ஞாயிறு, 21 ஜனவரி, 2018

மொழிபெயர்ப்பாளர் உரை! (சுனனுன் நஸாயீ மூன்றாம் பாகம்)

   
 20-01-2018 அன்று மாலை கவிக்கோ அரங்கில் மூன்று நூல்கள் வெளியிடப்பட்டன. அவற்றுள் ஒன்றான சுனனுன் நஸாயீ மூன்றாம் பாகத்தை நான் தமிழாக்கம் செய்துள்ளேன். (அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்)

அந்நூலில் நான் பதிவு செய்துள்ள மொழிபெயர்ப்பாளர் உரை
---------------------------------------------------------------------------------------------------------------- 


எழுதுகோலால் எழுதக் கற்பித்த ஏக இறைவனுக்கே எல்லாப் புகழும். ஏகனின் இறுதித் தூதராய் இவ்வவனியில் தோன்றி எல்லா மக்களுக்கும் ஏகத்துவக்கொள்கையை ஏகமாய் எடுத்துரைத்த ஏந்தல் நபி (ஸல்) அவர்கள்மீதும் அவர்கள்தம் பரிசுத்தக் குடும்பத்தார், உற்ற தோழர்கள் அனைவர்மீதும் இறையருளும் கருணையும் பொழிவதாக!

வரலாற்று நூலையும் வேறு சில நூல்களையும் தமிழாக்கம் செய்துவந்த நான் முதன் முதலாகத் தமிழாக்கம் செய்த நபிமொழித் தொகுப்பு நூல் இப்னுமாஜா ஆகும். அதனைத் தொடர்ந்து நான்  சுனனுன் நஸாயீ எனும் இந்நூலைத் தமிழாக்கம் செய்யத் தொடங்கினேன். இந்நூலை நான் தாருல் உலூம் தேவ்பந்தில் பயின்றுள்ளேன். அங்கு இந்நூல் தவ்ரத்துல் ஹதீஸ் எனும் மேற்படிப்புப் பாடத்திட்டத்தில் உள்ளது. அப்பிரிவில் பயிற்றுவிக்கப்படுகின்ற பத்து ஹதீஸ் நூல்களுள் இதுவும் ஒன்று.

சுனனுன் நஸாயீ எனும் நபிமொழித் தொகுப்பைக் கோவை செய்த இமாம் அவர்களின் இயற்பெயர் அஹ்மது பின் ஷுஐப் ஆகும். இவரது குறிப்புப்பெயர் அபூஅப்திர் ரஹ்மான் ஆகும். இவர்  நஸா எனும் ஊரில் பிறந்ததால் அந்த ஊரோடு இணைக்கப்பட்டு "சுனனுன் நஸாயீ" எனும் பெயரில் இந்நூல் அறியப்படுகிறது.  இவர் ஹிஜ்ரீ 215-இல் பிறந்து, ஹிஜ்ரீ 303-ஆம் ஆண்டு இறந்தார்.இதில் அகில உலக எண்ணியல் கணக்குப்படி 5662 நபிமொழிகள் உள்ளன. அந்த எண்ணைத்தான் இந்நூலில் பயன்படுத்தியுள்ளோம். இதில் புகாரீ, முஸ்லிம், திர்மிதீ, அபூதாவூத், இப்னுமாஜா ஆகிய நூல்களில் பதிவுசெய்யப்பட்டுள்ள நபிமொழிகளும் ஆங்காங்கே இடம்பெற்றுள்ளன. அவற்றுள் சில அந்நூல்களுள் இடம்பெற்ற அதே வார்த்தைகளைக் கொண்டவையாகவும் வேறு சில நபிமொழிகள் சிற்சில வார்த்தை மாற்றங்களுடனும் பதிவுசெய்யப்பட்டுள்ளன. ஆகவே புகாரீ, முஸ்லிம் ஆகிய நூல்களுள் வார்த்தை மாற்றமின்றிப் பதிவுசெய்யப்பட்டுள்ள நபிமொழிகளுக்கான தமிழாக்கத்தை ஏற்கெனவே ரஹ்மத் பதிப்பகம் வெளியிட்டுள்ள புகாரீ, முஸ்லிம் தமிழாக்க நூல்களில் உள்ளதை அப்படியே எடுத்துப் பயன்படுத்தியுள்ளேன். மேலும் இப்னுமாஜா நூலில் இடம்பெற்றுள்ள நபிமொழிகள் சில இதில் இடம்பெற்றுள்ளன. அந்த நபிமொழிகளை ஏற்கெனவே நானே தமிழாக்கம் செய்துள்ளதால் அவற்றை அந்நூலிலிருந்து அப்படியே எடுத்துப் பயன்படுத்தியுள்ளேன். அவை தவிர மற்ற நபிமொழிகளையே நான் இந்நூலில் புதிதாகத் தமிழாக்கம் செய்துள்ளேன் என்பதைத் திறந்த மனத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

நஸாயீ எனும் இந்நூலை ஏன் படிக்க வேண்டும்? மற்ற நபிமொழித் தொகுப்பு நூல்களுள் உள்ள நபிமொழிகள்தாமே இதில் இடம்பெற்றுள்ளன? என்று கேட்போர் இருக்கலாம். புகாரீ, முஸ்லிம், திர்மிதீ, அபூதாவூத், இப்னுமாஜா ஆகிய நூல்களுள் இடம்பெறாத நபிமொழிகளும் இந்த நூலில் பதிவுசெய்யப்பட்டுள்ளன என்பதை அவர்கள் விளங்கிக்கொள்ள வேண்டும். அது தவிர, மற்ற நூல்களுள் இல்லாத கூடுதல் தகவல்களும் இதில் இடம்பெற்றுள்ளன என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும். எனவே இந்நூலைப் படிக்கின்றபோது, மற்ற நூல்களில் கிடைக்காத கூடுதல் தகவல்களைத் தெரிந்துகொள்வதோடு மேற்கண்ட நூல்களுள் உள்ள தகவல்களையும் உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.   

 

நீண்ட காலமாகத் தமிழில் தலைகாட்டாத அரபி நூல்களெல்லாம் ஒவ்வொன்றாகத் தமிழில் வெளிவருவது தமிழறிந்த மக்கள் யாவருக்கும் உயர்ந்தோன் அல்லாஹ் அறிவூற்றைத் திறந்துவிடத் தொடங்கிவிட்டான் என்பதையே காட்டுகின்றது. ஞான மழை பொழியும்போது அதைப் பிடித்துப் பத்திரப்படுத்திக்கொள்வது அறிவாளிகளின் அடிப்படைப் பண்பாகும். அரபி மூலத்தோடு இணைந்த இது போன்ற தமிழாக்க நூல்களை வாங்கி வைத்துக்கொண்டு வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் வாசித்துப் பயன்பெறுவது வாசகர்களின் வழக்கமாக மாற வேண்டும். கோடைக்கால வெப்பத்தில் வாடியவன் தண்ணீர்மீது கொள்ளும் மோகத்தைப்போல அறிவுத்தாகம் கொண்டு இந்நூலை வாசிக்கும்போது அளவிலா நற்கருத்துகளைத் தேனாகச் சுவைக்கலாம்.

ஒரு செடியை நட்டு, அதன் வளர்ச்சியை நாடி அவ்வப்போது தண்ணீர் விட்டு, உரமிட்டு வளர்த்து அதைப் பெருமரமாக உருவாக்குவதைப்போல ரஹ்மத் பதிப்பகம் எனும் நிறுவனத்தைத் தொடங்கி அதைச் சிறுகச் சிறுக வளர்த்துப் பெருமரமாக்கும் முயற்சியில் ஈடுபட்டார் தமிழார்வலர் முஸ்தஃபா அவர்கள். இன்று அது ஆல்போல் தழைத்து தன்னிலிருந்து நூல்கள் எனும் கனிகளைத் தந்துகொண்டிருக்கிறது. அவர்தம் பணிகள் யாவும் பரந்துவிரிந்துள்ள இப்பாரெங்கும் பரவி, மக்கள் யாவரும் பயன்பெற ஏகன் அல்லாஹ் அருள்புரிவானாக. அவர் எண்ணிய பணிகளையெல்லாம் செய்து முடிக்கும் வரை அவரது ஆயுளை நீட்டிப்பானாக.

ஏகன் அல்லாஹ் அடியேனுக்கும் இந்நூல் நேர்த்தியாக வெளிவர உறுதுணையாகப் பணியாற்றிய அத்தனை பேருக்கும் ஈருலகப் பயன்களை வழங்குவதோடு தொடர்ந்து இதுபோன்ற பயனுள்ள பணிகளைச் செய்யும் நற்பேற்றை நல்குவானாக.

அன்புடன்
முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.
சென்னை 68
புதன், 17 ஜனவரி, 2018

மறைந்தும் வாழும் மதீனத்து நபி (ஸல்)


-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.
(இமாம் மஸ்ஜித் ஜாமிஉல் அன்வார், மணலி, சென்னை)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மற்ற மனிதர்களைப்போலவே தமது 63ஆம் அகவையில் மரணத்தைத் தழுவினார்கள். "ஆலமுல் பர்ஸக்' எனும் மறைமுக உலகில் மரணித்த ஆன்மாக்களெல்லாம் வாழ்ந்துகொண்டிருக்கின்றன. அதில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் உயிரும் அடக்கம். பொதுவாக இறந்தவர்கள் நல்லவர்களாக இருப்பின் சொர்க்கவாசல் திறக்கப்பட்டு அதன் சுகந்தத்தைச் சுவாசித்தவாறு புதுமாப்பிள்ளைபோல் துயில்கொண்டிருப்பார்கள். பாவிகளாக இருப்பின் நரகவாசல் திறக்கப்பட்டு அதன் வெப்பக்காற்றால் வேதனை செய்யப்பட்டுக்கொண்டே இருப்பார்கள். இறுதி விசாரணை நாள் வரை இதே நிலைதான் நீடிக்கும்.

ஈருலகத் தலைவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழிமுறைகள் அவர்களின் சமுதாய மக்களால் பின்பற்றப்பட்டுக்கொண்டே இருக்கின்றன. அதன்மூலம் அவர்கள் நினைவுகூரப்படுவதால் அவர்கள் எல்லோரின் மனங்களிலும் வாழ்ந்துகொண்டே இருக்கின்றார்கள். இது ஒரு பொதுவான நிலைப்பாடு.  

அதேநேரத்தில் மற்றவர்களுக்கு இல்லாத சிறப்பு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு உண்டு. உலகில் வாழும் மக்களெல்லாம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்மீது ஸலவாத் சொல்கின்றார்கள்; ஸலாம்-முகமன் கூறுகின்றார்கள். இவை அனைத்தும் அவர்களுக்குக் கொண்டு சேர்க்கப்படுகின்றன. அப்போது  அவர்களுக்கு உயிர்கொடுக்கப்படுகின்றது. உலகில் வாழும் மக்களுள் யாரேனும் ஒருவர் ஸலவாத்தும் ஸலாமும் சொல்லிக்கொண்டே இருக்கின்றார். எனவே அவர்களுக்கு உயிர்கொடுக்கப்பட்டுக்கொண்டே இருக்கின்றது. அதனால் அவர்கள் மரணித்த பின்னரும் உயிரோடு வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள் என்பதை நாம் உணரலாம்.

"(உலகைச்) சுற்றிவரும் வானவர்கள் அல்லாஹ்வுக்கு உள்ளார்கள். அவர்கள் என் சமுதாயத்தினர் சொல்கின்ற ஸலாமை என்னிடம் கொண்டு வந்து சேர்க்கின்றார்கள். நான் உயிரோடிருப்பது உங்களுக்கு நல்லது. நீங்கள் (என்னிடம்) பேசுகின்றீர்கள். நாம் உங்களோடு பேசுகிறோம். என் மரணமும் உங்களுக்கு நல்லதுதான். (ஏனென்றால்) உங்களின் செயல்பாடுகள் எனக்கு எடுத்துக்காட்டப்படுகின்றன. (என் சமுதாயத்தாராகிய உங்களின்) நன்மைகளைப் பார்த்தால் அதற்காக அல்லாஹ்வைப் புகழ்வேன். தீமைகளைப் பார்த்தால் உங்களுக்காக அல்லாஹ்விடம் பாவமன்னிப்புத் தேடுவேன்'' என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: முஸ்னதுல் பஸ்ஸார்: 1925)
உலகிலுள்ள கோடானு கோடி மக்களுள் யாரேனும் ஒருவர் ஒவ்வொரு விநாடியும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு முகமன் கூறிக்கொண்டேதான் இருப்பார். ஒவ்வொரு கணப்பொழுதும் அதை அவர்களின் முன்னிலையில் வானவர்கள் சமர்ப்பித்துக்கொண்டேதான் இருப்பார்கள். இதனால் அவர்கள் எப்போதும் வாழ்ந்துகொண்டுதான் இருக்கின்றார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களல்லாத, இறந்துபோன மற்றவர்களைப் பொறுத்த வரை, அவர்களின் முன்னிலையில் நின்று முகமன் கூறினால்தான் அது அவர்களுக்குக் கேட்கும். அதற்கு அவர்கள் பதிலளிப்பார்கள். இறந்தோர் கூறும் பதிலை முகமன் கூறியவர் செவியுற முடியாது என்பது வேறு விஷயம்.

"முஸ்லிம் ஒருவர் தம் சகோதரர் ஒருவரின் மண்ணறையைக் கடந்து செல்கிறார். அந்த மண்ணறைவாசி உலகில் அவரைத் தெரிந்துவைத்திருந்தார். அவர் அந்த மண்ணறைவாசிக்கு ஸலாம் கூறுகிறார். அப்போது அவருடைய முகமனுக்குப் பதிலளிப்பதற்காக (கைப்பற்றப்பட்ட) அவரது உயிரை அல்லாஹ் அவருக்குத் திருப்பிக் கொடுக்காமல் இருப்பதில்லை'' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். 
இந்நபிமொழியில் மண்ணறை அருகே கடந்து செல்பவர் முகமன் கூறுகிறார் என்ற வாக்கியம் மிகுந்த கவனத்திற்கு உள்ளாகின்றது. ஆம்! மற்றவர்களின் மண்ணறை அருகே சென்று, நேரடியாக முகமன் கூறினால்தான் அவர் நமக்குப் பதிலளிப்பார். தூரத்தில் இருந்துகொண்டு சொன்னால் அதை எடுத்துரைக்கும் வசதி, நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குத் தவிர வேறு யாருக்கும் வழங்கப்படவில்லை. அந்த அடிப்படையில்தான் மண்ணறை தரிசனத்திற்காகச் செல்லும்போது, அங்கு அடக்கம் செய்யப்பட்டுள்ள மண்ணறைவாசிகளைப் பார்த்து, அஸ்ஸலாமு அலைக்கும் தார கவ்மின் முஃமினீன்...(இறைநம்பிக்கைகொண்ட மண்ணறைவாசிகளே, உங்கள்மீது அல்லாஹ்வின் சாந்தி உண்டாவதாக...)   (அபூதாவூத்: 2818) எனக் கூறுகின்றோம். 
 
அதேநேரத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு ஒருவர் எங்கிருந்து வேண்டுமானாலும் ஸலாம் சொல்லலாம். அவர்களின் முன்னிலையில் செல்ல வேண்டும் என்ற அவசியமில்லை. அந்தச் சிரமத்தை அல்லாஹ் யார்மீதும் சுமத்தவில்லை. காரணம், பலதரப்பட்ட வாழ்வியல் நிலைகளில் மனிதர்கள் வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள். எல்லோரும் மதீனா சென்று அவர்களின் அடக்கத்தலத்தை அடைந்து நேரடியாக முகமன் கூறும் வாய்ப்புக் கிடைக்காது. சூழ்நிலை காரணமாகச் சிலர் பணமிருந்தும் பயணம் மேற்கொள்ள முடியாமல் போகலாம். இதையெல்லாம் கருத்தில்கொண்டுதான் அல்லாஹ்  தன்னுடைய தூதருக்கு மட்டும் இத்தகைய ஏற்பாட்டைச் செய்துள்ளான். எனவே மக்கள் எங்கிருந்து வேண்டுமானாலும் அவர்களுக்கு ஸலாமோ ஸலவாத்தோ சொல்லலாம். அது நபி (ஸல்) அவர்களை அடைந்துவிடும். 

ஒவ்வொரு நொடிப்பொழுதும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு ஸலாம் சொல்லப்படுகின்றது.  அதற்கு அவர்கள் பதிலளிக்குமுகமாக அவர்கள்தம் உயிர் அவர்களுக்குத் திரும்பக் கொடுக்கப்படுகின்றது என்பதையும் அவர்கள் ஏற்கெனவே சொல்லிச் சென்றுள்ளார்கள்.
"யாரொருவர் எனக்கு முகமன் கூறுகின்றாரோ அவருடைய முகமனுக்குப் பதிலளிப்பதற்காக (கைப்பற்றப்பட்ட) எனது உயிரை அல்லாஹ் எனக்குத் திருப்பிக் கொடுக்காமல் இருப்பதில்லை'' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: அபூதாவூத்: 1745) இந்த நபிமொழியின் அடிப்படையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு முகமன் கூறுவதால் முகமன் சொன்னவருக்கு அவர்கள் பதிலளிக்கிறார்கள் என்பதை அறிய முடிகிறது.
மேலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தம்மீது ஸலவாத் சொல்லுமாறும், நீங்கள் எங்கிருந்து அதைச் சொன்னாலும் அது தம்மை வந்தடைவதாகக் கூறியுள்ளார்கள்.

"உங்கள் வீடுகளை அடக்கத்தலங்களைப் போல் ஆக்காதீர்கள். என்னுடைய அடக்கத்தலத்தை கொண்டாடும் இடமாக ஆக்காதீர்கள். என்மீது ஸலவாத் கூறுங்கள். திண்ணமாக உங்கள் ஸலவாத்-நீங்கள் எங்கிருந்தாலும்-(வானவர்கள்மூலம்) என்னை வந்தடைகிறது'' என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: அபூதாவூத்: 1746)
இந்நபிமொழியின் அடிப்படையில், நாம் எங்கிருந்து ஸலவாத்  ஓதினாலும் அது வானவர்கள்மூலம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை அடைந்துவிடுகிறது என்பதை உறுதியாக நம்ப முடிகிறது. ஏனென்றால் தற்போது நாம் கணினி யுகத்தில் இருக்கிறோம். ஒரு நாட்டின் ஏதோ ஒரு மூலையில் இருந்துகொண்டு எங்கோ ஒரு மூலையில் இருக்கின்ற நம் உறவினரோடு பேசுகிறோம். இருவருக்குமிடையே காற்றைத் தவிர எந்தத் தொடர்பும் இல்லை. இருப்பினும் நாம் பேசுவது அவருக்கும் அவர் பேசுவது நமக்கும் கேட்கிறது. இது சாத்தியம் என்றால், அகில உலகத்தையே படைத்தாளும் வல்லமைமிக்க அல்லாஹ், மனிதர்கள் கூறும் ஸலவாத்தை நபியவர்களுக்கு வானவர்கள்மூலம் கொண்டுபோய்ச் சமர்ப்பிக்க முடியாதா? எனவே நாம் ஒவ்வொரு தடவை ஸலவாத் கூறும்போதும் அது அவர்களுக்கு அவ்வப்போது கொண்டுபோய்ச் சேர்க்கப்படுவதால் அவர்கள் எப்போதும் உயிருடனேயே இருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது என்பதையும் நாம் விளங்கிக்கொள்ள முடிகிறது.

அது மட்டுமல்ல, ஒவ்வொருவரும் தொழுகின்றபோது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்மீது முகமன்  சொல்லுமுகமாகவே அல்லாஹ் தொழுகையை அமைத்துள்ளான். அத்தஹிய்யாத் இருப்பில் அமர்ந்து அத்தஹிய்யாத்து லில்லாஹி... என்று தொடங்கி ஓதும்போது "அஸ்ஸலாமு அலைக்க அய்யுஹன் நபிய்யு (நபியே, உங்கள்மீது அல்லாஹ்வின் சாந்தி உண்டாவதாக)'' என ஓதுகிறோம். அதன்பின் நபிமீது ஸலவாத் ஓதுகிறோம். இந்த இரண்டையும் ஓதாமல் தொழுகை முடிவடைவதில்லை.  இவ்விரண்டின் மூலம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் மிகுந்த மரியாதை கொடுத்துள்ளான் என்பதை அறிகிறோம். அத்தோடு ஒவ்வொரு கணப்பொழுதும் உலகின் ஏதாவது மூலையில் யாரேனும் தொழுதுகொண்டுதான் இருப்பார்; அவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்மீது ஸலாமும் ஸலவாத்தும் சொல்லிக்கொண்டுதான் இருப்பார். அதன்மூலம் மறுமைநாள் வரை அவர்கள் உயிரோடிருக்குமாறு அல்லாஹ் ஏற்பாடு செய்துள்ளான் என்பதை உணர முடிகிறது.

ஆகவே நாம் நாள்தோறும் அவர்கள்மீது ஸலவாத் ஓதுவதற்கும் அவர்களுக்கு முகமன் கூறுவதற்கும் ஏக இறைவன் நல்வாய்ப்பை நல்குவானாக.
=============================================
வியாழன், 11 ஜனவரி, 2018

தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபை சார்பில் ஆலிம்களுக்கான ஊடகப் பயிலரங்கு


  • தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபை சார்பில் முதல் முறையாக "இன்றைய நிலையில் இந்தியாவின் எதார்த்த முகம்' என்னும் தலைப்பில் ஆலிம்களுக்கான ஊடகப் பயிற்சிப் பட்டறை சென்னை மண்ணடி லஜ்னத்துல் முஹ்சினீன் ட்ரஸ்ட் பள்ளிவாசலில் 02.01.2018 அன்று காலை 9: 30 மணிக்கு தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் தலைவர் மௌலானா பீ.ஏ. காஜா முயீனுத்தீன் பாகவி தலைமையில் தொடங்கியது. தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் பொதுச் செயலாளர் முனைவர் மௌலானா வி.எஸ். அன்வர் பாதுஷா உலவி அறிமுகவுரை நிகழ்த்தினார். 

  • அதன்பின் மௌலானா கே.எம். இல்யாஸ் ரியாஜி "ஆலிம்களும் இதழியலும்' என்ற தலைப்பிலும், இப்போது டாட் காம் நிறுவனத்தின் இயக்குநர் சகோதரர் பீர் முஹம்மது "அச்சு ஊடகம் மற்றும் மின்னணு ஊடகங்களை விஞ்சி நிற்கும் சமூக ஊடகங்கள்' என்ற தலைப்பிலும் உரையாற்றினர். பின்னர் துக்ளக் வார இதழின் துணை ஆசிரியர் சகோதரர் பரகத்அலி "துக்ளக் பரகத்திடம் சில கேள்விகள்' என்ற தலைப்பில் ஆலிம்கள் கேட்ட கேள்விகளுக்கு உரிய முறையில் பதிலளித்துப் பேசினார். தி இந்து நாளிதழ் நடுப்பக்க ஆசிரியர் தோழர் சமஸ் "இன்றைய இந்தியாவின் யதார்த்த முகம்' என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார். அத்தோடு முதல் அமர்வு நிறைவுற்று, லுஹர் தொழுகை, பகலுணவுக்காக இடைவேளை விடப்பட்டது. பின்னர் பகல் 2: 30 மணிக்கு  இரண்டாம் அமர்வு தொடங்கியது. அதில் தினமலர் நாளிதழின் முன்னாள் தலைமை நிருபர் சகோதரர் நூருல்லாஹ் "இதழியலில் இந்துத்துவாவும் முஸ்லிம்களும்' எனும் தலைப்பில் உரையாற்றினார்.

  • ஒவ்வொரு பயிற்சியாளரும் ஆலிம்கள் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் சடைவடையாமல் பதிலுரைத்தார்கள். அதன்பின் கோவை அ. அப்துல் அஸீஸ் பாகவி தொகுப்புரை வழங்கி, பயிலரங்கை முடித்துவைத்தார். கலந்துகொண்டோர் அனைவருக்கும் கருத்துக் கேட்புப் படிவம் வழங்கப்பட்டு, கேள்வி வடிவில் பதிவுசெய்யப்பட்டிருந்தவற்றிற்கு உரியமுறையில் பதிலளித்து, சிறந்த கருத்துகளை வழங்கிய நால்வருக்கு, தினமலர் நாளிதழின் முன்னாள் தலைமை நிருபர் நூருல்லாஹ் "நயம்பட உரை' எனும் தமது நூலை நினைவுப் பரிசாக வழங்கினார். இப்பயிலரங்கில் கலந்துகொள்ள தமிழகத்தின் பல்வேறு ஊர்களிலிருந்து 150 ஆலிம்கள் வருகைதந்திருந்தனர். ஆலிம்களுக்கும் ஊடகத்துறைக்கும் இடையே இருந்த இடைவெளியைக் குறைத்துள்ளதாகக் கலந்துகொண்டோர் கூறிச் சென்றனர். 

  •  இறுதியில் லஜ்னத்துல் முஹ்சினீன் பள்ளியின் தலைமை இமாம் மௌலானா ஃபக்ருத்தீன் ஃபாஸில் பாகவியின் துஆவுடன் பயிலரங்கு இனிதே நிறைவுற்றது.    


    -பாகவியார்

===============================

அண்ணலாரின் ஆர்வமூட்டல்...


                        -முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு செய்தியை மக்கள் மனத்தில் பதிய வைக்கக் கையாண்ட உத்திகள் அறிவுப்பூர்வமானவை. பரபரப்பான உலகில் ஒவ்வொருவரும் ஏதோ ஒன்றைக் குறித்துச் சிந்தித்துக்கொண்டிருப்பார்கள்; ஏதோ ஒரு பிரச்சனையை அசைபோட்டுக்கொண்டிருப்பார்கள். அந்நேரத்தில் திடீரென ஒரு செய்தியைச் சொன்னால் அது அவர்களின் மனத்தில் பதியாது. எனவே அவர்களைக் கனவுலகிலிருந்து நிகழுலகிற்குக் கொண்டுவந்து, சொல்லப்போகும் செய்தியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் சொல்ல வேண்டும். அப்போதுதான் அந்தச் செய்தி கேட்போரின் மனத்தில் ஆழமாகப் பதியும்.

அந்த வகையில் நபி (ஸல்) அவர்கள் பல தடவை இந்த உத்தியைப் பயன்படுத்தியுள்ளார்கள். நான் உங்களுக்கு ஒரு  செய்தியைச் சொல்லட்டுமா?” என்று கேட்டுவிட்டுச் சில மணித்துளிகள் அமைதியாக இருப்பார்கள். உடனே தோழர்கள், “சொல்லுங்கள் அல்லாஹ்வின் தூதரே!என்று மறுமொழி கூறுவார்கள். சிலபோது நான் உங்களுக்கு ஒரு  செய்தியைச் சொல்லட்டுமா?” என்று கேட்டு, அவர்களின் கவனத்தைத் தம் பக்கம் திருப்பியபின், அவர்களின் பதிலை எதிர்பார்க்காமலேயே செய்தியைச் சொல்லத் தொடங்கிவிடுவார்கள். இது அவர்கள் மேற்கொண்ட உளவியல் உத்திஎன்று சொல்லலாம்.

அவ்வாறு பல தடவை பல செய்திகளைச் சொல்லியிருந்தாலும் அவற்றுள் மிக முக்கியமான நான்கு செய்திகளை மட்டும் நாம் இக்கட்டுரையில் தெரிந்துகொள்வோம்.    

உங்களுக்கு நான் ஒன்றை அறிவிக்கட்டுமா? அதை நீங்கள் செயல்படுத்தினால் நீங்கள் ஒருவரை ஒருவர் நேசிக்கலாம். உங்களிடையே ஸலாமைப் பரப்புங்கள்என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: திர்மிதீ: 2612) இதை அபூஹுரைரா (ரளி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

ஒருவருக்கொருவர் நேசம் கொள்வதற்கான வழிமுறையை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இச்செய்தியின்மூலம் சொல்லியுள்ளார்கள். தற்காலத்தில் பெரும்பாலோரின் உள்ளத்தில் பிறர்மீது உண்மையான நேசமோ அன்போ இல்லை. மக்களின் மனங்கள் இறுகிய நிலையில் காணப்படுகின்றன. இதை நீக்கிக்கொள்ளும்முகமாகவே நபி (ஸல்) அவர்களின் இக்கூற்று அமைந்துள்ளது. நம்மை யாரேனும் ஒரு முஸ்லிம் எதிர்கொண்டால் அவருக்கு முகமன் உரைப்பது நம் கடமையாகும். அதன்மூலம் அவ்விருவருக்கிடையே அன்பு ஏற்பட வழிபிறக்கிறது. இந்த முகமன் இருவரின் உள்ளத்திலும் உள்ள மனஇறுக்கத்தை நீக்கிவிடுகிறது.

சுராக்கா பின் மாலிக் (ரளி) அவர்கள் அறிவித்துள்ளதாவது: நான் உமக்குச் சிறந்ததொரு தர்மத்தைப் பற்றி அறிவிக்கட்டுமா? என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டுவிட்டு, (திருமணத்திற்குப்பின்) உம்முடைய மகள் உம்மிடமே (மணவிலக்குச் செய்யப்பட்டு) திருப்பி அனுப்பப்பட்ட நிலையில், அவளுக்கு உம்மைத் தவிர சம்பாதித்துக்கொடுப்பவர் யாரும் இல்லாதபோது (நீர் செய்யும் தர்மமாகும்) என்று கூறினார்கள். (நூல்: இப்னுமாஜா: 3657)

ஒருவர் தம் மகளின் திருமணத்தை நடத்துவதற்காக மிகச் சிரமப்பட்டுப் பொருளாதாரத்தை ஈட்டி, நல்ல முறையில் அவளது வாழ்க்கை அமைய வேண்டும் என்ற நோக்கத்தில் ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்துச் செய்கிறார். நல்ல கணவனாக அமைய வேண்டும் என்ற உயர் எண்ணத்தோடு துருவித் துருவி ஆராய்ந்து ஒரு மணாளனைத் தேர்வுசெய்கிறார். இறுதியில் மணமுடித்துவைக்கிறார்.  இவ்வளவு சிரமப்பட்டு மணமுடித்துவைத்து, திருமணத்திற்குப்பின் இரண்டு மாதங்களில் ஏதோ ஒரு பிரச்சனையால் தலாக்பெற்று பெற்றோரின் வீட்டிற்கே அவள் திரும்பி வந்தால் அப்போது  அவர்களின் மனம் என்ன பாடுபடும்?

வாங்கிய கடனையே அடைக்கவில்லை. அதற்குள் மகள் திரும்பி வந்துவிட்டாளே என்ற கவலை ஒரு பக்கமும் குடும்ப நெருக்கடி மற்றொரு பக்கமும் அழுத்தும்போது கோபத்தால் வார்த்தைகள் கொப்பளித்து வரத்தான் செய்யும். ஆனால் அதையெல்லாம் வெளிக்காட்டிக்கொள்ளாமல் மனமுடைந்து வந்த மகளை இன்முகத்துடன் வரவேற்று, அரவணைத்து அவள் இருக்க இடம் கொடுத்து, உணவையும் கொடுத்துப் பராமரிப்பதே தர்மத்தில் சிறந்த தர்மமாகும்; அறத்தில் சிறந்த அறமாகும்.

சிலர் தம் கோபத்தை அடக்க முடியாமல் வார்த்தைகளைக் கொட்டிவிடுகின்றனர். குலாபெற்று வந்த பெண்ணை வீட்டில் சேர்ப்பதில்லை. அல்லது வீட்டில் தங்க வைத்து வார்த்தைகளால் வதைப்பார்கள்; காயப்படுத்துவார்கள். அத்தகைய பெற்றோர் இந்நபிமொழியைக் கூர்ந்து கவனிக்க வேண்டும். கணவன் இறந்துவிட்டதால் ஒரு பெண் தன் பெற்றோரின் வீட்டில் தங்க நேரிடும். அதையும் சிலர் அரைகுறை மனத்துடன் அங்கீகரிப்பார்கள். உறவினர்கள் சிலர் வார்த்தைகளால் குத்திக்காட்டிப் பேசுவார்கள். இத்தகைய தருணங்களில் சிக்கிக்கொண்டுள்ள மகளிடம் பெற்றோர் அன்பாக நடந்துகொள்ள வேண்டும்; அவளுக்கு ஆறுதல் கூறி ஆதரிக்க வேண்டும். அவ்வாறு செய்வதே  மிகச் சிறந்த தர்மமாகும் என நபி (ஸல்) அவர்கள் நவின்றுள்ளதை நினைவில் கொள்ள வேண்டும்.    

ஹாரிஸா பின் வஹ்ப் (ரளி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் (ஒரு முறை பின்வருமாறு) கூறக் கேட்டேன்: சொர்க்கவாசிகள் யார் என்று உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா? அவர்கள் (மக்களின் பார்வையில்) பலவீனமானவர்கள்; பணிவானவர்கள். (ஆனால்,) அவர்கள் அல்லாஹ்வின் மேல் ஆணையிட்டு (எதையேனும்) கூறுவார்களானால், அல்லாஹ் அதை (அவ்வாறே) நிறைவேற்றிவைப்பான். (இதைப் போன்றே) நரகவாசிகள் யார் என்று உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா? அவர்கள் உண்டு கொழுத்தவர்கள்; இரக்கமற்றவர்கள்; பெருமை அடிப்பவர்கள் ஆவர்.” (நூல்: புகாரீ: 6657)

சொர்க்கவாசிகளின் பண்புகளையும் நரகவாசிகளின் தன்மைகளையும் மிகத் தெளிவாக நபி (ஸல்) அவர்கள் விளக்கிக் கூறியுள்ளார்கள். மக்களின் பார்வையில் மிகச் சாதாரணமானவர்களாகவும் அல்லாஹ்வுக்குப் பணிந்து நடப்பவர்களாகவும் இருப்பார்கள்என்ற நபிகளாரின் கூற்று மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது. இச்செய்தியைக் கேள்விப்படுவோர் தம்மைச் சொர்க்கவாசிகளுள் ஒருவராக ஆக்கிக்கொள்ள ஆசைப்படுவார்கள். அத்தகையோர் சொர்க்கவாசிகளுக்கான பண்புகளைத் தம்முள் வளர்த்துக்கொள்ள முயல வேண்டும்.

இதில் மற்றொரு  செய்தியும் உள்ளது. அல்லாஹ்வை ஐவேளை முறையாகத் தொழுதும் அவனுடைய கட்டளைகளைப் பேணி நடந்தும் தம்மை யாரும் மதிப்பதில்லையே என்று எண்ணுவாரும் உள்ளார்கள்.  அவர்கள் இந்நபிமொழியை நினைவில் கொள்ள வேண்டும். சொர்க்கம் செல்ல வேண்டுமானால் உலக மக்களின் புகழையோ பாராட்டையோ எதிர்பார்க்கக்கூடாது. அவர்களின் மரியாதையை அறவே எதிர்பார்க்கக்கூடாது. மிகச் சாதாரணமாக, எளிமையாக இருந்துகொள்ள வேண்டும். அத்தகைய நம் நிலையைக் கண்டு பிற மக்கள் நம்மை மதிக்காவிட்டாலும் அல்லாஹ் நம்மை மதிக்கின்றான் அல்லவா? அது போதாதா?

உங்களின் நோயையும் (அதற்கான) மருந்தையும் உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா?” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கேட்டுவிட்டு, “அறிந்துகொள்க! திண்ணமாக உங்களுடைய நோய் என்பது உங்களின் பாவங்கள் ஆகும். உங்களுக்கான மருந்து (அதற்காகப்) பாவமன்னிப்புத் தேடுதல் ஆகும்என்று கூறினார்கள்.  (நூல்: ஷுஅபுல் ஈமான்: 6746)

நாம் செய்யும் பாவங்கள் நம் உள்ளத்தில் ஏற்படுகின்ற ஒரு வகையான நோயின் வெளிப்பாடுதான் என்பதை நபி (ஸல்) அவர்கள் இதன்மூலம் தெரிவிக்கின்றார்கள். இந்த வகை நோய்க்கான மருந்து ஏகன் அல்லாஹ்விடம் மனமுருகிப் பாவமன்னிப்புத் தேடுவதே ஆகும். பாவங்கள் நோயானால் பாவமன்னிப்புத் தேடுதலே அதற்கான மருந்தாகும். பாவங்கள் செய்துவிட்டுச் சிலர் அதற்கான பரிகாரம் என்னவென்று தெரியாமல் இருக்கின்றார்கள். சிலர் பாவமன்னிப்புத் தேடாமல் தொடர்ந்து பாவங்களைச் செய்துகொண்டே இருக்கின்றார்கள். அவர்களுக்கெல்லாம் ஒரு தீர்வாக இந்நபிமொழி அமைந்துள்ளது. அறியாமல் பாவம் செய்துவிட்டோர் அதற்காகக் கவலைப்பட்டு, உயர்ந்தோன் அல்லாஹ்விடம் இரு கைகளுயர்த்தி அழுது புலம்பி பாவமன்னிப்புப் கோரினால் நிச்சயமாக அல்லாஹ் அவர்தம் பாவங்களை மன்னித்துவிடுவான் என்பதில் ஐயம் இல்லை.

ஆக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களின் மனங்களில் பதிவுசெய்யும் விதத்தில் உளவியல் உத்திகளைக் கையாண்டு பல செய்திகளைச் சொல்லியிருக்கின்றார்கள். அவற்றுள் முக்கியமான இச் செய்திகளை நாம் நம் மனத்தில் பதிய வைத்துக்கொண்டு நம்முடைய அன்றாட வாழ்வில் செயல்படுத்த ஏகன் அல்லாஹ் அருள்புரிவானாக. 

=========================================================