-முனைவர் மௌலவி
நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.
நண்பன் ஒருவன் செய்துவிட்ட துரோகத்தை, நெருங்கிப் பழகியவன்
செய்த மோசடியை,
உறவினர் ஒருவர் செய்த ஏமாற்றத்தை, அண்டைவீட்டான்
வன்மையாகப் பேசியதை,
மேலாளர் தன்னிடம் கடுமையாக நடந்துகொண்டதை-இவை எல்லாவற்றையும்
சுமந்துகொண்டு மனிதன் ஒரு சுமைதூக்கியாக நிம்மதியின்றி அமைதியிழந்து அலைந்துகொண்டிருக்கின்றான்.
ஒரு மனிதனைச் சுற்றியுள்ள நண்பர்கள், அண்டைவீட்டார், குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள், சக பணியாளர்கள்-இவர்களுள்
யாரேனும் அவனுக்குத் தீங்கிழைக்கலாம்;
ஏமாற்றலாம்;
மோசடி செய்யலாம்;
வாக்களித்துவிட்டுத் தர மறுக்கலாம்; வன்மையாக நடந்துகொள்ளலாம்; கைநீட்டி அடித்துவிடலாம்.
ஏதாவது ஒன்று நிகழ்ந்துவிடலாம். ஆனால் அவற்றையெல்லாம் மனதுக்குள்ளேயே வைத்துக்கொண்டு
பொருமிக்கொண்டிருப்பதில் என்ன பயன்?
பழிவாங்க வேண்டுமென்று எண்ணுவதில் என்ன இலாபம்? ஒன்றுமில்லை.
பிறர் நமக்குச் செய்த துரோகம், நம்பிக்கை மோசடி, ஏமாற்றம், வன்மம் அனைத்தையும்
மறந்து மன்னிப்பதே நம்முடைய நிம்மதியான வாழ்க்கைக்கு வழிவகுக்கும்.
மன்னிப்பதில்தான்
மனநிம்மதி இருக்கிறது. ஏனெனில் அவற்றை நம் மனத்துக்குள் சுமக்க வேண்டிய அவசியமில்லை
அல்லவா? அதனால் நம் மனம்
காலியாக இருக்கும்;
நிம்மதியாக இருக்கும்.
குடும்ப உறுப்பினர்கள்-அண்ணன், தம்பி, அக்காள், தங்கை ஆகியோருள்
யாரேனும் நம்மிடம் கடுமையாக நடந்துகொள்ள வாய்ப்புண்டு. உறவினர்களுள் மாமா, மாமி, சிற்றப்பா, பெரியப்பா, சிற்றன்னை உள்ளிட்ட
யாரேனும் நம்மிடம் கடுமையாகப் பேசிவிடலாம். அண்டைவீட்டார் யாரேனும் நமக்குத் தீங்கிழைக்கலாம்; நண்பர்கள் யாரேனும்
ஏமாற்றிவிடலாம்;
நாம் அதிகமாக நம்பியவர்கள் நமக்குத் துரோகமிழைக்கலாம். இவையெல்லாம்
நம் ஒவ்வொருவரின் வாழ்விலும் இயல்பாக நடைபெறக்கூடியவை. ஆனால் இவற்றையெல்லாம் நாம் நம்
மனத்துக்குள் குடியேற்றி வைத்துக்கொள்ளக்கூடாது. அவ்வப்போது மறந்து மன்னித்துவிட வேண்டும்.
அதுவே நம் நிம்மதியான வாழ்வுக்கு வழியாகும்.
இது விஷயத்தில் நம்முடைய இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களின்
வாழ்க்கை நமக்கு ஒரு முன்மாதிரியாகும்;
வழிகாட்டியாகும். தம்மீது குப்பை கொட்டிய மூதாட்டியையும் மன்னித்தார்கள்; தம்மைக் கொல்ல
வாளை உயர்த்தி நின்றவனையும் மன்னித்தார்கள்;
தமக்குத் துரோகமிழைத்தோரையும், மோசடி செய்தோரையும், தொல்லை கொடுத்தோரையும்
மன்னித்தார்கள்;
தம் பெரிய தந்தை ஹம்ஸா (ரளி) அவர்களைக் கொன்ற ஹிந்தாவை மன்னித்தார்கள்.
வீட்டில் மனைவியோ பிள்ளைகளோ தவறு செய்துவிடுகின்றார்கள். குடும்பத்
தலைவர் சொன்ன பேச்சை மீறிவிடுகின்றார்கள். இது ஒரு நாள் மட்டும் நடக்கும் நிகழ்வல்ல.
அன்றாடம் நடக்கும் வழமையாகும். மனைவி கோபமாகப் பேசிவிடலாம்; வாங்கிக் கொடுத்ததையெல்லாம்
அனுபவித்து விட்டு,
கோபத்தில் ஒரு நாள் நன்றிக் கேடான வார்த்தையை உதிர்த்துவிடலாம்.
அவற்றையெல்லாம் சேமித்து வைத்துக்கொண்டு மனத்தில் அசைபோட்டுக்கொண்டிருந்தால் வாழ்க்கையின்
மகிழ்ச்சியும் நிம்மதியும் பறிபோய்விடும். அவற்றை மனத்தில் பதிய வைத்துக்கொண்டிருந்தால்
நிம்மதியாகத் துயில்கொள்ள முடியாது. மகிழ்ச்சியோடு அவளைத் தொட்டுப் பேச முடியாது. அவ்வப்போது மன்னித்துவிடுவதே, அடுத்தடுத்த
கணப்பொழுதை மகிழ்ச்சியாகக் கழிக்க வழியாகும்.
இதனால்தான் நபி (ஸல்) அவர்களிடம் ஒருவர், "என் பணியாளர்களை
ஒரு நாளைக்கு எத்தனை தடவை நான் மன்னிக்க வேண்டும்?'' என்று கேட்டபோது, "எழுபது தடவை'' என்று கூறினார்கள்.
தனக்குக்கீழ் பணியாற்றும் பணியாளரையே ஒரு நாளைக்கு எழுபது தடவை
மன்னிக்க வேண்டுமென்றால் வாழ்க்கையின் எல்லாக் கட்டங்களிலும் தன்னோடு சேர்ந்து வாழும்
மனைவியை எத்தனை தடவை மன்னிக்க வேண்டும்! அதையறியாத சிலர் தம்முடைய மனைவியோடு சண்டை
போட்டுக்கொண்டு தம் வாழ்க்கையைச் சுமையாக்கிக் கொள்கின்றார்கள். இனிமையான வாழ்க்கையைக்
கசப்பாக மாற்றிக்கொள்கின்றார்கள்.
பணியாளரை எழுபது தடவை மன்னிக்க வேண்டுமென்றால் அவரைவிட உயர்மதிப்பு
வாய்ந்தவர்களை எத்தனை தடவை மன்னிக்க வேண்டுமென்பதை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும். தாய்,
தந்தை,
உறவினர்,
நண்பர்கள்,
அண்டைவீட்டார்,
மேலாளர்,
முதலாளி ஆகியோர் ஒரு பணியாளரைவிட மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவர்கள்
அல்லவா? அப்படியானால்
அவர்களை எத்தனை தடவை மன்னித்தாலும் தகும். அவ்வாறு மன்னித்து அவர்களின் உறவையும் நட்பையும்
தக்க வைத்துக்கொள்வது இன்றியமையாததாகும்.
அதனால்தான் நம்மைப் படைத்த உயர்ந்தோன் அல்லாஹ், தன் அடியார்கள்
செய்கின்ற பாவங்களை மன்னிப்பவனாகவும் அன்பானவனாகவும் இருக்கின்றான்.
அடியார்கள் செய்கின்ற
பாவங்களுக்குப் பழிவாங்கவோ தண்டிக்கவோ தொடங்கிவிட்டால் பூமிப் பந்தில் எம்மனிதரும்
எஞ்சியிருக்க மாட்டார். மாறாக,
மன்னித்தல் எனும் உயர்பண்பைத் தன்னுள் கொண்டு, அதையே தன் அடியார்களும்
கொண்டிருக்க வேண்டுமென விரும்புகின்றான்.
மன்னிக்கும் மனப்பான்மை கொண்டோர்தாம் தம் எதிர்காலத்தை வளமாக்கிக்கொள்ளத்
திட்டம் தீட்ட முடியும். பிறர் செய்யும் துரோகங்களைத் தம் மனத்தில் பதிய வைத்துக்கொண்டு
அலைவோர் நிம்மதியாகச் செயல்பட முடியாதது மட்டுமின்றித்
தம் எதிர்காலத்தைப் பற்றிச் சிந்தித்துத் தீர்க்கமான முடிவெடுக்க முடியாமல் தவிப்பார்கள்.
அது குறித்தே அவர்கள் சிந்தித்துக்கொண்டிருப்பதால் நல்ல சிந்தனைகள் மனத்தில் தோன்ற
வாய்ப்பில்லை.
ஆகவே பிறர் நமக்குச் செய்யும் துரோகங்களை, வன்மங்களை, ஏமாற்றங்களை
மறந்து மன்னித்து விடுவதே நம்முடைய நிம்மதியான வாழ்வுக்கு வழிகாட்டும் என்பதை மனத்தில்
பதிய வைத்துக்கொள்வோம்!
=============================================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக