திங்கள், 29 ஜூன், 2015

தராவீஹ் தொழுகையைப் பேணுவோம்


  தராவீஹ் தொழுகையைப்
பேணுவோம்  

தராவீஹ் மற்றும் இரவுத் தொழுகை பயான். மேலும்  எவ்வாறு தொழுகைப் பேண வேண்டும் என்பதற்கான குறிப்பு

மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி
எம். ஏ., எம்.பில்.

இடம்:

மஸ்ஜித் ஜாமிஉல் அன்வார்,

மணலி, சென்னை 68

நாள்:
 26 06 2015

வியாழன், 18 ஜூன், 2015ரமளானை
வரவேற்போம்  

ரமளான் மாதத்தில் எவ்வாறு நம்  நேரத்தைப் பயன்படுத்த வேண்டும் என்பது குறித்த பயான். மேலும்  எவ்வாறு திட்டமிட வேண்டும் என்பதற்கான குறிப்பு.

மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி
எம். ஏ., எம்.பில்

இடம்:

மஸ்ஜித் ஜாமிஉல் அன்வார்,

மணலி, சென்னை 68

சுற்றுச்சூழல் பேணுவோம்!


மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி எம்.ஏ., எம்.ஃபில்.,

ஒவ்வோராண்டும் ஜூன் 5ஆம் தேதி உலகச் சுற்றுச்சூழல் நாளாகக் கொண்டாடப்படுகிறது. அந்நாளில் நீர், நிலம், காற்று ஆகியவற்றையும் சுற்றுப்புறத்தையும் மாசுபடாமல் பாதுகாப்பதன் அவசியமும் முக்கியத்துவமும் உணர்த்தப்படுகிறது. அதற்காகவே இந்நாள் ஒவ்வோராண்டும் அனுசரிக்கப்படுகிறது. ஒவ்வோராண்டும் ஏதேனும் நாடு அதன் பொறுப்பை ஏற்றுக்கொண்டு விழிப்புணர்வுப் பிரச்சாரம் செய்யும். அதை இவ்வாண்டு நம் இந்திய நாடு ஏற்றுக்கொண்டு பிரச்சாரம் செய்தது. சிந்தி, சாப்பிடு, சேமி என்பதே அதன் முழக்கமாக இருந்தது.

ஒரு மனிதன் தன்னைச் சுற்றியுள்ளோரையும் தன்னைச் சுற்றியுள்ள பகுதிகளையும் கவனத்தில் கொண்டு வாழ்வதே சுற்றுச்சூழல் பேணுதல் ஆகும். தான் பயன்படுத்துகின்ற, அனுபவிக்கின்ற நீர், நிலம், காற்று ஆகியவை மக்களின் பொதுச்சொத்து; அவற்றை வீணாக்காமல் பாதுகாத்து, தன்னை அடுத்து வரவிருக்கின்ற சந்ததியினருக்கு விட்டுச் செல்ல வேண்டும் என்ற உயர் எண்ணம் கொள்ள வேண்டும். பொதுச்சொத்தை வீணாக்கக் கூடாது; மாசுபடுத்தக் கூடாது என்பதுதான் இஸ்லாம் போதிக்கின்ற பாடமாகும்.

நீர்நிலைகளைக் கெடுப்பதும் நிழல்தரும் மரங்களை வெட்டுவதும் இன்றைய மனிதனின் அன்றாடச்  செயல்பாடுகளாகிவிட்டன. "ஓடாமல் தேங்கி நிற்கின்ற தண்ணீரில் உங்களுள் யாரும் சிறுநீர் கழிக்க வேண்டாம். பின்னர் அதில் குளிக்க வேண்டி ஏற்படும்'' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: புகாரீ)

"(மக்கள்) சபிக்கக்கூடிய இரண்டை விட்டுத் தவிர்ந்துகொள்ளுங்கள்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது, "அல்லாஹ்வின் தூதரே! சபிக்கக்கூடிய இரண்டு என்ன?'' என்று கேட்டார்கள். "மக்களின் (நடை)பாதையில் அல்லது அவர்கள் நிழல் பெறும் இடத்தில் மலம் கழிப்பது'' என்று கூறினார்கள். (நூல்: முஸ்லிம்) "(மக்கள்) சபிக்கக்கூடிய மூன்றைவிட்டுத் தவிர்ந்துகொள்ளுங்கள். நீர்நிலைகளிலும் பாதைகள் சங்கமிக்கின்ற இடங்களிலும் நிழலிலும் மலம் கழிப்பதை(த் தவிர்த்துக்கொள்ளுங்கள்)'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்கள்: அபூதாவூத், இப்னுமாஜா)

ஆக, மேற்கண்ட நபிமொழிகள் அனைத்தும் பொதுமக்களின் நலத்தை அடிப்படையாக வைத்துக் கூறப்பட்டுள்ள அறிவுரைகள். இன்றைய மக்கள் குளத்துக் கரையிலும் ஆற்றோரங்களிலும்  மலம் கழித்துவிட்டு அங்கேயே கழுவி விட்டுச் செல்வதை நாம் காணலாம். சுற்றுப்புறங்களைத் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் நீர்நிலைகளை மாசுபடுத்தக் கூடாது என்றும் நபி (ஸல்) அவர்கள் பதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன்பே நமக்கு அறிவுரை வழங்கியுள்ளார்கள். இந்த அறிவுரையை உலக மக்கள் யாவரும் கடைப்பிடிக்கத் தொடங்கிவிட்டால் உலகமே தூய்மையடைந்துவிடும்.

இன்றையச் சூழ்நிலையில் பல்வேறு நீர்நிலைகள் நிரந்தரமாக அழிக்கப்பட்டு நிலங்களாக விற்பனை செய்யப்படுகின்றன. இன்னும் பல்வேறு நீர்நிலைகள் தொழிற்சாலைக் கழிவுகளும் வீட்டுக் கழிவுகளும் செல்லுமிடங்களாக மாறிப்போய்விட்டன. இதனால் மக்களுக்குப் பயன்பட வேண்டிய நீர்நிலைகள் சிலரின் சுயநலத்திற்காகவும் சுய இலாபத்திற்காகவும் மாசு படுத்தப்படுகின்றன. அதைக் கவனிக்க வேண்டிய பொறுப்புள்ள அதிகாரிகள் முறைப்படி கவனிப்பதில்லை. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதோடு எதிர்காலச் சந்ததியினருக்கு ஏதுமற்ற நிலையை மனிதர்கள் சிலர் ஏற்படுத்துகின்றனர்.

சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்துக்கொள்வதும் ஒரு முஸ்லிமின் கடமையாகும். "பாதையில் பிறருக்கு இடர்தரும் பொருள்களை நீக்குவது இறைநம்பிக்கையின் கடைநிலையாகும்'' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: முஸ்லிம்) இதன் மூலம் பிறருக்கு இடர்தரும் பொருள்களை நீக்க வேண்டும் என்பது வலியுறுத்தப்படுவதோடு பிறருக்குத் தீங்கிழைக்கக் கூடாது என்பதும் கூறப்பட்டுள்ளது. சாலைகளைச் சேதப்படுத்துவதும் வீணாக்குவதும் இன்றைய மனிதனின் விவேகமற்ற செயலாக உள்ளது. அது முற்றிலும் தவறாகும்.

சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் மிக முக்கியப் பங்காற்றுவது உணவை வீணாக்காமல் சேமிப்பதாகும்.  அதற்கு முரணாக, உணவுப் பொருள்களை வீணாக்குவது அன்றாட மனிதர்களின் இயல்பாக மாறிப்போய்விட்டது. இது முற்றிலும் மனித சமுதாயத்திற்குச் செய்கின்ற தீங்காகும். ஏனெனில் மனிதர்கள் தம் உண்பொருள்களை வீணாக்குவதால் ஒரு பகுதியில் வாழ்கின்ற மனிதர்களுக்கு உணவுப் பற்றாக்குறை ஏற்படுகிறது. தன் தேவைக்குப் போக எஞ்சியதெல்லாம் பிறருடைய உணவாகும். அதை வீணாக்க யாருக்கும் உரிமையில்லை. "உண்ணுங்கள்; பருகுங்கள்; விரயம் செய்யாதீர்கள். திண்ணமாக அவன் (அல்லாஹ்) விரயம் செய்வோரை நேசிப்பதில்லை'' என்று திருக்குர்ஆனில் அல்லாஹ் கூறுகின்றான். இறைவனின் கட்டளை மீறப்படுகின்றபோது இவ்வுலகில் பசியும் பட்டினியும் ஏற்படும் என்பது திண்ணம்.

"ஒருவரின் உணவு இருவருக்குப் போதும்;  இருவரின் உணவு மூவர், நால்வருக்குப் போதும்; நால்வரின் உணவு ஐவர், அறுவருக்குப் போதும்'' என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.  (நூல்: இப்னுமாஜா) இதன்படி உணவைச் சிக்கனமாகப் பயன்படுத்தி, தன் உணவில் சிறிதளவு குறைத்துக்கொண்டு அதைப் பிறருக்கு உண்ணக் கொடுக்க வேண்டும் என உத்தம நபியவர்கள் உத்தரவிடுகின்றார்கள். இதனால்தால் பெரும்பாலும் முஸ்லிம்களின் திருமண நிகழ்ச்சிகள், மத்ரசாக்கள், ஜமாத்கள் ஆகியவற்றில் நடக்கின்ற விருந்தில் ஒரே தட்டில் நால்வர் அமர்ந்து உண்ணும் வழக்கம் நடைமுறையில் உள்ளது. அவர்களுள் ஒருவர் மிகுதியாக உண்பவராக இருக்கலாம்; மற்றொருவர் குறைவாக உண்பவராக இருக்கலாம். ஆக அனைவருக்கும் போதுமான  அளவு உணவு கிடைப்பதோடு தட்டில் ஏதும் எஞ்சாமலும் மிஞ்சாமலும் உண்ணப்படுவதைக் காண்கிறோம். பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நலோர்  தொகுத்தவற்றுள் எல்லாம் தலை எனும் வள்ளுவனின் வாக்கு ஏட்டில் உள்ளது. ஆனால் ஏந்தல் நபிகளாரின் கூற்று முஸ்லிம்களின் நடைமுறையில் உள்ளது.

இன்றைய மனிதன் உத்தம நபியின் உத்தரவை மீறி, பெரிய பெரிய ஹோட்டல்களில் திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்தி, வரிசையில் நின்று எல்லா வகை உணவுகளையும் கொஞ்சம் கொஞ்சம் வாங்கி வைத்துக்கொண்டு, எல்லாவற்றிலிருந்தும் சிறிதளவு உண்டுவிட்டு மீதியை அப்படியே தட்டுகளில் வைத்துவிடுவதால் மிகுதியான உணவு வீணாகின்றது. நின்றுகொண்டு சாப்பிடும் அவலமும் அரங்கேறுகிறது. மனிதன் தன் சுய கௌரவத்தையும் பெருமையையும் பிறருக்குக் காட்டுவதற்காகப் பிறர் முன்னிலையில் இப்படிப் போலியாக நடந்துகொள்ள வேண்டியுள்ளது. இது முஸ்லிம்களில் உள்ள  செல்வந்தர்கள் சிலரின் நிலைப்பாடாகும். அவர்கள் தம் நிலையை மாற்றிக்கொள்ள வேண்டும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உணவை வீணாக்கக் கூடாது என்று சொல்லியதோடு விட்டுவிடவில்லை.  ஒரு பருக்கையைக்கூட வீணாக்கக் கூடாது என்றும் அறிவுரை கூறியுள்ளார்கள்.  திண்ணமாக ஷைத்தான் உங்களுள் ஒருவரின் ஒவ்வொரு செயல்பாட்டிலும் அவரிடம் வந்துவிடுகின்றான். அந்த வகையில் அவருடைய உணவின்போதும் வந்துவிடுகின்றான். உங்களுள் ஒருவருடைய ஒரு பருக்கை கீழே விழுந்துவிட்டால் அதிலுள்ள தூசுவை நீக்கிவிட்டுப் பின்னர் அதைச் சாப்பிடட்டும். அதை ஷைத்தானுக்கு விட்டுவிட வேண்டாம். அவர் (சாப்பிட்டு) முடித்துவிட்டால் தம் விரல்களைச் சூப்பிக்கொள்ளட்டும். ஏனென்றால் அவருடைய எந்த உணவில்  அபிவிருத்தி உள்ளது என்பதை அவர் அறியமாட்டார் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: முஸ்லிம்)

ஒழுங்கான முறையில் சாப்பிடுவதும் சாப்பிட்ட பின் விரல்களைச் சூப்புவதும்  சாப்பிடுகின்றபோது ஒரு பருக்கை கீழே விழுந்துவிட்டாலும் அதைத் தூய்மைப்படுத்தி உண்பதும் நபிவழியாகும். இதன் முக்கியத்துவத்தை உணராமல் தம் விருப்பப்படி உண்பதும் கீழே சிந்துகின்ற உணவுப் பருக்கைகளை அப்படியே கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவதும் சாப்பிட்டு முடித்தபின் கைவிரல்களைச் சூப்பாமல் அதில் சில பருக்கைகளோடு கையைக் கழுவுவதும் சாப்பிட்ட உணவில் மனிதனுக்கு அபிவிருத்தியைப் பெற்றுத் தருவதில்லை.

இப்படி ஒவ்வொரு பருக்கையை வீணாக்குவதில் தொடங்கி டன் கணக்கில் உணவுப் பொருள்கள் வீணடிப்பது வரை விரயம் தொடர்கிறது. பல்வேறு ஹோட்டல்களிலும் பல்வேறு திருமண நிகழ்ச்சிகளிலும் உணவுப்பொருளை வீணடிப்பது தொடர்கிறது. பல்வேறு நாடுகளிலும் இது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. எனவேதான் ஒரு பகுதி மக்கள் வளமாக வாழும் அதே நேரத்தில் மறு பகுதி மக்கள் சாப்பாட்டிற்கு வழியின்றித் தவிக்கின்றார்கள்; பட்டினி கிடக்கின்றார்கள். இதற்கு மனிதச் செயலே காரணமாகும். ஏனென்றால் அல்லாஹ் கூறுகின்றான்: நாம் ஒவ்வொன்றையும் (குறிப்பிட்ட) அளவுப்படியே படைத்திருக்கிறோம். (54: 49) ஆகவே யாரேனும் ஒருவருக்குக்கூட உணவில்லாமல் அல்லாஹ் பற்றாக்குறையாகப் படைப்பதில்லை. இருப்பினும் மனிதன் வீணாக்குவதன்மூலம் பிறருக்கு உணவு கிடைக்காமல் போகிறது. எனவே மனிதன் இதில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும்.

மூன்றாவது மரங்களை வளர்ப்பதன் மூலம் நாம் இயற்கையான சூழலை உண்டாக்கலாம்; சுற்றுச்சூழலைப் பாதுகாக்கலாம். மரங்களை நட்டு வளர்ப்பதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஊக்கமளித்துள்ளார்கள். அதனால் மரத்தை நட்டவனுக்கு நன்மை வந்து சேர்கிறது என்று கூறி ஆர்வப்படுத்தியுள்ளார்கள். இயற்கையைப் பாதுகாக்க வேண்டும் என்ற அவர்களின் அக்கறையை இது காட்டுகிறது. 14 நூற்றாண்டுகளுக்கு முன்னர் இச்சிந்தனை தோன்றியிருப்பது நினைத்துப் பார்க்க இயலாதது. இது அவர்களின் தூரப்பார்வையைக் காட்டுகிறது. இன்று, வீட்டுக்கொரு மரம் வளர்ப்போம் என்றும் மரம் வளர்ப்போம்  மழை பெறுவோம் என்றும் விளம்பரங்கள் செய்து மரம் நடுவதற்கு ஆர்வப்படுத்துகின்றனர். இதை அன்றே நபி (ஸல்) அவர்கள் செய்துவிட்டார்கள்.

எவர் ஒரு முஸ்லிம் ஒரு செடியை நட்டாரோ (அது வளர்ந்து பெரிதாகி) அதிலிருந்து சாப்பிடப்படுவது அவருக்கான தர்மமாகும்; அதிலிருந்து திருடப்படுவது அவருக்கான தர்மமாகும்; அதிலிருந்து வனவிலங்குகள் சாப்பிடுவதும் அவருக்கான தர்மமாகும்; அதிலிருந்து பறவைகள் சாப்பிடுபவையும் அவருக்கான தர்மமாகும்; அதில் எவரேனும் (நிழலுக்காக) ஒதுங்குவதும் அவருக்கான தர்மமாகும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: முஸ்லிம்)

ஒருவர் ஒரு செடியை நட்டுவிட்டு, அது மரமாகிப் பழங்களைத் தருகின்ற நேரத்தில் அவர் உயிரோடு இல்லை என்றாலும் கவலையில்லை. அவருடைய கணக்கில் நன்மைகள் சேர்ந்துகொண்டே இருக்கும். இவ்வாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒவ்வொருவரையும் மரம் வளர்க்கத் தூண்டியுள்ளார்கள்.

ஆகவே நீர், நிலம், காற்று ஆகியவற்றை மாசுபடுத்தாமல் அவற்றைத் தூய்மையாக வைத்துக்கொள்ள நாம் அனைவரும் முயற்சி செய்வோம். அதற்கான ஈருலக நன்மையை நாம் பெறுவோம்.
===========================================