வெள்ளி, 31 மே, 2019

ஞாயிறு, 26 மே, 2019

ஸதகத்துல் ஃபித்ர் எவ்வளவு?இப்னு உமர் (ரளி) அவர்கள் கூறியதாவது: முஸ்லிம்களில் அடிமை, சுதந்திரமானவர், ஆண், பெண், சிறியவர், பெரியவர் ஆகிய அனைவருக்காகவும் ஒரு 'ஸாஉ' அளவு பேரீச்சம் பழம் அல்லது ஒரு 'ஸாஉ' அளவு தீட்டாத கோதுமையைப் பெருநாள் தர்மமாக (ஏழைகளுக்கு வழங்க வேண்டுமென்று) நபி (ஸல்) அவர்கள் நிர்ணயித்தார்கள். அதை(ப் பெருநாள்) தொழுகைக்காக மக்கள் புறப்படுவதற்கு முன்னால் கொடுக்கும்படி கட்டளையிட்டார்கள். (நூல்: புகாரீ: 1503)


'முத்'து என்பது சுமார் 533 கிராம் எடை கொண்ட ஓர் அளவை ஆகும். நான்கு 'முத்'துகள் கொண்டது ஒரு 'ஸாஉ' (533X4=2132) ஆகும். ஒரு 'முத்'து என்பது இன்று சுமார் 687 கிராம் எடை கொண்ட ஓர் அளவை என்றும் அறிஞர்களுள் சிலர் கூறுகின்றனர். (687X4=2748)


ஆகவே 2132-க்கும் 2748-க்கும் இடைப்பட்ட அளவாகவே 2500 கிராம் (2 1\2 கிலோ) என நடுநிலையாக ஓர் அளவு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்பதை அனைவரும் அறிவோம்.


ஒரு கிலோ அரிசி குறைந்தபட்சம் நாற்பது ரூபாய் என்று கணக்கிட்டால் 2 1\2 கிலோ அரிசி நூறு ரூபாய் ஆகிறது.


ஒவ்வொரு குடும்பத்திலும் ஐந்து உறுப்பினர்கள் என்றால் ஒரு குடும்பத்திற்கு ஐநூறு ரூபாய் ஆகிறது.


இதைச் சரியாக வசூல் செய்து உரிய ஏழைகளுக்கு வழங்குவது ஒவ்வொரு ஜமாஅத்தின் கடமை என்பதை உணர்வோம்.


ஒவ்வொரு பள்ளிவாசலிலும் அந்தந்த நிர்வாகிகள் ஒரு வசூல் பெட்டி வைத்து அதில் மக்கள் தம் ஸதகத்துல் ஃபித்ரைப் போட ஏற்பாடு் செய்து, அதை அந்தந்த மஹல்லாவில் உள்ள ஏழைகள், அநாதைகள், விதவைகள் உள்ளிட்டோருக்குப் பங்கிட்டுக் கொடுக்கலாம்.


(இதை நான் இமாமாக உள்ள பள்ளியில் கடந்த நான்கு ஆண்டுகளாகச் செய்து வருகிறேன் என்பதைத் தகவலுக்காகத் தருகிறேன்.)


மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி, மணலி.
26.05.2019 20.09.1440
வெள்ளி, 24 மே, 2019

வெள்ளி, 17 மே, 2019

ஸகாத் கட்டாயக் கடமை

வியாழன், 16 மே, 2019

அவசரப்படாதீர்!
-
முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.

மனிதன் - நன்மையைக் கொண்டு அவன் பிரார்த்தனை செய்வதைப் போன்று (சில நேரங்களில்) தீமையைக் கொண்டும் பிரார்த்தனை செய்கிறான். (ஏனெனில்) மனிதன் அவசரக்காரனாக இருக்கிறான்” (17: 11) என்று அல்லாஹ் கூறுகின்றான். 

அதாவது மனிதன் தனது அவசரத்தால், ஏதோ ஒன்றை மிக அவசரமாக அல்லாஹ்விடம் கேட்கிறான். அவன் அது தனக்கு நன்மையெனக் கருதிக் கேட்கிறான். ஆனால் அது அவனுக்குக் கேடாக இருப்பதை அவன் உணர மாட்டான். அல்லாஹ்வுக்கு மட்டுமே தெரியும். மனிதன் பிரார்த்தனை செய்கின்றபோது சிலவற்றை அல்லாஹ் உடனடியாகக் கொடுப்பதில்லை; தாமதப்படுத்துவான். அதற்கான காரணம் என்னவெனில், இப்போது அது அவனுக்கு அவசியமில்லை என்பதால்தான். இவ்விடத்தில் நபி (ஸல்) அவர்கள் கூறிய ஒரு செய்தியை நினைவுகூர்வது சாலப் பொருத்தமாகும். நான் பிரார்த்தித்தேன், ஆனால் என் பிரார்த்தனை ஏற்கப்படவில்லைஎன்று கூறி, உங்களுள் ஒருவர் அவசரப்படாத வரை அவரது பிரார்த்தனை ஏற்கப்படும் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்: 5283)

நிச்சயமாக மனிதன் அவசரக்காரனாகப் படைக்கப்பட்டுள்ளான்” (70: 19) என்று படைத்தோன் அல்லாஹ் பறைசாற்றுவது கவனத்தில் கொள்ளத்தக்கது. இதன் தொடரில் கூறப்பட்டுள்ள கருத்து மிக முக்கியமானது. அவனுக்கு ஏதேனும் தீங்கு ஏற்பட்டுவிட்டால் பதறிப் போய் விடுகிறான்; அதே வேளையில் அவனுக்கு ஏதேனும் நன்மை கிடைத்துவிட்டால் அதைப் பிறருக்குக் கொடுத்துவிடாமல் தனக்கே உரியதெனத் தடுத்து வைத்துக் கொள்கிறான். மனிதன் அவசரக்காரன் என்பதற்கான அடையாளம்தான் இது. ஏனெனில் துன்பத்தைக் கொடுப்பவனும் இன்பத்தைக் கொடுப்பவனும் ஏக இறைவன் அல்லாஹ்வே ஆவான்.

எனவே துன்பத்தைக் கண்டு துவண்டுவிடுவதோ இன்பத்தைக் கண்டு துள்ளிக் குதிப்பதோ கூடாது. இரண்டு நிலைகளிலும் அவசரப்படாமல் நிதானப்போக்கைக் கடைப்பிடிக்க வேண்டும். மேலும் அல்லாஹ் வழங்கிய செல்வத்தைத் தனக்கே உரியதென வைத்துக் கொள்ளாமல் அதைப் பிறருக்கு வழங்கும்போது அது கண்டு அல்லாஹ் மகிழ்ந்து அதைவிடப் பல மடங்கு கொடுப்பான். அதுதான் நம்பிக்கையாளர்களின் பண்பென அல்லாஹ் கூறுகின்றான்.
எழுதும்போதும் தட்டச்சு அடிக்கும்போதும் சிலர், ‘அவசரம்என்று எழுதுவதற்குப் பதிலாக, ‘அவரசம்என்று எழுதி விடுகின்றனர். அந்த அளவிற்கு அவர்களுக்கு அவசரம். படிப்போரும் அவசரப்படுகின்றனர். அவசரமாகப் படித்து, தவறாக விளங்கிக்கொள்கின்றனர். நிதானமாக வாசித்து, எழுதியவர் சொல்ல வந்த கருத்தென்ன என்பதைத் தெளிவாக விளங்க முற்பட வேண்டும். 

பெண்கள் சிலர் பார்த்ததும் ஒருவரைப் பற்றி முடிவெடுத்து விடுகின்றனர். அவர் நல்லவர் - என்று அவசர முடிவெடுத்து, அவரையே காதலித்து, அவரே தம் கணவர் என்று முடிவெடுத்தும் விடுகின்றனர். பெற்றோரின் சம்மதம் இல்லாமலே திருமணமும் செய்துவிடுகின்றனர். இறுதியில் அவர் கெட்டவர்எனத் தெரிந்ததும், யாருடைய பேச்சையும் கேட்காமல் அவசரப்பட்டு முடிவெடுத்ததை எண்ணி வருந்துகின்றனர்.

மனஅமைதியைப் பெறுவதற்காகப் பள்ளிவாசலுக்கு வருகைபுரிகின்ற மனிதர்கள்கூட, கடைசி நேரத்தில் வந்து, மிகத் துரிதமாக வெளியேறிவிடுகின்றனர். நிம்மதியாக உளூச் செய்து, நிம்மதியாக நின்று, பொறுமையாக ஓதித் தொழுது, தன் தேவைகளை இறைவனிடம் முன்வைத்து, பின்னர் சற்று நேரம் இறைவனை நினைத்து, மனமுருக நேரமில்லை. உள்ளே நுழைந்த வேகத்தில் வெளியேறிச் செல்வது இன்றைய இளைஞர்களின் இயல்பாக மாறிவிட்டது. 

ஆண்கள் ஒருபுறம் அவசரப்படுகின்றார்கள் என்றால், பெண்கள் மறுபுறம் அதைவிட மிகுதியாக அவசரப்படுகின்றார்கள். ரேஷன் கடையில் மற்றவர்களெல்லாம் வரிசையில் நிற்க, ஒரு பெண் இடையில் புகுந்து வாங்கிச் செல்ல எத்தனிக்கிறாள். அதனால் பின்னால் கால்கடுக்க வெகுநேரம் நிற்பவர்கள் கூச்சல்போடுகின்றார்கள். அந்தக் கூச்சலைத் தாங்க முடியாமல் அவள் வரிசையின் கடைசியில் போய் நிற்கிறாள். இது ஒரு வகை அவசரம். 

எல்லாவற்றையும் உடனடியாக வாங்கிக் குவித்துவிட வேண்டுமென நினைக்கிறாள் மனைவி. கணவனின் கடின உழைப்பை அறிந்து, அவனுடைய வருமானத்தைத் தெரிந்து, அதற்கேற்பக் காலம் தாழ்த்தி வாங்கிக்கொள்ளலாமே என்றெண்ணாமல் அவசர அவசரமாகப் பொருள்களை வாங்குவதால் குடும்பச் செலவுக்குக் கடன் வாங்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறான் கணவன். எது அவசியமோ அதை வாங்கிக்கொண்டு, பிறவற்றைப் பின்னர் வாங்கிக்கொள்ளலாம் என்ற திட்டமிடல் இருந்தால் வாழ்க்கை சுவையாக இருக்கும். 

வாகனம் ஓட்டுகின்ற இளைஞர்கள் கண்மண் தெரியாமல் மிக அவசரமாகச் செல்கின்றார்கள். பிற வாகனங்களையோ சாலையில் நடந்துசெல்வோரையோ பொருட்டாகக் கருதுவதில்லை. போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவதற்காக ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ள, போக்குவரத்து விளக்குகளின் வண்ணத்தைக் கவனிப்பதில்லை. கவனித்தாலும் அவசரப்பட்டு முன்னே செல்கிறார்கள். மிக அவசரமாகச் சென்று ஆபத்தில் சிக்குவதைப் பார்க்கின்றோம். 

கரும்பைச் சிறிது சிறிதாகக் கடித்துச் சுவைத்து அதன் சாற்றை விழுங்குவதைப் போன்றது வாழ்க்கை. இறைவன் நமக்கு வழங்கிய ஒவ்வொரு நிமிடத்தையும் நாம் விரும்பியவாறு நிதானமாகவும் அமைதியாகவும் வாழ வேண்டும். மாறாக, சாலையோரத்தில் விற்கப்படும் கரும்புச் சாற்றை நின்றுகொண்டே மிகத் துரிதமாகப் பருகிவிட்டுச் செல்வதைப்போல் வாழ்க்கையை அமைத்துக்கொண்டால் நிம்மதி இருக்காது. 

திட்டமிட்ட வாழ்க்கை இல்லாததே மனிதனின் அவசரத்திற்கு முதற்காரணம். இரவு எப்போது துயில்கொள்ள வேண்டும்; காலையில் எப்போது துயிலெழ வேண்டும்; எதுயெதனை எப்போது செய்ய வேண்டும் என்ற திட்டமிடலோ வரையறையோ இருப்பதில்லை. எப்போது வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் செய்துகொள்ளலாம் என்ற அசட்டைத்தனமான போக்கால் அவனுடைய எல்லாச் செயல்பாடுகளும் பதற்றத்திலும் அவசரத்திலும் சுழல்கின்றன. 

அவசரப்பட்டுக் கடனை வாங்கி வீட்டைக் கட்டியாயிற்று. இப்போது வாங்கிய கடனைக் கட்டுவதற்காக ஓடிக்கொண்டே இருக்க வேண்டியதாயிற்று. ஓரிரு மாதங்கள் தவணைத் தொகையைக் கட்டாமல் விட்டுவிட்டால் வட்டி மிகுதியாகிவிடுமே என்ற நிர்ப்பந்தச் சூழலுக்குள் தள்ளப்பட்டுள்ளான். இது மாதிரி, ஒவ்வொன்றுக்கும் கடன் வாங்கிக்கொண்டே இருக்கின்றான். அதனால் அதற்கான தவணைத்தொகையைக் கட்டுவதற்காக அல்லும் பகலும் ஓடிக்கொண்டிருக்கிறான். அதற்குப் பதிலாக, வீட்டைக் கட்டுவதற்காகச் சிறுகச் சிறுகச் சேமித்தபின் கட்டினால் இத்தகைய அவசரம் தேவையில்லை. இவ்வளவு இறுக்கம் மனத்தில் ஏற்படாது. 

ஆக ஆண்-பெண் பாகுபாடின்றி மனிதர்கள் அனைவருக்கும் அவசரம். ஆனால் ஒவ்வொன்றும் அதற்குரிய நேரத்தில்தான் நிகழும். எதுவும் முந்தாது; எதுவும் பிந்தாது. ஒவ்வொன்றுக்கும் நிர்ணயிக்கப்பட்ட நேரம் இருக்கிறது. நடக்க வேண்டியவை ஒவ்வொன்றும் அதுவதற்குரிய நேரத்தில் நன்றாகவே நடைபெறும். ஆகவே நாம் அவசரப்படாமல் நிதானப்போக்கைக் கடைப்பிடிப்போம். நிம்மதியாக வாழ்வோம்.
==========================================செவ்வாய், 14 மே, 2019

ஆன்மாவைத் தூய்மைப்படுத்துவோம்!-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.

ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஓர் ஆன்மா உள்ளது. அந்த ஒவ்வோர் ஆன்மாவுக்குள்ளும் ஓராயிரம் எண்ணங்களும் கற்பனைகளும் புதைந்து கிடக்கின்றன. அந்த ஆன்மாவுக்குள் பொறாமை, வஞ்சகம், சூது, கள்ளம், கபடம், மோசடி, வன்மம், குரோதம், விரோதம், குதர்க்கம், ஆபாசம், வக்கிரம், வெட்கமின்மை, காமம், சினம் உள்ளிட்ட கெட்ட பண்புகள் நிறைந்து கிடக்கின்றன. கெட்டுப்போன ஆன்மாவை இறையச்சத்தால் தூய்மைப்படுத்தி, நற்பண்புகளால் நிறைத்தால் ஒவ்வொரு மனிதனும் ஈருலகிலும் வெற்றி பெறலாம். அதற்கான வழியையே இஸ்லாம் காட்டுகிறது.

உலகில் ஒவ்வோர் இறைத்தூதரும் ஓரிறைக் கொள்கையை மக்களுக்குப் போதிப்பதற்கும் மனித மனங்களைத் தூய்மைப்படுத்தவுமே அனுப்பப்பட்டார்கள். அந்தந்த இறைத்தூதரை ஏற்றுக்கொண்டோர் தத்தம்  ஆன்மாக்களைத் தூய்மைப்படுத்திக்கொண்டு வெற்றிபெற்றார்கள். இறைத்தூதர்களை ஏற்றுக்கொள்ளாதோர் இழப்பிற்குரியோராக ஆயினர். அதேநேரத்தில் நம்முள் பலர் ஓரிறைக்கொள்கையை ஏற்றுக்கொண்டு, இறுதி இறைத்தூதரை ஏற்று உளமார உறுதிகொண்டாலும் தம் ஆன்மாக்களை இறையச்சத்தால் தூய்மைப்படுத்தாமலும் நற்பண்புகளால் நிரப்பாமலும் அசிங்கமான, அருவருக்கத்தக்க பண்புகளை அதனுள் நிறைத்து வைத்திருக்கின்றார்கள்.

அதனால்தான் நம்முள் பலர் ஒருவருக்கொருவர் பொறாமை, சண்டை, மோசடி, ஏமாற்றம் உள்ளிட்ட கெடுசெயல்களில் ஈடுபடுகின்றனர். பொதுவாக நமது ஆன்மா பாவங்களை ஆர்வத்தோடு செய்யக்கூடியதாகவும் குற்றம் செய்யத் தூண்டக்கூடியதாகவும் உள்ளது. அத்தகைய நிலையிலுள்ள ஆன்மாவைத் தூய்மைப்படுத்தவே நமக்கு தொழுகை, நோன்பு, ஸகாத், ஹஜ் முதலான வழிபாடுகள் (இபாதத்) கடமையாக்கப்பட்டுள்ளன. அந்த வழிபாடுகளைச் செவ்வனே நிறைவேற்றத் தொடங்கிவிட்டால் ஆன்மா தூய்மையடையத் தொடங்கிவிடும். அல்லாஹ்வின் கட்டளைகளை நிறைவேற்றுவதன்மூலம் ஆன்மா தூய்மையடைவதால்தான் இதனை ஆன்மிகம் என்று அழைக்கின்றார்கள். 

எந்த ஆன்மாவுக்குள் இறையச்சம் வந்துவிட்டதோ அந்த ஆன்மாதான் தன் இறைவனுக்கு அஞ்சி வழிபாடுகளைச் செவ்வனே நிறைவேற்ற முற்படும். இறையச்சமில்லா ஆன்மா கடமைகளை நிறைவேற்றாமல் உறங்கிக்கொண்டிருக்கும்; வீண்வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும். குற்றம் செய்ய அஞ்சாது. தொடர்ந்து குற்றங்களே செய்துகொண்டிருப்பதால் அந்த ஆன்மா கருத்துப்போய்விடும். குற்றங்களை ஒரு பொருட்டாகவே கருதாது. அத்தகைய ஆன்மாவைத் தூய்மைப்படுத்தவே "தவ்பா' எனும் பாவமன்னிப்பு உள்ளது.

ஆன்மா தூய்மையடைந்துவிட்டால் நம் கண்கள் அழகான பெண்ணைப் பார்த்தபோதும் அந்த ஆன்மாவுக்குள் காமம் தோன்றாது; மாறாக இறைநினைவே ஏற்படும். பிறரின் வளர்ச்சியைக் கண்டு பொறாமைகொள்ளாது. பிறரின் வியாபாரத்தைக் கண்டு எரிச்சலடையாது. பிறரை ஏளனமாகவோ மட்டமாகவோ நினைக்காது; பெருமை கொள்ளாது. மாறாக எல்லோரையும் சமமாகவே நினைக்கும். உலக ஆசை குறைந்து மறுமையைப் பற்றிய கவலை மிகுதியாகிவிடும்.
ஆன்மாவை அவ்வளவு எளிதில் தூய்மைப்படுத்திட இயலாது. ஏனென்றால் அல்லாஹ் கூறுகின்றான்: என்னை நானே (குற்றமற்றவள் எனத்) தூய்மைப்படுத்திக்கொள்ளவில்லை.
நிச்சயமாக மனம் தீமை செய்யுமாறு தூண்டக்கூடியதுதான்; என் இறைவனின் அருளுக்குரியவர் தவிர. என் இறைவன் மிகவும் மன்னிப்போனும் மிகுந்த கருணையாளனும் ஆவான். (12: 53)

ஆம்! மனித ஆன்மா பாவங்களைத் தூண்டக்கூடியது. அது பாவங்களைத் தூண்டிக்கொண்டே இருக்கும். ஆனால் நாம்தாம் அதனைக் கட்டுப்படுத்தி அடக்கி, நற்செயல்களைச் செய்யப் பழக்கப்படுத்த வேண்டும். நம் நேரங்களைக் கேளிக்கையிலும் வீண்விளையாட்டுகளிலும் கழிக்கத் தூண்டும்; தவறான காட்சிகளைக் காணத் தூண்டும்; வீண் அரட்டைகளில் ஈடுபடத் தூண்டும்; தொழுகாமல் போர்வையைப் போர்த்திக்கொண்டு தூங்கச் சொல்லும்; நற்செயல்களைச் செய்யச் சோம்பல் கொள்ளும். இத்தனையையும் மீறி, அடக்கி, கட்டுப்படுத்தி, தூய்மைப்படுத்தப்பட்ட ஆன்மா மட்டுமே ஈருலக வெற்றியைப் பெற முடியும்; சொர்க்கத்தில் நுழைய முடியும். 

ஆன்மாவைத் தூய்மைப்படுத்துதல் எனும் பணி ஒரு தடவையோடு முடிந்துவிடுவதில்லை. தூய்மைப்படுத்தும் பணி தொடர்ந்துகொண்டே இருக்க வேண்டும். நமது வீட்டை ஒரு தடவை தூய்மைப்படுத்திச் சுத்தம் செய்துவிட்டு, அப்படியே விட்டுவிடுவதில்லை. ஒவ்வொரு நாளும் வீட்டைப் பெருக்கிச் சுத்தமாக வைத்துக்கொள்ளவே செய்கிறோம். சுத்தம் செய்த அலமாரியை ஒரு மாதம் எதுவும் செய்யாமல் விட்டுவிட்டால் அதில் புழுதி படிந்திருப்பதைக் காணலாம். அதுபோலவே ஒரு தடவை வழிபாடு செய்து, இறைவனை நினைத்துவிட்டு, அப்படியே விட்டுவிட்டால் அது மீண்டும் அழுக்காகிவிடும்; அதில் அசிங்கங்கள் குடியேறிவிடும். எனவேதான் ஒவ்வொரு நாளும் ஐவேளைத் தொழுகை கடமையாக்கப்பட்டுள்ளது. அந்தத் தொழுகை மூலம் அதனைத் தூய்மைப்படுத்திக்கொண்டே இருக்க வேண்டும். இது ஒரு முடிவுறாச் செயல்பாடு. 

உயர்ந்தோன் அல்லாஹ் சத்தியம் செய்கின்றபோது பல்வேறு பொருள்களைப் பயன்படுத்தியுள்ளான். ஒவ்வோர் இடத்திலும் ஒரு பொருள்மீதோ இரண்டு பொருள்கள்மீதோ மூன்று முதல் ஐந்து பொருள்கள் மீதோ சத்தியம் செய்துள்ளான். ஆனால் ஆன்மாவைப் பற்றிச் சொல்ல வருகின்றபோது பதினோரு பொருள்கள்மீது சத்தியம் செய்துள்ளான். அவ்வசனத்தைப் பாருங்கள்: ஆன்மாவின்மீது சத்தியமாக! அதைச் சீர்படுத்தி, அதன் தீமையையும் அதன் நன்மையையும் அதற்கு அறிவித்தவன் மீது சத்தியமாக! (இஸ்லாத்தின்மூலம்) அதனைத் தூய்மைப்படுத்திக்கொண்டவர் வெற்றிபெற்றுவிட்டார். அதைப் (பாவத்தில்) புதைத்தவர் நட்டமடைந்துவிட்டார். (91: 7-10)

பதினோரு பொருள்கள்மீது சத்தியம் செய்து, ஆன்மாவுக்கு நன்மையையும் தீமையையும் அறிவித்துக்கொடுத்திருப்பதாகக் கூறுகின்றான். அந்த ஆன்மா அவ்வளவு முக்கியமானது என்பதையே அல்லாஹ்வின் சத்தியம் காட்டுகிறது. ஆனால் அந்த ஆன்மாவோ மனிதனைத் தீமையைச் செய்யவே தூண்டிக்கொண்டிருக்கிறது. எனவே அதனை நன்மை செய்யுமாறு திசைதிருப்பி, நற்செயல்கள் செய்ய வைக்கவே மனிதனுக்கு அறிவு எனும் கூராயுதம் வழங்கப்பட்டுள்ளது. தீமை செய்யத் தூண்டும் ஆன்மாவுக்குத் தனது பகுத்தறிவைப் பயன்படுத்தி, புரியவைத்து, அதனைத் திசைதிருப்பி நன்மை செய்தால்தான் வெற்றி என்பதை அதற்கு உணர்த்த வேண்டும். மாறாக மனம்போன போக்கிலே போனால் மனிதன் செல்லுமிடம் நரகம்தான் என்பதை எல்லோரும் நினைவில் கொள்ள வேண்டும்.

ஆன்மாவைக் கட்டுப்படுத்தும் ஆன்மிகப் பயிற்சிகளுள் மிக முக்கியமானதுதான் நோன்பு. சுவையான உணவும், சுவையான குடிபானமும் இருந்தபோதிலும் நாம் அவற்றை உண்ணவோ பருகவோ முற்படுவதில்லை. ஆன்மா தூண்டினாலும், அல்லாஹ் பார்த்துக்கொண்டிருக்கிறான் என்று நம் அறிவால் அதற்கு உணர்த்துகின்றோம். அதற்குப் பயிற்சி கொடுக்கின்றோம். இந்த ஆன்மிகப் பயிற்சியை மேற்கொள்ளும் மனிதர்களைப் பார்த்து இறைவனே வியந்துபோகின்றான். தன்னைச் சுற்றியுள்ள வானவர்களிடம் தன் அடியார்கள் குறித்துப் பெருமையாகப் பேசுகின்றான். தன் அடியார்களின் இச்செயலைப் பாராட்டி, அவர்களுக்கு அவனே அதற்கான கூலியை வழங்குகிறான். மற்ற நற்செயல்களுக்கு வானவர்கள்மூலம் கூலி வழங்கும் இறைவன், நோன்புக்கு மட்டும் அவனே கூலி வழங்குவதன் நோக்கம் என்ன? மற்ற வழிபாடுகளைப் பிறர் பார்க்கலாம். ஆனால் நோன்பு எனும் வழிபாட்டை அடியானையும் அல்லாஹ்வையும் தவிர யாரும் அறிய முடியாது. எனவேதான் அந்த நோன்புக்கு அல்லாஹ்வே நேரடியாகக் கூலி வழங்குகின்றான். ஆகவே அந்தப் பயிற்சியை நம்முள் ஒவ்வொருவரும் ரமளான் மாதத்தில் நிறைவேற்ற வேண்டும். உபரியான நோன்புகளையும் நோற்க வேண்டும். அதன்மூலம் நம் ஆன்மாவை நாம் தூய்மைப்படுத்திக்கொள்ளலாம். 

ஆன்மாவைத் தூய்மைப்படுத்தும் பயிற்சிகளுள் மற்றொன்றுதான் ஸகாத். மனிதன் பாடுபட்டு உழைத்துச் சம்பாதித்துச் சேர்த்த பணத்தில் இரண்டரை சதவிகிதம் ஏழைகளுக்குக் கொடுப்பதே ஸகாத். மனிதன் உடல்சார்ந்த வழிபாட்டைக்கூடச் சிரமப்பட்டுச் செய்துவிடுவான். ஆனால் தான் பாடுபட்டுச் சேர்த்த பணத்தை எவ்வித இலாபமுமின்றித் தானம் செய்ய விரும்பமாட்டான். ஆன்மா அவனைத் தடுக்கும்; உன் பணம் குறைந்துபோய்விடும் என எச்சரிக்கும்; பாடுபட்டுச் சேர்த்த பணத்தைத் தர்மம் செய்யலாமா எனக் கஞ்சத்தனம் செய்யும். இதையெல்லாம் ஒதுக்கிவைத்துவிட்டு, என் இறைவன் வழங்கிய பணத்தை அவனுக்காக, அவனுடைய பாதையில் செலவு செய்வேன் என ஏழைகளுக்கு வழங்கும்போது ஆன்மா அடங்குகிறது; கட்டுப்படுகிறது; பயிற்சி பெற்றுப் பழகிக்கொள்கிறது. இவ்வாறு அவன் வழங்கியதால் அவன் சொர்க்கம் செல்ல அது காரணமாக அமைகிறது. 

இவ்வாறு ஒவ்வொரு வழிபாடும் ஆன்மாவிற்கான பயிற்சிதான். அந்த ஆன்மாவை வழிபாட்டின் மூலமே அடக்கிவைக்க வேண்டும். இறைவனின் கட்டளைகளைச் செவ்வனே செய்வதில்தான் வெற்றி என்பதை அதற்கு உணர்த்த வேண்டியது நம் கடமை. இனி வரும் காலங்களிலாவது மனம்போன போக்கில் நம் வாழ்க்கையைக் கடத்தாமல் இறைவனும் இறைத்தூதர் (ஸல்) அவர்களும் காட்டித் தந்த வழியில் செல்ல முனைவோம்; ஈருலகிலும் வெற்றியடைவோம்.
===========================================ஞாயிறு, 12 மே, 2019

நீங்கள் உங்கள் வீட்டுக்கு அழையுங்கள் நாங்கள் எங்கள் வீட்டுக்கு அழைக்கிறோம்!-----------------------------------------------------------------
1. தமிழகத்தின் தாய்க்கல்லூரியான அல்பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் அரபுக் கலாச்சாலையின் பேராசிரியர் குழு 40 ஆண்டுகள் கடும் உழைப்பில் உருவாகி வெளிவந்துள்ள ஜவாஹிருல் குர்ஆன்எனும் திருக்குர்ஆன் விரிவுரை 16 பாகங்களைக் கொண்டுள்ளது. 

2. ரஹ்மத் பதிப்பகத்தின் மொழிபெயர்ப்பாளர் குழு பல்லாண்டுகளாக அரும்பாடுபட்டு வெளியிட்டுள்ள தஃப்சீர் இப்னு கஸீர்இதுவரை 9 பாகங்கள் வெளியாகியுள்ளன. 

3. ரஹ்மத் பதிப்பகத்தின் மொழிபெயர்ப்பாளர் குழு வெளியிட்டுள்ள புகாரீ, முஸ்லிம், திர்மிதீ, அபூதாவூத், சுனனுந் நஸாயீ, இப்னுமாஜா ஆகிய ஆதாரப்பூர்வமான ஆறு நபிமொழித் தொகுப்புகள் தெள்ளு தமிழில் பல பாகங்களாக வெளிவந்துள்ளன. 

4. இப்னு கஸீர் (ரஹ்) அரபியில் எழுதிய அல்பிதாயா-வந்நிஹாயா இஸ்லாமிய வரலாற்று நூல் ஆயிஷா பதிப்பகத்தின் சார்பாக, இதுவரை 7 பாகங்கள் செந்தமிழில் வெளிவந்துள்ளன. 
இவைபோக கடந்த காலங்களில் வெளிவந்த அன்வாறுல் குர்ஆன் எனும் திருக்குர்ஆன் விரிவுரை உள்ளிட்ட எத்தனையெத்தனையோ ஞானக் கருவூலங்கள் தீந்தமிழில் வெளிவந்துள்ளன. இவையெல்லாம் அல்லாஹ்வுடையவும் அவனுடைய தூதர் முஹம்மது (ஸல்) அவர்களுடையவும் சத்தியச் செய்திகள்; மக்கள் அனைவரும் படித்துச் செயல்படுத்த வேண்டியவை. அவற்றைப் படிக்கவே இங்கு ஆளைக் காணவில்லை. 

சிலர், கதை, புதினம், கவிதை- இவற்றுக்கு இஸ்லாத்தில் எந்த ஆதரவும் இல்லையே என அங்கலாய்க்கிறார்கள். கடைசியில் இந்த ஆலிம்கள் இலக்கிய இரசனையற்றவர்கள் என்ற முத்திரையோடு முடிக்கின்றனர். 

ஆலிம்கள் தொடர்ந்து குர்ஆன்-ஹதீஸை நோக்கியே பட்டிதொட்டியெங்கும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்ற இக்காலத்திலும் திருக்குர்ஆனை அரபியில் பார்த்து வாசிக்கத் தெரிந்தோர் எத்தனை சதவிகிதம்? உங்களால் திருப்தியான பதிலைத் தர முடியுமா

ஆலிம்கள், அல்லாஹ்வுடையவும் அவனுடைய தூதர் முஹம்மது (ஸல்) அவர்களுடையவும் ஞானக் கருவூலங்களைப் படிக்க அழைப்பார்களா? கற்பனைக் கதைகளையும் புனைவுகளையும் படிக்க அழைப்பு விடுப்பார்களா? அவர்கள் எதை நோக்கி அழைக்க வேண்டுமென நீங்கள் எதிர்பார்க்கின்றீர்கள்? எது அவர்களின் கடமை

ஏன் கற்பனைக் கதைகளும் புனைவுகளும்தாம் இலக்கியத்தின் பங்களிப்பா? ஆலிம்கள் இவ்வளவு அரபி நூல்களைத் தெள்ளு தமிழுக்குக் கொண்டுவந்துள்ளது அவர்களின் இலக்கியப் பங்களிப்பு இல்லையா

பொதுவாக ஒவ்வொருவரும் தத்தமது வீட்டுக்குத்தான் மக்களை அழைப்பார்களே தவிர, ‘அடுத்த வீட்டுக்குப் போங்கஎன்று சொல்ல மாட்டார்கள். ஆகவே இலக்கியவாதிகள்-நீங்கள் உங்கள் வீட்டுக்கு மக்களை அழையுங்கள். ஆலிம்கள்-நாங்கள் எங்கள் வீட்டுக்கு மக்களை அழைக்கிறோம். இருசாராரும் அழைப்போம். அதுதானே நியாயம்?

அதனை விட்டுவிட்டு இஸ்லாத்தில் இலக்கியத்திற்கு ஆதரவு இல்லைஎன்ற விமர்சனம் ஏன்? அதில் மறைபொருளாக ஆலிம்களைக் குறைகூறுவது ஏன்? கதை, கவிதை, புதினம் எழுதுகின்ற எவரையாவது எந்த ஆலிமாவது தடை செய்திருக்கிறாரா? அப்படி யாரையாவது காட்ட முடியுமா? அவரவர் துறை அவரவர்க்கு. அவ்வளவுதானே?

இனியாகிலும் இத்தகைய விமர்சனத்திற்கு முற்றுப்புள்ளி வையுங்கள். 

-முனைவர் நூ. அப்துல் ஹாதி பாகவி, மணலி, சென்னை-68 
12 05 2019 (06 09 1440)
===========================================

சனி, 11 மே, 2019

வெள்ளி, 3 மே, 2019

புதன், 1 மே, 2019

கடுஞ்சொல் விமர்சனங்களைத் தவிர்ப்போம்!

ஒருவர் எழுதுகின்ற ஏதேனும் ஆக்கத்தைப் படித்தவுடனே அதற்கான விமர்சனத்தை எழுதுவது இன்றைய நவீன உலகில் மிக எளிதாக உள்ளது. முகநூல், வாட்ஸ்அப், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் ஆக்கங்கள் எழுதுவோரை வறுத்தெடுக்கும் விதமாக விமர்சனம் எழுதுவது எங்ஙனம் நியாயமாகும்? கடுஞ்சொல் விமர்சனங்களை நாம் முற்றிலும் தவிர்க்க வேண்டும். நம் விமர்சனம் மிகவும் கண்ணியமாக இருக்க வேண்டும். இல்லையேல் எழுதாமலே விட்டுவிட வேண்டும்.

நாம் எழுதும் விமர்சனம், எழுதியவரின் ஆக்கத்தைப் பாராட்டி அவரை ஊக்கப்படுத்தும் விதமாக அமைய வேண்டும். அவரைத் திட்டி, தட்டி வைத்து, முடக்கிவிடக்கூடாது. உள்ளத்தைப் பண்படுத்தும்விதமாக எழுத வேண்டும்; புண்படுத்திவிடக் கூடாது. 

நமக்குப் பிடிக்காத ஆக்கத்தை ஒருவர் எழுதிவிட்டால், அதைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிட வேண்டும். இஸ்லாமியக் கொள்கைக்கு முரணாக ஒருவர் எழுதினால், “அது அவரது கொள்கை” என்ற முடிவுக்கு வர வேண்டும். மக்களைக் குழப்பும்விதமாக ஒருவர் எழுதினால், அதை மக்களுக்கு உணர்த்த வேண்டிய பொறுப்பு நமக்குண்டு. அதைத் தாராளமாகச் செய்யலாம். அதுவல்லாமல் அவரது அந்தரங்கத்தைத் தோண்டிப் பார்க்க முயல்வதும் அவர் ஏற்கெனவே பாவமன்னிப்புக் கோரியவற்றையெல்லாம் அள்ளிக்கொண்டு வந்து பொதுவெளியில் பரப்புவதும் அவ்வளவு நல்ல பழக்கம் இல்லை.

நாம் எழுதுகின்ற ஒவ்வொரு வார்த்தையும் மக்களுக்குப் பயனுள்ளதாக இருக்க வேண்டும். பயனற்றது என்றால் அதை எழுதாமல் இருப்பதே சிறப்பு. “என் பேனா பயனுள்ளதை மட்டுமே எழுதும்; பிறருக்குப் போட்டியாகவோ, ஏட்டிக்குப் போட்டியாகவோ, பிறர் மனதைப் புண்படுத்தும் விதமாகவோ ஒருபோதும் எழுதாது” என்ற கொள்கையை வகுத்துக்கொள்ள வேண்டும்.

“யார் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கைகொண்டாரோ அவர் பேசினால் நல்லதைப் பேசட்டும்; இல்லையேல் மௌனமாக இருக்கட்டும்” எனும் நபிமொழி பேச்சுக்கு மட்டுமல்ல, எழுத்துக்கும் பொருந்தும் என்பதை எழுதுகோல் பிடிப்போர் ஏகமனதோடு ஏற்றுக்கொள்ள வேண்டும்.

-முனைவர் நூ. அப்துல் ஹாதி பாகவி, மணலி, சென்னை-68
=====================================