செவ்வாய், 20 டிசம்பர், 2011

சமய நல்லிணக்க கிறிஸ்துமஸ் பெருவிழா
சமய நல்லிணக்க கிறிஸ்துமஸ் பெருவிழா 
பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக நடைபெற்ற இந்த விழாவில் நான் கலந்துகொண்டு இஸ்லாமியக் கருத்துகளைக் கூறக்கூடிய ஒரு வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. 

இது ஆழ்வார்பேட்டையில் உள்ள மாநகராட்சி சமூகநலக் கூடத்தில் டிசம்பர் 17 ஆம் தேதி, காலை 11 மணிக்கு நடைபெற்றது. 
மாலை மலர் வெளியிட்ட  புகைப்படம்.   


பாட்டாளி மக்கள் கட்சித் தலைவருக்கு அருகில் நான். (மாலைமலர்)

அழைப்பிதழில் என் பெயர் இடம்பெற்றுள்ளது. 

வெள்ளி, 16 டிசம்பர், 2011

இனிய திசைகள் (டிசம்பர் மாத இதழ் )

இனிய திசைகள் (டிசம்பர் இதழ் 15-14.01.12)

படிக்க இங்கே சொடுக்குக:

திரைப்படங்களும் முஸ்லிம்களும்

‘முஸ்லிம்’ என்ற வார்த்தையைக் கேட்டாலே ஓர் ஒவ்வாமை நிலையை உருவாக்கப் பல்வேறு கோணங்களில் தீய சக்திகள் தொடர்ந்து முயற்சி செய்துகொண்டிருக்கின்றன. “அவன் கெட்டவன்”, “நாட்டுக்கு விரோதி”, “தேசத் துரோகி” என்ற மனப்பான்மையை மக்கள் மனங்களில் பதிய வைக்க அவை போட்டிபோடுகின்றன.

 மக்களை வெகுவாகச் சென்றடையக்கூடியதும் அவர்களை எளிதில் கவரக்கூடியதும் திரைப்படம். அதைக் கேளிக்கையாகப் பார்த்து, விளையாட்டாக விட்டுவிடக்கூடிய நிலையில் உருவாகி வந்த திரைப்படங்கள் இன்று முஸ்லிம்களைக் குறிவைத்துத் தாக்குவதற்காகவும் அவர்கள் கெட்டவர்கள், தீவிரவாதிகள் என்ற பொய்யான கருத்தாக்கத்தை ஏற்படுத்தவுமே தயாரிக்கப்படுகின்றன.

 தமிழக மக்களைப் பொறுத்தவரை, எதன்மூலமும் சாதிக்க முடியாததைத் திரைப்படத்தின் வாயிலாகச் சாதித்துவிடலாம். இந்தத் தமிழகத்தை இதுவரை ஆண்டவர்கள், மக்கள் சேவை செய்வதைப் போன்ற திரைப்படக் காட்சிகளால் மக்களைக் கவர்ந்ததாலேயே ஆட்சிக்கு வந்தார்கள். அத்தகைய மாபெரும் மாற்றத்தைத் திரைப்படங்கள் செய்துவருகின்றன.

 ஆகவேதான் முஸ்லிம்களுக்கு எதிரான தீயசக்திகள் முஸ்லிம்களைக் கெட்டவர்களாகக் காட்டத் திரைப்படத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்திவருகின்றார்கள். முஸ்லிம்கள் திரைப்படத்துறையைக் கையிலெடுக்கமாட்டார்கள் என்பதை நன்றாகத் தெரிந்துகொண்டுதான் அவர்கள் மிகத் துணிவோடு இவ்வழியைக் கையாள்கிறார்கள்.

 ரோஜா எனும் திரைப்படம் முதல் பம்பாய் எனும் திரைப்படம் வரை எடுத்தவர்கள், தொடர்ந்து அவ்வப்போது முஸ்லிம் பெயர்கள் தாங்கிய கதாபாத்திரங்களைத் தேசத்துரோகிகளாகக் காட்டிக்கொண்டே இருக்கின்றார்கள். குண்டு வைப்பவர்களும், தேசத்தைக் காட்டிக்கொடுப்பவர்களும் முஸ்லிம் கதாபாத்திரங்கள். அவர்களைக் காப்பாற்றப் போராடுபவர்களும், அதற்காக முயற்சிசெய்பவர்களும் இந்துக் கதாபாத்திரங்கள். இப்படிப்பட்ட திரைப்படங்கள் அன்று முதல் இன்று வரை தொடர்ந்துகொண்டேதான் இருக்கின்றன. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க யாரும் இதுவரை முன்வரவில்லை. அதற்கான வழியையும் இதுவரை நம்முள் யாரும் யோசிக்கவும் இல்லை.

 அண்மையில் வெளிவந்துள்ள இரண்டு திரைப்படங்கள் அத்தகைய திரைப்படங்களே. வானம் எனும் திரைப்படம் ஐந்து கதைக்கருவைக் கொண்டுள்ளது. அதில் ஒன்று இளவயதில் வீட்டைவிட்டுச் சென்றவன் தீவிரவாதக் கும்பலுடன் சேர்ந்து சமூக விரோதியாக மாறுவதாகச் கதை அமைந்துள்ளது.

 விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின்போது முஸ்லிமை (அண்ணன்) வீண் வம்புக்கிழுத்து இந்துக்கள் அடிக்கின்றபோது, அதைத் தடுக்கத் தம்பி ஓடி வருகிறான். இருவரையும் அவர்கள் கண்டபடி தாக்குகின்றபோது, ஒரு காவலர் வந்து அதைத் தடுத்து அனுப்பி வைப்பதாகக் காட்சி அமைந்துள்ளது. அதில் மனமுடைந்த தம்பி வீட்டைவிட்டே சென்றுவிடுகிறான். அவனைத் தேடித்தான் அண்ணன் சென்னைக்குச் செல்கிறான்.

 அங்கு அவன் சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்படுகிறான். அங்கு ஏற்கெனவே கைதுசெய்யப்பட்டு இருக்கின்ற முஸ்லிம் கதாபாத்திரங்கள் தீவிரவாதிகளாகக் காட்டப்படுகின்றனர். அவர்களுள் ஒருவன், “அழுதுகொண்டே இருக்கக்கூடாது. அழ வைக்கணும். மற்ற இடங்களில் குண்டு வைத்தால் மருத்துவமனைகளில் வந்து பிழைத்துக்கொள்வார்கள். மருத்துவமனையிலேயே குண்டு வைத்தால் யாரும் பிழைக்க முடியாது” என்று கூறுகிறான். ஒரு முஸ்லிம் கதாபாத்திரம் சொல்வதாக அமைந்துள்ள இந்தக் காட்சி முற்றிலும் அப்பட்டமானது. எந்த முஸ்லிமுடைய சிந்தனையிலும் தோன்றாதது. இப்படிக் குரூரமாகச் சிந்தித்து, அதை முஸ்லிம் கதாபாத்திரம் பேசுவதாகக் கதை அமைத்திருப்பது கடும் கண்டனத்துக்குரியது.

 இறுதியில், காணாமல் போன தம்பியைத் தேடிச் சென்ற முஸ்லிம் கதாபாத்திரம் குர்ஆனைக் கையில் பிடித்துக்கொண்டு, துப்பாக்கியால் சுட்டுக்கொண்டிருக்கின்ற தீவிரவாதிகளைப் பார்த்து, “அல்முஸ்லிமு மன் சலிமல் முஸ்லிமூன மின் லிசானிஹி வயதிஹி” (தம் நாவாலும் கையாலும் பிற முஸ்லிம்கள் பாதுகாப்புப்பெற்றவர்களாக இருக்கக் காரணமானவரே உண்மையான முஸ்லிம்) என்ற நபிமொழியையும், “லைசஷ் ஷதீதுல்லதீ யக்த்துலு...” (போர்க்களத்தில் எதிரிகளை வெட்டுபவன் வீரன் அல்லன். மாறாக, தம் கோபத்தைக் கட்டுப்படுத்துபவனே வீரன்) என்ற நபிமொழியையும் உரத்து உச்சரிக்கிறது.

 முஸ்லிம் சமுதாயம் படித்துவருகின்ற நபி (ஸல்) அவர்களின் அறிவுரைகளை அவர்களுக்கே எடுத்துக்காட்டுகின்றார்களா? அல்லது அதையெல்லாம் அவர்கள் மறந்துவிட்டார்கள் என்று எண்ணிக்கொண்டு ஞாபகப்படுத்த முனைகின்றார்களா?ஆக, இதில் “முஸ்லிம்கள் தீவிரவாதிகள்” என்று அப்பட்டமாகக் காட்டத் தவறவில்லை.

 இரண்டாவது திரைப்படம் வேலாயுதம். பேரைக் கேட்டாலே அதில் எந்த அளவு இந்துத்துவம் உள்ளது என்பதை நாம் விளங்கிக்கொள்ளலாம். இந்தத் திரைப்படத்தின் தொடக்கமே பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லையில்தான். அங்கே ஒரு முஸ்லிம் பெரியவர், உர்தூ மொழியில் பேச, அதை மற்றொருவர் தமிழாக்கம் செய்கிறார். “இந்தியாவின் அமைதியைக் கெடுக்க வேண்டும். அதற்குச் சென்னையில் ஆங்காங்கே குண்டுகள் வெடிக்க வேண்டும்.”

 அந்தத் தீவிரவாதக் குழுவுக்குத் தமிழக உள்துறை அமைச்சர் விலைபோகிறார். இப்படித் தொடங்குகின்ற இந்தத் திரைப்படத்தில், அவ்வப்போது குண்டுகள் வெடிக்கின்றன. வேலாயுதம் எனும் பெயரில் கதாநாயகன் அதைத் தடுக்கிறார். அவர் எதார்த்தமாகச் செய்வது மக்களுக்கு நன்மையாக ஆகிவிடுகிறது. எனவே மக்கள் மத்தியில் “வேலாயுதம் காப்பாற்றுவார்” எனும் நம்பிக்கை வளர்ந்துவருகிறது. இறுதியில் அந்த நம்பிக்கையைத் தகர்த்தெறிய பாகிஸ்தான்காரன் ஜிஹாத் என்று சொல்லிக்கொண்டு வருகிறான்.

 வேலாயுதத்தை மக்களுக்கு அறிமுகப்படுத்தப்போவதாக உள்துறை அமைச்சர் கூற, அதைக் கேட்டு ஆவலோடு மக்கள் திரண்டு வருகின்றனர். மக்கள் நிறைந்துள்ள அத்திடலைச் சுற்றி குண்டுகளை வைத்துத் தகர்க்க எதிரி திட்டமிடுகிறான். “நான்தான் வேலாயுதம்” என்று அவன் தன்னை அறிமுகப்படுத்தும்போது அவனது பொய்முகம் கிழிகிறது. அப்போது அவன், “இந்தத் திடலைச் சுற்றிக் குண்டு வைத்துள்ளோம். யாரும் இங்கிருந்து தப்பிச் செல்ல முடியாது” என்று அறைகூவல் விடுக்கும்போது, உண்மையான வேலாயுதம் அதை முறியடித்து, மக்களைக் காப்பாற்றி, சில வசனங்களைப் பேசுகிறார். ஒவ்வொருவரும் வேலாயுதமாக மாறவேண்டும் என்று துணிவை வரவழைக்கிறார்.

 இத்திரைப்படம் முழுக்க முழுக்க முஸ்லிம்களுக்கு எதிரானதாகும். இப்படத்தில் பாகிஸ்தான் முஸ்லிம்களைக் காட்டினாலும், அது முஸ்லிம்கள் என்ற பொதுவான பார்வையைத்தான் குறிக்குமே தவிர பிரித்துப் பார்க்க முடியாது. இத்தகைய இத்திரைப்படத்துக்கு நம் சமுதாயத்தில் யாரும் எதிர்ப்போ, கண்டனமோ தெரிவிக்கவில்லை. இதிலிருந்தே “முஸ்லிம்கள் சாந்தமானவர்கள்” என்பதைத் தீயசக்திகள் உணர்ந்துகொள்ள வேண்டும்.

 “இத்திரைப்படத்தில் வருகின்ற கதை, காட்சிகள், வசனங்கள் யாவும் கற்பனையே. இவை யாரையும், எதையும் குறிப்பிடுவன அல்ல” என்று திரைப்படம் தொடங்குமுன்னரே குறிப்பிட வேண்டும். இது திரைப்படத்தின் விதிகளுள் ஒன்றாகும். மேற்கூறப்பட்ட இரண்டு திரைப்படங்களிலும் அந்த வாசகம் இடம்பெறவே இல்லை.

 ஊடகங்கள் மூலம் முஸ்லிம்களைக் கெட்டவர்களாகவும் சமூக விரோதிகளாகவும் தேசத்துரோகிகளாகவும் கற்பனை செய்து காட்டுவது நீண்டகாலமாகத் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. இதனால் பல்வேறு கோணங்களில் முஸ்லிம்கள் சிரமத்திற்கும் துன்பத்திற்கும் உள்ளாக்கப்படுகிறார்கள். முஸ்லிம்கள் என்றாலே தீவிரவாதிகள் என்ற போக்கு காணப்படுகிறது. இதனால் வீடு வாடகைக்குப் பெறுவதுகூட மிகச்சிரமமாக உள்ளது.

 இதைக் களைய நாம் செய்ய வேண்டியதென்ன? நம்முடைய எதிர்ப்பைக் காட்டுவதோ, அதேபோல் திரைப்படம் எடுப்பதோ இல்லை. மாறாக, கதாசிரியர்களையும் தயாரிப்பாளர்களையும் நம்முள் ஒரு குழு சந்திக்க வேண்டும். அதுவே இஸ்லாமிய அழைப்புப் பணிக்குழு. அக்குழு நேரடியாக அவர்களைச் சந்தித்து, இஸ்லாம் என்ன சொல்கிறது; அது எதை நோக்கி அழைக்கிறது; திருக்குர்ஆனில் என்ன உள்ளது என்பதைத் தெளிவாக எடுத்துரைக்க வேண்டும். இதுவே நாம் செய்ய வேண்டிய மிக முக்கியமான பணி. திருக்குறளின் கூற்றுகள் பதிந்துள்ள அளவுக்குத் திருக்குர்ஆனின் கூற்றுகள் மனித நெஞ்சங்களில் பதியவில்லையே ஏன்? அதைப் புனிதமாகக் கருதி, அது முஸ்லிம்களுக்கு மட்டுமே சொந்தம் என்று ஒதுக்கி வைத்ததால்தான் நம்முள் பலருக்கு அதன் அர்த்தம்கூடத் தெரியவில்லை. நமக்கே அதைப் பற்றி முழுமையாகத் தெரியாதபோது, பிறருக்கு எப்படித் தெரியும்?

