வெள்ளி, 9 ஜூன், 2017

இறைப்பணியாற்றும் ஆலிம்களை உருவாக்குவோம்!


-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.

தமிழ்நாட்டின் பாரம்பரிய மத்ரஸாக்கள் பல இருக்க அவற்றுக்கு மத்தியில் இரட்டைக் கல்வி வழங்கும் நவீன மத்ரஸாக்கள் காலத்தின் தேவை கருதி ஆங்காங்கே புதிதாகத் தோன்றின. காலச் சூழலின் மாற்றத்தால் பாரம்பரிய மத்ரஸாக்கள் சில நவீன மத்ரஸாக்களாக மாற்றப்பட்டன. நவீன மத்ரஸாக்கள் சில ஒருங்கிணைந்த ஐந்தாண்டுப் பாடத்திட்டத்தையும், சில ஏழாண்டுப் பாடத்திட்டத்தையும் கொண்டு செயல்பட்டு வருகின்றன. சென்னையில் மட்டும் ஏழெட்டு நவீன மத்ரஸாக்கள் உள்ளன.

இரட்டைக் கல்வி வழங்கும் நவீன மத்ரஸாக்கள் தோன்றியபோது பாரம்பரிய மத்ரஸாக்களில் பணியாற்றுகின்ற பேராசிரியர்களும் மற்ற ஆலிம்களும் அவற்றை விமர்சனம் செய்தார்கள். அரபுக் கல்லூரிக்குள் உலகக் கல்வியும், கணினிக் கல்வியும், ஆங்கிலமும் நுழையும்போது மார்க்கக் கல்வியின் மாண்பு குறையும்; சிதைக்கப்படும் என்றெல்லாம் கருத்துக் கூறினார்கள். இரண்டு கல்வியையும் ஒருசேரப் படிக்க முடியாது என்று தெரிவித்தார்கள். அவர்களெல்லாம் மூக்கில் விரல் வைக்கும் அளவிற்கு மாணவர்களை உருவாக்கி இரட்டைக் கல்வியையும் வழங்கி, இரண்டு மூன்று பட்டங்களைக் கையில் கொடுத்து அனுப்பினார்கள்; அனுப்பிக் கொண்டிருக்கின்றார்கள். அவர்கள் நடத்திய பட்டமளிப்பு விழாக்களைக் கண்டு சமுதாயத் தலைவர்கள் பாராட்டினார்கள். ஆனால் இரண்டு மூன்று பட்டங்களைப் பெற்று நவீன மத்ரஸாக்களிலிருந்து வெளியேறிய ஆலிம்கள் என்ன செய்துகொண்டிருக்கின்றார்கள்? இந்தச் சமுதாயம் பயன்பெறும் வகையில் பணியாற்றிக்கொண்டிருக்கின்றார்களா?

ஆலிம் பட்டத்தோடு பி.காம்., அல்லது பி.சி.ஏ. பட்டம் பெற்ற பலர் பெரும் பெரும் நிறுவனங்களில் பணி வாய்ப்பைப் பெற்றுச் சம்பாதிக்கத் தொடங்கினார்கள். கணினித் துறையில் கிடைத்த பணியில் அமர்ந்தார்கள். தட்டச்சர்களாகவும் டிசைனர்களாகவும் பணியில் சேர்ந்தார்கள். இதுதான் சமுதாயப் பணியா? இதுதான் ஓர் ஆலிம் மேற்கொள்ள வேண்டிய இறைப்பணியா?
ஒருவர் தட்டச்சராக, கணக்கராக, டிசைனராக, நூல் வடிவமைப்பாளராகப் பணியாற்ற அரபுக் கல்லூரியில் ஐந்தாண்டுகளோ, ஏழாண்டுகளோ படித்து, ஆலிம் பட்டம் பெற வேண்டிய அவசியமில்லை. இதையெல்லாம் ஆலிம் அல்லாதவர்களே செய்வார்கள். ஆலிம்களுக்கான பணி என்ன?

திருக்குர்ஆனோடும் நபிமொழியோடும் தொடர்புடைய பணிகளை ஆற்றுவதற்கு ஆள் பற்றாக்குறை உள்ளது. அதனைப் போக்குவதற்குத்தான் அரபுக் கல்லூரிகள் உருவாக்கப்பட்டன. மரபுவழி அரபுக் கல்லூரிகளுக்கு மாணவர்களின் வருகை குறைவாக இருந்ததால்தான் ஆங்கிலக் கல்வியையும் கணினிக் கல்வியையும் இணைத்து, மாணவர்களை ஈர்க்க வேண்டிய தேவை ஏற்பட்டது. அதனால்தான் அதை ஆலிம்களுள் ஒரு குழுவினர் வரவேற்றனர். ஆனால் பட்டம் பெற்று வெளியேறிய ஆலிம்களின் சேவை சமுதாயத்திற்குக் கிடைக்கப் பெறாதபோது நவீனக் கல்லூரிகளை ஆதரித்த ஆலிம்கள் பலர் முகம் சுழிக்கத் தொடங்கிவிட்டனர்.

ஐந்தாண்டுகள் பயின்று, அதன் பின் ஓராண்டுப் பயிற்சிக்குப்பின் பட்டம் பெற்று வெளிவருகின்ற ஒரு மருத்துவர் மருத்துவப் பணியை மேற்கொள்ளாமல் அரிசி வியாபாரம் செய்வதிலும் ஏற்றுமதிலிஇறக்குமதித் தொழிலிலும் ஈடுபட்டால் அவரால் சமுதாயத்திற்கு நன்மையா? ஒரு வழக்கறிஞர் தம் தொழிலை விட்டுவிட்டு செல்போன் விற்பனை செய்யத் தொடங்கினால் அவரால் சமுதாயத்திற்குக் கிடைக்க வேண்டிய பயன் கிடைக்காமல் போய்விடுகின்றதல்லவா!

திருக்குர்ஆன் விரிவுரையையும் நபிமொழி விளக்கங்களையும் இஸ்லாமியச் சட்ட நுட்பங்களையும் கசடறக் கற்று, மொழிப்புலமையோடு வெளிவருகின்ற ஒருவர் ஒரு மஸ்ஜிதில் இமாமாகச் சேர்ந்து மக்களைச் சீர்திருத்தம் செய்யும் பணியில் ஈடுபடுதல், ஓர் அரபுக் கல்லூரியில் சேர்ந்து, கற்ற கல்வியைச் சிறப்பாகக் கற்பித்து திறன்மிகு மாணவர்களை உருவாக்குவதில் தம்மை அர்ப்பணித்துக்கொள்ளுதல், அரபுமொழி நூல்களைத் தாய்மொழியில் மொழியாக்கம் செய்யும் பணியில் ஈடுபடுதல், பாலர்களுக்கான குர்ஆன் வகுப்புகளைத் தொடங்கி நடத்துதல், இஸ்லாமிய அழைப்புப் பணியில் ஈடுபடுதல் உள்ளிட்ட நேரடி இறைப்பணிகளில் ஈடுபட வேண்டும். அல்லது இறைப்பணி சார்ந்த வேறு சமுதாயப் பணிகளில் ஈடுபடவே ஆலிம்கள் தேவை. அதற்காகத்தான் சமுதாயம் ஆலிம்களை எதிர்பார்க்கிறது. இவைபோன்ற பணிகளுக்குத்தான் ஆள் பற்றாக்குறை உள்ளது. இவற்றையெல்லாம் விட்டுவிட்டு, நான் ஒரு பி.காம். பட்டதாரி; எம்.காம். முடித்துவிட்டு ஒரு நிறுவனத்தில் கணக்கராகப் பணியாற்றவுள்ளேன் என்ற எண்ணத்தோடு வெளிவரும் ஆலிம்களை அரபுக் கல்லூரிகள் உற்பத்தி செய்தால் திருக்குர்ஆனைப் போதிப்பதற்கும் அதன் விளக்கங்களை மக்களுக்கு எடுத்துச் சொல்வதற்கும் யார் முன்வருவார்?

ஆலிம்களுக்கு ஆங்கிலம் தெரியாது என்ற குறையைப் போக்க வீரியம் கொண்டெழுந்த நவீன மத்ரஸாக்கள் ஆங்கிலம், கணினிப்பாடம் உள்ளிட்டவற்றை இணைத்து இரட்டைக் கல்வி முறையை அறிமுகப்படுத்தின. இந்தப் புதுமையைக் கண்ட அறிஞர்கள், இச்சமுதாயத்திற்கு மிகுந்த பயனை வழங்கக்கூடிய நவீன ஆலிம்கள் உருவாகி வரப்போகின்றார்கள் என்ற கனவோடு இருந்தார்கள். ஆனால் அவர்களின் கனவு பகற்கனவாகப் பொய்த்துப் போனது. ஆம். அவர்கள் தாம் பணியாற்றத் தேர்ந்தெடுத்துக்கொண்ட தளங்கள் அரபுக் கல்லூரியில் கற்ற மார்க்கக் கல்வியோடு தொடர்பில்லாதவை. எனவே நவீன அரபுக் கல்லூரியை நடத்துகின்ற நிர்வாகிகளும் முதல்வர்களும் தம் கல்வித் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளார்கள். சமுதாயத்திற்குச் சேவை செய்யும் ஆலிம்களை உருவாக்குவதற்குப் பதிலாக, நன்றாகச் சம்பாதிக்கக்கூடிய இளைஞர்களை உருவாக்கியுள்ளார்கள் என்றுதான் ஆலிம்கள் விமர்சனம் செய்கின்றார்கள். ஆகவே மார்க்கக் கல்வி கற்பதன் அடிப்படை நோக்கம் சிதைவுற்ற பிறகு பாடத்திட்டம் குறித்து மறுபரிசீலனை செய்வது காலத்தின் கட்டாயமே.

என்னதான் தீர்வு? பி.காம்., பி.சி.ஏ. போன்ற தொழில்சார் பட்டப் படிப்புகளைக் கொடுக்காமல் பி.ஏ. தமிழ், பி.ஏ. ஆங்கிலம், பி.ஏ. அரபி என மொழி சார்ந்த பட்டப் படிப்புகளை வழங்கினால் ஓர் ஆலிம் தமிழ் அல்லது ஆங்கில இலக்கணத்தைத் தெளிவாக அறிந்து வெளியே வருவார். இறைப்பணியாற்றும்போது அது அவருடைய சொற்பொழிவுக்கும் எழுத்துக்கும் மிகுந்த பயனாகவும் உறுதுணையாகவும் இருக்கும். தமிழ்வழி பயின்று வருவோருக்குத் தமிழ் பி.ஏ.வும், ஆங்கில வழி பயின்று வருவோருக்கு ஆங்கில பி.ஏ.வும் வழங்கினால் அது அவர்கள் உலகின் எந்த மூலைக்குச் சென்றாலும் இறைப்பணியாற்ற, சொற்பொழிவாற்ற, பத்திரிகைகளில் எழுத, அரபு நூல்களை மொழியாக்கம் செய்யப் பேருதவியாக இருக்கும். மேற்படிப்பை விரும்புவோர் எம்.ஏ., எம்.ஃபில்., பிஎச்.டி. வரை செல்ல எந்தத் தடையும் இல்லை. இத்தகைய ஆலிம்களால் சமுதாயம் மிகுந்த பயனடையும் என்று நம்பலாம்.

ஓர் ஆலிம் கணினியை இயக்கப் பழகுவது இறைப்பணிக்கு உறுதுணையாக இருக்க வேண்டுமே தவிர அதை வைத்து வாழ்வாதாரத்தை மட்டும் ஈட்டும் பணியில் ஈடுபடக் கூடாது. அரபு நூல்களைக் கணினியில் பார்க்க, கட்டுரைகள், கடிதங்கள் உள்ளிட்டவற்றைச் சுயமாகத் தட்டச்சு செய்ய, இன்னபிற தேவைகளுக்காக அதைக் கற்றுக்கொள்வதில் தவறில்லை. எத்தனைதான் கற்றாலும் அதையெல்லாம் வைத்து, இறைப்பணியை மேற்கொள்ள வேண்டுமே தவிர தாம் மட்டும் நல்லபடியாக வாழ்ந்தால் போதும் என்ற எண்ண ஓட்டத்தோடு பெரும் நிறுவனங்களுக்குச் சம்பாதிக்கப் புறப்பட்டுவிட்டால் இச்சமுதாயத்திற்குச் சேவை செய்பவர் யார்? கல்வியையும் திறமையையும் உறுதுணையாகக் கொண்டு வாழ்வாதாரத்தைச் சம்பாதிக்க வேண்டாம் என்று சொல்லவில்லை. மாறாக, அரபுக் கல்லூரியிலிருந்து வெளியே வருவோரின் அடிப்படைப் பணி இறைப்பணியாக இருக்க வேண்டும் என்றுதான் சொல்கிறேன்.

இறைப்பணியைச் செய்துகொண்டே அவரவர் தத்தம் திறமையைக்கொண்டு உபதொழிலாக எதை வேண்டுமானாலும் செய்துதமக்கான வாழ்வாதாரத்தை ஈட்டிக்கொள்ளலாம். அதில் தவறில்லை. அதேநேரத்தில் இறைப்பணியை உதறித் தள்ளிவிட்டு, வாழ்வாதாரம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு வேறு பணிக்குச் செல்வதைத்தான் ஆலிம்கள் விமர்சனம் செய்கின்றார்கள்.    

அக்காலக் கட்டத்தில் ஹைதராபாத் சமஸ்தானத்தில் மவ்லவிகளுக்கு அவரவரின் தகுதிக்கேற்ப அரசுப் பதவி கொடுக்கப்பட்டு வந்தது.  அப்போதைய ஹைதராபாத் நவாப் நிஜாமுல் முல்க் அஃப்ளலுத்தவ்லா ஸாலார் ஜங்க் பஹாதுர், மார்க்கம் அறிந்த உலமா பெருமக்களை மிகவும் கண்ணியப்படுத்துபவராகத் திகழ்ந்தார். அந்த அடிப்படையில் அண்ணல் அஃலா ஷாஹ் அப்துல் வஹ்ஹாப் அல்காதிரீ (ரஹ்) அவர்களுக்கு உதவி ஆட்சியர் (சப் கலெக்டர்) பதவி தேடி வந்தது. இருப்பினும் அப்பதவியை ஏற்க மறுத்த ஹள்ரத் அவர்கள், இப்பதவியை ஏற்பதால் உலகியல் ஆதாயம் கிடைக்குமே தவிர நாம் கற்ற கல்வியின் மூலம் நமது சமுதாயத்திற்கு என்ன பலன் விளைவிக்க முடியும் என்ற கோணத்தில் சிந்தித்தார்கள்.

அதன்பின்னரே ஹள்ரத் அவர்கள் அல்பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் அரபுக் கல்லூரியை வேலூரில் உருவாக்கினார்கள். அந்தத் தாய்க் கல்லூரியிலிருந்து வெளிவந்தோர்தாம் இன்று தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு மத்ரஸாக்களை உருவாக்கி நடத்திக் கொண்டிருக்கின்றார்கள். அவர்களின் தியாகம் மட்டும் இல்லையென்றால் இன்று இவ்வளவு ஆலிம்களைக் கண்டிருக்க முடியாது என்பதை இன்றைய இளைய தலைமுறையினர் எண்ணிப் பார்க்க வேண்டும். சுயநலத்தைவிடப் பொதுநலமே ஆக்கத்திற்கும் நன்மைக்கும் காரணமாக அமையும் என்பதையும் மனத்தில் பதிய வைத்துக்கொள்ள வேண்டும்.

எனவே எதிர்வரும் காலங்களில் அரபுக் கல்லூரியிலிருந்து வெளிவரும் ஆலிம்கள் பல்வேறு திறமைகளைக் கொண்டிருந்தாலும் "அத்தனை திறமைகளையும் அல்லாஹ்வின் பாதையில்தான் செலவழிப்பேன்'' என்ற வைராக்கியத்தோடு வெளிவருவார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்.

=============================================






வியாழன், 8 ஜூன், 2017

ஸகாத் கொடுப்போர் கவனத்திற்கு


நீங்கள் உங்கள் ஸகாத்தை வேட்டி, சேலை உள்ளிட்ட ஆடைகளாகத்தான் கொடுக்க வேண்டும் என்ற அவசியமில்லை. நீங்கள் ஏழைகளாகக் காணும் நபர்களுக்குப் பணமாகவே கொடுக்கலாம்.

நீங்கள் ஸகாத் வழங்கும்போது, அதை யாருக்கு வழங்குகின்றீர்களோ அவர் அதற்குத் தகுதியானவரா என்பதையும் கவனித்து வழங்குங்கள். நம் பொறுப்பு முடிந்துவிட வேண்டும் என்பதற்காக யார் யாருக்கோ கொடுத்து விடாதீர்கள்.

நீங்கள் உங்கள் மஹல்லா இமாமுக்கு ஸகாத் கொடுத்தால் அவர் அதை வாங்கத் தகுதியானவரா என்று பார்த்துக் கொடுங்கள். இமாம்கள் சிலர் நல்ல வசதியாகவே வாழ்கிறார்கள். அவர்களுக்கும் நீங்கள் ஸகாத் வழங்குவது முறையில்லை. அவர்களுடைய அன்பைப் பெற வேண்டுமென்பதற்காக அவர்களுக்கு வழங்க நினைத்தால், உங்களுடைய ஸகாத் அல்லாத பணத்தை அன்பளிப்பாக வழங்குங்கள்.

ஆங்காங்கே பணியாற்றக்கூடிய ஆலிம்கள் -ஸகாத் வாங்கத் தகுதியில்லாத வசதியானவர்கள்- “எங்களுக்கு நீங்கள் உங்களின் ஸகாத்தை அன்பளிப்பாகக் கொடுக்காதீர்கள். உங்களின் ஸகாத் அல்லாத பணத்தையே அன்பளிப்பாக நாங்கள் ஏற்றுக்கொள்வோம்” என்று பொது அறிவிப்புச் செய்தால் அத்தகைய இமாம்கள்மீது மக்களுக்கு ஒரு மரியாதை ஏற்படுவதோடு  நாமும் நம் பொறுப்பைச் சரியாக நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணம் மக்களுக்கு ஏற்படும்.

சமுதாய இயக்கங்களுக்குக் கொடுப்பதைத் தவிர்த்து அக்கம் பக்கம்  உள்ள ஏழைகளைப் பார்த்து உங்கள் ஸகாத்தை வழங்குங்கள். கல்வியுதவி, திருமண உதவி, மருத்துவ உதவி உள்ளிட்டவற்றிற்காகவும் உங்கள் ஸகாத் பயன்படட்டும்.

அல்லாஹ் விதித்த ஸகாத்தை நாம் உரிய முறையில் வழங்கி, பயனுள்ள மழையை அவனிடமிருந்து பெறுவோமாக.

-மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி


திங்கள், 5 ஜூன், 2017

ஜன்னத்துல் ஆலியா மகளிர் கல்லூரி பட்டமளிப்பு விழா



சென்னை மணலியில் அமைந்துள்ள ஜன்னத்துல் ஆலியா மகளிர் அரபுக் கல்லூரியின் முதல் பட்டமளிப்பு விழா 06 05 2017 அன்று திருஞான சம்பந்தம் திருமண மஹாலில் நடைபெற்றது. மௌலவி ஹாஃபிழ் கே. அப்துல் காதர் ஜெய்லானி ரப்பானி கிராஅத் ஓதி நிகழ்வைத் தொடங்கிவைத்தார். கே.எஸ். இஸ்மாயில் சிராஜி நபிபுகழ் கீதம் இசைத்தார். மௌலவி அப்துல்லாஹ் அல்தாஃபி வரவேற்புரை நிகழ்த்திய பின், இனிய திசைகள் துணை ஆசிரியர் முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி துவக்கவுரையாற்றினார்.

அதன்பின் முனைவர் மௌலவி வி.எஸ். அன்வர் பாதுஷாஹ் உலவி, ஜமாலிய்யா அரபுக் கல்லூரி முதல்வர் மௌலவி சையது நியாஸ் அஹ்மத் ஜமாலி ஆகியோர் சிறப்புரை நிகழ்த்தினர். ஆலிம்கள் பலர் வாழ்த்துரை வழங்கிய பின், இக்கல்லூரி முதல்வர் எஸ். எம். ஜாஹிர் ஹுஸைன் மிஸ்பாஹி பாகவி ஆண்டறிக்கை வாசித்தார். அதன்பின், மௌலவி ஓ.எம். அப்துல் காதிர் பாகவி, எம். நூருஷ் ஷிஃபானா, எஸ். ரம்ஜான், ஜே. ரம்ஜான் பேகம், ஏ. ரஜியா பேகம், ஏ. காதர்மா ஆகிய ஐந்து மாணவிகளுக்கு அவர்கள்தம் தந்தையரிடம் பட்டம் வழங்கிப் பேருரை நிகழ்த்தினார். இக்கல்லூரியின் பொறுப்பாளர் மௌலவி என். முஹம்மது இத்ரீஸ் ஜமாலி நன்றி நவில, துஆவுடன் நிகழ்வு இனிதே நிறைவுற்றது.
-தகவல்: பாகவியார்
======================


வெள்ளி, 19 மே, 2017

கோடைக்கால தீனிய்யாத் நிறைவு விழா

கோடைக்கால தீனிய்யாத் நிறைவு விழா  24 05 2017 புதன்

நிருபர் ஆக விருப்பமா?

நிருபர் ஆக விருப்பமா?
Referred by முனைவர் மௌலவி நூ அப்துல் ஹாதி பாகவி M.A.,M.Phil.,Ph.D.


வியாழன், 18 மே, 2017

தலாக் சிக்கலுக்குள் சிக்கியதேன் ?


தலாக் சிக்கலுக்குள் சிக்கியதேன் ?
-இனிய திசைகள் மாத இதழ் மே 2017









திங்கள், 15 மே, 2017

ஜெர்னலிஸ்ட் வாய்ஸ் - மாத இதழுக்குத் துணை ஆசிரியராக...

நண்பர்களே, 
அஸ்ஸலாமு அலைக்கும் 

ஜெர்னலிஸ்ட் வாய்ஸ் எனும் மாத இதழுக்குத் துணை ஆசிரியராக நியமிக்கப்பெற்றுள்ளேன். நல்ல முறையில் சேவை செய்ய வாழ்த்தி, துஆச் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். 

அன்புடன்

முனைவர் மௌலவி நூ அப்துல் ஹாதி பாகவி Ph.D.




வியாழன், 11 மே, 2017

சமச்சீர்க் கல்வி சாத்தியமே!


-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.


கற்றலும் கற்பித்தலும் ஆதி காலந்தொட்டு வாழையடி வாழையாக நடைபெற்று வருகின்றன. ஒவ்வொரு காலத்திலும் கற்றல்-கற்பித்தல் முறைகள் மாறிக்கொண்டே இருக்கின்றன. தொடக்கக் காலத்தில் குருவுக்கும் சீடனுக்கும் நூல்களோ எழுதுகோல்களோ எதுவும் இருந்ததில்லை. சீடர்கள் வந்து தம் குருமுன் பணிவோடு அமர்வார்கள். குருவோ தமக்குத் தெரிந்ததையெல்லாம் சொல்லிக் கொடுப்பார். எழுத்துகளைக் கற்பிக்க அவர்களின் முதுகில் எழுதும் பழக்கம் இருந்தது. பின்னர் மண்ணில் எழுதினார்கள். அடுத்தக் காலக்கட்டத்தில் குரு கற்பிப்பதை மாணவர்கள் எழுதுகோல்களால் எழுதிக்கொண்டார்கள். அவர்கள் தம்மிடருந்த எழுத்தாணிகளால் பனையோலைகளிலும் காய்ந்த தோல்களிலும் எழுதிக்கொண்டார்கள். அடுத்தக் காலக்கட்டத்தில் மையைத் தொட்டு இறகுகளாலும் மூங்கில் குச்சிகளாலும் எழுதிக்கொண்டார்கள். இப்படியே வளர்ச்சியடைந்து காகிதத்தில் கரிக்கோல்களால் (பென்சில்) எழுதும் நிலைக்கு உயர்ந்தான். பேனாவில் மை ஊற்றி எழுதும் நிலையை அடைந்து, எழுதுவதற்கென ஆயத்த நிலையில் உள்ள பந்துமுனைப் பேனாவைப் பயன்படுத்தும் காலத்தை எய்தினான். அத்தோடு தட்டச்சு எந்திரத்தின்மூலம் எழுதத் தொடங்கி, அதுவும் பழையதாகிவிட்டதால் கணினித் தட்டச்சுக்கு இப்போது மனிதன் மாறிவிட்டான். அதையும் தாண்டி வார்த்தையைச் சொல்லச் சொல்லத் தானாகவே எழுதிக்கொள்ளும் தொழில்நுட்பத்தையும் கண்டுபிடித்துவிட்டான். இவ்வாறு ஒன்றுக்குள்ளேயே முடங்கிக் கிடக்காமல், படிப்படியாக நகர்ந்து அடுத்தடுத்தக் கட்டத்தை அடைவதுதான் வளர்ச்சி. 


ஆசிரியர் கற்பிப்பதை நேரடியாகக் கேட்டு, மாணவர்கள் தம் ஐயங்களை உடனுக்குடன் தீர்த்துக்கொள்ளும் கற்பித்தல் முறைக்கு இணையே கிடையாது. தம் பாடத்தில் நன்கு தேர்ச்சிபெற்ற ஆசிரியர்கள்தாம் அந்தப் பாடத்தை எளியமுறையில் மாணவர்களுக்குக் கற்பிக்கவும் விளக்கிக் கூறவும் முடியும். அத்தகைய ஆசிரியர்கள் எல்லா மாணவர்களுக்கும் கிடைப்பது அரிது. 


தமிழ், ஆங்கிலம், கணிதம், புவியியல், வரலாறு ஆகிய ஐந்து பாடங்களைக் கற்கின்ற மாணவனிடம், உனக்கு எந்தப் பாடம் மிகவும் பிடிக்கும்? என்று கேட்டால், எந்தப் பாடத்தை நன்றாகப் புரிந்துகொள்ளும்படி ஆசிரியர் நடத்தினாரோ அந்தப் பாடத்தைத்தான் கூறுவான். மற்ற பாடங்கள் அவ்வளவாகப் பிடிக்காமல் போனதற்குக் காரணம் அந்தப் பாடங்களை அவன் விளங்கிக்கொள்ளுமாறு செவ்வனே நடத்துகின்ற ஆசிரியர்கள் அவனுக்குக் கிடைக்கவில்லை என்பதே பொருள். ஒரு பள்ளியில் +2 கணிதவியலில் மிகுதியான மதிப்பெண்கள் பெறுகின்ற மாணவர்கள் மற்றொரு பள்ளியில் அதே கணிதவியல் பாடத்தில் குறைந்த மதிப்பெண்கள் பெறுகின்றார்கள். ஏன்? அவர்களுக்கு அப்பாடத்தை அவர்களின் மனதில் பதியுமாறு திறம்பட நடத்துகின்ற ஆசிரியர் கிடைத்தார்; இவர்களுக்குக் கிடைக்கவில்லை. இதுதான் மாணவர்களுக்கு மத்தியில் மதிப்பெண் வேறுபாடு ஏற்பட முக்கியக் காரணம். 
அப்படியென்றால் திறன்மிகு ஆசிரியர்கள் சிலர்தாம் இருப்பார்கள்; அவர்கள் எல்லா இடங்களுக்கும் சென்று பாடம் நடத்துவது சாத்தியமா? ஆனால் தற்காலக் கணினி யுகத்தில் அனைவருக்கும் ஓர் ஆசிரியர் பாடம் நடத்துவது சாத்தியமாகியுள்ளது. அத்தகைய அறிவியல் தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்த யுகத்தில் நாம் வாழ்கிறோம். அதற்கான வாய்ப்பு எளிதாக இருந்தும் அதைப் பயன்படுத்திக்கொள்ளும் திட்டம்தான் நம்மிடம் இல்லை. 


இன்று ஸ்மார்ட் கிளாஸ் என்று சிலபல பள்ளிக்கூடங்களில் அதிகமான கல்விக் கட்டணத்துடன் நடைபெறுகின்ற கணினிவழிக் கல்வியின் இன்னொரு கோணம்தான் காணொலிக் குறுவட்டுத் திட்டம் (டிவிடி). இத்திட்டத்தின்படி ஒவ்வொரு பாடத்திலும் நன்கு தேர்ச்சிபெற்ற ஆசிரியர்களைத் தேர்வுசெய்து, அவர்களை அந்தந்த வகுப்புப் பாடத்தை நடத்தச் செய்து, அதை அப்படியே காணொலியாகப் பதிவு செய்துவிட வேண்டும். பின்னர் அதைக் காணொலிக் குறுவட்டுகளாக உருவாக்கி ஒவ்வொரு பள்ளிக்கூடத்திற்கும் வழங்கி அந்தந்த வகுப்பில் அந்தப் பாடத்தைக் கணினியின்மூலம் வெண்திரையில் காண்பிக்க வேண்டும். இதனால் குறிப்பிட்ட அளவே உள்ள திறன்மிக்க ஆசிரியர்களின் அறிவு எல்லாப் பள்ளி மாணவர்களுக்கும் சமச்சீரான வகையில் கிடைக்கும். 


ஓர் ஆசிரியர் தம் மாணவர்கள் முன்னிலையில் நேரடியாக நடத்துவதைவிட, அப்பாடத்தையே அவர்கள் திரையில் காணும்போது இன்னும் சற்று ஆவலாகப் பாடத்தைக் கவனிப்பார்கள். அது மட்டுமின்றிக் காட்சிவடிவில் பாடத்தைக் காணும்போது அது அவர்களின் உள்ளத்தில் எளிதாகப் பதியும் என்று சொல்ல வேண்டிய அவசியமில்லை. இவ்வாறு செய்வதால் தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாணவ, மாணவியர்க்கும் சமச்சீரான கல்வி சென்றடையும் என்பதில் கிஞ்சிற்றும் ஐயமில்லை. 


அப்படியானால் அங்கங்குள்ள மற்ற ஆசிரியர்கள் என்ன செய்வார்கள்? மாணவர்கள் தம் பாடத்தைக் குறிப்பெடுக்கின்றார்களா என்று கவனிப்பதும், அவர்களை வீட்டுப்பாடம் செய்துவருமாறு கூறி, அதை மறுநாள் திருத்திக்கொடுப்பதும் அப்பாடம் தொடர்பான அவர்களின் ஐயங்களைக் கேட்டு, அவற்றைத் தீர்த்து வைப்பதும், அவ்வப்போது சின்னச்சின்ன சோதனை (டெஸ்ட்) செய்து மாணாக்கர்களின் பாடத்திறனை அறிந்துகொள்வதும் அவர்களின் அன்றாடப் பணிகளாகும்.  அந்தந்தப் பாடத்தில் தேர்ச்சிபெற்ற ஆசிரியர்களால்தாம் அந்தப் பணியைச் செவ்வனே நிறைவேற்ற முடியும். ஆதலால் அவர்கள் அங்கு இருப்பது இன்றியமையாததாகும். 


இதன் நீட்சியாக, தமிழக அரசு நடத்துகின்ற போட்டித் தேர்வுகளுக்கான பாடத்திட்டத்தை, அதில் நன்கு தேர்ச்சிபெற்ற பேராசிரியர்கள்மூலம் அப்படியே காணொலிக் குறுவட்டில் பதிவுசெய்து, தேர்வில் கலந்துகொள்ள விண்ணப்பிக்கும் ஒவ்வொரு தேர்வருக்கும் வழங்கிவிட்டால் எல்லோரும் சமவாய்ப்பைப் பெறுவார்கள். தற்போதைய சூழலில் போட்டித் தேர்வுகள் பலவற்றில் நகரத்தில் உள்ளவர்களைப் போன்று கிராமங்களில் உள்ளவர்களால் தேர்ச்சிபெற முடியவில்லை என்றொரு குறை உண்டு. அதற்கான முக்கியக் காரணம், படிப்பகங்களும் பயிற்சி நிலையங்களும் நகரத்தில் உள்ள அளவிற்குக் கிராமத்தில் இல்லை என்பதுதான். இதை முற்றிலும் துடைத்தெறிந்து அனைவருக்கும் சமவாய்ப்பை வழங்கும் திட்டம்தான் காணொலிக் குறுவட்டுத் திட்டம். 


ஏழை, செல்வர், உயர்சாதி, கீழ்ச்சாதி என்ற எந்தப் பாகுபாடுமின்றி அனைவருக்கும் சமச்சீரான கல்வியை வழங்கி, வேலைவாய்ப்பிலும் சமவாய்ப்பை ஏற்படுத்தும் தொழில்நுட்பமும் அதற்கான வழியும் இருக்கும்போது இன்னும் ஏன் அதற்கான தீர்வை நோக்கி நகராமல் பழைய ஓலைச்சுவடிக் காலத்திலேயே நாம் முடங்கிக் கிடக்க வேண்டும்?============




புதன், 3 மே, 2017

மலரும் நினைவுகள்


நான் அல்பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் அரபுக் கல்லூரியில் பயின்ற காலத்தில் என்னுடைய பேராசிரியர் மௌலவி நூர்முஹம்மது ஹைதர் அலீ பாகவி குறிப்பிடத்தக்கவர். எங்களுக்கு மிகச் சிறப்பாகப் பாடம் நடத்தக்கூடியவர். தொடக்க வகுப்பு முதல் ஆறாம் ஆண்டு வரை மொத்தம் ஏழு ஆண்டுகள் அவரிடம் பயின்றுள்ளேன். நான் அங்கு பயின்ற காலத்திலேயே அண்ணாமலை திறந்தவெளிப் பல்கலைக் கழகத்தில் (தொலைநிலை) இளநிலை வரலாறு (பி.ஏ.) பயின்று வந்தேன். அதனை அவர் ஊக்கப்படுத்தியதோடு கல்விக் கட்டணம் செலுத்துவதற்காகக் கடனுதவி கொடுத்து உதவியதையும் இந்நேரத்தில் நன்றியுணர்வோடு நான் நினைத்துப் பார்க்கிறேன்.

அவர் எங்களுக்குப் பாடம் நடத்தியதோடு தன்மான உணர்வையும் சுய மரியாதைச் சிந்தனையையும் அவ்வப்போது ஊட்டியவர். ஆலிம்கள் மிகவும் கண்ணியமாக நடந்துகொள்ள வேண்டும்; பிறர் கையை எதிர்பார்க்கக்கூடாது; பிறர் தரும் உணவுக்காகக் காத்திருக்கக்கூடாது உள்ளிட்ட அறிவுரைகள் என் மனதில் ஆழமாகப் பதிந்துவிட்டன.

சுயமரியாதையையும் தன்மான உணர்வையும் ஊட்டும்விதமாக அவர் போதித்த ஒளவைப் பாடல் ஒன்று. அதன் பெயர் நாலு கோடிப் பாடல். இப்பாடலில் கூறப்பட்டுள்ள ஒவ்வொரு விஷயமும்  ஒரு கோடிக்குச் சமமாகும். இதோ அந்தப் பாடல்:

மதியாதார் முற்றம் மதித்தொருகால் சென்று
மிதியாமை கோடி யுறும்.

உண்ணீர் உண்ணீரென் றூட்டாதார் தம்மனையில்
உண்ணாமை கோடி யுறும்.

கோடி கொடுத்தும் குடிப்பிறந்தார் தம்மோடு
கூடுவதே கோடி யுறும்.

கோடானு கோடிகொடுப்பினும் தன்னுடையநாக்
கோடாமை கோடி யுறும்.

(பொருள்: தம்மை மதிக்காதவர்களின் வீட்டு வாயிலில் அவரையும் ஒரு பொருட்டாகக் கருதிச் சென்று மிதியாதிருத்தல் கோடிபெறும்.

“உண்ணுங்கள் உண்ணுங்கள்” என்று உபசரிக்காதோரின் வீட்டில் உண்ணாதிருத்தல் கோடி பெறும்.

கோடிப் பொன் கொடுத்தாயினும் நல்ல குடிப்பிறப்பு உடையவர்களோடு. தோழமைகொள்வது கோடி பெறும்.

எத்தனை கோடி தந்தாலும் தன்னுடைய வாக்குத் தவறாமல் இருப்பது
(உண்மையே பேசுவது) கோடி பெறும்.)

இப்பாடலை நான் ஏழாம் வகுப்பில் படித்திருந்தாலும் இதன் பொருளெல்லாம் என் மனதில் இல்லை. இவர் போதித்த பிறகே இப்பாடலும் இதன் பொருளும் என் மனதில் நீங்கா இடம்பெற்றன.

(பின்குறிப்பு: பேராசிரியர் மௌலவி நூர்முஹம்மது ஹைதர் அலீ பாகவி தற்போது அதிராம்பட்டினத்திலுள்ள மகளிர் கல்லூரியில் முதல்வராகப் பணி மேற்கொள்கின்றார். தொடர்புக்கு: 99 44 78 33 03)

-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி
=================

திங்கள், 1 மே, 2017

திருக்குர்ஆனை மட்டுமல்ல திருக்குறளையும்...

பாக்கியாத் அரபுக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு ஓதிய காலத்தில் ஆசிரியப் பெருந்தகை மௌலவி ஸதக்கத்துல்லாஹ் பாகவி அவர்களிடம் திருக்குர்ஆன் தர்ஜமா வகுப்பு. அவர்கள் திருக்குர்ஆன் தமிழாக்கம் குறித்த பாடத்தில் தமிழ் இலக்கணங்களையும் தமிழாக்கம் செய்யும் முறைகளையும் விளக்குவார்கள். அடைப்புக் குறிக்குள் வார்த்தைகளை இட்டாலும் படிக்கும்போது எந்த நெருடலும் ஏற்படக் கூடாது. அந்த வகையில் தமிழாக்கம் செய்ய வேண்டும் என்று சொல்லித் தந்தார்கள். அத்தோடு திருக்குறளையும் எங்களுக்குச் சொல்லித் தந்துள்ளார்கள்.
அவற்றுள் ஒன்று:

மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து.

முகர்ந்து பார்த்தாலே அனிச்சம் மலர் வாடிப்போய்விடும். அதுபோலவே  விருந்து கொடுப்பவர் விருந்தாளியைப் புன்னகையோடு பார்க்காமல் ஒருவிதமாகப் பார்த்தாலே அவர் மனம் வாடிவிடும். அவர் ஒழுங்காக உண்ணமாட்டார்.

பாக்கியாத் ஆசிரியர்கள் யாரும் உலகக் கல்வி, மார்க்கக் கல்வி என்று பிரித்துப் பார்க்காமல் கல்வி என்ற அடிப்படையில் எல்லாவற்றையும் சேர்த்தே சொல்லிக்கொடுத்தார்கள். அவர்களிடம் நாங்கள் திருக்குர்ஆனை மட்டும் படிக்கவில்லை. திருக்குறளையும் சேர்த்தேதான் படித்தோம்.

-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி