ஞாயிறு, 5 ஜூலை, 2020

புதிதாய் எழுதுவோம்!-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.

நாம் ஒருவரைப் பார்த்ததும் விரும்புகிறோம். மற்றொருவரைப் பார்த்ததும் வெறுக்கிறோம். இருவரும் நம் பார்வையில் அவ்வப்போது வந்துசெல்பவர்கள். ஒருவர் நம்முடன் நெருங்கிப் பழகுகிறார்;  அன்பாக நலம் விசாரிக்கிறார். அவரைப் பற்றிய நன்மதிப்பும் அன்பும் நம் மனதில் பதிந்துவிடுகின்றன. மற்றொருவர் நமக்கு ஏதும் நன்மை செய்யவில்லை; அன்பாகப் பழகவில்லை; அத்தோடு ஏதோ ஒரு தடவை நம் மனதுக்குப் பிடிக்காத விதத்தில் நடந்துகொண்டார். அவ்வளவுதான். ஆகவே அவரைப் பற்றிய தவறான பிம்பம் நம் மனதில் பதிந்துவிட்டது. எனவே அவரைப் பார்க்கும்போதெல்லாம் தவறான அப்பிம்பமே நம் மனதில் தோன்றுகிறது. அதுவே அவரை வெறுக்கத் தூண்டுகிறது.

மனைவியாக இருக்கலாம்; அண்டைவீட்டாராக இருக்கலாம்; உறவினராக இருக்கலாம்; உடன் பணியாற்றுபவராக இருக்கலாம். அவர்கள் முதல் தடவை எப்படி நம்மிடம் நடந்துகொள்கின்றார்களோ அதை வைத்து, இவர் இப்படித்தான் என்று நம் மனதில் பதிவு செய்துகொள்கிறோம். அதனால் நாம் அவர்களைப் பார்க்கும்போதெல்லாம் நம் மனதில் பதிவு செய்ததையே நம் மனம் முன்னிலைப்படுத்துகிறது. எனவே அவர்களுள் சிலரைப் பார்க்கும்போதே நம் மனம் மகிழ்கிறது. அவர்களுள் வேறு சிலரைப் பார்க்கும்போதே நம் மனம் வெறுக்கிறது.

ஏதோ ஒரு தடவை நம் முதலாளி நம்மிடம் கடுமையாக நடந்துகொண்டார் என்பதற்காக அவரைப் பற்றி நம் மனதில், அவர் கடுகடுப்பானவர்; கோபக்காரர் என்று பதிவு செய்துகொள்கிறோம்.  பிறகு அவரைப் பார்க்கும்போதெல்லாம் அவரைப் பற்றி நம் மனதில் பதிவுசெய்தவையே தோன்றித் தோன்றி மறைகின்றன. எனவே அவரைப் பார்க்கும்போதெல்லாம் நமக்குப் பிடிப்பதில்லை.
நம்முடைய மனக்குழப்பத்திற்கும் நிம்மதியின்மைக்கும் காரணம் இதுதான். ஒரு விஷயத்தைப் பற்றி, இது தீராத பிரச்சனை என்றோ தீர்க்க முடியாத பிரச்சனை என்றோ நம் மனதில் பதிவு செய்துகொள்கிறோம். எனவே அதைப் பற்றிப் பேசினாலே நமக்குப் பிடிப்பதில்லை. தீராப் பிரச்சனை என்று நம் மனதில் பதிவு செய்துவிட்டதால், அப்பிரச்சனையைத் தீர்ப்பதற்கான வழியை நாம் ஆராய்வதே இல்லை; அது குறித்துச் சிந்திப்பதே இல்லை. எனவே அது தீராப் பிரச்சனையாகவே நீடிக்கிறது.

அண்டை வீட்டார் ஏதோ ஒரு தடவை நம்மை எதிர்த்துப் பேசிவிட்டார்; அல்லது நமக்கு எதிராகச் செயல்பட்டுவிட்டார் என்பதற்காக அவரைப் பற்றிய நம் கணிப்பு, அவர் எப்போதும் சண்டை போடுபவர் என்பதுதான். அதன்பின் அவரிடம் ஒரு தடவையேனும் அன்பாகப் பேசிப் பார்த்திருக்கிறோமா? அன்பாக நலம் விசாரித்திருக்கிறோமா? அப்படிச் செய்திருந்தால் அவர் நல்லவரா,  கெட்டவரா என்பது நமக்குப் புரிந்திருக்கும்.

நம் சகோதரனோ, சகோதரியோ, உறவினரோ ஏதோ ஒரு தடவை நம்மை எதிர்த்துப் பேசிவிட்டார் என்பதற்காக மாதக் கணக்காக, ஆண்டுக்கணக்காக அவரிடம் பேசாமல் இருப்பது சரியா? அவர் அப்படித்தான் என்று பதிந்துவிட்ட எதிர்மறையான பிம்பத்தை அழிக்க நாம் என்றாவது ஒரு நாள் முயன்றுள்ளோமா? நம்மோடு ஒன்றாக வாழ்ந்தவராயிற்றே. சொத்துப் பங்கீட்டின்போதோ திருமண நிகழ்வின் போதோ ஏற்பட்ட கசப்பான அனுபவம் இன்னும் நம் மனதில் தோன்றித் தோன்றி மறைகிறதே. அதை அழிக்க முயன்றுள்ளோமா?

நாம் ஒருவரைப் பற்றி எப்போதோ நம் மனதில் பதிந்த நேர்மறையான எண்ணத்தை மாற்றி எழுதப் பழகிக்கொண்டால் எல்லாப் பிரச்சனைகளுக்கும் தீர்வு காணலாம். எல்லோரும் நம் அன்பிற்குரியோராக மாறிவிடுவர். ஆம். நாம் ஒருவரைப் பற்றி நம் மனதில் எழுதிய கடந்த காலப் பிம்பத்தை அழித்துவிட்டு, தற்போது அவரைப் பற்றிப் புதிதாக எழுத வேண்டும். நம் மனதில் பதிய வைக்க வேண்டும். அவரைப் பற்றிய நற்குணங்களையும் நல்ல எண்ணங்களையும் நம் மனதில் புதிதாகப் பதிவு செய்துகொள்ள வேண்டும். அப்போது அவரைப் பற்றிய எதிர்மறையான கருத்து அகற்றப்பட்டு, நேர்மறையான கருத்து, அவரைப் பார்க்கும்போது நமக்குத் தோன்றும்.

எழுதுபலகையில் கண்டபடி கிறுக்கப்பட்டவற்றையெல்லாம் அழித்துத் தூய்மைப்படுத்தினால்தான் அதில் அழகிய ஓவியத்தைத் தீட்ட முடியும்; அழகிய எழுத்துகளால் அதை நிறைக்க முடியும். கிறுக்கப்பட்டவற்றை அழிக்காமலேயே அதில் மேலும் மேலும் எழுதினால் எதுவும் தெரியாது. 

அதுபோலவே நம் மனது எனும் எழுதுபலகையில் பிறரைப் பற்றித் தப்பும் தவறுமாக நிறைய எழுதி எழுதிப் பதிவு செய்து வைத்துள்ளோம். அவற்றை அழித்துச் சுத்தப்படுத்தினால்தான் நாம் நம் மனதில் புதிது புதிதாக எழுத முடியும். நம் அண்டைவீட்டார், உறவினர், மனைவி, சகோதரர், சகோதரி என யாரைப் பற்றி நாம் நம் மனப் பலகையில் தவறாகவும் எதிர்மறையாகவும் எழுதி வைத்துள்ளோமோ அவ்வளவையும் அழித்துவிட்டு, அவர்களைப் பற்றிச் சரியாகவும் நேர்மறையாகவும் எழுதி வைத்தால்  நாம் அவர்களைச் சந்திக்க நேரிடுகின்றபோது நம்மையறியாமலேயே அவர்கள்மீது அன்பு ஏற்படும். அதனால் அவர்களுக்கு நன்மையோ இல்லையோ நமக்கு நன்மை; நம் மனதுக்கு மகிழ்ச்சி.

இவ்வுலகைப் படைத்த இறைவன், தன் அடியார்கள் செய்கின்ற பாவங்களை மன்னித்துக்கொண்டே இருக்கின்றான். மனிதன் பாவம் செய்துவிட்டு, ஒரு கட்டத்தில் அதை உணர்ந்து பாவமன்னிப்புக் கேட்கின்றான். அதை உடனடியாக இறைவன் ஏற்றுக்கொண்டு அவனுக்கு மன்னிப்பு வழங்குகின்றான். மீண்டும் ஷைத்தானின் தூண்டலால் பாவம் செய்துவிடுகின்றான். பின்னர் அதை உணர்ந்து இறைவனிடம் அழுது மன்னிப்பு கேட்கின்றான். அவனுடைய பாவமன்னிப்பை ஏற்றுக்கொண்டு அவனுக்கு மீண்டும் மன்னிப்பு வழங்குகின்றான். இதுதான் இறைவனின் அன்பிற்கும் கருணைக்குமான அடையாளமாகத் திகழ்கின்றது. அடியான் எத்தனை தடவை பாவம் செய்தாலும், அவன் மன்னிப்பு கேட்டவுடனேயே அவனை மன்னித்துவிடுகின்றான்.

ஆனால் நாம், என்றோ ஒரு நாள் நம் சகோதரன் நம்மை வன்மையாகப் பேசிவிட்டான் என்பதற்காக அவனுடன் ஆண்டுக்கணக்கில் பேசுவதில்லை; அவனுடைய வீட்டிற்குச் செல்வதில்லை. அதனைத் தொடர்ந்து அவனுடைய பிள்ளைகளிடமும் பேசுவதில்லை. காரணம், அவன் அன்று பேசிய பேச்சை நம் மனதிலிருந்து நம்மால் அழிக்க முடியவில்லை. அதைச் சுமந்துகொண்டே ஒவ்வொரு நாளும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அதைத் திருப்பித் திருப்பி நம் நினைவில் கொண்டு வருகிறோம். இதனால் நமக்கு மனப்பாரம் கூடுகின்றது; நெஞ்சு படபடக்கிறது.  அவனை எங்கேனும் ஓரிடத்தில் அல்லது ஒரு திருமணத்தில் சந்திக்க நேர்ந்தாலும் முகத்தைத் திருப்பிக்கொண்டு சென்று விடுகிறோம். 

இதனால் நம் மகிழ்ச்சி பாழாகிறதல்லவா? நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்ன பொன்மொழியை இவ்விடத்தில் நினைவுகூர்வது இன்றியமையாதது: "ஒரு முஸ்லிம் தம் சகோதரரை (அவருடன் கோபித்துக்கொண்டு) மூன்று நாள்களுக்குமேல் வெறுத்து ஒதுக்கக்கூடாது. அவ்விருவரும் சந்தித்துக்கொள்கிறார்கள். இவர் அவரைப் புறக்கணிக்கிறார்; அவர் இவரைப் புறக்கணிக்கிறார். (இவ்வாறிருக்கும்போது) அவ்விருவருள் யார் சலாம் சொல்லி(ப் பேச்சை)த் தொடங்குகின்றாரோ அவரே சிறந்தவர்.'' (நூல்: அபூதாவூத்: 4265)

இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு எத்தனையோ பேர் எத்தனையோ தருணங்களில் தொல்லை  கொடுத்திருக்கின்றார்கள்
துன்புறுத்தியிருக்கின்றார்கள்; கடுஞ்சொற்களால் வதைத்திருக்கின்றார்கள்.  ஆனால் அவற்றையெல்லாம் அவர்கள் தம் மனதுக்குள் பதிய வைத்துக்கொள்ளவில்லை. ஒருவரைப் பற்றிய நன்மதிப்பை மட்டுமே பதிய வைத்துக்கொள்வார்கள். அதனால்தான் அவர்களால் எப்போதும் மகிழ்ச்சியாக வாழ முடிந்தது. யாரைப் பார்த்தாலும் புன்முறுவலோடும் மலர்ந்த முகத்தோடும் சந்திக்க முடிந்தது. எனவே மன்னிப்பதும் நம் மனதிலுள்ள பழைய பதிவுகளை அழித்துவிட்டு, ஒருவரைப் பற்றிப் புதிய புதிய நன்மதிப்புகளைப் பதிய வைத்துக்கொள்வதும்தான் நம் மகிழ்ச்சியான வாழ்விற்கு வழிவகுக்கும். ஆகவே நம் மனதிலுள்ள பழையனவற்றை அழித்துவிட்டு, புதிது புதிதாக எழுதுவோம்; புத்துணர்வு பெறுவோம்; மகிழ்ச்சியாய் வாழ்வோம்.
========================================