சனி, 19 மார்ச், 2011

நூல் முகம்- நபிமார்கள் வரலாறு!நபிமார்கள் வரலாறு!

பேரறிஞர் பெருந்தகை இமாம் இப்னு கஸீர் (ரஹ்) அவர்களுடைய மிகச் சிறந்த வரலாற்று ஆராய்ச்சி நூல் `முதலும் முடிவும் என்ற பொருள் கொண்ட `அல்பிதாயா வந்நிஹாயா எனும் அரபி நூலாகும். இதன் தமிழாக்கம் வெளிவராதா என்று ஏக்கம் கொண்டிருந்த இஸ்லாமியத் தமிழ்கூறு நல்லுலகத்தின் வாட்டத்தைப் போக்கும் வண்ணம் அதன் ஒரு பகுதி இப்போது `நபிமார்கள் வரலாறு-முதல் பாகம் எனும் நூலாக வெளிவந்துள்ளது.

`இமாதுத்தீன் (மார்க்கத்தின் தூண்) என்று போற்றப்பெற்ற இஸ்மாயீல் பின் கஸீர் என்ற இயற்பெயருடைய அல்ஹாஃபிழ் இப்னு கஸீர் (ரஹ்) அவர்கள் இறைமறைக்குச் சிறந்த விரிவுரை எழுதியவர்; ஹதீஸ் கலையில் மாபெரும் வல்லுநர்; ஃபிக்ஹ் கலையில் தலை சிறந்த புலமையாளர்; வாதப் பிரதிவாதங்களோடு அணுகி நுணுகி ஆய்ந்து கருத்துகளை வெளிப்படுத்துவதில் மகா வல்லமையாளர்; அத்தகைய மாபெரும் ஞான அறிவாளரின் நூலிலிருந்து ஆதம் (அலை), இத்ரீஸ் (அலை), நூஹ் (அலை), ஹூத் (அலை), ஸாலிஹ் (அலை), இப்ராஹீம் (அலை) ஆகிய ஆறு இறைத்தூதர்களின் வரலாறு பற்றிய பகுதி இந்நூலில் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது.

தமிழாக்கத்தை மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி மிகச் சிறப்பாகச் செய்துள்ளார். தமிழ், அரபி இரண்டிலும் புலமைமிக்க அப்துல் ஹாதி அவர்களின் தமிழாக்கம் நல்ல நடையில் சுவைமிக்கதாக அமைவதோடு தெள்ளத் தெளிவாகக் கருத்துகளை எடுத்து வைப்பதாகவும் அமைந்துள்ளது பாராட்டுக்குரியது.

மௌலவி டாக்டர் பி.எ. செய்யிது மஸ்வூது ஜமாலி, மௌலவி அ.முஹம்மது கான் பாகவி, மௌலவி ஏ. முஹம்மது இல்யாஸ் பாகவி ஆகியோரின் அணிந்துரைகள் இந்நூலுக்கு உள்ளபடியே அணிசேர்க்கின்றன. மூல நூலாசிரியரின் வாழ்க்கைக் குறிப்பையும் தவறாமல் சேர்த்திருப்பது தமிழாக்க ஆசிரியரின் திறமைக்குச் சான்றாகும்.

அரிய அரபி நூலின் தமிழாக்கத்தில் முதல் பகுதியை இந்நூலின் மூலமாகத் தந்துள்ள ஆயிஷா பதிப்பகத்தின் எம். சாதிக் பாட்சா, ஜே. இக்பால்கான் இருவரையும் , தமிழாக்கம் செய்த மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி அவர்களையும் இஸ்லாமியத் தமிழுலகம் நன்றியோடு என்றென்றும் பாராட்டும். இது ஒவ்வொருவரும் படித்துப் பாதுகாத்துப் பயன்பெற வேண்டிய அருமையான நூல் ஆகும்.

நூல்: நபிமார்கள் வரலாறு அரபியில்: அபுல்ஃபிதா இஸ்மாயீல் பின் கஸீர் அத்திமஷ்கீ (ரஹ்)

தமிழில்: மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி, எம்.ஏ., எம்.ஃபில்.,
 பக்கம்: 454        விலை: ரூ. 175/-
கிடைக்குமிடம்: ஆயிஷா பதிப்பகம், 78, பெரிய தெரு, திருவல்லிக்கேணி, சென்னை-600005 போன்: 044-4356 8745
                                                                                                                  -சே மு மு 
எண்ணம்போல் வாழ்வு!செயல்கள் யாவும் எண்ணங்களுக்கேற்பவே (அமையும்) என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்கள்: புகாரீ, முஸ்லிம்)

