திங்கள், 30 மே, 2011

கற்பைக் காக்கும் பர்தா!

முஸ்லிம் பெண்கள் தம் கற்பைக் காக்கும் விதமாகவும், ஆடவர்க்கு மனக்கிளர்ச்சியைத் தூண்டாதிருக்கவும், தம் அழகைப் பிறருக்குக் காட்டாமல் மறைப்பதற்காகவும் `கருப்பங்கி எனும் பர்தா அணிகின்றார்கள். இந்தப் பர்தா முறையைச் செவ்வனே பின்பற்றுவோர் கணிசமாக இருந்தபோதிலும், இதைப் பற்றி முற்றிலும் அறியாதோர் பலர் நம் சமுதாயத்தில் இன்றும் இருக்கத்தான் செய்கின்றார்கள்.

இது பெண்களின் சுதந்திரத்தைப் பறிக்கிறது; பெண்களைக் கூண்டுக்குள் அடைக்கிறது என்பன போன்ற விமர்சனங்கள் மாற்றுச் சிந்தனையாளர்களிடமிருந்து வந்துகொண்டிருக்கின்ற அதே வேளையில், இஸ்லாமியச் சமுதாயத்தில் இருந்துகொண்டே இத்தகைய விமர்சனங்களை உதிர்க்கின்றவர்களும் இருக்கவே செய்கின்றனர். இது அவர்களின் அறியாமையைத்தான் காட்டுகிறது.

இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்காத அன்றைய அரபியர்கள், முஸ்லிம் பெண்கள் நடந்துசெல்லும் வேளையில் பாதைகளில் அமர்ந்துகொண்டு அவர்களைக் கேலியும் கிண்டலும் செய்துகொண்டிருந்தனர். அத்தகைய காலக்கட்டத்தில்தான் அல்லாஹ் இஸ்லாமியப் பெண்களுக்கு ஒரு விதியை வகுத்தான். அவர்கள் தம் ஆடைகளை முழுமையாகப் பேணிக்கொள்ள வேண்டும் எனக் கட்டளையிட்டான்.

 அண்மையில் ஃபிரான்ஸ் அதிபர் சர்கோஸி, பொது இடங்களில் பெண்கள் தம் முகத்தை மறைத்து வரத் தடைவிதித்தார். இது முஸ்லிம் பெண்களைப் பாதிக்கிறது என்று அங்குள்ள இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட முஸ்லிம் பெண்கள் தம் எதிர்ப்பைத் தெரிவித்தனர். அதே நேரத்தில் அங்கு அவர்களைத் தவிர பல இலட்ச முஸ்லிம்கள் வாழ்கிறார்கள் என்பது அனைவரும் அறிந்த உண்மையாகும். அவர்கள் அதற்கு எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை.

இவ்விடத்தில் பர்தா பற்றிய நடுநிலையான கருத்தை நம்முள் பலர் விளங்காதிருக்கின்றார்கள் என்ற உண்மையைப் புரிந்துகொள்ள வேண்டும். பர்தா எப்படி அணிய வேண்டும் எனும் வரைமுறையில், அறிஞர்கள் மத்தியில் கருத்து வேறுபாடு நிலவுகிறது.

அது பற்றி அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறியுள்ள வசனத்தைப் பாருங்கள்! மேலும், நம்பிக்கையாளர்களான பெண்களுக்கு நீர் கூறுவீராக! அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக்கொள்ள வேண்டும்; தங்கள் வெட்கத்தலங்களைப் பேணிக்காத்துக்கொள்ள வேண்டும்; தங்கள் அலங்காரத்தை-அதிலிருந்து (சாதாரணமாக வெளியில்) தெரியக்கூடியதைத் தவிர (வேறு எதையும்) வெளிக்காட்டலாகாது. இன்னும் அவர்கள் தம் முன்றானைகளால் தம் நெஞ்சங்களை மறைத்துக்கொள்ள வேண்டும்... (24: 31)

 இது ஒரு தொடர் வசனம் ஆகும். ஒரு பெண் தன் வீட்டில் இருக்கின்றபோதும் வெளியில் செல்கின்றபோதும் பேண வேண்டிய ஒழுக்கங்களைப் பற்றி அல்லாஹ் விரிவாகக் கூறுகின்றான். மேலும், அவர்கள் யார் யார் முன்னிலையில் தம் அழகைக் காட்டலாம்; யார் யார் முன்னிலையில் தம் அழகைக் காட்டக்கூடாது என்றெல்லாம் இந்த வசனத்தில் தெளிவாக எடுத்துரைத்துள்ளான்.

இந்த வசனத்தின் அடிப்படையில், ஒரு பெண் வெளியில் செல்கின்றபோது, தன் இரண்டு முன்கைகள், இரண்டு கரண்டைக் கால்கள், முகம் இவை தவிர மற்றெல்லாப் பாகங்களையும் மூடி மறைக்க வேண்டியது கட்டாயமாகும். இந்தப் பாகங்களே சாதாரணமாக வெளியே தெரியக்கூடிய பாகங்கள் என்று அல்லாஹ் கூறுவதாக மார்க்க அறிஞர்கள் பலர் கூறியுள்ளனர்.

 ஆனால் அதேநேரத்தில் ஒரு பெண் தன் முகத்தையும் மறைத்துக்கொண்டு சென்றால், அது அவளுடைய தனிப்பட்ட உரிமையாகும். அதைத் தடுக்க யாருக்கும் உரிமையில்லை. ஆக, கட்டாயம் என்பது வேறு; தனிப்பட்ட உரிமை என்பது வேறு. இரண்டுக்கும் இடையே உள்ள வித்தியாசத்தைப் புரிந்துகொண்டால், அல்லாஹ் கூறுகின்ற நடுநிலையான முறையை விளங்கிக்கொண்டால், பெண்கள் அனைவரும் புர்கா அணிவதில் எந்தச் சிரமமும் இருக்காது. இந்த நடுநிலையைப் புரிந்துகொள்ளாததால்தான் இஸ்லாமியப் பெண்கள் சிலர் புர்கா அணிவதே இல்லை. அது மட்டுமின்றி அதை விமர்சனமும் செய்கிறார்கள்.

                              


நம் சமுதாயத்தில் முகத்தை மூடிக்கொண்டு புர்கா அணிகின்ற பெண்கள் சிலர் இருக்கவே செய்கின்றனர். இதை முன்னுதாரணமாக வைத்துக்கொண்டு, குற்றச் செயல்களில் ஈடுபடுவோர், மாற்று மதச் சகோதரிகள், தீவிரவாதிகள் உள்ளிட்ட பல வகையினர் பிறருக்குத் தம் முகம் தெரியாமல் இருப்பதற்காக முஸ்லிம் பெண்கள் அணிவதைப்போல் புர்கா அணிந்துகொண்டு `எல்லைமீறிய செயல்களில் ஈடுபடுகின்றனர். அவர்களைப் பார்ப்போர், அது முஸ்லிம் பெண்தான் என்று தவறாக எண்ணக்கூடிய துர்பாக்கிய நிலையும் ஏற்படத்தான் செய்கிறது. இந்த முறையில் புர்கா அணிவது ஒரு வகையில் மாற்றாருக்குச் சாதகமாக அமைந்துவிடுகிறது என்பது உண்மையே.

கடமையான புர்காவை அணிவதில் யாரும் தலையிட முடியாது. இது இஸ்லாமிய மார்க்கச் சட்டம். அதைப் பின்பற்றக் கூடாதென யாரும் தடைபோட முடியாது. அப்படி ஆட்சியாளர் யாரேனும் செய்தால், அவருக்கெதிராக நாம் அணிதிரள்வோம் என்பது உறுதி. அதேநேரத்தில், நாட்டின் நலனையும் பாதுகாப்பையும் கருதி, ஷரீஅத் சட்டம் பாதிக்கப்படாத வகையில் ஒரு சட்டம் இயற்றினால் அதைப் பின்பற்றுவதில் தயக்கம் கொள்ளக்கூடாது.

ஆகவே, முஸ்லிம் பெண்கள் திருக்குர்ஆனின் கூற்றுப்படி புர்கா அணிந்து தம்மைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும். அந்நிய சக்திகளின் தவறான செயல்களுக்கு நம் பெண்கள் பலிகடா ஆகிவிடக்கூடாது.
இது பெண்களைக் காக்கின்ற, அவர்களுக்குக் கண்ணியத்தையும் மரியாதையையும் வழங்கச் செய்கின்ற ஓர் உயர்வான ஆடை. ஒரு பெண் புர்காவை அணிந்து வெளியே சென்றால்தான் அவள் ஒரு முஸ்லிம் பெண்ணாக மதிக்கப்படுகிறாள் என்பது திண்ணம். ஆகவே பெண்கள் யாவரும் புர்கா அணிந்து கற்பைக் காத்துக்கொள்வீர்! அல்லாஹ்வின் அன்பைப் பெறுவீர்!




வியாழன், 26 மே, 2011

இப்ராஹீம் நபியின் வரலாறு (தொடர் 22)



அல்லாஹ்வின் மறுப்பு

* வேதக்காரர்களே! இப்ராஹீம் தொடர்பாக நீங்கள் ஏன் தர்க்கம் புரிகிறீர்கள்? தவ்ராத் மற்றும் இஞ்சீல் (வேதங்கள்) அவருக்குப் பிறகே அருளப்பெற்றன. நீங்கள் புரிந்துகொள்ளமாட்டீர்களா? இதோ (பாருங்கள்)! நீங்கள் (இதுவரை) உங்களுக்குத் தெரிந்த விசயங்களில் தர்க்கம் செய்தீர்கள். (இப்போது) ஏன் உங்களுக்குத் தெரியாத விசயங்களில் தர்க்கம் செய்கிறீர்கள்? அல்லாஹ்வே அறிகின்றான். நீங்கள் அறியமாட்டீர்கள்.

இப்ராஹீம் ஒரு யூதராகவோ கிறித்தவராகவோ இருந்ததில்லை. மாறாக, அவர் உண்மை வழியில் நின்றவராகவும் (ஏக இறைவனுக்கு) அடிபணிந்தவராகவுமே இருந்தார். இணைவைப்பாளர்களுள் ஒருவராக அவர் இருந்ததில்லை. மனிதர்களுள் இப்ராஹீமுக்கு மிகவும் நெருக்கமானவர்கள், அவரைப் பின்பற்றியோரும், இந்த (முஹம்மத்) நபியும், (இந்தச் சமுதாயத்தில்) இறைநம்பிக்கை கொண்டோரும்தாம். அல்லாஹ் இறைநம்பிக்கை கொண்டோரின் பாதுகாவலன் ஆவான். (3: 65-68)

யூதர்களும் கிறித்தவர்களும், இப்ராஹீம் (அலை) எங்கள் மார்க்கத்தில்தான் இருந்தார் என்று வாதிடுவதை அல்லாஹ் மறுக்கிறான். மேலும், அவர் அவர்களின் மார்க்கத்தில் இருக்கவில்லை என்று அவரை அவர்களிலிருந்து விடுவித்துவிட்டான். அவர்களின் அதீத அறியாமையையும் குற்றறிவையும் பின்வருகின்ற வசனத்தின் மூலம் தெளிவாக்குகிறான். தவ்ராத் மற்றும் இஞ்சீல் (வேதங்கள்) இப்ராஹீம் நபிக்குப் பிறகே அருளப்பெற்றன. அதாவது அவருடைய மார்க்கம் வகுக்கப்பட்டு, அவர் வாழ்ந்த நீண்ட காலத்துக்குப் பின்னரே உங்களுக்கு உங்கள் மார்க்கம் வகுக்கப்பட்டது. பிறகு எப்படி அவர் உங்கள் மார்க்கத்தில் இருந்திருக்க முடியும்? இதனால்தான், அவர்களைப் பார்த்து, நீங்கள் புரிந்துகொள்ளமாட்டீர்களா? என்று கேட்டுவிட்டு, பின்வருகின்ற வசனத்தையும் கூறுகின்றான்.

இப்ராஹீம் ஒரு யூதராகவோ கிறித்தவராகவோ இருந்ததில்லை. மாறாக, அவர் உண்மை வழியில் நின்றவராகவும் (ஏக இறைவனுக்கு) அடிபணிந்தவராகவுமே இருந்தார். இணைவைப்பாளர்களுள் ஒருவராக அவர் இருந்ததில்லை. (3: 67)

மேற்கண்ட வசனத்தில், அவர் அல்லாஹ்வுடைய நேரிய மார்க்கத்தில் இருந்தார் என்று அல்லாஹ் தெளிவுபடுத்திவிட்டான். `ஹனீஃப் என்பது மனத்தூய்மையை நாடி, தவறான பாதையிலிருந்து விலகி உண்மையான பாதையில் செல்லுதல் ஆகும். அது யூதர்கள், கிறித்தவர்கள் மற்றும் இணைவைப்பாளர்களுக்கு எதிரானதாகும்.

அல்லாஹ் கூறுகின்றான்: தன்னை அறியாதவனைத் தவிர வேறு யார் இப்ராஹீமின் சன்மார்க்கத்தைப் புறக்கணிக்கப்போகிறார்? நாம் அவரை இவ்வுலகில் (இறைத்தூதராகத்) தேர்ந்தெடுத்தோம். மறுமையிலும் அவர் நல்லடியார்களுள் ஒருவராகத் திகழ்வார். அவருடைய இறைவன் அவரிடம், நீர் (எமக்குக்) கட்டுப்பட்டு நடந்துகொள்வீராக! என்று கூறினான். அதற்கு அவர், அகிலங்களின் அதிபதி(யாகிய அல்லாஹ்வு)க்குக் கட்டுப்பட்டேன் என்று கூறினார்.

இப்ராஹீமும் யஅகூபும் தம் பிள்ளைகளுக்கு இதையே அறிவுறுத்தினர். என் மக்களே! அல்லாஹ் உங்களுக்கு இ(ஸ்லா)ம் மார்க்கத்தையே தேர்ந்தெடுத்துள்ளான். ஆகவே, (அல்லாஹ்வுக்கு அடிபணிகின்ற) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் மரணித்துவிடக் கூடாது (என்று கூறினர்). யஅகூபுக்கு இறப்பு நெருங்கியபோது நீங்கள் (அவர் அருகில்) இருந்தீர்களா? அவர்தம் மக்களிடம், எனக்குப் பின்னர் எதை வழிபடுவீர்கள்? என்று வினவினார். அதற்கு அவர்கள், உங்கள் இறைவனும் உங்கள் தந்தையர் இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக் ஆகியோரின் இறைவனுமாகிய (அந்த) ஓரிறைவனையே வழிபடுவோம். நாங்கள் அவனுக்கு (முற்றிலும்) அடிபணிந்தவர்கள் ஆவோம் என்று கூறினார்கள்.

அவர்கள் (வாழ்ந்து) மறைந்த சமுதாயத்தார்; அவர்கள் தேடிக்கொண்டது அவர்களுக்கு; நீங்கள் தேடிக்கொண்டது உங்களுக்கு; அவர்கள் செய்துகொண்டிருந்ததைப் பற்றி நீங்கள் விசாரணை செய்யப்படமாட்டீர்கள். அவர்கள், யூதர்களாகவோ கிறித்தவர்களாகவோ ஆகிவிடுங்கள்; நேர்வழி பெறுவீர்கள் என்று கூறுகிறார்கள். அவ்வாறன்று; உண்மை வழியில் நின்ற இப்ராஹீமின் சன்மார்க்கத்தையே (பின்பற்றுவோம்). அவர் இணைவைப்பாளர்களுள் ஒருவராக இருந்ததில்லை என்று (நபியே) கூறுவீராக!

அல்லாஹ்வையும், எங்களுக்கு அருளப்பெற்றதையும், இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஅகூப் மற்றும் (அவருடைய) வழித்தோன்றல்கள் ஆகியோருக்கு அருளப்பெற்றதையும், மேலும் மூசா, ஈசா ஆகியோருக்கு வழங்கப்பெற்றதையும், (இதர) நபிமார்களுக்கு அவர்களுடைய இறைவனிடமிருந்து வழங்கப்பெற்றதையும் நாங்கள் நம்பிக்கைகொண்டோம். அவர்களுள் யாருக்கிடையிலும் பாகுபாடு காட்டமாட்டோம். நாங்கள் அவனுக்கே அடிபணிந்தவர்கள் ஆவோம் என்று கூறுங்கள். நீங்கள் நம்பிக்கைகொண்டதைப் போன்றே அவர்களும் நம்பிக்கைகொண்டால் நேர்வழி பெறுவர்.

புறக்கணிப்பார்களாயின், அவர்கள் மனவேறுபாட்டில்தான் இருக்கிறார்கள். ஆகவே, அவர்கள் விசயத்தில் அல்லாஹ்வே உமக்குப் போதுமானவன். அவன் நன்கு செவியுறுவோனும் நன்கறிந்தோனும் ஆவான். அல்லாஹ் தீட்டும் வண்ணத்தையே (மார்க்கத்தையே நாங்கள் ஏற்போம்). வண்ணம் தீட்டுவதில் (நேர்வழியைக் கூறுவதில்) அல்லாஹ்வைவிட அழகானவன் வேறு யார் இருந்திட முடியும்? நாங்கள் அவனையே வழிபடுபவர்கள் ஆவோம் (என்று கூறுங்கள்).

அல்லாஹ்வைப் பற்றி எங்களிடம் தர்க்கம் புரிகின்றீர்களா? அவனே எங்கள் இறைவனும் உங்கள் இறைவனும் ஆவான். எங்கள் செயல்கள் எங்களுக்கே. உங்கள் செயல்கள் உங்களுக்கே. நாங்கள் அவனுக்காகவே உளப்பூர்வமாகச் செயல்படுபவர்கள் ஆவோம் என்று (நபியே) கூறுவீராக! அல்லது இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஅகூப் மற்றும் (யஅகூபுடைய) வழித்தோன்றல்கள் ஆகியோர் யூதர்களாகவோ கிறித்தவர்களாகவோ இருந்தார்கள் என்று கூறுகிறீர்களா? நன்கறிந்தவர்கள் நீங்களா? அல்லது அல்லாஹ்வா? என்று (நபியே) கேட்பீராக! அல்லாஹ்விடமிருந்து தமக்குக் கிடைத்துள்ள சான்றை மறைப்பவரைவிடப் பெரும் அநியாயக்காரர் வேறு யார்? நீங்கள் செய்கின்றவற்றை அல்லாஹ் கவனிக்காமல் இல்லை.
அவர்கள் மறைந்துவிட்ட சமுதாயத்தார். அவர்கள் தேடிக் கொண்டது அவர்களுக்கு. நீங்கள் தேடிக்கொண்டது உங்களுக்கு. அவர்கள் செய்துகொண்டிருந்ததைப் பற்றி நீங்கள் விசாரணை செய்யப்படமாட்டீர்கள். (2: 130-141)

இப்ராஹீம் நபி யூதராகவோ கிறித்தவராகவோ இருந்தார் என்ற அவர்களின் கூற்றை அல்லாஹ் முறியடித்து அவரைத் தூய்மைப்படுத்தினான். அவர் உண்மை வழியில் நின்றவராகவும் ஏக இறைவனுக்கு அடிபணிந்தவராகவும் இருந்தார். அவர் இணைவைப்பாளர்களுள் ஒருவராக இருக்கவில்லை.
இதனால்தான் அல்லாஹ் கூறுகின்றான்: மனிதர்களுள் இப்ராஹீமுக்கு மிகவும் நெருக்கமானவர்கள், அவரைப் பின்பற்றியோர்...(3: 68) அதாவது அவருடைய காலத்தில் அவருடைய மார்க்கத்தில் இருந்துகொண்டு, அவரைப் பின்பற்றியோரும், அவர்களுக்குப் பிறகு அவருடைய மார்க்கத்தை யார் பற்றிக்கொண்டாரோ அவருமே இப்ராஹீம் நபிக்கு மிக நெருக்கமானவர்கள் ஆவர். `ஹாதன் நபிய்யு என்று அந்த வசனத்தில் கூறப்பட்டுள்ள வார்த்தை, முஹம்மத் (ஸல்) அவர்களைக் குறிக்கிறது.

ஏனென்றால், அல்லாஹ் இப்ராஹீம் (அலை) அவர்களுக்கு ஒரு நேரிய மார்க்கத்தை வகுத்துக்கொடுத்ததைப் போல், முஹம்மத் (ஸல்) அவர்களுக்கும் ஒரு நேரிய மார்க்கத்தை வகுத்துக் கொடுத்தான். மேலும், அவர்களுக்கு அதை முழுமைப்படுத்திக் கொடுத்தான். அவர்களுக்கு முன்பு எந்த நபிக்கும், இறைத்தூதருக்கும் கொடுக்காததை அவர்களுக்குக் கொடுத்தான்.

அல்லாஹ் அதைப் பின்வரும் வசனங்களில் கூறுகின்றான்: (நபியே) நீர் கூறுவீராக! என் இறைவன் எனக்கு நேரிய வழியைக் காட்டியுள்ளான். அதுவே நிலையான மார்க்கமாகும். உண்மை வழியில் நின்ற இப்ராஹீமின் மார்க்கமுமாகும். அவர் இணைவைப்போருள் ஒருவர் அல்லர். (நபியே) நீர் கூறுவீராக! என் தொழுகை, என் (குர்பானி) வழிபாடு, என் வாழ்வு, என் மரணம் (ஆகிய அனைத்தும்) அனைத்துலகங்களையும் படைத்துப் பரிபாலிக்கின்ற அல்லாஹ்வுக்கே உரியவை. அவனுக்கு இணை (துணை) இல்லை. இவ்வாறே எனக்குக் கட்டளையிடப்பட்டுள்ளது. நானே முஸ்லிம்களுள் முதலாமவன் ஆவேன். (6: 161-163)

* நிச்சயமாக இப்ராஹீம் ஒரு தலைவராகவும், அல்லாஹ்வுக்கு அடிபணிந்தவராகவும், சத்திய வழியைச் சார்ந்தவராகவும் இருந்தார். மேலும், அவர் இணைவைப்போருள் ஒருவராக இருந்ததில்லை. (மேலும்) அவனுடைய அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்துபவராக அவர் இருந்தார். அவன் அவரைத் தேர்ந்தெடுத்துக்கொண்டான். இன்னும், அவரை நேரான பாதையில் செலுத்தினான். மேலும், நாம் அவருக்கு இவ்வுலகத்தில் நன்மையானதையே கொடுத்தோம். நிச்சயமாக மறுமையிலும் அவர் நல்லவர்களுள் ஒருவராக இருப்பார். (நபியே) பின்னர், சத்திய வழியைச் சார்ந்தவரான இப்ராஹீமின் மார்க்கத்தை நீர் பின்பற்ற வேண்டும் என்று நாம் உமக்கு வேத அறிவிப்புச் செய்தோம். அவர் இணைவைப்போருள் ஒருவராக இருந்ததில்லை. (16: 120-123)

இறையில்லம் கஅபாவுக்குள் நபி (ஸல்) அவர்கள் உருவப்படங்களைப் பார்த்தபோது, அவை அங்கிருந்து அகற்றப்படுகின்ற வரை அவர்கள் அதனுள் நுழையவே இல்லை. பின்னர் அவற்றை அழிக்க நபிகள் நாயகம் (ஸல்) ஏவினார்கள். அதன்பின், அவர்கள், இப்ராஹீம்-இஸ்மாயீல் இருவரின் கைகளில் குறிசொல்லும் அம்புகளைப் பிடித்த நிலையில் (உருவங்களாகப்) பார்த்தார்கள். அல்லாஹ் தன் கருணையிலிருந்து அவர்களை (குறைஷியர் களை) அப்புறப்படுத்துவானாக! அல்லாஹ்வின் மீதாணையாக! அவர்கள் இருவரும் ஒருபோதும் அம்புகளின் மூலம் குறிபார்த்ததில்லை என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு அப்பாஸ் (ரளி) அவர்கள் அறிவித்துள்ளார்கள். (நூல்: புகாரீ)1


புகாரீ (ரஹ்) அவர்களின் மற்றோர் அறிவிப்பில், அல்லாஹ் தன் கருணையிலிருந்து அவர்களை (குறைஷியர்களை) அப்புறப்படுத்துவானாக! நிச்சயமாக நம்முடைய தலைவர் (இப்ராஹீம்-இஸ்மாயீல்) ஒருபோதும் அம்புகளின் மூலம் குறிபார்த்ததில்லை என்று அந்த குரைஷியர்கள் அறிந்தே இருந்தனர் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக உள்ளது.

மேற்கண்ட வசனங்களில், `உம்மா என்பதன் பொருள், நல்வழி பெற்ற தலைவராகவும் நன்மையின்பால் அழைக்கின்றவராகவும் அவர் இருந்தார். அவ்விசயத்தில் அவர் பிறரால் பின்பற்றப்படுகிறார் என்பதாகும். `கானித்தன் லில்லாஹ் என்பதன் பொருள், அவர் எல்லா நிலைகளிலும், அசைவுகளிலும், அமைதியான நிலைகளிலும் இறைவனைப் பயந்திருந்தார் என்பதாகும். `ஹனீஃபன்- நல்வழியில் செல்கின்ற மனத்தூய்மையாளர். அவர் இணைவைப்போருள் ஒருவராக இருந்ததில்லை. (மேலும்) அவனுடைய அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்துபவராக இருந்தார். (16: 120-121)

அதாவது அவர் தம் உள்ளம், நாவு மற்றும் செயல்பாடுகள் மூலம் தம்முடைய இறைவனுக்கு நன்றிசெலுத்துபவராக இருந்தார் என்பதாகும்.
அவன் அவரைத் தேர்ந்தெடுத்துக்கொண்டான் என்பதன் பொருள், அல்லாஹ் அவரைத் தனக்காகவும் தன்னுடைய தூதுத்துவத்துக்காகவும் தேர்ந்தெடுத்துக்கொண்டான்; அவரை நண்பராக எடுத்துக்கொண்டான்; மேலும் அவன் அவருக்கு ஈருலக நன்மையையும் ஒன்றிணைத்தான் என்பதாகும்.

அல்லாஹ்வுடைய நண்பர்

அல்லாஹ் கூறுகின்றான்: அல்லாஹ்வுக்காகத் தம்மை அடிபணியச் செய்து, நற்செயல்கள் புரிந்து, உண்மை வழியில் நின்று இப்ராஹீமின் மார்க்கத்தைப் பின்பற்றியவரைவிட மார்க்கத்தால் சிறந்தவர் யார்? அல்லாஹ் இப்ராஹீமை (த் தன்) உற்ற நண்பராக ஆக்கிக்கொண்டான். (4: 125)

இப்ராஹீம் (அலை) அவர்களைப் பின்பற்றுவதற்கு அல்லாஹ் ஆர்வப்படுத்துகின்றான். ஏனென்றால், அவர் நேரிய மார்க்கத்திலும் செம்மையான வழியிலும் இருந்தார். மேலும் அல்லாஹ் அவருக்கு ஏவிய அனைத்தையும் நிறைவேற்றினார். அது பற்றி அல்லாஹ் அவரைப் புகழ்ந்து கூறியுள்ளான்: (இறைவனின் கட்டளைகளை) முழுமையாக நிறைவேற்றிய இப்ராஹீம். (53: 37) இதனால்தான் அல்லாஹ் இப்ராஹீம் (அலை) அவர்களைத் தன் உற்ற நண்பராக ஆக்கிக்கொண்டான். நட்பு என்பது அன்பின் இறுதிநிலையாகும்.

கவிஞர் ஒருவர் கூறியுள்ளார்:
நீ என்னுடைய உயிர்ப்பாதையில் நுழைந்துவிட்டாய்;
எனவேதான், உற்ற நண்பன் நண்பன் என்றே அழைக்கப்படுகிறான்.
இவ்வாறுதான் நபிமார்களின் முத்திரையான, இறைத்தூதர்களின் தலைவரான முஹம்மத் (ஸல்) அவர்கள் இந்த உயர்வையும் சிறப்பையும் பெற்றார்கள். புகாரீ, முஸ்லிம் உள்ளிட்ட நபிமொழித் தொகுப்புகளில் இடம்பெற்றுள்ள நபிமொழி ஒன்று அதைத் தெரிவிக்கிறது. அதை இறைத்தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து ஜுன்துப் அல்பஜலீ, அப்துல்லாஹ் பின் அம்ர், இப்னு மஸ்ஊத் (ரளி-அன்ஹும்) அறிவிக்கின்றார்கள்: மக்களே! நிச்சயமாக அல்லாஹ், இப்ராஹீம் நபியை (தன்) உற்ற நண்பராக ஆக்கிக்கொண்டதைப்போல என்னையும் அவன் (தன்) உற்ற நண்பராக ஆக்கிக்கொண்டான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: முஸ்லிம்)

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தமது இறுதிப்பேருரை ஆற்றியபோது கூறினார்கள்: மக்களே! புவிவாழ் மக்களிலிருந்து நான் ஓர் உற்ற நண்பரை ஆக்கிக்கொண்டிருந்தால் அபூபக்ரை நான் (என்னுடைய) உற்ற நண்பராக ஆக்கிக்கொண்டிருப்பேன். எனினும், உங்கள் தோழர் (முஹம்மது) அல்லாஹ்வின் உற்ற நண்பராவார் என்று கூறினார்கள். (நூற்கள்: புகாரீ, முஸ்லிம்)2


அம்ர் பின் மைமூன் (ரஹ்) கூறியுள்ளார்: முஆத் (ரளி) யமன் நாட்டுக்குச் சென்றபோது, அம்மக்களுக்கு அதிகாலைத் தொழுகை நடத்தினார்கள். அதில் இந்த வசனத்தை (4: 125) ஓதினார்கள். அப்போது ஒருவர், இப்ராஹீம் (அலை) அவர்களைப் பெற்ற அன்னையின் கண் (மகிழ்ச்சியால்) குளிர்ந்துவிட்டது என்று சொன்னார். (நூல்: புகாரீ)
இப்னு அப்பாஸ் (ரளி) கூறினார்கள்: ஒரு தடவை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தோழர்கள் சிலர் நபியவர்களின் வருகையை எதிர்பார்த்து அமர்ந்திருந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் வெளியே வந்தபோது, அந்தத் தோழர்கள் தங்களுக்கு மத்தியில் பேசிக்கொண்டிருந்ததைச் செவியுற்றார்கள். அவர்களுள் ஒருவர், அல்லாஹ் தன் படைப்புகளுள் ஒருவரைத் தன் உற்ற நண்பராக ஆக்கிக்கொள்ள விரும்பி, இப்ராஹீம் (அலை) அவர்களைத் தன் நண்பராக ஆக்கிக்கொண்டான். இது ஆச்சரியமானதாகும் என்று கூறினார்.
மற்றொருவர், அல்லாஹ் மூசா (அலை) அவர்களிடம் நேரடியாக உரையாடியது இதைவிட ஆச்சரியமானது என்று கூறினார். இன்னொருவர், ஈசா (அலை) அல்லாஹ்வின் உயிர் (ரூஹ்) ஆகவும் வார்த்தையாகவும் உள்ளார். (இது மிகவும் ஆச்சரியமானதாகும்) என்றும், பிறிதொருவர், ஆதம் (அலை) அவர்களை அல்லாஹ் தேர்ந்தெடுத்துள்ளான் (இது மிகவும் வியப்பானதாகும்) என்றும் கூறினர்.
அப்போது அவர்களிடம் நபி (ஸல்) அவர்கள் சென்று முகமன் (சலாம்) கூறிவிட்டு, பின்வருமாறு தெரிவித்தார்கள்: நீங்கள் ஆச்சரியப்பட்டுப் பேசிக்கொண்டிருந்ததை நான் செவியுற்றேன். இப்ராஹீம் (அலை) அல்லாஹ்வின் உற்ற நண்பர் (கலீலுல்லாஹ்); மூசா (அலை) அல்லாஹ்வுடன் உரையாடியவர்; ஈசா (அலை) அல்லாஹ்வின் உயிர்; அவனது வார்த்தை; ஆதம் (அலை) அவர்களை அல்லாஹ் தேர்ந்தெடுத்துக்கொண்டான். இவையெல்லாம் சரியே! அவ்வாறுதான் முஹம்மத் (ஆகிய நானும்). அறிந்துகொள்ளுங்கள். பெருமைக்காகச் சொல்ல வில்லை. நான் அல்லாஹ்வின் நேசர் (ஹபீபுல்லாஹ்) ஆவேன். பெருமைக்காகச் சொல்லவில்லை; மறுமை நாளில் முதலாவதாகப் பரிந்துரை செய்பவரும், பரிந்துரை ஏற்கப்படுபவரும் நானே! பெருமைக்காகச் சொல்லவில்லை; நான்தான் முதன்முதலாகச் சொர்க்க வாசலின் வளையத்தை அசைப்பவன்.
அப்போது அல்லாஹ் சொர்க்கத்தைத் திறந்து, என்னை (முதலில்) சொர்க்கத்தில் நுழையச் செய்வான். என்னுடன் இறைநம்பிக்கைகொண்ட ஏழைகள் இருப்பார்கள். பெருமைக்காகச் சொல்லவில்லை. ஆரம்பம் முதல் இறுதிவரை தோன்றியவர்களுள் நான்தான் மறுமைநாளில் மிகவும் கண்ணியமானவராக இருப்பேன். (நூல்: இப்னு மர்தவைஹி)3

இப்னு அப்பாஸ் (ரளி) கூறியுள்ளார்கள்: இப்ராஹீம் நபி (அல்லாஹ்வுக்கு) உற்ற நண்பராக இருப்பதையும், மூசா நபி அல்லாஹ்விடம் பேசியதையும், முஹம்மத் நபி (அல்லாஹ் வைப்) பார்த்ததையும் நீங்கள் மறுக்கின்றீர்களா? (மறுக்காதீர்கள்). (நூல்: அல்முஸ்தத்ரக்)




----------அடிக்குறிப்பு------------
1. இந்த நபிமொழியை முஸ்லிம் (ரஹ்) பதிவுசெய்யவில்லை.

2. இரண்டு இமாம்களும் இந்த நபிமொழியை அபூசயீத் (ரளி) அவர்களிடமிருந்து அறிவித்துள்ளார்கள். மேலும், இந்த நபிமொழியை அப்துல்லாஹ் பின் ஜுபைர், இப்னு அப்பாஸ், இப்னு மஸ்ஊத் (ரளி-அன்ஹும்) போன்றோர் அறிவித்துள்ளனர்.

3. இது ஒரு ஃகரீப் வகை ஹதீஸாகும். இதில் இடம்பெற்றுள்ள சில கருத்துகள் ஆதாரப்பூர்வமானவை ஆகும்.

புதன், 11 மே, 2011

இப்ராஹீம் நபியின் வரலாறு (தொடர் 21)

அல்லாஹ் இப்ராஹீம் நபியைப் புகழ்தல்

* இப்ராஹீம் (அலை) அவர்களை அவருடைய இறைவன் பல கட்டளைகள் மூலம் சோதித்ததை எண்ணிப்பாருங்கள். அவர் அவற்றை முழுமையாக நிறைவேற்றினார். (அதனால்,) உம்மை மனிதர்களுக்குத் தலைவராக ஆக்கப்போகிறேன் என்று அல்லாஹ் கூறினான். என்னுடைய வழித்தோன்றல்களிலும் (தலைவர்களை உருவாக்குவாயாக) என்று அவர் கோரினார். (அதற்கு, ஆம்! அப்படியே செய்கிறேன். ஆனால்,) எனது வாக்குறுதி (உம்முடைய வழித்தோன்றல்களுள்) அநீதி இழைத்தோரைச் சேராது என்று அவன் கூறினான். (2: 124)

அவருடைய இறைவன் அவருக்கு ஏவிய பெரும் சிரமமான செயல்களையும் அவர் முறையாகப் பூர்த்திசெய்துவிட்டபோது, மக்கள் அவரையும் அவருடைய வழிகாட்டுதல்களையும் பின்பற்றுகின்ற தலைவராக (இமாம்) அல்லாஹ் ஆக்கிவிட்டான். இந்த தலைமைத்துவம் அவரோடு சேர்ந்திருப்பதையும் அவருடைய சந்ததிகளுக்குத் தொடர்ந்து அது கிடைப்பதையும் அவருக்குப்பின் அது நிரந்தரமாக இருப்பதையும் அல்லாஹ்விடம் அவர் கேட்டார். அவர் விரும்பிக் கேட்டதை அல்லாஹ் அவருக்கு வழங்கினான்; அவருக்குத் தலைமைப்பதவியை ஒப்படைத்தான். எனினும் அநியாயக்காரர்கள் அதைப் பெறுவதிலிருந்து அல்லாஹ் விலக்களித்துவிட்டான். மேலும், அந்தத் தலைமைத்துவம் அவருடைய சந்ததிகளுள் நல்லறங்கள் செய்கின்ற அறிஞர்களுக்கு மட்டும் என்று வரையறுக்கப்பட்டது.

* மேலும் அவருக்கு இஸ்ஹாக்கையும் யஅகூபையும் அளித்தோம். இன்னும் அவருடைய சந்ததியிலே நபித்துவத்தையும் வேதத்தையும் ஏற்படுத்தினோம். அவருக்கு அவருடைய கூலியை இவ்வுலகிலும் கொடுத்தோம். மறுமையில் அவர் நல்லவர்களுள் ஒருவராவார். (29: 27)

* (இப்ராஹீமாகிய) அவருக்கு இஸ்ஹாக்கையும் யஅகூபையும் பரிசளித்தோம். (இவர்கள்) அனைவருக்கும் நல்வழி காட்டினோம். (இதற்கு) முன்னர் நூஹுக்கும் நல்வழி காட்டினோம். அவருடைய வழித்தோன்றல்களுள் தாவூத், சுலைமான், அய்யூப், யூசுஃப், மூசா, ஹாரூன் ஆகியோருக்கும் (நல்வழி காட்டினோம்). இவ்வாறுதான், நன்மை செய்வோருக்கு நாம் நற்பலன் வழங்குகிறோம். மேலும் ஸகரிய்யா, யஹ்யா, ஈசா, இல்யாஸ் ஆகியோருக்கும் (நல்வழி காட்டினோம். இவர்கள்) அனைவரும் நல்லவர்கள் ஆவர். இஸ்மாயீல், அல்யசஉ, யூனுஸ், லூத் ஆகியோருக்கும் (நல்வழி காட்டினோம்). அகிலத்தாரைவிட (இவர்கள்) அனைவரையும் நாம் சிறப்பித்தோம். அவர்களுடைய மூதாதையர்கள், அவர்களுடைய வழித்தோன்றல்கள், அவர்களுடைய சகோதரர்கள் ஆகியோ(ருள் பல)ரைத் தேர்ந்தெடுத்து, அவர்களை நல்வழியில் நடத்தினோம். (6: 84-87)

மேற்கண்ட வசனத்தில் `வமின் துர்ரிய்யத்திஹி என்ற வார்த்தையில் உள்ள பிரதிப்பெயர்ச்சொல் இப்ராஹீம் என்பதையே சுட்டிக்காட்டுகிறது. இதுதான் பிரபலமான கருத்தாகும். லூத் நபி (அலை) இப்ராஹீம் (அலை) உடைய அண்ணன் மகன் என்றிருந்தாலும், பெரும்பான்மை அடிப்படையில் அவரும் இப்ராஹீம் (அலை) உடைய சந்ததிகள் எனும் வார்த்தைக்குள் வந்துவிடுவார். ஆனால் மற்றவர்கள், அந்தப் பிரதிப்பெயர்ச்சொல் நூஹ் நபியைத்தான் குறிக்கிறது என்று கூறுகின்றார்கள். நூஹ் நபியின் வரலாற்றில் இது பற்றிக் கூறப்பட்டுள்ளது. அல்லாஹ்வே நன்கறிபவன்.

அல்லாஹ் கூறுகின்றான்: மேலும், திண்ணமாக நாமே நூஹையும் இப்ராஹீமையும் (தூதர்களாக) அனுப்பினோம். இன்னும், அவ்விருவரின் சந்ததியில் நபித்துவத்தையும் வேதத்தையும் ஏற்படுத்தினோம். (57: 26)

வேதங்கள் வழங்கப்பட்ட சந்ததிகள்

இப்ராஹீம் (அலை) அவர்களுக்குப்பின், இறைத்தூதர்களுக்கு அல்லாஹ் வானிலிருந்து இறக்கிய அத்துணை வேதங்களையும் அவருடைய சந்ததிகளுக்கும் அவருடைய வமிசத்தினருக்கும் அல்லாஹ் வழங்கினான். இது ஒப்பிடப்பட முடியாத ஒரு பெருமதிப்பாகும்; உயரிய தகுதியும் ஆகும். அவருக்கு இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்தனர். ஒருவர் ஹாஜிர் (அலை) மூலம் பிறந்த இஸ்மாயீல் (அலை) ஆவார்; மற்றொருவர், சார்ரா (அலை) மூலம் பிறந்த இஸ்ஹாக் (அலை) ஆவார். இஸ்ஹாக்கிற்கு யஅகூப் எனும் மகன் பிறந்தார். யஅகூபுக்கு இஸ்ராயீல் என்ற பெயரும் உண்டு.

அவரோடுதான் அந்த வமிசத்திலுள்ள அனைவரும் சேர்க்கப்படுகின்றனர். அவர்களுக்கே நபிப்பட்டம் கொடுக்கப்பட்டது. அவர்களை அனுப்பிய அல்லாஹ்வுக்குத் தவிர அவர்களின் எண்ணிக்கை தெரியாது. அவர்களுக்கே நபிப்பட்டத்தையும் தூதுத்துவத்தையும் பிரத்தியேகமாக வழங்கினான். இறுதியில், பனூ இஸ்ரவேலர்களுள் கடைசி நபியாக ஈசா பின் மர்யம் (அலை) அவர்களை அனுப்பினான். அவர்தாம் அந்த வமிசத்தின் இறுதி நபி ஆவார்.

அரபியர்களின் தந்தை இஸ்மாயீல் (அலை)

இஸ்மாயீல் (அலை) மூலமே அரபியர்களின் பல்வேறு குலத்தினர் தோன்றினர். அல்லாஹ் நாடினால், இது பற்றி நாம் விளக்கமாகக் கூறவுள்ளோம். அவருடைய வமிசத்திலிருந்து இறுதி நபியான, நபிமார்களின் தலைவரான, இம்மையிலும் மறுமையிலும் ஆதமுடைய மக்களின் பெருமிதமிக்கவரான முஹம்மத் பின் அப்தில்லாஹ் பின் அப்தில் முத்தலிப் பின் ஹாஷிம் அல்குரஷீ அல்மக்கீ பின்னர் அல்மதனீ (ஸல்) அவர்களைத் தவிர வேறு நபி யாரும் தோன்றவில்லை.

சிறப்புக்குரிய இந்தப் பிரிவிலிருந்து தேர்ச்சிமிகு இந்தக் கிளையிலிருந்து உயர்வுமிக்க, ஈருலகத் தலைவரான முஹம்மத் (ஸல்) அவர்களைத் தவிர யாரும் நபியாகக் காணப்படவில்லை. அவர்கள் புவிவாழ் மக்களெல்லாம் பெருமிதம் கொள்கின்ற தலைவர் ஆவார்கள். மறுமைநாளில் முந்தியோர்களும் பிந்தியோர்களும் அவர்களைக் கண்டு பொறாமைகொள்வர்.
நான் ஓர் (உயரிய) இடத்தில் நிற்பேன். இப்ராஹீம் உட்பட மக்கள் அனைவரும் என்னை விரும்புவர் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதை முஸ்லிம் (ரஹ்) அவர்கள் தம்முடைய (முஸ்லிம்) நூலில் பதிவுசெய்துள்ளார்.

முஹம்மத் (ஸல்) அவர்கள் தம்முடைய தந்தை இப்ராஹீம் (அலை) அவர்களை மிக அதிகமாகப் புகழ்ந்துள்ளார்கள். நிச்சயமாக தமக்குப் பிறகு இப்ராஹீம் (அலை) அவர்கள்தாம் அல்லாஹ்விடம் அவனுடைய படைப்பினங்களுள் மிகச் சிறப்பானவர் என்று அவர்கள் கூறியுள்ள கூற்று இதைத் தெரிவிக்கிறது. இச்சிறப்பு இவ்வுலகிலும், அல்லாஹ் தன்னுடைய கரண்டைக் காலைத் திறந்துகாட்டும் மறுமையிலும் ஆகும்.

நபி (ஸல்) அவர்கள் (தம் பேரர்கள்) ஹசனுக்கும் ஹுசைனுக்கும் (ஓதிப் பார்த்துப்) பாதுகாப்புத் தேடினார்கள். மேலும் கூறினார்கள்: `நிச்சயமாக உம்முடைய தந்தை இதையே (ஓதிப் பார்த்து, தம்முடைய மகன்கள்) இஸ்மாயீல் மற்றும் இஸ்ஹாக்கிற்குப் பாதுகாப்புத் தேடினார்கள். அந்த வார்த்தைகளாவன: அவூது பி கலிமாத்தில்லாஹித் தாம்மா; மின் குல்லி ஷைத்தானின் வ ஹாம்மா; வமின் குல்லி அய்னின் லாம்மா-அல்லாஹ்வுடைய முழுமையான வார்த்தைகளால் எல்லா ஷைத்தானிடமிருந்தும் பழிக்கக்கூடிய எல்லா கண்களிலிருந்தும் நான் பாதுகாப்புத் தேடுகின்றேன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு அப்பாஸ் (ரளி) அவர்கள் அறிவித்துள்ளார்கள். (நூல்: புகாரீ )1


அல்லாஹ் அனுப்பிய பறவைகள்

அல்லாஹ் கூறுகின்றான்: என் இறைவா! இறந்தோரை நீ எவ்வாறு உயிர்ப்பிக்கிறாய் என்பதை எனக்குக் காண்பிப்பாயாக! என்று இப்ராஹீம் கேட்டபோது, (அதை) நீர் நம்பவில்லையா? என (அல்லாஹ்) கேட்டான். (அதற்கு) அவர் அவ்வாறன்று. (நம்பியிருக்கிறேன்). எனினும், எனது உள்ளம் நிம்மதியடைவதற்காகவே (கேட்கிறேன்) என்று கூறினார். (அப்படியானால்) நீர் நான்கு பறவைகளைப் பிடித்து அவற்றைத் துண்டு துண்டாக வெட்டி உம்மிடம் வைத்துக்கொள்வீராக; பின்னர் அவற்றின் ஒவ்வொரு பாகத்தையும் ஒவ்வொரு மலையில் வைப்பீராக! பின்னர் அவற்றை நீர் அழைப்பீராக! அவை உம்மிடம் விரைந்து வந்துவிடும். அல்லாஹ் வல்லமை மிக்கோனும் ஞானம் நிறைந்தோனும் ஆவான் என்பதை அறிந்துகொள்வீராக! என்று (அல்லாஹ்) கூறினான். (2: 260)

இப்ராஹீம் (அலை) கேட்ட இவ்வினாக்களுக்குப் பல காரணங்களை விரிவுரையாளர்கள் கூறுகின்றார்கள். அவை அனைத்தையும் நாம் திருக்குர்ஆன் விரிவுரையில் விரிவாகக் கூறியுள்ளோம்.

அந்த நிகழ்ச்சியின் சுருக்கம் என்னவெனில், நிச்சயமாக அல்லாஹ் இப்ராஹீம் (அலை) கேட்டதை உடனே நிறைவேற்றினான். எனவே, நான்கு பறவைகளைப் பிடிக்க அவரை ஏவினான். நான்கு பறவைகளை ஏன் பிடிக்க ஏவினான் என்பதில் அறிஞர்கள் மத்தியில் கருத்து வேறுபாடுகள் உள்ளன. ஆக, எத்தனை பறவைகளானாலும் நோக்கம் நிறைவேறப்போகிறது. அவற்றின் இறைச்சிகளையும் இறகுகளையும் சிதைத்து, அவற்றை ஒன்றோடொன்று கலந்து, அவற்றை (நான்கு) பங்குகளாகப் பிரித்து, அவற்றுள் ஒவ்வொரு பங்கையும் ஒரு மலைமீது வைக்க ஏவினான். அவருக்கு எவ்வாறு ஏவப்பட்டதோ அவ்வாறே அவர் செய்தார். பின்னர், இறைவனின் அனுமதியால் அவற்றை அவர் அழைக்க ஏவப்பட்டார்.

அவற்றை அவர் அழைத்தபோது, ஒவ்வோர் உறுப்பும் தத்தம் பகுதியை நோக்கிப் பறந்து வரத்தொடங்கின. ஒவ்வோர் இறகும் அது சார்ந்த பகுதியை நோக்கி வரத் தொடங்கின. இறுதியில், ஒவ்வொரு பறவையின் உடலும் அது முன்பிருந்தவாறே ஒன்றுசேர்ந்துவிட்டது. `ஆகு என்றால் ஆகிவிடும்’ எனும் ஆற்றலைக் கொண்ட இறைவனின் பேராற்றலை அவர் கண்டுகொண்டிருந்தார். அவை அவரை நோக்கி மிகவேகமாக ஓடி வந்தன.

அவை அவரிடம் பறந்து வருவதைவிட இது அவரின் பார்வைக்கு மிகத்தெளிவாக இருப்பதற்காகவே அல்லாஹ் அவ்வாறு ஓடி வரச்செய்தான்.
அப்பறவைகளின் தலைகளை அவர் தம் கையில் எடுத்துக்கொள்ள ஏவப்பட்டார். அவர் அழைத்தபோது, ஒவ்வொரு பறவையும் வந்து தத்தம் தலையோடு ஒட்டிக்கொண்டன; அவை முன்பிருந்தவாறு ஆகிவிட்டன என்று கூறப்பட்டுள்ளது. அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை.
இறந்தவர்களை உயிர்ப்பிக்கின்ற அல்லாஹ்வின் ஆற்றலை இப்ராஹீம் (அலை), மாற்றுக் கருத்துக்கு இடமின்றி மிக உறுதியாக அறிந்தே இருந்தார். எனினும், அவர் அதனைக் கண்கூடாகக் காண விரும்பினார். மனஉறுதி எனும் நிலையி லிருந்து நேரடிப்பார்வை எனும் நிலைக்கு உயர்த்திக்கொள்ள விரும்பினார். எனவே, அல்லாஹ் அவரின் வினாவுக்கு விடையளித்தான். அவரின் ஆழ்ந்த எண்ணத்தைப் பூர்த்திசெய்து கொடுத்தான்.

----------அடிக்குறிப்பு------------

1.  இந்த நபிமொழியை மன்ஸூர் என்பவரிடமிருந்து அபூதாவூத், திர்மிதீ, இப்னுமாஜா போன்றோர் பதிவுசெய்துள்ளனர்.

அரபி:           அல்பிதாயா வந்நிஹாயா (இமாம் இப்னு கஸீர்- ரஹ்) 
தமிழாக்கம்: நூ. அப்துல் ஹாதி பாகவி M.A., M.Phil.





செவ்வாய், 10 மே, 2011

மார்க்கக் கல்வி மகத்தானதே!


பள்ளிகளில் தேர்வுகள் முடிந்து கோடைவிடுமுறை விட்டாயிற்று. தமிழக அரசியல்வாதிகள் தேர்தல் முடிவை எதிர்பார்த்துக் காத்திருப் பதைப்போல் பள்ளி மாணவர்கள் அனைவரும் தம்முடைய தேர்வு முடிவுகளை எதிர்பார்த்திருக்கின்றனர். பன்னிரண்டாம் வகுப்பை முடித்தவர்கள் கல்லூரிக் கனவோடு இருக்கின்றார்கள்; பத்தாம் வகுப்பை முடித்தவர்கள் மேனிலைப் பள்ளியை நோக்கிச் செல்ல இருக்கின்றார்கள்; நடுநிலைப் பள்ளிப் படிப்பை முடித்தவர்கள் உயர்நிலைப் பள்ளியில் சேர இருக்கின்றார்கள். ஆக மாணவர்கள் யாவரும், மேற்படிப்பு என்ன படிக்கலாம்; எங்கு படிக்கலாம் என்ற முனைப்பில் உள்ளார்கள்.

இன்று, இஸ்லாமியச் சமுதாயத்தில் கல்வி பற்றிய விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. ஆகவே, ஏற்கெனவே நம் சமுதாயத்தில் இருந்த படித்தவர்களின் விழுக்காடு தற்போது உயர்ந்துள்ளது. ஆனால் இஸ்லாமிய மார்க்கக் கல்வியைப் பொறுத்தவரை, நம் சமுதாயத்தில் கடந்த காலங்களில் இருந்த ஆர்வமும் மதிப்பும் இன்று வெகுவாகக் குறைந்து காணப்படுகிறது. மார்க்கக் கல்வியைக் கற்றுக்கொண்டு சமுதாயச் சேவை செய்ய வேண்டும் என்ற ஆர்வம் குன்றிப்போய் விட்டது. படித்து முடித்தபின் பணி; கை நிறையச் சம்பளம்; வசதியான வாழ்க்கை-இதையே குறிக்கோளாகக் கொண்டு பலர் கல்வியை நாடுகின்றனர். ஆனால், மார்க்கக் கல்வியைப் போதிக்கின்ற அரபிக் கல்லூரிகளில் தம் பிள்ளைகளைச் சேர்த்து அவர்களை ஓர் ஆலிமாக-இஸ்லாமிய அறிஞராக- உருவாக்க வேண்டும் என்ற எண்ணமே பலருக்குத் தோன்றுவதில்லையே ஏன்?

பொதுவாக, பெற்றோர்கள் யாவரும் தம் பிள்ளைகள் தலைசிறந்த கல்லூரிகளில் படித்துப் பட்டம் பெற்று, கைநிறையச் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ண ஓட்டத்திலேயே படிப்பை அணுகுகின்றார்கள். எதைப் படித்தால் எளிதில் பணி வாய்ப்புக் கிட்டும்; நிறைய சம்பாதிக்கலாம் என்ற கோணத்தில்தான் பலர் சிந்திக்கின்றார்கள். படிப்பு என்பதே பணம் சம்பாதிப்பதற்கான ஒரு துணைக்கோல் என்று எண்ணிக்கொண்டுள்ளார்கள். ஆனால் படிப்பு என்பது ஒரு மனிதனின் அறிவு வளர்ச்சிக்குத்தான் என்பதைப் பலர் அறிவதில்லை. ஒருவன் தன் கல்வியால் அறிவை வளர்த்துக்கொண்டான்; பண்பாட்டைக் கற்றுக்கொண்டான்; சமூகச் சிந்தனையை வளர்த்துக் கொண்டான் என்றால் அதுதான் கல்வியின் மிகப்பெரும் பயன். அதுவன்றி, ஒருவன் ஏதோ படித்தான்; பட்டத்தைப் பெற்றான் என்றால், அந்தக் கல்வியால் எந்தப் பயனும் இல்லை.

என் மகன் ஒரு பொறியாளர்; என் மகன் ஒரு கணினிப் பொறியாளர்; என் மகன் ஒரு கணக்காளர்; என் மகன் ஒரு மருத்துவர்; என் மகன் ஒரு வழக்கறிஞர் என்று சொல்லிக்கொள்வதில்தான் ஒவ்வொருவரும் பெருமைகொள்கின்றனரே தவிர என் மகன் ஒரு ஹாஃபிழ் (திருக்குர்ஆனை மனனம் செய்தவர்); என் மகன் ஓர் ஆலிம் (இஸ்லாமிய மார்க்க அறிஞர்) என்று சொல்லிக்கொள்வதை யாரும் பெருமையாகக் கருதுவதில்லை. இன்று, அனைவரும் தத்தம் மகன்களை எந்தக் கல்லூரியில் சேர்க்கலாம் என்று ஒவ்வொரு கல்லூரியாகத் தேடி அலைகின்றார்கள்; எந்தக் கல்லூரி சிறந்த கல்லூரி என்று பிறரிடம் கேட்டுத் தெரிந்துகொள்கிறார்கள்; அறிந்தவர்களிடம் விசாரிக்கின்றார்கள். ஆனால் எந்த இஸ்லாமியக் கல்லூரியில் சேர்க்கலாம்; எங்குள்ள அரபுக் கல்லூரியில் சேர்க்கலாம் என்று யாரும் யாரிடமும் விசாரிப்பதில்லை. ஒருவர் தம் பிள்ளையை ஆலிமாகவோ, ஹாஃபிழாகவோ உருவாக்குவதால் அவருக்கு என்ன நட்டம் வந்துவிட்டது? அவர் தம் மகனுக்குத் துரோகம் இழைத்துவிட்டாரா? அல்லது அவனைப் பாதாளத்தில் தள்ளிவிட்டுவிட்டாரா? இல்லவே இல்லை. மாறாக, அவர் தம் மகனுக்குச் சீரான கல்வியையே கொடுத்துள்ளார். ஈருலகிலும் வெற்றிபெறத்தக்க கல்வியை வழங்கியுள்ளார். அப்படிப்பட்ட மார்க்கக் கல்வியைத் தம் பிள்ளைகளுக்கு வழங்குவதில் உங்களுக்கு என்ன தயக்கம்? மார்க்கக் கல்வியைக் கற்பதற்காக உங்கள் பிள்ளைகளை ஏன் அரபிக்கல்லூரியில் சேர்க்க முன்வருவதில்லை?

அவர்களெல்லாம் சமுதாயத்தில் தாழ்ந்த நிலையில் இருக்கின்றார்களா? சமுதாயத்தில் மதிப்பு மரியாதை இல்லாமல் இருக்கின்றார்களா? பணி இல்லாமல் இருக்கின்றார்களா? திறமையற்றவர்களாக இருக்கின்றார்களா? பிறகேன் நம்மவர்கள் தம் பிள்ளைகளை அரபுக் கல்லூரியில் சேர்க்க முன்வருவதில்லை?

அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறுகின்றான்: இறைநம்பிக்கை யாளர்கள் ஒட்டுமொத்தமாக(ப் போருக்கு)ப் புறப்படுவது உசிதமன்று. அவர்களுள் ஒவ்வொரு பிரிவினரிலிருந்தும் ஒரு குழுவினர் (மட்டும்) புறப்பட்டால் போதாதா? அப்போதுதான் (நபியுடன்) இருப்பவர்கள் மார்க்கத்தைக் கற்கவும் (புறப்பட்டுச் சென்ற) தம் சமுதாயத்தார் தம்மிடம் திரும்பிவரும்போது அவர்களுக்கு எச்சரிக்கையூட்டவும் முடியும். (இதன் மூலம்) அவர்கள் (தம்மைத்) தற்காத்துக் கொள்ளலாம். (9: 122)

நபித்தோழர் இப்னு அப்பாஸ் (ரளி) அவர்கள் கூறியுள்ள விளக்கம்: நபி (ஸல்) அவர்கள் மதீனாவில் தங்கிக்கொண்டு, போருக்காகப் படைப் பிரிவுகளை வெளியூருக்கு அனுப்பினார்கள். அப்போது படைப்பிரிவில் சேர்வதற்கு நான், நீ என்று நபித்தோழர்கள் போட்டியிடுவார்கள். இவ்வாறு அனைவரும் வெளியூர் சென்றுவிட்டால், ஊரில் தங்கியுள்ள நபியவர்கள் அப்போது சொல்லும் மார்க்க விசயங்களைக் கேட்டுத் தெரிந்துகொள்ள ஆளில்லாமல் போய்விடும்.
எனவே ஒவ்வொரு பிரிவினரிலிருந்தும் ஒரு குழுவினர் படைப்பிரிவில் சேர்ந்தால் போதும். மற்றவர்கள் ஊரில் தங்கியிருந்து நபியவர்களிடம் மார்க்க விசயங்களை அறிந்துகொண்டு அந்தப் படைப்பிரிவினர் ஊர் திரும்பியவுடன் அவர்களுக்குத் தாம் கற்றதை ஊரில் தங்கியிருந்தோர் எடுத்துச்சொல்ல வழியேற்படும் என்பதற் காகவே அல்லாஹ் இவ்வாறு கூறியுள்ளான். (தஃப்சீர் இப்னு கஸீர்)

ஒரு சமுதாயத்திலுள்ள அனைவரும் உலகியல் சார்ந்த கல்வியை மட்டுமே கற்றால், மார்க்கக் கல்வியை யார்தாம் கற்பார்? ஒரு சாரார் பொறியியல், மருத்துவம், கணிப்பொறியாளர் உள்ளிட்ட பற்பல உலகியல் சார்ந்த கல்வியைக் கற்கச் செல்லட்டும்; அதே நேரத்தில் மற்றொரு சாரார் மார்க்கக் கல்வியைக் கற்கச் செல்லட்டும். அப்போதுதான் நம்முடைய சமுதாயம் கல்வியிலும் மார்க்கத்தைப் பேணுவதிலும் சமநிலை வகிக்க முடியும். இல்லையேல் சமநிலை இழந்து ஒரு பகுதி தொய்வு ஏற்பட்டதாகத் தோன்றும். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு தந்தை தன் பிள்ளைக்குக் கொடுக்கும் வெகுமதிகளுள் நல்லொழுக்கத்தைவிடச் சிறந்தது வேறு எதுவும் இல்லை. (நூல்: திர்மிதீ)

இந்த நல்லொழுக்கம் அரபுக் கல்லூரிகளில்தான் போதிக்கப் படுகிறது. பெற்றோரை மதித்தல், அவர்களைக் கண்ணியப்படுத்துதல், அவர்களிடம் அன்போடு நடந்துகொள்ளுதல், அவர்கள் முதுமை நிலையில் இருந்தால் அவர்களிடம் கனிவாகப் பேசுதல் உள்ளிட்ட அனைத்தும் அங்கேதான் போதிக்கப்படுகின்றன.

ஆலிம்களின் பிள்ளைகள்

ஆலிம்களின் பிள்ளைகள்தாம் ஆலிம்களாக உருவாக வேண்டும் என்றும், இது ஒரு பரம்பரைக் கல்வி என்றும் பலர் தவறாக எண்ணிக்கொண்டிருக்கின்றார்கள். மாறாக, இந்தக் கல்வியை யார் வேண்டுமானாலும் கற்றுக்கொள்ளலாம்; கற்றுக்கொண்டு மக்கள் மத்தியில் இஸ்லாமியச் சட்டங்களை எடுத்துரைக்கலாம். இது அனைவருக்கும் பொதுவான கல்வி. குறிப்பிட்ட சிலரின் பரம்பரைச் சொத்தில்லை என்பதை நாம் உணர வேண்டும். இன்றைய ஆலிம்கள் பலர், தாங்கள் ஆலிம்களாக இருந்துகொண்டே தம் பிள்ளைகளை அரபுக் கல்லூரிகளில் சேர்ப்பதில்லை. அவர்கள் கற்ற கல்விமீது அவர்களுக்கே விருப்பமில்லையா? ஒரு மருத்துவரின் பிள்ளை மருத்துவர் ஆகிறான்; ஒரு பொறியாளரின் பிள்ளை பொறியாளர் ஆகிறான்; ஒரு வழக்கறிஞரின் பிள்ளை வழக்கறிஞர் ஆகிறான்; ஆனால் ஓர் ஆலிமின் பிள்ளை ஆலிமாக ஆகக் கூடாதா? அந்தக் கல்வியில் அப்படியென்ன ஆர்வமின்மை இவர்களுக்கு?

காலத்துக்கேற்ற கல்லூரிகள்

கடந்த காலங்களில் அரபுக் கல்லூரிகளில் இஸ்லாமியக் கல்வியை மட்டும் போதித்து வந்தனர். அரபு இலக்கணம், திருக்குர்ஆன் விரிவுரை, நபிமொழிகளின் விளக்கவுரை, இஸ்லாமிய வரலாறு, இஸ்லாமியச் சட்டவியல் உள்ளிட்டவை அதில் அடங்கும். ஆனால், இன்று அவற்றோடு சேர்த்து, கணினி, தட்டச்சு, தொழிற்கல்விகள், ஆங்கிலம் உள்ளிட்ட பல்வேறு கல்விகள் காலத்தின் அவசியம் கருதி இணைக்கப்பட்டுள்ளன. அது மட்டுமின்றி, 8 ஆம் வகுப்பு படித்துள்ள ஒருவர், ஓர் அரபிக் கல்லூரியில் சேர்ந்தால், அவர் ஐந்தாண்டுகளில் அல்லது ஏழாண்டுகளில் ஓர் ஆலிமாகவும் எம்.காம். முதுகலைப் பட்டம் பெற்ற ஒரு பட்டதாரியாகவும் வெளிவருகிறார்.

தற்போதைய கணினி யுகத்துக்கேற்ப, இஸ்லாமிய மார்க்கக் கல்வியோடு உலகியல் கல்வியையும் இணைத்தே வழங்குவதால் அவர்கள் பள்ளிவாசல்கள், அரபிக் கல்லூரிகளை மட்டும் நம்பியில்லாமல் பல்வேறு துறைகளில் பணியாற்றக்கூடிய வாய்ப்பும், யாருக்கும் அஞ்சாமல் மார்க்கத்தை எடுத்துரைக்கின்ற வாய்ப்பும் ஏற்பட்டுள்ளது. தயக்கம் ஏன்?

பெரும்பாலும் இஸ்லாமியச் சமுதாய மக்கள் தம் பிள்ளைகளை அரபுக் கல்லூரியில் படிக்க வைத்து ஆலிம்களாக உருவாக்கத் தயங்குவது ஏன்? குறைவான சம்பளம், ஏழ்மையான வாழ்க்கை நிலை, பிறரிடம் தேவையாகுதல்-இவையே முதல்நிலைக் காரணங்களாகும். அவைபோக, அழைத்த வீட்டுக்கு துஆ ஓதச் செல்லுதல், அவர்கள் தரும் சிறு அன்பளிப்புகளைப் பெற்றுக் கொள்ளுதல்- இதுபோன்ற அவர்களின் செயல்பாடுகளைப் பார்க்கின்ற நாங்கள் எப்படி எங்கள் பிள்ளைகளை ஆலிம்களாக ஆக்க முன்வர முடியும்? என்று வினவுகின்றனர். அப்படியென்றால், நீங்கள் ஏன் ஆலிம்களை உங்கள் வீட்டுக்கு அழைக்கின்றீர்கள்? நீங்களே உங்கள் வீட்டில் துஆ ஓதிக்கொள்ள வேண்டியதுதானே? என்று மறுவினாத் தொடுத்தால், அதற்கு அவர்களிடம் பதில் இல்லை. ஆக, ஆலிம்களை மதிக்கிறோம் என்று சொல்பவர்கள் தம் பிள்ளைகளை ஆலிம்களாக உருவாக்க முன்வரட்டும். அப்படிச் செய்தால் சமுதாயத்தில் ஆலிம்களைப் பற்றிய கண்ணோட்டம் மாறும். அவர்களும் படித்தவர்கள்தாம் என்ற எண்ணம் உருவாகும்.
மாற்றமடைந்துள்ள மதரசாக்கள்

பாரம்பரிய முறையில் இஸ்லாமியக் கல்வியை மட்டும் போதித்து வந்த அரபி மதரசாக்கள், தற்காலச் சூழலுக்கேற்ப தமது பாடத்திட்டத்தில் மாற்றம் செய்துகொள்ள முன்வந்துள்ளன. திருச்சி அன்வாருல் உலூம் கல்லூரி 1963இல் தொடங்கப்பட்டது. அரபிப் பாடங்கள் மட்டுமே போதிக்கப்பட்டு வந்த அக்கல்லூரி தற்போது ஆங்கிலம், கணினி, தட்டச்சு, தொழிற்கல்விகள் உள்ளிட்ட பாடங்களையும் இணைத்துள்ளது பாராட்டுக்குரியது. இதுபோன்ற பல்வேறு அரபுக் கல்லூரிகளை இன்று நாம் அடையாளம் காட்டலாம். இன்று சென்னையில் மட்டும் ஏழுக்கும் மேற்பட்ட `இரட்டைக் கல்வி முறை அரபுக் கல்லூரிகள் உள்ளன. அது மட்டுமின்றி, கல்லூரியில் சேர்க்கும் காலத்தையும் மாற்றியமைத்துள்ளன. அன்று ஷவ்வாலில் தொடங்கி ஷஅபான் மாதத்தில் முடித்த கல்லூரிகள் தற்போது ஜூனில் மாணவர்களைச் சேர்க்கத் தொடங்கியுள்ளன. காரணம், பள்ளியில் 8 அல்லது 10ஆம் வகுப்பை முடித்துவிட்டு வருகின்ற மாணவர்கள் அரபுக்கல்லூரிகளில் சேர்ந்து பயில அதுவே அவர்களுக்கு வசதியாக இருக்கிறது.

இப்படிப் பல்வேறு மாற்றங்களுக்கு உட்பட்டுள்ள அரபுக் கல்லூரிகளின் பக்கம் நம் சமுதாய மக்களின் பார்வை படாதது ஏன்? அது பற்றிய மதிப்பை உணர்வது எப்போது? வீட்டுக்கு ஓர் ஆலிமைப் பார்க்கும் காலம் எப்போது உருவாகும்?

முனைவர் பட்டம் பெற்றவர்கள்

அரபுக் கல்லூரியில் பயிலும்போதே `அஃப்ஜலுல் உலமா' எனும் தேர்வை எழுதிவிடுகின்றார்கள். இது இளங்கலை B.A. அரபிப் பட்டத்துக்கு இணையான தேர்வாகும். இது சென்னைப் பல்கலைக் கழகம், பாரதிதாசனார் பல்கலைக் கழகம் உள்ளிட்ட பல்கலைக் கழகங்களில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதனால் அதை வைத்துக் கொண்டு முதுகலை, இளம் முனைவர் ஆய்வு, முனைவர் ஆய்வு வரை தொடர்ந்து முன்னேற வழியை ஏற்படுத்திக்கொடுக்கின்றார்கள். ஆலிம்களாக உள்ள பலர் இன்று அரபுமொழியில் ஆய்வுசெய்து முனைவர் (Ph.D) பட்டம் பெற்றுள்ளனர். இளம் முனைவர் (M.Phil) களாகப் பலர் உள்ளனர். இன்னும் பலர் இளம் முனைவர் ஆய்வு மற்றும் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொள்வதற்காகக் காத்திருப்போர் பட்டியலில் இருந்துவருகின்றனர். சில ஆண்டுகளுக்கு முன்னர், சென்னைப் பல்கலைக் கழகம் தொலைநிலைக் கல்வி மூலம் அரபு முதுகலைப் படிப்பைத் தொடங்கியுள்ளதால் ஆலிம்கள் பலர் இப்படிப்பைத் தொடர்கின்றனர்.

அரசு அங்கீகாரம்

தேவ்பந்த் அரபுப் பல்கலைக் கழகம், நத்வத்துல் உலமா அரபுக் கல்லூரி உள்ளிட்ட சிலபல கல்லூரிகளில் வழங்கப்படுகின்ற பட்டம் அரபி இளங்கலைப் பட்டத்துக்குச் சமமானதாக அரசுப் பல்கலைக் கழகங்கள் ஏற்றுக்கொண்டு அவர்கள் முதுகலைப் படிப்பைத் தொடர வாய்ப்பளிக்கின்றன. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, ஆலிம்கள் பலர் இன்று சென்னைப் பல்கலைக் கழகத்தில் அரபுத்துறையில் முதுகலைப் படிப்பைத் தொடர்கின்றனர். அது மட்டுமின்றி, வண்டலூரில் அமைந்துள்ள புகாரி ஆலிம் அரபிக் கல்லூரியில் ஐந்தாண்டுகளில் பெறுகின்ற பட்டம் அந்த வளாகத்தினுள் உள்ள B.S. .அப்துர் ரஹ்மான் பல்கலைக் கழகத்தால் இஸ்லாமிக் ஸ்டடீஸ் படிப்பின் கீழ் அங்கீகரிக்கப்படுகிறது. இதுவும் இளங்கலைப் பட்டத்துக்குச் சமமாக அங்கீகரிக்கப்படுகிறது. ஆக, அரசு அங்கீகாரம் பெற்ற கல்வியாக இஸ்லாமியக் கல்வி மாறிவருவது ஓர் ஆரோக்கியமான முன்னேற்றமும் அங்கீகாரமும் ஆகும். இனி, எதிர்காலத்தில் எல்லா அரபுக் கல்லூரிகளின் பட்டமும் அரசு அங்கீகாரம் பெற வாய்ப்புண்டு. ஆகவே, இதுவும் பட்டப் படிப்புதான் என்ற மனநிலை நமக்கு ஏற்பட வேண்டும். அத்துடன், இதில் ஈருலகப் பயன்களையும் நற்பேறுகளையும் நாம் பெறலாம் என்பதே இக்கல்வியின் கூடுதல் சிறப்பாகும்.
 
ஆலிம்களின் பணிகள்

கடந்த காலங்களில் நீங்கள் பார்த்த ஆலிம்கள் வேறு; இன்றைய கணினி யுகத்தில் நீங்கள் காணுகின்ற ஆலிம்கள் வேறு என்பதை நீங்கள் புரிந்துகொள்ளுங்கள். இன்றைய கணினி யுக ஆலிம்கள் அனைத்துத் துறைகளிலும் முன்னேற்றம் கண்டுவருகின்றார்கள். அன்று ஆங்கிலமே என்னவென்று தெரியாதவர்கள் இன்று ஆங்கிலத்தில் உரையாற்றுகின்றார்கள்; கணிப்பொறி இயக்குகிறார்கள்; வலைப்பூக்கள் உருவாக்கித் தம் கருத்துகளைப் பதிந்து உலகின் எண்திசையிலும் உள்ள மக்களைப் படிக்கத் தூண்டுகின்றார்கள். அது மட்டுமின்றி, கைநிறையச் சம்பாதிக்கவும் தொடங்கிவிட்டார்கள். ஆம். இன்றைய அரபிக் கல்லூரிகள் மார்க்கக் கல்வியை மட்டும் போதிப்பதோடு நிறுத்திக்கொள்ளாமல், ஓர் ஆலிம் தன்னை நிலைப்படுத்திக்கொள்வதற்கான கல்விகளையும் சேர்த்தே போதிக்கத் தொடங்கிவிட்டன. அங்கு அரபு இலக்கணமும், திருக்குர்ஆன் விளக்கவுரையும், நபிமொழிகளின் விளக்கவுரையும் போதிக்கப்படுவதோடு கணினிக் கல்வி, தட்டச்சு, ஆங்கிலம் போன்ற கல்விகளும் போதிக்கப்படுகின்றன. அத்துடன் உலகியல் கல்லூரியின் சார்பாக வழங்கப்படுகின்ற பட்டங்களைப் பெறுவதற்கான ஏற்பாடும் செய்யப்படுகிறது.

உங்கள் பிள்ளை எட்டாம் வகுப்பு முடித்திருந்து, திருக்குர்ஆனைப் பார்த்து வாசிக்கத் தெரிந்திருந்தால் போதும். ஐந்தாண்டுகளில் அவனுடைய வாழ்க்கையே முற்றிலும் மாறிவிடும். ஒரு கையில் அரபுக் கல்லூரியின் பட்டம்; மற்றொரு கையில் உலகியல் கல்விக்கான பட்டம்; அத்தோடு பல்வேறு திறமைகளோடும், ஆற்றல்களோடும் வெளிவருகின்ற உங்கள் பிள்ளை ஈருலகிலும் உங்களுக்கும் இஸ்லாமியச் சமுதாயத்துக்கும் உதவுகின்ற பிள்ளையாக உருவாகும் என்பதை நினைவில் நிறுத்துங்கள். அதை நினைத்துப் பெருமைப்படுங்கள்.

பொதுவாக அரபுக் கல்லூரிகளில் பட்டம் பெற்று வெளிவந்துள்ள ஆலிம்கள் பலர் பல்வேறு துறைகளில் பணியாற்றுகின்றார்கள். புதிதாக அரபிக் கல்லூரிகளை உருவாக்கி நிர்வகித்தல், பத்திரிகை நடத்துதல், மொழியாக்கம் செய்தல், கணினித் துறையில் பணியாற்றுதல், பல்கலைக் கழகங்களில் பேராசிரியர்களாகப் பணியாற்றுதல், அரசியல் கட்சிக்குத் தலைமையேற்று நடத்துதல் உள்ளிட்ட பல்வேறு தளங்களில் பணியாற்றுகின்றார்கள். இத்தகைய உயர்ந்த நிலைகளில் மேலோங்கியிருக்கின்ற ஆலிம்களைப் பார்த்துச் சமுதாயம் பெருமைகொள்ள வேண்டாமா? எந்த வகையில் அவர்கள் தாழ்ந்துபோய்விட்டார்கள்?

அரபு மதரசாவில் படித்த மாணவர்களின் திறமையை அறிய மௌலவி வஸீமுர் ரஹ்மான் ஒரு சான்று. உ.பி.யில் உள்ள புகழ் பெற்ற தாருல் உலூம் தேவ்பந்த் அரபுப் பல்கலைக் கழகத்தில் பயின்று பட்டம் பெற்ற இவர், தமது முயற்சியை அத்தோடு முடித்துக்கொள் ளாமல் தொடர்ந்து முயன்று இன்று ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். இவருடைய முயற்சி பலருக்குப் படிப்பினையாகும். அரபு மதரசாக்களில் என்ன படித்துக்கொடுக்கின்றார்கள் என்ற ஏளனமான வினாவுக்கு விடையாக இவர் திகழ்கிறார் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.


தொடர்- 2

அரபுமொழி

திருக்குர்ஆனின் மொழியான அரபுமொழி போதிக்கப்படுவது அரபுக் கல்லூரிகளில்தான் என்பதை நாம் நினைவில்கொள்ள வேண்டும். இந்த அரபுமொழியின் முக்கியத்துவத்தையாவது நாம் உணர்ந்துள்ளோமா? அதன் வளர்ச்சிக்காக நாம் பாடுபட்டுள்ளோமா? ஐக்கிய நாடுகளின் சபையில் அங்கீகரிக்கப்பட்ட மொழிகள் ஆறு. அவற்றுள் ஒன்று அரபிமொழி. நம் நாட்டின் தேசிய மொழிகள் 22 ஆகும். அவற்றுள் அரபியும் ஒன்று. பத்து, பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வில் மொழிப் பாடங்கள் உள்ளன. அதில் மாணவர்கள் தாம் விரும்பும் ஏதேனும் ஒரு மொழியைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். ஆக, அங்கும் அரபிமொழிக்கு ஓர் இடமுண்டு. அது மட்டுமின்றி, ஐ.ஏ.எஸ்., ஐ.பீ.எஸ். போன்ற போட்டித் தேர்வுகளிலும் அரபியை ஒரு விருப்பப் பாடமாகத் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். இவ்வளவு வாய்ப்புகள் இருந்தும் மிகச் சிலரைத் தவிர யாரும் அரபிமொழிக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லையே ஏன்?
"மூன்று காரணங்களுக்காக அரபிமொழியைக் கற்றுக்கொள்ளுங்கள்; குர்ஆன் அரபி; என்னுடைய அறவுரைகள் அரபி; சொர்க்கத்தின் மொழி அரபி" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: பைஹகீ)

உலகப் பொதுமறையான திருக்குர்ஆனும் இறுதி இறைத்தூதரின் பொய்யாமொழிகளும் அரபி மொழிக்குள் அடங்கியுள்ளன. எனவே அவற்றின் விளக்கவுரைகளும் அரபிமொழியிலேயே எழுதப்பட்டுள்ளன. ஆகவே, அரபிமொழி தெரியாதவர்கள் தம்முடைய இஸ்லாமிய மார்க்கத்தின் பெரும்பகுதியை அறியாமலேயே இருந்துவருகின்றனர்.
நாம் நாள்தோறும் ஐவேளைத் தொழுகையில் ஓதுகின்ற திருக்குர்ஆன் வசனங்கள் அரபிமொழிதான். நாம் நாள்தோறும் ஓதுகின்ற வேதம் அரபிமொழிதான். ஆக, இவ்வுலகில் எங்கெல்லாம் முஸ்லிம்கள் வாழ்ந்துகொண்டிருக்கின்றார்களோ அங்கெல்லாம் அரபிமொழி வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறது. ஆனால், வாசிக்க மட்டுமே கற்றுள்ள பலர் அதன் அர்த்தங்கள் பற்றி யோசிக்கவே இல்லை. அதனால்தான் அரபிமொழியின் தேடலில் தொய்வு ஏற்பட்டுவிட்டது.

கால் நூற்றாண்டுக்கு முன்னர் வாழ்ந்த முஸ்லிம்கள் பலர், அரபி எழுத்தில் எழுதப்பட்ட எதையும் வாசிக்கத் தெரிந்திருந்தார்கள். தமிழைக்கூட அரபியில் எழுதி செய்திப் பரிமாற்றம்செய்து கொண்டார்கள்; இஸ்லாமியச் சட்டங்களைத் தெரிந்துகொண்டார்கள். இதனால் நூல் எழுதியவர்களும் அரபுத் தமிழில் எழுதினார்கள். அது சங்கேத மொழியாகவும் பயன்பட்டிருக்கிறது. இதனால்தான் `அரபுத் தமிழ்' எனும் சொல்வழக்கு பயன்பாட்டில் இருந்தது. ஆனால், இன்று அது தலைகீழாக மாறி, அரபியையும் தமிழில் எழுதி வாசிக்க வேண்டிய நிர்ப்பந்த நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். அரபியைப் பார்த்து வாசிக்கத் தெரியாத நிலையில் பலர் இருப்பது வேதனையிலும் வேதனையாகும்.

நம் பிள்ளைகள் மழலை வகுப்புக்குச் சென்று, அங்குக் கற்றுக் கொண்ட ஆங்கில வார்த்தைகளைத் தட்டுத் தடுமாறி, திக்கித் திக்கிப் பேசுவதைக் கண்டு மகிழ்ச்சியடைகின்ற நாம், அருகிலுள்ள பள்ளிவாசலில் போதிக்கப்படுகின்ற அரபிமொழி வகுப்புக்கு அவர்களை அனுப்புவதில்லையே ஏன்?
எனவே, நாம் அரபி மொழிக்கு உரிய முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமென்றால், பாலர் வகுப்பு முதல் அதற்கெனத் தனிக்கவனம் செலுத்த வேண்டும். இல்லையேல் நம் பிள்ளைகளும் திருக்குர் ஆனைப் பார்த்து வாசிக்கத் தெரியாத இழிநிலைக்குத் தள்ளப்படு வார்கள் என்பது திண்ணம்.

பெற்றோருக்கு என்ன பயன்?

இஸ்லாமியக் கல்வியைக் கற்றுக்கொள்கின்ற உங்கள் பிள்ளை, அத்துடன் இஸ்லாமியப் பண்பாடுகளையும் ஒழுக்கத்தையும் இறையச்சத்தையும் கற்றுக்கொள்கிறான். இதனால் உங்கள் பிள்ளை பெற்றோரை மதிக்கின்ற பிள்ளையாக, உங்களின் முதுமையில் உங்களைக் கைவிட்டுவிடாத பிள்ளையாக, அனைவராலும் மதிக்கப்படுகின்ற பிள்ளையாக, அல்லாஹ்வின் அன்பைப் பெற்ற பிள்ளையாக உருவாகும். பெற்ற உங்களுக்கு இதைவிட வேறு பெருமை என்ன வேண்டும்? யோசியுங்கள்; பலமுறை யோசியுங்கள். மார்க்கக் கல்வியை உங்கள் பிள்ளைக்குக் கொடுப்பதால் தீமை ஏதும் உண்டா? இனியும் ஏன் தாமதம்? உங்கள் பிள்ளைகளை அரபிக் கல்லூரிகளில் சேர்த்து ஈருலகிலும் பயன்மிக்க பிள்ளைகளாக உருவாக்குங்கள்!

மறுமைப் பயனைப் பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளதாவது: (உங்களுள்) திருக்குர்ஆனைக் கற்று, அதன்படி செயல்பட்டவரின் பெற்றோருக்கு மறுமையில் ஒரு கிரீடம் அணிவிக்கப்படும். அது, உலகில் ஒருவரின் வீட்டில் சூரியன் இருந்தால் எவ்வாறு அவ்வீடு ஒளி இலங்குமோ அதைவிட ஒளிமிக்கதாக இருக்கும். அப்படியென்றால், அதன்படி செயல்பட்டவருக்கு என்ன (கிடைக்கும்) என்பதை நீங்களே முடிவுசெய்து கொள்ளுங்கள். (நூல்: அபூதாவூத்)

இஸ்லாமியச் சகோதரர்களே!

உங்கள் வீட்டில் நான்கு பிள்ளைகள் இருந்தால் ஒருவனை மருத்துவராகவும், மற்றொருவனை வழக்கறிஞராகவும், வேறொரு வனைப் பொறியாளராகவும் ஆக்கிக்கொள்ளுங்கள். அவர்களுள் ஒருவரையாவது ஆலிமாக ஆக்குங்கள். அப்போதுதான் நம் சமுதாயத் தில் இஸ்லாமியக் கல்விமீது ஆர்வமும் அக்கறையும் ஏற்படும். இஸ்லாமியக் கல்வியை எடுத்துச்சொல்ல ஆள் பற்றாக்குறை ஏற் படாது. செல்வந்தர்களும் தம் பிள்ளைகளை அரபிக் கல்லூரிகளில் சேர்க்க முன்வந்துவிட்டால் அக்கல்விமீது பொதுவாக இருக்கின்ற குறுகிய கண்ணோட்டம் மாறும். அதனால் சமுதாயம் மிகப்பெரும் நன்மைகளை அடையும் என்பது திண்ணம். ஒவ்வோர் ஊரிலும் ஆலிம்கள் இருக்க வேண்டும். அதற்கு அவ்வூரிலுள்ள ஜமாஅத்தார்கள் ஒன்றிணைந்து தம் ஊரிலுள்ள தகுதியான மாணவர்களைத் தேர்ந்தெடுத்து அரபிக் கல்லூரிகளில் சேர்த்து, அவர்களுக்கான செலவையும் ஏற்றுக்கொண்டால் ஒவ்வோர் ஊரிலும் ஆலிம்கள் உருவாகிவிடுவார்கள்.

புதுமைக் கல்லூரிகள்

உங்கள் பிள்ளைகளை ஆலிம்களாகவும் பட்டதாரிகளாகவும் உருவாக்க, குறிப்பிட்ட சில கல்லூரிகளை மட்டும் இங்குச் சுட்டிக் காட்ட விரும்புகிறேன். இவை தவிர இன்னும் பல்வேறு கல்லூரிகள் ஆங்காங்கே உள்ளன என்பதையும் நினைவில்கொள்க!

1. பிலாலிய்யா அரபுக் கல்லூரி- நெமிலி, சென்னை. பேச: 98405 38681  
2. புகாரி ஆலிம் அரபுக் கல்லூரி - வண்டலூர், சென்னை.
பேச: 044-22751280/82
3. அல்ஹுதா அரபுக் கல்லூரி, அடையாறு, சென்னை. பேச: 98409 49403
4. நூருல் ஹிதாயா அரபுக் கல்லூரி, பனையூர், சென்னை.
பேச: 9443264097
5. கைராத்துல் இஸ்லாம் அரபுக் கல்லூரி, வீரசோழன். பேச: 6379 774 689   
6. அன்வாருல் உலூம் அரபுக் கல்லூரி, திருச்சி.
7. இர்ஷாதுல் உலூம் அரபுக் கல்லூரி, பெரம்பலூர்.
பேச: 94438 05885
8. ஜாமிஆ அஸ்ஸய்யிதா ஹமீதா, அரபுக் கல்லூரி, கீழக்கரை
பேச: 04567-241957
9. உஸ்வத்துன் ஹசனா அரபுக் கல்லூரி, பள்ளப்பட்டி
பேச: 94860 58551  


இன்னும் நிறைய உள்ளன. (சில கல்லூரிகளில் எட்டாம் வகுப்பும் சில கல்லூரிகளில் பத்தாம் வகுப்பும் தகுதியாக உள்ளது.) 

மரபுவழிக் கல்லூரிகள்:

1. அல்பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் அரபுப் பல்கலைக் கழகம், வேலூர்.
2. காஷிஃபுல் ஹுதா அரபுக் கல்லூரி, சென்னை.
3. ஜமாலிய்யா அரபுக் கல்லூரி, சென்னை.
4. தாவூதிய்யா அரபுக் கல்லூரி, ஈரோடு.
5. மன்பவுல் உலா அரபுக் கல்லூரி, கூத்தாநல்லூர்.
பேச: 04367-234450
6. மன்பவுல் அன்வார் அரபுக் கல்லூரி, லால்பேட்டை.
பேச: 04144-269079
7. மிஸ்பாஹுல் ஹுதா அரபுக் கல்லூரி, நீடூர்.
பேச: 04364-250173
8. ரியாளுல் ஜினான் அரபுக் கல்லூரி, திருநெல்வேலி-பேட்டை
9.யூசுஃபிய்யா அரபுக் கல்லூரி- திண்டுக்கல்
10. இம்தாதுல் உலூம் அரபுக் கல்லூரி-கோவை
11. மன்பவுஸ் ஸலாஹ் அரபுக் கல்லூரி- தூத்துக்குடி
12. சிராஜுல் முனீர் அரபுக் கல்லூரி- புதுக்கோட்டை
13. ஸலாஹிய்யா அரபுக் கல்லூரி- அதிராம்பட்டினம்

ஆக, ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறப்பான அரபுக் கல்லூரிகள் பல செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன. பலரும் அதன் பக்கம் கவனம் செலுத்தத் தொடங்கிவிட்டால், அரபுக் கல்லூரிகளிலும் சமுதாயத்திலும் இன்னும் பற்பல முன்னேற்றங்களைக் கொண்டுவரலாம். ஒவ்வொரு கல்லூரியிலும் ஒரு Teleconference Hall ஏற்படுத்தி தமிழகத்தி லுள்ள மூத்த அறிஞர்களின் சொற்பொழிவுகளையும் அவர்கள் அரபுக் கல்லூரிகளில் நடத்துகின்ற பாடங்களையும் மாணவர்கள் அனைவரையும் கேட்கச் செய்யும் திட்டம் வருங்காலத்தில் செயல்படுத்தப்படும். இதனால் பல்வேறு பயன்கள் உண்டு. இதைச் செயல்படுத்துவதால் மூத்த அறிஞர்களிடம் பாடம் கற்றுக்கொண்ட திருப்தி மாணவர்களுக்கு ஏற்படுவதோடு, மாணவர்கள் தம் ஐயங்களையும் உடனுக்குடன் தீர்த்துக்கொள்ளலாம்.

ஆக, இந்தக் குறுநூலை உருவாக்கியுள்ள நோக்கம் நீங்கள் உங்கள் குடும்பத்தில் ஒருவரையாவது ஆலிமாக ஆக்க வேண்டும்; வீட்டுக்கு வீடு ஓர் ஆலிம் உருவாக வேண்டும் என்பதேயாகும். எனவே பழைய சிந்தனைகள் மறையட்டும்; மார்க்கக் கல்வியின்பால் புதிய சிந்தனையும் புதிய கண்ணோட்டமும் ஏற்படட்டும். பல்வேறு ஆலிம்களை உருவாக்கி இச்சமுதாயத்துக்கு அர்ப்பணிப்போம்; அவர்கள் எதிர்காலச் சமுதாயத்தைச் சீர்திருத்துவதோடு அவர்களும் நிம்மதியாக வாழப் பாதை அமைத்துக் கொடுப்போம் வாருங்கள்! உயர்ந்த உள்ளத்தையும் உயர்ந்த எண்ணத்தையும் நம் அனைவருக்கும் உயர்ந்தோன் அல்லாஹ் வழங்குவானாக!
*****

திங்கள், 9 மே, 2011

இஸ்லாமிய இல்லறம் (II)



உடலுறவில் இஸ்லாமிய ஒழுக்கங்கள்

தம்பதிகளுக்கிடையே நடைபெறுகின்ற உடலுறவை இஸ்லாம் அனுமதிப்பது மட்டுமின்றி ஊக்கப்படுத்தவும் செய்கிறது. இது அல்லாஹ் நமக்களித்த மிகப்பெரும் அருட்கொடையாகும். எவர்கள் சட்டமுறைப்படி தம் ஆசைகளைத் தீர்த்துக் கொள்கின்றார்களோ அவர்களை அல்லாஹ் இழித்துரைப்பதில்லை. மாறாக, அவன் இதை அனுமதிப்பதோடு இதற்காக நன்மைகளையும் வழங்குகின்றான்.

அல்லாஹ் கூறுகின்றான்: அவர்கள் தம் அந்தரங்க உறுப்பையும் (விபசாரத்திலிருந்து) காப்பாற்றிக் கொள்வார்கள். எனினும், அவர்கள் தம் மனைவிகளிடமோ அல்லது தம் வலக்கரம் சொந்தமாக்கிக்கொண்ட (அடிமைப்) பெண்களிடமோ (சேர்வதில்) நிச்சயமாக (அவர்கள் குற்றவாளிகளாக மாட்டார்கள். ஆகவே, இவ்விசயத்தில்) அவர்கள் நிந்திக்கப்பட மாட்டார்கள். இதற்குப் புறம்பானதை எவரேனும் விரும்பினால் அவர்கள் வரம்பு மீறியவர்களாகி (குற்றவாளியுமாகி) விடுவார்கள். (23: 5-7)

மேலும், அல்லாஹ் கூறுகின்றான்: அவர்கள், தங்கள் அந்தரங்க உறுப்புகளையும் பாதுகாத்துக்   கொள்வார்கள். ஆயினும், தங்கள் மனைவிகளிடமும், தங்கள் அடிமைப் பெண்களிடமும் தவிர. நிச்சயமாக அவர்கள் (இவர்களுடன் சம்பந்தப்படுவதைப் பற்றி) நிந்திக்கப்பட மாட்டார்கள். இதனையன்றி (மற்றெதையும்) எவரேனும் விரும்பினால், அத்தகையவர்கள் வரம்பு மீறியவர்களாவார்கள். (70: 29-31)
இருப்பினும், ஒருவன் தன் மனைவியிடம் உடலுறவு கொள்வதற்காக அவளை நெருங்கும் போது அவன் கவனிக்க வேண்டிய நிறைய வழிகாட்டுதல்கள் இருக்கின்றன. இந்தப் பகுதியில் அவற்றுள் மிக முக்கியமானவற்றை நாம் பரிசீலிக்க உள்ளோம்.

அல்லாஹ்வைப் பற்றிய விழிப்புணர்வு

அல்லாஹ் எப்போதும் தன் அருகில் இருந்து கவனித்துக் கொண்டிருக்கின்றான் என்ற உணர்வு ஒவ்வொருவனுக்கும் இருக்க வேண்டும். இந்த உணர்வு இருக்கின்ற ஒருவன் உடலுறவின் இன்பத்தில் இருக்கின்ற போதும்கூட தன் செயல்களைக் கட்டுப்படுத்திக் கொள்வான். மேலும், தன் விருப்பத்தையும் ஆசையையும் சட்ட முறைப்படி மகிழ்ச்சியாக நிறைவேற்றிக்கொள்ள அல்லாஹ் தனக்கு வசதிசெய்து கொடுத்துள்ளான் என்ற நன்றியுணர்வை வளர்த்துக்கொள்ள வேண்டும். இத்தகைய எண்ணத்தோடு ஒருவன் தன் விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்கின்றபோது அது அவனுக்கு நன்மையைப் பெற்றுத் தரக்கூடிய வணக்கமாக ஆகிவிடுகின்றது.

உடலுறவைப் பற்றிச் சரியாக விளங்கிக் கொள்ளுதல்

இறைநம்பிக்கையாளர்கள் தம் உச்சக்கட்ட மகிழ்ச்சியிலும் அல்லாஹ்வை மறக்கமாட்டார்கள். அவர்கள் தம் மனைவியரோடு உடலுறவு கொள்வது இச்சையைத் தீர்த்துக்கொள்ள மட்டுமில்லை; அது பற்பல நல்ல நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதாகும் என்பதை நினைவுகூர்வார்கள்.
எனவே, ஒருவர் தம் மனைவியுடன் உடலுறவு கொள்வது அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிவதாகும்; நபி (ஸல்) அவர்களின் வழிமுறையைப் பின்பற்றுவதாகும். முஸ்லிம்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவதாகும்; மேலும் தம்மையும் தம் மனைவியையும் பாவத்திலிருந்து பாதுகாப்பதாகும் என்ற தூய்மையான (நிய்யத்) எண்ணம் கொள்ளவேண்டும்.

மகிழ்ச்சிக்கு வழங்கப்படும் நன்மைகள்

ஒருவன், பாவத்திலிருந்து தன்னைத் தற்காத்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தோடு தன் மனைவியுடன் உடலுறவு கொண்டால் அவன் அதற்காக நன்மைகளைப் பெறுகிறான்.
அபூதர்ரு (ரளி) அறிவிக்கின்றார்கள்: நபித்தோழர்களுள் சிலர் நபியவர்களிடம் முறையிட்டார்கள். "அல்லாஹ்வின் தூதரே! பணக்காரர்கள் எல்லா நன்மைகளையும் எடுத்துக் கொள்கின்றார்கள். நாங்கள் தொழுவதைப் போல் அவர்களும் தொழுகின்றார்கள்; நாங்கள் நோன்பு வைப்பதைப் போல் அவர்களும் நோன்பு நோற்கின்றார்கள்; மேலும் அவர்கள் தம் பொருட்களிலிருந்து தானம் செய்கின்றார்கள்''. அப்போது நபியவர்கள், நீங்கள் தானம் செய்வதற்கான வழிகளை அல்லாஹ் ஆக்கவில்லையா? நிச்சயமாக ஒவ்வொரு தஸ்பீஹும் (சுப்ஹானல்லாஹ்) தர்மமாகும்; ஒவ்வொரு தக்பீரும் (அல்லாஹு அக்பர்) தர்மமாகும்; ஒவ்வொரு தஹ்லீலும் (லாயிலாஹ இல்லல்லாஹ்) தர்மமாகும்; ஒவ்வொரு தஹ்மீதும் (அல்ஹம்து லில்லாஹ்) தர்மமாகும்; நன்மையை ஏவுவதும் தர்மமாகும்; தீமையைத் தடுப்பதும் தர்மமாகும்; உங்கள் மனைவியோடு உடலுறவு கொள்வதும் தர்மமாகும். (மேற்கண்ட) இவை அனைத்துக்கும் முற்பகல் (ளுஹா) தொழுகை போதுமாகும் என்று பதிலளித்தார்கள். 
       
அல்லாஹ்வின் தூதரே! எங்களுள் ஒருவர் தம் இச்சையைத் தீர்த்துக்கொள்வதற்கும் நன்மை உள்ளதா? என்று நபித்தோழர்கள் கேட்டார்கள். அதற்கு நபியவர்கள், ஒருவன் தன் இச்சையைத் தீர்த்துக்கொள்ளத் தடுக்கப்பட்ட வழியில் சென்றால் அது அவனுக்குத் தீமைதானே? என்று மறுவினாத் தொடுத்தார்கள். அதுபோல்தான் ஒருவன் தன் இச்சையைத் தீர்த்துக்கொள்ள ஆகுமான வழியில் சென்றால் அதில் அவனுக்கு நன்மை உள்ளது.   (நூல்கள்: முஸ்லிம், அஹ்மது) 
  
இதற்கு விளக்கமளித்து அல்அல்பானீ (ரஹ்) கூறுகின்றார்:
சுயூத்தி (ரஹ்) அவர்கள் தமது "இத்காருல் அத்கார்' எனும் நூலில், ஒருவர் தம் மனைவியுடன் உடலுறவு கொள்வது தர்மமாகும். அப்போது அவனுக்கு அது சம்பந்தமாக எந்த எண்ணமும் இல்லாவிட்டாலும் சரியே! ஒவ்வொரு தனித்தனி உடலுறவுக்கும் இவ்வாறு நன்மையுண்டு என்பது என் கருத்தாகும். ஆனால் அவளை முதன் முதலில் திருமணம் செய்த போதாகிலும் அவனுக்கு அந்த எண்ணம் இருந்திருக்க வேண்டும். அல்லாஹ்வே யாவையும் அறிந்தவன் என்று கூறியுள்ளார். (நூல்: ஆதாபுஸ்ஸிஃபாஃப், பக்கம்: 138)

உடலுறவுக்கு முன் பிரார்த்தனை

உடலுறவின் கண்ணியமான நோக்கங்களுள் ஒன்று நல்ல சந்ததிகளை உற்பத்தி செய்வதாகும். எனவே உடலுறவு கொள்ளக்கூடிய தம்பதியர் தம் சந்ததியை ஷைத்தானின் தீங்கி லிருந்து பாதுகாக்குமாறு அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்து கொள்வது அவசியமாகும். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு அப்பாஸ் (ரளி) அறிவிக்கின்றார்கள்: உங்களுள் ஒருவர் தம் மனைவியிடம் (உடலுறவிற்காக) வந்தால் "பிஸ்மில்லாஹி அல்லாஹும்ம ஜன்னிப்னஷ் ஷைத்தான வஜன்னிபிஷ் ஷைத்தான மா ரஸக்த்தனா'' என்று ஓதிக் கொள்ளட்டும். (பொருள்: அல்லாஹ்வின் பெயரால் தொடங்குகின்றேன். இறைவா, எங்களைவிட்டு ஷைத்தானைத் தவிர்ப்பாயாக. நீ எங்களுக்கு வழங்கவுள்ள சந்ததியிலும் ஷைத்தானைத் தவிர்ப்பாயாக.) ஏனென்றால் அதன் மூலம் அவ்விருவருக்கிடையே குழந்தை உண்டானால் அக்குழந்தைக்கு ஷைத்தான் எவ்விதத் தீங்கும் செய்யமாட்டான்.'' (நூல்கள்: புகாரீ, முஸ்லிம்)

உடலுறவுத் தேவையை உடனடியாக நிறைவேற்றிக் கொள்ளுதல்

திருமணத்தின் மிக முக்கியமான நோக்கங்களுள் ஒன்று தம் கற்பைப் பாதுகாத்துக் கொள்வதாகும். எனவே எப்போது ஒருவருக்கு உடலுறவு கொள்வதற்கான உணர்வு ஏற்படுகிறதோ அவர் உடனே தம் மனைவியிடம் வந்து தம் ஆசையை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும். இல்லையென்றால், அவருக்குத் தீய எண்ணங்கள் ஒன்று சேர்ந்துகொண்டு அது படபடப்புக்குக் காரணமாகின்றது; தவறு செய்யத் தூண்டுகிறது.

ஆசையை நிறைவேற்றிக்கொள்ள தன் மனைவியிடம் விரைதல்

பெண்கள் மீது ஆண்களுக்கும் ஆண்கள் மீது பெண்களுக்கும் இயற்கையாகவே ஆசை இருக்கிறது. ஷைத்தான், ஆண்களைக் கவர இதைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கின்றான். அப்பெண்கள் அவர்களை நெருங்கும்போதோ அவர்களைக் கடந்து செல்லும்போதோ அவன் ஆண்களின் ஆசையையும் காம உணர்வையும் தூண்டிவிடுகின்றான்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக உசாமா இப்னு ஸைது (ரளி) அறிவிக்கின்றார்கள்: "எனக்குப் பிறகு பெண்களைவிட மிகப்பெரும் துன்பத்தை ஆண்களுக்கு நான் விட்டுச் செல்லவில்லை. '' (நூல்கள்: புகாரீ, முஸ்லிம்)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக ஜாபிர் (ரளி) அறிவிக்கின்றார்கள்: நிச்சயமாக ஒரு பெண் ஷைத்தானுடைய தோற்றத்திலேயே முன்னோக்கி வருகிறாள்; ஷைத்தானுடைய தோற்றத்திலேயே பின்னோக்கிச் செல்கிறாள். உங்களுள் ஒருவர் ஏதேனும் பெண்ணிடம் தமக்கு மகிழ்ச்சியளிக்கின்ற எதையேனும் கண்டால் அவர் உடனடியாகத் தம் மனைவியிடம் வந்து (உடலுறவுகொண்டு) விடட்டும். ஏனென்றால், அவளிடம் உள்ளதுதான் இவளிடமும் உள்ளது. மேலும், இ(வ்வாறுசெய்வ)து அவருடைய மனதில் உள்ள விருப்பத்தை(ச் சட்டமுறைப்படி)த் தீர்த்துக்கொள்ளச் செய்கிறது. (நூல்கள்: முஸ்லிம், அபூதாவூது)

எனவே, மணமான ஆண், ஷைத்தானின் சூழ்ச்சிக்கெதிராகத் தன்னைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும். அவனுடைய மனைவி ஏதேனும் ஒரு முக்கியமான வேலையில் ஈடுபட்டிருந்தாலும் அவன் அவளை அழைக்கின்றபோது உடனடியாக அவள் தன் கணவனிடம் செல்ல வேண்டும். ஏனென்றால் அவள் செய்து கொண்டிருக்கிற வேலையைவிட கணவனின் தேவையை நிறைவேற்றுவது மிகவும் முக்கியமானதாகும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக தல்க் இப்னு அலீ (ரளி) அறிவிக்கின்றார்கள்: "உங்களுள் ஒருவர் தம் மனைவியிடம் தம் தேவையை நிறைவேற்றிக்கொள்ள நாடினால் அவள் அடுப்பங்கரையில் வேலை செய்து கொண்டிருந்தாலும் அவளிடம் சென்று தம் தேவையை நிறைவேற்றிக் கொள்ளட்டும்.'' (நூல்கள்: திர்மிதீ, அஹ்மது)

மனைவி தன் கணவனின் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும்

தன் கணவனின் விருப்பத்தை நிறைவேற்ற எப்போதும் தயாராக இருப்பது ஒரு மனைவி மீதுள்ள பெருங்கடமையாகும். அவன் அவளிடம் இன்பம் நுகர நாடிவருகின்றபோது அவள் மறுப்பது மிகப்பெரும் பாவமாகும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் இப்னு அபீஅவ்ஃபா (ரளி) அறிவிக்கின்றார்கள்: முஹம்மதுவின் ஆன்மா எவன் கைவசம் இருக்கிறதோ அவன் மீது ஆணையாக! ஒரு பெண் தன் கணவனுக்குரிய எல்லாக் கடமைகளையும் நிறைவேற்றாத வரை அவள் தன் இறைவனுக்குரிய கடமைகளை நிறைவேற்றியவளாக ஆகமாட்டாள். அவள் ஒட்டகத்தின் மீதிருந்தாலும் அவன் அவளை (உடலுறவு எனும் தேவைக்காக) அழைத்தால் அதை நிறைவேற்ற மறுக்கக் கூடாது. (நூல்கள்: அஹ்மது, இப்னுமாஜா)

மனைவி, தன் கணவனின் அழைப்புக்குப் பதில் கொடுக்கத் தயங்கக்கூடாது,. அது அவளுக்கு அசௌகரியமாக இருப்பினும் சரியே! அவள் அவனுடைய அழைப்பை மறுப்பது பெரும்பாவமாகும். மேலும் அவள் மறுப்பதால் வானவர்களின் சாபத்திற்கும் அல்லாஹ்வின் கோபத்திற்கும் ஆளாகின்றாள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரளி) அறிவிக்கின்றார்கள்: ஒருவன் தன் மனைவியைப் படுக்கைக்கு அழைத்து (அதற்கு இணங்கி வராமல்) அவள் மறுத்துவிட்டாள்; எனவே கணவன் அவள் மீது கோபத்துடன் இரவைக் கழித்தான் என்றால், காலை வரை வானவர்கள் அவளைச் சபிக்கின்றார்கள். (அல்லது அவன் அவளைத் திருப்திகொள்கின்ற வரை சபிக்கின்றார்கள்). (நூல்கள்: புகாரீ, முஸ்லிம்)
மேலும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரளி) அறிவிக்கின்றார்கள்:  என்னுடைய ஆன்மா எவன் கைவசம் இருக்கிறதோ அவன் மீது ஆணையாக! ஒருவன் தன் மனைவியைப் படுக்கைக்கு அழைத்து (அதற்கு இணங்கி வராமல்) அவள் மறுத்துவிட்டால், அவ(ளின் கணவ)ன் அவளைத் திருப்திகொள்கின்ற வரை வானிலுள்ளவன் (அல்லாஹ்) அவள் மீது கோபமாகவே இருக்கின்றான். (நூல்: முஸ்லிம்)


ஆங்கிலத்தில் : முஹம்மது முஸ்தபா அல்ஜிபாலி 
தமிழில் : நூ. அப்துல் ஹாதி பாகவி M.A., M.Phil.