செவ்வாய், 11 செப்டம்பர், 2018

திரும்பிப் பார்க்கிறேன்...


இந்த ஆண்டின் ஏப்ரல் மாதத்தோடு, நான் அல்பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் அரபுக் கல்லூரியில் முதன்முதலாகக் காலடி வைத்து கால் நூற்றாண்டு நிறைவுபெறுகிறது. (1993-2018)
எங்களூர் (ஆலங்குடி) பள்ளியின் இமாம் முஹம்மது சிராஜுத்தீன் ஹள்ரத் கூறிய ‘பாக்கியாத்’ எனும் வார்த்தையால் ஈர்க்கப்பட்ட நான், ஒன்பதாம் வகுப்பைப் பாதியில் நிறுத்திவிட்டு, வேலூரை நோக்கிப் பயணம் மேற்கொண்டேன். பயணத்தின் இடையே திருச்சியில் ஓராண்டு வரை ஹோட்டலில் வேலை செய்து, சிறுகச் சிறுக ஈட்டிய பணத்தில் இரண்டு ஜுப்பாக்களைத் தைத்துக்கொண்டு ஒரு மஞ்சள் பையோடு 13.04.1993 அன்று பாக்கியாத்தில் நுழைந்தேன்.

பாக்கியாத் பள்ளியின் துப்புரவுப் பணியாளரின் வழிகாட்டுதலோடு உள்ளே சென்று கல்லூரி முதல்வரைச் சந்தித்தேன். நான் சென்ற ஆண்டில்தான், கண்ணியத்திற்குரிய ஆசிரியத் தந்தை பீ.எஸ்.பீ. ஜைனுல் ஆபிதீன் ஹள்ரத் அவர்கள் முதல்வராகப் பொறுப்பேற்றிருந்தார்கள். அந்த ஆண்டுதான் ‘அரபுக் கல்லூரி’ (குல்லிய்யா) என்பது ‘பல்கலைக் கழகம்’ (ஜாமிஆ) எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

“யாருமில்லாமத் தனியாக வந்திருக்கிறாயே, உன்னை எப்படிச்  சேர்த்துக்கொள்வது? போய், உன்னோட அத்தாவ கூட்டிட்டு வா!” என்று கூற, முதல்வரின் அருகில் அமர்ந்திருந்த கண்ணியத்திற்குரிய ஆசிரியத் தந்தை மர்ஹூம் ஹெச். கமாலுத்தீன் ஹள்ரத் அவர்கள், “ஓதணும்னு ஆர்வத்தோட வந்திருக்கான். சேத்துக்கங்க ஹஸ்ரத்” என்று கூறியதை ஏற்றுக்கொண்டு, கல்லூரியின்  சட்ட விதிமுறைகளை என்னிடம் கூறியதையடுத்து, நான் சென்று தலைமுடி மழித்து, குளித்து, லுங்கி-ஜுப்பா அணிந்துகொண்டு, ஹள்ரத் அவர்களின் முன்னிலையில் போய் நின்றபோது, “இப்பதான்டா ஓதுற புள்ள மாதிரி இருக்கெ” என்று கூறினார்கள்.

பின்னர் அங்கு வந்திருந்த அன்வர்தீன் சேலம் என்பவரிடம் (அப்போது அவர் ஐந்தாம் ஆண்டு ஓதினார்) கண்ணியத்திற்குரிய ஆசிரியத் தந்தை நூர் முஹம்மது ஹைதர் அலீ ஹள்ரத் அவர்களிடம்  வாய்மொழி நுழைவுத் தேர்வுக்காக அழைத்துச் செல்லுமாறு கல்லூரி முதல்வர் பணித்தார். நுழைவுத் தேர்வு நடைபெற்றது. தேர்ச்சி பெற்று ‘இப்திதா’ எனும் தொடக்க வகுப்பில் சேர்த்துக் கொள்ளப்பட்டேன். அவ்வாண்டு ஒருவர்பின் ஒருவராக ஏழு பேர் என்னுடன் சேர்ந்தார்கள். அதன்பின் அவர்கள் அனைவரும் ஒருவர்பின் ஒருவராகச் சென்றுவிட்டார்கள். நான் ஒருவன் மட்டுமே எஞ்சியிருந்தேன். 1993 முதல் 2000ஆம் ஆண்டு வரை எட்டாண்டுகள் அங்கேயே பயின்று பட்டம் பெற்று  வெளியே வந்தேன்.

அந்த எட்டாண்டுகளில் கற்றுக்கொண்ட பாடங்களும் கலைகளும் ஏராளம். ஒன்பதாம் வகுப்பைப் பாதியில் நிறுத்தியிருந்த நான், மேல்வகுப்பு நண்பர்களின் வழிகாட்டுதலோடு, பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வை எழுதினேன். பத்தாம் வகுப்பின் கணக்குப் பாடத்தைச் சொல்லித் தந்தவர் ஜுபைர் அஹ்மது பாகவி (பொரவாச்சேரி அரபுக் கல்லூரியின் தற்போதைய முதல்வர்). அவர் அப்போது பன்னிரண்டாம் வகுப்பு வரை படித்திருந்தார்.

பின்னர் மேல்வகுப்பு நண்பர் அபூதாஹிர்-சென்னை (மாற்றுத்திறனாளி). அவரின் வழிகாட்டுதலோடு, சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத் தொலைநிலைக் கல்வி மூலம் இளங்கலை வரலாறு படித்தேன்.  ( அவர் எனக்கு முன்னரே அதில் சேர்ந்திருந்தார்). அத்தோடு சென்னைப் பல்கலைக் கழகத்தின் மூலம் நடைபெறுகின்ற அஃப்ஸலுல் உலமா தேர்வையும் எழுதினேன். (அத்தேர்வெழுத விரும்பும் மாணவர்களுக்கு பாக்கியாத் சார்பாகவே விண்ணப்பங்கள் வாங்கி, வழங்கப்பட்டு, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அலுவலகம் சார்பாக அவர்களே        சென்னைப் பல்கலைக் கழகத்திற்கு அனுப்பும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அஃதொரு பொற்காலம்.)

பாக்கியாத் பல்கலைக் கழகத்தின் மாணவர் கையேட்டுப் பிரதிக்குத் துணையாசிரியராகவும், பின்னர் அடுத்த ஆண்டு ஆசிரியராகவும் இருந்துள்ளேன். ‘இப்திதா’ தொடக்க வகுப்பிலேயே சிறியதொரு கட்டுரை எழுதியமைக்காக, அப்போது அல்இர்ஷாத் கையேட்டு இதழுக்கு ஆசிரியராக இருந்த ஏ. ஜாகிர் ஹுஸைன் பாகவி அவர்களிடம் (தற்போது சென்னைப் பல்கலைக் கழக அரபுத் துறைத் தலைவர்) ‘பேனா’வை ஊக்கப்பரிசாகப் பெற்றேன். அதுமுதல் அல்இர்ஷாத் இதழின் கையேட்டுப் பிரதிக்கு எழுத்தராகப் பணியாற்றியதோடு, அதில் கட்டுரைகள், கவிதைகள் எழுதுவதையும் தொடர்ந்தேன். அன்று முதல் இன்று வரை அந்த எழுத்துப் பணி தொடர்கிறது.  (அல்ஹம்து லில்லாஹ்)  கட்டுரையில் பெயருக்குப் பின்னால் பி.ஏ., ஏ.யு. (ஏ.யு. என்பது அஃப்ஸலுல் உலமா படிப்பிற்கான சுருக்கம்) என்று எழுதி அதன்மேல் ஒரு கோடும் இடுவதுண்டு. (அப்போது அவ்விரண்டையும் படித்துக்கொண்டிருந்ததால்...)

என் பெயரைச் சொல்லும்போது ‘பி.ஏ., ஏ.யு. அதன்மேல் ஒரு கோடு’ என்று அழுத்திச் சொல்லி கிண்டலாகச் சிலர் சிரிப்பதுண்டு. ஆனால் அவர்களின் கேலி, கிண்டலைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து என்னைச் செதுக்கிக்கொள்வதிலேயே கவனம் செலுத்தியதால்தான், இன்று நான் அரபியில் முனைவர் (பிஎச்.டி.) பட்டம் பெற இயன்றது. அல்ஹம்து லில்லாஹ். இது அல்லாஹ்வின் அருட்கொடை. அதேநேரத்தில் என்னைக் கேலி செய்த யாரும் அஃப்ஸலுல் உலமா தேர்வைக்கூட எழுதவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பாக்கியாத்தில் முடித்த கையோடு தாருல் உலூம் தேவ்பந்த் செல்ல முடிவு செய்து, நானும் என்னுடன் நண்பர் முஹம்மது முபாரக் ரஷாதி (ஆறாம் ஆண்டு வரை என்னுடன் பாக்கியாத்தில் ஓதியவர்) அவர்களும் சென்றோம். அங்கு நடத்தப்பெற்ற நுழைவுத் தேர்வில் வெற்றிபெற்று தவ்ரத்துல் ஹதீஸ் பாடப் பிரிவில் சேர்ந்து, ஓராண்டுப் படிப்பை முடித்துவிட்டு ஊர் திரும்பினேன்.

பின்னர் என் மூத்த சகோதரர் முஹம்மது ஆதில் யூசுஃப் சென்னையில் இருந்ததால், இங்கு வந்து ஒரு பள்ளியில் இமாமாகப் பணியாற்றும்போதே சென்னைப் பல்கலைக் கழகத்தில் எம்.ஏ. அரபிக் சேர்ந்து பயின்றேன். பின்னர் எம்.ஃபில். செய்தேன். அப்போதுதான் என் திருமணம் (2005) நடைபெற்றது. நண்பர் ஜியாவுத்தீன் பாகவி-சென்னை (தற்போது துபையில் டிசைனராகப் பணியாற்றுகிறார்) அவர்கள்மூலம் திருமணச் சம்பந்தம் ஏற்பட்டது நினைவுகூரத்தக்கது. அதன்பின்  2009ஆம் ஆண்டு பிஎச்.டி. சேர்ந்து 2015ஆம் ஆண்டு நிறைவு செய்தேன்.

இன்று சென்னையில் மணலியிலுள்ள மஸ்ஜித் ஜாமிஉல் அன்வார் பள்ளிவாசலில் இமாமாகப் பணியாற்றுவதோடு ‘இனிய திசைகள்’ மாத இதழின் துணையாசிரியராகவும் இருந்து வருகிறேன். அத்தோடு அரபு நூல்களைத் தமிழாக்கம் செய்து கொண்டிருக்கிறேன்.

பாக்கியாத்தில் என்னைச் சேர்க்கத் தயங்கிய பீ.எஸ்.பீ. ஹள்ரத் அவர்களைச் சந்திக்க நேரிடும்போதெல்லாம், அங்கே நான் சேர்த்துக்கொள்ளப்பட்டதைப் பற்றி என்னிடமே நெகிழ்ச்சியுடன் கூறுவார்கள். நான் எழுதிய அல்லது தமிழாக்கம் செய்த நூல்களைப் பார்க்கும்போதெல்லாம், அல்லாஹ் உன்னைக் கொண்டு வேலை வாங்குறான் அப்துல் ஹாதி; ரொம்ப சந்தோஷமா இருக்கு” என்று மகிழ்ச்சியுடன் கூறுவார்கள். நான்  அண்மையில் நபிவழி மருத்துவம் எனும் அரபு-தமிழாக்க நூலைக் காட்டி, ஆசியுரை பெற்றபோதும், அதையே நெகிழ்ச்சியுடன் கூறிக் காட்டினார்கள்.

தயக்கத்தோடு என்னைச் சேர்த்த ஹள்ரத் அவர்களின் ‘மனங்குளிரும் விதமாக நான் உருவானதே’ அவர்களுக்குச் செய்யும் கைம்மாறாகக் கருதுகிறேன்.

“உன்னை நீயே செதுக்கு” எனும் வாழ்வியல் முன்னேற்ற வாக்கியத்திற்கேற்ப அல்லாஹ்வின் அளப்பெரும் கருணையால், முயற்சிகள் பல செய்து என்னை நான் செதுக்கிக் கொண்டுள்ளேன் என்பதை இன்றைய இளம் தலைமுறை உலமாக்களுக்குப் பாடமாகத் தருகிறேன்.

இன் ஷா அல்லாஹ் இன்னும் என்னைச் செதுக்குவேன்...

அன்புடன்
முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.
11.09.2018

குறிப்பு: இத்தருணத்தில், என் முன்னேற்றத்திற்கு என்னைத் தூண்டிய, வழிகாட்டியாக இருந்த, உதவி செய்த ஆசிரியர்கள், நண்பர்கள் அனைவருக்கும் என் இதயங்கனிந்த நன்றியை உரிதாக்கிக்கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன்.



கருத்துகள் இல்லை: