சனி, 22 ஜூன், 2013

நபிகளார் நவின்ற மூன்றுகள்...

தொடர்-2

                நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மும்மூன்று விசயங்களாகக் கூறி, மக்கள் மனங்களைக் கவர்ந்து, அவ்விசயங்களைக் கேட்போர் தம் அன்றாட வாழ்வில் அவற்றைச்  செயல்படுத்த ஆவல்கொள்ளுமாறு செய்தவர். நபிகளாருடைய அறிவுரைகளைக் கேட்போர் உடனடியாக அவற்றைத் தம் வாழ்வில் செயல்படுத்த முனைந்தார்கள். அந்த வகையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ள மூன்றுகளைப் பார்ப்போம்!

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் மறுமைநாளில் மூன்று பேரிடம் பேசமாட்டான். அவர்களைப் பார்க்கவுமாட்டான். அவர்களைத் தூய்மைப்படுத்தவுமாட்டான். அவர்களுக்கு நோவினை தரக்கூடிய வேதனை உண்டு. அல்லாஹ்வின் தூதரே! -அவர்கள் நட்டமடைந்துவிட்டார்கள்-அவர்கள் யாவர்? என்று நான் வினவினேன். அதற்கவர்கள், 1. தன் கீழாடையைத் (தரையில்) தொங்கவிடுபவன். 2. தான் வழங்கிய(தர்மத்)தைச் சொல்லிக்காட்டுபவன். 3. பொய்யான சத்தியம் செய்து தன் வியாபாரப்பொருளை விற்பவன் என்று கூறினார்கள். (நூல்: இப்னுமாஜா: 2199)

ஒருவன் தன் அந்தரங்க உறுப்பை மறைக்கவும் தன்னை அழகுபடுத்திக்கொள்ளவுமே ஆடை அணிகின்றான். அந்த ஆடை சிறந்ததாகவும் அழகாகவும் இருக்கலாம். பிறருக்குப் பிடித்தவாறு இருக்கலாம். விலையுயர்ந்ததாகவும் இருக்கலாம். ஆனால் அதன் மூலம் பிறரை இழிவாகக் கருதிச்  செருக்காக நடைபோடுவதும், நடக்கும்போது அந்த ஆடை தரையில் இழுபடுமாறு  செல்வதும் ஏக இறைவனுக்குப் பிடிக்காத செயலாகும். ஏனெனில் எல்லாப் பெருமைக்கும் சொந்தக்காரன் அல்லாஹ்தான். அதில் மனிதன் போட்டிக்கு நிற்கக் கூடாது. ஆகவே ஒருவன் தன் ஆடையைத் தரையில் படுமாறு இழுத்துச் செல்வது மிகப்பெரிய குற்றமாகும் என்பதையும் அத்தகைய மனிதனுக்கு  கடுமையான தண்டனை உண்டு என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

ஒருவனுக்கு உதவி செய்வதையோ தானமாக வழங்குவதையோ பிறரிடம் சொல்லிக்காட்டித் திரியக்கூடாது. இது ஒருவனின் சுயமரியாதையைக் குலைக்கிறது. சமூகத்தில் அவனுடைய மதிப்புக் குறையக் காரணமாக அமைகிறது. ஒரு முஸ்லிமுடைய மரியாதைக்குப் பங்கம் ஏற்படும் வகையில்  நடந்துகொள்வது மிகப்பெரும் குற்றமாகும். இஸ்லாமிய மார்க்கத்தில் இது வன்மையாகக் கண்டிக்கப்பட்டுள்ளது. ஒருவன் தான் வழங்கிய தானத்தைச் சொல்லிக்காட்டுவதை அல்லாஹ் திருக்குர்ஆனில் கண்டித்துக் கூறுகின்றான்:  இறை நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பாமல் மக்கள் காண்பதற்காகத் தன் பொருளை செலவு செய்(து வீணாக்கு)பவனைப் போல (நீங்கள் மனமுவந்து வழங்கும்) உங்கள் தர்மங்களை(ப் பெற்றவனுக்கு முன்னும் பின்னும்) சொல்லிக் காண்பிப்பதாலும் துன்புறுத்துவதாலும் (அதன் பலனைப்) பாழாக்கிவிடாதீர்கள். (2: 264) ஆகவே, ஒருவனுக்குச் செய்த உதவியையோ தர்மத்தையோ ஒருக்காலும் பிறரிடம் சொல்லித்திரியக்கூடாது; அதை விளம்பரப்படுத்தக் கூடாது.

மனிதன் நாளுக்கு நாள் பொய் சொல்வதில் வளர்ச்சியடைந்து வருகின்றான். அவனுடைய வாயிலிருந்து வருபவையெல்லாம் பொய்களாகவே இருக்கின்றன. பேசினால், வாக்குறுதி  கொடுத்தால், ஒப்பந்தம் செய்தால்-இப்படி எந்தச் செயலானாலும் பொய் பேசுவதை  ஒரு தொழிலாகவே கொண்டுள்ளான். அந்த வகையில், வியாபாரம் செய்பவன் எப்படியேனும் இந்தப் பொருளை விற்றுவிட வேண்டும் எனும் ஒரே நோக்கத்தில் இருப்பதால் ஏதேனும் பொய்யைச் சொல்லியாவது விற்றுவிட முனைகின்றான். வாங்குபவனின் நிலையைப் பற்றியோ அவன் பாதிக்கப்படுவதைப் பற்றியோ அவன் கவலைப்படுவதில்லை. இத்தகைய வியாபாரி பொய் சொல்வதோடு, அல்லாஹ்வின்மீது பொய்ச்சத்தியம் வேறு செய்கிறான். எனவே இது போன்ற வியாபாரியை அல்லாஹ் திருப்திகொள்வதில்லை. மாறாக, மறுமையில் அவனுக்குச் சரியான தண்டனையை வழங்கத் தயாராக இருக்கின்றான்.


ஆக, இத்தகைய மூவரை உயர்ந்தோன் அல்லாஹ் மறுமை நாளில் பார்க்கப் போவதில்லை. அத்தோடு  மறுமை நாளில்  அவர்களுக்கு நோவினை தரும் வேதனையும் உண்டு என்பதை கவனத்தில் கொண்டால் நாம் இத்தகைய தீமைகளிலிருந்து நம்மைத் தவிர்த்துக்கொள்ள வழிவகுக்கும்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மறுமை நாளில் மூவருக்கெதிராக நான் வழக்குரைப்பேன் என்று அல்லாஹ் கூறுகின்றான். 1. ஒருவன் என் பெயரால் சத்தியம் செய்துவிட்டு, மோசடி செய்தவன். 2. இன்னொருவன், சுதந்திரமான ஒருவனை விற்று அந்தப் பணத்தை உண்டவன். 3. மூன்றாமவன், ஒரு கூலியாளிடம் நன்றாக வேலை வாங்கிக் கொண்டு அவனது கூலியைக் கொடுக்காமல் இருந்தவன்.   (நூல்: புகாரீ-2227)

இன்றைக்குச் சத்தியம் செய்வது மிகச் சாதாரண நடைமுறையாகிவிட்டது. அல்லாஹ்வின்மீது சத்தியம் செய்து, இன்னதைச் செய்வேன் என்று கூறுகின்ற பலர் அதைச் சரியாக நிறைவேற்றுவதில்லை. சத்தியத்தைச் சாதாரணமாகக் கருதுவோர் நபிகளார் கூறியுள்ள அல்லாஹ்வின் கூற்றைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். மறுமையில் அல்லாஹ்வே அவனுக்கு எதிராக வழக்குரைப்பான் என்றால் அதிலிருந்து அவன் எங்ஙனம் தப்பிக்க முடியும்?

சுதந்திரமான ஒருவனை விற்று, அந்தப் பணத்தைச் சாப்பிடுதல் இன்றைக்கும் நடந்துகொண்டுதான் இருக்கிறது. இதைப் பரவலாகப் பொதுமக்கள் செய்வதில்லை என்றாலும் சமூக விரோதிகள் இதைச் செய்துகொண்டுதான் இருக்கிறார்கள். சிறுவர்கள், சிறுமிகள், இளம்பெண்கள் ஆகியோரைக் கடத்திச் சென்று விற்றுவிடுவது நடக்கத்தான் செய்கிறது. சிறுவர்களைப் பிச்சையெடுப்பதற்காகவும் இளம்பெண்கள், சிறுமிகள் ஆகியோரை விபச்சாரத்திற்காகவும் விற்றுவிடுகின்றனர். இது இன்றைய காலத்தில் நடைபெறுகின்ற சமூக விரோதச் செயலாகும். குழந்தைகளைக் கடத்தி, பிள்ளைப் பேறற்ற அயல்நாட்டுப் பெற்றோருக்கு விற்றுவிடுகின்றனர். இதற்காக ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான குழந்தைகள் கடத்தப்படுகின்றனர் என்று ஒரு புள்ளிவிவரம் கூறுகிறது.

ஒருவனைப் பணிக்கு நியமித்து, அவனிடமிருந்து பெறவேண்டிய பணிகளையெல்லாம் பெற்றுக்கொண்டு அவனுக்குத் தான் விரும்பிய குறைந்தளவுத் தொகையைக் கொடுத்து அனுப்பிவிடுவதும், பேசிய தொகையை முழுமையாகக் கொடுக்காமல் வாக்குவாதம் செய்துவிட்டு இறுதியில், அவன் மனம் நோகும்படி ஏதாவது கூலியைக் கொடுத்தனுப்புவதும், சிலர் பணியைப் பெற்றுக்கொண்டு கூலியை அறவே கொடுக்காமல் ஏமாற்றுவதும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன.  எனவே பணிக்கு நியமிக்கும்போதே அவனுடைய கூலியைத் தெளிவாகப் பேசிக்கொண்டு, பணி முடிந்ததும் பேசிய தொகையை முறைப்படி ஒப்படைப்பதுதான் ஓர் இறைநம்பிக்கையாளரின் நல்ல பண்பாகும்.

ஆக, மேற்கண்ட மூன்று விசயங்களில் நாம் கண்ணும் கருத்துமாகச் செயல்பட்டு, அல்லாஹ் நமக்கெதிராக வழக்குரைக்கும் வகையில் சிக்கிவிடாமல் தப்பித்துக்கொள்ள ஒவ்வொருவரும் முயல வேண்டும். 

அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரளி) அவர்கள் அறிவித்துள்ளதாவது: மூன்று பொருள்கள் முஸ்லிம்கள் அனைவருக்கும் பொதுவானவை. அவை: தண்ணீர், புல் (மேய்ச்சல் நிலம்), நெருப்பு ஆகியவையாகும். இவற்றை விற்பது விலக்கப்பட்டதாகும் என்று  அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  (நூல்: இப்னுமாஜா: 2463)

அதாவது, தண்ணீர், மேய்ச்சல் நிலம், நெருப்பு ஆகிய மூன்றும் முஸ்லிம்கள் அனைவருக்கும் சொந்தமாகும். இவற்றை முஸ்லிம்களுள் யாரும் பயன்படுத்தலாம். எவரும் தமக்கு மட்டுந்தான் சொந்தம் என உரிமை கொண்டாட முடியாது. தண்ணீர் என்பது ஒருவருடைய கிணற்று நீரைக் குறிக்காது. ஒருவருடைய வீட்டிலுள்ள கிணற்று நீர், ஆழ்துளைக் கிணற்று நீர் ஆகியவை அவருக்கே சொந்தமாகும். ஆனால் நபிமொழியில் குறிப்பிடப்பட்டுள்ள தண்ணீர் என்பது ஆறு, ஏரி, குளம், கடல் ஆகியவற்றில் உள்ள தண்ணீரையே குறிக்கிறது. அவற்றிலுள்ள தண்ணீர் சமுதாய மக்கள் அனைவருக்கும் பொதுவானதாகும். தனிநபர் அவை தமக்கு மட்டுமே சொந்தம் எனக் கூறி உரிமை கொண்டாட முடியாது. அதேநேரத்தில் ஒருவன் ஊருக்கு வெளியே உள்ள ஆற்றிலிருந்து ஒரு லாரி நிறையத் தண்ணீரை எடுத்து வந்து ஊருக்குள் விற்பது-தண்ணீரை விற்பதாக ஆகாது. மாறாக, அவன் அங்கிருந்து எடுத்து வந்து தருவதற்கான போக்குவரத்துச் செலவாகவே கருதப்படும். இன்றைக்குத் தண்ணீரைச் சுத்தப்படுத்தி விற்பனை செய்யும் நிறுவனங்களும்  அதே வகையின்கீழ்தான் அடங்கும். அவை விற்பனை செய்யும் தண்ணீர் பாக்கெட்டை வாங்கும்போது நாம் பணம் கொடுப்பது தண்ணீருக்காக அன்று. மாறாக, அத்தண்ணீரைத் தூய்மைப்படுத்தும் செலவுக்காகத்தான். ஆக, தண்ணீர் என்பது பொதுவானது. அது இறைவனின் அருட்கொடை. அது அனைவருக்கும் சொந்தமாகும். மக்களின் அவசியத் தேவையைப் புரிந்துகொண்டு அதை விற்பனை செய்யக்கூடாது. இதைப் புரிந்துகொண்டால் இன்று நாட்டிலுள்ள பல்வேறு பிரச்சனைகள் முடிவுக்கு வந்துவிடும்.

ஊருக்கு வெளியே உள்ள மேய்ச்சல் நிலம் பொதுவானது. அதில் யார் வேண்டுமானாலும் தம்முடைய ஆடு, மாடுகள் போன்ற கால்நடைகளை மேய்க்கலாம். அதில் தனிநபர் யாரும், தமக்கு மட்டுமே இது சொந்தம் என்று உரிமை கொண்டாட முடியாது.

நெருப்பு என்பது பொதுவானது. இது கற்காலத்தைப் பொறுத்த வரை கிடைத்தற்கரிய பொருளாக இருந்தது. தீ மூட்டுவதற்கு மக்கள் மிகவும் சிரமப்பட்டனர். கற்களை ஒன்றோடு ஒன்று உராய்ந்து, அதன்மூலம் தீயை மூட்டினார்கள். தற்காலத்தில் ஒரு தீக்குச்சியால் மிக எளிதாக அடுப்பைப் பற்ற வைத்துக்கொள்ளலாம். எந்தச் சிரமமும் இல்லை. ஆனால் இதன் தேவையை நாம் பயண நேரத்தில் உணரலாம். தீப்பெட்டி கிடைக்காத நேரத்தில் ஒருவர் ஒரு தீக்குச்சியும் அதனை உராய்வதற்கான பெட்டியையும் கொடுத்தால் அது பேருதவியாக இருக்கும்.  நெருப்பு என்பது தீக்குச்சியை மட்டுமின்றி, தீயைப் பற்ற வைக்க எதுவெல்லாம் உதவியாக இருக்குமோ அவற்றையெல்லாம் குறிக்கும். மண்ணெண்ணெய், விறகு, எரிவாயு உருளை (சிலிண்டர்) போன்றவற்றையும் குறிக்கும். அது பற்றிய ஒரு நபிமொழியைப் பாருங்கள்!

ஆயிஷா (ரளி) அவர்கள் அறிவித்துள்ளதாவது: அல்லாஹ்வின் தூதரே! தடுத்து வைத்துக்கொள்ளக்கூடாத பொருட்கள் எவை? என்று வினவினேன். தண்ணீர், உப்பு, நெருப்பு என்று விடையளித்தார்கள். இந்தத் தண்ணீரோ நாங்கள் அது பற்றி அறிவோம். உப்பு, நெருப்பு ஆகியவை (முக்கியமானவை) ஏன்? என்று வினவினேன். அதற்கவர்கள், ஹுமைரா! யார் நெருப்பைக் கொடுத்தாரோ, அவர் அந்நெருப்பின் மூலம் சமைத்த யாவையும் தர்மமாகக் கொடுத்தவரைப் போன்றவராவார். யார் உப்பைக் கொடுத்தாரோ, அவர் அவ்வுப்பு சுவையாக்கிய யாவையும் தர்மமாகக் கொடுத்தவரைப் போன்றவராவார். தண்ணீர் கிடைக்கின்றபோது, எவர் ஒரு முஸ்லிமுக்கு ஒரு மிடர் தண்ணீர் கொடுத்தாரோ, அவர் ஓர் அடிமையை விடுதலை செய்தவரைப் போன்றவராவார். தண்ணீர் கிடைக்காதபோது, எவர் ஒரு முஸ்லிமுக்கு ஒரு மிடர் தண்ணீர் கொடுத்தாரோ அவர் அவரை உயிர்ப்பித்தவரைப் போன்றவராவார் என்று கூறினார்கள். (நூல்: இப்னுமாஜா: 2465)
ஆக, இந்நபிமொழிப்படி உப்பும், நெருப்பும் மனிதனுக்கு இன்றியமையாத் தேவையாகும். அவற்றை நாம் பிறருக்குக் கொடுத்துதவுதல் பெரும் நன்மையாகும் என்பதை அறிந்துகொள்கிறோம். எனவே நாம் தண்ணீர், உப்பு, நெருப்பு ஆகிய பொருள்களை ஒருவருக்கொருவர் கொடுத்து உதவிக்கொள்வோம். அதன்மூலம் இறைவன் புறத்திலிருந்து அளவிலா நன்மையைப் பெறுவோம்!

================