வியாழன், 18 அக்டோபர், 2018

உன்னை நீயே செதுக்கு!


-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.

(‘நீ’ எனும் சொல்லை ‘நீங்கள்’ என்று படித்துக்கொள்ளுங்கள். எழுத்தின் ஓட்டத்திற்கேற்ப உணர்வுப்பூர்வமாக இருக்கவே ஒருமையில் எழுதப்பட்டுள்ளது.) 

உன்னை நீயே அடக்கு; உனக்காக நீயே திட்டமிடு; அத்திட்டத்தின்படி நீ செயல்படு; எண்ணியதை முடி; உன்னை நீயே பாராட்டிக்கொள்; உன்னை நீயே தட்டிக்கொடு; சோர்விலிருந்து சுறுசுறுப்படை; உன்னை நீ புதுப்பித்துக்கொள்ள நாள்தோறும் உன்னை நீயே செதுக்கு; உன் அறியாமை இருளை விலக்கு; உன் அறியாமையை விலக்க, நாள்தோறும் ஒவ்வொரு செதிலாய் உன்னிலிருந்து பெயர்த்தெடு; மக்கள் மத்தியில் பேரறிஞராய் உயர்ந்திடு.

உள்ளுணர்வுகளைத் தட்டியெழுப்பும் இவ்வரிகளை நான் உனக்காக எழுதவில்லை; எனக்காக நான் எழுதிக்கொள்கிறேன். ஆம்! மேற்கண்ட வார்த்தைகளை மெய்ப்பிக்கும் வண்ணம் நான் இப்போது ஒரு புதிய முயற்சியைத் தொடங்கியுள்ளேன். அதை உன்னோடு பகிர்ந்துகொண்டு, உன் துஆவைப் பெறுவதற்காகவே இதை எழுதுகிறேன். ஏனென்றால் நான் இதுவரை வளர்ந்துள்ளதும் உயர்ந்துள்ளதும் நல்லுள்ளம் கொண்டோரின் துஆவாலும் வாழ்த்துக்களாலும்தான் என்பதை நான் மறவேன். 

அது என்ன புதிய முயற்சி? அது இந்த வயதில் சாத்தியமா? என்று நீ கேட்கலாம். “அது சாத்தியமா?” என்று நாம் கேட்டுக்கொண்டே காலம் கடத்துவதற்குள் மற்றொருவன் அதைச் செய்து முடித்துவிடுகிறான். எனவே சாத்தியமா என்ற  கேள்விக்கே இடமில்லை. இறைவன்மீது வலுவான நம்பிக்கை வைத்துத் தொடங்கிவிட்டால் அதை அடைகின்ற வரை போய்க்கொண்டே இருக்க வேண்டியதுதான். அது என்ன என்பதைச் சற்று நேரத்தில் சொல்கிறேன். 

அதற்குமுன் சிலவற்றைச் சொல்லிவிடுகிறேன். நான் பாக்கியாத்தில் ஓதிய காலத்தில், மதுரை ஆசியன் இன்ஸ்டிட்யூட் வெளியிட்டிருந்த தமிழ்வழி  ஆங்கிலப் பயிற்சிப் புத்தகத்தை சகவகுப்புத்தோழர் நூருல் அமீனிடமிருந்து ஐம்பது ரூபாய்க்கு வாங்கிப் படிக்கத் தொடங்கினேன்.  அதற்குப்பின் விவேகானந்தா இன்ஸ்டிட்யூட் மூலம் வெளிவந்த நூல் தொடங்கி பல்வேறு ஆங்கில இலக்கண நூல்களைப் படித்துக்கொண்டே இருந்தேன். வருடங்கள் உருண்டோடின. இன்று, ‘முஸ்லிம் ஃபேமிலி’ எனும் ஆங்கில நூலை ‘இஸ்லாமிய இல்லறம்’ எனும் தலைப்பில் தமிழாக்கம் செய்துள்ளேன். (400 பக்கங்களுக்கு மேல் உள்ள இந்நூல் மூன்று பதிப்புகளைக் கண்டுள்ளது.)

ஒரு பருவத்தில் தொடங்குகின்ற முயற்சி, சில ஆண்டுகளுக்குப்பின் ஒரு திறமையாக மிளிர்வதை நீ காணலாம். இதைத்தான் நான் இப்படிச் சொல்கிறேன்: “உன் அறியாமையை உன்னிலிருந்து செதில் செதிலாய்ப் பெயர்த்தெடு; மக்கள் மத்தியில் பேரறிஞராய் ஒளிர்ந்திடு.”

அதுபோலவே, தமிழ் இலக்கண நூல்களை மிகுதியாக வாசித்துக்கொண்டே இருந்தேன். தமிழ் இலக்கணக் குறிப்புகளையும் கருத்தூன்றிப் படித்தேன்; படித்துக்கொண்டே இருக்கிறேன். “அடிக்க அடிக்க அம்மியும் நகரும்” என்ற முதுமொழிக்கேற்ப, படிக்கப் படிக்க மனத்தில் ஆழமாக அவை பதியும் என்பதும் உண்மை. அதன் பயனாக பாக்கியாத்தில் அல்இர்ஷாத்-கையேட்டுப் பிரதிக்கு ஆசிரியராக இருந்து, இன்று ‘இனிய திசைகள்’ எனும் மாத இதழுக்குத் துணையாசிரியராக இருந்து வருகிறேன். மேலும் பல்வேறு தமிழ்நூல்களைப் பிழைதிருத்தம் செய்து, அவற்றைச் செவ்வையாக்கும் பணியையும் மேற்கொண்டு வருகிறேன். 

ஒரு காலத்தில் தூவுகின்ற விதையும், நட்டு வைக்கின்ற செடியும் பிற்காலத்தில் விருட்சமாகிப் பயன் நல்குவதைப்போல், ஒரு காலத்தில் நீ எடுத்து வைக்கின்ற முன்னேற்றத்திற்கான காலடி பின்னொரு காலத்தில், அது உன்னுள் ஒரு திறமையாக மேம்படும். எனவே நீ உன் வயதைக் கருத்தில் கொள்ளாமல் இன்று தொடங்குகின்ற முயற்சி, சில ஆண்டுகள் கழித்து, அது ஒரு திறமையாக உன்னுள் வளர்ந்திருப்பதைக் காண்பாய்.  

சொல்ல வந்ததைச் சொல்லிவிடுகிறேன். ஏதாவது ஓர் அரும்பணியைச் செய்ய வேண்டுமென எண்ணிக்கொண்டிருந்தேன். உலகில் எத்தனையோ பேருக்கு வாய்த்துள்ள நற்பேறு எனக்கு மட்டும் வாய்க்காமலா போய்விடும் என்ற உயர் எண்ணத்தில், திருக்குர்ஆனை மனனம் செய்யலாமே என முடிவெடுத்து, உடனடியாகத் தொடங்கிவிட்டேன். 

சில மாதங்களுக்குள் யூசுஃப், கஹ்ஃப் ஆகிய இரண்டு அத்தியாயங்களை மனனம் செய்துவிட்டேன். “சிறு துளி பெரு வெள்ளம்” என்பதற்கேற்ப, காலப்போக்கில் திருக்குர்ஆனை முழுமையாக மனனம் செய்துவிடலாம் அல்லவா? திருக்குர்ஆனை மனனம் செய்தோர் பட்டியலில் என் பெயரையும் ஏக இறைவன் இடம்பெறச் செய்துவிடலாமல்லவா?

என்னைப்போல் உன்னைக் காண எனக்கோர் ஆசை. அதனால்தான் இதை நான் உன்னிடம் கூறுகிறேன். ஒருவேளை நீயும் இம்முயற்சியைத் தொடங்கிவிட்டால், உனக்குப் பயனளிக்குமே என்ற நன்னோக்கில், ஒரு குறிப்பையும் கூறிவிடுகிறேன். அதாவது மனனம் செய்யுமுன், அப்பகுதியின் தமிழாக்கத்தை ஒரு தடவை வாசித்து, நன்றாக மனத்தில் இருத்திக்கொண்டு, அதன்பின் மனனம் செய்யத் தொடங்கினால் அது உன் மனத்தில் நன்றாக ஒட்டிக்கொள்ளும். 

இத்தனை வயதுக்குப்பின் என்னால் இது முடியுமா என்று தயங்காமல், முன்னே சென்றால் எதுவும் எளிதுதான். என்னைப்போல் உன்னையும் காணும் ஆவலோடு முடிக்கிறேன்.  
தொடர்ந்து செதுக்குவோம்!...    

குறிப்பு: மனனம் செய்வதற்கான உத்திகளையும் மனத்தில் நிலையாக நிறுத்திக்கொள்வதற்கான வழிமுறைகளையும் கூறுவதோடு, விரைவில் மனனம் செய்து முடிக்க, துஆ செய்ய மறந்துவிடாதீர்கள். 
===========================================

ஞாயிறு, 14 அக்டோபர், 2018

இனிய திசைகள் மாத இதழில் வெளியான நூல் மதிப்புரை


==============================================

நபிவழி மருத்துவம்!
அரபி மூலம்: ஷம்சுத்தீன் முஹம்மது இப்னு அபீபக்ர் இப்னு கய்யிம் (ரஹ்)
தமிழில்: மௌலவி டாக்டர் நூ. அப்துல் ஹாதி பாகவி

நபிவழி மருத்துவம் (அத்திப்புன் நபவிய்யு) எனும் பெயரில் பல அறிஞர்கள் நூல்கள் எழுதியுள்ளனர். எனினும் பேரறிஞர் இப்னுல் கய்யிம் அல்ஜவ்ஸிய்யா (ரஹ்) எழுதியுள்ள இந்நூலே புகழ் மிக்கதும் மேற்கோள் காட்டப்படுவதுமாக அறிவுலகில் ஓர் இடத்தைப் பிடித்திருக்கிறது.

மொழிபெயர்க்கச் சிரமமான இந்நூலைத் தமிழில் வடித்துள்ளமைக்காக மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி அவர்களையும், இவ்வளவு கனமான நூலை வெளியிட முன்வந்திருக்கும் சாஜிதா புக் சென்டர் உரிமையாளர் சகோதரர் முஹம்மது ஜக்கரியா அவர்களையும் மனந்திறந்து பாராட்டுகிறேன்.  மூலிகைகள், செடிகள், மருந்துப்பொடிகள் இவற்றின் பெயரை மொழிபெயர்ப்பது மிகக் கடினம். அதைச் சிறப்பாக மொழிபெயர்த்திருக்கிறார். மூல நூலாசிரியர் சொல்ல விரும்புவதைப் புரிந்து அதை இக்கால வழக்குடன் இணைத்து விளங்கி மொழிபெயர்ப்பது ஒரு கலை. அதையும் சிறப்பாகவே மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி செய்திருக்கிறார்.

மூல நூலாசிரியரின் ஆழமான மார்க்க ஞானமும் மருத்துவ அறிவும் பக்கத்துக்குப் பக்கம் பிரமிப்பைக் கூட்டிக்கொண்டே செல்கிறது. நபி (ஸல்) கடைப்பிடித்த மருத்துவம், ஆன்மிக மருத்துவம், ஒவ்வொரு பொருளின் மருத்துவப் பண்புகள் ஆகிய மூன்று பாடங்களின் வாயிலாகப் பல குறுந்தலைப்புகளோடு ஆழமான தகவல்களை இந்நூல் தருகிறது.

ஒரு நூலின் வெற்றி அது தன் வாசகர்களைப் மேதைமை மிக்கவர்களாக மாற்றுவதில் இருக்கிறது. வாசகர்கள் இதுவரை கேள்விப்பட்டிராத அரிய நபிமொழிகளையும் புதிய தகவல்களையும் தருவதில் இந்நூல் மகத்தான வெற்றி பெரும் என்பது திண்ணம். அவ்வகையில் சிறப்பான இந்நூல் அனைவராலும் வாசித்துப் பயனுற வேண்டியதாகும்.

-மௌலவி கே.எம். இல்யாஸ் ரியாஜி
----------------------
நூல்: நபிவழி மருத்துவம்!
அரபி மூலம்: இப்னுல் கய்யிம் (ரஹ்)
தமிழில்: மௌலவி டாக்டர் நூ. அப்துல் ஹாதி பாகவி
பக்கம்: 528, விலை: ரூ. 300/-
வெளியீடு: சாஜிதா புக் சென்டர், 248, தம்புச் செட்டித் தெரு, மண்ணடி, சென்னை-1
தொடர்புக்கு: 98409 77758
===============================================


நடுநிலையான ஆன்மிகம்


   -முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மனித வாழ்க்கையின் எல்லாக் கட்டங்களுக்கும் உரிய வழிகாட்டுதல் உள்ளது. ஒரு மனிதனுக்கு அவனது வாழ்க்கையில் நிறைவேற்ற வேண்டிய பல்வேறு பொறுப்புகள் உள்ளன. மனைவி, பிள்ளைகள், தாய்-தந்தை உள்ளிட்டோருக்குச் செய்ய வேண்டிய குடும்பப் பொறுப்புகள், அண்டைவீட்டார், நண்பர்கள், பொதுமக்கள் ஆகியோருக்குச் செய்ய வேண்டிய சமூகப் பொறுப்புகள் அல்லாஹ்விற்குச் செய்ய வேண்டிய கடமைகள் ஆகியவை உள்ளன.

குடும்பப் பொறுப்புகள், சமூகப் பொறுப்புகள், அல்லாஹ்விற்குச் செய்ய வேண்டிய கடமைகள் ஆகிய அனைத்தும் இருக்கும்போது, ஒருவர் ஆன்மிகப் பாதையில் சென்று  அல்லாஹ்வை திக்ர் செய்வதிலும் அவனை வழிபடுவதிலும் முழுமையாக ஈடுபடப் போகிறேன் என்று இல்வாழ்வைவிட்டு ஒதுங்கிக் கொண்டால் அவரால் மற்ற பொறுப்புகளை நிறைவேற்ற முடியாது. அதனால் அவர் தம் பொறுப்புகளை முழுமையாக நிறைவேற்றாத குற்றத்திற்கு ஆளாக நேரிடுகிறது.

நன்மையை ஏவுவதும் தீமையைத் தடுப்பதும் அனைவர்மீதும் கடமையே. ஆனால் இல்வாழ்வில் ஈடுபட்டுள்ள ஒருவர் தம் குடும்பத்தை விட்டுவிட்டு, நான் எல்லோரையும் தொழுகைக்கு அழைக்கச் செல்கிறேன் என்று மூட்டையைக் கட்டிக்கொண்டு புறப்பட்டுவிட்டால் அவர் தம் குடும்பப் பொறுப்பைப் பாழ்படுத்திய குற்றத்திற்கு ஆளாகிவிடுவார்.

சமூகச் சேவையில் ஈடுபடுதல் வரவேற்கத்தக்கதுதான் என்றாலும் ஒருவர் தம் குடும்ப உறுப்பினர்களின் நலனைக் கருத்தில்கொள்ளாமல் அவர்களுக்காக உழைக்க முனையாமல் அதில் ஈடுபடுவது ஏற்புடையதல்ல என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

இப்படி ஒவ்வொருவரும் தமக்கென ஒவ்வொரு பாதையைத் தேர்ந்தெடுத்துக் கொண்டால் மற்ற பொறுப்புகளை நிறைவேற்றாத குற்றத்திற்கு ஆளாக நேரிடும். ஆனால் நபி (ஸல்) அவர்கள் தனியொரு பாதையை மட்டும் தேர்ந்தெடுத்துக்கொள்ளவில்லை. எல்லா நற்செயல்களையும் செய்தார்கள். எல்லாப் பொறுப்புகளையும் செவ்வனே நிறைவேற்றினார்கள். அப்படி வாழ்வதற்கே அவர்கள் தம் சமுதாய மக்களுக்கு வழிகாட்டினார்கள். அது மட்டுமல்ல, ஒரேயடியாக ஒரு பாதையை மட்டும் தேர்ந்தெடுத்துக்கொண்டு மற்ற பொறுப்புகளைக் கவனிக்காமல் விட்டுவிட எத்தனித்த தோழர்களைக் கண்டித்து அறிவுரையும் கூறினார்கள்.

அனஸ்  பின் மாலிக் (ரளி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களுடைய துணைவியரின் வீடுகளுக்கு மூன்று பேர் கொண்ட குழுவினர் வந்து நபி (ஸல்) அவர்களின் வணக்க வழிபாடுகள் குறித்து வினாத் தொடுத்தனர். அதுபற்றி அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்ட போது, அவர்கள் நபி (ஸல்) அவர்களின் வணக்க வழிபாடுகளைக் குறைத்து மதிப்பிட்டதுபோல் தெரிந்தது. பிறகு (அவர்களே அதற்குச் சமாதானமும் கூறிக்கொண்டு), “முன்பின் தவறுகள் மன்னிக்கப்பட்டுவிட்ட நபி (ஸல்) அவர்கள் எங்கே? நாம் எங்கே? என்று சொல்லிக்கொண்டனர்.

அவர்களுள் ஒருவர், “(இனிமேல்) நான் என்ன செய்யப் போகிறேன் என்றால், எப்போதும் இரவில் தொழுதுகொண்டே இருக்கப்போகிறேன்'' என்றார். இன்னொருவர், “நான் ஒரு நாள்கூட விடாமல் காலமெல்லாம் நோன்பு நோற்கப் போகிறேன் என்று கூறினார். மூன்றாம் நபர் நான் பெண்களைவிட்டு ஒதுங்கியிருக்கப்போகிறேன்; ஒருபோதும் மணமுடித்துக் கொள்ளமாட்டேன்'' என்று கூறினார். 

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (அந்தத் தோழர்களிடம்) வந்து, “இப்படி இப்படியெல்லாம் பேசிக்கொண்டது நீங்கள்தாமே! அறிந்துகொள்ளுங்கள்: அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களைவிட அதிகமாக நான் அல்லாஹ்வை அஞ்சுபவன் ஆவேன்; அல்லாஹ்வைப் பயந்து நடப்பவன் ஆவேன்; ஆயினும், நான் நோன்பு நோற்கவும் செய்கிறேன், விட்டுவிடவும் செய்கிறேன்; தொழுகவும் செய்கிறேன், உறங்கவும் செய்கிறேன்; மேலும், நான் பெண்களை மணமுடித்தும் உள்ளேன். ஆகவே, என் வழிமுறையை யார் கைவிடுகின்றாரோ அவர் என்னைச் சார்ந்தவர் அல்லர் என்று சொன்னார்கள். (நூல்: புகாரீ: 5063)

மற்றொரு தடவை ஒரு நபித்தோழர் இரவெல்லாம் நின்று வணங்குவதையும் பகலெல்லாம் நோன்பு நோற்பதையும் கேள்விப்பட்டு உடனடியாக அவரிடம் சென்று அவரைக் கண்டிக்கின்றார்கள். அவர் செய்ய வேண்டிய நடுநிலையான நற்செயல்கள் எப்படி அமைய வேண்டுமென வழிகாட்டுகின்றார்கள். 

அப்துல்லாஹ் பின் அம்ர் (ரளி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம் வந்து, “நீர் இரவெல்லாம் நின்று வணங்குவதாகவும் பகலெல்லாம் நோன்பு நோற்பதாகவும் எனக்குத் தெரிவிக்கப்பட்டதே! (அது உண்மைதானா?)'' என்று கேட்டார்கள். நான், “ஆம்'' என்று பதிலளித்தேன். (அதற்கு) நபி (ஸல்) அவர்கள், “அவ்வாறு செய்யாதீர்! (சிறிது நேரம்) தொழுவீராக! (சிறிது நேரம்) உறங்குவீராக! (சில நாள்கள்) நோன்பு நோற்பீராக! (சில நாள்கள் நோன்பை) விட்டுவிடுவீராக! ஏனெனில், உமது உடலுக்குச் செய்ய வேண்டிய கடமையும் உமக்கு உண்டு; உமது கண்ணிற்குச் செய்ய வேண்டிய கடமையும் உமக்கு உண்டு; உம் விருந்தினருக்குச் செய்ய வேண்டிய கடமையும் உமக்கு உண்டு; உம் துணைவிக்குச் செய்ய வேண்டிய கடமையும் உமக்கு உண்டு... என்று கூறினார்கள். (நூல்: புகாரீ: 6134)

ஆக வணக்க வழிபாட்டில் ஈடுபடுவதாக இருந்தாலும் அதிலும் நடுநிலையைப் பேண வேண்டும் என்பதை மேற்கண்ட நபிமொழிகள் மூலம் அறிந்துகொள்ளலாம்.


ஆன்மிக குருவாகத் திகழ்வோர் பலர் தமக்கென ஒரு கூட்டத்தைச் சேர்த்துக்கொண்டு, தம்மீது அம்மக்கள் கொண்டுள்ள கண்மூடித்தனமான அன்பையும் மரியாதையையும் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்கின்றார்கள். அவர்களிடமிருந்து பணஉதவி பெறுவதை முதன்மை நோக்கமாகக் கொண்டுள்ளார்கள்.

தம்மை மிகப்பெரிய ஆளாகவும் பிற மனிதர்களைவிடத் தாம் உயர்ந்தவர் என்ற மமதையோடும் சிலர் திகழ்வதைக் காணமுடிகின்றது. பொதுமக்கள் முன்னிலையில் அந்த ஆன்மிக குரு மேடையில் வீற்றிருக்கும்போது அவருடைய சீடர்கள் அவருக்காகக் குனிவதையும் காலில் விழுவதையும் அவர் தடுப்பதில்லை. இது ஓர் ஆன்மிகக் குருவிற்கு அழகா?

ஆதமுடைய பிள்ளைகளை நாம் கண்ணியப்படுத்தியிருக்கிறோம் (17: 70) என்று அல்லாஹ் கூறுகின்றான். ஒவ்வொரு மனிதனும் கண்ணியத்திற்கும் மரியாதைக்கும் உரியவன் ஆவான். ஒவ்வொரு மனிதனுக்கும் சுயமரியாதை உள்ளது. அப்படியிருக்கும்போது மனிதன் பிற மனிதர் முன்னிலையில் தலைசாய்ப்பதும் காலில் விழுவதும் எங்ஙனம் சரியாகும்? அந்த ஆன்மிக குரு எவ்வாறு இதை அனுமதிக்கிறார்? அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமக்காகப் பிறர் எழுந்து நிற்பதைக்கூட விரும்பவில்லையே?

ஆன்மிகத்திற்காக எல்லாப் பொறுப்புகளையும் துறப்பதோ குடும்ப வாழ்க்கையை இழப்பதோ  எப்படி உண்மையான ஆன்மிகமாகும்? அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இத்தகைய வழியைக் காண்பிக்கவில்லையே! முழுநேர ஆன்மிகம், முழுநேர வியாபாரம்-இரண்டுமே தவறுதான். 
எல்லாவற்றிற்கும் சிறிது நேரம் ஒதுக்கிச் செயல்படுவதும் எல்லா வகையான பொறுப்புகளையும் கவனிப்பதுமே நபிவழியாகும்.

ஒன்றை மட்டுமே செய்யும்போது மற்றொரு பொறுப்பைத் தட்டிக் கழித்தவர்களாக ஆகின்றோம். அதேநேரத்தில் ஒருவர் நல்ல முறையில் வியாபாரம் செய்துகொண்டே ஆன்மிகத்தில் ஆழ்ந்தவராக இருக்க முடியும். அவர்தம் வியாபாரத்தை மேற்கொள்ளும்போது தம்மைப் படைத்த இறைவனை நினைத்து, அவனுக்கு அஞ்சியவாறே ஒவ்வொரு கொடுக்கல் வாங்கலையும் நேர்மையாகவும் நியாயமாகவும் செய்தால் அவர்  அல்லாஹ்வின் பார்வையில் மிகச் சிறந்த அடியாராக ஆகிவிடுகிறார். இவ்வாறே பிற செயல்களைச் செய்கின்ற ஒவ்வொரு மனிதரும் தாம் செய்யும் செயல்களில் இறைவனுக்கஞ்சிச் செயல்பட்டால் அதுவே ஆன்மிகம்.
 
எனவே ஆன்மிகம் என்பது ஒரு தனி வழி அல்ல. அது நம் வாழ்க்கையின் ஒவ்வொரு செயல்பாட்டிலும் இரண்டறக் கலந்து இழையோடிக் காணப்படுவதாகும் என்பதைப் புரிந்துகொண்டு ஒவ்வொருவரும் செயல்பட வேண்டும்.
=================================







புதன், 10 அக்டோபர், 2018

அண்ணல் நபியின் தொலைநோக்கு!


----------------------------------------------------
இன்றைய அறிவியல் யுகத்தில் மனிதனுக்கு மனிதன் நேரடி முகம் காணும் நண்பர்கள் இருக்கிறார்களோ இல்லையோ முகநூல் நண்பர்கள் இல்லாமல் யாரும் இல்லை என்று சொல்லுமளவிற்கு நட்பு வட்டம் நீண்டு காணப்படுகிறது. அண்டை வீட்டுக்காரனோடு நட்பு வைத்துக்கொள்ள முடியாத நாம் அண்டை மாநிலம், அண்டை நாடு என நம் நட்பை விரிவுபடுத்திக்கொண்டு செல்கிறோம்.

முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து
அகநக நட்பதே நட்பு- எனும் குறளும் தற்கால நட்புக்கு வலுசேர்க்கிறது என்றே கூறலாம்.

நேரடியாகப் பார்த்துப் போலிப் புன்னகை புரிவதைவிட நெஞ்சத்துள் ஆழமாக நிலைத்திருக்கும் நட்பே உண்மையான நட்பாகும். அதனடிப்படையில் நாம் நேரடியாகக் காணும் நண்பர்களைவிட, நம்மை நிழற்படத்தில் மட்டுமே பார்த்து, எந்தவிதப்  பிரதிபலனையும் எதிர்பார்க்காமல் நாம் பதிவிடுகின்ற நிழற்படங்களுக்கும் ஆக்கங்களுக்கும் ‘லைக்’ போட்டு, நம்மை உற்சாகப்படுத்துகின்ற, வாழ்த்துகின்ற நண்பர்கள் எவ்வளவு உயர்வானவர்கள் என்பதை ஒவ்வொருவரும் ஒரு கணம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். நம்முடைய துக்கச் செய்திகளைப் பார்த்ததும், இன்னா லில்லாஹி... சொல்லி நமக்காகவும் நம்மில் இறந்துவிட்ட உறவினர்களுக்காகவும் துஆ செய்து பதிவிடுகின்ற நண்பர்கள் எவ்வளவு மேன்மையானவர்கள்! நாம் பதிவிடுகின்ற நல்ல செய்திகளைப் பிறருக்கும் பரிமாறி, “இதோ என் நண்பர் எழுதிய ஆக்கத்தை நீயும் படித்துப்பார்” என்று பெருமையோடு முன்னிலைப்படுத்துகிற நண்பர்கள் எவ்வளவு கண்ணியத்திற்குரியவர்கள்!

இத்தகைய தொலைதூர நட்பைப் பற்றி இஸ்லாமியப் பார்வை என்ன என்று தேடியபோதுதான் அண்ணல் நபியவர்களின் தொலைநோக்கைப் புரிய முடிந்தது. ஆம்! முகம்காணாத் தொலைதூர நட்புக்கும் இஸ்லாத்தில் இடமுண்டு. அதை அண்ணல் நபி (ஸல்) அவர்கள் ஆதரித்தே கூறியுள்ளார்கள் என்பதை அறியும்போது வியப்பு மேலிடாமல் இருக்க முடியாது.

“இரண்டு அடியார்கள் அல்லாஹ்விற்காக நேசித்தால்-அவர்களுள் ஒருவர் கிழக்கிலும் மற்றொருவர் மேற்கிலும் இருந்தாலும்-மறுமை நாளில் அவ்விருவரையும் அல்லாஹ் ஒன்று சேர்த்து, ‘இவரைத்தான் நீ எனக்காக (உலகில்) நேசித்து வந்தாய்’ என்று கூறுவான்” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்:  ஷுஅபுல் ஈமான்-பைஹகீ: 8606)

இந்த நபிமொழியின் அடிப்படையில் நம்முடைய நண்பர்களுள் ஒருவர் உள்நாட்டில் இருக்கிறார், மற்றொருவர் அயல்நாட்டில் இருக்கிறார். இருவருக்குமிடையே எந்தக் கொடுக்கல் வாங்கலும் இல்லை. ஆனாலும் இறைவனுக்காக முகம்காணா நட்பை வளர்க்கிறார் என்றால் நாளை மறுமையில் அந்த நண்பர்களை ஒன்றுசேர்ப்பது அல்லாஹ்வின் பொறுப்பாகும்.

எனவே நம் நட்பு முகம்காணா நட்பாக இருந்தாலும் அல்லாஹ்விற்காக நேசிக்கும் உண்மை நட்பாக, நல்லனவற்றை மட்டுமே பகிர்ந்துகொள்ளும் நட்பாக, ஒருவருக்கொருவர் இறைவனை நினைவூட்டிக்கொள்ளும் நட்பாக ஆக்கிக்கொள்ள முனைவோம். இம்மையில் இயலாவிட்டாலும் மறுமையில் சொர்க்கத்தில் சந்திப்போம்!

-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி
================================================= 

திங்கள், 8 அக்டோபர், 2018

ஒருபால் உறவு ஒரு சமூகக்கேடு!


-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.

இவ்வாண்டு செப்டம்பர் 6ஆம் தேதி உச்சநீதி மன்றம் வரலாற்றுப் பிழையான ஓர் அசிங்கமான தீர்ப்பை வழங்கியது. இந்தியத் தண்டனைச் சட்டத்தில் உள்ள 377ஆம் பிரிவை நீக்கி, ஒருபால் உறவு குற்றமில்லை எனத் தீர்ப்பளித்தது. 

ஓர் ஆண் மற்றோர் ஆணோடு, ஒரு பெண் மற்றொரு பெண்ணோடு வாழ்க்கை நடத்துவது இயற்கைக்கு ஒவ்வாதது. சமூக வாழ்க்கைக்கு எதிரானது. மனிதன் எவ்வளவு கீழ்த்தரமானவனாக மாறிக்கொண்டிருக்கிறான் என்பதற்கு இத்தீர்ப்பு ஒரு சான்றாகத் திகழ்கிறது. “நாம் மனிதனை அழகிய தோற்றத்தில் படைத்திருக்கிறோம். (அவனுடைய தீய நடத்தையின் காரணமாகப்) பின்னர், அவனைத் தாழ்ந்தவர்களிலும் மிகத் தாழ்ந்தவனாக நாம் ஆக்கிவிடுகின்றோம்” (95: 4-5) என்று உயர்ந்தோன் அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறியுள்ள செய்தி இங்கு நினைவுகூரத்தக்கது.

ஆணும் பெண்ணும் கணவன் மனைவியாக இணைந்து, அவர்கள் தம் தேவையை நிறைவேற்றிக்கொள்வதற்கு இயற்கையான ஒரு வழிமுறையை வைத்திருக்கும்போது ஒரு செயற்கையான வழியைத் தேடுவது படைத்த இறைவனோடு போட்டிபோடுவதாக அமைகிறது. இதை முற்றிலும் தவிர்த்துக்கொள்ள வேண்டும். ஆணும் ஆணும் புணரும் இந்த இழிசெயல் பல்வேறு பால்வினை நோய்களுக்குக் காரணமாகின்றது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். 

ஆணும் ஆணும் புணரும் இந்த இழிசெயலை முதன் முதலில் தொடங்கிவைத்தோர் இறைத்தூதர் லூத் (அலை) அவர்களின் சமுதாய மக்களே ஆவர். அவர்களின் இந்த இழிசெயலைக் கண்டித்து, பலமுறை திருத்த முயன்றும் அவர்கள் திருந்தவில்லை. அவர்கள் தம் இழிசெயலைத் தொடர்ந்து செய்துகொண்டே இருந்தனர். இறுதியில் அவர்களை அல்லாஹ் அழித்தொழித்தான். அது குறித்துத் திருக்குர்ஆனில் அல்லாஹ் கூறுவதைப் பாருங்கள்:

நம்முடைய கட்டளை(யின் நேரம்) வந்ததும் அவர்களுடைய ஊரைத்  தலைகீழாகக் கவிழ்த்து விட்டோம். மேலும் (அதற்கு முன்னர்) அவர்கள்மீது சுடப்பட்ட செங்கற்களை (மழையைப் போல்) பொழியச் செய்தோம். (11: 82) 

ஃபாலஸ்தீனில் உள்ள சாக்கடல் அதன் அடையாளமாக இன்றும் உள்ளது. அவர்களின் அசிங்கமான செயலை மக்களுள் யாரும் செய்துவிடக் கூடாது என்பதற்கான எச்சரிக்கையாகத் திகழ்கிறது. 

லூத் (அலை) அவர்களின் சமுதாய மக்களுடைய செயலைப் போன்று யாரேனும் செய்தால் அவ்விருவரையும் கொன்றுவிட வேண்டும் என்பதே இஸ்லாமியச் சட்டமாகும். அது குறித்து நபிமொழியொன்று இவ்வாறு கூறுகின்றது: (இறைத்தூதர்) லூத் (அலை) அவர்களுடைய சமுதாயத்தாரின் (ஈனச்) செயலைச் செய்கின்றவனை நீங்கள் கண்டால் (அவ்வாறு) செய்பவனுக்கும் செய்யப்படுபவனுக்கும் மரண தண்டனை வழங்குங்கள்” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: திர்மிதீ: 1376)

ஆசனவாய் என்பது அசிங்கம் வெளியேறும் இடமாகும். அது புணர்வதற்கான துவாரம் அல்ல என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். அதேநேரத்தில் ஆணும் ஆணும்தான் என்றல்ல, கணவன்-மனைவியாக உள்ள ஆண்-பெண் தம்பதியரில், அந்த ஆண் தன் மனைவியின் பெண்குறியில்தான் தனது தேவையைத் தீர்த்துக்கொள்ள வேண்டுமே தவிர மனைவியின் பின்துவாரத்தில் புணரக் கூடாது. இது குறித்தும் நபி (ஸல்) அவர்கள் மிகக் கடுமையாக எச்சரித்துள்ளார்கள்.         

“யார் தம் மனைவியின் ஆசனவாயில் புணர வந்தானோ அவன் சபிக்கப்பட்டவன்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: அபூதாவூத்:  2162) 

“எம்மனிதன் தன் மனைவியின் ஆசனத் துவாரத்தினுள் பாலியல் உறவு கொண்டானோ அவனை அல்லாஹ் (மறுமையில்) பார்க்கமாட்டான்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்கள்: இப்னுமாஜா: 1913, முஸ்னது அஹ்மத்)

“யார் மாதவிடாய் வரும் நிலையில் (மனைவியோடு) உடலுறவுகொண்டாரோ, அல்லது மனைவியின் பின்துவாரத்தில் புணர்ந்தாரோ, அல்லது குறிசொல்பவனிடம் வந்து, அவன் சொல்வதை உண்மையென நம்பினாரோ அவர், முஹம்மதின்மீது இறக்கியருளப்பட்ட(வேதத்)தை நிராகரித்துவிட்டார்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்கள்: இப்னுமாஜா: 631, முஸ்னது அஹ்மத்: 10167, திர்மிதீ: 125)

“பெண்களின் பின்துவாரத்தில் புணராதீர்கள். திண்ணமாக அல்லாஹ் உண்மையைச் சொல்ல வெட்கப்படமாட்டான்” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக அலீ பின் தல்க் (ரளி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (நூல்: திர்மிதீ: 1084) இவ்வாறு பல்வேறு நபிமொழிகள் பின்துவாரத்தில் புணரும் ஈனச்செயலைக் கண்டிக்கின்றன. 
ஆண்-பெண் தம்பதியருக்கே இத்தகைய நிபந்தனை இருக்கும்போது ஓர் ஆணோ, ஒரு பெண்ணோ தன் ஒத்த பாலினத்தோடு புணர்வது முற்றிலும் தடைசெய்யப்பட்டதாகும் என்பதை விளங்கிக்கொள்ள வேண்டும். லூத் நபி சமுதாயத்தில் ஆணும் ஆணும் புணர்வதுதான் இருந்தது. ஆனால் இக்கலிகாலத்தில் பெண்ணும் பெண்ணும் சேர்ந்து வாழும் ஈனச் செயலும் அரங்கேறுகிறது. காலம் செல்லச் செல்ல மனித அறிவு மழுங்கிக்கொண்டே செல்வதைத்தான் இது காட்டுகிறது.

மதுவை அரசே சட்டப்பூர்வமாக விற்பனை செய்யும்போது அதை வாங்காமல் பயந்துகொண்டிருந்தோருக்குக்கூடத்  துணிச்சலும் தைரியமும் வந்துவிடுகிறது. அதுவரை அச்சத்தோடு தயங்கித் தயங்கி வாங்கிக்கொண்டிருந்தோர் இப்போது தைரியமாக வாங்கத் துணிந்துவிட்டனர். ஆண்கள் மட்டுமே மது அருந்திய காலம் கடந்து, இன்று பெண்களும் மதுவைப் பருகும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இது கட்டற்ற சுதந்திரத்தின் மோசமான விளைவாகும். இவ்வாறு அரசாங்கம் எல்லாத் தீய செயல்களுக்கும் துணைபோனால் சமுதாயம் சீரழிந்துபோகும் என்பது உறுதி.  

அதுபோலவே ஒருபால் உறவு தண்டனைக்குரிய செயல் என்ற சட்டம் இருந்த வரை இங்கொன்றும் அங்கொன்றுமாக இருந்த இச்செயல், இனி கட்டற்ற சுதந்திரத்தின் வாயிலாக எல்லா இடங்களிலும் இது பரவக்கூடிய அபாயம் உள்ளது. ஏனென்றால் சட்ட அனுமதி வழங்கப்பட்டுவிட்டபின் “தவறு செய்கிறோம்” எனும் மனப்பான்மை நீங்கிவிடுவதால், தைரியம் தானாக ஏற்பட்டுவிடுகிறது. மனித மனம் கெட்ட செயலை நோக்கித்தானே விரைவாகப் பாய்கிறது.

இதனால் பெண்களின் நிலை கேள்விக்குறியாகும் அபாயமும் உள்ளது. ஒரு பெண்ணைத் திருமணம் செய்து, காலம் முழுக்க அவளுக்குக் கஞ்சி ஊற்றுவதைவிட, ஒருபால் உறவு மேலானதாயிற்றே! அவனும் சம்பாதிப்பான்; நானும் சம்பாதிப்பேன். அவன் வாழ்க்கையை அவன் பார்த்துக்கொள்வான்; எனது வாழ்க்கையை நான் பார்த்துக்கொள்வேன். சம்பாதித்துக் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. மனைவி-பிள்ளைகளால் ஏற்படும்  தொல்லையுமில்லை-என்று குயுக்தியால் மனிதன் எண்ணத்  தொடங்கிவிட்டால் பெண்களின் நிலை என்னாகும்?
லூத் (அலை) அவர்களின் வீட்டிற்கு இளைஞர்கள் தோற்றத்தில் வந்திருந்த வானவர்களிடம் தவறாக நடந்துகொள்வதற்காக அவ்வூர் மக்கள் முன்வந்தபோது, இதோ என்னுடைய பெண்மக்கள் இருக்கின்றார்கள். அவர்களைத் திருமணம் செய்துகொள்ளுங்கள். அதுவே உங்களுக்குத் தூய்மையானதாகும் என்று அவர்கள் அறிவுரை கூறியபோது, அம்மக்கள் கூறிய பதிலைத் திருக்குர்ஆன் இவ்வாறு பதிவு செய்கிறது:   

“உங்களுடைய பெண்மக்களிடம் எங்களுக்கு யாதொரு தேவையும் இல்லை என்பதை நீங்கள் நன்கறிவீர்கள்; நாங்கள் விரும்புவது என்ன என்பதையும் நிச்சயமாக நீங்கள் நன்கறிவீர்கள்'' என்று கூறினார்கள். (11: 79)

ஆடு, மாடு, நாய் போன்ற எந்த உயிரினமும் செய்யாத ஒருபால் உறவை ஆறறிவு கொண்ட மனிதன் செய்யத் துணிகின்றான் என்றால், அவனுக்கு வழங்கப்பட்டுள்ள பகுத்தறிவை அவன் பயன்படுத்தவே இல்லை என்பதைப் புரிந்துகொள்ளலாம். கட்டற்ற சுதந்திரம் வழங்கப்பட்டுள்ள அமெரிக்கா போன்ற அயல்நாடுகளில் உள்ள இத்தீய பழக்கத்தை, பண்பாட்டிற்கும் நாகரிகத்திற்கும் பெயர்போன இந்தியா போன்ற நாடுகளில் செயல்படுத்துவது முற்றிலும் கண்டிக்கத்தக்கது.  
===========================================







திசை திருப்பும் தீர்ப்புகள்!



ஐயர் ஆற்றுக்குக் குளிக்கப் போனார். குளித்து முடித்தபின் ஆடைகளைக் காணவில்லை. செய்வதறியாது திகைத்தார்; பதைபதைத்தார். திடீரென ஒரு யோசனை தோன்றியது. ஆற்றில் பெரிதான ஒரு மீனைப் பிடித்தார். அதைக் கையில் ஏந்தியவாறு தெருவில் நடந்தார். 


மீனோடு ஐயரைக் கண்ட மக்கள், “அய்யய்யே! ஐயர் கையில மீனோடு போறார்” என்றே பேசினர். அவர் அம்மணமாகச் செல்வதை யாரும் கவனிக்கவில்லை. அது பற்றி யாரும் பேசவுமில்லை. 


இன்றைய ஆட்சியாளரின் சூழ்ச்சி இதுதான். மக்களுக்குப் பயனுள்ள ஆட்சியைக் கொடுக்காமல் பெருமுதலாளிகளுக்குச் சாதகமான எல்லாவற்றையும் செய்துகொண்டு, தம்முடைய குறைகள் எது பற்றியும் பேசாதிருக்க அவர்களின் கவனத்தைத் திசைதிருப்பவே மக்களின் மதஉணர்வுகளைக் கிளறிவிடும் தீர்ப்புகள் அவ்வப்போது அள்ளித் தெளிக்கப்படுகின்றன. 


1. முத்தலாக் அவசரச் சட்டம், 2. சபரிமலை கோயிலுக்கு எல்லா வயதுப் பெண்களும் செல்ல அனுமதி, 3. முஸ்லிம்களுக்குப் பள்ளிவாசல்கள் அவசியமா?, 4. ஓரினச் சேர்க்கை குற்றமல்ல, 5. கள்ளத்தொடர்பு குற்றமல்ல.


மக்கள் மறந்தவை: 1. ஆங்காங்கே ஏற்படும் தேர்தல் தோல்விகள், 2. ரஃபேல் ஊழல் உள்ளிட்ட பல ஊழல்கள், 3. பெட்ரோல்-டீசல் விலை உயர்வு, 4. டாலருக்கு நிகரான ரூபாய் வீழ்ச்சி, 5. பொருளாதாரச் சரிவு உள்ளிட்ட எத்தனையோ. 


-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி