செவ்வாய், 22 செப்டம்பர், 2015

ஆசிரியரை மதிப்போம்!


-மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி எம்.ஏ., எம்.ஃபில்.,

கற்றோரும் கல்லாதோரும் சமமாவார்களா? (39: 9) என்று அல்லாஹ் தன் அருள்மறையில் வினவுகின்றான். அதன்மூலம் மானிடரைக் கற்கத் தூண்டுகின்றான். கற்றோருக்குச் சென்றவிடமெல்லாம் சிறப்பு எனும் மூதுரைக்கேற்ப கல்வியாளர்கள் சென்றவிடமெல்லாம் சிறப்புறுவதையும் மதிக்கப்படுவதையும் காண்கிறோம். கல்வி கற்றோர் ஒவ்வொருவரும் தம் திறமைக்கேற்பவும் ஆர்வத்திற்கேற்பவும் ஒவ்வொரு பணியைத் திறம்படச் செய்துவரும் அதேநேரத்தில் சிலர் தம் வாழ்க்கையைக் கல்விக்காகவே அர்ப்பணிப்பதைக் காண்கிறோம். அவர்கள்தாம் ஆசிரியர்கள். அவர்கள் தாம் கற்ற கல்வியைப் பிறருக்குக் கற்பிக்க வேண்டும் என்ற ஆவலில் வந்தவர்கள்; அவர்கள் தம் வருவாயைக் குறிக்கோளாகக் கொள்ளாது தாம் கற்ற கல்வியைப் பிறருக்குக் கற்பிக்க வேண்டும் என்ற ஒரே இலட்சியத்தில் உள்ளவர்கள்; மாணவர்களின் எதிர்காலத்தைச் செதுக்குபவர்கள்; அதன்மூலம் நாட்டின் முன்னேற்றத்திற்கு அடித்தளமிடுபவர்கள். எனவே அவர்கள் மதிக்கப்பட வேண்டியவர்கள்.

இத்தகைய சிறப்பும் உயர்வும் கொண்ட ஆசிரியர்களை மாணவர்கள் மதிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். ஒருவர் தம் பெற்றோருக்குப்பின் இரண்டாம் பெற்றோராக மதிக்க வேண்டியது ஆசிரியர்களைத்தான். படிக்கின்ற புத்தகத்திற்கும் படித்துக் கொடுக்கின்ற ஆசிரியருக்கும் மரியாதை கொடு; நீ உன் வாழ்வில் உயர்வாய் என்று அடிக்கடி சொல்வதுண்டு.
அடிக்கடி கோபப்படுகின்றார்; அவ்வப்போது அடிக்கின்றார் என்று ஆசிரியர்கள்மீது குற்றச்சாட்டு சொல்வதுண்டு. மாணவர்கள் ஆசிரியரின் சொற்படி கேட்டு நடந்தால், அவர் சொன்னதைப் படித்தால், அவர் சொன்னதை மனனம் செய்தால், அவர் சொன்னபடி வீட்டுப்பாடம் செய்துவந்தால்,  வகுப்பில் சேட்டை செய்யாமல் பாடத்தைக் கூர்மையாகக் கவனித்தால் அவர் ஏன் கோபப்படப் போகிறார்? கோபம் என்பது மனித இயல்பு. ஆசிரியரின் கோபம் மாணவர்களின் நலனைக் கருதித்தானே தவிர அவர்கள்மீது வெறிகொண்டு அடிப்பதற்காகவோ கடுமையாகத் தண்டிப்பதற்காகவோ அல்ல.

ஒவ்வோராண்டும் செப்டம்பர் 5ஆம் தேதி ஆசிரியர் நாளாகக் கொண்டாடப்படுகிறது. டாக்டர் இராதா கிருஷ்ணன்  அவர்களின் பிறந்தநாளை ஆசிரியர் நாளாகக் கொண்டாடுகிறோம். அவர் ஆசிரியராக இருந்து செய்த பணிகள் ஏராளம். அவர் உருவாக்கிய மாணவர்கள் ஏராளம்.  தொண்டுள்ளத்தோடு அவர் செய்த ஆசிரியப் பணிதான் அவரைக் குடியரசுத் தலைவராக உயர்த்தியது. டாக்டர் ஜாகீர் உசேன் அவர்களுக்குக் கல்வியின்மீதிருந்த ஆர்வத்தால் ஜாமியா மில்லியா இஸ்லாமியா எனும் பல்கலைக் கழகத்தை உருவாக்கிக் கல்விப்பணியாற்றினார். அப்பல்கலைக் கழகத்தின் நிதி நிலைமையைச் சமாளிக்க முடியாதபோது தம் சம்பளத்தைக் குறைத்துக்கொண்டதோடு பிற ஆசிரியர்களிடமும் சம்பளத்தைக் குறைத்துக்கொள்ள வேண்டிய போது அவர்களும் குறைத்துக் கொண்டார்கள். அப்படி அவர்கள் செய்த தியாகத்தில்தான் அப்பல்கலைக் கழகம் வளர்ந்தது. அவரது அர்ப்பணிப்பு உணர்வாலும் தொண்டுள்ளத்தோடு செய்த கல்விப்பணியாலும் இந்திய நாட்டின் மூன்றாம் குடியரசுத் தலைவராக உயர்ந்தார்.

கல்வியின் மீதும் பிறந்த நாட்டின் மீதும் அதீத பற்றுக்கொண்ட டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் தாம் பெற்ற கல்வியை எப்படியேனும் தம் தாய்நாட்டு மக்களுக்கே வழங்க வேண்டும் என்ற உயர்நோக்கத்தில், குடியரசுத் தலைவர் பதவியி-ருந்து ஓய்வு பெற்ற பின்னரும் நாடெங்கும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு சந்தித்த மாணவ, மாணவிகளிடமெல்லாம் கல்வியைப் போதித்தார். அறிவொளி  ஊட்டினார். இன்று அவர் மறைந்தாலும் அவரின் கனவுகளும் சிந்தனைகளும் இளையோர் மனங்களில் இளமை குன்றாது வாழ்ந்துகொண்டிருக்கின்றன. நிச்சயம் அவை உயிரோட்டம் பெறும்.  அவர் அவ்வப்போது தம் ஆசிரியர்களைச் சந்தித்ததும் அவர்கள் தம் முன்னேற்றத்திற்குத் தூண்டுகோல்களாக  இருந்ததை மக்கள் மன்றத்தில் நினைவுகூர்ந்ததும் ஆசிரியர்களின் உயர்வெண்ணத்தையும் தியாக உணர்வையும் வெளிச்சமிட்டுக் காட்டுகின்றன.

ஓர் ஆசிரியரின் உள்ளம் ஓர் அன்னையின் உள்ளத்திற்குச் சமம். தன் பிள்ளை தன்னைவிட மேம்பட வேண்டும்; புகழ்பெற வேண்டும் என்று எண்ணுவதைப் போல, தம் மாணவர் தம்மைவிட மேலோங்க வேண்டும்; சிறப்புற வேண்டும்; பற்பல துறைகளில் சிறந்து விளங்க வேண்டும் என்று உயர்வெண்ணம் கொள்வார். அங்கு சாதி, மத வேறுபாடுகளோ, குலத்தால் உயர்வு, தாழ்வு என்ற கீழ்த்தர எண்ணங்களோ அறவே இருக்காது. தாம் ஏணியாக இருந்துகொண்டு தம் மாணவர்களை மேலே ஏற்றிவிடுபவரே ஆசிரியர்; அவர்களின் முன்னேற்றத்தையும் வளர்ச்சியையும் கண்டு முகம் சுழிக்காமலும் பொறாமைப்படாமலும் இருப்பவரே உண்மையான ஆசிரியர்.

இந்தச் சமூகம் முன்னேற வேண்டுமெனில் கல்வி தேவை; அக்கல்வியைக் கற்பிக்க ஆசிரியர்கள் தேவை. அந்த ஆசிரியர்கள்தாம் இந்நாட்டு மக்களின் ஒழுக்கத்திற்கும் பண்பாடுகளுக்கும் முதுகெலும்புகள். அவர்களால் போதிக்கப்படுகின்ற ஒழுக்கங்களும் நீதிபோதனைகளும்தாம் தலைசிறந்த, ஒழுக்கமான மாணவர்களை உருவாக்குகின்றன. ஆசிரியர்கள் தம் அன்பான போதனையால் தரமற்ற, கீழ்த்தரமான எண்ணங்களை உடைய மாணவர்களின் மனங்களைக்கூட   மாற்றிவிட முடியும்.

விளைநிலத்தில் போடப்படுகின்ற விதைகளைப்போலவே ஆசிரியர்களின் உரைகள்; அவர்கள் நல்ல விதைகளைப் போட்டால் நல்ல மகசூலை அறுவடை செய்யலாம். அவர்கள் அந்த விளைநிலத்தில் நஞ்சு விதைகளைப் போட்டால் அது போன்ற நஞ்சு மரங்களைத்தான் நாம் காண முடியும். எனவே ஆசிரியர்கள் தம் மாணவர்களைக் கெடுப்போர் அல்லர். ஒரு தரிசு நிலத்தை ஒரு விவசாயி பண்படுத்தி, விதைகள் தூவி, பின்னர் நல்ல மகசூலை நாட்டு மக்களுக்குத் தருவதைப்போல், மந்த நிலையிலுள்ள மாணவர்கள் தம்மிடம் ஒப்படைக்கப்பட்டாலும் அவர்களுக்குத் தோதுவான முறையில் மீண்டும் மீண்டும் சொல்-க் கொடுத்து, புரிய வைத்து, அவர்களை மேல்நிலைக்குக் கொண்டு வருவதில்தான் ஓர் ஆசிரியரின் திறமையும் தியாகமும் மறைந்திருக்கின்றன. மேலோட்டமாகப் பார்த்து ஆசிரியர்களை மதிப்பிடாதீர்கள். அவர்களின் பணிக்குள் மறைந்துள்ள சிரமங்களையும் சிக்கல்களையும் சற்றே எண்ணிப்பாருங்கள்.

ஆடையில் அழுக்குப் பட்டால் அதை அடித்துத் துவைக்கத்தான் வேண்டும். அப்போதுதான் அதன் அழுக்கு நீங்கும்; ஆசிரியரின் சொல்கேளா மாணவர்களை அவர்கள் அடிக்கத்தான் வேண்டும். ஆனால் அது அவர்களைப் புண்படுத்தும் அளவிற்குப் பெரிய அளவில் இருக்கக் கூடாது; அது அவர்களின் மனதைப் பண்படுத்தும் விதமாக, மென்மையாக இருக்க வேண்டும்.

இன்றைய மாணவர்கள் படிப்பில் போதிய கவனம் செலுத்த முடிவதில்லை. அதற்கான சூழ்நிலை இல்லை. எங்கு நோக்கினாலும் தொலைக்காட்சி, திரைப்படக் காட்சிகள் மூலம் திசைதிருப்பப்படுகின்றார்கள். அதன் காட்சிகளால் கவரப்படுகின்றார்கள்; அதன் வசனங்களை உள்வாங்கிக் கொள்கின்றார்கள். திரைப்படங்கள் பலவற்றில் பள்ளி, கல்லூரி ஆசிரியர்களை எதிர்மறையான தோற்றத்தில் காட்டுவதையே வழக்கமாகக் கொண்டுள்ளார்கள். ஆசிரியர்களை நையாண்டி செய்யும் மாணவர்களை அதில் காட்சிப்படுத்துகின்றார்கள். எனவே அதைக் காணுகின்ற மாணவர்கள் தம் ஆசிரியர்களைக் கிண்டல் செய்யும் நிலை உருவாகிவிட்டது. அதனால் அவர்கள் தம் ஆசிரியர்களை உயர்வாக மதிப்பதில்லை.

ஓர் உயர்நோக்குள்ள ஆசிரியர் எப்படி இருக்க வேண்டும்; மாணவர்களை எப்படி அணுக வேண்டும் என்பதைச் சில திரைப்படங்களில் காட்சிப்படுத்தினாலும் பல்வேறு திரைப்படங்கள் ஆசிரியர்களைக் கேலிக்குரியவர்களாகக் காண்பிப்பதால் ஆசிரியர்களைப் பற்றிய உயர்மதிப்பு மாணவர்களின் மனதில் கொஞ்சம் கொஞ்சமாக விலகத் தொடங்குகிறது. இது ஆரோக்கியமான சூழ்நிலை இல்லை. இந்நிலை மாற வேண்டும். ஒவ்வொரு மாணவனின் மனதிலும் தன் ஆசிரியரைப் பற்றிய மதிப்பு இடம் பெற்றிருக்க வேண்டும். ஒரு மரியாதை கலந்த பயம் இருக்க வேண்டும். அத்தகைய மாணவர்களால்தான் ஓர் ஆசிரியரிடமிருந்து நுணுக்கமான, நுட்பமான பல்வேறு தகவல்களைக் கற்றுக்கொள்ள முடியும்.


ஓர் எழுத்தை எனக்குக் கற்றுக்கொடுத்தாலும் அவருக்கு நான் அடிமை என்று அலீ (ரளி) அவர்கள் கூறியுள்ளதன் பொருள் என்ன? அவர் சொன்னபடி நான் நடப்பேன் என்பதுதானே? ஆசிரியர் என்ன சொல்கின்றாரோ அதை அப்படியே ஏற்று நடப்பதுதான் நாம் அவருக்குக் கொடுக்கும் மரியாதை. எனவே கல்வியைக் கற்றுக் கொடுத்த ஆசிரியர்களை, கற்கின்றபோதும் கற்று முடித்த பின்னும் என்றென்றும் மதிப்போம்.  அதன்மூலம் அவர்களின் பிரார்த்தனையைப் பெற்று ஈருலகிலும் வெற்றியடைவோம்.






கருத்துகள் இல்லை: