-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.
-----------------------------------------------------------------------------
"நாடு உனக்கு என்ன செய்தது என்று கேட்காதே; நாட்டிற்காக நீ என்ன செய்தாய் என்று கேள்'' எனும் அமெரிக்க ஜனாதிபதி ஜான் கென்னடியின் கூற்றுக்கேற்ப ஈன்றெடுத்த ஊருக்கும் ஊர் மக்களுக்கும் தம்மால் இயன்ற தொண்டுகளைச் செய்வது ஒவ்வொருவர்மீதும் கடமையாகும். அந்த வகையில் கடலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள பரங்கிப்பேட்டை ஊர்மக்கள் தமது ஊர் நலனுக்காகப் பல்வேறு சமூகப் பணிகளைப் படைத்தோனின் திருப்தியையும் உவப்பையும் நாடிச் செய்துவருவது மனதாரப் பாராட்டத்தக்கது.
பாக்கியாத் அரபுக் கல்லூரியில் ஓதிப் பட்டம்பெற்ற முப்பதுக்கும் மேற்பட்ட பாகவிகள் சென்ற மாதம் (ஜூலை 2018) பரங்கிப்பேட்டைக்குச் சென்றிருந்தோம். ஒருவரையொருவர் சந்தித்துப் பழைய நினைவுகளைப் புதுப்பித்துக்கொள்வதும் நபித்தோழர் உக்காஷா (ரளி) அவர்களின் அடக்கவிடத்தைத் தரிசிப்பதுமே பயணத்தின் நோக்கம். அச்சமயத்தில் அவ்வூர்க்காரர்களான அ.பா. கலீல் அஹ்மது பாகவி, முஹம்மது ஃபாரூக் பாகவி ஆகிய இருவரும் அவ்வூர்த் தலைவரையும் சமூக சேவகர்களையும் சந்தித்து உரையாடும் நிகழ்வுக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். அப்போதுதான் அவர்கள் அவ்வூருக்காகச் செய்துவரும் தன்னலமற்ற சேவைகள் குறித்து எங்களுக்குத் தெரிய வந்தது.
"தர்மம் தலை காக்கும்'' எனும் முதுமொழிக்கேற்பவும் "தர்மம் சோதனைகளை நீக்கும்'' எனும் நபி (ஸல்) அவர்களின் பொன்மொழிக்கேற்பவும் அவ்வூர் மக்கள் பல்வேறு வகையான தர்மங்களைச் செய்வது வியப்பாக இருந்தது.
ஒரு பிடி அரிசித் திட்டம்: தர்மம் செய்வது ஒரு வகை; தர்மம் செய்யத் தூண்டுவது மற்றொரு வகை. அதே நேரத்தில் மக்கள் மத்தியில் ஒரு திட்டத்தைச் செயல்படுத்த வேண்டுமெனில் பலரும் எளிதில் பங்குகொள்ளுமாறு அத்திட்டம் இருக்க வேண்டும். அந்த வகையில் "ஒரு பிடி அரிசித் திட்டம்' அனைவருக்கும் எளிதானது. நீங்கள் உங்களுக்காகச் சமைக்க அரிசி எடுக்கும்போது, ஏழைகளுக்காக இதில் ஒரு பிடி அரிசியைப் போட்டுவிடுங்கள் என்ற கோரிக்கையோடு வீட்டுக்கொரு வாளி கொடுக்கப்படுகிறது. அவர்களும் இன்முகத்தோடு அதை வாங்கி, அதில் ஒவ்வொரு நாளும் ஒரு பிடி அரிசியைப் போட்டு, ஒரு மாதத்தில் அது நிறைந்ததும் சமூகத் தொண்டர்கள் அதைப் பெற்றுச் சென்று, வகை பிரித்து, ஏழ்மையிலும் வாய்திறந்து கேளாமல் மௌனமாக இருப்போரின் நிலையறிந்து தர்மம் செய்யப்படுகிறது. அதைப் பெறுவோரின் வெட்க உணர்வுகளைக் காணக்கூடாது என்பதற்காக, இரவு நேரத்தில் அவரவரின் இல்லத்திற்குமுன் வைத்துவிட்டு வந்துவிடுகின்றனர். விடிந்ததும் அவர்கள் அதை எடுத்துக்கொள்கின்றார்கள். இது ஒவ்வொரு மாதமும் தொய்வின்றி நடைபெற்று வருகிறது.
தம் ஊரிலுள்ள ஏழைகளுக்குப் போக, எஞ்சியதைப் பக்கத்து ஊரிலுள்ள இருளர் இனத்தாருக்கும் ஏனையோருக்கும் வழங்குகின்றார்கள். "அவர்கள் ஏழைகளுக்கு உணவளிக்கத் தூண்ட மாட்டார்கள்'' என்று நரகவாசிகள் குறித்து இறைவன் திருக்குர்ஆனில் இயம்புகின்றான். ஆனால் "தாம் தர்மம் செய்வதோடு பிற மக்களையும் தர்மம் செய்யத் தூண்ட வேண்டும்'' என்ற அடிப்படையில் உருவானதே இத்திட்டம் என்கிறார் "தர்மம் செய்வோம் குழுமத்தின்'' செயலாளர் ஹாஜி முஹம்மது அலீ.
சிறுவர் உண்டியல் திட்டம்: சிறுவர்-சிறுமியரின் இளநெஞ்சில் தர்மச் சிந்தனையை விதைத்து விட்டால் பிற்காலத்தில் பிறருக்கு உதவும் குணம் தானாகவே வந்துவிடும் என்பதை மனதில்கொண்டு, ஒவ்வொரு வீட்டிலும் உள்ள சிறுவர்-சிறுமியருக்கு ஓர் உண்டியல் கொடுத்து, ஒவ்வொரு நாளும் கிடைக்கின்ற "பாக்கெட் மணி'யி-ருந்து ஒவ்வொரு ரூபாய் அதில் போட்டுவிட வேண்டும். மாதம் ஒரு முறை அவ்வுண்டியல் காசுகள் ஒன்று சேர்க்கப்பட்டு, அவ்வூரிலுள்ள ஏழைகளுக்குப் பங்கிட்டு வழங்கும் சேவையை அவ்வூர் இளைஞர்கள் செய்து வருகின்றார்கள்.
ஆடையற்றோருக்கு ஆடை: "யார் ஆடையில்லாத ஒரு முஸ்லிமுக்கு ஆடை வழங்கினாரோ அவருக்கு அல்லாஹ் சொர்க்கத்தின் பச்சை நிற(ப் பட்டு) ஆடைகளை அணிவிப்பான்'' என்ற நபிமொழிக்கேற்ப ஆடையற்றோருக்கு ஆடை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஆடை வழங்குவோர் கிழிசல் இல்லாத ஆடையை அல்லது புதிய ஆடையை வழங்க வேண்டும். அவ்வாடைகளை ஒருங்கிணைத்து, தேவைப்படுவோருக்கு வழங்கப்பட்டு வந்தது. இத்திட்டம் இப்போது மிகுந்த வளர்ச்சியடைந்துள்ளது. ஆடைகளுக்கென ஒரு கடை திறந்து, சேகரித்த ஆடைகளை அங்கு வைத்துவிடுகின்றனர். தேவைப்படுவோர் அக்கடைக்குச் சென்று புத்தாடை வாங்கி வருவதைப்போன்றே, தமக்கு விருப்பமான ஆடைகளைத் தேர்வு செய்து எடுத்துக்கொள்கின்றனர். ஆடையை வைப்போர் ஒருபுறம் வைத்துவிட்டுச் செல்கின்றனர். ஆடை தேவைப்படுவோர் மறுபுறம் எடுத்துச் செல்கின்றனர். இதனால் நேரடியாகத் தர்மத்தைப் பெறுவோர் கொள்ளும் நாணஉணர்வும் கூனிக் குறுகும் நிலையும் ஏற்படாமல் மனித உணர்வுகள் மதிக்கப்படுகின்றன.
குருதிக்கொடை: "மூன்றில் நிவாரணம் உண்டு. குருதி குத்தி எடுத்தல், தேனைப் பருகுதல், சூடிட்டுக் கொள்ளுதல். எனினும் என் சமுதாயம் சூடிட்டுக் கொள்வதை நான் தடைசெய்கிறேன்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள். (நூல்: புகாரீ: 5249) இந்நபிமொழிக்கேற்ப மருத்துவ முறைப்படி குருதியை வெளியேற்றுவது உடல் நலத்திற்கு உகந்தது என்பதை அறிய முடிகிறது. முற்கால மக்கள் குருதி குத்தி எடுக்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தார்கள். தற்காலத்தில் மனிதக் குருதி பிற மனிதர்களின் உயிரைக் காக்க உதவுகிறது. அதனடிப்படையில் குருதிக்கொடை வழங்கப்படுகிறது. அந்த வகையில் இவ்வூரில் குருதிக்கொடையாளர்கள் பலர் தயாராக இருக்கின்றார்கள். தன்னார்வலர்கள் சுழல் முறையில் குருதிக்கொடை வழங்கி, மனித உயிர்களைக் காக்க உதவுகின்றார்கள். சுற்று வட்டாரக் கிராமங்களிலிருந்து செல்பேசி வழியாக அழைப்பு வந்ததும், மிகத் துரிதமாகச் செயல்பட்டு, குருதிக்கொடை வழங்கிவருகின்றார்கள்.
பசுமைத் திட்டம்: சுற்றுப்புறச் சூழலைத் தூய்மையாக வைத்துக்கொள்ளவும் தூய காற்று, நன்னீர் கிடைக்கவும் மரங்கள் பெரிதும் உதவுகின்றன. அந்த வகையில் ஊர் முழுக்க மரங்களை நடுவதற்கென "பசுமை ஹாஜி'யாரின் தலைமையில் ஒரு குழு செயல்படுகிறது. தமது ஊர் மட்டுமின்றிப் பக்கத்து ஊர்களுக்கும் அயல்நாடுகளுக்கும் சென்று மரங்களை நட்டுவருகின்றார்கள். இன்று அவ்வூர் செழிப்பாகவும் பசுமையாகவும் வளமாகவும் காணப்படுகிறது.
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரளி) அவர்கள் கூறியதாவது: (ஒரு முறை) நபி (ஸல்) அவர்கள் உம்மு மஅபத் (ரளி) அவர்களது பேரீச்சந் தோப்புக்குச் சென்றார்கள். அவரிடம், "உம்மு மஅபதே! இந்தப் பேரீச்ச மரங்களை நட்டு வைத்தது யார்? முஸ்லிமா அல்லது இறை மறுப்பாளரா?'' என்று கேட்டார்கள். அதற்கு அவர், "இல்லை; ஒரு முஸ்லிம்தான் (நட்டு வைத்தார்)'' என்று விடையளித்தார். நபி (ஸல்) அவர்கள், "முஸ்லிம் ஒரு மரத்தை நட்டுவைத்து, அதிலிருந்து ஒரு மனிதனோ, ஒரு கால்நடையோ, ஒரு பறவையோ உண்டால், மறுமைநாள் வரை அது அவருக்கு ஒரு தர்மமாகவே அமையும்'' என்று கூறினார்கள். (நூல்: புகாரீ: 3162)
இந்த நபிமொழியின் அடிப்படையில், அவர்களின் இச்சேவையால் பெரிதும் ஈர்க்கப்பட்ட பாகவிகள் தமது பங்குக்கு 21 மரங்கள் நடுவதற்கான தொகையைக் கொடுத்து, தங்கள் சார்பாக மரங்களை நடுமாறு கேட்டுக்கொண்டார்கள்.
ஐக்கிய ஜமாஅத் தலைவர் எஸ்.ஓ. சையது ஆரிப் என்பார் இவ்வூரிலுள்ள பதினைந்து பள்ளிவாசல்களுக்கும் ஒரே தலைவராக உள்ளார். அவரின் ஒத்துழைப்போடுதான் மேற்கண்ட சேவைகள் அனைத்தும் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. பள்ளிவாசல் சார்பாக இங்குள்ள நாற்பது விதவைகளுக்கு மாதந்தோறும் ரூ. 1000 உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. பல்வேறு இயக்கங்கள் இவ்வூரில் இருந்தாலும் அனைவரும் ஒரே குடையின்கீழ் செயல்படுகின்றார்கள். சமுதாயத்தில் பிளவையோ குழப்பத்தையோ ஏற்படுத்திவிடக் கூடாது என்ற உணர்வோடு செயல்படுகின்றார்கள்.
ஆக, ஓர் ஊர்மக்கள் தன்னிறைவோடும் மகிழ்ச்சியோடும் வாழ வேண்டுமெனில் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்வதும் தம்மிடம் உள்ளதைப் பிறருக்குப் பகிர்ந்தளிப்பதும் அவசியமாகும். எல்லா ஊராரும் இவ்வூர் மக்களைப் போன்றே ஒருங்கிணைந்து செயல்பட்டால் எல்லோரும் மகிழ்ச்சியோடும் மனநிறைவோடும் வாழலாம்.
==========================================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக