இந்நூலில் இடம்பெற்றுள்ள எனது முன்னுரை:
உலகையும் அதனுள் அடங்கியுள்ள எண்ணற்ற
பொருட்களையும் மனிதனின் பயன்பாட்டுக்காகவும் அவற்றை இணை இணையாகவும் படைத்துள்ள பேரிறைவன்
அல்லாஹ்வுக்கே புகழ் யாவும் உரித்தாகுக! உலக மாந்தர் யாவரும் நேரிய பாதையில் சென்று
நன்னெறி வாழ்க்கை வாழ வழிகாட்டிய இறுதி இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள்மீதும் அவர்கள்தம்
குடும்பத்தார்மீதும் அவர்களின் வழியைப் பின்பற்றி வந்த அவர்கள்தம் தோழர்கள்மீதும் இறையருளும்
கருணையும் பொழிவதாக!
மரியாதைக்குரிய என்னுடைய ஆசிரியர் மௌலானா
மௌலவி ஏ. முஹம்மது இல்யாஸ் பாகவி இறைநம்பிக்கை தொடர்பான தம் கருத்துகளையும் விளக்கவுரைகளையும்
ஒரு தொகுப்பாக எழுதி, என்னிடம் கொடுத்து, தட்டச்சுச் செய்து தருமாறு கேட்டுக்கொண்டார்.
நானும் தட்டச்சுச் செய்து அனுப்பிவைத்தேன். அதைச் சரிசெய்து என்னிடம் ஒப்படைப்பதற்குள்
ஏகன் அல்லாஹ் அவர்தம் இன்னுயிரைக் கைப்பற்றிக்கொண்டான். (இன்னா லில்லாஹி...)
இன்னும் சிலபல கருத்துகளை ஆங்காங்கே
சேர்க்க வேண்டும்; பின்னர் இறைநம்பிக்கையின் (ஈமான்) கடமைகள்
ஏழினையும் ஒவ்வொன்றாக எழுத வேண்டும் என்று
என்னிடம் தம் எண்ணத்தைச் சொல்லியிருந்தார். அவற்றுள் ஒன்றை எழுதி, நூலுரு பெறுவதற்குள் தமது வாழ்வை முடித்துக்கொண்டதை எண்ணி, நான் மிகுந்த ஏமாற்றத்திற்குள்ளானேன்.
இறைநம்பிக்கை தொடர்பாக நிறைய கருத்துகளைத் தெரிந்துகொள்ளலாம் என்ற ஆர்வத்தில் இருந்த
எனக்கு எல்லாம் ஏமாற்றமாய் முடிந்துபோனது. அதற்கான வாய்ப்பு ஒரேயடியாகப் பறிக்கப்பட்டுவிட்டதை
எண்ணியெண்ணி வருந்தினேன். இருந்தாலும் கையில்
கிடைத்துள்ள இந்த அரிய கருத்துகளையும் விளக்கங்களையும் எப்படியேனும் நூலுருவில் கொண்டுவந்து
மக்களிடம் சமர்ப்பிப்பதே ஒரு மாணவனாக நான்
அவருக்குச் செய்யும் கைம்மாறு எனக் கருதினேன். என் எண்ணத்திற்கேற்பவே அவர்தம் புதல்வர்
புர்ஹானுத்தீன் என்னைத் தொடர்புகொண்டு தம்
தந்தையின் நூலைச் செம்மைப்படுத்தித் தருமாறு வேண்டுகோள் விடுத்தார். அதனை இன்முகத்தோடு ஏற்றுக்கொண்டு இந்நூலைச் செம்மைப்படுத்தத்
தொடங்கினேன். ஆங்காங்கே இடம்பெற்றிருந்த நபிமொழிகளுக்கு, அவை இடம்பெற்றுள்ள நூலையும் அவற்றிற்குரிய எண்களையும் பதிவு
செய்தேன். இந்நூலுக்கேற்ற ஒரு தலைப்பைத் தேர்ந்தெடுத்து, “இஸ்லாமியக் கொள்கைகளும் முஸ்லிம்களின் முரண்பாடுகளும்” எனச் சூட்டினேன். அரபு வார்த்தைகளை இயன்ற வரை தமிழாக்கம் செய்தேன்.
