபடும் இயக்கங்களைச் சாடுகிறார். இப்படிச் சமுதாயக்  கவலைமிக்க கட்டுரைகளை ஒருங்கிணைத்து, “சமுதாயச் சிந்தனை அதிர்வலைகள்” எனும் பெயரில் வெளியிட்டுள்ளார். 

இந்நூலுக்கு அணிந்துரை வழங்கியுள்ள திரைப்பட இயக்குநர் மு. அமீர் குறிப்பிடுவதைப்போல், “ஓர் எழுத்தாளனுக்குரிய நடையோ, சொல்லழகோ, இலாவகமோ இல்லாதிருந்தும் இக்கட்டுரைகள் சலிப்பைத் தரவில்லை” என்பதை இந்நூலைப் படிக்கும்போது உணர்ந்துகொள்ளலாம். 

பயனுள்ள இந்நூலை வாங்கி வாசித்துத்தான் பாருங்களேன்! 

நூல்: சமுதாயச் சிந்தனை அதிர்வலைகள்
ஆசிரியர்: டாக்டர் ஏ.பீ. முஹம்மது அலீ பிஎச்.டி., ஐ,பீ.எஸ். (ஓ)
பக்கங்கள்: 104 
விலை: ரூ. 50
வெளியீடு: ஆயிஷா பதிப்பகம்
இராயப்பேட்டை,  சென்னை-14
தொடர்புக்கு: 044-28486878, 94440 42213   

-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி
30 06 2019 (26 10 1440)
========================


சனி, 15 ஜூன், 2019

இரவும் பகலும்


-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி, பிஎச்.டி.
=====================================

இரவும் பகலும் இறைவனின் இரண்டு சான்றுகள் ஆகும். மனிதன் தனக்கான வாழ்வாதாரத்தை ஈட்டிக்கொள்வதற்காகப் பகலையும் நிம்மதியாக ஓய்வெடுப்பதற்காக இரவையும் படைத்திருப்பதாக இறைவன் திருக்குர்ஆனில் கூறுகின்றான். இரவும் பகலும் மாறி மாறி வருவதில் அறிவுடையோருக்குச் சான்றுகள் உள்ளதாகவும் கூறுகின்றான். மற்றோர் இடத்தில், "நாம் இரவை ஆடையாக ஆக்கினோம். பகலை வாழ்க்கைக்குரிய(வற்றைத் தேடிக்கொள்ளும்) நேரமாக ஆக்கினோம்'' என்று கூறுகின்றான். ஆக இரவையும் பகலையும் மனிதனின் நன்மைக்காகவே படைத்துள்ளான்.

ஒருவேளை நிரந்தரமாகவே இரவாகவோ பகலாகவோ ஆக்கிவிட்டால் நீங்கள் என்ன செய்வீர்கள்? யார் உங்களுக்கு இரவையோ பகலையோ கொண்டு வருவார்? என்று அல்லாஹ் அறைகூவல் விடுக்கின்றான். அது குறித்து அல்கஸஸ் அத்தியாயத்தில் இறைவன் கூறுவதைப் பாருங்கள்.

(நபியே!) நீங்கள் கேளுங்கள்: "இரவை மறுமை நாள் வரை அல்லாஹ் நீட்டித்துவிட்டால், உங்களுக்கு(ப் பகலின்) வெளிச்சத்தைக் கொண்டு வரக்கூடிய இறைவன் அல்லாஹ்வையன்றி வேறு ஒருவன் இருக்கின்றானா?'' (இதனை) நீங்கள் செவியுற மாட்டீர்களா?

(மேலும் நபியே!) நீங்கள் கேளுங்கள்: "பகலை இறுதி நாள் வரை உங்களுக்கு அல்லாஹ் நீட்டித்துவிட்டால், நீங்கள் இளைப்பாறக் கூடிய இரவை உங்களுக்குக் கொண்டு வரக்கூடிய இறைவன் அல்லாஹ்வையன்றி வேறொருவன் இருக்கின்றானா?'' (இதனை) நீங்கள் (சிந்தித்துப்) பார்க்க வேண்டாமா? (28: 71-72)

சரி, உலகில் எங்கேனும் சூரியன் மறையாமல் பகலாகவே இருக்கிறதா என்று ஆய்வுசெய்தபோது என்னே ஆச்சரியம்! அப்படியும் சில நாடுகளை அல்லாஹ் இப்புவிப் பரப்பில் அமைத்துவைத்துள்ளான். குறிப்பிட்ட மாதங்களில் சூரியன் மறையாமல் எப்போதும் பகலாகவே நீடிக்கிறது. இங்குதான் அல்லாஹ்வின் அறைகூவல் நிதர்சனமாகிறது. அத்தகைய காலங்களில் யாரும் அந்தப் பகலை இரவாக மாற்ற முனைவதில்லை. அது மனித ஆற்றலுக்கு அப்பாற்பட்டது என்பதை நாம் எளிதாக அறிந்துகொள்ளலாம். சூரியன் மறையாமல் பகலாகவே நீடிக்கின்ற சில நாடுகள் இதோ.

நார்வே: ஆர்டிக் சர்க்கிளில் அமைந்திருக்கிறது இது. நள்ளிரவு சூரியனுக்கு இந்நாடு மிகவும் பிரபலம். இங்கே இரவில் சூரியனைக் காணவே பல்வேறு சுற்றுலாப்பயணிகள் வருகை தருகிறார்கள். இங்கே இன்னொரு சுவையான விஷயம் என்னவென்றால், சுமார் 100 ஆண்டுகள் பகலில் சூரியனே தெரியாமல் இருட்டாகவே இருந்திருக்கிறது. ஃபின்லாந்து: ஆயிரம் ஏரிகளுடன் இயற்கைச் சூழல் நிரம்பிய இடம். இங்கு கோடைக்கால ஆரம்பத்தில் சூரியன் உதிக்கிறது. அதன்பிறகு 73 நாள்கள் கழித்தே மறைகிறது. தொடர்ந்து 73 நாள்களும் சூரியனை நாம் பார்க்க முடியும். அலஸ்கா: பனிக்கட்டிகள் நிறைந்த இடம். மே முதல் ஜூலை வரை சுமார் 1440 மணி நேரங்கள் இங்கே பகலாகத்தான் இருக்கும். இந்தக் காலத்தில் சூரியன் மறையாது. ஐஸ்லாந்து: ஐரோப்பாவின் இரண்டாவது பெரிய தீவு இது. மே முதல் ஜூலை கடைசி வரை இங்கே சூரியன் தெரிந்து கொண்டேயிருக்கும். கோடைக்காலங்களில் நள்ளிரவில்தான் சூரியன் மறையும். மீண்டும் அதிகாலை மூன்று மணிக்குச் சூரியன் உதித்துவிடும். எங்கு பார்த்தாலும் அழகிய நீர்வீழ்ச்சிகளும் எரிமலைகளும் பனிப்பாறைகளும் மட்டும் அல்லாமல் ஏராளமான வெந்நீர் ஊற்றுகளையும் கொண்ட அழகிய நாடு. கனடா: அதிக நாள்கள் ஐஸ்கட்டி உறைந்திருக்கும் நாடுகளின் பட்டியலில் கனடா இரண்டாவது இடம் வகிக்கிறது. இங்கே கோடைக்காலங்களில் 50 நாள்கள் சூரியன் மறையாது.
ஆக இத்தனை நாடுகளில் சூரியன் தொடர்ந்து உதிக்கும் நிலையை உயர்ந்தோன் அல்லாஹ் ஏற்பாடு செய்துள்ளான். இது அவனுடைய வல்லமைக்கும் ஆற்றலுக்கும் தக்க சான்றாகும்.

இந்தத் தகவல் அண்மைக் காலத்தில்தான் மனிதனுக்குத் தெரிய வந்தது. ஆனால் இது குறித்து அல்லாஹ் திருக்குர்ஆனில் பதினைந்து நூற்றாண்டுகளுக்கு முன்பாகவே பதிவுசெய்துள்ளான். அவன் திருக்குர்ஆனில் துல்கர்னைன் குறித்துக் கூறுகின்றான். அதன் விரிவுரையில் அவர் உலகைச் சுற்றி வந்த வரலாற்றுக் குறிப்புகள் இடம்பெறுகின்றன. "முதலில் அவர் ஓரிடத்திற்குச் சென்றார். அங்கு கருஞ்சேற்று நீரில் சூரியன் மறைவதைக் கண்டார். அங்கு மக்கள் சிலர் வசித்து வந்தனர். பிறகு அவர் நெடுந்தூரப் பயணத்தை மேற்கொண்டு வேறோர் இடத்தை அடைந்தார். அங்கு சூரியன் உதித்துக் கொண்டிருந்ததைக் கண்டார். அதனையன்றி எந்தத் திரையும் இல்லாத நிலையைக் கண்டார்'' என்று அல்கஹ்ஃபு அத்தியாயத்தில் அல்லாஹ் கூறுகின்றான்.

முதலில் அவர் சென்றதும் இரண்டாவது சென்றதும் நீண்ட நிலப்பரப்பின் இருமுனைகள் சந்திக்கின்ற ஒரே இடம்தான் என்பதைச் சிந்தித்தால் உணர்ந்துகொள்ளலாம். ஏனெனில் திருக்குர்ஆனில் இடம்பெற்றுள்ள "ஃபீ அய்னின் ஹமிஅத்தின்' என்ற சொற்கோவையிலுள்ள "ஹமிஅத்தின்' என்பது "ஹாமியத்தின்' என்றும் படிக்கப்படுகிறது. அதனடிப்படையில் "அது வெந்நீர் ஊற்று நீரில் மறைவதைக் கண்டார்'' என்று பொருள்படுகிறது. ஐஸ்லாந்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வெந்நீர் ஊற்றுகள் உள்ளன என்பது உண்மைத் தகவல். அதனுள் சூரியன் மறைவதையே இங்கு அல்லாஹ் கூறுகின்றான்.

அத்தோடு "சூரியன் உதித்துக்கொண்டிருப்பதைக் கண்டார். அதற்கு அதனையன்றி எந்தத் திரையும் இல்லை'' என்பதன்மூலம் அங்கு சூரியன் மறையாமல் பகலாகவே நீடித்திருந்ததைச் சுட்டிக்காட்ட விரும்புகிறான் என்பதையும் உணர முடிகிறது. ஐஸ்லாந்தில் மே முதல் ஜூலை வரை சூரியன் மறைவதில்லை. இந்த நிகழ்வையே அல்லாஹ் திருக்குர்ஆனில் குறிப்பிடுகின்றான். அதாவது பகலாகவே நீடிக்கக்கூடிய சில நாடுகளையும் இப்புவிப்பரப்பில் அவன் அமைத்துள்ளான் என்பதை நாம் புரிந்துகொள்ளலாம்.

இங்கே இஸ்லாமியப் பார்வையின் அடிப்படையில் ஒரு கேள்வி எழுகிறது. தொடர்ந்து பகலாகவே நீடித்தால் அவர்கள் ஐவேளைத் தொழுகையை எவ்வாறு நிறைவேற்றுவார்கள். இதற்கான விடையை நபிமொழிகளில் தேடிப் பார்க்கும்போது அதற்கான தீர்வு கிடைக்கிறது. ஒரு தடவை நபி (ஸல்) அவர்கள் தம் தோழர்களிடம் பேசிக்கொண்டிருந்தபோது தஜ்ஜால் குறித்துக் கூறினார்கள். அப்போது தோழர்கள் இவ்வாறு கேட்டார்கள்:

"அல்லாஹ்வின் தூதரே! அவன் பூமியில் எத்தனை நாள்கள் தங்கியிருப்பான்?'' என்று கேட்டோம். அதற்கு, "நாற்பது நாள்கள்'' என்று பதிலளித்த நபியவர்கள், "அன்றைய ஒரு நாள் ஓர் ஆண்டைப் போன்றும், மறுநாள் ஒரு மாதத்தைப் போன்றும், அதற்கு அடுத்த நாள் ஒரு வாரத்தைப் போன்றும், மற்ற நாள்கள் உங்களின் (சாதாரண) நாள்களைப் போன்றும் இருக்கும்'' என்று குறிப்பிட்டார்கள்.

நாங்கள், "அல்லாஹ்வின் தூதரே! ஓர் ஆண்டிற்குச் சமமாக இருக்கும் அந்த ஒரு நாளில், வழக்கமாகத் தொழும் (ஐவேளைத்) தொழுகைகளைத் தொழுதால் போதுமா?'' என்று கேட்டோம். அதற்கு நபியவர்கள், "இல்லை (போதாது); அந்த (நீண்ட) நாளை, அதற்கேற்ப மதிப்பிட்டு(த் தொழுது)கொள்ளுங்கள்'' என்று பதிலளித்தார்கள். (நூல்: இப்னுமாஜா: 4065)

இந்த நபிமொழியின் அடிப்படையில், அவர்கள் தம் தொழுகைக்காகவும் நோன்புக்காகவும் மக்கா மாநகரின் நேரத்தையே பின்பற்றி வருகின்றார்கள். ஆக இறைவனின் சான்றுகளாக உள்ள இரவும் பகலும் முறையாக மாறி மாறிச் சுழன்று வந்தால்தான் மனிதன் நிம்மதியாக வாழ முடியும் என்பதை நாம் உணர்ந்துகொள்ள முடிகிறது.
==================




திங்கள், 10 ஜூன், 2019

நூல் அறிமுகம்


==============
நூல் : அருள் வடிவானவர்
ஆசிரியர் : மவ்லவி சையத் அப்துர் ரஹ்மான் உமரி
பக்கங்கள்: 224
விலை: 150 ரூ
வெளியீடு :
சாஜிதா புக் சென்டர்
248, தம்புச் செட்டித் தெரு,
மண்ணடி,
சென்னை-1
தொடர்புக்கு: 98409 77758

====================
இந்நூலுக்கு நான் எழுதிய வாழ்த்துரை இதோ...

வாழ்த்துரை
எல்லாப் புகழும் அளவற்ற அன்பாளன் அல்லாஹ்வுக்கே உரித்தாகட்டும். அல்லாஹ்வின் அளவிலாக்  கருணையும் அன்பும் ஏக இறைவனின் தூதர் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்மீதும் அவர்களின் குடும்பத்தார், உற்ற தோழர்கள் ஆகிய அனைவர்மீதும் உண்டாவதாக.  
மௌலவி சையத் அப்துர் ரஹ்மான் உமரி, ஓர் அரபி நூலைத் தழுவி எழுதிய அருள் வடிவானவர்எனும் நூல் என் பார்வைக்கு வந்தது. அந்நூலைப் பிழைதிருத்தம் செய்து தருமாறு ஜனாப் முஹம்மது ஜகரிய்யா ஸாஹிப் கேட்டுக்கொண்டார். நூலைப் புரட்டிப் பார்த்தேன். வாசிக்க வாசிக்க அதன் நடையும் போங்கும் என்னை  வெகுவாக ஈர்த்தன.
பல்வேறு நூல்களை எழுதியுள்ள இவர், இந்நூலை ஒரு வித்தியாசமான நடையில் எழுதியுள்ளது பாராட்டத்தக்கது. தெளிந்த நீரோடை போன்ற நடை வாசகர்களைப் படிக்கத் தூண்டும்; தமிழார்வலர்களை நூலைக் கீழே வைக்க விடாது. ஏற்கெனவே கேள்விப்பட்ட நபிமொழிகளாக இருந்தாலும் அவற்றை எடுத்துச் சொல்லும் முறை புதிது. சடைவை ஏற்படுத்தாத விதத்தில், அரபி வார்த்தைகள் கலவாத தூய தமிழ்நடையில் அமைக்கப்பட்டுள்ளது இந்நூல்.
மனித வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் ஈருலகத் தலைவர் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு  அலைஹி வஸல்லம் அவர்கள் மக்களிடம் எந்த அளவிற்கு அன்போடும் கருணையோடும் நடந்துகொண்டார்கள் என்பதற்கான வரலாற்றுச் சான்றுகளை முன்வைக்கிறார் நூலாசிரியர். பொதுவாக  நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மனித இனத்தின் ஒவ்வொரு சாராரிடமும் மிகுந்த அன்போடும் பரிவோடும் நடந்துகொண்டார்கள் என்பதை நாம் அறிவோம். ஏழைகள், அடிமைகள், அநாதைகள், சிறுவர்-சிறுமியர் என எல்லோரிடமும் அவர்கள் அன்பாக நடந்துகொண்டது இறைவன் அவர்களை அகிலத்திற்கோர் அருட்கொடையாக அனுப்பியதே காரணம்.
(நபியே) அல்லாஹ்வுடைய அருளின் காரணமாகவே நீங்கள் அவர்களிடம் மென்மையாக நடந்துகொண்டீர்கள். நீங்கள் கடுகடுப்பானவராகவும் கடின உள்ளம் கொண்டவராகவும் இருந்திருந்தால் உங்களிடமிருந்து அவர்கள் வெருண்டோடி இருப்பார்கள் (3: 159) என்று கூறுகின்றான்.
ஆக நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அனைத்து வகையான மக்களிடமும்  அன்போடும் பரிவோடும் நடந்துகொண்டது அல்லாஹ் அவர்களுக்கு வழங்கிய அருட்கொடையே அன்றி வேறில்லை. அல்லாஹ் தன்னுடைய அடியாரான நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை, தான் விரும்பியவாறு படைத்து, பல்வேறு குணங்களைக் கொண்ட பல்வகை மனிதர்கள் பற்பல கோணங்களில் இழைக்கின்ற துன்பங்களையும் இன்னல்களையும் சகித்துக்கொள்ளும் விதத்தில் தன் தூதராக அனுப்பினான்; எவ்வளவு துன்பங்களையும் தாங்கிக்கொள்ளும் மனத்திட்பம் கொண்டவராகவும் கொண்ட கொள்கையில் உறுதிமிக்கவராகவும் திகழச் செய்தான். தேவைப்பட்டபோது அவர்களைப் பாராட்டினான்; நேரம் பார்த்துக் கண்டித்தான்; சமயம் பார்த்து ஆறுதல் கூறினான்; சொல்லொணாத் துன்பங்களைக் கண்டு துவண்டுபோன நேரத்தில் தேற்றினான். இப்படி எல்லாவற்றையும் அல்லாஹ்வே செய்தான். தான் எப்படி விரும்பினானோ அப்படியெல்லாம் நபியவர்கள் நடந்துகொண்டதால்தான், அவன் அவர்களைத் தன் அன்பராக (ஹபீபுல்லாஹ்) ஆக்கிக்கொண்டான்.
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அருள்வடிவான வாழ்க்கையைப் படிக்கின்றபோது நாமும் அவர்களைப்போல் நம்மால் இயன்ற வரை பிறரிடம் அன்போடும் பரிவோடும் நடந்துகொள்ள முயல வேண்டுமென உறுதிபூண வேண்டும். தொழிற்புரட்சியும் விஞ்ஞான வளர்ச்சியும் மிகுந்த இன்றைய அறிவியல் யுகத்தில், மனிதன் எவ்வளவுதான் முன்னேறிச் சென்றாலும் அவனது மனத்தில் அன்பு எனும் உணர்வு வறண்டுபோய்க் காணப்படுகிறது. பெற்ற பிள்ளைகள்மீது அன்பில்லாததால் ஒரு தாய் தன் பிள்ளைகளையே கொலைசெய்கிறாள்; ஈன்றெடுத்த தாய்மீது அன்பில்லாததால் தனயனே தன் தாயைக் கொலை செய்கிறான்; தந்தையைக் கொலை செய்கிறான்; ஒன்றாகக் கட்டிலில் உறவாடிய கணவன்மீது அன்பில்லாததால் மனைவி தன் கணவனையே கொலை செய்கிறாள்; கணவன் தன் மனைவியையே எரித்துக் கொலை செய்கிறான்; காதலி உடன்படவில்லையென்பதால் அவள்மீது அமிலத்தை ஊற்றுகிறான். இவ்வாறு எல்லாவிதமான உறவுகளிலும் அன்பின்மை காணப்படுகிறது.
இத்தகைய தருணத்தில் ஒருவர்மீது அன்புகொள்ள நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அன்பான வாழ்க்கையைப் படித்தால், கற்றுக்கொள்ளலாம்.  அதற்கு இந்நூல் துணைபுரிகிறது. நிபந்தனையற்ற, இறைவனுக்கான அன்பே நீடித்து நிலைக்கும். அத்தகைய பேரன்பை நாம் முதன்முதலாக நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்மீது காட்ட வேண்டும். பின்னர் நம் குடும்ப உறுப்பினர்கள்மீது காட்ட வேண்டும். ஈன்றெடுத்து வளர்த்து ஆளாக்கிய பெற்றோர்மீது காட்ட வேண்டும். பெற்றெடுத்த பிள்ளைகள்மீது காட்ட வேண்டும். இன்னபிற மனிதர்கள்மீதும் அனைவர்மீதும்  அன்பு காட்ட வேண்டும். இந்த அன்புதான் நம்மை ஈருலகிலும் இதயங்களை இணைக்கக்கூடியது என்பதை நினைவில் கொள்வோம்.
இந்நூலாசிரியர் இதுபோல் இன்னும் எண்ணற்ற நூல்களைப் படைக்க ஏக இறைவன் அருள்புரிவானாக.
அன்புடன்
முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.
மணலி, சென்னை-68






ஞாயிறு, 9 ஜூன், 2019