திங்கள், 17 ஆகஸ்ட், 2026

மனிதர்களை நேசிப்போம்!


-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.

 

ஆண்டுதோறும் ஆகஸ்ட் 19 அன்று உலகம் முழுவதும் உலக மனிதாபிமான தினம் (World Humanitarian Day) அனுசரிக்கப்படுகிறது. இயற்கைப் பேரிடர்கள், போர்கள், பஞ்சம், தொற்றுநோய்கள் மற்றும் பிற நெருக்கடிகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தன்னலமின்றி உதவிசெய்யும் மனிதாபிமானப் பணியாளர்களைக் கௌரவிப்பதும், மனிதாபிமானச் சேவையின் அவசியத்தை உலகிற்கு உணர்த்துவதுமே இந்நாளின் முக்கிய நோக்கமாகும்.

 

மனிதாபிமானம்: மனிதர்களின் உயிர், கண்ணியம், அடிப்படை உரிமைகள் ஆகியவற்றைப் பாதுகாக்கும் நோக்கில், இனம், மதம், மொழி, நாடு, அரசியல் வேறுபாடு ஆகியவற்றைப் பாராமல் வழங்கப்படும் உதவியே மனிதாபிமான உதவி ஆகும். உணவு, குடிநீர், மருத்துவம், தங்குமிடம், கல்வி, பாதுகாப்பு, மனநல ஆதரவு போன்ற அத்தியாவசிய உதவிகள் இதில் அடங்கும். எல்லாவற்றுக்கும் மேலாகத் தம் அண்டையில் வாழும் மனிதர்களை மதிப்பதும் நேசிப்பதுமே மனிதாபிமானம் ஆகும்.

  

உருவான வரலாறு: 2003 ஆகஸ்ட் 19 அன்று ஈராக் தலைநகர் பாக்தாதில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகமான கேனல் ஹோட்டல் மீது நடத்தப்பட்ட வெடிகுண்டுத் தாக்குதலில், ஐ.நா.வின் சிறப்புப் பிரதிநிதி செர்ஜியோ வியேரா டி மெலோ உட்பட 22 மனிதாபிமானப் பணியாளர்கள் உயிரிழந்தனர். அவர்களின் தியாகத்தை நினைவுகூரும் வகையில், 2008ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் பொதுச்சபை ஆகஸ்ட் 19-ஐ உலக மனிதாபிமான நாளாக அறிவித்தது. அதன் பின்னர் 2009ஆம் ஆண்டு முதல் உலகம் முழுவதும் இந்த நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

 

மனிதாபிமானப் பணியாளர்களின் சேவை: மனிதாபிமானப் பணியாளர்கள் பல நேரங்களில் உயிருக்கு ஆபத்தான சூழல்களிலும் சேவை செய்கின்றனர். போர் நடைபெறும் பகுதிகள், அகதிகள் முகாம்கள், நிலநடுக்கம் மற்றும் வெள்ளப் பேரழிவுகள் ஏற்பட்ட இடங்கள் போன்றவற்றில் உணவு, மருந்து, குடிநீர் உள்ளிட்ட அவசர உதவிகளை வழங்குகின்றனர். கடந்த காலங்களில் சென்னை, தூத்துக்குடி உள்ளிட்ட பெருநகரங்களில் வெள்ளம் ஏற்பட்டபோது மனித நேயத்தோடு பணியாற்றிய நம் சகோதரர்களை நினைவுகூர்ந்து பார்க்க வேண்டும்.  

 

இன்றைய உலகிற்கான செய்தி: இன்றைய உலகம் போர்கள், காலநிலை மாற்றம், இயற்கைப் பேரிடர்கள், வறுமை, பசியால் பல்வேறு மனிதாபிமான நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகிறது. இந்நிலையில், அரசுகள் மட்டுமின்றி, தனிநபர்கள், சமூக அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள், இளைஞர்கள் அனைவரும் மனிதாபிமான உணர்வுடன் செயல்பட வேண்டியது காலத்தின் தேவை. சாலையில் ஒருவர் விபத்து ஏற்பட்டு உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தால் அவரை நிழற்படம் எடுத்துக்கொண்டிருக்காமல், அருகிலுள்ள மருத்துவமனையில் துரிதமாகச் சேர்க்க என்ன செய்ய இயலுமோ அதைச் செய்ய வேண்டும். அதுதான் மனிதாபிமானம்.

 

நாம் என்ன செய்யலாம்: பேரிடர் நிவாரண நிதிக்கு உதவுதல், இரத்ததானம் செய்வதோடு அது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல், ஏழை, எளிய மக்களுக்கு உணவு, உடை, கல்வி உதவிகள் வழங்குதல், பேரிடர் காலங்களில் தன்னார்வத் தொண்டில் ஈடுபடுதல், மத, இன, மொழி வேறுபாடுகளைத் தாண்டி மனிதநேயத்துடன் நடந்து கொள்ளல் முதலானவற்றை நாம் செய்யலாம். அத்தோடு பிறரையும் அப்பணிகளைச் செய்யத் தூண்டலாம்.

 

ஏழைகளைக் கண்டு இரங்குவோம்: ஜரீர் பின் அப்தில்லாஹ் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது: (ஒரு நாள்) நாங்கள் முற்பகல் நேரத்தில் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் இருந்தோம். அப்போது செருப்பணியாத, (அரை) நிர்வாணிகளான, வட்டமாய்க் கிழிந்த ‘கம்பளி ஆடை’ அல்லது ‘நீளங்கி’ அணிந்த ஒரு கூட்டத்தார் தம் (கழுத்துகளில்) வாள்களைத் தொங்கவிட்டவர்களாக அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்தார்கள். அவர்களுள் பெரும்பாலானோர் “முளர்’ குலத்தைச் சேர்ந்தோராக இருந்தனர். இல்லை; அவர்கள் அனைவருமே ‘முளர்’ குலத்தைச் சேர்ந்தோர்தாம். அவர்களது ஏழ்மை நிலையைக் கண்ட அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது முகம் நிறமாறிவிட்டது. உடனே அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் (ஒருவிதத் தவிப்பு நிலையுடன்) வீட்டுக்குள் சென்றுவிட்டு வெளியே வந்து, பிலால் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் உத்தரவிட, பிலால் ரளியல்லாஹு அன்ஹு தொழுகை அறிவிப்புச் செய்து இகாமத்தும் கூறினார்கள். அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தொழுதுவிட்டு, மக்களுக்கு உரை நிகழ்த்தினார்கள்.

 

அப்போது “மக்களே! உங்களை ஒரே ஆன்மாவிலிருந்து படைத்த உங்கள் இறைவனை பயந்துகொள்ளுங்கள்’’ எனும் (4:1ஆவது) இறைவசனத்தை முழுமையாக ஓதிக்காட்டினார்கள். மேலும், “அல்ஹஷ்ர்’ அத்தியாயத்திலுள்ள “இறைநம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். ஒவ்வோர் ஆன்மாவும் நாளைக்கென்று எதனை அனுப்பியுள்ளது என்பதை கவனத்தில் கொள்ளட்டும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்’’ எனும் (59:18ஆவது) வசனத்தையும் ஓதிக் காட்டி (முளர் கூட்டத்தாருக்குத் தர்மம் செய்யுமாறு கூறி)னார்கள். அப்போது பேரீச்சம் பழத்தின் ஒரு துண்டையேனும் (தர்மம் செய்யுமாறு அறிவுறுத்தினார்கள்).

 

உடனே (நபித்தோழர்களில்) ஒவ்வொருவரும் தம்மிடமிருந்த பொற்காசுகளையும் வெள்ளிக்காசுகளையும்  ஆடைகளையும் ஒரு ‘ஸாஉ’ கோதுமையையும் ஒரு ‘ஸாஉ’ பேரீச்சம் பழத்தையும் தர்மம் செய்தார்கள். அப்போது அன்ஸாரிகளுள் ஒருவர் ஒரு பை (நிறையப் பொருட்களைக்) கொண்டுவந்தார். அதைத் தூக்க முடியாமல் அவரது கை திணறியது; ஏன் தூக்கவே முடியவில்லை. பின்னர் தொடர்ந்து மக்கள் (தங்களின் தர்மப் பொருட்களுடன்) வந்துகொண்டிருந்தனர். இறுதியில் உணவுப் பொருட்களாலும் ஆடைகளாலும் இரு குவியல்கள் சேர்ந்துவிட்டதை நான் கண்டேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது முகம் பொன்னைப் போன்று மின்னிக்கொண்டிருப்பதையும் நான் கண்டேன்.

 

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், “யார் இஸ்லாத்தில் ஓர் அழகிய நடைமுறையை உருவாக்குகிறாரோ அவருக்கு அதற்குரிய நன்மையும் அவருக்குப் பின் அதன்படி செயல்படுவோரின் நன்மையும் உண்டு; அதற்காக அவர்களது நன்மையில் எதுவும் குறைந்துவிடாது. அவ்வாறே, யார் இஸ்லாத்தில் ஒரு தீய நடைமுறையை உருவாக்குகிறாரோ அவருக்கு அதன் பாவமும் அவருக்குப் பின் அதன்படி செயல்படுவோரின் பாவமும் -அ(தன்படி செயல்பட்ட)வர்களின் பாவத்திலிருந்து எதுவும் குறையாமல்- உண்டு’’ என்று கூறினார்கள். (முஸ்லிம்: 1017 / 1812)

 

உணவுக்கும் ஆடைக்கும் வழியின்றிச் சிரமப்பட்ட அந்த ஏழைகளைக் கண்டு அல்லாஹ்வின் தூதர் எந்த அளவிற்கு மனம் இளகியுள்ளார்கள் என்பதைக் காணும்போது நம் கண்கள் கண்ணீரைச் சிந்துகின்றன. 2026-இன் ஐ.நா. தரவுகளின்படி, “இந்தியாவில் 14.25 கோடிப் பேர் போதிய உணவு கிடைக்காத நிலையில் உள்ளனர்” என்ற செய்தியைப் படிக்கும்போது நமக்கு மனம் வலிக்கிறது. ஆனால் ஆட்சியாளர்கள் அது பற்றிக் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. ஏழைகளின் ஏழ்மையை அகற்ற ஏற்ற வழிகளைச் செய்வதே இல்லை.   

 

திருக்குர்ஆன் கூறுகிறது: இஸ்லாம் மனிதாபிமானத்தை (Humanity) வெறும் சமூகச் சேவையாக மட்டுமல்ல, இறைவழிபாட்டின் ஒரு பகுதியாகவும் கருதுகிறது. பசி, வறுமை, இயற்கைப் பேரிடர், போர், நோய், அகதிகள், ஆதரவற்றோர் போன்ற எந்தச் சூழலிலும் துன்பப்படுவோருக்கு உதவுவது உயர்ந்த அறமாகக் குர்ஆனும் ஹதீஸ்களும் வலியுறுத்துகின்றன. “யார் ஓர் உயிரைக் காப்பாற்றுகிறாரோ, அவர் எல்லா மனிதர்களின் உயிரையும் காப்பாற்றியவர் போன்றவர்’ (அல்குர்ஆன் 5:32) இந்த வசனம், மனித உயிரைக் காப்பது இஸ்லாத்தில் எவ்வளவு உயர்ந்த செயலாகக் கருதப்படுகிறது என்பதை எடுத்துரைக்கிறது.

 

மேலும் மற்றொரு வசனத்தில் அல்லாஹ் கூறுகின்றான்: “அல்லாஹ்வின் அன்பிற்காக உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், வழிப்போக்கர்களுக்கும், உதவி கேட்போருக்கும் தமது செல்வத்தை வழங்குவோரே உண்மையான நன்மையாளர்கள்.” (அல்குர்ஆன் 2: 177) தமக்குத் தேவை இருக்கும்போதும் பிறருக்கு முன்னுரிமை அளிப்பதே மனிதநேயம் ஆகும். “தாமே தேவையுடையவர்களாக இருந்தாலும், பிறருக்கு முன்னுரிமை அளிப்பார்கள்” (அல்குர்ஆன் 59:9) என்று அல்லாஹ் கூறுகின்றான். மதீனாவின் அன்ஸாரிகள் மக்கா முஹாஜிர்களுக்குச் செய்த தியாகத்தை இந்த வசனம் பாராட்டுகிறது.

  

மனிதாபிமானமற்ற நாடுகள்: மனிதாபிமானமற்ற முறையில் ஓர் இனத்தையே அழிக்க வேண்டுமென்ற கெடுநோக்கில் ஒரு நாட்டின் மீது எந்தவித முன்னறிவிப்புமின்றிப் போர் தொடுத்தல், அவர்கள்மீது திடீர்த்தாக்குதல் தொடுத்தல், பிள்ளைகளைக் குறி வைத்துத் தாக்குதல், மருத்துவமனைகள்மீது தாக்குதல் தொடுத்தல், உணவும் தண்ணீரும் கிடைக்கவிடாமல் பசியில் வாட்டுதல் உள்ளிட்ட வன்செயல்களைத் தொடர்ந்து செய்துவருகின்ற இஸ்ரேல், அமெரிக்கா இருநாட்டு அதிபர்களும் மனித இனத்தைச் சார்ந்தவர்கள்தாமா என்று கேட்கத் தோன்றுகிறது. தயாரித்த ஆயுதங்களை விற்பனை செய்யவும் தம் பலத்தைக் காட்டவும் அப்பாவி முஸ்லிம்களைக் கொல்லுதலும் அண்டை நாடுகளுக்கிடையே போர் மூளச் செய்வதும் எந்த விதத்தில் நியாயம்?

 

நபிமொழிகள் கூறுகின்றன: “ஓர் அடியான் தன் சகோதரனுக்கு உதவிக் கொண்டிருக்கும் வரை, அல்லாஹ் அவனுக்கு உதவி செய்துகொண்டே இருப்பான்” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். (முஸ்லிம்: 2699) “கருணை காட்டுவோருக்கு அருளாளன் கருணை காட்டுவான். பூமியில் உள்ளவர்களிடம் கருணையுடன் நடந்து கொள்ளுங்கள்; வானத்தில் இருப்பவன் உங்கள்மீது கருணை காட்டுவான்” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள் (திர்மிதீ: 1924). ஆக இந்த இரண்டு நபிமொழிகளும் பிறருக்கு நாம் உதவி செய்வதோடு, பிறர் மீது மனிதநேயத்தோடும் கனிவோடும் நடந்துகொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றன.

 

மேலும் ஒரு நபிமொழி, சமுதாயத்தில் நலிவுற்றோருக்கும் விதவைகளுக்கும் நாம் உதவி செய்வதே அல்லாஹ்வின் பாதையில் அல்லும் பகலும் அறப்போர் புரிவதைவிட அல்லது தொழுது, நோன்பு நோற்பதைவிடச் சிறந்தது என்று பகர்கிறது. இதோ அந்த நபிமொழி: “(கணவனை இழந்த) கைம்பெண்ணுக்காகவும் ஏழைக்காகவும் பாடுபடுகின்றவர், அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிபவரைப் போன்றவர் ஆவார் அல்லது இரவில் நின்று வணங்கிப் பகலில் நோன்பு நோற்பவரைப் போன்றவர் ஆவார்” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். (புகாரீ: 5353)

 

மனித நேயத்தோடும் மனிதாபிமானத்தோடும் பிறருக்காக நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் உயர்ந்தோன் அல்லாஹ்வின் பார்வையில் எவ்வளவு உயர்வைப் பெறுகின்றன என்பதை எண்ணிப் பார்க்கும்போது, அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் மனித சமுதாயத்தை எந்த அளவிற்கு நேசித்துள்ளார்கள் என்பதை உணர முடிகிறது. ஆகவே அத்தகைய உணர்வை அல்லாஹ் நமக்கும் வழங்கி, மனிதர்களை நேசித்து, அதன்மூலம் அதீத நன்மைகளை ஈட்டிக்கொள்ளும் நற்பாக்கியத்தை நல்குவானாக. ‘மனிதனை நேசிப்பதே உயர்ந்த மனிதாபிமானம்’ என்ற உண்மையை நம் வாழ்வில் நடைமுறைப்படுத்துவோமாக.   