 எனவே திருக்குர்ஆனின் கூற்றுகளை மற்றவர்களுக்கு எடுத்துரைப்போம்! அதன் கருத்துகளைப் பல்வேறு கோணங்களில் பரப்புரை செய்வோம்! திண்ணமாக, காலப்போக்கில் ‘முஸ்லிம்கள் சாந்தமானவர்கள்; அவர்கள் நம்முடைய நண்பர்கள்’ எனும் உண்மை உலகுக்குப் புரியும். அந்த நிலை இன்ஷா அல்லாஹ் கூடியவிரைவில் வரும். அதற்காகப் பாடுபட நாம் யாவரும் நம்மால் இயன்ற அளவு முனைவோம்!
இஸ்லாமிய இல்லறம் (நூல் விமர்சனம்)

  இஸ்லாமிய இல்லறம் (நூல் விமர்சனம்)

புதன், 16 நவம்பர், 2011

இனியதிசைகள் மாதஇதழ் (நவம்பர் 2011)

இனியதிசைகள் மாதஇதழ் (நவம்பர் 2011)

படிக்க இங்கே சொடுக்குக 

இனியதிசைகள் மாதஇதழ் (நவம்பர் 2011) 

வெள்ளி, 28 அக்டோபர், 2011

பீ.எஸ். பீ.ஜைனுல் ஆபிதீன் பாகவி - ஜும்ஆ உரை

இன்றைக்கு (28/10/2011) என்னுடைய பேராசிரியர் மௌலவி  பீ.எஸ். பீ.ஜைனுல் ஆபிதீன் பாகவி அவர்கள் நுங்கம்பாக்கம் ஜும்ஆ மஸ்ஜிதில் ஆற்றிய உரையின் சுருக்கம்:

மனிதர்கள் தத்தம் அறிவுக்கேற்பச் செயல்படுவது மார்க்கம் இல்லை. அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் எதைக் கட்டளையிட்டிருக்கிறார்களோ அதை அப்படியே ஏற்றுச் செயல்படுவதே மார்க்கம் ஆகும். 

ஒருவர் தொழுகாமல் பல இலட்சம் தர்மம் செய்தாலும் கடமையான இரண்டு ரக்அத்தின் நன்மையை அதில் பெற்றுக்கொள்ளவே முடியாது. 

ஒருவர் கடமையான நோன்பு நோற்காமல், பிறகு ஆயிரம் நாள் நோன்பு நோற்றாலும் அதற்கு ஈடாகாது. 

அதுபோல் குர்பானி நாளில் குர்பானி கொடுக்காமல் அதற்குப் பகரமாக பல்லாயிரம் ரூபாயை ஏழைகளுக்குத் தானமாக வழங்கினாலும் அந்தத் தியாகத்தின் நன்மையை அடைய முடியாது. 

எனவே சில அறிவிலிகள் கூறுவதைப்போல் நீங்கள் செயல்படக்கூடாது. பக்ரீத் பெருநாளில் ஒரேநேரத்தில் பல்லாயிரம் ஆடு, மாடுகள் அறுக்கப் படுகின்றன. அதற்குப் பதிலாக அதைப் பணமாக ஏழைகளுக்குக் கொடுத்தால் அவர்கள் பயன்பெறுவார்களே. இது கேட்க நன்றாக இருக்கலாம். ஆனால் ஆட்டை அறுத்து அதில் வெளிப்படுகின்ற தியாகம் மற்ற எதிலும் நாம் பெறவே முடியாது. 

ஒவ்வொரு வணக்கத்திலும் ஒரு தத்துவம் உள்ளது.  அதை அந்தந்த வணக்கத்தில்தான் பெறமுடியும்.

தொழுகையில் நாம் நம்முடைய அடிமைத்தனத்தை அல்லாஹ்வுக்குச் சமர்ப்பிக்கிறோம்.

நோன்பில் நம்முடைய பொறுமையை, சகிப்புத்தன்மையை வெளிப்படுத்துகிறோம்.

ஸகாத்  - கொடுக்கும் தன்மையை நம்மில் வளர்க்கிறது. 
ஹஜ்- விட்டுக்கொடுப்பதை வளர்க்கிறது. 

இப்படி ஒவ்வொன்றும் ஒரு தத்துவத்தைக் கூறுகிறது. 

எனவே நாம் இந்த பக்ரீத் பெருநாளில் ஆடு, மாடுகளை அறுத்துப் பலியிட்டு அல்லாஹ்விடம் முழுமையான நற்கூலியைப் பெறுவோம். 

கேட்டவர்: மாணவர் நூ. அப்துல் ஹாதி பாகவி 

செவ்வாய், 13 செப்டம்பர், 2011

இமாம்கள் எழுதியவை கற்பனையா?


இமாம்கள் எழுதி வைத்தவையெல்லாம் கற்பனை என்று கூறுபவர்கள் இன்று (13\09\2011) தினகரனில் வெளிவந்துள்ள செய்தியைப் படித்துப் பார்க்கட்டும்.


வடமாநில வாலிபர்களுக்கு தர்மஅடி
மாட்டுடன் சில்மிஷத்துக்கு முயற்சி

கோவை, செப். 13:
மாட்டுடன் சில்மிஷத்துக்கு முயற்சி செய்த 4 வடமாநில வாலிபர்களை கிராமத்தினர் பிடித்து தர்மஅடி கொடுத்தனர். கோவை மாவட்டம் போத்தனூர் செட்டிபாளையத்தில் சிமென்ட் கலவை தயாரிக்கும் தனியார் ஆலை உள்ளது. இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட வட மாநிலத்தை சேர்ந்த வாலிபர்கள் வேலை செய்கின்றனர். நேற்று முன்தினம் நள்ளிரவு இந்த தொழிற்சாலையில் வேலை செய்யும் 4 வாலிபர்கள் அப்பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் புகுந்தனர். அங்கு கட்டி வைக்கப்பட்டிருந்த மாட்டுடன் செக்ஸ் உறவு கொள்ள முயற்சி செய்தனர். அப்போது மாடு கத்தியுள்ளது. மாட்டின் சத்தம் கேட்டு யாரும் வந்துவிடுவார்கள் என, அதன் நாக்கை துண்டாக அறுத்தனர். ரத்தம் சிந்திய நிலையில் துடித்த மாடு, பயங்கர சத்தத்தில் அலறித்துடித்தது. அதைக் கேட்டு தோட்டத்தில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் ஓடிவந்தனர். அவர்களை பார்த்ததும் நான்கு பேரும் தப்பிஓடினர். ஆனால் கிராம மக்கள் உதவியுடன் தோட்டக்காரர்கள் அவர்களை துரத்திப் பிடித்து, தென்னை மரத்தில் கட்டி வைத்து தர்மஅடி கொடுத்தனர். காலை 8 மணிவரை போலீசார் வராததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நால்வரையும் கயிற்றால் கட்டி இழுத்துக்கொண்டு போத்தனூர் ஓராட்டுக்குப்பை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அதன் பின்னர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பொது மக்களோடு பேச்சுவார்த்தை நடத்தினர். மதியம் 1 மணிக்கு நால்வரையும் மீட்டனர்.

விசாரணையில் அவர்கள் ஒரிசாவைச் சேர்ந்த வினோத்(19), நிஸ்தார்(18), டேவிட்(20), பெகோர்(22) என்பது தெரியவந்தது. அவர்களிடம் போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். நாக்கு அறுக்கப்பட்ட மாட்டுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அது உயிர்பிழைப்பது சந்தேகம்தான் என்று கால்நடை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.


மாட்டுடன் உறவு கொள்ள முயன்றபோது கதறியதால் நாக்கை அறுத்த வடமாநில வாலிபர்களை பொதுமக்கள் பிடித்து கட்டி வைத்து தர்ம அடி கொடுத்தனர். 

நாக்கு அறுபட்ட மாடு
 .


சனி, 3 செப்டம்பர், 2011

இஸ்லாத்தைத் துறந்துவிட்டாள்!


அண்மையில் ஒரு சோகமான நிகழ்ச்சி நடைபெற்றது. அதைப் பகிர்ந்துகொள்ளவே இக்கட்டுரையை வரைகிறேன். பராஅத் என்றால் பாவத்திலிருந்து விடுதலை பெறுதல் என்று பொருள். அந்த நாளில் ஒருத்தி, தாய் மார்க்கமாம் இஸ்லாத்திலிருந்து விடுதலை பெற்றுவிட்டாள். ஆம், இஸ்லாத்தைத் துறந்துவிட்டாள். விடுதலை பெற்றுவிட்டாள் என்று சொல்வதைவிட குஃப்ர் என்று நரகச் சிறைக்குள் விழுந்துவிடத் துணிந்துவிட்டாள் என்றுதான் கூறவேண்டும்.

அவளுடைய தந்தை ஒரு பள்ளிவாசலின் செயலாளர் என்பது மிகவும் வியப்புக்குரியது. ஆம், அவளுடைய தந்தைக்கு அவளுடன் சேர்த்து நான்கு பெண்பிள்ளைகள். அவள் மூன்றாமவள். அவளுடைய தந்தை, வீட்டில் தம் பிள்ளைகளையோ, மனைவியையோ தம் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கவில்லை. தம் பெண் பிள்ளைகளைக் கண்டித்து வளர்க்கவில்லை. இஸ்லாத்தைப் போதிக்கவில்லை. மாறாக, அவர் கண்டித்ததெல்லாம், பள்ளிவாசலில் அமைதியாக மார்க்கப் பணியாற்றும் ஆலிம்களைத்தான். அப்பள்ளியில் அவரால் பாதிக்கப்பட்ட மார்க்க அறிஞர்கள் பலர் உள்ளனர். ஒவ்வொருவரும் தம் மனம் வேதனைப்பட்டுத்தான் அந்தப் பள்ளிவாசலில் இருந்து வெளியேறினர். வெளியேற்றப்பட்டனர்.

அந்தப் பள்ளிவாசலில் மார்க்கப் பணியாற்றிய ஆலிம்கள் பலர், அவர்கள் பணியாற்றிய காலத்தில் அற்ப காரணங்களுக்காக அவ்வப்போது அவரால் கண்டிக்கப்பட்டனர், எச்சரிக்கப்பட்டனர். அந்தப் பள்ளியில் பணியாற்றும் முஅத்தின்கள்தாம் அவர் வீட்டின் பணியாளர்கள். பள்ளிவாசலின் பணத்தைத் தம் சொந்தப் பணமாகக் கருதித் தாராளமாகப் பயன்படுத்துவார். வெள்ளிக்கிழமை தவிர பள்ளிக்குத் தொழ வரமாட்டார். அப்படியே வந்தாலும் அங்குள்ளவர்களைக் கண்டிக்காமல் செல்லமாட்டார். அப்படிப்பட்ட ஒரு பள்ளிவாசல் செயலாளரின் மகள்தான் இன்று இஸ்லாத்தையே தூக்கியெறிந்துவிட்டுச் சென்றுவிட்டாள்.

பள்ளிவாசல் நிர்வாகம்

பள்ளிவாசல் நிர்வாகம் யார் செய்ய வேண்டும் என்று அல்லாஹ் திருக்குர்ஆனில் பின்வருமாறு குறிப்பிடுகிறான்: யார் அல்லாஹ்வின்மீதும் மறுமை நாளின் மீதும் நம்பிக்கைகொண்டு, தொழுகையைக் கடைப்பிடித்து, ஸகாத் (எனும் கட்டாய தர்மத்)தை வழங்கிவருவதுடன், அல்லாஹ்வைத் தவிர வேறு யாரையும் அஞ்சவில்லையோ அவர்கள்தாம் அல்லாஹ்வின் பள்ளிவாசல்களைப் பராமரிப்பார்கள். அவர்களே நல்வழி பெற்றவர்களுள் அடங்குவர். (09: 18)

இன்று இத்தகையோர்தாம் பள்ளிவாசலை நிர்வாகம் செய்கின்றார்களா? சரி, அத்தகைய தகுதிகளைக் கொண்டிராவிட்டாலும், மார்க்கப் பணியாற்றுகின்ற மார்க்க அறிஞர்களையாவது சீண்டாமல் இருக்க வேண்டுமல்லவா? அவ்வப்போது சீண்டுவதையும், அவர்களுக்குத் தொல்லை கொடுப்பதையுமே தம் தொழிலாகக் கொண்டுள்ளனர் பலர். அவர்களும் மனிதர்கள்தாமே? சின்னச் சின்ன சறுகுதல்களும், பிழைகளும் இருக்கத்தான் செய்யும். அதற்காக, அதையே மீண்டும் மீண்டும் சுட்டிக்காட்டிக் கொண்டிருப்பதில் என்ன அர்த்தம் உள்ளது?

ஒரு தந்தை தம் பெண் பிள்ளைகளை எவ்வாறு வளர்க்க வேண்டும் என்பதைத் தெரிந்துகொள்ளாமலே பலர் தந்தைகளாக உள்ளனர். தொடக்கத்திலேயே இஸ்லாமிய மார்க்கப் போதனைகளை ஊட்டி வளர்க்க வேண்டும். பணிவு என்னும் நற்பழக்கத்தைப் போதிக்க வேண்டும். பருவ வயதை அடைந்தவுடன் அந்நிய ஆண்களின் முகம் பாராமல் இருக்கவும், தேவையில்லாமல் அந்நிய ஆடவருடன் பேசாமல் இருக்கவும் போதிக்க வேண்டும். பர்தா எனும் பாதுகாப்புக் கவசத்தைக் கட்டாயமாக அணியப் பழக்க வேண்டும். இப்படிப் பற்பல ஒழுக்கங்களையும் நன்னடத்தைகளையும் போதிக்க வேண்டும். அதன்பின் அவர்களுக்குப் பருவ வயது வந்ததும் தாமதிக்காமல், தகுந்த மணாளனைப் பார்த்து மணமுடித்துக்கொடுக்க வேண்டும். இப்படியெல்லாம் செய்தால்தான், அப்பெண் நாளை மறுமையில் பெற்றோருக்கு நரகத்தைவிட்டுக் காக்கும் திரையாக ஆவாள் என்பதை நினைவில் கொள்க.

பொதுச் சொத்தை அபகரித்தல்

பொதுவாக, பொருட்செல்வத்துக்கு அடிமையாகாமல் ஒருவர் தம்மைக் காத்துக்கொள்வது மிகவும் சிரமம். அதற்கு அடிமையாகிவிட்டால் அதிலிருந்து மீள்வது அதனினும் கடினம். அதனால்தான் பொருளைக் கையாள்கின்ற பொறுப்புக்கு இறையச்சமுடையோர் முன்வருவதில்லை. ஏனெனில் அது நல்லவனையும் கெட்டவனாக்கிவிடும் என்பது நியதி. பிறர் பொருளை அபகரித்தல் மிகப்பெரும் குற்றம் என்பதில் யாருக்கும் இருவேறு கருத்து இருக்க முடியாது. அதேநேரத்தில் பொதுச்சொத்தை அபகரித்தல், அதை முறைகேடாகப் பயன்படுத்துதல் அதைவிடப் பெருங்குற்றம் என்பதை ஒவ்வொருவரும் நினைவில் கொள்ள வேண்டும். அல்லாஹ் அதற்கு எத்தகைய தண்டனையைக் கொடுப்பான் என்பதை நாம் அறிந்துகொள்ள முடியாது. இதுதான் அதற்குரிய தண்டனை என்பதை நாம் கணிக்கவும் முடியாது. எனவே இது விசயத்தில் நாம் மிகுந்த எச்சரிக்கையோடு இருப்பதே இம்மைக்கும் மறுமைக்கும் நலன் பயக்கும்.

படிப்பினைகள்

1. ஆர்.எஸ்.எஸ். கயவர்களின் சூழ்ச்சி வலை நம்மைச் சுற்றிப் பின்னப்பட்டுள்ளது என்பதை நாம் இன்னும் உணராமல் இருக்கிறோம். அவர்களுடைய சூழ்ச்சிகள் பலவற்றுள் இதுவும் ஒன்று. அதை முறியடிக்க நாம் மிகுந்த எச்சரிக்கையோடும், விழிப்புணர்வோடும் இருக்க வேண்டியது அவசியமாகும்.

2. ஒரு தந்தை தம் பெண்பிள்ளைகளை இஸ்லாமியக் கலாச்சாரப் பண்பாடுகளோடு வளர்த்து உரிய பருவத்தில் அவர்களுக்கு மணமுடித்துக்கொடுக்க வேண்டும். இப்பொறுப்பை முதுகுக்குப் பின்னால் தூக்கியெறிந்ததன் விளைவே இதுபோன்ற நிகழ்வுகள் ஆங்காங்கே நடக்கக் காரணம்.

3. நம்முடைய பெண்பிள்ளைகளை அந்நிய ஆடவர்களோடு பேசவோ பழகவோ கூடாது என்று எச்சரிக்கை செய்யத் தயங்குகின்றோம். அதன் விளைவே இதுபோன்ற நிகழ்வுகளுக்கு முக்கியக் காரணம்.

4. பொதுச்சொத்தைக் கையாளும்போது மிகுந்த கவனம் வேண்டும். அதில் சிறிதளவும் நம்முடைய பொருளோடு கலந்துவிடாமல் பேணிக்கொள்ள வேண்டும். அதில் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும்.

5. மார்க்க அறிஞர்களை (ஆலிம்களை)க் குறைகூறுவதை அறவே விட்டொழிக்க வேண்டும். அவர்கள் நிம்மதியாகவும், சுதந்திரமாகவும் இஸ்லாமியக் கருத்துகளை எடுத்துரைக்க ஆதரவு நல்க வேண்டும்.

நடந்துவிட்ட இந்த நிகழ்வு பலரின் உள்ளத்தில் சோக வடுக்களை உண்டாக்கியிருந்தாலும், இனிவரும் காலங்களில் இதுபோன்ற ஒரு நிகழ்வுகூட நடக்காமல் நம் சமுதாயத்தைக் காப்பதே நம் தலையாய பணியாகக் கொள்ள வேண்டும். நம் சமுதாயத்தைக் காக்க நம்மால் இயன்ற அளவு முயற்சி செய்து, எதிரிகளின் சூழ்ச்சியை வெல்ல வல்லோன் அல்லாஹ் நல்லருள் புரிவானாக!


செவ்வாய், 2 ஆகஸ்ட், 2011

நபிமார்கள் வரலாறு நூல் வெளியீட்டு விழா (இரண்டாம் பாகம்)

நபிமார்கள் வரலாறு நூல் வெளியீட்டு விழா (இரண்டாம் பாகம்)
சமஉரிமை ஜூலை 2011சமரசம் ஜூலை 16-31


பிறைமேடை ஜூலை 01-15, 2011
முழு விவரம் அறிய:


மக்கள் ரிப்போர்ட் ஜூலை 01-07
படிக்க

பக்கங்கள்  624
விலை        225
வெளியீடு: 
ஆயிஷா பதிப்பகம் 
திருவல்லிக்கேணி 
சென்னை

புதன், 6 ஜூலை, 2011

இப்ராஹீம் நபியின் வரலாறு (தொடர் 24)

இறைமறைக் குர்ஆன் இப்ராஹீமைப் புகழ்தல்

அல்லாஹ் கூறுகின்றான்: (இறைவனின் கட்டளைகளை) முழுமையாக நிறைவேற்றிய இப்ராஹீம். (53: 37) அதாவது அவருக்கு ஏவப்பட்ட அனைத்தையும் அவர் நிறைவேற்றினார். இறைநம்பிக்கைக்குரிய அனைத்துக் குணங்களையும் அதன் உட்பிரிவுகளுக்குரிய அனைத்துக் குணங்களையும் அவர் மேற்கொண்டார். அவருடைய எவ்வளவு பெரிய வேலையும், அவர் செய்ய வேண்டிய சிறிய நல்லறத்தைக்கூடத் தடுத்துவிடாது. பெரிய பெரிய நற்காரியங்களை மேற்கொள்கின்ற நேரத்தில் அவருடைய சிறிய செயல்கள் அவருக்கு மறந்துபோகா.

இப்ராஹீமை அவருடைய இறைவன் பல கட்டளைகள் மூலம் சோதித்ததை எண்ணிப் பாருங்கள். அவர் அவற்றை முழுமையாக நிறைவேற்றினார். (2: 124) என்ற வசனத்திற்கு இப்னு அப்பாஸ் (ரளி) அவர்கள் விளக்கமளித்துள்ளார்கள். அதாவது அல்லாஹ் அவரைத் தூய்மை எனும் செயலால் சோதித்தான். அவற்றுள் ஐந்து தலையைச் சார்ந்தவை; வேறு ஐந்து உடலோடு உள்ளவை. தலையைச் சார்ந்தவை: 1.மீசையைக் கத்தரித்தல், 2. வாய்கொப்பளித்தல், 3.பல்துலக்கு(மிஸ்வாக் செய்)தல், 4. நாசிக்குத் தண்ணீர் செலுத்துதல், 5.தலைமுடியை (மாங்கு எடுத்து நடுவே) பிரித்தல். உடலோடு உள்ளவை: 1.நகங்களை நறுக்குதல், 2. அந்தரங்க உரோமங்களைக் களைதல், 3.விருத்தசேதனம் செய்தல், 4. அக்குள் முடி(யைப் பிடுங்கிக்) களைதல், 5. மலம் மற்றும் சிறுநீர் கழித்தபின் தண்ணீரால் சுத்தம்செய்தல். (நூல்: தஃப்சீர் இப்னு அபீ ஹாத்திம்)

சயீத் பின் அல்முசய்யப், முஜாஹித், அஷ்ஷஹ்பீ, அந்நஃகயீ, அபூஸாலிஹ் மற்றும் அபுல்ஜல்த் (ரஹ்-அலைஹிம்) போன்றோரிடமிருந்து இவ்வாறே அறிவிக்கப்பட்டுள்ளது.

இயற்கையானவை ஐந்து உள்ளன. அவை: 1.விருத்தசேதனம் செய்தல், 2. அந்தரங்க உரோமங்களைக் களைதல், 3.மீசையைக் கத்தரித்தல், 4. நகங்களை நறுக்குதல், 5. அக்குள் முடி களைதல் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரளி) அறிவித்துள்ளார்கள். (நூல்கள்: புகாரீ, முஸ்லிம்) இதை இப்னு கஸீர் (ரஹ்) எடுத்துரைக்கின்றார்.

இயற்கையானவை பத்து உள்ளன. அவை: 1.மீசையைக் கத்தரித்தல், 2. தாடியை வளர்த்தல், 3.பல்துலக்கு(மிஸ்வாக் செய்)தல், 4. நாசிக்குத் தண்ணீர் செலுத்துதல், 5.நகங்களை நறுக்குதல், 6. விரல் முடிச்சுகளையும் அவற்றின் இடைகளையும் கழுவுதல், 7.அக்குள் முடி(யைப் பிடுங்கிக்) களைதல் 8.அந்தரங்க உரோமங்களைக் களைதல், 9.மலம் மற்றும் சிறுநீர் கழித்தபின் தண்ணீரால் சுத்தம்செய்தல் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஆயிஷா (ரளி) அறிவித்துள்ளார்கள். (நூல்: முஸ்லிம்)

முஸ்அப் (ரஹ்) கூறுகிறார்: பத்தாவ(து என்ன என்ப)தை நான் மறந்துவிட்டேன். அது `வாய்கொப்பளிப்பதாகத்தான் இருக்க வேண்டும். வகீஹ் (ரஹ்) கூறுகிறார்: `இன்த்திகாஸுல் மாஹ் என்பது மலம் மற்றும் சிறுநீர் கழித்தபின் தண்ணீரால் சுத்தம் செய்தல் ஆகும். இப்ராஹீம் (அலை) அவர்களின் வயது மற்றும் அவர் விருத்தசேதனம் செய்துகொண்டது பற்றிய விரிவான விளக்கத்தை இனிவரும் பக்கங்களில் காணலாம். இன்ஷா அல்லாஹ்.
சுருக்கமாக, இப்ராஹீம் (அலை) அவர்கள் அல்லாஹ்வுக்காக தூய்மையான மனதுடன் நல்லறங்களை மேற்கொள்வதும் வணக்க வழிபாடுகளை மெத்தப் பணிவுடன் செய்வதும் அவர் தம்முடைய உடல் சுத்தத்தைப் பராமரிப்பதைவிட்டுத் தடுக்கவில்லை. அதாவது அவர் தம் தலைமுடிகளையோ நகங்களையோ அதிகமாக வளர்த்துக்கொள்வதோ, அவற்றினுள் அழுக்குகளையும் அசிங்கங்களையும் சேரவிடுவதோ கிடையாது. மாறாக, அசிங்கமானவற்றைக் களைந்து, தம் உடலின் ஒவ்வோர் உறுப்புகளையும் முறையாகப் பேணி, அவற்றை அழகாக வைத்துக்கொள்ளத் தவறியதில்லை.

`(இறைவனின் கட்டளைகளை) முழுமையாக நிறைவேற்றிய இப்ராஹீம்.’ (53: 37) என்று அல்லாஹ் இப்ராஹீம் (அலை) அவர்களைப் புகழ்ந்து கூறியுள்ளதின் அடிப்படையே இதுதான்.

இப்ராஹீம் நபியின் கோட்டை

அல்ஹாஃபிழ் அபூபக்ர் அல்பஸ்ஸார் (ரஹ்) கூறுகிறார்: நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரளி) அவர்கள் அறிவித்துள்ளதாவது: நிச்சயமாக சொர்க்கத்தில் ஒரு கோட்டை உள்ளது. (அது முத்துக்களால் ஆனது-என்று கூறியதாக நான் எண்ணுகிறேன்). அதில் பிளவோ பலவீனமோ கிடையாது. அல்லாஹ் அதில் தன் உற்ற நண்பரான இப்ராஹீமுக்கு விருந்து ஏற்பாடு செய்துள்ளான்.1

இப்ராஹீம் நபியின் தன்மைகள்

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஜாபிர் (ரளி) அறிவித்துள்ளார்கள்: நபிமார்கள் எனக்கு முன்னிலையில் எடுத்துக் காட்டப்பட்டார்கள். மூசா நபி; அவர் ஆண்களுள் ஒரு வகை மனிதர்; அவர் அவலட்சணமான தோற்றமுடைய மனிதர்களுள் ஒருவரைப் போன்று காணப்பட்டார். நான் ஈசா பின் மர்யம் (அலை) அவர்களைக் கண்டேன். அவரை உர்வா பின் மஸ்ஊத் உடைய தோற்றத்தில் நான் கண்டேன். இப்ராஹீம் (அலை) அவர்களை திஹ்யத்துல் கலபீ உடைய தோற்றத்தில் நான் கண்டேன்.2 (நூல்: முஸ்னத் அஹ்மத்)

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு அப்பாஸ் (ரளி) அறிவித்துள்ளார்கள்: நான் ஈசா பின் மர்யம், மூசா, இப்ராஹீம் (அலைஹிமுஸ் ஸலாம்) ஆகியோரைக் கண்டேன். ஈசா நபி சிவப்பானவர்; சுருட்டைமுடி நிறைந்தவர்; விசாலமான மார்புடையவர். மூசா நபி (கோதுமை போன்ற) பழுப்பு நிறமுடையவர்; பருமனானவர். அப்போது, (அப்படியானால்) இப்ராஹீம் நபி? என்று வினவினார்கள். நீங்கள் உங்கள் தோழரைப் பாருங்கள் என்று (தம்மைச் சுட்டிக்காட்டிக்) கூறினார்கள். (நூல்: முஸ்னத் அஹ்மத்) முஜாஹித் (ரஹ்) அறிவிக்கிறார்: இப்னு அப்பாஸ் (ரளி) அவர்கள் (சபையில்) இருந்தபோது மக்கள் தஜ்ஜாலின் இரண்டு கண்களுக்கிடையே (நெற்றியில்) `காஃபிர் (இறைமறுப்பாளன்) என்றோ, `காஃப் ஃபா ரா என்றோ எழுதப்பட்டிருக்கும் (என்பது உண்மையா?) என்று பேசிக்கொண்டிருந்தார்கள். அப்போது, இப்னு அப்பாஸ் (ரளி) அவர்கள், நான் அவ்வாறு செவியுறவில்லை. ஆனால், நபி (ஸல்) அவர்கள், இப்ராஹீம் (அலை) அவர்கள் (எத்தகைய தோற்றமுடையவராக இருந்திருப்பார் என்று தெரிந்துகொள்ள) உங்கள் தோழரான என்னைப் பாருங்கள்! மூசா (அலை) அவர்களோ சுருள்முடி கொண்டவர்களாகவும், (கோதுமை போன்ற) பழுப்பு நிறமுடையவராகவும் இருந்தார்.

ஈச்சை மர நாராலான கடிவாளம் இடப்பட்ட சிவப்பு வண்ண ஒட்டகத்தின் மீது சவாரி செய்வார். அவர் (ஹஜ்ஜின்போது `அல்அரக் எனும்) பள்ளத்தாக்கில் இறங்குவதை (இப்போதும்) நான் காண்பதைப் போன்று உள்ளது என்று கூறியதை நான் கேட்டேன். (நூல்: புகாரீ)3

மரணம் இப்னு ஜரீர் (ரஹ்) தம்முடைய வரலாற்று நூலில் கூறுகிறார்: இப்ராஹீம் (அலை) நும்ரூத் பின் கன்ஆன் என்ற அரசனின் காலத்தில் பிறந்தார். நும்ரூத் பின் கன்ஆன் என்பவன் பிரபலமான அரசன் அள்ளஹ்ஹாக் ஆவான். அவன் ஆயிரம் ஆண்டுகள் ஆட்சி செய்தான் என்று கூறப்படுகிறது. அவன் மிக அதிகமாக அநியாயமும் அட்டூழியமும் செய்துவந்தான்.
அறிஞர்கள் சிலர் கூறுகின்றனர்: நூஹ் (அலை) தூதராக அனுப்பப்பட்ட பனூ ராசிப் உடைய குலத்தில் ஒருவனாக அவன் இருந்தான். அவன் அந்நேரத்தில் உலகையே ஆள்கின்ற அரசனாக இருந்துவந்தான். அவனது ஆட்சிக் காலத்தில் ஒரு நாள், ஒரு நட்சத்திரம் தோன்றியது. அது சூரியன் மற்றும் சந்திரனின் ஒளியையே மங்கச் செய்துவிட்டது. அக்கால மக்கள் அதைக் கண்டு திடுக்கிட்டனர். அந்தக் கொடுங்கோல் அரசன் நும்ரூதும் பயந்தான். எனவே குறிகாரர்களையும் நட்சத்திரங்களைப் பற்றித் தெரிந்தவர்களையும் அவன் ஒன்றுதிரட்டி, அவன் அது பற்றி அவர்களிடம் கேட்டான். உன் ஆட்சிப் பகுதியில் ஒரு குழந்தை பிறக்கப்போகிறது. அவருடைய கையில்தான் உம்முடைய ஆட்சி முடிவுக்கு வர இருக்கிறது என்று அவர்கள் கூறினர். இதைக் கேட்ட அந்த அரசன், ஆண்கள் தம் மனைவியரோடு இணைவதைத் தடுக்கவும், அந்நேரத்திலிருந்து அவ்வூரில் பிறக்கின்ற குழந்தைகள் அனைத்தையும் கொன்றிடவும் கட்டளையிட்டான். இத்தகைய இக்கட்டான சூழ்நிலையில்தான் இப்ராஹீம் நபி பிறந்தார். எனவே, அல்லாஹ் அந்தப் பாவிகளின் சூழ்ச்சியிலிருந்து அவரைப் பாதுகாத்துவிட்டான். அதன்பின் அவர் வாலிபராக ஆனார். அல்லாஹ் அவரை நல்ல முறையில் வளர்த்து வந்தான். பின்னர், அவருடைய வாழ்க்கையில் என்னென்ன நடக்க வேண்டுமோ அவையெல்லாம் நடந்து முடிந்தன. அவை பற்றிய தகவல்கள் ஏற்கெனவே சென்று விட்டன.

அவர் பிறந்த இடம் சவ்ஸ் ஆகும். பாபில் என்றும் கூறப்படுகிறது. கூஸாவின் ஓரத்தில் அமைந்துள்ள சவாத் என்றும் கூறப்படுகிறது. அவர் டமாஸ்கசின் கிழக்கே அமைந்துள்ள பரஸா எனுமிடத்தில் பிறந்தார் என்று இப்னு அப்பாஸ் (ரளி) கூறியுள்ள நபிமொழி ஏற்கெனவே கூறப்பட்டுள்ளது. அல்லாஹ் நும்ரூதை, இப்ராஹீம் நபியின் கையால் அழித்தபின், அவர் ஹர்ரான் எனும் ஊரை நோக்கிப் புறப்பட்டார். பின்னர், சிரியா (ஷாம்) நோக்கிச் சென்றார். பின்னர், நாம் ஏற்கெனவே கூறியுள்ளபடி, அவர் ஈலியா என்ற ஊரில் தங்கினார். அங்குதான் அவருக்கு இஸ்மாயீல் மற்றும் இஸ்ஹாக் எனும் இரண்டு மகன்கள் பிறந்தனர்.

சார்ரா (அலை) அவர்களின் மரணம்

கன்ஆன் நாட்டிலுள்ள ஹப்ரூன் எனும் சிற்றூரில் சார்ரா (அலை) அவர்கள், இப்ராஹீம் (அலை) அவர்களுக்கு முன்பே மரணித்துவிட்டார். வேதக்காரர்கள் கூற்றுப்படி, அவர் மரணித்த போது அவருடைய வயது 127 ஆகும். அவரின் மரணத்தை நினைத்து இப்ராஹீம் (அலை) மிகவும் வருந்தினார். அவர் மீது அல்லாஹ் இரக்கம்காட்டுவதற்காக அல்லாஹ்விடம் அழுது பிரார்த்தனை செய்தார். மேலும், பனூஹீஸ் குலத்தைச் சார்ந்த, இஃப்ரூன் பின் ஸஃக்ர் என்பாரிடமிருந்து மஹாரா என்ற இடத்தை 400 (ஏறத்தாழ 1600 கிராம்) வெள்ளிக்கு வாங்கி, தம் துணைவியின் பிரேதத்தை அங்கேயே நல்லடக்கம் செய்துவிட்டார்.

இஸ்ஹாக் நபிக்கு மணம் பேசுதல்

இப்ராஹீம் (அலை) தம்முடைய மகன் இஸ்ஹாக்கிற்கு ரிஃப்கா என்ற பெண்ணை மணம் பேசினார். அப்பெண்ணைத் தம் மகனுக்கு மணமுடித்து வைத்தார். இவர் ரிஃப்கா பின்த் பத்தூஈல் பின் நாஹூர் பின் தாரிக் ஆவார். அவருடைய மவ்லா, அப்பெண்ணுடைய நாட்டிலிருந்து அவருக்காக ஓர் ஒட்டகச் சுமையை ஏற்றி அனுப்பினார். அவருடன் பாலூட்டுகின்ற ஒரு பெண்ணும் அவருடைய அடிமைப் பெண்களும் இருந்தனர்.

இப்ராஹீம் நபியின் திருமணம்

இப்ராஹீம் (அலை) கன்தூரா என்ற பெண்ணைத் திருமணம் செய்துகொண்டதாக வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர். அப்பெண், ஸம்ரான், யக்ஷான், மாதான், மத்யன், ஷியாக், ஷூஹ் ஆகிய பிள்ளைகளைப் பெற்றெடுத்தார். இவர்கள் மூலம் பிறந்த குழந்தைகள் அனைவரையும் கன்தூராவின் குழந்தைகள் என்று கூறுகின்றனர். இப்ராஹீம் (அலை) அவர்களிடம், உயிரைக் கைப்பற்றுகின்ற வானவர் (மலக்குல் மவ்த்) வந்ததைப் பற்றி வேதக்காரர்கள் அதிகமான செய்திகளைக் கூறியுள்ளனர். இச்செய்தியை முற்கால அறிஞர்கள் பலரிடமிருந்து இப்னு அசாகிர் (ரஹ்) அறிவித்துள்ளார். இவை சரியானவையா என்பதை அல்லாஹ்வே நன்கறி வான். இப்ராஹீம் (அலை) திடீரென இறந்துவிட்டார் என்று கூறப்பட்டுள்ளது. அதேபோலவே சுலைமான் (அலை), தாவூத் (அலை) இருவரும் திடீரென இறந்துவிட்டார்கள். இதை வேதக்காரர்களும் மற்றவர்களும் இதற்கு மாற்றமாகவே கூறுகின்றார்கள்.

இப்ராஹீம் நபியின் மரணதறுவாய்

பின்னர் இப்ராஹீம் (அலை) அவர்கள் நோய்வாய்ப்பட்டார். அவர் தம் 175ஆம் வயதில் மரணமடைந்தார். 190ஆம் வயதில் மரணமடைந்தார் என்றும் கூறப்பட்டுள்ளது. அவர் மஹாரா எனும் இடத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டார். அது ஹப்ரூன் என்ற இடத்தில் உள்ளது. இஃப்ரூன் அல்ஹீஸீ என்பாருடைய வயல்வெளியில், அவருடைய துணைவி சார்ரா (அலை) அவர்களோடு அவர் நல்லடக்கம் செய்யப்பட்டார். அவரை நல்லடக்கம் செய்கின்ற பொறுப்பை அவருடைய மகன்களான இஸ்மாயீல் (அலை) மற்றும் இஸ்ஹாக் (அலை) இருவரும் ஏற்றுக்கொண்டனர். இப்ராஹீம் (அலை) அவர்கள் இருநூறு ஆண்டுகள் வாழ்ந்தார் என்று இப்னு அல்கல்பீ (ரஹ்) கூறுகிறார். (நூல்: தாரீக் அத்தப்ரீ)

இப்ராஹீம் (அலை), அவர்தம் நூற்று இருபதாம் வயதில் (கதூம் எனும்) வாய்ச்சியால் விருத்தசேதனம் செய்துகொண்டார். அதன் பிறகு அவர் எண்பது ஆண்டுகள் வாழ்ந்தார் என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரளி) அவர்கள் அறிவித்துள்ளார்கள். (நூல்: இப்னு ஹிப்பான்)4
இப்ராஹீம் (அலை), அவர்தம் நூற்று இருபதாம் வயதில் விருத்தசேதனம் செய்துகொண்டார். அதன் பிறகு அவர் எண்பது ஆண்டுகள் வாழ்ந்தார். அவர் (கதூம் எனும்) வாய்ச்சியால் விருத்தசேதனம் செய்துகொண்டார் என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரளி) அவர்கள் அறிவித்துள்ளார்கள். (நூல்: இப்னு ஹிப்பான்)

(இப்ராஹீம் நபி விருத்த சேதனம் செய்த போது) அவருக்கு எண்பது வயது ஆகிவிட்டது என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரளி) அவர்கள் அறிவித்துள்ளார்கள். இதை அல்ஹாஃபிழ் இப்னு அசாகிர் (ரஹ்) பதிவுசெய்துள்ளார்.

அல்கதூம் என்பது (அவர் விருத்தசேதனம் செய்துகொண்ட) கிராமத்தின் பெயராகும் என்று அப்துர் ரஸ்ஸாக் (ரஹ்) கூறியதை இப்னு ஹிப்பான் (ரஹ்) அறிவித்துள்ளார்.

(இப்னு கஸீர் ஆகிய) நான் கூறுகிறேன்: புகாரீயில் வந்துள்ள, அவருக்கு எண்பது வயதானபோது அவர் விருத்த சேதனம் செய்துகொண்டார் என்பதும், மற்றோர் அறிவிப்பில், அவர் எண்பது வயதாக இருந்தபோது (விருத்தசேதனம் செய்துகொண்டார்) என்பதும் ஒன்றுக்கொன்று முரண் இல்லை. ஏனென்றால், அவர் அதன் பின்னர் எண்பது ஆண்டுகள் வாழ்ந்துள்ளார். அல்லாஹ்வே நன்கறிபவன்.


இப்ராஹீம் நபியின் சிறப்புகள்

முதன் முதலில் முழுக்கால் சட்டை (சுர்வால்-பேண்ட்) அணிந்தவர் இப்ராஹீம் (அலை) ஆவார். முதன் முதலில் தலைமுடிகளை இரண்டாகப் பிரித்து (மாங்கெடுத்துச்) சீவிக்கொண்டவர்; முதன் முதலில் அந்தரங்க உரோமங்களைக் களைந்தவர்; தம்முடைய நூற்று இருபதாம் வயதில் (கதூம் எனும் வாய்ச்சியால்) கட்டைகளைச் செதுக்கும் கருவியால் முதன் முதலில் விருத்தசேதனம் செய்துகொண்டவர்; அதன் பிறகு, எண்பது ஆண்டுகள் வாழ்ந்தார்; முதன் முதலில் விருந்தாளிக்கு உணவளித்து உபசரித்தவர்; முதன் முதலில் நரைமுடி வரப்பெற்றவர் இவரே ஆவார் என்று அபூஹுரைரா (ரளி) கூறுகின்றார்கள். முஹம்மத் பின் இஸ்மாயீல் அல்ஹஸ்ஸானீ (ரஹ்) இதை அறிவித்துள்ளார்.

இப்ராஹீம் நபியே, முதன் முதலில் விருந்தாளிக்கு உணவளித்து உபசரித்தவர்; மக்களுள் முதன் முதலில் விருத்தசேதனம் செய்துகொண்டவர்; தம்முடைய மீசையை முதன் முதலில் கத்தரித்துக்கொண்டவர்; முதன் முதலில் நரைமுடியைப் பார்த்தவர். அந்த நரைமுடியைப் பார்த்து, இறைவா! இது என்ன? என்று வினவினார். உயர்ந்தோன் அல்லாஹ், (அது) கண்ணியம் (கம்பீரம்) என்று பதிலளித்தான். இறைவா! (அப்படியானால் கம்பீரத்தை) கண்ணியத்தை எனக்கு அதிகப்படுத்துவாயாக! என்று கூறினார் என சயீத் பின் அல்முசய்யப் (ரளி) கூறியுள்ளார்கள். (நூல்: முஅத்தா)

மற்றவர்கள் மேற்கண்ட இரண்டையும்விட சற்று அதிகப்படுத்திக் கூறியுள்ளார்கள். அதாவது தம்முடைய மீசையை முதன் முதலில் கத்தரித்துக்கொண்டவர்; முதன் முதலில் அந்தரங்க உரோமங்களைக் களைந்தவர்; முதன் முதலில் முழுக்கால் சட்டை (சுர்வால்-பேண்ட்) அணிந்தவர். அவருடைய மண்ணறை, அவருடைய மகன் இஸ்ஹாக் உடைய மண்ணறை, இஸ்ஹாக் உடைய பிள்ளை யஅகூப் (அலை) அவர்களுடைய மண்ணறை யாவும் மர்பஆ எனும் இடத்தில் உள்ளன. அதை சுலைமான் பின் தாவூது (அலை) ஹப்ரூன் எனும் ஊரில் கட்டினார். அது இன்று, `ஃகலீல் எனும் பெயரில் அறியப்படுகிறது. மேற்கண்ட இத்தகவல்கள் அனைத்தும் தலைமுறை தலைமுறையாக பாதுகாக்கப்பட்டவை ஆகும். பனூ இராயீல் காலத்திலிருந்து நம்முடைய இக்காலம் வரை பாதுகாக்கப்பட்டு வருகிறது. அதாவது, அவருடைய மண்ணறை மர்பஆ எனும் இடத்தில் கண்டிப்பாக உள்ளது. ஆனால், அங்கே `இதுதான் என்று ஒரு மண்ணறையைச் சுட்டிக்காட்ட இயலாது. எனவே, அந்த இடம் முழுவதையும் நல்ல முறையில் பேணுவதும் கண்ணியப்படுத்துவதும் அவசியமாகும். அதன் ஓரங்களை மிதிக்காமல் காப்பதும், அவ்விடத்தை மேன்மைப்படுத்துவதும் அவசியமாகும். ஏனென்றால், அங்கு இப்ராஹீம் நபியின் மண்ணறை இருக்கலாம்; அல்லது அதன்கீழ் அவரின் பிள்ளைகளுள் யாரேனும் ஒரு நபியின் மண்ணறை இருக்கலாம்.
வஹ்ப் பின் முநப்பிஹ் கூறுவதாக இப்னு அசாகிர் (ரஹ்) கூறுகிறார்: இப்ராஹீம் நபியின் மண்ணறை அருகே உள்ள கல்லில் பின்வருமாறு எழுதப்பட்டுள்ளது:

அறிவிலியை அவனுடைய மேலெண்ணம் வீணாக்கிவிட்டது.
யாருடைய தவணை வந்துவிட்டதோ அவர் மரணமடைகிறார்.
யார் மரணத்தை நெருங்கிவிட்டாரோ, அவருக்கு
அவருடைய சூழ்ச்சி ஏதும் பயனளிக்காது.
அவருடைய முன்னோர்களெல்லாம் இறந்துவிட
பின்னோராகிய இவர் மட்டும் எப்படி நீடித்திருக்க முடியும்? எந்த மனிதருக்கும் அவருடைய நற்செயல்களே அவரோடு மண்ணறையில் (துணையாக) வரும். (நூல்: தாரீக் திமஷ்க்)

இப்ராஹீம் நபியின் பிள்ளைகள்

இப்ராஹீம் நபிக்கு, முதன் முதலில் ஹாஜிர் மூலம் பிறந்தவர் இஸ்மாயீல் (அலை) ஆவார். அவர் எகிப்து நாட்டில் கிப்தீ வமிசத்தைச் சார்ந்தவர் ஆவார். பின்னர், சார்ரா (அலை) மூலம், இஸ்ஹாக் பிறந்தார். சார்ரா (அலை), இப்ராஹீம் (அலை) அவர்களின் சிற்றப்பா மகள் ஆவார். பின்னர், அவர் கன்தூரா என்ற பெண்ணை மணந்துகொண்டார். இவர் யக்துன் உடைய மகள் ஆவார். இவர் கன்ஆன் நாட்டைச் சார்ந்தவர். இவருக்கு ஆறு பிள்ளைகள் பிறந்தனர். அவர்கள்: மத்யன், ஸம்ரான், சர்ஜ், யக்ஷான், நஷக் ஆவர். ஆறாம் பிள்ளைக்குப் பெயர் சூட்டவில்லை. பின்னர், அவர் ஹஜூன் எனும் பெண்ணை மணந்துகொண்டார். இவருடைய தந்தை பெயர் அமீன் ஆகும். இவருக்கு ஐந்து பிள்ளைகள் பிறந்தனர். அவர்கள்: கைசான், சூரஜ், உமைம், லூத்தான், நாஃபி ஆவர். (நூல்: அத்தப்ரீ)

இவ்வாறுதான் அபுல்காசிம் அஸுஹைலீ (ரஹ்) தம்முடைய `அத்தஅரீஃப் வல்இஹ்லாம் எனும் நூலில் கூறியுள்ளார்.

----------அடிக்குறிப்புகள்------------


1) இதேபோன்ற நபிமொழியை அந்நள்ர் பின் ஷுமைல் (ரஹ்) நமக்கு அறிவித்துள்ளார் என்று அல்பஸார் (ரஹ்) கூறுகிறார். இந்த நபிமொழியை யஸீத் பின் ஹாரூன் மற்றும் அந்நள்ர் பின் ஷுமைல் இவ்விருவர்தாம் ஹம்மாத் பின் சலமாவோடு இணைத்துள்ளனர். இவ்விருவரைத் தவிர மற்றவர்கள் இந்த நபிமொழியை நபித்தோழர்கள் வரைதான் (மவ்கூஃப்) இணைத்து அறிவித்துள்ளார்கள் என்று அல்பஸார் கூறியுள் ளார். இந்தக் காரணம் மட்டும் இல்லையென்றால் இந்நபி மொழி `ஸஹீஹ் உடைய நிபந்தனைக்குள் வந்திருக்கும் என்று இப்னு கஸீர் (ரஹ்) கூறுகிறார்.

2. இந்த முறையில் இந்த வார்த்தைகளுடன் வந்துள்ள இந்நபிமொழியை அஹ்மத் (ரஹ்) மட்டுமே அறிவித்துள்ளார்.

3. இவ்வாறே புகாரீ மற்றும் முலிம் நூல்களில் வேறு சில வழிகளிலும் இந்த நபிமொழி பதிவுசெய்யப்பட்டுள்ளது.

4. இக்ரிமா மூலம் அபூஹுரைரா (ரளி) அவர்கள் வரை செல்கின்ற ஒரு நபிமொழியை அல்ஹாஃபிழ் இப்னு அசாகிர் (ரஹ்) அறிவித்துள்ளார்.


அரபி:           அல்பிதாயா வந்நிஹாயா (இமாம் இப்னு கஸீர்- ரஹ்) 
தமிழாக்கம்: நூ. அப்துல் ஹாதி பாகவி M.A., M.Phil.                                                                                                                           (முற்றும் )

செவ்வாய், 5 ஜூலை, 2011

பேச்சைக் குறைப்போம்!

அன்று முதல் இன்று வரை பேசாதவர் எவரும் இல்லை. அனைவரும் பேசிக்கொண்டிருக்கிறோம். என்ன பேசுகிறோம் என்று நமக்குத் தெரியாவிட்டாலும் நாம் பேசுவதை நிறுத்தியதில்லை. நிறுத்தாமல் பேசிக்கொண்டே இருக்கிறோம். ஆனால் நமக்குச் சீராக உடல் உறுப்புகளைக் கொடுத்துள்ள அல்லாஹ் அவற்றை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளான். நாம் பேசுகின்ற பேச்சு பதிவுசெய்யப்படுகின்றது. அல்லாஹ் அதற்காக நம்முடைய தோளின் வலப்புறமும் இடப்புறமும் வானவர்களை நிர்ணயித்துள்ளான். அவர்கள் நாம் பேசுகின்ற பேச்சை அப்படியே பதிவு செய்துவிடுகின்றார்கள்.

அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறுகின்றான்: (மனிதனின்) வலப்புறத்திலும், இடப்புறத்திலும் அமர்ந்து எடுத்தெழுதும் இரு (வான) வர் எடுத்தெழுதும்போது, அவனிடம் (அதை) எழுத எதிர்பார்த்துத் தயாராக இருக்கின்ற கண்காணிப்பாளர் இருந்தே தவிர, எந்தச் சொல்லையும் அவன் மொழிவதில்லை(50-17-18)

ஆக, நாம் பேசுகின்ற அனைத்து வார்த்தைகளும் பதிவு செய்யப்படுகின்றன. அதற்காகவே இரண்டு வானவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். இடப்புறத்தில் உள்ளவர் தீமையைப் பதிவுசெய்கின்ற அதே நேரத்தில் வலப்புறத்தில் உள்ளவர் நன்மை யைப் பதிவுசெய்கிறார். இதையெல்லாம் மறந்துதான் நாம் அன்றாடம் பேசிக்கொண்டிருக்கிறோம். நம்முடைய பேச்சால் யாருக்கு என்ன பயன்? எத்தனை பேர் பயன்பெறுவர் என்று யோசித்துப் பேசத் தொடங்கி னால் நம்முடைய பேச்சு குறைந்துவிடும்.

யாரொருவர் தம்முடைய இரண்டு தாடைகளுக்கு இடையிலுள்ள உறுப்பை (நாவை)யும் இரண்டு தொடைகளுக்கு இடையிலுள்ள (அந்தரங்க) உறுப்பையும் பாதுகாத்துக்கொள்வதாகப் பொறுப்பேற்றுக்கொள்கிறாரோ அவருக்குச் சொர்க்கத்துக்கு நான் பொறுப்பேற்றுக்கொள்கிறேன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: புகாரீ)

நாவையும் அந்தரங்க உறுப்பையும் பாதுகாத்துக்கொள்கின்ற வருக்கு நபி (ஸல்) அவர்கள் சொர்க்கத்துக்குப் பொறுப்பேற்றுக்கொள்கின்றார்கள் என்றால் அவ்விரண்டு உறுப்புகளையும் பாதுகாத்துக்கொள்வது எவ்வளவு சிரமம் என்பதையும் நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

ஆகவே, நாம் நம்முடைய நாவைப் பாதுகாத்துக்கொள்வதில் முழுமையான கவனம் செலுத்த வேண்டும். எலும்பு இல்லாத நாவு பல எலும்புகளை முறிக்கக்கூடிய ஆற்றல் பெற்றதாகும். தீயால் சுட்ட புண்கூட ஆறிவிடும். ஆனால் நாம் ஒருவரை நம் நாவால் திட்டிய வார்த்தைகள், அதனால் அவரின் நெஞ்சில் ஏற்பட்ட வடு என்றும் அழியாமல் மீண்டும் மீண்டும் அவரை வதைத்துக்கொண்டே இருக்கும். அதையே வள்ளுவர் குறிப்பிடுகிறார்: தீயினால் சுட்டபுண் உள்ளாறும்-ஆறாதே நாவினால் சுட்ட வடு.

நபித்தோழர் ஒருவர், இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம், "என்னுள் நீங்கள் மிகவும் அஞ்சக் கூடியது எது?" என வினவுகிறார். அப்போது நபி (ஸல்) அவர்கள் தம் நாவைப் பிடித்து, பின்னர் "இதுதான்" என்று கூறினார்கள். (நூல்கள்: திர்மிதீ, நசயீ, இப்னு மாஜா)

ஆம்! நம்முடைய நாவு அவ்வளவு மோசமானது; அதே நேரத்தில் வலுவானது; ஆபத்தைத் தேடிவரக்கூடியது.

ஒருவர் காலையில் விழித்தெழுந்தவுடன் மற்ற உறுப்பு களெல்லாம் நாவிடம், "நீ எங்கள் விசயத்தில் அல்லாஹ்வை அஞ்சிக்கொள்; (ஏனென்றால்) நாங்கள் அனைவரும் உன்னைச் சார்ந்துதான் இருக்கிறோம். எனவே நீ சீராக இருந்தால் நாங்கள் சீராக இருப்போம்; நீ கோணலாக ஆகிவிட்டால், நாங்களும் கோணலாக ஆகிவிடுவோம்" என்று கோரிக்கை வைக்கின்றன. (நூல்கள்: திர்மிதீ, நசயீ, இப்னுமாஜா)

உடல் உறுப்புகள் யாவும் பாதுகாப்புப் பெறுவதும், அவை காயப்படுவதும் நாவின் நுனியில் இருக்கிறது. ஒருவர் தம் நாவை அடக்கித் தேவையானதை மட்டும் பேசினால் அவர் பாதுகாப்புப் பெறுவார். இல்லையேல் மற்ற வர்களிடம் அடிபடுவார் என்பது இயல்புதான். எலும்பு இல்லாத நாவு பல எலும்புகளையும் முறிக்கக்கூடியது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். யார் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டாரோ அவர் பேசினால் நல்லதையே பேசட்டும்; அல்லது மௌனமாக இருக்கட்டும் என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்கள்: புகாரீ, முஸ்லிம்)

அல்லாஹ்வையும், மறுமை நாளையும் நம்பிக்கைகொண்ட ஒரு முஸ்லிம் பேசினால் நன்மையையும், நல்லனவற்றையுமே பேச வேண்டும். இல்லையேல், அமைதியாக இருந்துவிட வேண்டும். மாறாக, தேவையற்றதையெல்லாம் பேசிக்கொண்டிருக்கக் கூடாது என்பதையே நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

இன்றைக்குப் பேசுவது மிக எளிதாகிவிட்டது. எங்கிருப்பவரும் எங்கிருப்பவருடனும் எளிதில் பேசிவிட முடிகிறது. அந்த அளவுக்கு விஞ்ஞானம் வளர்ந்துள்ளது. ஒவ்வொருவரின் கையிலும் அலைபேசி. எங்கே அலைந்தாலும் பேசிக்கொண்டே அலையலாம். இன்றைய யுவன்-யுவதிகளுக்கு அலைபேசியை எடுத்தால் வைக்க மனம் வருவதில்லை. பேச்சிலேயே இலயித்துவிடுகின்றார்கள். என்ன பேசுகிறோம்; எதைப்பேசுகிறோம் என்றெல்லாம் கவலையில்லை. ஏதோ பேசிக்கொண்டிருக்கிறோம். அவ்வளவுதான்.

அதிலும் யாராவது அன்பாகக் குழைந்துபேசி விட்டால் போதும் அவர்களுடன் தொடர்ந்து பேசிக்கொண்டே இருப்பதில் ஆர்வம் பிறந்துவிடுகின்றது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் ஏராளம். குறிப்பாகப் பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்; பாதிக்கப்படுகின்றனர். காரணம், பெண்கள் எளிதில் உணர்ச்சிவசப்படக்கூடியவர்கள். அதேநேரத்தில் அன்பாக யாரேனும் பேசிவிட்டால் அவர்களுடன் ஐக்கியமாகிவிடுவார்கள். அத்தகைய மெல்லிய மனம் படைத்தவர்களை வசியப்படுத்துவதற்கென்றே சிலர் அலைகின்றனர். அவர்களின் காதல் வலையில் வீழ்ந்து சீரழிவது இளம்பெண்கள்தாம்.
அண்மைக்காலங்களில் குடும்பப் பெண்களும் இந்த வலையில் வீழ்ந்து வருகின்றனர் என்பது மிகவும் வேதனையான விசயம்.

இதற்குக் காரணம், பிற ஆடவர்களுடன் தேவையின்றிப் பேசுவதை இஸ்லாம் தடைசெய்துள்ளது என்பதை அறியாமல் இருப்பதுதான். ஹராம் என்று தெரியாமல் அந்நிய ஆண்களோடு அரட்டை அடிப்பது, சிரித்துப் பேசுவது, கொஞ்சிப் பேசுவது, பாலுணர்வைத் தூண்டக்கூடிய பேச்சுகளைப் பேசுவது ஆகியவையே நம் குடும்பப் பெண்களையும் சீரழிக்கத் தொடங்கிவிட்டது.
ஆகவே, பேச்சில் கவனமாக இருக்க வேண்டியது மிகவும் அவசியமாகும். நாவை அடக்க வேண்டியது கட்டாயமாகும். அன்றைக்குத் தொலைவில் உள்ளவர்களுடன் பேசுவது மிகவும் சிரமமாக இருந்தது. இன்றைக்கு தொலைவில் உள்ளவர்களோடு பேச தொலைப்பேசி, அலைபேசி ஆகியன வந்துவிட்டன. ஆகவே அவர்கள் யாருடனும் எப்போதும் எளிதாகப் பேசமுடிகிறது; அதன் மூலம் வழிகெட முடிகிறது. இதைக் களைய வேண்டுமெனில் ஒரு பெண் யாருடன் பேச அனுமதியுள்ளது; யாருடன் பேசக்கூடாது என்ற இஸ்லாமியச் சட்டத்தைத் தெரிந்துவைத்திருக்க வேண்டும். அத்தோடு அவள் தம் பெற்றோருடன் நெருங்கிப் பழக வேண்டும். அவர்களிடமே எதைப் பற்றியும் ஆலோசனை கேட்க வேண்டும்.
பருவ வயதுப்பெண்கள் தம் தந்தையிடமும், மணமான பெண்கள் தம் கணவரிடமும் மனம் விட்டுப் பேச வேண்டும். அப்படிச் செய்தால் அவர்களுக்கு உரிய ஆலோசனையை அவர்கள் வழங்குவார்கள். அதனால் தேவையற்றவர்கள் தம் வாழ்க்கையில் குறுக்கிடுவதை ஆரம்பத்திலேயே தவிர்த்துவிடலாம். இந்த நிலை தற்காலத்தில் இல்லாததால்தான் பெண்கள் அன்புக்காகத் திசைமாறுகிறார்கள். இறுதியில் அவர்களின் வாழ்க்கையே திசைமாறிவிடுகிறது. அதுமட்டுமின்றி, அலைபேசியில் தொடர்ந்து பேசிக்கொண்டி ருப்பவர்களுக்கு மூளைப் புற்று நோய் வருகிறது என்று தற்போது கண்டுபிடித்துள்ளார்கள்.

குறிப்பாக, அலைபேசியில் பேசுகின்றபோது, மூளையின் இரத்தம் பாதிக்கப்பட்டு அது உடல் முழுவதும் பரவி உடலுக்கும் மூளைக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. எனவே நாம் நம்மைக் காத்துக்கொள்ள நாம் செய்ய வேண்டிய ஒரே செயல், பேச்சைக் குறைப்பதே ஆகும். அதனால் இம்மையிலும் மறுமையிலும் நாம் வெற்றிபெறலாம் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை.


சனி, 25 ஜூன், 2011

நூல்கள் வெளியீட்டு விழா 24 06 11உலகப் புகழ்பெற்ற வரலாற்றாசிரியர் இப்னு கஸீர்  அவர்கள் அரபியில் எழுதிய அல்பிதாயா வந்நிஹாயா எனும் பெருநூலின் ஒரு பகுதி `கஸஸுல் அன்பியா - மௌலவி நூ.அப்துல் ஹாதி பாகவி தமிழாக்கம் செய்த  நபிமார்கள் வரலாறு இரண்டாம் பாகமும், முந்நாள் டிஐஜி ஏ.பீ. முஹம்மது அலி  ஐபிஎஸ்  எழுதிய சமுதாயமே விழித்தெழு நூலும் தேவநேயப் பாவாணர் அரங்கில்ஜூன் 24ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை வெளியிடப்பட்டன. இந்நூல்களை சென்னை ஆயிஷா பதிப்பகம் வெளியிட்டுள்ளது. 

 புகாரி ஆலிம் அரபிக்கல்லூரியின் முதல்வர், டாக்டர் மௌலவி  பி.எஸ். செய்யது மஸ்வூத் ஜமாலி இந்நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கினார். பி.எஸ். முஹம்மது பாதுஷா, பி.ஜஃபருல்லாஹ் கான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  ஐ.ரீமா பல்கீஸ் திருமறை வசனங்களை ஓதி நிகழ்ச்சியைத் தொடங்கிவைத்தார். ஆயிஷா பதிப்பக நிறுவனர்களுள் ஒருவரான  எம். சாதிக் பாட்சா வரவேற்புரை நிகழ்த்தினார்.    இப்பதிப்பக மொழிபெயர்ப்பாளர் மௌலவி, நூ. அப்துல் ஹாதி பாகவி நூல்களை அறிமுகம் செய்து உரையாற்றினார்.

அதன்பின்னர், சமுதாயமே விழித்தெழு எனும் நூலை சென்னைப் பல்கலைக் கழக முந்நாள் துணைவேந்தர் டாக்டர் சே.சாதிக் வெளியிட, முதல்பிரதியை  முஹம்மது சதக் அறக்கட்டளையின் சேர்மேன் அல்ஹாஜ், டாக்டர், ஹமீது அப்துல் காதிர் அவர்களும்,   இரண்டாம் பிரதியை ஏ. அபூபக்கர் அவர்களும் பெற்றுக்கொண்டனர்.  அதன்பின்  நபிமார்கள் வரலாறு இரண்டாம் பாகத்தை மௌலவி, அ. முஹம்மது கான் ஃபாஸில் பாகவி வெளியிடமுதல் பிரதியை  புரொஃபஷனல் கூரியர் இயக்குநர் அஹ்மது மீரான் அவர்களும்இரண்டாம் பிரதியை பாத்திமா ஜுவல்லர்ஸ் நிர்வாக இயக்குநர் எச். ஜாஹிர் ஹுசைன் அவர்களும் பெற்றுக்கொண்டனர். அதைத் தொடர்ந்து நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.

அதன்பின்  டாக்டர் சே.சாதிக்  சமுதாயமே விழித்தெழு  நூலைப் பற்றிய ஆய்வுரை நிகழ்த்தினார்.  தொடர்ச்சியாக, மௌலவி, அ. முஹம்மது கான் ஃபாஸில் பாகவி  நபிமார்கள் வரலாறு நூலைப் பற்றிய ஆய்வுரை நிகழ்த்தினார். பின்னர், தமுமுகவின் தலைவரும் இராமநாதபுரம் தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினருமான  டாக்டர்,எம். எச். ஜவாஹிருல்லாஹ் அவர்களும், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.  அப்துர் ரஹ்மான்  அவர்களும் வாழ்த்துரை வழங்கினர்.  டாக்டர் ஏ.பீ. முஹம்மது அலி  ஐபிஎஸ் ஏற்புரையாற்றினார். இறுதியில், இந்நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய மௌலவி சா. யூசுஃப் சித்தீக் மிஸ்பாஹி  அவர்களின் நன்றியுரையுடன்  நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.

முனைவர், மௌலவி பி.எஸ். சையத் மஸ்வூத் ஜமாலி தமது உரையில் கூறியதாவது: பேரறிஞர் இமாம் இப்னு கஸீர் (ரஹ்) ஒரு தலைசிறந்த வரலாற்று ஆசிரியராகத் திகழ்ந்தார்.  அவர்தாம் முதன்முதலாக வரலாற்று நூலை எழுதுவதற்காக கோட்பாட்டுமுறையை (Methodology) உருவாக்கினார்.  அதற்கேற்ப அவர் தம் நூலில், யூதர்கள், கிறித்தவர்கள் உள்ளிட்டவர்களின் அனைத்துக் கருத்துகளையும் எடுத்து வைத்துக்கொண்டு, குர்ஆன்-ஹதீஸ் ஒளியில் அவற்றை ஆய்வுசெய்து, எவை சரியானவை , எவை தவறானவை  எனப் பாகுபடுத்திக் கூறியுள்ளார். அந்த வகையில் இந்நூல் ஓர் ஆதாரப்பூர்வமான நூல் என்பதில் எந்தச் சந்தேகமுமில்லை. இந்த நூல் தமிழில் வந்திருப்பது தமிழ்பேசும் அனைவரின் தாகத்தையும் தீர்க்கவல்லது. 

பேராசிரியர் அ.முஹம்மது கான் ஃபாஸில் பாகவி தமது உரையில் குறிப்பிட்டதாவது: இறைத்தூதர்கள் என்பவர்கள் யார்? அவர்களது இலக்கணம் என்ன என்ற வினாக்களுக்கு விடையாக அல்லாஹ் திருக்குர்ஆனில் `அல்அன்பியா எனும் அத்தியாயத்தில் இறைத்தூதர்களைப் பற்றிக் குறிப்பிடுகின்றான்.

அதில் ஓரிடத்தில் இப்படிக் கூறுகின்றான்: உமக்கு முன்னரும் மானிடர்களையே தவிர (வேறெவரையும்) நம்முடைய தூதர்களாக அனுப்பவில்லை; அவர்களுக்கு நாம் வேத அறிவிப்புச் செய்கிறோம்... உணவைச் சாப்பிடாமல் இருக்கின்ற உடலமைப்பை அவர்களுக்கு நாம் ஆக்கவில்லை; மேலும் அவர்கள் நிரந்தரமாக இருக்கவில்லை.

அதாவது இறைத்தூதர்கள் தெய்வப்பிறவி இல்லை;அவர்கள் வணங்கப்பட வேண்டியவர்கள் அல்லர்; அவர்களுக்கும் மற்றவர்களைப் போன்று பசிக்கும்; மேலும் அவர்கள் இறந்துபோகாமல் நிரந்தரமாக இருப்பவர்களும் அல்லர். இறைத்தூதர்களைப் பற்றிய இந்தத் தெளிவுதான் முஸ்லிம்களை ஒரு நிலையான கொள்கையில் உறுதியாக வைத்துள்ளது. எனவே இவர்களை யாரும் அவர்கள் தம் கொள்கையிலிருந்து திசைதிருப்பவோ ஏமாற்றவோ முடியாது.

ஆக,இத்தகைய சிறப்பு வாய்ந்த இறைத்தூதர்களைப் பற்றிய வரலாற்றைக்கொண்ட இந்நூல் மிகவும் பயனுள்ளது. வாங்கிப் படியுங்கள். இதை நீங்கள் வாங்கிப் படிப்பதன் மூலம் ஆயிஷா பதிப்பகத்தாருக்கு உதவி செய்வதாக எண்ணிக்கொள்ளாதீர்கள். மாறாக, கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள தகவல்களை உங்களுக்குத் தமிழில் தந்து, அவர்கள்தாம் உங்களுக்கும் இந்தச் சமுதாயத்துக்கும் உதவிசெய்கின்றார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

சட்டமன்ற உறுப்பினர், முனைவர் எம்.எச். ஜவாஹிருல்லாஹ் தமது உரையில் வலியுறுத்தியதாவது: இஸ்லாம் கல்வியை இரண்டாகப் பிரிக்காமல் ஒன்றாகவே பாவித்து வந்தது. அதனால்தான் பேரறிஞர் இமாம் இப்னு கஸீர் (ரஹ்), ஒரு தலைசிறந்த திருக்குர்ஆன் விரிவுரையாளராகத் திகழ்கின்ற அதேநேரத்தில், தலைசிறந்த வரலாற்றாசிரியராகவும் திகழ்கின்றார்.  எனவே இன்றைக்கு ஆங்காங்கே காணப்படுகின்ற ஒருங்கிணைந்த கல்விமுறையை நாம் விரிவுபடுத்த முயலவேண்டும்.

வியாழன், 16 ஜூன், 2011

எண்பத்து மூன்று வயதிலும்...


இவர் பெயர் நூர் முஹம்மது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ஆலங்குடியில் 1928ஆம் ஆண்டு பிறந்தார். இவருடன் பிறந்தவர்கள் 7 பேர் ஆவர். அவர்களுள் மூவர் பெண்கள்; நால்வர் ஆண்கள். அப்போது புதுக்கோட்டை சமஸ்தானத்தில் இராஜகோபாலத் தொண்டைமான் மன்னராக இருந்தார். சுதந்திரப் போராட்டக் காலத்தில் பிறந்த இவர் பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்த பள்ளியில் எட்டாம் வகுப்பு வரை பயின்றார். பின்னர் ஒரு கடையில் விற்பனையாளராகப் பணியைத் தொடங்கிய இவர், ஓர் எண்ணெய் ஆலையில் கணக்காளராக நீண்ட காலம் பணிசெய்து ஓய்வுபெற்றார்.

1964ஆம் ஆண்டில், இவர் தம் 36 ஆம் அகவையில் ஃபாத்திமா பீவி என்பாருடன் திருமண வாழ்க்கையைத் தொடங்கினார். அவர் மூலம் இவருக்கு ஒரு பெண்குழந்தையும் ஆறு ஆண்குழந்தைகளும் பிறந்தனர். அவர்களுள் சித்தீக், அப்துல் லத்தீப், அப்துல் ஹாதி, அப்துல் ரஜாக், முபாரக் நிசா ஆகியோரே தற்போது உள்ளனர். இவர் தம் மனைவி ஏழு குழந்தைகளைப் பெற்றெடுத்த பின்னர், சில மாதங்களாக நோய்வாய்ப்பட்டு 1982ஆம் ஆண்டு தமது 37ஆம் வயதில் இறப்பெய்தினார். அவர் இறந்தபோது அவருடைய கடைசிக் குழந்தை கைக்குழந்தையாக இருந்தது.

இவர் தம் பிள்ளைகளை நன்றாக வளர்க்க வேண்டும் என்ற தன்னலமற்ற ஒரே காரணத்துக்காக மறுமணம் ஏதும் செய்துகொள்ளாமல் தம் பிள்ளைகளை வளர்த்துவந்தார். அவர்கள் அனைவரையும் ஓரளவு படிக்கவைத்தார். பின்னர் வறுமை காரணமாக, ஒவ்வொருவரும் மளிகைக் கடையில் பணிபுரியத் தொடங்கிவிட்டனர். மிகக் குறைந்த சம்பளத்தில் பணிபுரிந்தாலும், கிடைத்த வருவாய்க்குள் தம் பிள்ளைகள் அனைவரையும் வளர்த்து ஆளாக்கினார்; வறுமையிலும் இவர் ஒருபோதும் பிறரிடம் கடன் வாங்கியதில்லை. நேர்மையும் நாணயமும் இவரை மக்கள் மத்தியில் தலைநிமிர்ந்து நடக்கச்செய்தன. இவர் தம் கடைசி மகனைத் தவிர மற்ற அனைவருக்கும் திருமணம் செய்துவைத்துவிட்டார். இப்போது அவருக்கு 16 பேரக் குழந்தைகள் உள்ளனர்.

இவர் தற்போது தம் இரண்டாவது மகன் சித்தீக் உடன் கும்பகோணம் அருகே உள்ள சுவாமிமலை எனும் ஊரில் வசித்துவருகிறார். சிறுவயது முதல் தொழுகை, நோன்பு ஆகிய இறைக்கடமைகளைக் கடைப்பிடித்துவருகிறார். இப்போது இவருக்கு 83 வயதாகியும் திருக்குர்ஆன் ஓதுவதையும், தொழுவதையும் கைவிடவில்லை. இப்போதும் இவர் பள்ளிக்கு நடந்தே சென்று ஐங்காலத் தொழுகையை ஜமாஅத்துடன் நிறைவேற்றி வருகிறார். இவரைக் காண்போர் இவரின் ஆரோக்கியத்தையும், இறைக்கடமையை நிறைவேற்றும் ஆர்வத்தையும் கண்டு வியப்படைகின்றனர். வல்ல அல்லாஹ் அவருக்கு நிறைந்த சுகத்துடன்கூடிய நீண்ட ஆயுளை வழங்க துஆ செய்வோம்.


சனி, 4 ஜூன், 2011

இப்ராஹீம் நபியின் வரலாறு (தொடர் 23)இப்ராஹீம் நபியின் சிறப்புகள்


இஸ்ஹாக் பின் யசார் (ரஹ்) கூறியுள்ளார்: இப்ராஹீம் (அலை) அவர்களை அல்லாஹ் தன் உற்ற நண்பராக ஆக்கியபோது, அவர்களின் உள்ளத்தில் அச்சத்தைப் போடப்பட்டது. அப்போது வானில் பறக்கின்ற பறவைகளின் இறக்கையின் சப்தத்தைப் போன்று அவர்களின் இதயத் துடிப்பின் சப்தத்தைக் கேட்க முடிந்தது. இதை இப்னு அபீஹாத்திம் (ரஹ்)அறிவித்துள்ளார். (நூல்: தஃப்சீர் இப்னு கஸீர்)

உபைத் பின் உமைர் (ரஹ்) கூறியுள்ளார்: இப்ராஹீம் நபி மக்களுக்கு விருந்து கொடுக்கின்ற பழக்கமுடையவராக இருந்து வந்தார். எனவே, ஒரு நாள் அவர் விருந்துகொடுப்பதற்காக யாரேனும் ஒருவர் கிடைப்பார் என்றெண்ணித் தேடிச் சென்றார். விருந்தாளியாக அவர் யாரையும் காணவில்லை. எனவே, அவர் தம் இல்லம் திரும்பினார். அங்கே ஒருவர் நின்றிருப்பதைக் கண்ட அவர், அல்லாஹ்வின் அடிமையே! என் அனுமதியின்றி நீர் எப்படி என் வீட்டுக்குள் நுழைந்தீர்? என்று வினவினார். நான் இறைவனின் அனுமதிபெற்று நுழைந்தேன் என்று அவர் பதிலளித்தார். நீர் யார்? என்று வினவினார். நான் மரணத்தின் வானவர். என்னை என் இறைவன் அவனுடைய அடியார்களுள் ஒருவரிடம் அனுப்பியுள்ளான். அல்லாஹ் அவரைத் தன் உற்ற நண்பராக ஆக்கிக்கொண்டுள்ள நற்செய்தியை அவருக்குத் தெரிவிக்கச் சொல்லியுள்ளான் என்று பதிலுரைத்தார்.

அவர் யார்? என்று (ஆர்வமுடன்) இப்ராஹீம் நபி வினவினார். மேலும் அவர், அல்லாஹ்வின் மீது ஆணையாக! நீர் அவரைப் பற்றி எனக்கு அறிவித்தால், அவர் ஊரின் எல்லையில் இருந்தாலும் நான் அவரிடம் செல்வேன்; எங்களிடையே மரணம் பிரிக்கின்ற வரை நான் அவருடைய அண்டைவீட்டுக்காரராக இருப்பேன் என்று கூறினார். அந்த அடியார் நீர்தாம் என்று அவ்வானவர் கூறினார். நானா? என்று (ஆச்சரியம் மேலிடக்) கேட்டார். அவர் ஆம்! என்று கூறியவுடன், எதனால் என் இறைவன் என்னை(த் தன்னுடைய) உற்ற நண்பராக ஆக்கிக்கொண்டான்? என்று வினவினார். ஏனென்றால், நிச்சயமாக நீர் மக்களுக்குக் கொடுக்கின்றீர்; (ஆனால்) நீர் அவர்களிடம் கேட்பதில்லை என்று பதிலுரைத்தார். இதனை இப்னு அபீ ஹாத்திம் (ரஹ்) அறிவித்துள்ளார். (நூல்: தஃப்சீர் இப்னு கஸீர்)
அல்லாஹ் திருக்குர்ஆனில் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் இப்ராஹீம் நபியைப் புகழ்ந்து கூறியுள்ளான். முப்பந்தைந்து இடங்களில் அல்லாஹ் அவரைப் புகழ்ந்து கூறியுள்ளான் என்று கூறப்பட்டுள்ளது. அவற்றுள் அல்பகரா அத்தியாயத்தில் மட்டும் பதினைந்து தடவை கூறியுள்ளான் என்று கூறப்பட்டுள்ளது.

இப்ராஹீம் (அலை) அவர்கள், `மனத்திடம் மிக்கவர் (உலுல் அஸ்ம்)கள் ஐவருள் ஒருவராவார். அவர்களின் பெயர்கள் திருக்குர்ஆனில் குறிப்பிட்டுக் கூறப்பட்டுள்ளன. அவர்கள் மற்ற நபிமார்களைவிடச் சிறப்பிற்குரியவர்கள். அவர்களைப் பற்றி அல்லாஹ் அல்அஹ்ஸாப் மற்றும் அஷ்ஷூரா ஆகிய அத்தியாயங்களில் கூறியுள்ளான்.

*அல்லாஹ் கூறுகின்றான்: (நபியே! நம் கட்டளைகளை எடுத்துக்கூறுமாறு அனைத்து) நபிமார்களிடமும், (குறிப்பாக) உம்மிடமும், நூஹ், இப்ராஹீம், மூசா, மர்யமுடைய மகன் ஈசா ஆகியோரிடமும் நாம் வாக்குறுதி வாங்கியபோது, மிக்க உறுதியான வாக்குறுதியையே அவர்களிடம் வாங்கினோம். (33: 7)

* நூஹுக்கு எதை அவன் உபதேசித்தானோ அதையே உங்களுக்கும் அவன் மார்க்கமாக்கியிருக்கின்றான். ஆகவே, (நபியே) நாம் உமக்கு தூதுச்செய்தி (வஹீ) மூலம் அறிவிப்பதும் இப்ராஹீமுக்கும், மூசாவுக்கும், ஈசாவுக்கும் நாம் உபதேசித்ததும் என்னவென்றால், நீங்கள் (அனைவரும்) மார்க்கத்தை நிலைநிறுத்துங்கள். நீங்கள் அதில் பிரிந்துவிடாதீர்கள் என்பதேயாகும். (42: 13) மனத்திடம் மிக்கவர்களுள் முஹம்மத் (ஸல்) அவர்களுக்குப்பின், இப்ராஹீம் நபிதான் மிகச் சிறப்புக்குரியவர் ஆவார்.

முஹம்மத் (ஸல்) அவர்கள் இப்ராஹீம் நபியை ஏழாம் வானத்தில் கண்டார்கள். அவர் அங்குள்ள `பைத்துல் மஅமூரில் தம் முதுகை வைத்துச் சாய்ந்தவராக இருந்தார். அந்த மஸ்ஜிதுக்கு நாள்தோறும் எழுபதாயிரம் வானவர்கள் வந்துசெல்கின்றார்கள். அவர்களுள் யாரும் மீண்டும் வருவதில்லை. அனஸ் (ரளி) அவர்களிடமிருந்து ஷரீக் பின் அபூநமிர் அறிவித்துள்ள மிஅராஜ் தொடர்பான ஹதீஸில் ஒரு தகவல் கூறப்பட்டுள்ளது. அதாவது நிச்சயமாக இப்ராஹீம் நபி ஆறாம் வானத்திலும் மூசா நபி ஏழாம் வானத்திலும் இருந்தார்கள். இந்நபிமொழியில் ஷரீக் எனும் அறிவிப்பாளர் பற்றிக் குறைகூறப்பட்டுள்ளது. ஆகவே, முதலாவது நபிமொழிதான் சரியானது.

அஹ்மத் (ரஹ்) கூறியுள்ளார்: நிச்சயமாக கண்ணியத்துக்குரியவரின் மகனான கண்ணியத்துக்குரியவரின் மகனான கண்ணியத்துக்குரியவரின் மகன்தான் கண்ணியத்துக்குரியவர். அவர் இறைவனின் உற்ற நண்பர் இப்ராஹீம் (அலை) அவர்களின் மகனான இஸ்ஹாக் (அலை) அவர்களின் மகனான யஅகூப் (அலை) அவர்களின் மகனான யூசுஃப் (அலை) அவரே ஆவார் என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரளி) அறிவித்துள்ளார்கள். (நூல்: அஹ்மது)1

மூசா நபியைவிட இப்ராஹீம் நபி சிறப்புக்குரியவர் என்று பின்வருகின்ற நபிமொழி அறிவிக்கிறது. இப்ராஹீம் நபி உள்பட (மனிதப்) படைப்பினம் யாவும் என்னை விரும்புகின்ற நாளுக்காக நான் மூன்றாவதைப் பிற்படுத்திவைத்தேன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக உபை பின் கஅப் (ரளி) அறிவித்துள்ளார்கள். (நூல்: முஸ்லிம்)2

இந்த இடம்தான், `மகாமே மஹ்மூத் ஆகும். அது பற்றி நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்: நான் பெருமைக்காகச் சொல்லவில்லை. நான்தான் மறுமையில் ஆதமுடைய பிள்ளைகளின் தலைவர் ஆவேன். (நூல்: முஸ்லிம்) பின்னர், பரிந்துரையை நாடி மக்கள் ஒவ்வொரு நபியிடமும் வருவதைப் பற்றிக் கூறினார்கள். முதலில் ஆதி மனிதர் ஆதம் (அலை) அவர்களிடம் பரிந்துரையைத் தேடி மக்கள் வருவார்கள். பின்னர் நூஹ் (அலை); பின்னர் இப்ராஹீம் (அலை); பின்னர் மூசா (அலை); பின்னர் ஈசா (அலை); அனைவரும் (ஒரு காரணத்தைச் சொல்லி) அதிலிருந்து விலகிக்கொள்வார்கள். இறுதியில் அவர்கள் முஹம்மத் நபியவர்களிடம் வருவார்கள். அதற்கு (பரிந்துரைக்கு) நான்தான்; அதற்கு நான்தான் என்று அவர்கள் கூறுவார்கள்...

இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம், மனிதர்களுள் மிகவும் கண்ணியத்துக்குரியவர் யார்? என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், மனிதர்களுள் அல்லாஹ்வுக்கு அதிகமாக அஞ்சுபவர்தாம் என்று பதிலளித்தார்கள். மக்கள், இதைப் பற்றி உங்களிடம் நாங்கள் கேட்கவில்லை என்று கூறினர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், அப்படியென்றால் மக்களிலேயே மிகவும் கண்ணியத்துக்குரியவர் அல்லாஹ்வின் உற்ற நண்பர் (இப்ராஹீம்) உடைய மகனான அல்லாஹ்வின் தூதர் (இஸ்ஹாக்) உடைய மகனான அல்லாஹ்வின் தூதர் யூசுஃப் அவர்கள்தாம் என்று கூறினார்கள்.

மக்கள், நாங்கள் இது பற்றியும் உங்களிடம் கேட்கவில்லை என்று கூறினார்கள். உடனே, நபி (ஸல்) அவர்கள், அப்படியென்றால், அரபியர்களின் (பரம்பரைகளான) சுரங்கங்களைப் பற்றி நீங்கள் என்னிடம் கேட்கிறீர்களா? என்று வினவினார்கள். அம்மக்கள், ஆம்! என்று கூறினார்கள். அறியாமைக் காலத்தில் அவர்களுள் சிறந்தவர்களாக இருந்தவர்கள் இஸ்லாத்தைத் தழுவிடும்போதும் சிறந்தவர்களாக இருப்பார்கள்; அவர்கள் மார்க்க ஞானத்தைப் பெற்றுக்கொண்டால் என்று பதிலளித்தார்கள் என அபூஹுரைரா (ரளி) அறிவித்துள்ளார்கள். (நூல்: புகாரீ)3

மேற்கண்ட இருவர் அறிவித்துள்ள ஹதீஸிலிருந்தும் அப்தஹ் பின் சுலைமான் அறிவித்துள்ள ஹதீஸிலிருந்தும் வேறோர் இடத்தில் புகாரீ இமாம் இந்த ஹதீஸை இணைத்துள்ளார். நசயீ இமாம், முஹம்மத் பின் பிஷ்ர் அறிவிக்கின்ற ஹதீஸ் மூலம் பதிவுசெய்துள்ளார். அவர்கள் நான்கு பேரும் உபைதுல்லாஹ் பின் உமர்-சயீத்-அபூஹுரைரா-நபி (ஸல்) அவர்கள்-என்ற வரிசையில் அறிவித்துள்ளார்கள் என்று இப்னு கஸீர் (ரஹ்) கூறியுள்ளார்.
அஹ்மத் (ரஹ்) கூறுகிறார்: நிச்சயமாக கண்ணியத்துக்குரியவரின் மகனான கண்ணியத்துக்குரியவரின் மகனான கண்ணியத்துக்குரியவரின் மகன்தான் கண்ணியத்துக்குரியவர். அவர் இறைவனின் உற்ற நண்பர் இப்ராஹீம் (அலை) அவர்களின் மகனான இஸ்ஹாக் (அலை) அவர்களின் மகனான யஅகூப் (அலை) அவர்களின் மகனான யூசுஃப் (அலை) அவரே ஆவார் என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரளி) அறிவித்துள்ளார்கள். (நூல்: அஹ்மத்)4

நிச்சயமாக கண்ணியத்துக்குரியவரின் மகனான கண்ணியத்துக்குரியவரின் மகனான கண்ணியத்துக்குரியவரின் மகன்தான் கண்ணியத்துக்குரியவர். அவர் இப்ராஹீம் (அலை) அவர்களின் மகனான இஹாக் (அலை) அவர்களின் மகனான யஅகூப் (அலை) அவர்களின் மகனான யூசுஃப் (அலை) அவரே ஆவார் என இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு உமர் (ரளி) அறிவித்துள்ளார்கள். (நூல்: புகாரீ)

இமாம் அஹ்மத் (ரஹ்) அறிவிக்கின்ற நபிமொழி: (மறுமை நாளில்) மக்கள் செருப்பின்றி நிர்வாணிகளாக விருத்த சேதனம் செய்யப்படாதவர்களாக (எழுப்பப்பட்டு) ஒன்றுகூட்டப்படுவார்கள். (அவர்களுள்) முதன் முதலில் ஆடை அணிவிக்கப்படுபவர் இப்ராஹீம் நபி ஆவார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறிவிட்டுப் பின்வருகின்ற இறைவசனத்தை ஓதிக்காட்டினார்கள்: முதல் படைப்பை நாம் ஆரம்பித்தது போன்றே, (அந்நாளில்) அதனை மீட்டுவோம். (21: 104) இதனை இப்னு அப்பாஸ் (ரளி) அறிவித்துள்ளார்கள். (நூல்: முனத் அஹ்மத்)5

இப்ராஹீம் (அலை) அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள இச்சிறப்பு, நபி (ஸல்) அவர்களின் `மகாமே மஹ்மூத் உடைய சிறப்பை மேலோங்காது. அச்சிறப்பைக் கண்டு முந்தியவர்களும் பிந்தியவர்களும் பொறாமைகொள்வார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். அஹ்மத் (ரஹ்) அறிவிக்கின்ற மற்றொரு நபிமொழி: ஒருவர் நபி (ஸல்) அவர்களை, மக்களுள் சிறந்தவரே! என்று அழைத்தார். (உடனே அதற்குப் பதிலளிக்கும்வண்ணம்) அவர் இப்ராஹீம் (அலை) ஆவார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அனஸ் பின் மாலிக் (ரளி) அறிவித்துள்ளார்கள்.6

நபி (ஸல்) அவர்கள் அவ்வாறு கூறியது, அவர்கள்தம் தந்தை மீது கொண்டிருந்த மதிப்பையும், அவர்களின் பணிவையும் காட்டுகிறது. மேலும் ஓரிடத்தில், நபி (ஸல்)அவர்கள் கூறியுள்ளார்கள்: (மற்ற) நபிமார்களைவிட என்னைச் சிறப்புப்படுத்தாதீர்கள்! மேலும் கூறினார்கள்: மூசா நபியைவிட என்னைச் சிறப்புப்படுத்தாதீர்கள்! ஏனென்றால் மக்கள் மறுமையில் (அந்நாளின் திடுக்கத்தால்) கீழே விழுந்துவிடுவார்கள். அவர்களுள் நான்தான் முதலில் தெளிவடைவேன். மூசா நபி அல்லாஹ்வின் சிம்மாசனத்தின் தூணை இறுக்கிப் பிடித்தவாறு நின்றுகொண்டிருப்பதைக் காண்பேன். அவர் எனக்குமுன் தெளிவடைந்தாரா அல்லது அவர் தூர்சினாய் மலையில் (இறைவனைச் சந்தித்த) நிகழ்ச்சியின்போது மூர்ச்சையாகி விழுந்ததற்குக் கிடைத்த கூலியா என்று எனக்குத் தெரியாது. (நூல்: புகாரீ)

மறுமை நாளில் நான்தான் ஆதமுடைய பிள்ளைகளின் தலைவர் ஆவேன் என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளதற்கு மேற்கூறப்பட்டவை முரணாக ஆகா. அதாவது, இப்ராஹீம் நபியின் சிறப்பு நபி (ஸல்) அவர்களின் சிறப்பை விஞ்சிவிடாது. அதேபோல் ஸஹீஹ் முஸ்லிம் நூலில் இடம்பெற்றுள்ள இந்த நபிமொழியும் முரணாக ஆகாது. இப்ராஹீம் நபி உள்பட (மனிதப்) படைப்பினம் யாவும் என்னை விரும்புகின்ற நாளுக்காக நான் மூன்றாவதைப் பிற்படுத்திவைத்தேன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக உபை பின் கஅப் (ரளி) அவர்கள் அறிவித்துள்ளார்கள். (நூல்: முஸ்லிம்)

முஹம்மத் (ஸல்) அவர்களுக்குப்பின் இப்ராஹீம் நபியவர்கள் இறைத்தூதர்களுள் சிறப்பிற்குரியவராகவும் மனத்திடம் மிக்க ஐவருள் ஒருவராகவும் ஆகிவிட்டபோது, தொழுகின்ற ஒவ்வொருவரும் தம்முடைய இறுதி இருப்பில், `இந்தப் பிரார்த்தனையைச் செய்ய அல்லாஹ் ஏவியுள்ளான். இது புகாரீ, முஸ்லிம் இரண்டு நபிமொழித்தொகுப்புகளிலும் இடம்பெற் றுள்ளது.

கஅப் பின் உஜ்ரா (ரளி) கூறுகிறார்: இறைத்தூதரே! உங்கள் மீது சலாம் சொல்வதை நாங்கள் அறிந்துள்ளோம். (ஆனால்) நாங்கள் உம்மீது ஸலவாத்து சொல்வது எப்படி? என்று நாங்கள் கேட்டோம். அவர்கள் சொன்னார்கள்: அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா ஸல்லைத்த அலா இப்ராஹீம வஅலா ஆலி இப்ராஹீம். வபாரிக் அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா பாரக்த்த அலா இப்ராஹீம வஅலா ஆலி இப்ராஹீம். இன்ன(க்)க ஹமீதும் மஜீத்- இறைவா! இப்ராஹீம் மீதும் இப்ராஹீமுடைய குடும்பத்தார் மீதும் நீ கருணைபுரிந்ததைப்போல் முஹம்மத்மீதும் முஹம்மதுடைய குடும்பத்தார்மீதும் நீ கருணைபுரிவாயாக! மேலும், இப்ராஹீம்மீதும் இப்ராஹீமுடைய குடும்பத்தார்மீதும் நீ அருள் வளம் பொழிந்ததைப்போல் முஹம்மத்மீதும் முஹம்மதுடைய குடும்பத்தார் மீதும் நீ அருள்வளம் பொழிவாயாக! நிச்சயமாக, நீயே புகழுக்குரியவனும் கண்ணியம் நிறைந்தவனும் ஆவாய் என்று சொல்லுங்கள் எனப் பதிலளித்தார்கள். (நூல்கள்: புகாரீ, முஸ்லிம்)

----------அடிக்குறிப்புகள்------------


1. இதை அஹ்மத் (ரஹ்) மட்டும் அறிவித்துள்ளார்.

2. ஒவ்வொரு நபிக்கும் மூன்று பிரார்த்தனைகளை உடனடியாக ஏற்றுக்கொள்வது அல்லாஹ்வின் வழக்கம். அந்த வழக்கப்படி முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு மூன்று பிரார்த்தனைகளை அங்கீகரித்துக்கொள்வதாக அல்லாஹ் வாக்களித்தான். அவற்றுள் இரண்டை அவர்கள் இந்தச் சமுதாயத் துக்காக இவ்வுலகிலேயே கேட்டுவிட்டார்கள். இன்னும் ஒன்றை, மறுமையில் தம் சமுதாயத்துக்குப் பரிந்துரை செய்வதற்காக விட்டுவைத்துள்ளார்கள்.

3. இவ்வாறே புகாரீ (ரஹ்) வேறு பல இடங்களில் அறிவித்துள்ளார். முஸ்லிம் (ரஹ்) அவர்களும் நசயீ (ரஹ்) அவர்களும் பல வழிகளில் இந்த நபிமொழியைப் பதிவு செய்துள்ளார்கள். பிறகு, புகாரீ (ரஹ்) கூறியுள்ளார்: அபூஉசாமா மற்றும் முஅதமிர் இருவரும் உபைதுல்லாஹ்-சயீத்-அபூஹுரைரா-நபி(ஸல்)அவர்கள்-என்ற வரிசையில் இந்த நபிமொழியை அறிவித்துள்ளனர்.

4. இதை அஹ்மத் (ரஹ்) மட்டும் அறிவித்துள்ளார்.

5. இதே ஹதீஸை புகாரீ (ரஹ்) மற்றும் முஸ்லிம் (ரஹ்) இருவரும் சுஃப்யான் அஸ்ஸவ்ரீ மற்றும் ஷுஅபா பின் அல்ஹஜ்ஜாஜ்- ஆகியோரிடமிருந்து பதிவுசெய்துள்ளார்கள். சுஃப்யான் அஸ்ஸவ்ரீ மற்றும் ஷுஅபா பின் அல்ஹஜ்ஜாஜ் இருவரும் முஃகைரா பின் அந்நுஅமான் அந்நஃகயீ அல்கூஃபி-சயீத் பின் ஜுபைர்-இப்னு அப்பாஸ் (ரளி)-என்ற வரிசையில் அறிவித்துள்ளார்கள்.

6. முஸ்லிம் (ரஹ்) இந்த நபிமொழியை அஸ்ஸவ்ரீ, அப்துல்லாஹ் பின் இத்ரீஸ், அலீ பின் முஸ்ஹிர், முஹம்மத் பின் ஃபுளைல் போன்றோரிடமிருந்து பதிவுசெய்துள்ளார்கள். இந்நால்வரும் அல்முக்த்தார் பின் ஃபுல்ஃபுல் என்பவரிடமிருந்து அறிவித்துள்ளனர்.

அரபி:           அல்பிதாயா வந்நிஹாயா (இமாம் இப்னு கஸீர்- ரஹ்) 
தமிழாக்கம்: நூ. அப்துல் ஹாதி பாகவி M.A., M.Phil.

வியாழன், 2 ஜூன், 2011

உழைப்பே உயர்வு


தர்மம் செய்தல் ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமையாகிறது என்று நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டபோது, இறைத்தூதர்  அவர்களே! ஒருவர் (தர்மம் செய்வதற்கு எப்பொருளையும்) காணவில்லையாயின் (அவர் என்ன செய்வார்?) என வினவியதற்கு, அவர் தம் கைகளால் உழைத்து, தாமும் அதில் பலன் அடைந்து, தர்மமும் செய்யட்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது நபித் தோழர்கள், அவரால் அதுவும் இயலவில்லை என்றால்? என வினவியதும், அவர் நன்மையை (பிறருக்கு) ஏவட்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது, அம்மனிதரால் அதுவும் இயலவில்லை என்றால்? என நபித்தோழர்கள் வினவவே, அவர் தீமை செய்வதை விட்டுத் தவிர்ந்து  கொள்ளட்டும். அதுவே தர்மமாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ மூசா அல்அஷ்அரீ (ரளி) அறிவிக்கிறார்கள்.- நூல்கள்:புகாரீ, முஸ்லிம்

இந்த நபிமொழியில் `தர்மம் செய்தல் ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமையாகும் என்பதும் `அது இயலாவிட்டால் தம் கைகளால் உழைத்துப் பொருளீட்டித் தாமும் உண்டு, பிறருக்கும் தர்மம் வழங்க வேண்டும் என்பதும் உழைப்பின் அவசியத்தையும் அதன் உயர்வையுமே குறிக்கின்றன. உழைப்புதான் ஒருவரின் வாழ்க்கைக்கான முன்னேற்றத்தின் அடிப்படை. 

உழைப்பு இல்லையேல் எவ்வளவு பெரிய செல்வந்தனும் வறுமையையே சந்திப்பான். இன்றைக்கு வெளிப்படையாகப் பார்த்தால் அனைவரும் உழைப்பதைப்போன்றே தெரியும். ஆனால் சிலரைத் தவிர பலரும் உழைக்கவில்லை என்பதே உண்மை. உழைப்பு என்றால் அதில் நேர்மையும் நாணயமும் இருக்க வேண்டும். தான் உழைத்துப் பிறருக்குக் கொடுக்க வேண்டும் என்ற உயர்ந்த எண்ணமும் இருக்க வேண்டும். மாறாக, இன்றைக்கு உழைப்பவர்கள் குறுக்கு வழியில் எவ்வாறு பொருளீட்டலாம் என்றே யோசித்துக்கொண்டிருக்கின்றனர். இவர்களால் தம் உழைப்பின் மூலம் ஒருபோதும் மனநிறைவு அடைய முடியாது. நம்முள் சிலர் உழைக்காம லேயே உண்ணலாம் என்று நினைத்துக்கொண்டிருக்கின்றனர். ஆம், பார்க்கும் இடமெல்லாம் பிச்சைக்காரர்கள். இவர்கள் உழைக்காமல் உடல் வளர்ப்பவர்கள். அன்று பசிக்காகப் பிச்சையெடுத்தவர்கள் இன்று அதையே ஒரு தொழிலாக ஆக்கிக்கொண்டுவிட்டார்கள். இப்படிப்பட்டவர்களும் மனநிறைவடைய முடியாது.

வேறு சிலர் நம்முள் இருக்கின்றார்கள். பிறரின் உழைப்பைச் சுரண்டி உண்பவர்கள். ஏழைகளிடம் பகல் முழுக்க வேலை வாங்கிக்கொண்டு அவர்களுக்குரிய ஊதியத்தை முழுமையாகக் கொடுக்காமல் இழுத்தடிப்பார்கள்; அல்லது அறவே கொடுக்காமல் அடிமைப்படுத்துவார்கள். இப்படிப்பட்டவர்கள் இறைவனின் கோபப்பார்வைக்குரியவர்கள் ஆவர். இதற்காகவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், உழைப்பாளியின் வியர்வை உலருமுன்னரே அவருடைய கூலியைக் கொடுத்துவிடுங்கள் என்று கூறிச்சென்றார்கள். 

உழைப்பாளியின் சிறப்பைப் பற்றிக் கூறும்போது, ஓர் உண்மையான, நம்பிக்கையான வியாபாரி நபிமார்களுடனும், வாய்மை யாளர்களுடனும், இறைப்பாதையில் உயிர்த்தியாகம் செய்தவர்களுடனும் இருப்பார் என்று கூறினார்கள். (நூல்: திர்மிதீ-1209)

இந்த அளவுக்கு ஒரு வியாபாரிக்குச் சிறப்பளிக்கப்படுவதன் காரணம் என்ன? ஒருவர் வியாபாரம் செய்கின்றபோது அவர் கொடுக்கவும் வாங்கவும் செய்கிறார். அதில் அவர் உண்மையாளராக இருக்க வேண்டும்; பொய் சொல்லக்கூடாது; நியாயமான முறையில் வியாபாரம் செய்ய வேண்டும். அளக்கின்றபோதும் நிறுக்கின்றபோதும் நேர்மையாகச் செயல்பட வேண்டும். இத்தனை சோதனைகளையும் மீறித்தான் அவர் வியாபாரம் செய்ய வேண்டும். எனவேதான் வியாபாரிகளுக்கு அந்தச் சிறப்பு.

ஆக, உழைப்புதான் ஒரு மனிதனை சுயமரியாதையோடும், கண்ணியத்தோடும் வாழ வைக்கிறது. அதுவே அவனை வாழ்வில் உயர்த்துகிறது. ஆனால் அது அல்லாஹ்வுக்குப் பிடித்தமான முறையிலும், இறைத்தூதர் (ஸல்) அவர்கள் காட்டிய வழிமுறைப்படியும் இருக்க வேண்டும். நாம் நன்றாக உழைத்து, நாமும் உண்டு, பிறருக்கும் கொடுத்து வாழப் பழகுவோம்! உழைப்பே உயர்வென முழங்குவோம்!