வியாழன், 22 அக்டோபர், 2020

துன்பம் சகிப்போம்_

-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி

 

நாம் அன்றாடம் பல்வகை மக்களுடன் சேர்ந்து வாழ்ந்தாக வேண்டிய கட்டாயச் சூழலில் சிக்குண்டுள்ளோம். ஒவ்வொருவரும் ஒவ்வொரு பண்புடையவர்; ஒவ்வோர் இயல்புடையவர். நம்மிடம் உதவி பெற்றுக்கொண்டு நமக்கெதிராகச் செயல்படுபவர்; நம்மிடம் கடன் பெற்றுக்கொண்டு நம்மை எதிர்த்துப் பேசுபவர்; நம்மைச் சார்ந்து வாழ்ந்துகொண்டு நமக்கே இடையூறும் இடைஞ்சலும் கொடுப்பவர்; அண்டைவீட்டில் வாழ்ந்துகொண்டு நமக்குத் தொல்லை கொடுப்பவர்; நம் உறவினராக இருந்துகொண்டு நமக்குத் துன்பமிழைப்பவர்#இப்படிப் பல்வேறு வகையினரைச் சகித்துக்கொண்டுதான் நாம் வாழ்ந்தாக வேண்டும்.

 

துன்பத்தைச் சகித்துக்கொள்ள வேண்டும் என்று சொல்லும்போதே அதனுள் பொறுமை என்ற பண்பு பொதிந்திருக்கிறது என்பதை விளங்கிக்கொள்ளலாம். துன்பத்தைச் சகித்துக்கொள்ள வேண்டுமெனில் பொறுமை வேண்டும். நம்மைச் சுற்றி வாழ்பவர்கள் ஏதாவது ஒரு வகையில் நமக்குத் துன்பமும் இடையூறும் கொடுத்துக்கொண்டே இருப்பார்கள்; நம் உறவினர்களும் நமக்கு எதிராகச் செயல்படலாம்; நம்மோடு சேர்ந்து வாழ்கின்ற மனைவியே நமக்குத் தொல்லையாக இருக்கலாம். இதையெல்லாம் சகித்துக்கொள்ளப் பழகிக்கொள்ள வேண்டும்.

 

சகித்துக்கொள்ளும் பண்பு இல்லையென்றால் நாள்தோறும் துன்பமே தொடரும். சான்றாக, நம் அண்டைவீட்டார் நமக்கு அவ்வப்போது தொல்லை கொடுக்கும்போது அதைச் சகித்துக்கொள்வதால் அது அல்லாஹ்வின் பார்வையில் நமக்கு நன்மையாக மாறிவிடுகிறது. மாறாக, சகித்துக்கொள்ள மனமில்லாமல், எதிர்த்துப் பேசவோ திட்டவோ செய்தால், அவர் தம் தவறை உணரப் போவதில்லை. நமக்கு ஓர் எதிரியாக மாறிவிடுவார். அவ்வளவுதான். அதன்பின் அக்குடும்பத்தாருள் யாரேனும் நம் வீட்டைக் கடந்து செல்லும்போது நாமும் அவரும் ஒருவருக்கொருவர் முறைத்துப் பார்த்துக்கொண்டுதான் செல்ல நேரிடும். அது அவ்வாறே தொடரும். அங்கு இருக்கும் வரை அது ஒரு தொல்லையாகவும் துன்பமாகவும் மாறிவிடும்.

 

நம் உறவினர் ஒருவர் நமக்கு அடிக்கடி தொல்லை கொடுத்து வருகிறார். அதை நாம் சகித்துக்கொள்கிறோம். அவ்வாறு சகித்துக்கொள்வது அல்லாஹ்வின் பார்வையில் நமக்கு நன்மையாக அமைந்துவிடும். அதேவேளையில் நாம் அவரை எதிர்த்துப் பேசினாலோ எதிர் கேள்வி கேட்டுச் சண்டைபோட்டாலோ அவரும் நம்மை எதிர்த்துப் பேசுவார். அது சண்டையாக மாறும். பின்னர் அவர் நம்மோடு பேசுவதை நிறுத்திக்கொள்வார். திருமணம் உள்ளிட்ட நற்காரியங்களில் உறவினர்கள் அனைவரும் ஒன்றிணைகின்றவேளையில் நம்மைப் பார்க்கும் அவர் நம்மைவிட்டு விலகிச் சென்றுவிடுவார். அது காலம் முழுக்க நமக்கொரு துன்பமேயாகும்.

 

அபூபக்ர் ஸித்தீக் ரளியல்லாஹு அன்ஹு தம் உறவினரான மிஸ்தஹ் ரளியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு அவ்வப்போது உதவித்தொகை வழங்கிவந்தார்கள். தம் மகள் ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா குறித்த அவதூறுச் செய்தி பரவியபோது அதில் அவருக்கும் பங்கிருந்தது. அதையறிந்த அபூபக்ர் ரளியல்லாஹு அன்ஹு, இனி நான் அவருக்கு உதவித்தொகை வழங்கமாட்டேன் என்று கூறிச் சத்தியம் செய்துவிட்டார்கள்.  அவ்வாறு உதவித்தொகை வழங்கமாட்டேன் எனச் சத்தியம் செய்தது தவறு; மாறாக அவரை மன்னித்து மறந்துவிட வேண்டுமென்று உணர்த்தும் வகையில் அல்லாஹ் கீழ்க்காணும் வசனத்தை அருளினான்:

 

உங்களுள் வசதியுடையவரும் (பிறருக்கு உதவி செய்யும்) இயல்புடையவரும், தங்கள் உறவினர்களுக்கோ, ஏழைகளுக்கோ, அல்லாஹ்வுடைய பாதையில் ஹிஜ்ரத் செய்தவர்களுக்கோ (யாதொன்றும்) கொடுக்க மாட்டேன் என்று சத்தியம் செய்ய வேண்டாம். (அவர்களால் ஏதும் வருத்தம் ஏற்பட்டிருந்தால்) அதனை அவர்கள் மன்னித்துப் புறக்கணித்துவிடட்டும். அல்லாஹ் உங்களுக்கு மன்னிப்பளிப்பதை நீங்கள் விரும்பமாட்டீர்களா? அல்லாஹ் மிக்க மன்னிப்பவனாகவும் கருணையுடையவனாகவும் இருக்கின்றான். (24: 22)

 

ஒன்றாகச் சேர்ந்து வாழ்கின்ற தம்பதியருள் மனைவியோ கணவனோ ஒருவர் மற்றொருவருக்குத் தொல்லையோ துன்பமோ கொடுக்கின்றபோது அதை அவர் சகித்துக்கொள்ள வேண்டும். கணவனின் கட்டளைக்குக் கட்டுப்படாத மனைவி அல்லது அடிக்கடி கோபப்படுகின்ற மனைவி அல்லது எப்போதும் எதிர்த்துப் பேசிக்கொண்டே இருக்கின்ற மனைவியைப் பெற்றுள்ள கணவன் அதைச் சகித்துக்கொண்டால் அது அவனுக்கு நன்மையாக மாறிவிடும். அதேநேரத்தில் அவளை எதிர்த்துப் பேசவோ அடிக்கவோ செய்தால் அது ஒரு தீராப் பிரச்சனையாக ஆகிவிடும்.

 

காலம் முழுக்க வாழப்போகின்ற வாழ்க்கையில் மனைவி-கணவன் பிரிக்க முடியாத அங்கம். ஆனால் அவள் நம்மிடம் பேசாமலோ நம்மைவிட்டுப் பிரிந்து தனியாக வாழ நேரிட்டாலோ அது அவளுக்கும் தொல்லை, நமக்கும் தொல்லை. அவளைக் கண்டித்துத் திருத்த முனைந்தால் அதை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் அவளுக்கு இல்லை. எதிர்த்தே பேசிக்கொண்டிருக்கிறாள். இந்த நேரத்தில் சகித்தல் என்ற நற்குணம்தான் அக்கணவனுக்குப் பயனளிக்கும். அதனால்தான் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இவ்வாறு கூறினார்கள்: பெண் (வளைந்த) விலா எலும்பைப் போன்றவள் ஆவாள். அவளை நீ (ஒரேயடியாக) நிமிர்த்தப்போனால் அவளை ஒடித்தே விடுவாய். அவளை (அப்படியே) நீ விட்டுவிட்டால், அவளிடம் கோணல் இருக்கவே அவளிடம் அனுபவிக்க வேண்டியதுதான். (நூல்: திர்மிதீ: 1109) 

 

எப்போதும் தொல்லை கொடுத்துக்கொண்டிருக்கிற கணவனைப் பெற்றுள்ள மனைவி அவனுடைய தொல்லையை அல்லாஹ்விற்காகப் பொறுத்துக்கொண்டு சகித்து வாழ்கிறாள் என்றால் அது அவளுக்கு நன்மையாக மாறிவிடும். அதேவேளையில் அவனது தொல்லைகளைப் பொறுமையோடு  சகிக்க முடியாமல் பொங்கி எழுந்தால், அவள் அவனுடனான வாழ்க்கையை இழக்க நேரிடும். பின்னர் தான் பெற்ற குழந்தைகளோடு தாய் வீட்டில் தஞ்சமடைந்து, நாளடைவில் வாழ்க்கையே வெறுத்துப் போய்விடும் நிலையும் ஏற்படும். குழந்தைகளை வைத்துக்கொண்டு மறுமணம் என்பது  இயலாத ஒன்று. காலம் முழுக்க அவதிப்படும் நிலை அந்த அபலைப் பெண்ணுக்கு ஏற்படலாம். 

 

சகித்தல்தான் எல்லாவற்றுக்கும் ஒரே தீர்வு. அந்தப் பண்பு இல்லையென்றால் நாம் எல்லாவற்றிற்கும் கோபப்பட வேண்டி வரும். எல்லாவற்றுக்கும் எதிர்வினையாற்றத் தொடங்கினால் நம் வாழ்க்கையே துன்பமானதாக மாறிவிடும்.

 

பிடிவாதக்காரியான மனைவியைவிட்டுப் பிரிந்துவிடலாம் என்றெண்ணி ஒரு துன்பத்திலிருந்து விடுதலை பெற்றால் மற்றொரு துன்பம் நம்மைத் துரத்தும். அதற்குப் பதிலாக அந்தத் துன்பத்திலேயே  இருந்துவிட்டுப் போய்விடலாம். சகிப்புத்தன்மையில்லாமல் மனைவியைப் பிரிந்து சென்றால், பிள்ளைகளை அவள் தன்னுடன் அழைத்துச் சென்றுவிடுவாள். அப்பிள்ளைகளைப் பார்க்க அவள் வீடு தேடி நாம் செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும். அவர் சார்பாக யாரேனும் ஒருவர் அழைத்து வருவார். அவரின் வருகைக்காகக் காத்திருக்க வேண்டும். இப்படியே அத்துன்பம் தொடரும்.

 





அலுவலகத்தில் பணியாற்றுகின்ற சக ஊழியர்களின் தொல்லைக்கு ஆளாக நேரிடுகின்றபோது  அதைச் சகித்துக்கொள்ள வேண்டும். இல்லையேல் அவன் நமக்கெதிராகச் செயல்படத் தொடங்கிவிடுவான். நமக்கெதிராக மேலாளரிடம் எதையாவது சொல்லி பிரச்சனையை ஏற்படுத்த முனைவான். சின்னச் சின்ன விஷயங்களை ஊதிப் பெரிதாக்குவான். அதனால் அந்த அலுவலகத்தில் நம்முடைய பணி பாதிக்கப்படும். இறுதியில் பணியிலிருந்தே வெளியேற வேண்டிய கட்டாய நிலை ஏற்படும். இதையெல்லாம் தவிர்க்க சகித்தல்தான் ஒரே வழி.

 

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தம் வாழ்வில் எதிர்கொண்டு அனுபவித்த பல்வேறு தருணங்களில் சகிப்புத்தன்மை ஒன்றையே தமது பலமான ஆயுதமாகக் கொண்டிருந்தார்கள். சகித்துக்கொண்டே இடும்பைக்கு இடும்பை தரும் விதமாக வாழ்ந்தார்கள். துன்பமே அவர்களைக் கண்டு துன்பப்படும் அளவிற்குச் சகித்தார்கள். அதனால் அவையெல்லாம் அவர்களின் உயர்வுக்கும் கண்ணியத்திற்குமே காரணமாக அமைந்தன.

 

ஏனென்றால் சகித்தல் என்பது மனிதர்களின் பண்பு மட்டுமல்ல, அது அல்லாஹ்வின் அழகிய பண்புகளுள் ஒன்றாகும். அவனால் படைக்கப்பட்ட அடியார்கள் அவனுக்கு மாறு செய்து, அவனுடைய கட்டளைகளை நிறைவேற்றாமல் அவனைப் புறக்கணிப்பதோடு பாவமும் செய்துகொண்டிருக்கின்றார்கள். இதையெல்லாம் அவன் சகித்துக்கொண்டு அவரவர்களின் தவணைக்காலம் வரை விட்டுவைத்திருக்கிறான். அத்தோடு நாள்தோறும் அவர்களுக்கு அருள்புரிந்துகொண்டிருக்கிறான். ""அல்லாஹ் மிக மன்னிப்பவனாகவும் சகிப்பவனாகவும் இருக்கின்றான்.'' (2: 225)

 

ஆக துன்பங்களையும் தொல்லைகளையும் கண்டு சகித்துக்கொண்டு வாழ்கின்ற மனிதனைக் கோழை என்று எண்ண வேண்டாம். துன்பங்களைப் பொறுமையோடு சகித்துக்கொள்வதால் நாம் உயர்வடைவோமே தவிர தாழ்ந்துவிட மாட்டோம். எனவே நம்மால் இயன்ற வரை பொறுமையோடு சகிப்போம். அதன் பிரதிபலன் இம்மையிலும் மறுமையிலும் சிறந்ததாகவே இருக்கும் என்பதை உறுதிகொள்வோம்.

=========================

 

வெள்ளி, 9 அக்டோபர், 2020

இதுவும் இபாதத்தான்...

 

-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.

-------------------------------------------

உயர்ந்தோன் அல்லாஹ் ஒவ்வோர் இனத்தையும் இணை இணையாகப் படைத்துள்ளான். அந்தந்த இணைகள் தத்தம் தேவையை நிறைவேற்றிக்கொள்வதற்கான உந்து சக்தியையும் ஈர்ப்பாற்றலையும் வழங்கியிருக்கிறான். அந்தந்த இணைகள் தம் மெய்நிலை மறந்து இன்பம் துய்க்கும்போது அதன்மூலம் இனப்பெருக்கத்தையும் உண்டாக்கிவிடுகின்றான் இறைவன். ஒரே செயலில் இரண்டு நன்மைகள்.

மனித இனம் தவிர, மற்ற உயிரினங்களுக்கு எந்தச் சட்டமும் இல்லை; எந்த நிபந்தனையும் இல்லை. ஆனால் மனிதர்கள் தம் உடல்சார் தேவையை நிறைவேற்றிக்கொள்ள சில சட்டங்களும் நிபந்தனைகளும் உள்ளன. அவற்றைப் பின்பற்றியே அவர்கள் தம் தேவையை நிறைவேற்றிக்கொள்ள முடியும். அதன் அடிப்படையில்தான் குறிப்பிட்ட நிபந்தனைகளோடு திருமணம் நடைபெறுகிறது. பிறகு அவ்விருவரும் இல்லற வாழ்வில் ஈடுபடுகிறார்கள்.

இதுவரை எல்லோருக்கும் தெரிந்ததுதான். ஆனால் பலருக்கும் தெரியாத ஒன்று உள்ளது. கணவன்-மனைவியாக இல்லறத்தில் இணையும் இருவரும் ஒருவர் மற்றொருவரின் தேவையை நிறைவேற்றுவது குறித்து இஸ்லாம் என்ன கூறுகிறது; இதற்கு நன்மை ஏதும் உண்டா? பின்வரும் நபிமொழி அதற்கான தீர்வைச் சொல்கிறது.

அபூதர் (ரளி) கூறியதாவது: நபித்தோழர்களில் (ஏழைகளான) சிலர் நபி (ஸல்) அவர்களிடம் "அல்லாஹ்வின் தூதரே! வசதிபடைத்தோர் நன்மைகளை (தட்டி)க் கொண்டு போய்விடுகின்றனர். நாங்கள் தொழுவதைப் போன்றே அவர்களும் தொழுகின்றனர்; நாங்கள் நோன்பு நோற்பதைப் போன்றே அவர்களும் நோன்பு நோற்கின்றனர்;  (ஆனால், அவர்கள்) தங்களது அதிகப்படியான செல்வங்களைத் தானதர்மம் செய்கின்றனர். (அவ்வாறு தானதர்மங்கள் செய்ய எங்களிடம் வசதி இல்லையே!)'' என்று கூறினர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "நீங்களும் தர்மம் செய்வதற்கான (முகாந்தரத்)தை அல்லாஹ் உங்களுக்கு ஏற்படுத்தவில்லையா? இறைவனைத் துதிக்கும் ஒவ்வொரு துதிச் சொல்லும் (சுப்ஹானல்லாஹ்) தர்மமாகும்; இறைவனைப் பெருமைப்படுத்தும் ஒவ்வொரு சொல்லும் (அல்லாஹு அக்பர்) தர்மமாகும்; ஒவ்வொரு புகழ்மாலையும் (அல்ஹம்து லில்லாஹ்) தர்மமாகும்; ஒவ்வோர் "ஓரிறை உறுதிமொழி'யும் (லா இலாஹ இல்லல்லாஹ்) தர்மமாகும்; நல்லதை ஏவுதலும் தர்மமே; தீமையைத் தடுத்தலும் தர்மமே; உங்களுள் ஒருவர் தமது பாலுறுப்பி(னைப் பயன்படுத்துகின்ற விதத்தி)லும் தர்மம் உண்டு'' என்று கூறினார்கள். மக்கள், "அல்லாஹ்வின் தூதரே! எங்களுள் ஒருவர் (தம் துணைவியிடம்) ஆசைகளைத் தீர்த்துக்கொள்வதற்கும் நன்மை கிடைக்குமா?'' என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "(நீங்களே) சொல்லுங்கள்: தடை செய்யப்பட்ட வழியில் அவர் தமது ஆசையைத் தீர்த்துக்கொண்டால் அவருக்குக் குற்றம் உண்டல்லவா! அவ்வாறே அனுமதிக்கப்பட்ட வழியில் அவர் தமது ஆசையை நிறைவேற்றிக்கொள்ளும்போது அதற்காக அவருக்கு நன்மை கிடைக்கவே செய்யும்'' என்று விடையளித்தார்கள். (நூல்: முஸ்லிம்: 1832)

சுப்ஹானல்லாஹ் என்று தஸ்பீஹ் செய்வதும் அல்லாஹு அக்பர் என்று தக்பீர் சொல்வதும் அல்ஹம்து லில்லாஹ் என்று அல்லாஹ்வைப் புகழ்வதும் லாயிலாஹ இல்லல்லாஹ் என்று கலிமா ஓதுவதும் அறச் செயலாகும். அதுபோலவே ஒருவன் தன் மனைவியிடம் ஆகுமான முறையில் தனது ஆசையைத் தீர்த்துக்கொள்வதும் அறச் செயலே ஆகும். எனவே அதற்கும் நன்மையுண்டு என்று இந்நபிமொழி தெரிவிக்கிறது.

முஸ்லிம் எனும் நபிமொழித் தொகுப்பு நூலில் இடம்பெற்றுள்ள இந்நபிமொழிக்கு விளக்கவுரை எழுதியுள்ள நவவீ (ரஹ்) கூறியதாவது: ஒருவரது சரியான நிய்யத்-எண்ணம் அவருக்கு நன்மையாக மாறிவிடுகிறது. அதுபோலவே ஒருவன் தன் மனைவியோடு தாம்பத்திய உறவு கொள்வதும் ஒரு வகை இபாதத்தான். அதற்கும் நன்மையுண்டு. அதாவது அதன்மூலம் அவன், தன் மனைவியின் உரிமையை நிறைவேற்றுகிறான்; அல்லாஹ் கட்டளையிட்டவாறு அவளை அவன் கண்ணியமாக நடத்துகிறான்; அல்லது இறைவனுக்கு அஞ்சுகின்ற சந்ததிகளைப் பெற்றெடுக்க எண்ணுகிறான்; அவன் கற்புள்ளவனாக இருக்க அல்லது தன் மனைவி கற்புள்ளவளாக இருக்க வேண்டுமென விரும்புகிறான்; அல்லது இருவருள் ஒவ்வொருவரும் ஷரீஅத்தால் தடைசெய்யப்பட்ட  பார்வையைவிட்டு விலகிக்கொள்ள நாடுகிறார்கள். வேறு ஏதேனும் புகழத்தக்க இலக்கை நெஞ்சில் வைத்து, தன் மனைவியோடு உறவுகொண்டால் அதுவும் இபாதத்தான். (மின்ஹாஜ்)

இஸ்லாமியப் பார்வையில் கணவன்-மனைவி தாம்பத்திய வாழ்க்கையில் ஈடுபடுவது ஒரு வகை இபாதத்-வழிபாடு ஆகும். அது தம்பதியர் இருவருள் ஒருவர் மற்றொருவருக்குச் செய்ய வேண்டிய கடமை; ஒருவர் மற்றொருவருக்குக் கொடுக்க வேண்டிய உரிமை; ஒருவர் மற்றொருவரிடம் கேட்டுப் பெறும் உரிமை; ஒருவர் கேட்கும்போது மற்றொருவர் மறுத்தால் அதற்குத் தண்டனை உண்டு.

இந்தக் கோணத்தில் பின்வரும் நபிமொழியைப் பாருங்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒருவர் தம் மனைவியைப் படுக்கைக்கு அழைத்து, அவள் (அவருக்கு உடன்பட) மறுத்துவிட, அதன் விளைவாக அவர் இரவைக் கோபத்துடன் கழித்தாரென்றால் அவளை, காலை விடியும் வரை வானவர்கள் சபித்துக் கொண்டேயிருக்கின்றனர். (நூல்: புகாரீ: 3237)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! ஒருவர் தம் மனைவியை அவளது படுக்கைக்கு அழைத்து, அவள் அவருக்கு (உடன்பட) மறுத்தால் வானிலுள்ளவன் அவள்மீது கோபம் கொண்டவனாகவே இருக்கிறான்; அவள்மீது கணவன் திருப்தி கொள்ளும்வரை. (நூல்: முஸ்லிம்: 2830) 

ஆக இந்த இரண்டு நபிமொழிகளின் அடிப்படையில், தாம்பத்திய உறவு தம்பதியரின் உரிமை. அவ்விருவருள் ஒருவருக்கொருவர் அதைக் கொடுப்பதும் பெறுவதும் அவரவர் உரிமை. அதை மறுக்கும் பெண் அல்லாஹ்வின் கோபத்திற்கும் வானவர்களின் சாபத்திற்கும் ஆளாகின்றாள். ஷரீஅத் ரீதியாக அனுமதிக்கப்பட்ட காரணம் இருந்தால் தவிர மற்ற தருணங்களில் கணவனின் தேவையை நிறைவேற்ற மறுத்தால், அவள் சாபத்திற்கு உள்ளாகின்றாள். ஏனென்றால் அவள் தன் கணவனின் உரிமையைத் தர மறுக்கிறாள். கணவனோ கற்போடு வாழ நினைக்கிறான். தன் மனைவியைத் தவிர பிற பெண்களிடமோ விலை மாதுக்களிடமோ செல்வது குற்றம் என்பதை உணர்ந்துள்ளான். எனவே மனைவியிடம் மட்டுமே தன் தேவையை நிறைவேற்றிக்கொள்ள நாடுகிறான். அத்தகைய தருணத்தில் அவனது ஆசையை நிறைவேற்ற வேண்டிய அவள், அவனுக்கு இணங்க மறுத்ததால் அவனது உரிமையைத் தர மறுத்த குற்றத்திற்கு ஆளாகின்றாள். இதை மனிதர்களிடம் சொல்ல முடியாமல் மனதுக்குள்ளேயே புழுங்குவதால் அவனுக்கு ஆதரவாக அல்லாஹ் அவள்மீது சினம்கொள்கிறான்; வானவர்கள் அவளைச் சபிக்கின்றார்கள்.







இஸ்லாம் ஆண்-பெண் இடையே சமநிலையான பார்வை கொண்டுள்ளது என்பதை நாம் அறிவோம். அந்த வகையில் கணவனின் உரிமையைத் தர மறுக்கின்ற பெண் எவ்வாறு அல்லாஹ்வின் கோபத்திற்கு உரியவளாகின்றாளோ அதேபோல் கணவன் தன் மனைவியின் ஆசையை நிறைவேற்றத் தவறினாலும், அவன் தன் மனைவியின் உரிமையைக் கொடுக்க மறுத்த குற்றத்திற்கு ஆளாகின்றான்.

தற்காலத்தில் கணவனும் மனைவியும் வேலைக்குச் செல்வதால் இரவில் களைப்பாகத் தூங்கிவிடுகின்றார்கள். இப்படியே ஒவ்வொரு நாளும் கழிந்து விடுவதுண்டு. அதன் காரணமாக அவ்விருவரிடையே முறையான தாம்பத்திய உறவு நடைபெறுவதில்லை. அதன் காரணமாக அவ்விருவரிடையே அன்பும் காதலும் குறைந்துவிடுவதோடு கோபம், படபடப்பு, பதற்றம் இவை மிகுதியாகின்றன. அமைதியான வாழ்க்கையையும் மனநிம்மதியையும் இழக்கின்றனர். இதனால்தான் இன்றையக் காலத்தில் பலர் படபடப்போடும் பதற்றத்தோடும் காணப்படுகின்றார்கள்.

கணவன் தன் மனைவியின் ஆசைகளையும் உடல்ரீதியான தேவையையும் நிறைவேற்ற வேண்டும் என்பதற்கு, நபிமொழித் தொகுப்பு நூலில் இடம்பெற்றுள்ள ஒரு நபிமொழியே சான்றாகும்.

அபூஜுஹைஃபா (ரளி) கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் சல்மான் (ரளி), அபுத்தர்தா (ரளி) ஆகிய இருவரையும் சகோதரர்களாக ஆக்கினார்கள்.  சல்மான் அபுத்தர்தாவைச் சந்திக்கச் சென்றபோது (அபுத்தர்தாவின் மனைவி) உம்முத் தர்தாவை அழுக்கடைந்த ஆடை அணிந்திருக்கக் கண்டார். உமக்கு என்ன நேர்ந்தது? என்று அவரிடம் சல்மான் கேட்டார். அதற்கு உம்முத்தர்தா (ரளி), உம் சகோதரர் அபுத்தர்தாவுக்கு இவ்வுலகில் எந்தத் தேவையுமில்லை என்று விடையளித்தார். (சற்று நேரத்தில்) அபுத்தர்தா வந்து சல்மானுக்காக உணவு தயாரித்தார். சல்மான் (ரளி) அபுத்தர்தாவிடம், “உண்பீராக!என்று கூறினார். அதற்கு அபுத்தர்தா, “நான் நோன்பு நோற்றிருக்கிறேன்என்றார். சல்மான், “நீர் உண்ணாமல் நான் உண்ண மாட்டேன்என்று கூறியதும் அபுத்தர்தாவும் உண்டார். இரவானதும் அபுத்தர்தா (ரளி) நின்று வணங்கத் தயாரானார். அப்போது சல்மான் (ரளி), “உறங்குவீராக!என்று கூறியதும் உறங்கினார். பின்னர் நின்று வணங்கத் தயாரானார். மீண்டும் சல்மான், “உறங்குவீராக!என்றார். இரவின் கடைசி நேரம் வந்ததும் சல்மான் (ரளி), “இப்போது எழுவீராக!என்று கூறினார். இருவரும் தொழுதனர். பிறகு அபுத்தர்தாவிடம் சல்மான் (ரளி), “நிச்சயமாக உம் இறைவனுக்கு நீர் செய்ய வேண்டிய கடமைகள் இருக்கின்றன; உமக்கு நீர் செய்ய வேண்டிய கடமைகள் இருக்கின்றன; உம் குடும்பத்தாருக்கு நீர் செய்ய வேண்டிய கடமைகள் இருக்கின்றன; அவரவருக்குரிய கடமைகளை நிறைவேற்றுவீராக!என்று கூறினார். பிறகு அபுத்தர்தா (ரளி), நபி (ஸல்) அவர்களிடம் வந்து இந்த விஷயத்தைக் கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “சல்மான் உண்மையையே கூறினார்!என்றார்கள். (நூல்: புகாரீ: 1968)

மற்ற தேவைகளை நிறைவேற்றுவதைவிட மிக அவசரமாக நிறைவேற்ற வேண்டிய தேவைதான் ஓர் ஆணுடைய பாலுணர்வுத் தேவை. மற்ற தேவைகளை நிறைவேற்ற எவ்வளவு கால அவகாசம் எடுத்துக்கொண்டாலும் அதனால் எந்தப் பாதிப்புமில்லை. ஆனால் ஓர் ஆணுடைய இல்லறத் தேவையை அவனுடைய மனைவி மிக அவசரமாக நிறைவேற்றுவது அவளது கடமையாகும். அதை அவன் விரும்பும் எந்த நேரத்திலும் அவளிடமிருந்து அடைந்துகொள்வது அவனது உரிமையாகும். அதனால்தான்  நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறினார்கள்: கணவர் தாம்பத்திய உறவுக்காக அழைக்கும்போது மனைவி செல்லட்டும். அப்போது அவள் அடுப்பின் அருகில் இருந்தாலும் சரியே!” (நூல்: திர்மிதீ: 1080)

ஏனெனில் ஓர் ஆண் வெளியில் சென்று சம்பாதிப்பவன். அவன் வெளியில் செல்லும்போது பல பெண்களை நிர்ப்பந்தமாகப் பார்க்க வேண்டிய நிலை ஏற்படலாம். அப்போதெல்லாம் உந்தி வருகின்ற ஆசையை அடக்கிக்கொண்டு கற்போடு வீடு வந்து சேர்ந்து, தன் மனைவியிடம் தன் தேவையை நிறைவேற்றிக்கொள்ள முயல்கின்றபோது, “கொஞ்சம் தள்ளிப்படுங்கஎன்று மனைவி கூறினால் அது அவனுக்கு எவ்வளவு ஏமாற்றமாக அமையும் என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும். இந்தக் கோணத்தில் சிந்தித்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறினார்கள்: உங்களுள் ஒருவரை ஒரு பெண்(ணின் அழகு) கவர்ந்து, அவரது உள்ளத்தில் தவறான எண்ணம் தோன்றினால், உடனே அவர் தம் மனைவியை நாடிச் சென்று, அவளுடன் உறவு கொள்ளட்டும். ஏனெனில் அது அவரது உள்ளத்தில் தோன்றும் (கெட்ட) எண்ணத்தை அகற்றிவிடும்.”  (நூல்: முஸ்லிம்: 2719)   

கணவன் தன் மனைவிக்குச் செய்ய வேண்டிய மிக முக்கியமான கடமைகளுள் ஒன்று, அவளது உடல்சார் தேவையை நிறைவேற்றுவதாகும் என்பதை மேற்கண்ட நபிமொழிகள் உணர்த்துகின்றன. ஆகவே கணவன்-மனைவியாக உள்ள தம்பதியர் இருவரும் கற்போடு வாழ வேண்டும் என்பதற்காகவும் இறைவனின் கட்டளைகளுக்கும் வரம்புகளுக்கும் கட்டுப்பட்டு வாழ வேண்டும் என்ற அடிப்படையிலும் ஒருவருக்கொருவர் தத்தம் உரிமையைக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்திலும் தாம்பத்திய உறவு கொள்வது இபாதத்தான் என்பதை உணர்ந்து கணவன்-மனைவி இருவரும் இணைந்து வாழ இறைவன் அருள்வானாக.

==========================







புதன், 7 அக்டோபர், 2020

பாவையரின் பணிவிடை

 -முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி

(துணையாசிரியர் இனிய திசைகள் மாத இதழ்)

ஆண்கள் வெளியே சென்று உழைத்துச் சம்பாதித்து, பொருளீட்டி வருவதும் வீட்டிலுள்ள பெண்கள் சுவையாகச் சமைத்து கணவனுக்கும் பிள்ளைகளுக்கும் அன்போடு பரிமாறுவதும் தொன்று தொட்டு நடைபெற்றுவரும் ஒரு பழக்கம்; வாழ்வியல் நடைமுறை. என்னதான் நாகரிகம் வளர்ந்தாலும் இந்த நடைமுறையில் இன்று வரை சின்னக் கீறலும் விழாமல் பாதுகாக்கப்பட்டு வருகிறது. நவீனக் கால மாற்றத்திற்கேற்ப ஒரு பத்து சதவிகிதப் பெண்கள் வேண்டுமானால் வீட்டில் சமைக்காமல் ஓட்டலில் சாப்பிடலாம்; அல்லது ஓட்டலில் ஆர்டர் கொடுத்து வரவழைத்து வீட்டில் சாப்பிடலாம். இன்னும் பத்து சதவிகிதப் பெண்கள், தாமாகச் சமைக்காமல் சமைப்பதற்கான ஒரு சமையற்காரரையோ ஒரு சமையற்காரியையோ பணியமர்த்திக் கொண்டிருக்கலாம். இது செல்வர்கள் வீட்டில் உள்ள நடைமுறை. ஆனால் இன்று வரை பெரும்பாலான பெண்கள் சாதிமதப் பாகுபாடின்றித் தம் குடும்ப உறுப்பினர்களுக்குத் தாமே தம் கைப்படச் சமைத்து. அன்போடு பரிமாறுவது நடைமுறையில் உள்ள பழக்கமாகும்.

கணவனுக்கும் குடும்ப உறுப்பினர்களுக்கும் சமைப்பது. துவைப்பது. வீட்டைத் தூய்மைப்படுத்துவது உள்ளிட்ட இல்லற வேலைகளில் மட்டும் பெண்கள் ஈடுபடுவதை அடிமைத்தனம் என்று நவீனப் பெண்ணியவாதிகள் கூறுவதுண்டு. அவர்களின் அக்கூற்றை ஆமோதிக்கின்ற பெண்கள் சிலர் கணவனுக்கும் தம் பிள்ளைகளுக்கும் பணிவிடை செய்வதைப் புறக்கணிக்கிறார்கள்; எதிர்த்துச் சண்டைபோடுகிறார்கள். நான் ஒரு நாள் சமைத்தால்  நீ ஒரு நாள் சமை என்று கூறும்  பெண்டிரும் உள்ளனர். இதனால் குடும்பத்தில் விரிசல்  ஏற்படவும் செய்கிறது. ஆண்கள் சிலர் இதனைப் பொறுத்துக்கொண்டு வாழ்கின்றார்கள்; சிலர் வெறுத்து ஒதுங்கிவிடுகின்றார்கள்.

இத்தகைய தருணத்தில், பணிவிடை செய்வதை இஸ்லாம் ஊக்கப்படுத்துகிறதா இல்லையா என்ற கோணத்தில் சில செய்திகளை நாம் தெரிந்துகொள்வது இதன் முக்கியத்துவத்தைப் பெண்களுக்கு உணர்த்தும்.

கணவனுக்குப் பணிவிடை செய்வதை மிகச் சாதாரணமாகப் பெண்கள் பலர் கருதியிருக்கலாம். ஆனால் ஒரு பெண் தன் கணவனுக்குப் பணிவிடை செய்வதன்மூலம் அவள் சொர்க்கத்தையே அடையலாம் என்று இஸ்லாம் வழிகாட்டுகிறது. ஓர் ஆண் தன் பெற்றோருக்குப் பணிவிடை செய்வதன்மூலம் சொர்க்கத்தைப் பெற முடியும் என்பதைப்போல் ஒரு பெண் தன் கணவனுக்குப் பணிவிடை செய்வதன்மூலம் சொர்க்கத்தை அடையலாம் என்பது உண்மை.

ஒரு பெண் தன் கணவனுக்குச் சம்பாதித்துக்கொடுக்கத் தேவையில்லை; பொருளீட்டிக்கொண்டுவர வேண்டும் என்ற அவசியமில்லை. ஆனால் கணவனின் மனதை மகிழ்விக்கும் விதமாக நல்ல முறையில் சுவையாகச் சமைத்து அன்போடு பரிமாறுவதன்மூலம் அவனது அன்பைப் பெற்றுவிட்டால் அதற்காக அப்பெண்ணுக்கு அல்லாஹ் சொர்க்கத்தைத் தருகிறான்.

பெண்கள் சிலர் கணவனுக்கு இணையாக வணக்க வழிபாடுகளில் ஈடுபட முடியவில்லை; குர்ஆன் ஓத முடியவில்லை; திக்ர் செய்ய முடியவில்லை என்றெல்லாம் எண்ணலாம். எப்போதும் வீட்டு வேலைகளுக்கே நேரம் சரியாக இருக்கிறது என்று அங்கலாய்த்துக் கொள்ளலாம். இத்தகைய பெண்கள் ஒன்றைத் தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும். பெண்களைப் பொருத்த வரை கடமையான வழிபாடுகளை மட்டும் செய்தாலே போதுமானது.  அவர்கள் தம் கடமையான வழிபாட்டிற்குப்பின் அடுத்துச் செய்ய வேண்டியது கணவனுக்கான பணிவிடைகளைத்தான். அதில்தான் அவர்களுக்கான சொர்க்கம் இருக்கிறது.

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவித்துள்ளார்: ஒரு பெண் ஐவேளை தொழுது ரமழான் மாதம் நோன்பு நோற்று தன் கற்பைப் பாதுகாத்து, தன் கணவனுக்குப் பணிந்து நடந்தால் (மறுமைநாளில்) "நீ விரும்பிய எந்த வாசல் வழியாகவும் சுவர்க்கத்தில் நுழைந்துகொள்'' என்று சொல்லப்படும். (நூல்: இப்னு ஹிப்பான்)

இதேபோல், அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அனஸ், அப்துர் ரஹ்மான் அஸ்ஸுஹ்ரீ ரளியல்லாஹு அன்ஹுமா ஆகிய இருவரும் அறிவித்துள்ளார்கள்:  "ஒரு பெண் ஐவேளை தொழுது ரமழான் மாதம் நோன்பு நோற்று தன் கற்பைப் பாதுகாத்து தன் கணவனுக்குப் பணிந்து நடந்தால் அவள் சொர்க்கத்தில் நுழைவாள்.'' (நூல்கள்: அல்பஸ்ஸார், அஹ்மது)

ஆக இந்த நபிமொழி கூறுவதைக் கவனத்துடன் பார்க்க வேண்டும். அல்லாஹ்விற்கான கடமையான ஐவேளைத் தொழுகையும் ரமளான் மாதத்தின் நோன்பும் பொருளாதார வசதியிருந்தால் ஸகாத் இவற்றை மட்டும் செய்துவிட்டு, எஞ்சிய பொழுதெல்லாம் கணவனுக்குப் பணிவிடை செய்வதிலும் அவனை மகிழ்விப்பதிலும் ஈடுபட்டாலே போதுமானது-அவள் சொர்க்கத்தை அடைந்துவிடலாம். கணவனுக்குப் பணிந்து நடத்தல் என்பது கணவன் இட்ட கட்டளைகளுக்குக் கட்டுப்பட்டு நடப்பதையும் அவருக்குப் பணிவிடை செய்வதையும் குறிக்கும்.

அறியாப் பெண்கள் சிலர், சமைத்து வைத்துவிட்டு, இறைவழிபாட்டில் அல்லது திருக்குர்ஆனை ஓதுவதில் ஈடுபடுவதுண்டு. அல்லது தொலைக்காட்சித் தொடர்களைப் பார்ப்பதில் மூழ்கிவிடுவார்கள். வீட்டிற்குக் கணவன் வந்ததும், அவருக்குப் பணிவிடை செய்யாமல், சோறு ஆக்கி வச்சிருக்கேன்; போட்டுச் சாப்பிடுங்கஎன்று சொல்லிவிடுவார்கள். இது அவர்களின் அறியாமையைத்தான் காட்டுகிறது. அவள் குர்ஆன் ஓதுவதைவிடக் கணவனுக்குப் பணிவிடை செய்வதுதான் முக்கியமான இபாதத்-வழிபாடு ஆகும். ஒவ்வொரு பெண்ணும் கணவனுக்குப் பணிவிடை செய்வதற்காக எவ்வளவு நேரம் செலவழிக்கின்றாளோ அவ்வளவு நேரமும் இபாதத்-வணக்க வழிபாட்டில் கழிப்பதாகக் கணக்கிடப்படும். 

இஸ்லாமிய வரலாற்றில் பெண்கள் தம் கணவருக்குச் செய்த பணிவிடைகளைச் சற்றுக் கூர்ந்து பார்ப்பது அவசியமாகும். அபூபக்ர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் மகளார் அஸ்மா ரளியல்லாஹு அன்ஹா ஸுபைர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களை மணந்திருந்தார்.

 அஸ்மா பின்த் அபீபக்ர் ரளியல்லாஹு அன்ஹா கூறியதாவது: என்னை ஸுபைர் பின் அல்அவ்வாம் ரளியல்லாஹு அன்ஹு (மக்காவிலிருந்தபோதே) மணந்துகொண்டார். இந்தப் பூமியில் அவருக்கு அவரது குதிரையை(யும் தண்ணீர் இறைக்கும் ஓர் ஒட்டகத்தையும்) தவிர வேறு எந்தச் சொத்துகளும் அடிமைகளும் உடைமைகளும் இருக்கவில்லை.

அந்தக் குதிரைக்கு நான் தீனி போடுவேன்; அதைப் பராமரிக்கும் பொறுப்புகளை நானே கவனித்துக்கொள்வேன்; (அதற்குத்) தண்ணீர் புகட்டுவேன்; அதை ஓட்டிச் செல்வேன்; தண்ணீர் இறைக்கும் அவரது ஒட்டகத்துக்காகப் பேரீச்சங் கொட்டைகளை இடித்து, அதற்கு ஊட்டுவேன்; தண்ணீர் இறைப்பேன்; அவரது தோல் கமலையைத் தைப்பேன்; மாவு குழைப்பேன். ஆனால், எனக்கு நன்றாக ரொட்டி சுடத் தெரியாது. என் அண்டை வீட்டு அன்ஸாரிப் பெண்களே எனக்கு ரொட்டி சுட்டுத் தருவார்கள். அப்பெண்கள் உண்மையாளர்களாயிருந்தனர்.

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என் கணவருக்கு வருவாய் மானியமாக ஒதுக்கிய நிலத்திலிருந்து நானே பேரீச்சங் கொட்டைகளை(ப் பொறுக்கி) என் தலைமீது வைத்துச் சுமந்து வருவேன். அந்த நிலம் (என் வீட்டிலிருந்து) இரண்டு மைல் (3.5 கி.மீ.) தொலைவில் இருந்தது... (முஸ்லிம்: 4397)

நபித்தோழியர் தம் கணவருக்கு எந்த அளவிற்குப் பணிவிடை செய்துள்ளார்கள் என்பதை மேற்கண்ட செய்தியின்மூலம் நாம் அறியலாம். கணவர் வைத்துள்ள வாகனத்தைப் பராமரிக்கும் பொறுப்பையும் மனைவியே மேற்கொண்டுள்ளார். இன்று கணவர் வைத்துள்ள இரு சக்கர வாகனத்தைத் துடைத்துத் தரச் சொன்னால் என்ன நடக்கும்? சமைத்தல், துவைத்தல், வீட்டைப் பராமரித்தல், கணவனின் வாகனத்தைப் பராமரித்தல், பிள்ளைகளைப் பேணுதல் உள்ளிட்ட எத்தனையோ பணிகளைப் பெண்கள் அன்றும் இன்றும் செய்துவருகின்றார்கள். ஆனால் இன்றைய பெண்களின் பணிவிடை குறைந்துபோய்விட்டது. பெண்களும் ஆண்களைப்போல் பணிக்குச் செல்வதால் கணவனுக்கு அவர்கள் செய்யும் பணிவிடைகள் குறைந்துவிட்டன. வீட்டிலுள்ள பெண்கள் சிலர் வேண்டா வெறுப்பாகச் செய்துவருகின்றனர்.







ஒரு மனைவி தன் கணவனுக்குப் பணிந்து நடப்பதில் ஒரு பகுதி அவள் அவனுக்குத் தன்னால் இயன்றவரை பணிவிடை செய்வதாகும். அதில் அன்றாட வீட்டுவேலைகள் செய்வது, அவனுக்கு உணவு பரிமாறுவது போன்றவை அடங்கும். எந்தப் பெண்ணும் இந்தப் பொறுப்பிலிருந்து நீங்கிக்கொள்ள முடியாது. ஆனால், கணவன் தன் மனைவியை இப்பொறுப்பிலிருந்து விடுவிக்க விரும்பினால் அது அவனுடைய விருப்பம். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கண்ணியத்திற்குரிய மகளும் இதற்கான பொறுப்பாளியே ஆவார்.

அலீ ரளியல்லாஹு அன்ஹு அறிவித்துள்ளார்: என் மனைவி ஃபாத்திமா, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மகள், நபியவர்களிடம் சென்று, மாவரைக்கும் கல் மூலம் தம் கை காய்ச்சிப் போய்விட்டது என்று தெரிவிக்க நாடினார். ஆனால், நபியவர்கள் அப்போது வீட்டில் இல்லை. எனவே, அச்செய்தியை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களிடம் சொல்லிவிட்டு வந்தார். அதாவது தங்களுக்கு அண்மையில் கிடைத்துள்ள அடிமைகளுள் ஓர் அடிமையைக் கொடுத்துதவும்படி கேட்டுக்கொண்டார். ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா நபியவர்களின் மகளாருடைய தேவையை அவர்களிடம் தெரிவித்தபோது, நபியவர்கள் தம் மகளாருடைய வீட்டிற்குச் சென்று உள்ளே நுழைந்தார்கள்.

அங்கே ஃபாத்திமா, அலீ இருவரும் தூங்குவதற்காக படுக்கையில் தயாராக இருப்பதைக் கண்டார்கள். தந்தையைப் பார்த்த ஃபாத்திமா படுக்கையிலிருந்து எழ முற்பட்டார். ஆனால் அவரைப் படுக்கையிலேயே நபியவர்கள் இருக்கச் சொன்னார்கள். அப்போது அவ்விருவருக்கிடையே நபியவர்கள் அமர்ந்தார்கள்; பிறகு அவர்களிடம்,  "நீங்கள் இருவரும் கேட்டதைவிடச் சிறந்ததை உங்களுக்கு நான் சொல்லட்டுமா? நீங்கள் படுக்கச் செல்லுமுன், சுப்ஹானல்லாஹ் (அல்லாஹ் தூயவன்) முப்பத்து மூன்று தடவையும் அல்ஹம்துலில்லாஹ் (அல்லாஹ்வுக்கே புகழ் யாவும்) முப்பத்து மூன்று தடவையும் அல்லாஹு அக்பர் (அல்லாஹ் மிகப்பெரியவன்) முப்பத்து நான்கு தடவையும் (ஓதிக் கொள்வது) உங்களுக்கு ஓர் அடிமையை-பணியாளனைவிடச் சிறந்தது'' என்று சொன்னார்கள். (நூல்கள்: புகாரீ, முஸ்லிம்)

இப்னு கய்யிம் ரஹிமஹுல்லாஹ் கூறியுள்ளார்: ஒரு மனைவி தன் கணவனுக்குப் பணிவிடை செய்ய வேண்டும் என்பதில் எந்தச் சந்தேகமுமில்லை. எனவே, இது தொடர்பாக உயர் குடிப்பெண்ணுக்கும் சாதாரண பெண்ணுக்குமிடையிலோ ஏழைப் பெண்ணுக்கும் பணக்காரப் பெண்ணுக்குமிடையிலோ வித்தியாசப்படுத்திப் பார்ப்பது சரியில்லை. ஏனென்றால், பெண்களுள் மிகவும் உயர்குடிப் பெண்ணான ஃபாத்திமாவே தம் கணவருக்குப் பணிவிடை செய்துவந்துள்ளார். அந்தப் பணியில், தாம் சந்தித்த சிரமங்களைத் தம் தந்தையிடம் முறையிடச் சென்றார். ஆனால், அவரின் தந்தை அவருடைய விருப்பத்தை நிறைவேற்றவில்லை.

உயிருக்கு உயிரான தம் மகள் ஃபாத்திமா, தம் கையில் காய்ப்பு ஏற்படும் அளவிற்குத் தம் கணவருக்குப் பணிவிடை செய்ததை எண்ணி நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் வருந்தவில்லை; கவலைப்படவில்லை. மாறாக உதவியாளர் ஒருவரை வழங்கி உதவி செய்யுமாறு கேட்டும், உதவி செய்வதற்குப்  பதிலாக, ஒரு திக்ரைக்  கற்றுக்கொடுத்துள்ளார்கள் என்றால், ஒரு பெண் தன் கணவனுக்குச் செய்ய வேண்டிய பணிவிடைகளின் முக்கியத்துவம் என்னவென்பதை உணர்ந்துகொள்ளலாம்.

ஆகவே கணவனுக்குப் பணிவிடை செய்வதைச் செம்மையாகச் செய்துவரும் பெண்கள் உள்பட, தாம் செய்துவரும் பணிவிடைக்குப் பதிலாக இறைவனின் அன்பும் கருணையும் கிடைக்கப்பெறுவதோடு, நாளை மறுமையில் சொர்க்கத்தில் நுழைவதற்கான நல்வாய்ப்பும் அதன்மூலம் கிடைக்கும் என்பதை எண்ணி மகிழ வேண்டும். பணிவிடை செய்வதில் அசட்டையாக உள்ள பெண்கள் இனியாகிலும் அதன் முக்கியத்துவத்தை உணர்ந்து ஆர்வத்தோடு செய்ய முன்வர வேண்டும். கணவனுக்குக் கட்டுப்பட்டு, அவருக்கு அன்போடு பணிவிடை செய்யக்கூடிய நல்ல பெண்மணிகளாக வாழ எல்லாப் பெண்களுக்கும் அல்லாஹ் நல்வாய்ப்பை நல்குவானாக.

=========================