==============








திங்கள், 10 ஆகஸ்ட், 2026

மாற்றப்பட்ட சட்டங்கள்

   

-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.

இமாம் மதீனா பள்ளிவாசல், பட்டினம்பாக்கம், சென்னை-28

 

இன்றையக் காலத்தில் நபிமொழிகள் பல்வேறு மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன. அதை வாங்கிப் படிப்போர் பலர், வெறுமனே மொழிபெயர்க்கப்பட்ட ஹதீஸ்களை வாசித்துவிட்டு, அதை அப்படியே செயல்படுத்த முனைகின்றனர். அவர்கள் அவ்வாறு செயல்படுவதற்கு முன், ஹதீஸ்துறையில் உள்ள நாசிக், மன்சூக் குறித்து அறிந்துகொள்வது அவசியமாகும். இல்லையேல் தவறாகச் செயல்பட்ட குற்றத்திற்கு ஆளாக நேரிடும். எனவே அவர்கள் புதிதாக ஒன்றைச் செயல்படுத்துமுன்னர் அது குறித்து ஆலிம்களிடம் கேட்டறிந்து செயல்பட வேண்டும்.    

 

திருக்குர்ஆனுக்குப் பிறகு, இஸ்லாமியச் சட்டவிதிகளின் (ஷரீஅத்) இரண்டாவது அடிப்படை ஆதாரமாக நபிவழி (ஸுன்னா) திகழ்கிறது. அது குர்ஆனின் சட்டங்களைத் தெளிவுபட விளக்கிச் சொல்கிறது; சுருக்கமாகக் கூறப்பட்டவற்றை விரிவாக எடுத்துரைக்கிறது; பொதுவான சட்டங்களைச் சிறப்பித்துக் காட்டுகிறது; முழுமையாகக் கூறப்பட்டவற்றை வரையறுக்கிறது.

 

நபிமொழிகளில் “நாசிக், மன்சூக்” (புதிய சட்டம், நீக்கப்பட்ட பழைய சட்டம்) பற்றிய கலையை அறிதல் கட்டாயமாகும். இது, பின்னர் கூறப்பட்ட செய்தியின் (ஹதீஸ்) மூலம் அதன் முந்தைய சட்டம் நீக்கப்பட்டுள்ளதா என்பதை ஆராயும் கலையாகும். இந்தக் கலையின் முக்கியத்துவம் என்னவெனில், ஹதீஸ்களுக்கிடையே வெளிப்படையாகத் தோன்றும் முரண்பாடுகளை நீக்குவது, இஸ்லாமியச் சட்டத்தின் படிப்படியான வளர்ச்சியைப் புரிந்துகொள்வது, மேலும் இறுதியாக நிலைபெற்ற ஷரீஅத் சட்டங்களை அறிந்து கொள்வது ஆகியனவாகும். எனவே, ஒரு ஃபகீஹ் (மார்க்கச் சட்ட அறிஞர்), முஹத்திஸ் (ஹதீஸ் அறிஞர்), முஃப்தி (மார்க்கத் தீர்ப்பு வழங்குபவர்) ஆகியோருக்கு இன்றியமையாத கலைகளுள் இதுவும் ஒன்றாகும் என அறிஞர்கள் கருதுகின்றனர்.

 

நாசிக், மன்சூக்: ‘நஸ்க்' என்ற அரபுச் சொல்லுக்கு, நீக்குதல், மாற்றுதல் அல்லது இடம்பெயர்த்தல் முதலான பொருள்கள் உள்ளன. அல்லாஹ் கூறுகிறான்: “நாம் எந்த வசனத்தை நீக்கினாலும் அல்லது அதை மறக்கச் செய்தாலும், அதைவிடச் சிறந்ததை அல்லது அதற்கு ஒப்பானதைக் கொண்டு வருகிறோம்.” (அல்குர்ஆன் 2: 106) பின்னர் கூறப்பட்ட ஓர் ஆதாரத்தின் மூலம், அதற்குமுன் இருந்த ஷரீஅத்தின் பழைய சட்டத்தை நீக்கக்கூடிய புதிய சட்டமே ‘நாசிக்’ எனப்படும். பின்னர் கூறப்பட்ட ஓர் ஆதாரத்தின் காரணமாக, இதுவரை செயல்படுத்தப்பட்டுவந்த நீக்கப்பட்ட பழைய சட்டமே ‘மன்சூக்’ என அழைக்கப்படுகிறது. ஹதீஸ்கலையில் இது தொடர்பாகக் கூறும்போது, பின்னர் வந்த ஹதீஸ் ‘நாசிக்’ (நீக்கும் ஹதீஸ்) என்றும், அதற்கு முன் இருந்து வந்த ஹதீஸ் ‘மன்சூக்’ (நீக்கப்பட்ட ஹதீஸ்) என்றும் அழைக்கப்படுகிறது.

 

இந்தக் கலையின் முக்கியத்துவம்: ஹதீஸ்களுக்கு இடையே வெளிப்படையாகத் தோன்றும் முரண்பாடுகளை நீக்குதல், ஷரீஅத்தின் இறுதியான சட்டத் தீர்ப்பை அறிதல், இஸ்லாமியச் சட்டம் படிப்படியாக அருளப்பட்ட முறையைப் புரிந்துகொள்ளுதல், நபிவழியை (ஸுன்னாவை)த் தவறாகப் புரிந்துகொள்வதிலிருந்து பாதுகாத்தல், சரியான சட்டத் தீர்ப்புகளைப் பெறுவதில் இஜ்திஹாத் செய்யும் அறிஞருக்கு உதவுதல், ஸுன்னாவைப் பற்றிச் சிலர் எழுப்பும் சந்தேகங்களுக்குத் தக்க பதிலளித்தல் முதலானவை இந்தக் கலையின் முக்கியத்துவங்கள் ஆகும்.

 

 

“நாசிக், மன்சூக் பற்றிய அறிவைப் பெறாமல் ஒருவர் மார்க்கத் தீர்ப்பு (ஃபத்வா) வழங்கக் கூடாது” என்று இமாம் அஹ்மத் ரஹிமஹுல்லாஹ் கூறியுள்ளார்கள்.  அலீ பின் அபீதாலிப் ரளியல்லாஹு அன்ஹு ஒரு நீதிபதியிடம், “நாசிக், மன்சூக் ஆகியவற்றை நீர் அறிந்திருக்கின்றீரா?” என்று  கேட்டார்கள். அவர், “இல்லை” என்று கூறினார். அதற்கு அலீ ரளியல்லாஹு அன்ஹு, “நீரும் அழிந்துவிட்டீர்; மற்றவர்களையும் அழிவுக்குள்ளாக்கிவிட்டீர்” என்று கூறினார்கள்.

 

மன்சூக் என்பதற்கான நிபந்தனைகள்: இரண்டு ஹதீஸ்களும் சான்றுமிக்கதாக (ஸஹீஹ் அல்லது ஏற்றுக்கொள்ளத்தக்கதாக) நிரூபிக்கப்பட்டிருக்க வேண்டும். அவற்றுக்கிடையே உண்மையான முரண்பாடு இருக்க வேண்டும். இரண்டு ஹதீஸ்களுக்கும் இடையில் ‘ஒருமித்த கருத்தை’ (தத்பீக்) ஏற்படுத்த இயலாத நிலை இருக்க வேண்டும். எது முற்பட்டது, எது பிற்பட்டது என்பது தெளிவாக அறியப்பட்டிருக்க வேண்டும். ஆக மேற்கண்ட நிபந்தனைகள் உறுதியாக நிறைவேறிய பிறகே ஒரு ஹதீஸ் ‘மன்சூக்’ (நீக்கப்பட்ட பழைய சட்டம்) என்று கூற அனுமதிக்கப்படுகிறது.

 

ஒரு ஹதீஸ் குறிப்பிட்ட சட்டமாகவும், மற்றொன்று பொதுவான சட்டமாகவும், அல்லது ஒன்று பொதுவான (முத்லக்) சட்டமாகவும் மற்றொன்று வரையறுக்கப்பட்ட (முகய்யத்) சட்டமாகவும் இருக்கக் கூடாது. ஏனெனில், இத்தகைய நிலை நஸ்க் (நீக்குதல்) இல்லை; மாறாக இரண்டு ஆதாரங்களையும் ஒன்றிணைத்து விளங்கிக் கொள்வதற்கான (ஜம்உ) வழிமுறையாகும். இதனால்தான் அறிஞர்கள் கூறியுள்ளனர்: இரண்டு ஆதாரங்களுக்கும் இடையில் ‘ஒருமித்த கருத்தை’ ஏற்படுத்துவது (தத்பீக்) தர்ஜீஹ் - முன்னிலைப்படுத்துவதைவிடச் சிறந்தது; முன்னிலைப்படுத்துதல், நஸ்க் (நீக்குதல்) என்று தீர்ப்பளிப்பதைவிடச் சிறந்தது.

நஸ்கை எவ்வாறு அறிவது: பின்வரும் வழிகளில் ஏதேனும் ஒன்றின் மூலம் ஒரு சட்டம் நாசிக், மன்சூக் என்பதைக் கண்டறியலாம்:

 

1. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நேரடியாக அறிவித்திருப்பது. சான்றாக, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், “நான் உங்களுக்கு கப்ருகளை (அடக்கத்தலங்களை)த் தரிசிப்பதைத் தடை செய்திருந்தேன். இப்போது அவற்றைத் தரிசியுங்கள்; ஏனெனில் அவை மறுமையை நினைவூட்டுகின்றன” என்று கூறினார்கள். (ஸஹீஹ் முஸ்லிம்) இது, முந்தைய தடையைப் பின்னர் வந்த கட்டளை நீக்கியுள்ளது என்பதைத் தெளிவாகக் காட்டும் வெளிப்படையான ஆதாரமாகும். இவ்விடத்தில் மற்றொரு ஹதீஸையும் சான்றாகக் காட்டுவது மக்கள் மத்தியில் உள்ள குழப்பத்தை நீக்கும். அதாவது பெண்கள் கப்ருகளைச் சந்திக்கச் செல்லலாமா என்ற வினாவிற்கு விடையாக அன்னை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அறிவித்துள்ள செய்தி உள்ளது.

 

அப்துல்லாஹ் பின் அபீமுலைகா ரஹிமஹுல்லாஹ் அறிவித்துள்ளதாவது: ஒரு நாள் ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா மக்பரா (பொதுஅடக்கவிடம்) பகுதியிலிருந்து வந்தார்கள். அப்போது நான் அவரிடம், “இறைநம்பிக்கையாளர்களின் அன்னையே! எங்கிருந்து வருகிறீர்?” என்று வினவினேன். “என் சகோதரர் அப்துர் ரஹ்மான் பின் அபீபக்ர் ரளியல்லாஹு அன்ஹு உடைய மண்ணறைக்குச் சென்றுவிட்டு அங்கிருந்து வருகிறேன்” என்றார்கள். “(பெண்கள்) மண்ணறைக்குச் செல்வதை அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தடுத்திருக்கவில்லையா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “ஆம், (தொடக்கத்தில்) தடுத்திருந்தார்கள்; பிறகு அவற்றைச் சந்திக்கச் செல்லுமாறு ஏவினார்கள்” என்று விடையளித்தார்கள். (பைஹகீ: 7207)

 

அதேநேரத்தில் பின்வரும் செய்தி பழைய சட்டம் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். இதற்காகச் சண்டை போட்டுக்கொண்டோ வாதம் செய்துகொண்டோ இருக்கக் கூடாது. இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அறிவித்துள்ளதாவது: அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மண்ணறையைத் தரிசனம் (ஸியாரத்) செய்யும் பெண்களைச் சபித்தார்கள். (திர்மிதீ: 1056, இப்னுமாஜா:1576/ 1564)  இஸ்லாத்தின் தொடக்கக் காலத்தில், மக்கள் அறியாமைக் காலப் பழக்கவழக்கங்களுடன் மீண்டும் தொடர்பு கொள்ளக்கூடும் என்ற அச்சத்தின் காரணமாக கப்ருகளைத் தரிசிப்பது தடைசெய்யப்பட்டது. பின்னர் இஸ்லாமிய நம்பிக்கை உறுதியாக நிலைபெற்றபோது, அதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

 

2. நபித்தோழர்கள் நேரடியாக அறிவித்திருப்பது: சான்றாக, ஜாபிர் ரளியல்லாஹு அன்ஹு கூறியுள்ளார்கள்: “நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடமிருந்து இறுதியாக நிலைபெற்ற நடைமுறை, நெருப்பில் சமைக்கப்பட்ட உணவை உண்டதற்காக உளூச் செய்வதை விட்டுவிடுவதாகும்.” (அபூதாவூத், திர்மிதீ) அதாவது சமைத்த உணவைச் சாப்பிட்டால் அதற்காக உளூச் செய்யத் தேவையில்லை.

 

3. கால வரிசையை (வரலாற்றை) அறிதல்: இரண்டு ஹதீஸ்களில் எது முன்னர் கூறப்பட்டது, எது பின்னர் கூறப்பட்டது என்பதை வரலாற்று ஆதாரங்களின் மூலம் அறிந்துகொள்வதன் வழியாகவும் நஸ்க் (நீக்கம்) உறுதிப்படுத்தப்படுகிறது. 4. அறிஞர்களின் ஒருமித்த கருத்து (இஜ்மாஉ): இரண்டு ஹதீஸ்களில் ஒன்று மற்றொன்றை நீக்கிவிட்டதாக அறிஞர்கள் ஒருமனதாக ஏற்றுக்கொண்டால், அதுவும் நஸ்கை அறியும் ஒரு வழியாகும்.

 

நபியவர்கள்மூலமே சட்டங்கள் மாற்றப்பட்டதற்கு வேறு சில சான்றுகளையும் பார்க்கலாம். குர்பானி இறைச்சியை மூன்று நாள்களுக்கு மேல் சேமித்து வைத்தல் குறித்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்: “குர்பானி இறைச்சியை மூன்று நாள்களுக்கு மேல் சேமித்து வைப்பதை நான் உங்களுக்குத் தடை செய்திருந்தேன்.” பின்னர் அவர்கள் கூறினார்கள்: “இப்போது நீங்கள் விரும்பிய அளவு சேமித்து வைத்துக்கொள்ளுங்கள்.” (ஸஹீஹ் முஸ்லிம்) நஸ்க் (நீக்கம்) ஏற்பட்ட காரணம், ஆரம்பத்தில் ஏழை, எளிய மக்கள் அதிகமாக இருந்ததால், அனைவருக்கும் இறைச்சி கிடைக்க வேண்டும் என்பதற்காக இந்தத் தடை விதிக்கப்பட்டது. பின்னர் அந்தத் தேவை நீங்கியபோது, இறைச்சியைச் சேமித்து வைக்க அனுமதி வழங்கப்பட்டது.

 

மற்றொரு சான்று, குறிப்பிட்ட பாத்திரங்களில் பழங்களை ஊறவைத்தல் குறித்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்: “தோல் பையைத் தவிர மற்ற பாத்திரங்களில் பழங்களை ஊறவைக்க வேண்டாம் என்று நான் தடை செய்திருந்தேன். இப்போது எந்தப் பாத்திரத்திலும் ஊறவைத்துக்கொள்ளுங்கள்; ஆனால் போதை தரும் எதையும் அருந்தாதீர்கள்.” (ஸஹீஹ் முஸ்லிம்) எனவே, குறிப்பிட்ட சில பாத்திரங்களில் ஊறவைக்கக் கூடாது என்ற தடை நீக்கப்பட்டது. ஆனால் ‘போதை தரும் பானங்களை அருந்துதல்’ எனும் தடை நீக்கப்படவில்லை; அது நிலையான சட்டமாகவே உள்ளது.

மற்றொரு சான்று, தொடக்கத்தில் ஆஷூரா நோன்பு கட்டாயமாக இருந்தது. பின்னர் ரமளான் நோன்பு கட்டாயமாக்கப்பட்டபோது, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்: “விரும்புபவர் அதை நோற்கலாம்; விரும்பாதவர் அதை விட்டுவிடலாம்.” (புகாரீ, முஸ்லிம்) இதன் மூலம் ஆஷூரா நோன்பு கட்டாய நிலையிலிருந்து விரும்பத்தக்க (ஸுன்னத்தான) வழிபாடாக மாற்றப்பட்டது.

 

மற்றொரு சான்று, ஹதீஸ்களை எழுதுதல் குறித்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்: “என்னிடமிருந்து (குர்ஆனைத் தவிர வேறு எதையும்) எழுதாதீர்கள். யார் குர்ஆனைத் தவிர வேறு எதையாவது என்னிடமிருந்து எழுதியிருந்தாரோ, அவர் அதை அழித்துவிடட்டும்.” (ஸஹீஹ் முஸ்லிம்) பின்னர், அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள்: “அல்லாஹ் தன் தூதருக்கு மக்காவை வெற்றியளித்தபோது, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மக்களிடையே எழுந்து அல்லாஹ்வைப் புகழ்ந்து உரையாற்றினார்கள்... அப்போது யமன் நாட்டைச் சேர்ந்த அபூஷாஹ் என்பவர் எழுந்து, “அல்லாஹ்வின் தூதரே! இதை எனக்காக எழுதித் தாருங்கள்” என்று கேட்டார். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் “அபூஷாஹுக்காக எழுதிக் கொடுங்கள்” என்று கூறினார்கள். (புகாரீ: 112, ஸஹீஹ் முஸ்லிம்: 1355) இந்த ஹதீஸ், தொடக்கத்தில் ஹதீஸ்களை எழுத வேண்டாம் என்ற தடை, பின்னர் அனுமதிக்கப்பட்டது என்பதற்கு அறிஞர்கள் எடுத்துக்காட்டும் முக்கிய ஆதாரங்களுள் ஒன்றாகும்.

 

மேலும், அப்துல்லாஹ் இப்னு அம்ர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களுக்கும் ஹதீஸ்களை எழுதுவதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அனுமதி வழங்கினார்கள். பெரும்பாலான அறிஞர்களின் கருத்துப்படி, ஆரம்பத்தில் ஹதீஸ்களை எழுதத் தடை விதிக்கப்பட்டதற்குக் காரணம், ஹதீஸ்களும் குர்ஆனும் ஒன்றோடொன்று கலந்துவிடக்கூடும் என்ற அச்சமாகும். பின்னர் அந்த அச்சம் நீங்கியபோது, ஹதீஸ்களை எழுதுவதற்கு அனுமதி வழங்கப்பட்டது. எனவே, ஆரம்பத் தடை பின்னர் வந்த அனுமதியால் நீக்கப்பட்டது.

 

மற்றொரு சான்று, ‘முத்ஆ (தற்காலிகத்) திருமணம்’ ஆகும். சில போர்களின்போது ஏற்பட்ட அவசரத் தேவையைக் கருத்தில் கொண்டு, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் முத்ஆ திருமணத்திற்குத் தற்காலிகமாக அனுமதி வழங்கினார்கள். பின்னர் அவர்கள் கூறினார்கள்: "நான் உங்களுக்குப் பெண்களை முத்ஆ திருமணம் செய்ய அனுமதி வழங்கியிருந்தேன். ஆனால் அல்லாஹ் அதை மறுமை நாள் வரை நிரந்தரமாகத் தடைசெய்துவிட்டான்.” (ஸஹீஹ் முஸ்லிம்) எனவே, முத்ஆ திருமணம் நிரந்தரமாகத் தடைசெய்யப்பட்டதாக இஸ்லாமியச் சட்டம் நிலைபெற்றது.

 

எது நாசிக், எது மன்சூக்: பொதுவான சட்டத்தைச் சிறப்பித்துக் கூறுதல் (தக்ஸீஸ்), வரையறையற்ற சட்டத்தை வரையறுத்துக் கூறுதல் (தக்யீத்), சூழ்நிலைகளின் வேறுபாடு, சம்பந்தப்பட்ட நபர்களின் வேறுபாடு, காலம் மற்றும் இடத்தின் வேறுபாடு  முதலான காரணங்களுக்காக இரண்டு ஹதீஸ்களுக்கு இடையே காணப்படும் வேறுபாடு நஸ்க் (நீக்கப்பட்டது) என்பதைக் குறிக்காது. எனவே, இரண்டு ஹதீஸ்களையும் ஒன்றிணைத்து விளக்குவது (ஜம்உ) இயலாதபோதுதான் நஸ்க் என்று கூறப்பட வேண்டும். இதனால்தான் இமாம் ஷாஃபிஈ ரஹிமஹுல்லாஹ் கூறினார்கள்: "இரண்டு ஹதீஸ்களையும் செயல்படுத்துவதற்கு ஏதேனும் வழி இருக்குமானால், அவற்றில் ஒன்றை விட்டுவிடுவது அனுமதிக்கப்படாது.”

 

அதற்கான சான்றுகள்: 1. நோன்பாளி முத்தமிடுதல்: (அ) அனுமதித்த ஹதீஸ்: ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா கூறுகிறார்கள்: நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நோன்பு நோற்றிருந்தபோதும் மனைவியை முத்தமிடுவார்கள்; அணைத்துக் கொள்வார்கள். ஆனால், உங்களில் தமது உணர்ச்சியை மிக அதிகமாகக் கட்டுப்படுத்தக்கூடியவராக அவர்கள் இருந்தார்கள். (புகாரீ: 1927, முஸ்லிம்: 1106)

 

(ஆ) தடை செய்த ஹதீஸ்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள்: ஓர் இளைஞர் “நோன்பு நோற்றுள்ளவர் (தம் மனைவியை) முத்தமிடலாமா?” என்று கேட்டார். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் “கூடாது” என்றார்கள். பின்னர் ஒரு முதியவர் கேட்டபோது,  அனுமதி அளித்தார்கள். (அபூதாவூத்: 2387) இது சூழ்நிலை மற்றும் வினாத் தொடுப்பவரின் வேறுபாடு காரணமாகக் கூறப்பட்ட பதிலாகும். உணர்ச்சியைக் கட்டுப்படுத்தக்கூடிய முதியவருக்கு அனுமதி; இளைஞருக்குத் தடை.

 

2. பெற்றோருக்குக் கீழ்ப்படிதல்- ஜிஹாத்: ஒருவர் ஜிஹாதுக்குச் செல்ல அனுமதி கேட்டார். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், “உன் பெற்றோர் உயிருடன் இருக்கிறார்களா?” என்று  கேட்டார்கள். அவர், “ஆம்” என்றார். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் “அப்படியானால், அவர்களுக்குச் சேவை செய்வதிலேயே நீ  ஜிஹாத் செய்” என்று கூறினார்கள். (புகாரீ: 3004; முஸ்லிம்: 2549) ஆனால், வேறு சிலருக்கு  ஜிஹாதில் கலந்து கொள்ள அனுமதி வழங்கினார்கள். ஆகவே இது வினாத் தொடுப்பவரின் குடும்பச் சூழ்நிலையைப் பொருத்து வழங்கப்பட்ட மாறுபட்ட தீர்ப்பாகும். எனவே இது நாசிக், மன்சூக் சட்டத்தில் வராது. இது போன்று பல்வேறு சான்றுகள் உள்ளன.

 

நாசிக், மன்சூக் அறிவைப் பெறுவதன் பயன்கள்: ஷரீஅத்தின் இறுதியான சட்டத்தை அறிந்துகொள்ள முடியும்; இஸ்லாமியச் சட்டத்தின் படிப்படியான வளர்ச்சியைப் புரிந்துகொள்ள முடியும்; ஹதீஸ்களுக்கு இடையே தோன்றும் வெளிப்படையான முரண்பாடுகளை நீக்க முடியும்; சரியான சட்ட முடிவுகளைப் பெறும் திறன் (இஸ்தின்பாத்) மேம்படும்; ஃபத்வாக்கள் சரியானவையாக அமையும்; ஸுன்னாவைப் பற்றிய சந்தேகங்களுக்கு உரிய பதிலளிக்க முடியும்; இஸ்லாமிய ஷரீஅத்தின் துல்லியத் தன்மையின் மீது நம்பிக்கை அதிகரிக்கும்.

 

அறிஞர்களின் கருத்துகள்: இமாம் அஸ்-ஸுஹ்ரீ ரஹிமஹுல்லாஹ் கூறினார்கள்: “நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஹதீஸ்களில் நாசிக், எது, மன்சூக் எது என்பதை அறிந்துகொள்வதே ஃபிக்ஹ் அறிஞர்களுக்கு மிகவும் கடினமான செயலாக இருந்தது.” இமாம் அஹ்மத் ரஹிமஹுல்லாஹ் கூறினார்கள்: “நாசிக், மன்சூக் பற்றிய அறிவு, ஹதீஸ் கலையில் மிகவும் உயர்ந்த அறிவுகளுள் ஒன்றாகும்.” இமாம் நவவீ ரஹிமஹுல்லாஹ் கூறினார்கள்: “இரண்டு ஆதாரங்களையும் ஒன்றிணைக்க இயலாத நிலை ஏற்பட்டால், அல்லது அவற்றின் காலவரிசை உறுதிப்படுத்தப்பட்டால் மட்டுமே நஸ்க் (நீக்கம்) என்று கூறப்பட வேண்டும்.” ஆகவே எல்லாவற்றையும பொத்தாம் பொதுவாக ‘நாசிக்’ என்ற வகைப்பாட்டில் கொண்டுவந்துவிடக்கூடாது.

 

நிறைவுரை: ஆக இந்தக் கலை குறித்து நீண்ட விளக்கங்கள் உள்ளன. அவை அனைத்தையும் சிறியதொரு கட்டுரையில் சொல்லிவிட இயலாது. எனவே மொழிபெயர்ப்புகளை மட்டும் வாசித்துவிட்டு, ‘நான் ஹதீஸின்படி செயல்படுகிறேன்’ என்று தனி மனிதர் ஒருவர் முடிவெடுக்கக்கூடாது. அதற்குமுன் ஆலிம்களிடம் விளக்கம் கேட்டுத் தெளிவு பெற்றுக் கொள்ள வேண்டும். ஆலிம்களுள் சிலர்கூட இது குறித்த போதிய ஞானமின்றிச் சட்டங்களை மாற்றிச் சொல்லக்கூடிய நிலை உள்ளது. எனவே ஒவ்வொருவரும் இது குறித்து அறிந்துகொண்டு செயல்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். அத்தகைய நல்வாய்ப்பை அல்லாஹ் நம் அனைவருக்கும் வழங்குவானாக.

===========================