செவ்வாய், 21 பிப்ரவரி, 2017

அமைதியைப் பரப்புவோம்!


முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.

எங்கு நோக்கினும் வேகம், பரபரப்பு, அடக்குமுறை, வன்மம், அநியாயம் முதலி யவையே மலிந்து காணப்படுகின்றன. பொறுமை எனும் நற்குணம் பூமிக்குள் புதைந்துபோய்விட்டதோ என எண்ணத் தோன்றுகிறது. மனிதனின் உயர்ந்த குணங்களுள் மிக முக்கியமானது பொறுமை. அதுதான் இன்று காணாமல் போய்விட்டது. யாரிடமும் அதைக் காணமுடியவில்லை. பொறுமை எனும் நற்குணத்தால் மட்டுமே புவியில் அமைதி நிலவும்.

நபி (ஸல்) அவர்களின் தொடக்கக் காலம் வரை, ஒருவருக்கொருவர் அடித்துக்கொள்வதும் உயிரை மாய்த்துக் கொள்வதுமே அரபியர்களின் வழக்கமாக இருந்தது. அதை மாற்றி ஒருவருக்கொருவர் அன்பைப் பரிமாறிக்கொள்ளும் மக்களாக மாற்றிய பெருமை நபிகள் நாயகத்தையே சாரும். ஒருவர் மற்றொருவரை எதிர்கொள்ளும்போது "அஸ்ஸலாமு அலைக்கும்' எனக் கூறுவதும் அதற்குப் பதிலளிக்குமுகமாக எதிராளி "வ அலைக்கும் ஸலாம்' என்று கூறுவதும் இஸ்லாமிய மார்க்கம் கற்றுத் தந்த உன்னதமான அமைதிப் புரட்சி ஆகும். மக்கள் மத்தியில் அமைதி ஏற்பட அது கற்றுக்கொடுத்த தாரக மந்திரமாகும். உலகத்தின் எந்த மூலையில் உள்ள முஸ்லி மாக இருந்தாலும் அவர் எதிர்கொள்கின்ற முஸ்லிமைப் பார்த்தவுடன் கூறும் வாக்கியம் "அஸ்ஸலாமு அலைக்கும்' என்பதே. 

அதாவது முற்காலத்தில் ஒருவர் மற்றொருவரை எதிர்கொள்ளும்போது இவன் நம்மை அடித்துவிடுவானோ, கொன்றுவிடுவானோ என்ற அச்சம் ஒவ்வொருவரின் மனத்திலும் இருந்து வந்தது. அதை மாற்றுமுகமாக, "உன்மீது அல்லாஹ்வின் சாந்தி உண்டாவதாக' என்று கூறவைத்தார்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள். அதாவது "என்னால் உனக்கு எந்தத் தொல்லையும் தீங்கும் இல்லை' என்று ஒருவர் கூற, எதிரே வருபவர், "என்னாலும் உனக்கு எந்தத் தொல்லையும் தீங்கும் இல்லை' என்று கூறுகிறார். இப்படி ஒருவருக்கொருவர் அமைதி ஏற்படுவதற்காகப் பிரார்த்தனை செய்துகொண்டிருக்கும்போது வன்முறை எவ்வாறு தலைதூக்கும். இப்படித்தான் இந்த இஸ்லாமிய மார்க்கம் இவ்வுலகில் அமைதியைப் பரப்பியது; பரப்பிக்கொண்டிருக்கிறது.

இந்த அமைதிதான் இன்றைய அவசரத் தேவை. உலகில் வாழும் மக்கள் பலர் அமைதியைத் தேடி அலைந்துகொண்டிருக்கின்றார்கள். இறுதியில் அவர்கள் தஞ்சமடைவது இஸ்லாமிய மார்க்கத்தில்தான். இதுதான் அமைதியான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறது. இதுதான் நிம்மதியான வாழ்க்கைக்குத் தேவையான நெறிமுறைகளைக் கொண்டுள்ளது. இதைப் பின்பற்றினாலொழிய மனத்திற்கு அமைதி கிட்டாது என்பதை உணர்ந்தோர் இஸ்லாமிய மார்க்கத்தைப் பின்பற்றத் தொடங்கிவிடுகின்றார்கள். இதைக் காணும் அமைதியை விரும்பாதோர் இஸ்லாமிய மார்க்கத்திற்கெதிராகவும் முஸ்லி ம்களுக்கெதிராகவும் அவதூறான செய்தியைப் பரப்பிக்கொண்டிருக்கின்றார்கள். முஸ்லி ம்களின் எண்ணிக்கை மிகுந்துபோய்விட்டால் உலகம் அமைதியாகிவிடும். உலகம் அமைதியடைந்துவிட்டால் நம்முடைய வியாபாரம் நொடித்துப் போய்விடும் என்ற கவலைதான் அவர்கள் இத்தகைய அவதூறான செய்திகளைப் பரப்புவதற்கான காரணமாகும்.

ஒருவருக்கொருவர் சண்டையிட்டால்தான் ஆயுதங்கள் விற்பனையாகும். நாட்டுக்கு நாடு சண்டையிட்டுக்கொண்டால்தான் துப்பாக்கிகள், தோட்டாக்கள், வெடிகுண்டுகள் உள்ளிட்டவை விற்பனையாகும்.  முஸ்லி ம்களால் பல்வேறு வியாபாரம் பாதிப்படையும். ஒரு முஸ்லி ம் வட்டி வாங்க மாட்டான்; விபச்சாரம் செய்யமாட்டான்; மது அருந்தமாட்டான்; போதைப் பொருள்களைப் பயன்படுத்த மாட்டான்; பெண்கள் புர்கா அணிவதால் அழகு சாதனப் பொருள்களை வாங்க மாட்டார்கள். இப்படி எத்தனையோ வியாபாரங்கள் பாதிக்கப்படும். எனவே முஸ்லிம்கள் "தீவிரவாதிகள்' என்ற பொய்யான செய்தியைப் பரப்பினால்தான் மற்றவர்கள் இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்றுக்கொள்ளத் தயங்குவார்கள் எனும் வஞ்சகம்தான் அவர்களை அப்படிச் செய்யத் தூண்டுகிறது.

"அமைதியைப் பரப்புங்கள்'' (திர்மிதீ: 2409) என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அந்த அமைதியை நாம் பரப்பிக்கொண்டே இருக்க வேண்டும். அதுதான் நம்முடைய நிம்மதியான வாழ்க்கைக்கான வழி; அதுவே உலக அமைதிக்கு வழி; அதுவே நாம் ஒருவரை ஒருவர் நேசம் கொள்வதற்கான வழி. இதைப் பின்வரும் நபிமொழி தெரிவிக்கிறது: "ஒன்றை உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா? அதை நீங்கள் செயல்படுத்தினால் ஒருவரை ஒருவர் நேசம் கொள்ளலாம். உங்களிடையே அமைதியை (ஸலாத்தை)ப் பரப்புங்கள்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: முஸ்லிம்: 93)

இஸ்ரேலும் அமெரிக்காவும் அமைதியை விரும்பா நாடுகள். அதனால்தான் இஸ்ரேல் ஃபலஸ்தீனத்தில் அமைதி ஏற்படவிடாமல் நாளுக்கு நாள் வன்முறையில் ஈடுபட்டுக்கொண்டே இருக்கிறது. அமெரிக்காவின் அதிபராகப் புதிதாகப் பதவியேற்றுள்ள டொனால்ட் ட்ரம்ப் ஏழு முஸ்லி ம் நாடுகளைச் சார்ந்தவர்கள் அமெரிக்காவுக்குள் நுழையத் தடைவிதித்துள்ளார். இதுவெல்லாம் அமைதியை விரும்புவோர் செய்யும் செயலா?

அவர்கள் எவ்வளவுதான் வன்மத்தைப் பரப்பினாலும் நாம் உணர்ச்சிவசப்பட்டுவிடாமல் பொறுமை காப்பதே நம்மை நாம் காத்துக்கொள்வதற்கான வழியாகும். முஸ்லிம்களைத் "தீவிரவாதிகள்' என்று கூறி நம் உணர்வுகளைத் தூண்டி, அதையே அவர்களுக்குச் சாதகமாக மாற்றிக்கொள்ளத் திட்டமிட்டுள்ளார்கள். நாம் அவர்களின் சூழ்ச்சித் திட்டத்திற்கு இரையாகிவிடாமல் நம் சமுதாயத்தைக் காத்துக்கொள்ள வேண்டும். எத்தருணத்திலும் பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும். அதைத்தான் திருக்குர்ஆனில் உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: இறைநம்பிக்கை கொண்டோரே, பொறுமை, தொழுகை ஆகியவற்றின் மூலம் (அல்லாஹ்விடம்) உதவிதேடுங்கள். நிச்சயமாக அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கின்றான். (2: 153)

நச்சுப் பாம்பை வெறுப்பதைப் போன்ற ஒருவிதமான வெறுப்பு உலகெங்கும் வாழும் முஸ்லிம்களுக்கெதிராக ஊடகங்கள்மூலம் வலிந்து வளர்க்கப்படுகிறது. அதன் நீட்சி இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை. முஸ்லிம்களுக்கெதிரான அமெரிக்க, யூதர்களின் கை இங்குவரை நீள்வதைக் காணமுடிகிறது. இந்தியாவிலுள்ள இந்து மதவெறி இயக்கங்கள்மூலம் இந்த வெறுப்பு நெருப்பை ஊதி ஊதி மேன்மேலும் வளர்த்துக்கொண்டிருக்கின்றார்கள். அவர்களின் செயல்பாடு நம் இளைஞர்களின் உணர்வுகளைத் தூண்டலாம்; உதிரத்தைக் கொதிக்கச் செய்யலாம். ஆனால் அந்த உணர்வுகளுக்கு ஆட்பட்டுவிடாமல் அமைதி காக்க வேண்டும்; பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும். அதில்தான் நமது ஈருலக வெற்றி அடங்கியிருக்கிறது. ஏனெனில், "நிச்சயமாக அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கின்றான்.'' (2: 153)

இளைஞர்கள் இயக்கத் தலைவர்களின் பேச்சைக் கேட்டு, அதன் உந்துதலுக்கு ஆட்பட்டு ஏதாவது வகையில் எதிர்வினையாற்றத் தொடங்கினால் அதனால் அவர்கள் மிகப் பெரும் இழப்பைச் சந்திக்க நேரிடும். தம் வாழ்க்கையையே தொலைக்க வேண்டியது ஏற்படலாம். கடந்த காலங்களில் நம் இளைஞர்கள் தம் இயக்கத் தலைவர்களின் உணர்ச்சிமிகு பேச்சால் உந்தப்பட்டு எதிர்வினையாற்றியதன் விளைவாக இன்று வரை பல ஆண்டுகளாகச் சிறைச்சாலைக்குள் சிக்குண்டு தவிக்கின்றார்கள்; அவர்கள் தம் பிள்ளைகளையும் மனைவியையும் பெற்றோரையும் பிரிந்து வாடுகின்றார்கள்; வாழ்வாதாரம் வழங்க ஆளில்லாமல் அவர்கள்தம் குடும்பத்தார் அல்லல் படுகின்றார்கள். இதையெல்லாம் இன்றைய இளைஞர்கள் கவனத்தில் கொண்டு, தொலைநோக்குப் பார்வையோடு செயல்பட வேண்டும்.

திருக்குர்ஆனின் பக்கங்களைப் புரட்டும்போதெல்லாம் பொறுமை குறித்த அறிவுரையை உயர்ந்தோன் அல்லாஹ் ஏதோ ஒரு வகையில் சொல்லாமல் இருப்பதில்லை. ஏனென்றால் இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்றுக்கொண்ட ஒரே காரணத்திற்காக முஸ்லிம்கள் பிற சமுதாய மக்களிடமிருந்து தொல்லைகளையும் துன்பங்களையும் எதிர்கொள்வார்கள் என்பதை அறிந்த ஏகன் அல்லாஹ் அவர்களுக்கு அது குறித்து முன்னறிவிப்புச் செய்யுமுகமாகப் பின்வருமாறு கூறுகின்றான்:  (இறைநம்பிக்கை கொண்டோரே!) உங்கள் பொருள்கüலும், உங்கள் ஆத்மாக்கüலும்  (இழைக்கப்படும் துன்பத்தின் மூலம்) நிச்சயமாக நீங்கள் சோதிக்கப்படுவீர்கள். உங்களுக்கு முன்னர் வேதம் கொடுக்கப்பட்டவர்களாலும், இணை வைத்து வணங்குபவர்களாலும், பல வசைமொழிகளை நிச்சயமாக நீங்கள் செவியுறுவீர்கள். (இத்தகைய சிரமங்களை) நீங்கள் பொறுமையுடன் சகித்துக் கொண்டிருந்து அல்லாஹ்வை அஞ்சியவர்களாக வாழ்ந்து வந்தால் (நீங்கள் வெற்றியடைவீர்கள்.) நிச்சயமாக இதுதான் வீரச்செயலாகும். (3: 186)

உயிரிழப்பு, பொருளிழப்பு என இரு வகை இழப்புகளையும் நாம் சந்திக்க நேரிடலாம். அது இறைவனின் சோதனைதான். பொறுமையோடு அதைத் தாங்கிக்கொள்கின்றபோது மறுமையில் சொர்க்க வாழ்க்கையைப் பெறலாம். அதுதான் பொறுமையின் மறுமைப் பரிசு. பொறுமையாளர்களுக்குக் கணக்கற்ற கூலி  உண்டு என்பதை அல்லாஹ் திருக்குர்ஆனில் பதிவுசெய்கின்றான்: நிச்சயமாகப் பொறுமையாளர்களுக்கு அவர்களுடைய கூலி  கணக்கின்றியே கொடுக்கப்படும். (39: 10) 

பொறுமை மூவகை உண்டு. 1. இஸ்லாமிய மார்க்கத்திற்காகப் பல்வேறு தொல்லைகளையும் துன்பங்களையும் சகித்துக்கொண்டு பொறுமை காத்தல், 2. அல்லாஹ்வின் கட்டளைகளை நிறைவேற்றுவதில் ஏற்படுகின்ற சிரமங்களைச் சகித்துக்கொண்டு பொறுமை காத்தல், 3. அன்றாட வாழ்க்கையில் மக்களோடு சேர்ந்து வாழும்போது அவர்களால் ஏற்படும் இன்னல்களையும் துன்பங்களையும் சகித்துக்கொண்டு பொறுமை காத்தல். சிலருக்கு மேற்கண்ட மூவகைச் சோதனைகளும் ஏற்படலாம். சிலருக்கு ஒன்றோ, இரண்டோ ஏற்படலாம். ஆக அனைத்திற்கும் உயர்ந்தோன் அல்லாஹ்விடம் கணக்கற்ற நற்கூலி  உண்டு என்பது மட்டும் உறுதி.

குஜராத்தில் இந்து மதத் தீவிரவாதிகள் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட முஸ்லி ம்களைப் படுகொலை செய்தார்கள். உ.பி. மாநிலம் முஸஃப்பர் நகரில் நூற்றுக்கணக்கானோரைக் கொன்று குவித்தார்கள். இன்னும் பல்வேறு நாடு, நகரங்களிலும் முஸ்லிம்கள் கொல்லப்படுகின்றார்கள். அவர்கள் அனைவரும் உயிர்த்தியாகிகள் (ஷஹீதுகள்) ஆவார்கள். அல்லாஹ்விடம் உயர்மதிப்பைப் பெற்றவர்கள். இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்றுக்கொண்டதன் காரணத்தால் தம் இன்னுயிரை ஈந்துள்ளார்கள். எனவே இதையெல்லாம் பார்த்து நாம் பொறுமையிழந்துவிடக் கூடாது; அமைதியிழந்துவிடக் கூடாது; எதிர்வினையாற்றத் துடிக்கக் கூடாது; உணர்ச்சிகளுக்கு அடிமைப்பட்டுவிடக் கூடாது.

உணர்ச்சிகளுக்கு அடிமைப்படுத்தி நாம் செல்ல வேண்டிய, கவனம் செலுத்த வேண்டிய திசையைவிட்டு நம்மைத் திருப்புவதே அவர்களின் தலையாய நோக்கம். எனவே நாம் செல்ல வேண்டிய, அடைய வேண்டிய பாதையை நோக்கிப் பயணம் செய்ய முனைப்புடன் செயல்பட வேண்டும். கல்வித்துறை, மருத்துவத் துறை இரண்டிலும் நாம் கூடுதல் கவனம் செலுத்தி, தீரத்துடன் செயலாற்ற வேண்டும். நம் இளைய தலைமுறைக்கு ஒழுக்கம் சார்ந்த கல்வியைப் புகட்ட வேண்டும்; முறையான அரசியல் பாதையை வகுத்துக்கொடுத்து வழிகாட்ட வேண்டும். அதுவே எதிர்காலச் சமுதாய மக்களின் நல்வாழ்விற்கு நாம் நடுகின்ற அடிக்கல்லாகும்; அமைதிப் புரட்சியுமாகும்.     
=============