செவ்வாய், 11 செப்டம்பர், 2018

திரும்பிப் பார்க்கிறேன்...


இந்த ஆண்டின் ஏப்ரல் மாதத்தோடு, நான் அல்பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் அரபுக் கல்லூரியில் முதன்முதலாகக் காலடி வைத்து கால் நூற்றாண்டு நிறைவுபெறுகிறது. (1993-2018)
எங்களூர் (ஆலங்குடி) பள்ளியின் இமாம் முஹம்மது சிராஜுத்தீன் ஹள்ரத் கூறிய ‘பாக்கியாத்’ எனும் வார்த்தையால் ஈர்க்கப்பட்ட நான், ஒன்பதாம் வகுப்பைப் பாதியில் நிறுத்திவிட்டு, வேலூரை நோக்கிப் பயணம் மேற்கொண்டேன். பயணத்தின் இடையே திருச்சியில் ஓராண்டு வரை ஹோட்டலில் வேலை செய்து, சிறுகச் சிறுக ஈட்டிய பணத்தில் இரண்டு ஜுப்பாக்களைத் தைத்துக்கொண்டு ஒரு மஞ்சள் பையோடு 13.04.1993 அன்று பாக்கியாத்தில் நுழைந்தேன்.

பாக்கியாத் பள்ளியின் துப்புரவுப் பணியாளரின் வழிகாட்டுதலோடு உள்ளே சென்று கல்லூரி முதல்வரைச் சந்தித்தேன். நான் சென்ற ஆண்டில்தான், கண்ணியத்திற்குரிய ஆசிரியத் தந்தை பீ.எஸ்.பீ. ஜைனுல் ஆபிதீன் ஹள்ரத் அவர்கள் முதல்வராகப் பொறுப்பேற்றிருந்தார்கள். அந்த ஆண்டுதான் ‘அரபுக் கல்லூரி’ (குல்லிய்யா) என்பது ‘பல்கலைக் கழகம்’ (ஜாமிஆ) எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

“யாருமில்லாமத் தனியாக வந்திருக்கிறாயே, உன்னை எப்படிச்  சேர்த்துக்கொள்வது? போய், உன்னோட அத்தாவ கூட்டிட்டு வா!” என்று கூற, முதல்வரின் அருகில் அமர்ந்திருந்த கண்ணியத்திற்குரிய ஆசிரியத் தந்தை மர்ஹூம் ஹெச். கமாலுத்தீன் ஹள்ரத் அவர்கள், “ஓதணும்னு ஆர்வத்தோட வந்திருக்கான். சேத்துக்கங்க ஹஸ்ரத்” என்று கூறியதை ஏற்றுக்கொண்டு, கல்லூரியின்  சட்ட விதிமுறைகளை என்னிடம் கூறியதையடுத்து, நான் சென்று தலைமுடி மழித்து, குளித்து, லுங்கி-ஜுப்பா அணிந்துகொண்டு, ஹள்ரத் அவர்களின் முன்னிலையில் போய் நின்றபோது, “இப்பதான்டா ஓதுற புள்ள மாதிரி இருக்கெ” என்று கூறினார்கள்.

பின்னர் அங்கு வந்திருந்த அன்வர்தீன் சேலம் என்பவரிடம் (அப்போது அவர் ஐந்தாம் ஆண்டு ஓதினார்) கண்ணியத்திற்குரிய ஆசிரியத் தந்தை நூர் முஹம்மது ஹைதர் அலீ ஹள்ரத் அவர்களிடம்  வாய்மொழி நுழைவுத் தேர்வுக்காக அழைத்துச் செல்லுமாறு கல்லூரி முதல்வர் பணித்தார். நுழைவுத் தேர்வு நடைபெற்றது. தேர்ச்சி பெற்று ‘இப்திதா’ எனும் தொடக்க வகுப்பில் சேர்த்துக் கொள்ளப்பட்டேன். அவ்வாண்டு ஒருவர்பின் ஒருவராக ஏழு பேர் என்னுடன் சேர்ந்தார்கள். அதன்பின் அவர்கள் அனைவரும் ஒருவர்பின் ஒருவராகச் சென்றுவிட்டார்கள். நான் ஒருவன் மட்டுமே எஞ்சியிருந்தேன். 1993 முதல் 2000ஆம் ஆண்டு வரை எட்டாண்டுகள் அங்கேயே பயின்று பட்டம் பெற்று  வெளியே வந்தேன்.

அந்த எட்டாண்டுகளில் கற்றுக்கொண்ட பாடங்களும் கலைகளும் ஏராளம். ஒன்பதாம் வகுப்பைப் பாதியில் நிறுத்தியிருந்த நான், மேல்வகுப்பு நண்பர்களின் வழிகாட்டுதலோடு, பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வை எழுதினேன். பத்தாம் வகுப்பின் கணக்குப் பாடத்தைச் சொல்லித் தந்தவர் ஜுபைர் அஹ்மது பாகவி (பொரவாச்சேரி அரபுக் கல்லூரியின் தற்போதைய முதல்வர்). அவர் அப்போது பன்னிரண்டாம் வகுப்பு வரை படித்திருந்தார்.

பின்னர் மேல்வகுப்பு நண்பர் அபூதாஹிர்-சென்னை (மாற்றுத்திறனாளி). அவரின் வழிகாட்டுதலோடு, சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத் தொலைநிலைக் கல்வி மூலம் இளங்கலை வரலாறு படித்தேன்.  ( அவர் எனக்கு முன்னரே அதில் சேர்ந்திருந்தார்). அத்தோடு சென்னைப் பல்கலைக் கழகத்தின் மூலம் நடைபெறுகின்ற அஃப்ஸலுல் உலமா தேர்வையும் எழுதினேன். (அத்தேர்வெழுத விரும்பும் மாணவர்களுக்கு பாக்கியாத் சார்பாகவே விண்ணப்பங்கள் வாங்கி, வழங்கப்பட்டு, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அலுவலகம் சார்பாக அவர்களே        சென்னைப் பல்கலைக் கழகத்திற்கு அனுப்பும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அஃதொரு பொற்காலம்.)

பாக்கியாத் பல்கலைக் கழகத்தின் மாணவர் கையேட்டுப் பிரதிக்குத் துணையாசிரியராகவும், பின்னர் அடுத்த ஆண்டு ஆசிரியராகவும் இருந்துள்ளேன். ‘இப்திதா’ தொடக்க வகுப்பிலேயே சிறியதொரு கட்டுரை எழுதியமைக்காக, அப்போது அல்இர்ஷாத் கையேட்டு இதழுக்கு ஆசிரியராக இருந்த ஏ. ஜாகிர் ஹுஸைன் பாகவி அவர்களிடம் (தற்போது சென்னைப் பல்கலைக் கழக அரபுத் துறைத் தலைவர்) ‘பேனா’வை ஊக்கப்பரிசாகப் பெற்றேன். அதுமுதல் அல்இர்ஷாத் இதழின் கையேட்டுப் பிரதிக்கு எழுத்தராகப் பணியாற்றியதோடு, அதில் கட்டுரைகள், கவிதைகள் எழுதுவதையும் தொடர்ந்தேன். அன்று முதல் இன்று வரை அந்த எழுத்துப் பணி தொடர்கிறது.  (அல்ஹம்து லில்லாஹ்)  கட்டுரையில் பெயருக்குப் பின்னால் பி.ஏ., ஏ.யு. (ஏ.யு. என்பது அஃப்ஸலுல் உலமா படிப்பிற்கான சுருக்கம்) என்று எழுதி அதன்மேல் ஒரு கோடும் இடுவதுண்டு. (அப்போது அவ்விரண்டையும் படித்துக்கொண்டிருந்ததால்...)