சொல்லிச் சொல்லிப் பழகிப்போன அரபுப் பதங்களைத் தொடாமல் அப்படியே விட்டுவிட்டேன்.
இந்நூலை வாசிக்குமுன் வாசகர்கள் தம்
உள்ளத்தில் எந்தக் கருத்தையும் தீர்க்கமாக முடிவுசெய்துகொள்ளாமல் திறந்த மனத்துடன்
படிக்கத் தொடங்க வேண்டும். ஏனெனில் இந்நூலில் கூறப்பட்டுள்ள எதுவும் நூலாசிரியரின்
சொந்தக் கருத்தில்லை; ஒவ்வொன்றையும் திருக்குர்ஆனோடும் திருத்தூதரின்
பொய்யாமொழிகளோடும் ஒப்பிட்டு, உரசிப் பார்த்துத்தான் கூறியுள்ளார்.
அறிஞர்கள் சிலரின் தவறான புரிதல்களும்
மக்களின் அறியாமையும் சேர்ந்துகொண்டுதான், மார்க்கம் வலியுறுத்துகின்ற கொள்கைகளுக்கு
முரணான இன்றைய நடைமுறைகளை மக்கள் பின்பற்றிவருகின்றார்கள். மார்க்கத்தின் பெயரால் செய்கின்ற
எந்தச் செயலாக இருந்தாலும் அது திருக்குர்ஆனுக்கும் திருத்தூதர் போதனைகளுக்கும் ஒத்ததாக
இருக்க வேண்டும். அந்த நடுநிலைப்போக்கு எல்லோருக்கும் வந்துவிட்டால் எந்தச் சிக்கலும்
இல்லை.
ஒரு கருத்தை வலியுறுத்துகின்ற நபிமொழி
தெளிவாக இருக்க, அறிஞர்கள் சிலர் தம் கருத்துகளுக்குத்
தோதுவான நபிமொழியைப் பலவீனமான அறிவிப்பாளர்தொடர்மூலம் அல்லது புனைந்துகூறப்பட்டுள்ள தகவல்மூலம் ஆதாரமாக
முன்வைத்து அதைச் செய்வது கூடும் என்று பேசிவிடுகின்றனர்; எழுதிவிடுகின்றனர். அவர்கள் சற்று நிதானப்போக்கோடு சிந்தித்துத்
தெளிவடைய முற்பட்டால் சீரான பாதையை அடையலாம்.
இவ்வவனியில் தோன்றிய எல்லா இறைத்தூதர்களும்
போதித்த கொள்கை ஏகத்துவம்தான். அந்த ஏகத்துவத்திற்கு எதிராக எதுவெல்லாம் இருக்கின்றனவோ அவை அனைத்தும் ஏற்கத்தகாதவை என்பதை ஆணித்தரமாக எடுத்தியம்பியுள்ளார்
நூலாசிரியர். ஏகன் அல்லாஹ்வின் ஆற்றலையும் வல்லமையையும் கேலி செய்யும் விதத்தில் மக்களின்
செயல்பாடுகள் அமைந்துள்ளன. இறைமறைக் குர்ஆனையும் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் இனிய போதனைகளையும்
மார்க்க அறிஞர்கள் சிலர் இன்னும் முழுமையாகவும் திறந்த மனத்தோடும் திறந்து பார்க்காமலேயே
இருக்கின்றார்கள் என்பது முற்றிலும் உண்மை. அவர்கள் நடுநிலையோடும் திறந்த மனத்தோடும்
அவற்றை ஆய்வு செய்யத் தொடங்கினால் நேரிய வழி அவர்களின் கண்முன்னே தெள்ளெனத் தெரியும்.
இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களைப்
பொறுத்த வரை, நம்முடைய ஒவ்வொரு செயல்பாட்டிலும் அவர்களைப்
பின்பற்றுவதுதான் நம் தலையாய கடமையே தவிர அவர்கள் சொன்னதற்கு முரணாக, அவர்களுக்கு மறைவான ஞானம் இருக்கின்றது
என்றோ, அல்லாஹ்வுடைய தன்மைகள் அவர்களுக்கு
இருப்பதாகவோ ஏற்றிப்போற்றுவது இல்லை. ஏனெனில் அவர்களுக்கு முகமன் கூறுவதையும் அவர்கள்மீது
அருள்புரியுமாறு அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்வதையும் ஒவ்வொரு தொழுகையிலும் அல்லாஹ்வே
கடமையாக்கியுள்ளான். இதற்கு மேலாக ஒரு சிறப்பும் புகழும் அவர்களுக்குக் கிடைத்துவிடப்போவதில்லை.
எனவே நாமாக எதையாவது கற்பனை செய்துகொண்டு அவர்களுக்குத் தகாத தன்மைகளைக் கூறுவதும்
புகழ்வதும் இறைநம்பிக்கையைக் குலைக்கக்கூடியது என்பதை நாம் உணர்ந்துகொள்ள வேண்டும்.
இன்றைய முஸ்லிம்கள் கொண்டிருக்கின்ற
நம்பிக்கைகளும் செய்கின்ற செயல்பாடுகளும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கற்றுத்தந்தவைதாமா? இவர்களின் செயல்பாடுகளைக் கண்டு அல்லாஹ்வின்
தூதர் (ஸல்) அவர்கள் மகிழ்ச்சியடைவார்களா? அல்லது ஷைத்தான் குதூகலிப்பானா? அவர்கள் செய்துவருகின்ற செயல்பாடுகள் அல்லாஹ்வைத் திருப்திப்படுத்துமா
என்று சற்று நேரம் சிந்தித்துப் பார்த்தால் அவர்கள்தம் செயல்பாடுகளைக் கண்டு அவர்களே
வெட்கப்பட வேண்டியிருக்கும். எனவே நாம் ஒவ்வொருவரும் நம்முடைய செயல்பாடுகளைத் திருக்குர்ஆனோடும்
திருத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களின் பொன்மொழிகளோடும் ஒப்பிட்டுப் பார்ப்பது நம் தலையாய
கடமையாகும்.
இந்நூலிலுள்ள எல்லா விசயங்களையும் நீங்கள்
படித்துத் தெரிந்துகொள்வதோடு நின்றுவிடாமல் பிறரையும் படிக்கத் தூண்டுங்கள். “யார் ஒருவர் ஒரு நன்மையை அறிவிக்கின்றாரோ
அவருக்கு அதைச் செய்தவரைப் போன்றவரின் நன்மை இருக்கிறது” (நூல்: முஸ்லிம்) என்ற நபிமொழிக்கேற்ப நீங்கள் பிறருக்குச் சொல்லத்
தவறிவிடாதீர்.
இந்நூலை நல்ல முறையில் அச்சிட்டுத்
தந்த மாஹின் பிரிண்டர்ஸ் உரிமையாளருக்கும் இந்நூலை அச்சிடப் பொருளாதார உதவி நல்கிய
என் ஆசிரியரின் மகன் புர்ஹானுத்தீனுக்கும் இந்நூலுக்கு அணிந்துரை வழங்கி அணிசேர்த்த
என் ஆசிரியத் தந்தை மௌலவி ஏ. ஹைதர்அலீ பாகவி அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைச்
சமர்ப்பித்துக் கொள்கிறேன். இந்நூல் அனைவரையும்
சென்றடையத் தாங்கள் அனைவரும் உதவி செய்யுமாறும் என் மறுமை நற்பேற்றிற்காகப் பிரார்த்தனை
செய்யுமாறும் அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.
அன்புடன்
மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி
இந்நூல் கிடைக்குமிடங்கள்:
1. குட்வேர்ட் புக்ஸ் 324, காயிதே மில்லத் சாலை, திருவல்லிக்கேணி, சென்னை-5
தொடர்புக்கு: 94422 45023
2. சலாமத் புக் ஹவுஸ் லிங்கிச் செட்டித்
தெரு, மண்ணடி, சென்னை-1
தொடர்புக்கு: 96000 12039
3. பஷாரத் புக்ஸ் (மஸ்ஜித் மஃமூர் அருகில்)
அங்கப்ப நாயக்கன் தெரு, மண்ணடி, சென்னை-1
தொடர்புக்கு: 97899 99256
4. சாஜிதா புக் சென்டர், 248, தம்புச் செட்டித் தெரு, மண்ணடி, சென்னை-1
தொடர்புக்கு: 98409 77758, 044-25224821
===================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக