ஞாயிறு, 28 ஜூலை, 2019

சனி, 27 ஜூலை, 2019

செவ்வாய், 23 ஜூலை, 2019

முஸ்லிம் முன்னோடிகள்

முஸ்லிம் முன்னோடிகள்-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி
(
இமாம், மஸ்ஜித் ஜாமிஉல் அன்வார், மணலி,சென்னை,
துணையாசிரியர், இனிய திசைகள் மாத இதழ்)

இனிய திசைகள் (2019) மாத இதழில் ஜூன், ஜூலை ஆகிய இரண்டு மாதங்கள் தொடராக  இடம்பெற்ற கட்டுரை.  மேலும் இக்கட்டுரை சென்னை கொளத்தூரில் உள்ள அஷ்ரஃபிய்யா அரபுக் கல்லூரியின் இரண்டாவது ஆலிம் பட்டமளிப்பு விழா (ஏப்ரல் 2019) மலரிலும் இடம்பெற்றுள்ளது.
-------------------------------------------------------------------------------------------------   

முஸ்லிம்கள் என்ன கண்டுபிடித்தார்கள்? முஸ்லிம்கள் உலகிற்குச் செய்த பங்களிப்பு என்ன? என்று கேட்போர் முஸ்லிம்களிலேயே உண்டு. ஏனெனில் அவர்களின் கண்டுபிடிப்புகள் இன்று வரை பயன்படுத்தப்பட்டு வந்தாலும் அவர்களின் பெயர்கள் மறைக்கப்பட்டு விட்டன அல்லது மருவிவிட்டன என்றுதான் கூற வேண்டும்.

முஸ்லிம்கள்தாம் எல்லாவிதக் கண்டுபிடிப்புகளுக்கும் முன்னோடி என்றால் நம்ப முடிகிறதா? நம்பினாலும் நம்பாவிட்டாலும் அதுதான் உண்மை. அவர்களின் கண்டுபிடிப்புகள் குறித்த தகவல்களும் அவர்கள் எழுதிய நூல்களும் இன்று வரை அவர்களின் பெயர்களைக் கூறிக்கொண்டுதான் இருக்கின்றன. பெரும் பெரும் நூலகங்களிலும் இணையதளங்களிலும் அவர்களைப் பற்றிய தகவல்கள் கிடைக்கின்றன. தேடிப் படித்தால் வியப்பின் உச்சிக்கே செல்வீர்கள். 

அறிவியல், மருத்துவம், வேதியியல், புவியியல், வானவியல், தத்துவவியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் முஸ்லிம் அறிஞர்கள் சிறந்து விளங்கியுள்ளார்கள். விமானம், தொலைநோக்கி, கேமரா, மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்ட பல்வேறு கருவிகளைக் கண்டறிந்துள்ளார்கள். அவற்றுள் பல இன்று வரை பயன்பாட்டில் உள்ளன.

அறுவைச் சிகிச்சை மருத்துவர் ஸஹ்ராவீ

அபுல் காசிம் கல்ஃப் பின் அப்பாஸ் அஸ்ஸஹ்ராவீ (இறப்பு: 400 ஹி/ 1013 கி.பி.). இவர் மேற்குலகில் அபுல் காசிஸ் (Abulcasis) என்று அறியப்படுகிறார். இவர் அந்தலுஸ் நாட்டில் வாழ்ந்த அரபி முஸ்லிம் மருத்துவர் ஆவார். இவர் மிகச் சிறந்த அறுவைச் சிகிச்சை மருத்துவராகத் திகழ்ந்தார். இவர் நவீன அறுவைச் சிகிச்சையின் தந்தை எனப் போற்றப்படுகிறார். இவர் எழுதிய அத்தஸ் ரீஃப் லிமன் அஜஸ அனித் தஃலீஃப் எனும் நூல் ஒரு மருத்துவக் களஞ்சியமாகத் திகழ்கிறது. இவருடைய சில கண்டுபிடிப்புகள் இன்று வரை பயன்படுத்தப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் உதிர ஒழுக்கு நோய்க்கு (Hemophilia) பரம்பரையே காரணம் என்பதை முதன் முதலில் கண்டறிந்தார். மேலும் கால் ஆணி (Verruca) நோயை முதன் முதலில் இரும்புக் குழாய்களைப் பயன்படுத்திச் சிகிச்சையளித்தார். பற்களைக் கழற்றிக் கட்டுதல், எலும்புகளை இரம்பத்தால் அறுத்தல் உள்ளிட்ட பல்வேறு அறுவைச் சிகிச்சைகளைச் செய்துள்ளார். 

பற்கள், இரண்டு தாடைகள், வாய், தொண்டை ஆகியவற்றின் அறுவைச் சிகிச்சை குறித்தும் மென்மையாகப் பற்களைப் பிடுங்குதல் குறித்தும் தம் நூலில் எழுதியுள்ளார். கடைவாய்ப் பற்களின் வேர்களை நீக்குவதற்கான வழிமுறை, பற்களைச் சுத்தம் செய்வதற்கான வழிமுறை, இடம் மாறி வளர்ந்த கடைவாய்ப் பற்களைச் சீராக்குதல், பெண்களுக்கான அறுவைச் சிகிச்சை, கடினமான பிரசவத்தைக் கையாளும் முறை, கருச்சிதைவு சிகிச்சை முறை உள்ளிட்டவை குறித்தும் தமது நூலில் எழுதியுள்ளார். 

இறந்துபோன சிசுவைக் கர்ப்பப்பையிலிருந்து வெளியேற்ற தனிப்பட்ட ஒரு கருவியைக் கண்டறிந்தார். கர்ப்பப்பையின் வாயை விசாலப்படுத்துவதற்கான கருவியை இவரே முதன்முதலாகப் பயன்படுத்தினார். இரத்த ஒழுக்கை நிறுத்த முதன்முதலாகப் பஞ்சைப் பயன்படுத்தியவரும் இவரே ஆவார். இன்று வரை இம்முறை மருத்துவத் துறையில் பின்பற்றப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

வானவியல் வல்லுநர் இப்னு ருஷ்து

ஒருவரே பல்வேறு துறைகளில் திறமைகளைக் கொண்டிருக்கின்ற எண்ணிலடங்கா அறிஞர்கள் வாழ்ந்திருக்கின்றார்கள். அந்த வகையில் உள்ளவர்தாம் இப்னு ருஷ்து. இவர் தத்துவவாதி, மருத்துவர், இஸ்லாமியச் சட்டவியல் வல்லுநர் (ஃபகீஹ்), நீதிபதி, வானியல் அறிஞர், இயற்பியல் அறிஞர் எனப் பல்வேறு முகங்களை உடையவர். இவருடைய முழுமையான பெயர் அபுல் வலீத் முஹம்மத் பின் அஹ்மத் பின் முஹம்மத் பின் அஹ்மத் பின் அஹ்மத் பின் ருஷ்து ஆகும். இருப்பினும் இவர் இப்னு ருஷ்து அல்ஹஃபீத் (Averroes) என்றே அறியப்பட்டார். இவருடைய காலம் 1126 ஏப்ரல் 14 முதல் 1198 டிசம்பர் 10 வரை ஆகும். இவர் தம் இளமைப் பருவத்தில், மாலிக் இமாம் தொகுத்த முஅத்தா நூலையும் தீவான் முத்தநப்பீ எனும் நூலையும் மனனம் செய்துவிட்டார். இவர் இஸ்லாமியத் தத்துவவாதிகளுள் மிகவும் குறிப்பிடத்தக்கவர் ஆவார். இப்னு சீனா, ஃபாராபீ உள்ளிட்டோரின் தத்துவங்களைச் சரிகண்டு அவர்களின் பாட்டையில் சென்றார். இவர் கலீஃபா அபூயஅகூப் என்பாரிடம் மருத்துவராகவும் பின்னர் நீதிபதியாகவும் நியமிக்கப் பெற்றிருந்தார். 

மார்க்கமும் தத்துவமும் ஒன்றுக்கொன்று முரண்படாதவாறு தத்துவக் கருத்துகளைக் கூறினார்: உயிரானது இரண்டு வகை. 1. மனிதனோடு தொடர்புடையது. 2. இறைவனோடு தொடர்புடையது. மனிதனோடு தொடர்புடையது இறந்துபோகிறது. இறைவனோடு தொடர்புடையதே எஞ்சி நிற்கிறது. 

இவர் வானவியல் கல்வியில் தம் இளமைப் பருவத்திலேயே ஈடுபடத் தொடங்கிவிட்டார். இவருடைய 25ஆம் வயதில் தாம் தங்கியிருந்த மராகிஷ் நகரத்தில் மேற்கு வானத்தை ஆய்வு செய்து பல்வேறு புதிய கண்டுபிடிப்புகளை உலகிற்கு வழங்கினார். முந்தைய வானியல் அறிஞர்கள் கண்டுபிடித்திராத ஒரு நட்சத்திரத்தைக் கண்டறிந்தார். உலகத்தைப் பற்றிய உண்மை நிலையைக் கண்டறிந்து இத்திஹாதுல் கவ்னின் நமூதஜீ எனும் விரிவான நூலை இவ்வுலகிற்கு வழங்கியுள்ளார். இவர் அரபி மொழியில் 108 நூல்கள் எழுதியுள்ளார். அவற்றுள் நமக்குக் கிடைத்தவை 58 ஆகும். 

இஸ்லாமியச் சட்டங்களைத் தெளிவாகக் கூறுகின்ற பிதாயத்துல் முஜ்த்தஹித் வ ரிஹாயத்துல் முக்த்தஸித், மருத்துவக் களஞ்சியமாகத் திகழ்கின்ற அல்குல்லிய்யாத் பித்திப்பி ஆகியவற்றோடு ளமீமா, ஃபஸ்லுல் மகால், தஹாஃபத்தித் தஹாஃபுத், அல்கஷ்ஃபு அன் மனாஹிஜில் அதில்லா, அள்ளரூரீ ஃபீ உஸூலில் ஃபிக்ஹ், அள்ளரூரீ ஃபின் நஹ்வி, அல்ஹயலான், ஜவாமிஉ குதுபி அரிஸ்த்தாதாலீஸ் உள்ளிட்டவையும் அவர் எழுதிய முக்கிய நூல்கள் ஆகும்.

புவியியல் வல்லுநர் மஸ்ஊதீ

வரலாற்று அறிஞரும் புவியியல் ஆய்வாளருமான மஸ்ஊதீ என்பவர் ஹிஜ்ரீ 283 (கி.பி. 896)இல் பிறந்து ஹிஜ்ரீ 346 (கி.பி. 957) வரை வாழ்ந்தவர் ஆவார். இவர் புவியியல் ஆராய்ச்சியில் நிலநடுக்கம் குறித்த தகவல்களை முரவ்விஜுத் தஹப் எனும் நூலில் எழுதியுள்ளார். பல்வேறு நாடுகளுக்குப் பயணம் செய்து மானுடவியல் (Anthropology) குறித்தும் ஆய்வு செய்துள்ளார். மனித இனங்கள், உடலின் தன்மைகள், பழக்க வழக்கங்கள், தொழில்கள், உணவு, உடை, இருப்பிடம் ஆகியவை குறித்தும் பதிவு செய்துள்ளார்.
மேலும் அத்தன்பீஹ் வல்அஷ்ராஃப் எனும் நூல் பல்வேறு தலைப்புகளைக் கொண்டுள்ளது. கோள்கள், அவற்றின் தோற்றங்கள், நட்சத்திரங்கள், காலத்தின் வகைகள், ஆண்டின் பருவநிலை மாற்றங்கள், காற்று, அது வீசும் திசைகள், பூமி-அதன் தோற்றம், சூரிய-சந்திர ஆண்டின் கணக்கை அறிதல் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் அடங்கியுள்ளன. 

இவர் எழுதிய முக்கிய நூல்கள்: முரவ்விஜுத் தஹப், மஆதினுல் ஜவ்ஹர் பீ துஹாஃபில் அஷ்ராஃப், அல்முல்க்கு வ அஹ்லுத் தியாராத். இந்த மூன்றாம் நூல் அக்பார் ஸமான் எனும் பெருநூலின் சுருக்கமாகும். இது புவியியல் கல்வியின் கலைக்களஞ்சியமாகத் திகழ்கிறது. இந்நூல் பிரெஞ்ச், ஆங்கிலம், பாரசீகம் உள்ளிட்ட மொழிகளில் பெயர்க்கப்பட்டுள்ளது. இன்றும் இவருடைய நூல்கள் புவியியல் துறைக்கு ஒரு முன்னோடியாகத் திகழ்கின்றன. 

வேதியியல் வல்லுநர் ஜாபிர் பின் ஹய்யான்

இவருடைய முழுமையான பெயர் ஜாபிர் பின் ஹய்யான் பின் அப்தில்லாஹ் அல்அஸ்தீ ஆகும். இவர் வேதியியல், வானியல், பொறியியல், கனிம வளத் துறை உள்ளிட்டவற்றில் சிறந்து விளங்கினார். இவர்தாம் முதன்முதலில் வேதியியலைச் செயல்ரீதியாகப் பயன்படுத்தினார். இவர் ஹிஜ்ரீ 101 (கி.பி. 721) இல் பிறந்தார் என்றும் ஹிஜ்ரீ 117 (கி.பி. 737)இல் பிறந்தார் என்றும் கூறப்படுகிறது. இவருடைய நூல் 14ஆம் நூற்றாண்டு வரை வேதியியல் துறையில் பெரும் முன்னோடியாக இருந்துவந்தது குறிப்பிடத்தக்கதாகும். இவருடைய நூல் ஐரோப்பிய மொழிகளில் இலத்தீனிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. எனவே இவர் மேற்குலகில் ஜீபர் (Geber) அல்லது யேபர் (Yeber) என்று அறியப்படுகிறார். இவர் குறித்து, வரலாற்றறிஞர் இப்னு கல்தூன் தமது முகத்திமா எனும் நூலில் குறிப்பிடுகிறார்: நூல்களின் முன்னோடியான ஜாபிர் பின் ஹய்யான் வேதியியல் துறையில் தம் திறமையை வெளிக்கொண்டு வந்தமையால், அத்துறைக்கே “ஜாபிரின் அறிவு” என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. 

மேலும் இவர் குறித்து “சிர்ருல் அஸ்ரார்” எனும் நூலில் அபூபக்ர் ராஸீ குறிப்பிடுகிறார்: ஜாபிர் அரபியர்களுள் மிகச் சிறந்த அறிஞர்களுள் ஒருவரும் வேதியியல் துறையின் முன்னோடியும் ஆவார். ஆங்கிலேயத் தத்துவ அறிஞர் பிரான்ஸீஸ் பேகன் கூறுகிறார்: ஜாபிர் பின் ஹய்யான் வேதியியல் அறிவை முதன்முதலாக உலகிற்குத் தந்தார். அவரே வேதியியல் துறையின் தந்தை ஆவார். 

இவரின் கண்டுபிடிப்புகள்: சோடியம் ஹைராக்ஸைடு (NaOH), ஹைட்ரோ குளோரிக் அமிலம், நைட்ரிக் அமிலம், கந்தக அமிலம், எரிக்க முடியாத காகிதம், தங்கத்தைத் தண்ணீராக உருக்குதல், சில அமிலங்களை வைத்து வெள்ளியிலிருந்து தங்கத்தைப் பிரித்தெடுத்தல்-இன்றுவரை இம்முறையே பின்பற்றப்படுகிறது-உள்ளிட்டவை.

இவர் எழுதிய நூல்கள்: உஸூலுல் கீமியா, அஸ்ராருல் கீமியா, நிஹாயத்துல் இத்கான், இல்முல் ஹைஅத், அல்கமாயிருஸ் ஸஃகீரா, ஸுன்தூக்குல் ஹிக்மா, கிதாபுல் மலிக், கிதாபுல் முஜர்ரதாத், கிதாபுஸ் ஸப்ஈன், அஸ்ஸமூமு வ தஃப்உ மளார்ருஹா, அல்கீமியாவுல் ஜாபிரிய்யா, ஹல்லுர் ருமூஸ் வ மஃபாத்திஹுல் குனூஸ் உள்ளிட்டவை. ஏறத்தாழ ஐந்நூறுக்கும் மேற்பட்ட நூல்களை இவர் எழுதியுள்ளார். அவற்றுள் பெரும்பாலானவை காணாமல் போய்விட்டன என்று அல்அஉலாம் எனும் நூலாசிரியர் கூறுகிறார். இவருடைய நூல்கள் இலத்தீன், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் பெயர்க்கப்பட்டு ஐரோப்பிய நாடுகளில் பரவின. இன்று வரை அவருடைய நூல்கள் வேதியியல் துறைக்கு முன்னோடியாக உள்ளன. 

விமானி அப்பாஸ் பின் ஃபர்னாஸ் 

அபுல் காசிம் அப்பாஸ் பின் ஃபர்னாஸ் பின் வர்தாஸ் அத்தாகுரின்னீ ஸ்பெயின் நாட்டில் அந்தலுஸ் நகரில் கி.பி. 810இல் பிறந்தார். இவர் மேற்குலகில் அர்மென் ஃபிர்மென் (Armen Firmen) என்று அறியப்படுகிறார். மிகச் சிறந்த கண்டுபிடிப்பாளராகவும் தத்துவவியல் அறிஞராகவும் கவிஞராகவும் திகழ்ந்தார். இலக்கணம், கவிதை, வேதியியல், வானியல் உள்ளிட்ட துறைகளில் ஈடுபாடு கொண்டிருந்தார். இவருடைய தீராத ஆசை வானில் பறப்பதுதான். அதற்காக இவர் அதீத முயற்சிகளை மேற்கொண்டுள்ளார். ஒரு தடவை மக்கள் முன்னிலையில் பஃக்தாதின் ஒரு கோட்டையின் மீதேறி அங்கிருந்து குறிப்பிட்ட நேரம் வானில் பறந்து காட்டினார். இறங்கும் முறை தெரியாமல் கீழே விழுந்து அடிபட்டார். ரைட் சகோதரர்களின் கண்டுபிடிப்பிற்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே இவர் விமானத்தைக் கண்டறிந்துள்ளார் என்பது இன்றும் வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

இது தவிர, தண்ணீர்க் கடிகாரத்தையும் கண்டறிந்தார். அதற்கு “மீக்காத்திய்யா” என்று பெயரிட்டார். முதன் முதலில் மை போட்டு எழுதும் எழுதுகோலைக் கண்டறிந்தார். விண்ணிலுள்ள நட்சத்திரங்களை ஆய்வு செய்வதற்காகத் தமது வீட்டிலேயே ஓர் ஆராய்ச்சிக்கூடத்தை அமைத்திருந்தார். அதன்மூலம் ஓடுநட்சத்திரம், மேகம், இடி, மின்னல் ஆகியவற்றை ஆய்வு செய்துகொண்டிருந்தார்.
இவரின் சாதனையைப் போற்றும்விதமாக பஃக்தாத் விமான நிலையத்தின் முன்பாக இவருக்கு அரை உருவச் சிலை வைத்து, அதில், "அந்தலுசில் பிறந்த முதல் அரபி விமானி'' என்று பொறிக்கப்பட்டுள்ளது.

மருத்துவர் இப்னு சீனா

இபின் சீனா அல்லது அவிசென்னா எனச் சுருக்கமாக அழைக்கப்படுகிற, அபூ அலீ அல்-ஹுசைன் இப்னு சீனா (கி.பி. 980 - கி.பி. 1037) பாரசீகத்தைச் சேர்ந்த புகழ்
பெற்ற மருத்துவரும் தத்துவவாதியும் ஆவார். இவர் வானியல், வேதியியல், நிலவியல், தொல்லுயிரியல், கணிதம், இயற்பியல், உளவியல், அறிவியல் போன்ற பல துறைகளிலும் வல்லுநராக இருந்தாலும் ஒரு தலைசிறந்த மருத்துவர் என்றே பிரபலமாக அறியப்படுகிறார். 

இப்னு சீனா பத்தாம் வயதிலேயே இஸ்லாமிய அடிப்படை அறிவைப் பெற்று திருக்குர்ஆன் முழுவதையும் மனனம் செய்தார். இவர் இளம் வயதிலேயே பல்வேறு ஆசிரியர்களிடம் அல்ஜிப்ரா, வான சாஸ்திரம், தர்க்கவியல், தத்துவம், இறையியல் என்று பல்வேறு விசயங்களைக் கற்றுக்கொண்டார். இவர் தமது பதினாறாம் வயதில் மருத்துவத்தில் கவனம் செலுத்தினார். இவர் பதினெட்டாம் வயதில் புகழ்பெற்ற மருத்துவராக விளங்கினார். மன்னர் நூஹ் இப்னு மன்ஸூர் சாமானீ என்பவர் நோய்வாய்ப்பட்டிருந்தபோது அவரது நோயைக் குணப்படுத்த முடியாமல் பல்வேறு மருத்துவர்கள் திரும்பிச் செல்லவே, இறுதியாக இப்னு சீனா அழைக்கப்பட்டார். அவர் மன்னரின் நோயைக் குணப்படுத்தினார். 

இவர் எழுதிய நூல்களுள் உலகப் புகழ்பெற்ற நூல் அல்-கானூன் பித்திப் (The canon of Medicine) ஆகும். இந்நூல் 1270இல் ஹீப்ரு மொழியிலும் இலத்தீன் மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டு உள்ளது. 15 ஆம் நூற்றாண்டில் இந்நூல் குறித்து பல்வேறு விளக்கவுரை நூல்கள் வெளிவந்துள்ளன. இந்நூலில் உள்ள உடற்கூறு பகுதி மட்டும் நீக்கப்பட்டு, டாக்டர் ஓ.சி. குரூனர் (O.C Gruner) என்பவரால் 1930இல் ஆங்கில மொழியில் மொழிபெயர்க்கப்பட்டது என்றால் இந்த 21ஆம் நூற்றாண்டு வரை நீடித்து நிற்கும் இதன் செல்வாக்கைப் புரிந்து கொள்ளலாம். இவ்வாறு இப்னு சீனா எழுதிய அல்-கானூன் பித்திப் (மருத்துவ நெறிமுறைகள்) என்ற மருத்துவக் கலைக்களஞ்சியம் 15ஆம் நூற்றாண்டு வரை ஐரோப்பியப் பல்கலைக்கழகங்களின் மருத்துவப் பாடத்திட்டத்தில் முக்கிய நூலாகச் சேர்க்கப்பட்டிருந்தது. இவர் நவீன மருத்துவத் தந்தையாகப் போற்றப்படுகிறார். முக்கியமாக உட­லியக்கவியல் ஆராய்ச்சியில் முறைப்படியான பரிசோதனைகளையும் அளவீடுகளையும் முதன்முறையாகப் பயன்படுத்தினார். தொற்றுநோய்களைக் கண்டறிந்தும், அவை தொற்றும் முறைகளை வகைப்படுத்தியும், அவற்றைக் கட்டுப்படுத்தும் முறைகளைக் கண்டறிந்தும் அக்கால மருத்துவத் துறைக்குப் பெரும் பங்களிப்புகளைச் செய்தார்.

ஒளியியல் அறிஞர்-இப்னு அல்ஹைதம் 

கண்பார்வை ஒளி சம்பந்தமான ஆராய்ச்சியிலும் முஸ்லிம்கள் ஈடுபட்டுள்ளனர் என்பதற்குச் சான்றாக ஈராக்கிலுள்ள பஸ்ரா நகரில் பிறந்த அபூஅலீ முஹம்மது இப்னு அல்ஹசன் இப்னு அல்ஹைதம் (கி.பி 965-1039) என்பவர் திகழ்கிறார். இவர் இயற்பியலாளராக, வானவியல் அறிஞராக, கணித மேதையாக, தத்துவ ஞானியாக, பொறியாளராக, மருத்துவராக, இறையியல் அறிஞராகவும் விளங்கினார். இவர் மேற்குலகில் அல்-ஹாசன் என்றே அழைக்கப்படுகிறார்.

இவர் தம் வாழ்நாளில் பல்வேறு துறைகள் குறித்து மொத்தம் 200 நூல்கள் எழுதியுள்ளார். ஆயினும் ஒளியியல் சம்பந்தமாக இவர் எழுதிய "கிதாபுல் மனாசிர்' என்ற நூலே மிகவும் பிரபலமானது. இவரது இந்நூல் செயல்முறை ஆய்வை அடிப்படையாகக் கொண்ட ஓர் ஒப்பற்ற படைப்பாகும். இந்நூல் ஒளியின் இயல்பு, அதன் நிறம், கண்ணின் பகுப்பாய்வு, செயலியல், பார்வை, அதன் பிரதிப் பிம்பம், ஒளிவிலகல் (Refraction) ஆகியவற்றின் நிகழ்வுகள் பற்றி விவரிக்கின்றது. நவீன ஒளியியல் (Modern Optics) விஞ்ஞானமே இவரிடமிருந்துதான் ஆரம்பமாகிறது.

இலத்தீன் எழுத்தாளர்களான ரோஜர் பேகன், ஜான் பெக்காம் விட்டியோ, முஸ்­லிம் எழுத்தாளர்களான அஹ்மத் இப்னு இத்ரீஸ் அல்கரபி, குத்புதீன் அஸ்ஸிராசி, ஹீப்ரு மொழி எழுத்தாளரான பென் கெர்சன் போன்றோர் இந்நூலையே தங்களது படைப்பிற்கு ஆதாரமாகக் கொண்டனர். இவர்களுள் ரோஜர் பேகன் என்பவரோ தாம் எழுதிய சீபஸ் மஜுஸ் (Cepus Majus) என்ற நூ­லின் ஐந்தாம் பகுதியில் ஒளியியல் தொடர்பான கருத்துகளைக் கூறியுள்ளார். அப்பகுதி முற்றிலும் இப்னு அல்-ஹைதம் எழுதிய "கிதாபுல் மனாசிர்” நூ­­லிலிருந்து அப்படியே (காப்பி) எடுத்து பிரசுரிக்கப்பட்டதாகும் என்பதை வரலாற்று அறிஞர் ராபர்ட் பிரிபால்ட் மனித இனத்தை உருவாக்குதல் எனும் தமது நூலில் மிகத் தெளிவாக எடுத்துரைக்கிறார்.

அமெரிக்காவைக் கண்டறிந்த அல்பிரூனி

ஸ்பெயின் நாட்டைச் சார்ந்த மாலுமியும், ஆய்வாளருமான கிறிஸ்டோபர் கொலம்பஸிற்கு ஐந்து நூற்றாண்டுகளுக்கு முன்பே பிரபல கணித மேதையும், விஞ்ஞானியுமான அல்பிரூனி அமெரிக்காவைக் கண்டுபிடித்துள்ளார் என்று ஆய்வொன்று கூறுகிறது. இலண்டனைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ஹிஸ்டரி டுடே பத்திரிகையில் பிரபல அமெரிக்க அரசாங்க வல்லுநரும் வரலாற்று ஆய்வாளருமான ஃபெடரிக் இது குறித்து ஆய்வொன்றை வெளியிட்டுள்ளார்.

அமெரிக்கக் கண்டங்களைக் குறித்து வெளியுலகிற்கு முதன் முதலாக அறிவித்ததாக அதிகாரப்பூர்வ வரலாற்றைக் கூறும் கொலம்பஸ் கி.பி. 1498ஆம் ஆண்டுதான் அங்கு சென்றுள்ளார். ஆனால், அதற்கு முன்பு கி.பி. 1000ஆம் ஆண்டில் அமெரிக்காவைக் குறித்து அல்பிரூன் குறிப்பைத் தெரிவித்துள்ளார். கி.பி 973ஆம் ஆண்டு தற்போதைய உஸ்பெகிஸ்தானில் அபூரைஹான் முஹம்மது இப்னு அஹ்மத் என்ற அல்பிரூனி பிறந்தார். அல்பிரூனி இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் செய்து நூல்களை எழுதியுள்ளார். இந்தியாவின் கேரள மாநிலத்தில் பல மாதங்கள் தங்கியிருந்த அல் பிரூனி தாரீகுல் ஹிந்த் (இந்திய வரலாறு) எனும் நூலை எழுதினார். தொடர்ந்து உலகப் பயணங்களை மேற்கொள்வதை வழக்கமாக்கிக்கொண்ட அல்பிரூனி இத்தகைய பயணத்தில்தான் ஆசியா, ஐரோப்பாவை தவிர உலகில் இன்னொரு பெரிய கண்டம் இருப்பதைத் தெரிந்துகொண்டார்.

ஆப்பிரிக்கா, ஐரோப்பாவின் மேற்குக் கடற்கரை முதல் ஆசியாவின் கிழக்குக் கடற்கரை வரையிலான பிரதேசம் பூமியின் ஐந்தில் இரண்டு பகுதி மட்டுமே வரும் என்று அல்பிரூனி கணித்தார். பூமி உருண்டையானது என்று பிதாகரஸைப் போலவே அல்பிரூனியும் நம்பினார். இது குறித்து அவருடைய காலத்தைச் சார்ந்த பூகோள விஞ்ஞானி அஹ்மத் அல்ஃபர்கானுடன் நடத்திய விவாதங்களைத் தொடர்ந்து பல்வேறு கண்டங்களிடையேயான தூரத்தைக் குறித்து அல்பிரூனி கணித்தார். அவர் தமது நூலில் அமெரிக்காவைக் குறித்த தமது கணிப்பின் விவரத்தையும் வெளியிட்டுள்ளார்.

இந்தப் பூவுலகம் உருண்டை என்ற பேருண்மையைக் கலிலியோ கண்டறிவதற்கு முன்பாக ஒன்பதாம் நூற்றாண்டின் கலீஃபா அல்மாமூன் ஆட்சிக்காலத்தில் அல்பிரூனி என்ற முஸ்லி­ம் அறிஞர் கண்டறிந்தார். மேலும் இவர் உலகின் சுற்றளவை அளப்பதற்கு வியக்கத்தக்கதோர் எளிய வாய்பாட்டை முதன்முதலி­ல் வகுத்தளித்தார். மேலும் சூரியனைச் சுற்றி உலகம் சுழல்வது இயற்கையான நிகழ்வு என்பதையும் கண்டறிந்தார். இவர் வாழ்ந்த காலம் கி.பி. 992-1050 வரை ஆகும்.

ஏவுகணையின் தந்தை திப்பு சுல்தான்

திப்பு சுல்தான் (நவம்பர் 20, 1750, தேவனஹள்ளி மே 4, 1799, ஸ்ரீரங்கப்பட்டணம்), "மைசூர்ப் புலி­” என அழைக்கப்பட்டவர். 1782 ஆம் ஆண்டி­லிருந்து 1799 ஆம் ஆண்டுவரை மைசூரை ஆண்டவர். இந்தியாவின் முதல் பிரதமரான பண்டிட் ஜவஹர்லால் நேரு தமது "டிஸ்கவரி ஆஃப் இந்தியா” என்ற நூ­லில், "ஆங்கிலேயர்களுக்குச் சிம்ம சொப்பனமாகவும், பெரும் சவாலாகவும் இருந்தவர்கள் ஹைதர் அலீயும், திப்பு சுல்தானும். அவர்கள் பிரிட்டீஷாருக்குக் கடுமையான தோல்வியின் மூலம் வேதனைமிக்க அனுபவத்தை ஏற்படுத்தினார்கள். கிழக்கிந்திய கம்பெனியின் அதிகாரத்தை உடைத்தெறியும் அளவுக்கு அவர்கள் நெருங்கினார்கள்'' எனக் குறிப்பிடுகிறார்.

திப்பு சுல்தானின் ஏவுகணைத் தொழில்நுட்பமே பிற்கால பிரிட்டிஷாரின் ஏவுகணைத் தொழில்நுட்பத்தின் முன்னோடி. இலண்டன்  அருகில் ஊல்ரிச் எனும் ஊரில் உள்ள ரோதுண்டா அருங்காட்சியகத்தில் திப்பு சுல்தான் பயன்படுத்திய ஏவுகணைகள் வைக்கப்பட்டுள்ளன. இவற்றைப் பார்க்க இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் முயற்சி எடுத்துக்கொண்டார். 

ஆங்கிலேய ஏகாதிபத்தியவாதிகளை எதிர்ப்பதற்கு, தொழில் முறையில் பயிற்சி பெற்ற இராணுவமும், தொழில் நுட்பமும் தேவை என்பதை உணர்கிறார் திப்பு சுல்தான். இதனால் இராணுவத்தில் ஏவுகணைத் தொழில் நுட்பத்தைப் புகுத்தியதில் முன்னோடியாகத் திகழ்ந்தார் அவர். இதனை டாக்டர் அப்துல் கலாம் தமது "அக்னிச் சிறகுகள்' என்ற நூலில்தான் அமெரிக்காவின் நாசா விண்வெளி மையத்திற்குச் சென்றபொழுது திப்புசுல்தான் பயன்படுத்திய ஏவுகணையின் புகைப்படத்தை அங்கே பார்த்ததாக ஆச்சரியத்துடன் கூறுகிறார்.

உலக அளவில் முதல் இராணுவ ஏவுகணைகள் அவையே என்பதையும் பிற்காலத்தில் பிரிட்டிஷார் ஆய்வு நடத்தி அவற்றைத் திருத்தியமைத்துப் பயன்படுத்தியதையும், மேலும் இது இந்தியாவைச் சார்ந்த திப்பு சுல்தானின் சொந்தத் தொழில்நுட்பம் என்பதையும், பிரெஞ்சு நாட்டினரிடம் இருந்து கற்றது அல்ல என்பதையும் சர் பெர்னார்டு லோவல் எனும் பிரபல பிரிட்டிஷ் விஞ்ஞானி எழுதிய "விண்வெளி ஆராய்ச்சிகளின் தோற்ற மூலங்களும், பன்னாட்டுப் பொருளாதாரங்களும்” (The Origins and International Economics of Space Explorations) எனும் நூ­லின் உதவியோடு அப்துல் கலாம் நிரூபிக்கிறார்.

அணுவிஞ்ஞானி அப்துல் கலாம்

ஆவுல் பக்கிர் ஜைனுலாபுதீன் அப்துல் கலாம் (அக்டோபர் 15, 1931 - ஜூலை 27, 2015) பொதுவாக டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் என்று குறிப்பிடப்படுகிறார். இந்தியாவின் 11ஆவது குடியரசுத் தலைவராகப் பணியாற்றிய இந்திய அறிவியலாளரும் நிர்வாகியும் ஆவார். கலாம் தமிழ்நாட்டில் இராமேஸ்வரம் என்ற இடத்தில் பிறந்து வளர்ந்தார். திருச்சியில் உள்ள புனித ஜோசப் கல்லூரியில் இயற்பியலும் மெட்ராஸ் தொழில்நுட்பக் கல்லூரியில் விண்வெளி பொறியியலும் படித்தார்.

கலாம், குடியரசுத் தலைவராகப் பதவி ஏற்பதற்குமுன், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்திலும் (DRDO) இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்திலும், (ISRO) விண்வெளி பொறியாளராகப் பணியாற்றினார். ஏவுகணை மற்றும் ஏவுகணை ஏவல் வாகனத் தொழில்நுட்ப வளர்ச்சியில் கலாமின் ஈடுபாட்டினால் அவர் இந்திய "ஏவுகணை நாயகன்” என்று பிரபலமாக அறியப்படுகிறார். 1974ஆம் ஆண்டில் நடந்த முதல் அணு ஆயுதச் சோதனைக்குப் பிறகு 1998ஆம் ஆண்டில் நடந்த போக்ரான்-2 அணு ஆயுதப் பரிசோதனையில் நிறுவன, தொழில்நுட்ப மற்றும் அரசியல் ரீதியாக அவர் முக்கியப் பங்காற்றினார். 

1969
ஆம் ஆண்டில், கலாம் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்திற்கு மாற்றப்பட்டு அங்கு இந்தியாவின் முதல் உள்நாட்டுச் செயற்கைக்கோள் பாய்ச்சுதல் வாகனம் (launcher) (எஸ். எல். வி-3) திட்டத்தின் இயக்குநர் ஆனார். (எஸ்.எல்.வி-3) பாய்ச்சுதல் வாகனம் ரோகினி செயற்கைக்கோளைச் புவிச்சுற்றின் அருகே வெற்றிகரமாக 1980இல் ஏவியது, இவரின் வாழ்வில் மிகப்பெரிய சாதனையாகக் கருதப்பட்டது. 1970 ­லிருந்து 1990 வரை உள்ள இடைப்பட்ட காலத்தில் இவர் போலார் எஸ்.எல்.வி மற்றும் எஸ்.எல்.வி-3 திட்டங்களுக்காக முயற்சி மேற்கொண்டார். இரண்டு திட்டங்களும் வெற்றிகரமாக முடிந்தன.

"
எனது கண்டுபிடிப்புகளிலேயே மாற்றுத்திறனாளிகளுக்காகக் கண்டுபிடித்த குறைவான எடை உடைய கா­லிபர்தான் சிறந்த கண்டுபிடிப்பு. நான்கு கிலோவுக்குப் பதிலாக வெறும் நானூறு கிராமில் செயற்கைக் கால்களைத் தயாரித்துக்கொடுத்ததுதான் நான் செய்த சாதனைகளுள் குறிப்பிடத்தக்கதாகும். அதைப்போட்டு நடக்கும்போது அவர்கள் முகத்தில் ஏற்படும் சந்தோஷம், பெற்றோர்களின் ஆனந்தக் கண்ணீர் இதுதான் எனக்கு சந்தோஷம்'' என்று தமது "அக்னிச் சிறகுகள்” புத்தகத்திலும் பல நிகழ்ச்சிகளிலும் கூறியுள்ளார். இவரது இக்கண்டுபிடிப்பு இருபது ஆண்டுகளுக்கு மேலாகியும் மாற்றுத்திறனாளிகளுக்குப் பரவலாகக் கிடைக்காதது அரசின் அக்கறையின்மையையே காட்டுகிறது என்பதை வேதனையோடு நாம் நினைவுகூரக் கடமைப்பட்டுள்ளோம். 

ரிஃபாத் ஷாரூக்கின் செயற்கைக்கோள்

64
கிராம் எடைகொண்ட சிறிய செயற்கைக்கோளை முஹம்மது ரிஃபாத் ஷாரூக் 2017ஆம் ஆண்டு வடிவமைத்துள்ளார். இவர் கரூர் மாவட்டம் பள்ளப்பட்டியைச் சேர்ந்தவர். இவர் அங்குள்ள கிரசென்ட் மெட்ரிக் பள்ளியில் பிளஸ் 2 முடித்துள்ளார். நாசா நடத்திய போட்டியில் கலந்துகொண்ட இவர் சிறிய வடிவிலான செயற்கைக்கோளை வடிவமைத்துள்ளார். 3டி ப்ரிண்டிங் மூலம் புதிய தொழில்நுட்பத்தில் இதனை உருவாக்கியுள்ளார்.

240
நிமிடங்கள் மட்டுமே விண்ணில் இருக்கும் இந்தச் செயற்கைக் கோள் முப்பரிமாண கார்பன் ஃபைபரின் இயக்கத்தை விளக்கும் பதிவுகளைச் செய்யும். இம்மாணவரின் அறிவியல் திறன் அமெரிக்காவின் நாசா விண்வெளி மையத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. மேலும் இவர் வடிவமைத்த செயற்கைக்கோளை நாசா விண்ணில் செலுத்தியுள்ளது. 

இயற்கை ஜெல்லைக் கண்டறிந்த டாக்டர் ஃபாத்திமா பெனாசிர்

திருநெல்வேலி­ பேட்டையைச் சேர்ந்த டாக்டர் ஃபாத்திமா பெனாசிர் டிஎன்ஏ (DNA) பரிசோதனைக்கு இயற்கை ஜெல் (Food graded nucleic acid gel) கண்டுபிடித்து உலகச் சாதனை படைத்துள்ளார். இரண்டு குழந்தைகளின் தாயான இவர் தற்பொழுது பெங்களூருவில் வசித்து வருகிறார். அஸூக்கா லைஃப் சைன்ஸ் எனும் பயோடெக்னாலஜி நிறுவனத்தை நடத்திவருகிறார். இந்நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாகவும், இந்திய அறிவியல் கழக (Indian Institute of Science) மையத்தில் ஆராய்ச்சிப் பணியிலும் ஈடுபட்டு வருகிறார்.

இவர் மேற்கொள்ளும் ஆராய்ச்சி உலக அளவில் சிறப்பானதாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில், பரம்பரையாகத் தொற்றும் கொடிய நோய்கள் குறித்தும், உடனடியாக அதன் மூலத்தைத் தெரிந்து கொள்ளும் வகையில், புதிய ஆராய்ச்சி ஒன்றை மேற்கொண்டார். அதன் பலனாக டென்டோ ரங் (Tento Rang) என்ற பெயரில் டிஎன்ஏ பரிசோதனைக்கு இயற்கை ஜெல்லைக் கண்டுபிடித்துள்ளார். இந்த டென்டோ ரங் என்பது ஒரு கறை (Bio stain) ஆகும். உலகில் கண்டுபிடிப்புகள் எத்தனையோ இருந்தாலும் டிஎன்ஏ மற்றும் ஆர்என்ஏ கண்டுபிடிப்பு மிக முக்கியமான ஒன்றாகக் கருதப்படும் வேளையில் இந்த உணவுத் தரத்திலான பயோ ஸ்டைன் மிகவும் விசேஷம் வாய்ந்ததாக அமைந்தது.

இக்கண்டுபிடிப்பில்தான் தமிழகத்தைச் சேர்ந்த இந்த விஞ்ஞானி உலகச் சாதனை படைத்துள்ளார். இவரின் இயற்கை ஜெல் கண்டுபிடிப்பின் மூலம் கேன்சர், தோல்நோய், குடல்நோய், மஞ்சள் காமாலை, நீரிழிவு நோய் போன்ற தீரா வியாதிகள் எவ்வாறு உருவாகின்றன என்பதைத் துல்லியமாகக் கண்டுபிடித்துவிட முடியும்.

இந்தக் கண்டுபிடிப்பானது நூறு சதவிகிதம் இயற்கையோடு ஒன்றியதும், ஜெல் வகையைச் சார்ந்ததும் ஆகும். மற்ற கண்டுபிடிப்புகளைவிட மிக விரைவில் அடையாளம் காணக்கூடிய ஒன்றாகும். அதாவது டிஎன்ஏ பரிசோதனைக்கு, பிற வேதியியல் பொருட்களைப் பயன்படுத்தும்போது அதன் ரிசல்ட் கிடைக்க 10 முதல் 40 நிமிடம் வரை ஆகும். ஆனால் இந்த இயற்கைக் கண்டுபிடிப்பானது, 30 நொடிகளில் அடையாளம் கண்டுபிடிக்கும் ஆற்றல் பெற்றுள்ளது.
இது மற்ற கண்டுபிடிப்புகளைவிட ஏழு மடங்கு வீரிய வேகம் கொண்டதாகும். மேலும் மற்ற கண்டுபிடிப்புகள் வேதிப்பொருட்களால் தயாரானவை. அவை அனைத்தும் டிஎன்ஏ-வின் அமைப்பை (Structure) உருவாக்கும். ஆனால் இந்த இயற்கைக் கண்டுபிடிப்பானது டிஎன்ஏ அமைப்பை, நோயின் அறிகுறியோ அதன் சுவடுகளோ இல்லாமல் முழுவதும் குணமாக்கிவிடும். டிஎன்ஏ-வின் இயற்கைக் கண்டுபிடிப்பின் மூலம் உலகின் முதல் இந்தியப் பெண் விஞ்ஞானி எனும் பட்டிய­லில் இடம் பெற்றுள்ளார்.

அய்யாஷின் சமையல் மூடி

இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தாவில் நடைபெற்ற நான்காவது சர்வதேச இளம் கண்டுபிடிப்பாளர்களுக்கான போட்டியில் இலங்கை சார்பாகக் கலந்து கொண்ட எழுவர் கொண்ட குழுவில் அங்கம் வகித்த மாவனல்லை ஸாஹிரா கல்லூரி மாணவர் எம்.இஸட்.எம். அய்யாஷ் தமது புதிய கண்டுபிடிப்பான Energy Saving Cooking Pot எனும் ஆக்கத்திற்குத் தங்கப்பதக்கத்தை வென்றுள்ளார். 

சமைக்கும்போது பாத்திரத்தில் இருந்து வெப்பமும் நீராவியும் வெளியேறிச் செல்வதால் கணிசமான அளவு வெப்ப ஆற்றல் விரயமாக்கப்படுகிறது. இவ்வாற்றல் விரயத்தைக் குறைக்குமுகமாகப் புதிய வடிவமைப்பிலான மூடியொன்றைக் கண்டுபிடித்துள்ளார் எம். இஸட். எம். அய்யாஷ். இம்மூடியைக் கொண்டு பாத்திரம் மூடப்படுகையில் வெளியேறும் நீராவி சிறைப்படுத்தப்பட்டு அதிலி­ருந்து கிடைக்கும் வெப்ப ஆற்றல் மீண்டும் பாத்திரத்திற்கு வழங்கப்படுவதால் பொருள் விரைவாகச் சமைக்கப்படுகிறது. இதன் மூலம் குறைந்த எரிவாயுவைக் கொண்டு சமையலை மேற்கொள்ளலாம்.

தொடரும் பட்டியல் 

கணிதம்-வானவியல் துறையில் சாதனை படைத்த அல்குவாரிஸ்மி (அல்காரிஸ்ம்), மருத்துவத் துறையில் சாதனை படைத்த அல்ராஜி (ரேஜஸ்), புவியியல் துறையில் சாதனை படைத்த அல்இத்ரீஸி (டிரேஸஸ்), வரலாற்றுத் துறையின் முன்னோடியாகத் திகழ்ந்த இப்னு கல்தூன் உள்ளிட்ட பேரறிஞர்கள் இஸ்லாமிய மார்க்கத்தில் ஏராளம் பேர் உள்ளனர். சான்றுக்காகச் சிலரின் பெயர்களே பதிவு செய்யப்பட்டுள்ளன. விரிவஞ்சி இத்துடன் முடித்துக்கொள்கிறேன். இன்னும் ஏராளமான கண்டுபிடிப்பாளர்களும் அறிவியல் முன்னோடிகளும் இஸ்லாமிய மார்க்கத்தில் இருந்துள்ளனர். இன்றும் முஸ்லிம் ஆண்கள்-பெண்கள் இருபாலரும் தம் புதிய புதிய கண்டுபிடிப்புகள் மூலம் இவ்வுலகிற்குத் தமது பங்களிப்பைச் செய்துகொண்டுதான் இருக்கின்றார்கள். முஸ்லிம்கள்தாம் எல்லாவற்றிற்கும் முன்னோடி என்பதை யாரும் மறைக்க முடியாது.
=============================================

சனி, 20 ஜூலை, 2019

ஈமானை வலுப்படுத்துவோம்

வன்முறைக் காட்சிகளைப் பரப்பாதீர்

ஏழைகளை நேசிப்போம்!


 
-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி

ஒவ்வோராண்டும் ஜூன் 28ஆம் நாள் உலக ஏழைகள் தினம் மேற்கொள்ளப்படுகிறது. ஏழைகளின் நலன் பேண வேண்டும்; அவர்களை நேசிக்க வேண்டும்; அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்பதே அந்நாள் நினைவுகூரப்படுவதற்கான நோக்கம். ஏழைகளை நேசிப்பது குறித்து இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறியுள்ள செய்திகள் ஏராளம். 
ஏழைகளின் சிறப்பையும் மேன்மையையும் முதலில் அறிந்துகொண்டால்தான் அவர்களைப் பற்றிய நமது பார்வை மாறும். ஏழைகளை இழிவாகவும் கேவலமாகவும் நோக்குவது பெரும்பாலான செல்வர்களின் இயல்பாகவே உள்ளது. ஆனால் அவர்களின் மேன்மை குறித்து அறிந்தவர்கள் அவ்வாறு கருதுவதில்லை. ஏழைகள் குறித்து நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ள செய்திகளை ஒவ்வொன்றாகப் பார்க்கலாம். 

"சொர்க்கவாசிகள் யார் என்று உங்களுக்கு நான் தெரிவிக்கட்டுமா? அவர்கள் (மக்களின் பார்வையில்) பலவீனமானவர்கள்; பணிவானவர்கள். (ஆனால்,) அவர்கள் அல்லாஹ்வின்மேல் ஆணையிட்டு (எதையேனும்) கூறினால் அல்லாஹ் அதை (அவ்வாறே) நிறைவேற்றிவைப்பான். (இதைப் போன்றே) நரகவாசிகள் யார் என்று உங்களுக்கு நான் தெரிவிக்கட்டுமா? அவர்கள் இரக்கமற்றவர்கள்; (அதிகமாகச் சாப்பிட்டு) உடல் கொழுத்தவர்கள்; பெருமை அடிப்பவர்கள் ஆவர்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதைத் தாம் கேட்டதாக ஹாரிஸா பின் வஹ்ப் அல்ஃகுஸாஈ (ரளி) அறிவிக்கின்றார். (நூல்: புகாரீ: 4918)

மக்களின் பார்வையில் பலவீனமானவர்களும் ஏழைகளும்தாம் சொர்க்கவாசிகள் என்பதிலிருந்து அவர்களின் மேன்மையைப் புரிந்துகொள்ளலாம். அல்லாஹ்வின் கட்டளைகளைப் பேணி, ஐவேளை தொழுது, அவனிடமே தம் தேவைகளைக் கேட்டுப்பெற வேண்டும் என்ற கொள்கையோடு வாழ்பவர்கள். பிறரிடம் கையேந்தத் துணிய மாட்டார்கள். ஏழ்மையையும் வறுமையையும் பிறரிடம் முறையிடாமல் இறையிடமே முறையிட்டு, சோகத்தை மறைத்துக்கொண்டு வாழ்பவர்கள். அவர்கள்தாம் ஏழைகள்; அவர்கள்தாம் பலவீனர்கள்.

ஒரு தடவை, ஒரு (செல்)வர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அருகில் சென்றார். அப்போது நபி (ஸல்) அவர்கள் (தம் தோழர்களிடம்), "இவரைப் பற்றி நீங்கள் என்ன கருதுகின்றீர்கள்?'' என்று கேட்டார்கள். தோழர்கள், "இவர் பெண் கேட்டால் இவருக்கு மணமுடித்து வைக்கவும், இவர் பரிந்துரைத்தால் அதனை ஏற்கவும், இவர் பேசினால் செவிசாய்க்கப்படவும் தகுதியான மனிதர்'' என்று கூறினர். பிறகு நபி (ஸல்) அவர்கள் சிறிது நேரம் மௌனமாயிருந்தார்கள். பிறகு, நபி (ஸல்) அவர்கள் அருகில் முஸ்லிம்களுள் ஓர் ஏழை மனிதர் சென்றார். அப்போது நபி (ஸல்) அவர்கள், "இவரைக் குறித்து நீங்கள் என்ன கூறுகின்றீர்கள்?'' என்று கேட்டார்கள். தோழர்கள், "இவர் பெண் கேட்டால் இவருக்கு மணமுடித்து வைக்காமலும், இவர் பரிந்துரைத்தால் அது ஏற்கப்படாமலும், இவர் பேசினால் செவிதாழ்த்தப்படாமலும் இருக்கத் தகுதியானவர்'' என்று கூறினர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவரைப் போன்ற (வசதி படைத்த)வர்கள் இந்தப் பூமி நிரம்ப இருந்தாலும் (அவர்கள் அனைவரையும்விட) இந்த ஏழையே மேலானவர்'' எனக் கூறினார்கள். (நூல்: புகாரீ: 5091)

வசதியானவர்கள், செல்வர்கள், பணக்காரர்கள் இப்பூமி முழுவதும் நிரம்பி இருப்பதைவிட ஓர் ஏழை சிறந்தவர் என்றால், ஏழைகளின் மதிப்பையும் கண்ணியத்தையும் எந்த அளவிற்கு நபிகள் நாயகம் (ஸல்) உயர்த்திப் பிடிக்கின்றார்கள் பாருங்கள். நாம் கேவலமாகக் கருதும் ஏழைகள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் பார்வையில் எவ்வளவு உயர்ந்தவர்கள் என்பதை உற்று நோக்க வேண்டும். அவர்களை நாம் நேசிக்க வேண்டும். 

ஒரு தடவை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இறைவா! என்னை ஏழையாக வாழச் செய்வாயாக. ஏழையாக மரணிக்கச் செய்வாயாக. மறுமை நாளில் ஏழைகளின் கூட்டத்திலேயே என்னை எழுப்புவாயாக'' என்று பிரார்த்தனை செய்தார்கள். அப்போது அவர்களின் அருகிலிருந்த ஆயிஷா (ரளி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! ஏன் (இவ்வாறு பிரார்த்தனை செய்தீர்கள்)?'' என்று வினவினார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நிச்சயமாக ஏழைகள், செல்வர்களைவிட நாற்பதாண்டுகளுக்கு முன்னரே சொர்க்கத்தினுள் நுழைந்துவிடுவார்கள். ஆயிஷா! ஏழைக்குப் பேரீச்சம் பழத்தின் ஒரு துண்டையேனும் கொடுக்காமல் திருப்பி அனுப்பாதே. ஆயிஷா! ஏழைகளை நேசிப்பாயாக. உனக்கு அருகில் அவர்களுக்கு இடமளிப்பாயாக. அவ்வாறாயின் மறுமை நாளில் அல்லாஹ் தனக்கு அருகில் உனக்கு இடமளிப்பான்'' என்று கூறினார்கள். (நூல்: திர்மிதீ: 2275)

ஆக ஏழையாக இருக்க நபி (ஸல்) அவர்கள் விரும்பியது, செல்வர்களைவிட ஏழைகள் நாற்பதாண்டுகள் முன்னரே சொர்க்கத்தினுள் நுழைந்துவிடுவார்கள் என்பதுதான். சொர்க்கத்தினுள் நுழைவதுதான் ஒவ்வொரு முஸ்லிமின் உயர் இலட்சியமாக இருக்க வேண்டும் என்பதை இதனுள் நபியவர்கள் உள்ளடக்கியுள்ளார்கள். ஏழைகளை நேசித்தல், அவர்களோடு நெருக்கமாக இருத்தல், தேவைப்பட்டால் அவர்களுக்குப் பொருளாதார உதவி செய்தல் ஆகிய நற்செயல்களால் ஒருவர் அல்லாஹ்வின் உவப்பையும் அல்லாஹ்வின் தூதரின் அன்பையும் பெற முடியும். அதன் காரணமாகச் சொர்க்கத்தினுள் நுழைய முடியும் என்பதை அறிகின்றோம். "ஏழை முஸ்லிம்கள் தம்மிலுள்ள செல்வர்களைவிட அரை நாள் முன்னரே சொர்க்கத்தினுள் நுழைந்துவிடுவார்கள். அ(ரை நாள் என்ப)து ஐநூறு ஆண்டுகளாகும்'' என்று மற்றொரு நபிமொழி கூறுகின்றது. (திர்மிதீ: 2277) 

ஏழைகளை எவ்வாறு நேசிப்பது? அவர்களுக்குத் தேவையான வாழ்வியல் உதவிகளைச் செய்வதன்மூலம்தான் அவர்கள்மீதான அன்பையும் நேசத்தையும் வெளிப்படுத்த முடியும். மிகவும் அடிமட்டமான குடும்பத்தில் பிறந்து, இதுவரை திருமணம் முடிக்கப்படாமல் இளமைக் காலத்தை வெறுமனே கடத்திக்கொண்டிருக்கும் ஏழைப் பெண்கள் பலர் உள்ளனர். அவர்களை இனம் கண்டு, தேடிப்பிடித்து, அவர்களுக்குரிய வாழ்க்கைத் துணையோடு இன்புற்று இல்வாழ்க்கையைத் தொடர செல்வர்கள் தம்மால் இயன்ற பொருளாதார உதவிகளைச் செய்து அவர்களின் திருமணத்தை நடத்திவைக்க வேண்டும். இதுதான் அச்செல்வர்கள் தம் மறுமை வாழ்விற்காக இவ்வுலகில் செய்யும் நிரந்தர முதலீடாகும். 

இது குறித்த செய்தியைத் திருக்குர்ஆனில் அல்லாஹ் இவ்வாறு கூறுகின்றான்: உங்களுள் எவருக்கும் வாழ்க்கைத்துணை இல்லாவிட்டால், அவர்களுக்கு(ம் விதவைகளுக்கும்) திருமணம் செய்துவையுங்கள். (அவ்வாறே) உங்கள்  அடிமையிலுள்ள நல்லோர்களான ஆண்களுக்கும் பெண்களுக்கும் திருமணம் செய்து வையுங்கள். அவர்கள் ஏழைகளாயிருந்தாலும் அல்லாஹ் தன்னுடைய அருளால் அவர்களுடைய வறுமையை நீக்கிவிடுவான். (கொடை கொடுப்பதில்) அல்லாஹ் மிக்க விசாலமானவனும் (மனிதர்களின் நிலைமையை) நன்கறிந்தவனாகவும் இருக்கின்றான். (24: 32) 

செல்வர் ஒருவர் தம் பிள்ளைகளுக்குத் திருமணம் செய்துவைக்கின்றபோது அத்தோடு ஓர் ஏழைப் பெண்ணுக்குத் திருமணம் செய்துவைத்தால் அதுதான் அவர் தம் மறுமை வாழ்விற்காகச் செய்யும் மிகச் சிறந்த முதலீடாகும். எத்தனையோ கன்னிப் பெண்கள் பருவமடைந்து பல ஆண்டுகளாகியும் திருமணம் முடிக்கப் பெறாமல் முதிர்கன்னிகளாகவே இருக்கின்றார்கள். அவர்களைக் கண்டறிந்து திருமணம் செய்துவைப்பது ஒவ்வொரு செல்வரின் கடமையாகும். ஒவ்வொரு மஹல்லா நிர்வாகத்தாரின் கடமையும் பொறுப்பும் ஆகும். 

எத்தனையோ ஏழைகள் மருத்துவமனைகளில் நோயோடு போராடிக் கொண்டிருக்கின்றார்கள். அறுவைச் சிகிச்சைக்குப் பணமில்லாமல் நிர்க்கதி நிலையில், யாராவது உதவி செய்வாரா எனக் காத்திருக்கின்றார்கள். மருத்துவமனைகளுக்குச் சென்று அத்தகையோரை நேரடியாகச் சந்தித்து, அவர்களுக்குத் தேவையான பொருளாதார உதவிகளைச் செய்து, அவர்களின் நல்வாழ்வுக்கு உதவுவதே அல்லாஹ்வின் திருப்தியையும் உவப்பையும் பெற்றுத்தரும் அறச் செயலாகும். 

எத்தனையோ ஏழை மாணவர்கள் பொருளாதார நெருக்கடியாலும் கடன் கொடுத்து உதவாததாலும் தம் மேற்படிப்பைத் தொடரமுடியாமல் தவிக்கின்றார்கள்; சிலர் படிப்பையே விட்டுவிடுகின்றார்கள். இவ்வாறான மாணவர்களைத் தேடிக் கண்டுபிடித்து, அவர்களின் கல்விக்காக உதவுவது தொடர்படியான தர்மமாகும். இப்படிப் பல்வேறு வகைகளில் ஏழைகளுக்கு உதவி செய்வதன்மூலம்தான் அவர்களை நேசிக்க வேண்டும். அதனால் நாம் அல்லாஹ்வின் அன்பைப் பெற முடியும். அவ்வாறான உதவிகளைச் செய்து அல்லாஹ்வின் அன்பைப் பெற முயல்வோமாக. 
==================================