ஒருவன்,  தான் எப்படி ஆக வேண்டுமென்று தன் ஆழ்மனதுக் குள் எண்ணுகின்றானோ அப்படியே அவன் ஆகிவிடுகின்றான். ஒருவன் ஒரு குறிப்பிட்ட இலக்கை அடைய வேண்டுமாயின் அதற்கான முயற்சியில் அவன் தொடர்ந்து ஈடுபட வேண்டும். அவ்வாறு அவன் தொடர்ந்து, தான் அடைய வேண்டிய இலக்கை நோக்கி முயன்றுகொண்டே இருந்தால், இறுதியில் தன் இலக்கை அவன் அடைந்தே விடுகின்றான். அது நன்மையாக இருப்பினும் தீமையாக இருப்பினும் மனிதனின் ஆழ்மனத்தினுள் எது பதியவைக்கப்படுகின்றதோ அதுவே செயலாக வெளிப்படுகிறது. அதைத்தான் மனத்திட்பம் என்று கூறுகின்றார்கள்.

ஒரு குறிப்பிட்ட இலட்சியத்தை, குறிக்கோளை அடைய வேண்டுமென்ற எண்ணத்தை மனத்தினுள் ஆழமாகப் பதிய வைத்துக்கொண்டு தொடர்ந்து ஒருவன் செயல்பட்டால் அதுவே அவ்விலக்கை அடைவதற்கான வழியாகும்.

இதற்கு மாறாக, ஒருவனுக்கு ஏதோ ஒன்றை அடைய வேண்டுமென்ற எண்ணம் இருக்கிறது.  ஆனால் அது என்ன என்பதைப் பற்றிய தெளிவு இல்லை. அல்லது அந்த இலக்கை அவன் தன் மனத்தினுள் ஆழமாகப் பதியவைக்கவில்லை. அல்லது மனத்தினுள் ஆழமாகப் பதியவைத்தான். ஆனால் அதை அடைவதற்கான முயற்சியோ செயல்பாடோ இல்லை. மேற்கண்ட எந்த விதத்திலும் ஒருவன் தன் இலக்கை அடைய முடியாது.

ஆக, நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடைய பொய்யாமொழியி லிருந்து நாம் விளங்கவேண்டியது யாதெனில், ஓர் இலக்கை மனத்தினுள் பதிய வைத்துக்கொண்டு அதை அடைவதற்கான முயற்சியில் தொடர்ந்து ஒருவன் ஈடுபட்டால் திண்ணமாக அவனுடைய அவ்வெண்ணம் நிறைவேறும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.

அந்த இலக்கு மிகச் சிறிதாகவும் இருக்கலாம். அல்லது மிகப்பெரிதாகவும் இருக்கலாம். அது அவரவர் எண்ணத்தைப் பொறுத்தது. ஒருவர் மிகப்பெரிய இலக்கைக்கூட மிக எளிதாக அடைந்துவிடலாம். மற்றொருவர் மிகச்சிறிய இலக்கைக்கூட மிகச் சிரமப்பட்டுத்தான் அடைய வேண்டியிருக்கும். உதாரணமாக, பள்ளியில் கல்வி பயில்கின்ற ஒரு மாணவன், இவ்வாண்டு இறுதித் தேர்வில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுவிட வேண்டும் என்று எண்ணுகிறான். அதைத் தன் மனத்தினுள் ஆழமாகப் பதியவைத்துக்கொண்டு அதற்கான முயற்சியில் தொடர்ந்து ஈடுபடுகிறான். அதேபோல் இறுதியில் அவன் அதை எளிதாகப் பெற்றுவிடுகின்றான்.

மற்றொருவன் எப்படியாவது முப்பத்தைந்து மதிப்பெண்கள் பெற்றுத் தேர்ச்சிபெற்றுவிட வேண்டும் என்று எண்ணுகிறான். அதையே தன் மனத்தினுள் பதிய வைத்துக்கொண்டு அதற்கான முயற்சியில் ஈடுபடுகிறான். இறுதியில் அவன் எண்ணியதைப்போலவே முப்பத்தைந்து மதிப்பெண்கள் பெற்றுத் தேர்ச்சிபெற்றுவிடுகிறான்.

இங்கே நாம் கவனிக்க வேண்டியது யாதெனில், ஒருவர் எந்த அளவுக்கு இலட்சியத்தைக் கொண்டிருக்கிறாரோ அதற்கேற்பவே அவருடைய செயல்பாடு அமையும். அதற்கேற்பவே அவர் பெற முடியும். குறுகிய எண்ணம்கொண்டால் குறைவானதையே அடைய முடியும். உயரிய எண்ணம்கொண்டால் உயர்வானதை அடைய முடியும். இதுவே மனோ எண்ணத்தின் வெளிப்பாடு. இதனால்தான் எண்ணம்போல் வாழ்வுஎன்று முதியோர் கூறினர்.

இதுபற்றி வள்ளுவர் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்:
வெள்ளத் தனையது மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனையது உயர்வு.
குளத்தில் உள்ள நீரின் அளவுக்கேற்ப அதிலுள்ள மலர்த்தண்டு நீண்டு காணப்படும். தண்ணீர் குறையக் குறைய மலர்த்தண்டும் உள்ளே சென்றுகொண்டேயிருக்கும். ஆக ஒருவன் எந்த அளவுக்கு உயரிய எண்ணம் கொள்கின்றானோ அந்த அளவுக்கு உயர்வடைகின்றான். அதே நேரத்தில் அதற்கான செயல்பாடு மிகமிக அவசியம்.

இதன் விளக்கமாகவே அல்லாஹ்வின் கூற்றைக் காண்கிறோம். நான் என்னுடைய அடியான் என்னை எவ்வாறு எண்ணுகின்றானோ அவ்வாறே நடந்துகொள்வேன் என்று அல்லாஹ் கூறுவதாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (நூல்: பைஹகீ)

அதாவது, ஓர் அடியான், அல்லாஹ் என்னை இந்த அளவுக்கு உயர்த்துவான் என்று எண்ணினால் அவன் நினைக்கின்ற அளவுக்கு அவனை உயர்த்துவான். மாறாக, அல்லாஹ் என்னை இந்த அளவுக்கு மட்டும் உயர்த்தினால் போதும் என்று எண்ணினால் அவனுடைய உயர்வு ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் முடிந்துவிடும்.

ஒருவன், இந்தத் தொகுதிக்கு நான் சட்டமன்ற உறுப்பினராக வேண்டுமென்று எண்ணுகிறான். அவன்  அதற்கான முயற்சியிலும் ஈடுபட்டு, இறுதியில் அவன் அடைந்துவிடுகிறான். ஒருவன் மத்திய அமைச்சரவையில் இடம் பெற வேண்டும் என்று எண்ணுகிறான். அதற்கான முயற்சியில் ஈடுபட்டு, இறுதியில் அதை அடைந்துவிடுகின்றான். ஆக, இங்கு இருவருமே தம் இலக்கைத் தம் மனத்தினுள்  ஆழமாகப் பதியவைத்துக்கொண்டே செயல்பட்டனர். அதற்காக உழைத்தனர். இறுதியில் அதை அடைந்துவிட்டனர். ஆனால் இருவருள் ஒருவர் உயர்வெண்ணம்கொண்டார். அதையே அடைந்தார். மற்றொருவரோ மிகக் குறைவானதை எண்ணினார். அவர் எண்ணப்படி எதை விரும்பினாரோ அதையே அவர் அடைந்துகொண்டார். எனவே நம் இலட்சியமும் இலக்கும் மிக உயர்வானதாகவும் விசாலமானதாகவும் இருக்க வேண்டும்.

மனத்தினுள் ஆழமான எண்ணம் பதிவாகிவிட்டால் அது திண்ணமாக செயல்வடிவமாகவே வெளிப்படும். இமயமலையில் ஏறநினைப்பவன் அந்த எண்ணத்தைத் தன் மனத்தினுள் மிக ஆழமாகப் பதித்திருக்க வேண்டும். இல்லையேல் அதில் அவன் வெற்றிக்கனியைப் பறிக்கவே முடியாது. அதேபோல் ஒருவன் ஓர் உயரிய இலட்சியத்தை அடைய வேண்டுமாயின் அது அவனுடைய மனத்தினுள் மிக ஆழமாகப் பதிந்திருக்க வேண்டும். அப்போதுதான் அவன் அந்த இலட்சியத்தை எளிதாக அடைய முடியும். எந்த அளவுக்கு ஆழமாகவும் அழுத்தமாகவும் அது அவனுடைய மனதில் பதிந்திருக்கிறதோ அதற்கேற்பவே அவனுடைய செயல்பாடு அமையும்.

இஸ்லாத்தின் கடமைகள் யாவும் எண்ணத்தின் அடிப்படையிலேயே நிறைவேற்றப்படுகின்றன. ஒருவர் ளுஹர் தொழுவதற்கு முன் தம்முடைய மனத்தினுள் அதற்கான எண்ணத்தை ஆழமாகப் பதிவுசெய்துகொண்டிருக்க வேண்டும். அந்த எண்ணமே இல்லாமல் அவர் செயல்பட்டால் அவருடைய தொழுகை நிறைவேறாது. அதுபோல் நோன்பு, ஸகாத், ஹஜ் ஆகிய அனைத்துக் கடமைகளுக்கும் எண்ணம் அவசியமாகும். ஆக இஸ்லாத்தின் கடமைகள் யாவும் எண்ணத்தின் அடிப்படையிலேயே அமைகின்றன.

நான் என் கல்வியின் மூலம் இந்த ஊருக்குச் சேவை செய்தால் போதும் என்று ஒருவர் எண்ணினால் அவருடைய கல்வி அவ்வூர் மக்களுக்கு மட்டுமே பயனளிக்கும். அதையே அவர், என் கல்வி உலக மக்கள் அனைவருக்கும் பயனளிக்க வேண்டும் என்று எண்ணினால், அதற்கான முயற்சியில் அவர் ஈடுபட்டால் திண்ணமாக அவருடைய கல்வியால் உலக மக்கள் யாவரும் பயனடைவர். இதுவே முற்றிலும் உண்மை.

இதற்கான எல்லாவித சாத்தியக்கூறுகளும் இன்றைய நவீன உலகில் உள்ளன. அறிவியல் வளர்ச்சியே இல்லாத காலத்தில் தொகுக்கப்பட்ட புகாரீ நூல் இன்று உலகிலுள்ள முஸ்லிம்கள் அனைவரையும் சென்றடைந்து, அவர்களுக்குப் பயனளிக்கிறது என்றால், இது முஹம்மது பின் இஸ்மாயீல் (ரஹ்) அவர்களின் உயர்வான எண்ணம் அல்லாமல் வேறென்ன?

அறிவியல் விண்ணைத் தாண்டி வளர்ச்சி பெற்றுள்ள இக்காலத்தில் ஒருவர் கற்றுள்ள நற்கல்வி உலக மக்கள் யாவரையும் சென்றடைய முடியும். அதற்குத் தேவை பரந்த எண்ணமும் அதற்கான செயல்பாடுமே ஆகும்.

மனிதனுடைய இந்த எண்ணமே நன்மைக்கும் தீமைக்கும் மிகப்பெரும் காரணமாகும். ஒருவன் தன் உள்ளத்தில் நல்லெண்ணம் கொண்டால் அவனுடைய செயல்கள் நல்லவையாகவும் தீயெண்ணம் கொண்டால் அவனுடைய செயல்கள் தீயவையாகவும் வெளிப்படும்.

அல்லாஹ் கூறுவதைப் பாருங்கள்! ஒவ்வொருவரும் தம் எண்ணப்படியே செயல்படுகிறார்கள். (17: 84) எனவே நாம் பரந்த, உயரிய, விசாலமான நல்லெண்ணம் கொள்வோம். நம் வாழ்வை உயர்வானதாகவும் பயனுள்ளதாகவும் ஆக்கிக்கொள்வோம். உயர்ந்தோன் அல்லாஹ் அதற்கு உதவிபுரிவானாக!    
 
  


வியாழன், 17 மார்ச், 2011

எது அறிவு?


வியாழன், 10 மார்ச், 2011

ஒன்றிணைக்கும் முயற்சி

பிரிந்து கிடக்கின்ற முஸ்லிம் லீக் கட்சியை ஒன்றிணைக்கும் கவலை சமுதாய அக்கறையுள்ள ஆலிம்களுக்கே இருக்க முடியும். எனவே தமிழ்நாடு உலமா சபையிலுள்ள ஆலிம்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஒரு தீர்மானம் நிறைவேற்றி, `முஸ்லிம் லீக்கை' ஒன்றிணைக்கும் நாளை எப்போது வைத்துக்கொள்ளலாம் என்று முடிவெடுப்போம்.

தமிழ்நாட்டிலுள்ள ஆலிம்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஓரணியில் நின்று நம்மைப் பின்பற்றித் தொழும் முஸ்லிம்களை ஒன்றிணைப்போம். முதலில் முஸ்லிக் லீக் கட்சியை ஒரே கொடியின் கீழ் கொண்டுவந்து, பின்னர் முஸ்லிம் கட்சிகள் அனைத்தையும் ஒரு குடையின்கீழ் கொண்டுவரப் பாடுபடுவோம்.

சட்டப்பேரவைத் தேர்தல் நாளுக்கு இன்னும் ஒரு மாதம் இருக்கிறது. அதற்குள் நாம் நினைத்தால் என்னென்னவோ செய்ய முடியும். சமுதாய அக்கறையுள்ள உள்ளங்கள் வெகுண்டெழுந்தால் ஒரு மாற்றத்தை உருவாக்க முடியும். இன்ஷா அல்லாஹ் மாற்றம் விரைவில் ஏற்படலாம். விரைந்து வாருங்கள்! முடிவு செய்வோம்!

புதன், 9 மார்ச், 2011

கண்ணீர்க் கடிதம்


இன்று இஸ்லாமியச் சமுதாயத்தின் நலனுக்காகப் பாடுபட பல்வேறு முஸ்லிம் கட்சிகள் இருந்தாலும் இஸ்லாமிய மக்களுக்காகப் பாடுபட வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் முதன் முதலில் தொடங்கப்பட்ட கட்சி முஸ்லிம் லீக் என்று அனைவருக்கும் தெரியும். 1948-ஆம் வருடம் மார்ச் மாதம் 10ஆம் தேதி சென்னை இராஜாஜி மண்டபத்தில் கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் முஹம்மது இஸ் மாயீல் அவர்களால் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தொடங்கப்பட்டது.

கண்ணியத்துக்குரிய காயிதே மில்லத் அவர்கள் இருந்த வரை முஸ்லிம் லீக் கட்சிக்கு பெருமதிப்பும் மரியாதையும் இருந்தன. அவர்களின் மறைவுக்குப் பிறகு அப்துஸ் ஸமது, அப்துல் லத்தீப், பனாத்வாலா உள்ளிட்டோர் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கை வழிநடத்திச் சென்றனர். ஆனால் தற்போது முஸ்லிம் லீக் கட்சி சிதறுண்டு கிடக்கிறது.

இக்கட்சி என்னுடைய தாத்தா காயிதே மில்லத் அவர்களால் தொடங்கப்பட்டது. எனவே அவர்களுக்குப் பிறகு இக்கட்சியின் தலைமைப் பொறுப்பு எனக்கே உரியது என்று கூறி தாவூத் மியாகான் தொடுத்துள்ள வழக்கு உச்சநீதி மன்றத்தில் உள்ளது. இதனால் முஸ்லிம் லீக் கட்சி தற்போது `இல்லாத கட்சியாகவே அரசியல் தலைவர்களால் கருதப்படுகிறது.

இதனால்தான், இன்று திமுகவுடன் கூட்டணி சேர்ந்துள்ள பல கட்சிகள் தமக்கென நிறையத் தொகுதிகளைக் கேட்டுப் பெறுகின்றன. ஈராண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட கொ.மு.க. கூட 7 தொகுதிகளைப் பெற்றுள்ளது. ஆனால் முஸ்லிம் லீக் கட்சிக்கு இரண்டே இரண்டு தொகுதிகளே ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த இழிநிலைக்குக் காரணம் என்ன? இதற்கு யார் பொறுப்பேற்றுக்கொள்வார்?

சமுதாயத்திற்காகப் பாடுபட வேண்டும் என்ற எண்ணம் அற்றுப் போனதால்தான் நம்மிடையே பதவிச் சண்டைகள் மேலோங்குகின்றன; பிரிவினைகள் தோன்றுகின்றன; இறுதியில் நீதி மன்றப் படிக்கட்டுகளை மிதிக்க வேண்டிய நிலை ஏற்படுகின்றது. ஒற்றுமை எனும் கயிற்றைப் பற்றிப் பிடிக்காததால் நம்மைக் கூறுபோடும் சக்திகளுக்கு நாம் இரையாகிக் கொண்டிருக்கிறோம் என்பதை எப்போது உணரப்போகிறோம்?

70 இலட்சத்துக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் வாழ்கின்ற தமிழ்நாட்டில் சட்டப் பேரவைத் தொகுதியில் அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட தொகுதிகள் இரண்டே இரண்டு என்றால் என்ன நியாயம்? இதற்குத் தீர்வு என்னவெனில், நீதிமன்றத்தில் உள்ள வழக்கைத் திரும்பப் பெற்றுக்கொண்டு ஒரே அணியாக முஸ்லிம் லீக் உருவாக வேண்டும். அல்லாஹ்வுக்காக மனக்கசப்புகளை மறந்து ஓரணியில் ஒன்றிணைய வேண்டும். முஸ்லிம் லீக் தனக்கென ஒதுக்கப்பட்டுள்ள பிறைச் சின்னத்தில் போட்டியிட வேண்டும். அப்போதுதான் முஸ்லிம்களின் பிரதிநிதிகள் சட்டப்பேரவையில் மிகுதியாக முடியும். நம் சமுதாயத்தின் முன்னேற்றத்திற்காகக் குரல்கொடுக்க முடியும்.

இரண்டு நபர்களுடைய மனக்கசப்பின் காரணமாக இஸ்லாமியச் சமுதாயம் இதுவரை இழந்தது போதும். இனியாகிலும் ஒரு முடிவு ஏற்பட முடிந்தவரை முயல்வோம். அல்லாஹ் அதற்கான வழியை ஏற்படுத்துவான். இன்ஷா அல்லாஹ்.

வியாழன், 3 மார்ச், 2011

இப்ராஹீம் நபியின் வரலாறு (தொடர் 18)

மற்றொரு சான்று

நிச்சயமாக அறுக்கப்பட்டவர் இஸ்மாயீல் நபிதான் என்று முஹம்மத் பின் கஅப் அல்குரழீ உள்ளிட்டவர்கள் கூறுகின்றனர். மேலும், நிச்சயமாக இஸ்ஹாக்கை அறுக்க ஏவ முடியாது. ஏனெனில், அல்லாஹ் அவருடைய பிறப்பைப் பற்றியும் அவருக்குப்பின் பிறக்கவுள்ள மகன் யஅகூபைப் பற்றியும் நற்செய்தி கூறிவிட்டான்.

வந்திருந்த வானவர்களுக்கு இப்ராஹீம் நபியவர்கள் இளம் கன்றைப் பொரித்துக் கொண்டுவந்து வைத்தார். அத்துடன் மக்கா நகர் ரொட்டி, நெய், பால் போன்றவையும் இருந்தன. அவர்கள் அவற்றை உண்டார்கள் என்று வேதக்காரர்கள் கூறுகின்றனர். இது முற்றிலும் தவறானதாகும். வானவர்கள் சாப்பிடுவதாகவும் ஆனால், அந்த உணவு காற்றில் கரைந்துவிடுவதாகவும் அவர்கள் கருதிக்கொண்டிருந்தனர் என்று கூறப்பட்டுள்ளது.

அல்லாஹ் இப்ராஹீம் நபியிடம் சொன்னான்: சாரா உம்முடைய மனைவி ஆவார். அவருடைய பெயர் சாரா இல்லை. மாறாக, அவருடைய பெயர் `சார்ரா ஆகும். அவர் மீது நான் அருள்புரிகிறேன். அவர் மூலம் ஒரு மகனை நான் உமக்குக் கொடுக்கிறேன். அந்த மகனுக்கும் நான் அருள்புரிகிறேன். அவர் மூலம் பற்பல வமிசத்தினர் தோன்றுவர். அந்த வமிசங்களிலிருந்து அரசர்கள் தோன்றுவார்கள். இத்தகவலை வேதக்காரர்கள் கூறியுள்ளனர். இதைக் கேட்ட இப்ராஹீம் (அலை) அவர்கள் அல்லாஹ்வுக்கு நன்றிசெலுத்தும்விதமாக சிரம் பணிந்தார். அவர் தம் மனதுக்குள், நூறு வயதுக்குப் பிறகா எனக்குக் குழந்தை பிறக்கப்போகிறது? மேலும், தொண்ணூறு வயதிலா சார்ரா ஒரு குழந்தையைப் பெற்றெடுக்கப்போகின்றார்? என்று கூறிக்கொண்டார்.

இஸ்மாயீல் உன் முன்னிலையில் வாழ வேண்டுமென நான் விரும்புகிறேன் என்று இப்ராஹீம் (அலை) அல்லாஹ்விடம் கூறினார். அப்போது அல்லாஹ், நிச்சயமாக உம் மனைவி சார்ரா ஒரு குழந்தையைப் பெற்றெடுக்கப்போகிறார். எதிர்வரும் ஆண்டின் இந்நேரத்தில் அவர் ஒரு குழந்தையைப் பெற்றெடுத்து அதனை இஸ்ஹாக் என்று அழைத்துக்கொண்டிருப்பார். என்னுடைய வாக்குறுதியை காலம் முழுவதும் அவருக்கும் அவரது சந்ததியினருக்கும்நான் நிறைவேற்றுவேன். நான் இஸ்மாயீல் விசயத்தில் உமது பிரார்த்தனையை ஏற்றுக்கொண்டேன்; அவர் மீது நான் அருள்புரிந்தேன்; அவரைப் பெரியவராக ஆக்கினேன்; அவரை நான் நன்றாக வளர்த்தேன்; அவருக்குப் பன்னிரண்டு குழந்தைகள் பிறப்பார்கள். மிகப்பெரும் சமுதாயத்திற்கு அவரை நான் தலைவராக ஆக்குவேன் என்று கூறினான்.*

அவருக்கு நாம் இஸ்ஹாக்கைப் பற்றியும் இஸ்ஹாக்குக்குப்பின் (பேரர்) யஅகூபைப் பற்றியும் நற்செய்தி கூறினோம். (11: 71) நிச்சயமாக சார்ரா அம்மையார், தமக்கு இஸ்ஹாக் எனும் பெயருடைய மகன் பிறப்பதன் மூலம் மகிழ்வார்; பேருவகை கொள்வார் என்பதற்கு இந்த வசனமே தக்க ஆதாரமாகும். இஸ்ஹாக்குக்குப் பின்னர், அவருடைய மகன் யஅகூப் (இப்ராஹீமின் பேரர்) பிறப்பார். அதாவது இப்ராஹீம்-சார்ரா இருவருடைய வாழ்நாளிலேயே யஅகூபும் பிறப்பார். சார்ரா அம்மையாரும் இப்ராஹீம் (அலை) அவர்களும் இஸ்ஹாக் பிறந்ததின் மூலம் அடைந்த மகிழ்ச்சியைப்போல் தம்முடைய பேரர் மூலமும் மகிழ்ச்சியடைவர்.
இவையெல்லாம் நடக்காது என்றிருந்தால், இந்த வசனத்தில் அல்லாஹ் யஅகூபையும், இஸ்ஹாக்குடைய மற்ற சந்ததிகளையும் விட்டுவிட்டு, யஅகூப் எனும் சந்ததியை மட்டும் குறிப்பிட்டுக் கூறியிருப்பதில் எந்தப் பயனும் இல்லை. மேலும், யஅகூப் என்று குறிப்பிட்டுக் கூறப்பட்டிருப்பதால், அவ்விருவரும் அக்குழந்தை மூலம் மகிழ்ச்சியடைவார்கள் என்றே இவ்வசனம் தெரிவிக்கிறது.

அதாவது இதற்கு முன்பு யஅகூப் உடைய தந்தை இஸ்ஹாக் பிறந்தபோது, இப்ராஹீம்-சார்ரா இருவரும் மகிழ்ந்தார்கள். அதைப்போலவே, யஅகூப் மூலம் சார்ரா-இஸ்ஹாக் மகிழ்ச்சியடைவார்கள். அல்லாஹ் கூறுகின்றான்: `(இப்ராஹீமாகிய) அவருக்கு இஸ்ஹாக்கையும் யஅகூபையும் பரிசளித்தோம். (அவர்கள்) அனைவருக்கும் நல்வழி காட்டினோம். (7: 84) மேலும் அல்லாஹ் கூறுகின்றான்: (இவ்வாறு) அவர் அவர்களையும், அவர்கள் வழிபட்டுக்கொண்டிருந்த அல்லாஹ் அல்லாதவற் றையும் விலக்கிக் கொண்டபோது, இஸ்ஹாக்கையும் யஅகூபையும் அவருக்கு நாம் பரிசளித்தோம். (19: 49)

மஸ்ஜிதுல் அக்ஸாவைக் கட்டுதல்

இறைத்தூதரே! எந்த மஸ்ஜித் முதன் முதலில் கட்டப்பட்டது? என்று நான் கேட்டேன். அல்மஸ்ஜிதுல் ஹராம்-மக்காவிலுள்ள இறையாலயம் ஆகும் என்று பதிலளித்தார்கள். பிறகு எது? என்று நான் கேட்டேன். அல்மஸ்ஜிதுல் அக்ஸா என்று பதிலளித்தார்கள். அவ்விரண்டுக்கும் இடையே உள்ள காலம் எவ்வளவு? என்று நான் வினவினேன். நாற்பது ஆண்டுகள் என்று பதிலளித்தார்கள். பிறகு எது? என்று நான் கேட்டேன். நீர் எங்கு தொழுகையை அடைந்துகொள்கின்றீரோ அங்கு தொழுது கொள்வீர்! ஏனெனில், அவை அனைத்தும் (சம மதிப்புள்ள) மஸ்ஜிதுகள் ஆகும் என்று பதிலளித்தார்கள் என அபூதர் (ரளி) அவர்கள் அறிவித்துள்ளார்கள். (நூல்கள்: புகாரீ, முஸ்லிம்)
நிச்சயமாக யஅகூப் நபிதான் அல்மஸ்ஜிதுல் அக்ஸாவுக்கு அடித்தளமிட்டார். அதுதான் ஈலியா மஸ்ஜித் என்றும் பைத்துல் மக்திஸ் மஸ்ஜித் என்றும் அழைக்கப்படுகிறது என்று வேதக்காரர்கள் கூறுகின்றனர்.

இது ஏற்கத்தக்கதுதான். இதற்கு, மேலே நாம் எடுத்துக்கூறிய நபிமொழியே ஆதாரமாகும். இதன்படி, இப்ராஹீம்-இஸ்மாயீல் (அலைஹிமஸ்ஸலாம்) இருவரும் இணைந்து மக்காவில் அமைந்துள்ள இறையாலயத்தைக் கட்டி முடித்த நாற்பது ஆண்டுகளுக்குப் பின்னர்தான், யஅகூப் (அலை) மஸ்ஜிதுல் அக்ஸாவைக் கட்டினார். இப்ராஹீம்-இஸ்மாயீல் (அலைஹிமஸ்ஸலாம்) இருவரும் இணைந்து கட்டிய இறையாலயம், நபி இஸ்ஹாக் (அலை) அவர்கள் பிறந்த பின்பே ஆகும். ஏனெனில், இறையாலயத்தைக் கட்டி முடித்த பின்னர், இப்ராஹீம் (அலை) அவர்கள் தமக்குப் பிள்ளைகள் வேண்டும் என்று அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யவில்லை. அவர்கள் செய்த பிரார்த்தனையை அல்லாஹ்வே கூறுகின்றான்.

என் இறைவா! இவ்வூரைப் பாதுகாப்பு அளிக்கக்கூடியதாக ஆக்குவாயாக! என்னையும் என் பிள்ளைகளையும் சிலைகளை வழிபடுவதிலிருந்து விலக்கிவைப்பாயாக என்று இப்ராஹீம் வேண்டியதை எண்ணிப்பாருங்கள். என் இறைவா! நிச்சயமாக அவை மனிதர்களுள் பெரும்பாலோரை வழிதவறச் செய்துவிட்டன. எனவே, என்னைப் பின்பற்றியவர் என்னைச் சேர்ந்தவர் ஆவார். எனக்கு யாரேனும் மாறுசெய்தால், நிச்சயமாக நீ மிகவும் மன்னிப்பவனும் மிகுந்த கருணையாளனும் ஆவாய் (என்றும் இப்ராஹீம் கூறினார்).

எங்கள் இறைவா! நான் என்னுடைய வழித்தோன்றல்களுள் சிலரைப் பயிரற்ற பள்ளத்தாக்கு ஒன்றில், உனது புனித ஆலயத்திற்கு அருகே குடியமர்த்தியுள்ளேன். எங்கள் இறைவா! இவர்கள் தொழுகையைக் கடைப்பிடிப்பதற்காகவே (இவ்வாறு செய்தேன்). எனவே, மக்களுள் சிலருடைய இதயங்களை இவர்களின்பால் கவரச்செய்வாயாக! இவர்களுக்குக் கனிகளை உணவாக வழங்குவாயாக! (இதன் மூலம் ) இவர்கள் நன்றி செலுத்துவோர் ஆகலாம் (என்றும் இப்ராஹீம் பிரார்த்தனை செய்தார்).
எங்கள் இறைவா! நாங்கள் மறைப்பதையும் நாங்கள் வெளிப்படுத்துவதையும் நிச்சயமாக நீ அறிகின்றாய்; பூமியிலும் வானத்திலும் அல்லாஹ்வுக்கு எதுவும் மறைந்ததன்று (என்றும் இப்ராஹீம் கூறினார்).

எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே உரியன; அவனே எனக்கு முதுமையிலும் இஸ்மாயீலையும் இஸ்ஹாக்கையும் (குழந்தைகளாக) வழங்கினான்; நிச்சயமாக என் இறைவன் பிரார்த்தனையைச் செவியேற்பவன் ஆவான் (என்றும் இப்ராஹீம் கூறினார்).
என் இறைவா! என்னையும் என் வழித்தோன்றல்களையும் தொழுகையைக் கடைப்பிடிப்பவர்களாக ஆக்குவாயாக! எங்கள் இறைவா! என் பிரார்த்தனையை ஏற்பாயாக! (என்றும் இப்ராஹீம் கூறினார்). எங்கள் இறைவா! விசாரணை நடைபெறும் நாளில் எனக்கும் என் பெற்றோருக்கும் இறைநம்பிக்கை கொண்டோருக்கும் மன்னிப்பு வழங்குவாயாக! (என்றும் இப்ராஹீம் கூறினார்). (14: 35-41)

சுலைமான் பின் தாவூத் (அலை) அவர்கள் பைத்துல் மக்திஸைக் கட்டி முடித்தபோது, அவர் தம் இறைவனிடம் மூன்று விசயங்களைக் கேட்டார். அவர் செய்த பிரார்த்தனையை அல்லாஹ் கூறுகின்றான்: என் இறைவா! என்னை மன்னிப்பாயாக! மேலும்,பின்னர் எவருமே அடையமுடியாத ஓர் அரசாங்கத்தை எனக்கு நீ நன்கொடையளிப்பாயாக (38: 35) அதாவது 1. மன்னித்தல், 2. ஆட்சியை வழங்குதல், 3. அதுபோன்ற ஆட்சியைப் பிறருக்கு வழங்காதிருத்தல் ஆகிய மூன்றாகும். இது பற்றிய விளக்கத்தை சுலைமான் (அலை) அவர்களின் வரலாற்றில் நாம் தெளிவாகக் கூறுவோம். அவர் கேட்டதன் நோக்கம் என்ன என்பதை அல்லாஹ்வே நன்கறிந்தவன்.

மேற்கண்ட நபிமொழியிலிருந்து, பைத்துல் முகத்தசை சுலைமான் (அலை) கட்டினார் என்பதன் நோக்கம், அவர் அதனைப் புதுப்பித்துக் கட்டினார் என்பதாகும். கஅபாவிற்கும் பைத்துல் முகத்தசுக்கும் இடையே உள்ள கால அளவு நாற்பது ஆண்டுகளாகும் எனும் நபிமொழியிலிருந்து இதனை நாம் விளங்க முடியும். சுலைமான் நபிக்கும் இப்ராஹீம் நபிக்கும் இடையே நாற்பது ஆண்டுகளே இடைவெளி இருந்தன என்று இப்னு ஹிப்பான் (ரஹ்) தவிர யாரும் சொல்லவில்லை. அவருடைய இக்கூற்று நபிமொழிக்கு எதிராக உள்ளது. இக்கருத்தை வேறு யாரும் கூறவில்லை. உயர்ந்தோன் அல்லாஹ்வே நன்கறிந்தவன்.

----------------அடிக்குறிப்பு------------------------

* இது பற்றி விரிவாக நாம் ஏற்கெனவே கூறிவிட்டோம். அல்லாஹ்வே நன்கறிபவன்.

அரபி:           அல்பிதாயா வந்நிஹாயா (இமாம் இப்னு கஸீர்- ரஹ்) 
தமிழாக்கம்: நூ. அப்துல் ஹாதி பாகவி M.A., M.Phil.