என் பெயரைச் சொல்லும்போது ‘பி.ஏ., ஏ.யு. அதன்மேல் ஒரு கோடு’ என்று அழுத்திச் சொல்லி கிண்டலாகச் சிலர் சிரிப்பதுண்டு. ஆனால் அவர்களின் கேலி, கிண்டலைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து என்னைச் செதுக்கிக்கொள்வதிலேயே கவனம் செலுத்தியதால்தான், இன்று நான் அரபியில் முனைவர் (பிஎச்.டி.) பட்டம் பெற இயன்றது. அல்ஹம்து லில்லாஹ். இது அல்லாஹ்வின் அருட்கொடை. அதேநேரத்தில் என்னைக் கேலி செய்த யாரும் அஃப்ஸலுல் உலமா தேர்வைக்கூட எழுதவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பாக்கியாத்தில் முடித்த கையோடு தாருல் உலூம் தேவ்பந்த் செல்ல முடிவு செய்து, நானும் என்னுடன் நண்பர் முஹம்மது முபாரக் ரஷாதி (ஆறாம் ஆண்டு வரை என்னுடன் பாக்கியாத்தில் ஓதியவர்) அவர்களும் சென்றோம். அங்கு நடத்தப்பெற்ற நுழைவுத் தேர்வில் வெற்றிபெற்று தவ்ரத்துல் ஹதீஸ் பாடப் பிரிவில் சேர்ந்து, ஓராண்டுப் படிப்பை முடித்துவிட்டு ஊர் திரும்பினேன்.

பின்னர் என் மூத்த சகோதரர் முஹம்மது ஆதில் யூசுஃப் சென்னையில் இருந்ததால், இங்கு வந்து ஒரு பள்ளியில் இமாமாகப் பணியாற்றும்போதே சென்னைப் பல்கலைக் கழகத்தில் எம்.ஏ. அரபிக் சேர்ந்து பயின்றேன். பின்னர் எம்.ஃபில். செய்தேன். அப்போதுதான் என் திருமணம் (2005) நடைபெற்றது. நண்பர் ஜியாவுத்தீன் பாகவி-சென்னை (தற்போது துபையில் டிசைனராகப் பணியாற்றுகிறார்) அவர்கள்மூலம் திருமணச் சம்பந்தம் ஏற்பட்டது நினைவுகூரத்தக்கது. அதன்பின்  2009ஆம் ஆண்டு பிஎச்.டி. சேர்ந்து 2015ஆம் ஆண்டு நிறைவு செய்தேன்.

இன்று சென்னையில் மணலியிலுள்ள மஸ்ஜித் ஜாமிஉல் அன்வார் பள்ளிவாசலில் இமாமாகப் பணியாற்றுவதோடு ‘இனிய திசைகள்’ மாத இதழின் துணையாசிரியராகவும் இருந்து வருகிறேன். அத்தோடு அரபு நூல்களைத் தமிழாக்கம் செய்து கொண்டிருக்கிறேன்.

பாக்கியாத்தில் என்னைச் சேர்க்கத் தயங்கிய பீ.எஸ்.பீ. ஹள்ரத் அவர்களைச் சந்திக்க நேரிடும்போதெல்லாம், அங்கே நான் சேர்த்துக்கொள்ளப்பட்டதைப் பற்றி என்னிடமே நெகிழ்ச்சியுடன் கூறுவார்கள். நான் எழுதிய அல்லது தமிழாக்கம் செய்த நூல்களைப் பார்க்கும்போதெல்லாம், அல்லாஹ் உன்னைக் கொண்டு வேலை வாங்குறான் அப்துல் ஹாதி; ரொம்ப சந்தோஷமா இருக்கு” என்று மகிழ்ச்சியுடன் கூறுவார்கள். நான்  அண்மையில் நபிவழி மருத்துவம் எனும் அரபு-தமிழாக்க நூலைக் காட்டி, ஆசியுரை பெற்றபோதும், அதையே நெகிழ்ச்சியுடன் கூறிக் காட்டினார்கள்.

தயக்கத்தோடு என்னைச் சேர்த்த ஹள்ரத் அவர்களின் ‘மனங்குளிரும் விதமாக நான் உருவானதே’ அவர்களுக்குச் செய்யும் கைம்மாறாகக் கருதுகிறேன்.

“உன்னை நீயே செதுக்கு” எனும் வாழ்வியல் முன்னேற்ற வாக்கியத்திற்கேற்ப அல்லாஹ்வின் அளப்பெரும் கருணையால், முயற்சிகள் பல செய்து என்னை நான் செதுக்கிக் கொண்டுள்ளேன் என்பதை இன்றைய இளம் தலைமுறை உலமாக்களுக்குப் பாடமாகத் தருகிறேன்.

இன் ஷா அல்லாஹ் இன்னும் என்னைச் செதுக்குவேன்...

அன்புடன்
முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.
11.09.2018

குறிப்பு: இத்தருணத்தில், என் முன்னேற்றத்திற்கு என்னைத் தூண்டிய, வழிகாட்டியாக இருந்த, உதவி செய்த ஆசிரியர்கள், நண்பர்கள் அனைவருக்கும் என் இதயங்கனிந்த நன்றியை உரிதாக்கிக்கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன்.



புதன், 15 ஆகஸ்ட், 2018

மக்கள் பணி மிளிரும் பரங்கிப்பேட்டை!


-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.
-----------------------------------------------------------------------------
"நாடு உனக்கு என்ன செய்தது என்று கேட்காதே; நாட்டிற்காக நீ என்ன செய்தாய் என்று கேள்'' எனும் அமெரிக்க ஜனாதிபதி ஜான் கென்னடியின் கூற்றுக்கேற்ப ஈன்றெடுத்த ஊருக்கும் ஊர் மக்களுக்கும் தம்மால் இயன்ற தொண்டுகளைச் செய்வது ஒவ்வொருவர்மீதும் கடமையாகும். அந்த வகையில் கடலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள பரங்கிப்பேட்டை ஊர்மக்கள் தமது ஊர் நலனுக்காகப் பல்வேறு சமூகப் பணிகளைப் படைத்தோனின் திருப்தியையும் உவப்பையும் நாடிச் செய்துவருவது மனதாரப் பாராட்டத்தக்கது. 

பாக்கியாத் அரபுக் கல்லூரியில் ஓதிப் பட்டம்பெற்ற முப்பதுக்கும் மேற்பட்ட பாகவிகள் சென்ற மாதம் (ஜூலை 2018) பரங்கிப்பேட்டைக்குச் சென்றிருந்தோம். ஒருவரையொருவர் சந்தித்துப் பழைய நினைவுகளைப் புதுப்பித்துக்கொள்வதும் நபித்தோழர் உக்காஷா (ரளி) அவர்களின் அடக்கவிடத்தைத் தரிசிப்பதுமே பயணத்தின் நோக்கம். அச்சமயத்தில் அவ்வூர்க்காரர்களான அ.பா. கலீல் அஹ்மது பாகவி, முஹம்மது ஃபாரூக் பாகவி ஆகிய இருவரும் அவ்வூர்த் தலைவரையும் சமூக சேவகர்களையும்  சந்தித்து உரையாடும் நிகழ்வுக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். அப்போதுதான் அவர்கள் அவ்வூருக்காகச் செய்துவரும் தன்னலமற்ற சேவைகள் குறித்து எங்களுக்குத் தெரிய வந்தது.

"தர்மம் தலை காக்கும்'' எனும் முதுமொழிக்கேற்பவும் "தர்மம் சோதனைகளை நீக்கும்'' எனும் நபி (ஸல்) அவர்களின் பொன்மொழிக்கேற்பவும் அவ்வூர் மக்கள் பல்வேறு வகையான தர்மங்களைச் செய்வது வியப்பாக இருந்தது.  
  
ஒரு பிடி அரிசித் திட்டம்: தர்மம் செய்வது ஒரு வகை; தர்மம் செய்யத் தூண்டுவது மற்றொரு வகை. அதே நேரத்தில் மக்கள் மத்தியில் ஒரு திட்டத்தைச் செயல்படுத்த வேண்டுமெனில் பலரும் எளிதில் பங்குகொள்ளுமாறு அத்திட்டம் இருக்க வேண்டும். அந்த வகையில் "ஒரு பிடி அரிசித் திட்டம்' அனைவருக்கும் எளிதானது. நீங்கள் உங்களுக்காகச் சமைக்க அரிசி எடுக்கும்போது, ஏழைகளுக்காக இதில் ஒரு பிடி அரிசியைப் போட்டுவிடுங்கள் என்ற கோரிக்கையோடு வீட்டுக்கொரு வாளி கொடுக்கப்படுகிறது. அவர்களும் இன்முகத்தோடு அதை வாங்கி, அதில் ஒவ்வொரு நாளும் ஒரு பிடி அரிசியைப் போட்டு, ஒரு மாதத்தில் அது நிறைந்ததும் சமூகத் தொண்டர்கள் அதைப் பெற்றுச் சென்று, வகை பிரித்து, ஏழ்மையிலும் வாய்திறந்து கேளாமல் மௌனமாக இருப்போரின் நிலையறிந்து தர்மம் செய்யப்படுகிறது. அதைப் பெறுவோரின் வெட்க உணர்வுகளைக் காணக்கூடாது என்பதற்காக, இரவு நேரத்தில் அவரவரின் இல்லத்திற்குமுன் வைத்துவிட்டு வந்துவிடுகின்றனர். விடிந்ததும் அவர்கள் அதை எடுத்துக்கொள்கின்றார்கள். இது ஒவ்வொரு மாதமும் தொய்வின்றி நடைபெற்று வருகிறது. 

தம் ஊரிலுள்ள ஏழைகளுக்குப் போக, எஞ்சியதைப் பக்கத்து ஊரிலுள்ள இருளர் இனத்தாருக்கும் ஏனையோருக்கும் வழங்குகின்றார்கள். "அவர்கள் ஏழைகளுக்கு உணவளிக்கத் தூண்ட மாட்டார்கள்'' என்று நரகவாசிகள் குறித்து இறைவன் திருக்குர்ஆனில் இயம்புகின்றான். ஆனால் "தாம் தர்மம் செய்வதோடு பிற மக்களையும் தர்மம் செய்யத் தூண்ட வேண்டும்'' என்ற அடிப்படையில்  உருவானதே இத்திட்டம் என்கிறார் "தர்மம் செய்வோம் குழுமத்தின்'' செயலாளர் ஹாஜி முஹம்மது அலீ.  

சிறுவர் உண்டியல் திட்டம்: சிறுவர்-சிறுமியரின் இளநெஞ்சில் தர்மச் சிந்தனையை விதைத்து விட்டால் பிற்காலத்தில் பிறருக்கு உதவும் குணம் தானாகவே வந்துவிடும் என்பதை மனதில்கொண்டு, ஒவ்வொரு வீட்டிலும் உள்ள சிறுவர்-சிறுமியருக்கு ஓர் உண்டியல் கொடுத்து, ஒவ்வொரு நாளும் கிடைக்கின்ற "பாக்கெட் மணி'யி-ருந்து ஒவ்வொரு ரூபாய் அதில் போட்டுவிட வேண்டும். மாதம் ஒரு முறை அவ்வுண்டியல் காசுகள் ஒன்று சேர்க்கப்பட்டு, அவ்வூரிலுள்ள ஏழைகளுக்குப் பங்கிட்டு வழங்கும் சேவையை அவ்வூர் இளைஞர்கள் செய்து வருகின்றார்கள்.  

ஆடையற்றோருக்கு ஆடை: "யார் ஆடையில்லாத ஒரு முஸ்லிமுக்கு ஆடை வழங்கினாரோ அவருக்கு அல்லாஹ் சொர்க்கத்தின் பச்சை நிற(ப் பட்டு) ஆடைகளை அணிவிப்பான்'' என்ற நபிமொழிக்கேற்ப ஆடையற்றோருக்கு ஆடை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஆடை வழங்குவோர் கிழிசல் இல்லாத ஆடையை அல்லது புதிய ஆடையை வழங்க வேண்டும். அவ்வாடைகளை ஒருங்கிணைத்து, தேவைப்படுவோருக்கு வழங்கப்பட்டு வந்தது. இத்திட்டம் இப்போது மிகுந்த வளர்ச்சியடைந்துள்ளது. ஆடைகளுக்கென ஒரு கடை திறந்து, சேகரித்த ஆடைகளை அங்கு வைத்துவிடுகின்றனர். தேவைப்படுவோர் அக்கடைக்குச் சென்று புத்தாடை வாங்கி வருவதைப்போன்றே, தமக்கு விருப்பமான ஆடைகளைத் தேர்வு செய்து எடுத்துக்கொள்கின்றனர். ஆடையை வைப்போர் ஒருபுறம் வைத்துவிட்டுச் செல்கின்றனர். ஆடை தேவைப்படுவோர் மறுபுறம் எடுத்துச் செல்கின்றனர். இதனால் நேரடியாகத் தர்மத்தைப் பெறுவோர் கொள்ளும் நாணஉணர்வும் கூனிக் குறுகும் நிலையும் ஏற்படாமல் மனித உணர்வுகள் மதிக்கப்படுகின்றன. 

குருதிக்கொடை: "மூன்றில் நிவாரணம் உண்டு. குருதி குத்தி எடுத்தல், தேனைப் பருகுதல், சூடிட்டுக் கொள்ளுதல். எனினும் என் சமுதாயம் சூடிட்டுக் கொள்வதை நான் தடைசெய்கிறேன்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள். (நூல்: புகாரீ: 5249) இந்நபிமொழிக்கேற்ப மருத்துவ முறைப்படி குருதியை வெளியேற்றுவது உடல் நலத்திற்கு உகந்தது என்பதை அறிய முடிகிறது. முற்கால மக்கள் குருதி குத்தி எடுக்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தார்கள். தற்காலத்தில் மனிதக் குருதி பிற மனிதர்களின் உயிரைக் காக்க உதவுகிறது. அதனடிப்படையில் குருதிக்கொடை வழங்கப்படுகிறது. அந்த வகையில் இவ்வூரில் குருதிக்கொடையாளர்கள் பலர் தயாராக இருக்கின்றார்கள். தன்னார்வலர்கள்  சுழல் முறையில் குருதிக்கொடை வழங்கி, மனித உயிர்களைக் காக்க உதவுகின்றார்கள். சுற்று வட்டாரக் கிராமங்களிலிருந்து செல்பேசி வழியாக அழைப்பு வந்ததும், மிகத் துரிதமாகச் செயல்பட்டு, குருதிக்கொடை வழங்கிவருகின்றார்கள்.     
    
பசுமைத் திட்டம்: சுற்றுப்புறச் சூழலைத் தூய்மையாக வைத்துக்கொள்ளவும் தூய காற்று, நன்னீர் கிடைக்கவும் மரங்கள் பெரிதும் உதவுகின்றன. அந்த வகையில் ஊர் முழுக்க மரங்களை நடுவதற்கென  "பசுமை ஹாஜி'யாரின் தலைமையில் ஒரு குழு செயல்படுகிறது. தமது ஊர் மட்டுமின்றிப் பக்கத்து ஊர்களுக்கும் அயல்நாடுகளுக்கும் சென்று மரங்களை நட்டுவருகின்றார்கள். இன்று அவ்வூர் செழிப்பாகவும் பசுமையாகவும் வளமாகவும் காணப்படுகிறது. 

ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரளி) அவர்கள் கூறியதாவது: (ஒரு முறை) நபி (ஸல்) அவர்கள் உம்மு மஅபத் (ரளி) அவர்களது பேரீச்சந் தோப்புக்குச் சென்றார்கள். அவரிடம், "உம்மு மஅபதே! இந்தப் பேரீச்ச மரங்களை நட்டு வைத்தது யார்? முஸ்லிமா அல்லது இறை மறுப்பாளரா?'' என்று கேட்டார்கள். அதற்கு அவர், "இல்லை; ஒரு முஸ்லிம்தான் (நட்டு வைத்தார்)'' என்று விடையளித்தார். நபி (ஸல்) அவர்கள், "முஸ்லிம் ஒரு மரத்தை நட்டுவைத்து, அதிலிருந்து ஒரு மனிதனோ, ஒரு கால்நடையோ, ஒரு பறவையோ உண்டால், மறுமைநாள் வரை அது அவருக்கு ஒரு தர்மமாகவே அமையும்'' என்று கூறினார்கள். (நூல்: புகாரீ: 3162)

இந்த நபிமொழியின் அடிப்படையில், அவர்களின் இச்சேவையால் பெரிதும் ஈர்க்கப்பட்ட பாகவிகள் தமது பங்குக்கு 21 மரங்கள் நடுவதற்கான தொகையைக் கொடுத்து, தங்கள் சார்பாக மரங்களை நடுமாறு கேட்டுக்கொண்டார்கள். 

ஐக்கிய ஜமாஅத் தலைவர் எஸ்.ஓ. சையது ஆரிப் என்பார் இவ்வூரிலுள்ள பதினைந்து பள்ளிவாசல்களுக்கும் ஒரே தலைவராக உள்ளார். அவரின் ஒத்துழைப்போடுதான் மேற்கண்ட சேவைகள் அனைத்தும் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. பள்ளிவாசல் சார்பாக இங்குள்ள நாற்பது விதவைகளுக்கு மாதந்தோறும் ரூ. 1000 உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. பல்வேறு இயக்கங்கள் இவ்வூரில் இருந்தாலும் அனைவரும் ஒரே குடையின்கீழ் செயல்படுகின்றார்கள். சமுதாயத்தில் பிளவையோ குழப்பத்தையோ ஏற்படுத்திவிடக் கூடாது  என்ற உணர்வோடு செயல்படுகின்றார்கள். 

ஆக, ஓர் ஊர்மக்கள் தன்னிறைவோடும் மகிழ்ச்சியோடும் வாழ வேண்டுமெனில் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்வதும் தம்மிடம் உள்ளதைப்  பிறருக்குப் பகிர்ந்தளிப்பதும் அவசியமாகும். எல்லா ஊராரும் இவ்வூர் மக்களைப் போன்றே ஒருங்கிணைந்து செயல்பட்டால் எல்லோரும் மகிழ்ச்சியோடும் மனநிறைவோடும் வாழலாம்.


==========================================





செவ்வாய், 14 ஆகஸ்ட், 2018

இன் ஷா அல்லாஹ் விரைவில் வெளிவருகிறது...

பேரறிஞர் ஷம்சுத்தீன் முஹம்மது பின் அபீபக்ர் பின் கய்யிம் (ரஹ்) அரபியில் எழுதிய அத்திப்புந் நபவீ எனும் நூலின் முழுமையான தமிழாக்கம் விரைவில்  வெளிவருகிறது. (நபிவழி மருத்துவம்) 

 கண்ணியத்திற்குரிய என்னுடைய மூத்த பேராசிரியர் அல்பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் அரபுப் பல்கலைக்கழகத்தின்  முன்னாள் முதல்வர் மௌலானா மௌலவி அல்ஹாஜ் பி.எஸ்.பி. ஜைனுல் ஆபிதீன் பாகவி இந்நூலுக்கு ஆசியுரை வழங்கியுள்ளது சிறப்புக்குரியது. 

 மௌலானா மௌலவி அல்ஹாஜ் கே.எம். இல்யாஸ் ரியாஜி இந்நூலை முழுவதுமாக வாசித்துப் பார்த்து  ஆய்வுரை வழங்கியுள்ளார். 

பன்னூலாசிரியர் எழுத்தாளர்  ஏம்பல் தஜம்முல் முஹம்மது இந்நூலுக்கு அணிந்துரை வழங்கியுள்ளார். 

  சென்னை மண்ணடியிலுள்ள சாஜிதா புக் சென்டர் இந்நூலை வெளியிடுகிறது. 

தமிழாக்கம்: முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.   


புதன், 1 ஆகஸ்ட், 2018

இப்போது வெளிவந்துவிட்டது




இந்நூலில் இடம்பெற்றுள்ள எனது முன்னுரை: 





உலகையும் அதனுள் அடங்கியுள்ள எண்ணற்ற பொருட்களையும் மனிதனின் பயன்பாட்டுக்காகவும் அவற்றை இணை இணையாகவும் படைத்துள்ள பேரிறைவன் அல்லாஹ்வுக்கே புகழ் யாவும் உரித்தாகுக! உலக மாந்தர் யாவரும் நேரிய பாதையில் சென்று நன்னெறி வாழ்க்கை வாழ வழிகாட்டிய இறுதி இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள்மீதும் அவர்கள்தம் குடும்பத்தார்மீதும் அவர்களின் வழியைப் பின்பற்றி வந்த அவர்கள்தம் தோழர்கள்மீதும் இறையருளும் கருணையும் பொழிவதாக! 

மரியாதைக்குரிய என்னுடைய ஆசிரியர் மௌலானா மௌலவி ஏ. முஹம்மது இல்யாஸ் பாகவி இறைநம்பிக்கை தொடர்பான தம் கருத்துகளையும் விளக்கவுரைகளையும் ஒரு தொகுப்பாக எழுதி, என்னிடம் கொடுத்து, தட்டச்சுச் செய்து தருமாறு கேட்டுக்கொண்டார். நானும் தட்டச்சுச் செய்து அனுப்பிவைத்தேன். அதைச் சரிசெய்து என்னிடம் ஒப்படைப்பதற்குள் ஏகன் அல்லாஹ் அவர்தம் இன்னுயிரைக் கைப்பற்றிக்கொண்டான். (இன்னா லில்லாஹி...)

இன்னும் சிலபல கருத்துகளை ஆங்காங்கே சேர்க்க வேண்டும்; பின்னர் இறைநம்பிக்கையின் (ஈமான்) கடமைகள் ஏழினையும் ஒவ்வொன்றாக எழுத வேண்டும் என்று  என்னிடம் தம் எண்ணத்தைச் சொல்லியிருந்தார்.  அவற்றுள் ஒன்றை எழுதி, நூலுரு பெறுவதற்குள் தமது வாழ்வை முடித்துக்கொண்டதை எண்ணி, நான் மிகுந்த ஏமாற்றத்திற்குள்ளானேன். 

இறைநம்பிக்கை தொடர்பாக நிறைய கருத்துகளைத் தெரிந்துகொள்ளலாம் என்ற ஆர்வத்தில் இருந்த எனக்கு எல்லாம் ஏமாற்றமாய் முடிந்துபோனது. அதற்கான வாய்ப்பு ஒரேயடியாகப் பறிக்கப்பட்டுவிட்டதை எண்ணியெண்ணி வருந்தினேன்.  இருந்தாலும் கையில் கிடைத்துள்ள இந்த அரிய கருத்துகளையும் விளக்கங்களையும் எப்படியேனும் நூலுருவில் கொண்டுவந்து மக்களிடம்  சமர்ப்பிப்பதே ஒரு மாணவனாக நான் அவருக்குச் செய்யும் கைம்மாறு எனக் கருதினேன். என் எண்ணத்திற்கேற்பவே அவர்தம் புதல்வர் புர்ஹானுத்தீன்  என்னைத் தொடர்புகொண்டு தம் தந்தையின் நூலைச் செம்மைப்படுத்தித் தருமாறு வேண்டுகோள் விடுத்தார்.  அதனை இன்முகத்தோடு ஏற்றுக்கொண்டு இந்நூலைச் செம்மைப்படுத்தத் தொடங்கினேன். ஆங்காங்கே இடம்பெற்றிருந்த நபிமொழிகளுக்கு, அவை இடம்பெற்றுள்ள நூலையும் அவற்றிற்குரிய எண்களையும் பதிவு செய்தேன். இந்நூலுக்கேற்ற ஒரு தலைப்பைத் தேர்ந்தெடுத்து, “இஸ்லாமியக் கொள்கைகளும் முஸ்லிம்களின் முரண்பாடுகளும் எனச் சூட்டினேன். அரபு வார்த்தைகளை இயன்ற வரை தமிழாக்கம் செய்தேன். சொல்லிச் சொல்லிப் பழகிப்போன அரபுப் பதங்களைத் தொடாமல் அப்படியே விட்டுவிட்டேன்.

இந்நூலை வாசிக்குமுன் வாசகர்கள் தம் உள்ளத்தில் எந்தக் கருத்தையும் தீர்க்கமாக முடிவுசெய்துகொள்ளாமல் திறந்த மனத்துடன் படிக்கத் தொடங்க வேண்டும். ஏனெனில் இந்நூலில் கூறப்பட்டுள்ள எதுவும் நூலாசிரியரின் சொந்தக் கருத்தில்லை; ஒவ்வொன்றையும் திருக்குர்ஆனோடும் திருத்தூதரின் பொய்யாமொழிகளோடும் ஒப்பிட்டு, உரசிப் பார்த்துத்தான் கூறியுள்ளார்.

அறிஞர்கள் சிலரின் தவறான புரிதல்களும் மக்களின் அறியாமையும்  சேர்ந்துகொண்டுதான், மார்க்கம் வலியுறுத்துகின்ற கொள்கைகளுக்கு முரணான இன்றைய நடைமுறைகளை மக்கள் பின்பற்றிவருகின்றார்கள். மார்க்கத்தின் பெயரால் செய்கின்ற எந்தச் செயலாக இருந்தாலும் அது திருக்குர்ஆனுக்கும் திருத்தூதர் போதனைகளுக்கும் ஒத்ததாக இருக்க வேண்டும். அந்த நடுநிலைப்போக்கு எல்லோருக்கும் வந்துவிட்டால் எந்தச் சிக்கலும் இல்லை.

ஒரு கருத்தை வலியுறுத்துகின்ற நபிமொழி தெளிவாக இருக்க, அறிஞர்கள் சிலர் தம் கருத்துகளுக்குத் தோதுவான நபிமொழியைப் பலவீனமான அறிவிப்பாளர்தொடர்மூலம்  அல்லது புனைந்துகூறப்பட்டுள்ள தகவல்மூலம் ஆதாரமாக முன்வைத்து அதைச் செய்வது கூடும் என்று பேசிவிடுகின்றனர்; எழுதிவிடுகின்றனர். அவர்கள் சற்று நிதானப்போக்கோடு சிந்தித்துத் தெளிவடைய  முற்பட்டால் சீரான பாதையை அடையலாம்.

இவ்வவனியில் தோன்றிய எல்லா இறைத்தூதர்களும் போதித்த கொள்கை ஏகத்துவம்தான். அந்த ஏகத்துவத்திற்கு எதிராக எதுவெல்லாம் இருக்கின்றனவோ  அவை அனைத்தும் ஏற்கத்தகாதவை என்பதை ஆணித்தரமாக எடுத்தியம்பியுள்ளார் நூலாசிரியர். ஏகன் அல்லாஹ்வின் ஆற்றலையும் வல்லமையையும் கேலி செய்யும் விதத்தில் மக்களின் செயல்பாடுகள் அமைந்துள்ளன. இறைமறைக் குர்ஆனையும் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் இனிய போதனைகளையும் மார்க்க அறிஞர்கள் சிலர் இன்னும் முழுமையாகவும் திறந்த மனத்தோடும் திறந்து பார்க்காமலேயே இருக்கின்றார்கள் என்பது முற்றிலும் உண்மை. அவர்கள் நடுநிலையோடும் திறந்த மனத்தோடும் அவற்றை ஆய்வு செய்யத் தொடங்கினால் நேரிய வழி அவர்களின் கண்முன்னே தெள்ளெனத் தெரியும்.

இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களைப் பொறுத்த வரை, நம்முடைய ஒவ்வொரு செயல்பாட்டிலும் அவர்களைப் பின்பற்றுவதுதான் நம் தலையாய கடமையே தவிர அவர்கள் சொன்னதற்கு முரணாக, அவர்களுக்கு மறைவான ஞானம் இருக்கின்றது என்றோ, அல்லாஹ்வுடைய தன்மைகள் அவர்களுக்கு இருப்பதாகவோ ஏற்றிப்போற்றுவது இல்லை. ஏனெனில் அவர்களுக்கு முகமன் கூறுவதையும் அவர்கள்மீது அருள்புரியுமாறு அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்வதையும் ஒவ்வொரு தொழுகையிலும் அல்லாஹ்வே கடமையாக்கியுள்ளான். இதற்கு மேலாக ஒரு சிறப்பும் புகழும் அவர்களுக்குக் கிடைத்துவிடப்போவதில்லை. எனவே நாமாக எதையாவது கற்பனை செய்துகொண்டு அவர்களுக்குத் தகாத தன்மைகளைக் கூறுவதும் புகழ்வதும் இறைநம்பிக்கையைக் குலைக்கக்கூடியது என்பதை நாம் உணர்ந்துகொள்ள வேண்டும்.

இன்றைய முஸ்லிம்கள் கொண்டிருக்கின்ற நம்பிக்கைகளும் செய்கின்ற செயல்பாடுகளும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கற்றுத்தந்தவைதாமா? இவர்களின் செயல்பாடுகளைக் கண்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மகிழ்ச்சியடைவார்களா? அல்லது ஷைத்தான் குதூகலிப்பானா? அவர்கள் செய்துவருகின்ற செயல்பாடுகள் அல்லாஹ்வைத் திருப்திப்படுத்துமா என்று சற்று நேரம் சிந்தித்துப் பார்த்தால் அவர்கள்தம் செயல்பாடுகளைக் கண்டு அவர்களே வெட்கப்பட வேண்டியிருக்கும். எனவே நாம் ஒவ்வொருவரும் நம்முடைய செயல்பாடுகளைத் திருக்குர்ஆனோடும் திருத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களின் பொன்மொழிகளோடும் ஒப்பிட்டுப் பார்ப்பது நம் தலையாய கடமையாகும்.  
              
இந்நூலிலுள்ள எல்லா விசயங்களையும் நீங்கள் படித்துத் தெரிந்துகொள்வதோடு நின்றுவிடாமல் பிறரையும் படிக்கத் தூண்டுங்கள். யார் ஒருவர் ஒரு நன்மையை அறிவிக்கின்றாரோ அவருக்கு அதைச் செய்தவரைப் போன்றவரின் நன்மை இருக்கிறது (நூல்: முஸ்லிம்) என்ற நபிமொழிக்கேற்ப நீங்கள் பிறருக்குச் சொல்லத் தவறிவிடாதீர்.

இந்நூலை நல்ல முறையில் அச்சிட்டுத் தந்த மாஹின் பிரிண்டர்ஸ் உரிமையாளருக்கும் இந்நூலை அச்சிடப் பொருளாதார உதவி நல்கிய என் ஆசிரியரின் மகன் புர்ஹானுத்தீனுக்கும் இந்நூலுக்கு அணிந்துரை வழங்கி அணிசேர்த்த என் ஆசிரியத் தந்தை மௌலவி ஏ. ஹைதர்அலீ பாகவி அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைச் சமர்ப்பித்துக் கொள்கிறேன்.  இந்நூல் அனைவரையும் சென்றடையத் தாங்கள் அனைவரும் உதவி செய்யுமாறும் என் மறுமை நற்பேற்றிற்காகப் பிரார்த்தனை செய்யுமாறும் அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

                                                                அன்புடன் 
                 மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி


இந்நூல் கிடைக்குமிடங்கள்:

1. குட்வேர்ட் புக்ஸ் 324, காயிதே மில்லத் சாலை, திருவல்லிக்கேணி, சென்னை-5
தொடர்புக்கு: 94422 45023

2. சலாமத் புக் ஹவுஸ் லிங்கிச் செட்டித் தெரு, மண்ணடி, சென்னை-1
தொடர்புக்கு: 96000 12039

3. பஷாரத் புக்ஸ் (மஸ்ஜித் மஃமூர் அருகில்) அங்கப்ப நாயக்கன் தெரு, மண்ணடி, சென்னை-1
தொடர்புக்கு: 97899 99256

4. சாஜிதா புக் சென்டர், 248, தம்புச் செட்டித் தெரு, மண்ணடி, சென்னை-1
தொடர்புக்கு: 98409 77758, 044-25224821 
===================





புதன், 25 ஜூலை, 2018

பரங்கிப்பேட்டையில் பாகவிகள் மலரும் நினைவுகள் சங்கமம்

பாகவிகள் மலரும் நினைவுகள் சங்கமம் 24 07 2018 அன்று பரங்கிப்பேட்டையில் நடைபெற்றது. பல்வேறு ஊர்களிலிருந்து 35 பாகவிகள் இச்சந்திப்பில் கலந்துகொண்டார்கள். சந்திப்பின் முக்கியக் கட்டமாக அவ்வூரின் சி.புதுப்பேட்டை கடற்கரையில் அமர்ந்து பாகவிகள் அனைவரும் தத்தம் மலரும் நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார்கள். அதே நேரத்தில் இச்சந்திப்பு வெறும் சந்திப்பாக மட்டும் போய்விடாமல் இருக்க வேண்டும் என்ற அனைவரின் எண்ணப்படி, இச்சந்திப்புக் கூட்டத்தில் சில முக்கியமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

1. அல்பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் பல்கலைக் கழகத்தின் நம்முடைய ஆசிரியப் பெருந்தகை முன்னாள் முதல்வர் பி.எஸ்.பி. ஜைனுல் ஆபிதீன் பாகவி ஹள்ரத் அவர்கள் தற்போது சென்னையில்தான் வசித்து வருகின்றார்கள். அவர்களின் தீரா ஆசை என்னவென்றால், தம் இறுதிக் காலம் வரை ஹதீஸ், தஃப்சீர் பாடம் நடத்தியவாறே உயிர்துறக்க வேண்டும் என்பதுதான். எனவே அவர்களின் தீரா ஆசையை நிறைவேற்றும் முகமாக சென்னையில் வசிக்கும் பாகவிகள் ஐவர் தலைமையில் (ஃபக்ருத்தீன் பாகவி, முஜீப்  பாகவி, ஏரல் பீர் முஹம்மது  பாகவி, ஹபீபுல்லாஹ் கான்  பாகவி, செய்யது அஹமது அலி  பாகவி) ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை காலை 10 முதல் 12 வரை பாடம் கேட்கச் செல்வதென தீர்மானம் செய்யப்பட்டது.

2. அல்பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் பல்கலைக் கழக அல்இர்ஷாத் மாமன்றம் தொடங்கி நூறாண்டுகள் ஆகின்றன. அதன் நூற்றாண்டு விழாவை நடத்த மத்ரஸா நிர்வாகமே பொறுப்பேற்றுக்கொண்டதால் அது சிறப்பாக நடைபெற ஒத்துழைப்பதெனவும் அதன்பின் சென்னையில் அதன் நூற்றாண்டு விழாவை  "பாகவிகள் மலரும் நினைவுகள்''  சார்பாக நடத்துவதெனவும் ஏகமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

3. இன்ஷா அல்லாஹ் "பாகவிகள் மலரும் நினைவுகள்'' சார்பாக அடுத்த சந்திப்பு, கூத்தாநல்லூர், பொதக்குடி, அத்திக்கடை ஆகிய இடங்களில் நடத்துவதெனவும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் முடிவெடுக்கப்பட்டது.

4. பரங்கி மாநகரில் நடைபெற்று வருகின்ற மக்கள் தொண்டுகளைக் கேட்டறிந்த பாகவிகள் அதன் சேவைகளால் ஈர்க்கப்பட்டார்கள். அச்சேவைகளை தத்தம் மஹல்லாவில் விரிவுபடுத்துவதெனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. (அவர்களின் சேவைகளுள் ஒன்றான பசுமைப் புரட்சி-மரம் நடு தர்மம் எனும் சேவையை வரவேற்ற அவர்கள், ஒரு மரம் நடுவதற்கு ஆகும் செலவான ரூ. 200ஐ உடனடியாக 21 பேர் பாகவிகள் (21X200= 4200) வழங்கி எங்கள் சார்பாக மரத்தை நட்டுவிடுங்கள் எனக் கேட்டுக்கொண்டார்கள்.

5. பாகவிகள் மலரும் நினைவுகள் சார்பாக வருகை தந்த பாகவிகளை அன்புடன் வரவேற்று இன்முகத்துடன் உபசரித்து, பரிசுகள் வழங்கி, துஆ செய்து வழியனுப்பிவைத்த கலீல் பாகவி, ஃபாரூக் பாகவி உள்ளிட்ட பரங்கி மாநகர பாகவிகள் அனைவருக்கும் நன்றி கூறித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. (பரங்கி மாநகர பாகவிகளின் அழைப்பை ஏற்று, இங்கு வருகை  தந்த பாகவிகள் அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்வதாக அவர்களும் நம்மிடம் தெரிவித்தார்கள்.)

மேற்கண்ட தீர்மானங்களை அனைவரும் செவ்வனே நிறைவேற்ற உயர்ந்தோன் அல்லாஹ் அருள்புரிவானாக.
-தகவல்: நூ. அப்துல் ஹாதி பாகவி (ஆலங்குடி)










திங்கள், 16 ஜூலை, 2018

விரைவில் வெளிவருகிறது



ஆசிரியர்

மர்ஹூம் மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ் அல்ஹாஜ்
ஏ. முஹம்மது இல்யாஸ் பாகவி, ஃபாஸில் தேவ்பந்தீ
(முன்னாள் பேராசிரியர், ஜாமிஆ அல்பாக்கியாத்துஸ்   ஸாலிஹாத் அரபுப் பல்கலைக் கழகம், வேலூர்.)

நூலாக்கம்:

முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி
(இமாம் மஸ்ஜித் ஜாமிஉல் அன்வார், மணலி, சென்னை)


வெளியீடு:
ஆயிஷா இஸ்லாமியப் பதிப்பகம்
27/40 டாக்டர் அம்பேத்கார் தெரு, மணலி, 
சென்னை - 600 068. கைப்பேசி: 94443 54429



மன்னிக்கப் பழகுவோம்!



-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.

நண்பன் ஒருவன் செய்துவிட்ட துரோகத்தை, நெருங்கிப் பழகியவன் செய்த மோசடியை, உறவினர் ஒருவர் செய்த ஏமாற்றத்தை, அண்டைவீட்டான் வன்மையாகப் பேசியதை, மேலாளர் தன்னிடம் கடுமையாக நடந்துகொண்டதை-இவை எல்லாவற்றையும் சுமந்துகொண்டு மனிதன் ஒரு சுமைதூக்கியாக நிம்மதியின்றி அமைதியிழந்து அலைந்துகொண்டிருக்கின்றான்.

ஒரு மனிதனைச் சுற்றியுள்ள நண்பர்கள், அண்டைவீட்டார், குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள், சக பணியாளர்கள்-இவர்களுள் யாரேனும் அவனுக்குத் தீங்கிழைக்கலாம்; ஏமாற்றலாம்; மோசடி செய்யலாம்; வாக்களித்துவிட்டுத் தர மறுக்கலாம்; வன்மையாக நடந்துகொள்ளலாம்; கைநீட்டி அடித்துவிடலாம். ஏதாவது ஒன்று நிகழ்ந்துவிடலாம். ஆனால் அவற்றையெல்லாம் மனதுக்குள்ளேயே வைத்துக்கொண்டு பொருமிக்கொண்டிருப்பதில் என்ன பயன்? பழிவாங்க வேண்டுமென்று எண்ணுவதில் என்ன இலாபம்? ஒன்றுமில்லை.
பிறர் நமக்குச் செய்த துரோகம், நம்பிக்கை மோசடி, ஏமாற்றம், வன்மம் அனைத்தையும் மறந்து மன்னிப்பதே நம்முடைய நிம்மதியான வாழ்க்கைக்கு வழிவகுக்கும். 

மன்னிப்பதில்தான் மனநிம்மதி இருக்கிறது. ஏனெனில் அவற்றை நம் மனத்துக்குள் சுமக்க வேண்டிய அவசியமில்லை அல்லவா? அதனால் நம் மனம் காலியாக இருக்கும்; நிம்மதியாக இருக்கும்.

குடும்ப உறுப்பினர்கள்-அண்ணன், தம்பி, அக்காள், தங்கை ஆகியோருள் யாரேனும் நம்மிடம் கடுமையாக நடந்துகொள்ள வாய்ப்புண்டு. உறவினர்களுள் மாமா, மாமி, சிற்றப்பா, பெரியப்பா, சிற்றன்னை உள்ளிட்ட யாரேனும் நம்மிடம் கடுமையாகப் பேசிவிடலாம். அண்டைவீட்டார் யாரேனும் நமக்குத் தீங்கிழைக்கலாம்; நண்பர்கள் யாரேனும் ஏமாற்றிவிடலாம்; நாம் அதிகமாக நம்பியவர்கள் நமக்குத் துரோகமிழைக்கலாம். இவையெல்லாம் நம் ஒவ்வொருவரின் வாழ்விலும் இயல்பாக நடைபெறக்கூடியவை. ஆனால் இவற்றையெல்லாம் நாம் நம் மனத்துக்குள் குடியேற்றி வைத்துக்கொள்ளக்கூடாது. அவ்வப்போது மறந்து மன்னித்துவிட வேண்டும். அதுவே நம் நிம்மதியான வாழ்வுக்கு வழியாகும்.
இது விஷயத்தில் நம்முடைய இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களின் வாழ்க்கை நமக்கு ஒரு முன்மாதிரியாகும்; வழிகாட்டியாகும். தம்மீது குப்பை கொட்டிய மூதாட்டியையும் மன்னித்தார்கள்; தம்மைக் கொல்ல வாளை உயர்த்தி நின்றவனையும் மன்னித்தார்கள்; தமக்குத் துரோகமிழைத்தோரையும், மோசடி செய்தோரையும், தொல்லை கொடுத்தோரையும் மன்னித்தார்கள்; தம் பெரிய தந்தை ஹம்ஸா (ரளி) அவர்களைக் கொன்ற ஹிந்தாவை மன்னித்தார்கள்.

வீட்டில் மனைவியோ பிள்ளைகளோ தவறு செய்துவிடுகின்றார்கள். குடும்பத் தலைவர் சொன்ன பேச்சை மீறிவிடுகின்றார்கள். இது ஒரு நாள் மட்டும் நடக்கும் நிகழ்வல்ல. அன்றாடம் நடக்கும் வழமையாகும். மனைவி கோபமாகப் பேசிவிடலாம்; வாங்கிக் கொடுத்ததையெல்லாம் அனுபவித்து விட்டு, கோபத்தில் ஒரு நாள் நன்றிக் கேடான வார்த்தையை உதிர்த்துவிடலாம். அவற்றையெல்லாம் சேமித்து வைத்துக்கொண்டு மனத்தில் அசைபோட்டுக்கொண்டிருந்தால் வாழ்க்கையின் மகிழ்ச்சியும் நிம்மதியும் பறிபோய்விடும். அவற்றை மனத்தில் பதிய வைத்துக்கொண்டிருந்தால் நிம்மதியாகத் துயில்கொள்ள முடியாது. மகிழ்ச்சியோடு அவளைத் தொட்டுப் பேச முடியாது. அவ்வப்போது  மன்னித்துவிடுவதே, அடுத்தடுத்த கணப்பொழுதை மகிழ்ச்சியாகக் கழிக்க வழியாகும்.

இதனால்தான் நபி (ஸல்) அவர்களிடம் ஒருவர், "என் பணியாளர்களை ஒரு நாளைக்கு எத்தனை தடவை நான் மன்னிக்க வேண்டும்?'' என்று கேட்டபோது, "எழுபது தடவை'' என்று கூறினார்கள்.

தனக்குக்கீழ் பணியாற்றும் பணியாளரையே ஒரு நாளைக்கு எழுபது தடவை மன்னிக்க வேண்டுமென்றால் வாழ்க்கையின் எல்லாக் கட்டங்களிலும் தன்னோடு சேர்ந்து வாழும் மனைவியை எத்தனை தடவை மன்னிக்க வேண்டும்! அதையறியாத சிலர் தம்முடைய மனைவியோடு சண்டை போட்டுக்கொண்டு தம் வாழ்க்கையைச் சுமையாக்கிக் கொள்கின்றார்கள். இனிமையான வாழ்க்கையைக் கசப்பாக மாற்றிக்கொள்கின்றார்கள்.

பணியாளரை எழுபது தடவை மன்னிக்க வேண்டுமென்றால் அவரைவிட உயர்மதிப்பு வாய்ந்தவர்களை எத்தனை தடவை மன்னிக்க வேண்டுமென்பதை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.  தாய், தந்தை, உறவினர், நண்பர்கள், அண்டைவீட்டார், மேலாளர், முதலாளி ஆகியோர் ஒரு பணியாளரைவிட மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவர்கள் அல்லவா? அப்படியானால் அவர்களை எத்தனை தடவை மன்னித்தாலும் தகும். அவ்வாறு மன்னித்து அவர்களின் உறவையும் நட்பையும் தக்க வைத்துக்கொள்வது இன்றியமையாததாகும்.
அதனால்தான் நம்மைப் படைத்த உயர்ந்தோன் அல்லாஹ், தன் அடியார்கள் செய்கின்ற பாவங்களை மன்னிப்பவனாகவும் அன்பானவனாகவும் இருக்கின்றான். 

அடியார்கள் செய்கின்ற பாவங்களுக்குப் பழிவாங்கவோ தண்டிக்கவோ தொடங்கிவிட்டால் பூமிப் பந்தில் எம்மனிதரும் எஞ்சியிருக்க மாட்டார். மாறாக, மன்னித்தல் எனும் உயர்பண்பைத் தன்னுள் கொண்டு, அதையே தன் அடியார்களும் கொண்டிருக்க வேண்டுமென விரும்புகின்றான். 

மன்னிக்கும் மனப்பான்மை கொண்டோர்தாம் தம் எதிர்காலத்தை வளமாக்கிக்கொள்ளத் திட்டம் தீட்ட முடியும். பிறர் செய்யும் துரோகங்களைத் தம் மனத்தில் பதிய வைத்துக்கொண்டு அலைவோர்  நிம்மதியாகச் செயல்பட முடியாதது மட்டுமின்றித் தம் எதிர்காலத்தைப் பற்றிச் சிந்தித்துத் தீர்க்கமான முடிவெடுக்க முடியாமல் தவிப்பார்கள். அது குறித்தே அவர்கள் சிந்தித்துக்கொண்டிருப்பதால் நல்ல சிந்தனைகள் மனத்தில் தோன்ற வாய்ப்பில்லை. 

ஆகவே பிறர் நமக்குச் செய்யும் துரோகங்களை, வன்மங்களை, ஏமாற்றங்களை மறந்து மன்னித்து விடுவதே நம்முடைய நிம்மதியான வாழ்வுக்கு வழிகாட்டும் என்பதை மனத்தில் பதிய வைத்துக்கொள்வோம்!
=============================================