வெள்ளி, 9 ஜூன், 2017

இறைப்பணியாற்றும் ஆலிம்களை உருவாக்குவோம்!


-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.

தமிழ்நாட்டின் பாரம்பரிய மத்ரஸாக்கள் பல இருக்க அவற்றுக்கு மத்தியில் இரட்டைக் கல்வி வழங்கும் நவீன மத்ரஸாக்கள் காலத்தின் தேவை கருதி ஆங்காங்கே புதிதாகத் தோன்றின. காலச் சூழலின் மாற்றத்தால் பாரம்பரிய மத்ரஸாக்கள் சில நவீன மத்ரஸாக்களாக மாற்றப்பட்டன. நவீன மத்ரஸாக்கள் சில ஒருங்கிணைந்த ஐந்தாண்டுப் பாடத்திட்டத்தையும், சில ஏழாண்டுப் பாடத்திட்டத்தையும் கொண்டு செயல்பட்டு வருகின்றன. சென்னையில் மட்டும் ஏழெட்டு நவீன மத்ரஸாக்கள் உள்ளன.

இரட்டைக் கல்வி வழங்கும் நவீன மத்ரஸாக்கள் தோன்றியபோது பாரம்பரிய மத்ரஸாக்களில் பணியாற்றுகின்ற பேராசிரியர்களும் மற்ற ஆலிம்களும் அவற்றை விமர்சனம் செய்தார்கள். அரபுக் கல்லூரிக்குள் உலகக் கல்வியும், கணினிக் கல்வியும், ஆங்கிலமும் நுழையும்போது மார்க்கக் கல்வியின் மாண்பு குறையும்; சிதைக்கப்படும் என்றெல்லாம் கருத்துக் கூறினார்கள். இரண்டு கல்வியையும் ஒருசேரப் படிக்க முடியாது என்று தெரிவித்தார்கள். அவர்களெல்லாம் மூக்கில் விரல் வைக்கும் அளவிற்கு மாணவர்களை உருவாக்கி இரட்டைக் கல்வியையும் வழங்கி, இரண்டு மூன்று பட்டங்களைக் கையில் கொடுத்து அனுப்பினார்கள்; அனுப்பிக் கொண்டிருக்கின்றார்கள். அவர்கள் நடத்திய பட்டமளிப்பு விழாக்களைக் கண்டு சமுதாயத் தலைவர்கள் பாராட்டினார்கள். ஆனால் இரண்டு மூன்று பட்டங்களைப் பெற்று நவீன மத்ரஸாக்களிலிருந்து வெளியேறிய ஆலிம்கள் என்ன செய்துகொண்டிருக்கின்றார்கள்? இந்தச் சமுதாயம் பயன்பெறும் வகையில் பணியாற்றிக்கொண்டிருக்கின்றார்களா?

ஆலிம் பட்டத்தோடு பி.காம்., அல்லது பி.சி.ஏ. பட்டம் பெற்ற பலர் பெரும் பெரும் நிறுவனங்களில் பணி வாய்ப்பைப் பெற்றுச் சம்பாதிக்கத் தொடங்கினார்கள். கணினித் துறையில் கிடைத்த பணியில் அமர்ந்தார்கள். தட்டச்சர்களாகவும் டிசைனர்களாகவும் பணியில் சேர்ந்தார்கள். இதுதான் சமுதாயப் பணியா? இதுதான் ஓர் ஆலிம் மேற்கொள்ள வேண்டிய இறைப்பணியா?
ஒருவர் தட்டச்சராக, கணக்கராக, டிசைனராக, நூல் வடிவமைப்பாளராகப் பணியாற்ற அரபுக் கல்லூரியில் ஐந்தாண்டுகளோ, ஏழாண்டுகளோ படித்து, ஆலிம் பட்டம் பெற வேண்டிய அவசியமில்லை. இதையெல்லாம் ஆலிம் அல்லாதவர்களே செய்வார்கள். ஆலிம்களுக்கான பணி என்ன?

திருக்குர்ஆனோடும் நபிமொழியோடும் தொடர்புடைய பணிகளை ஆற்றுவதற்கு ஆள் பற்றாக்குறை உள்ளது. அதனைப் போக்குவதற்குத்தான் அரபுக் கல்லூரிகள் உருவாக்கப்பட்டன. மரபுவழி அரபுக் கல்லூரிகளுக்கு மாணவர்களின் வருகை குறைவாக இருந்ததால்தான் ஆங்கிலக் கல்வியையும் கணினிக் கல்வியையும் இணைத்து, மாணவர்களை ஈர்க்க வேண்டிய தேவை ஏற்பட்டது. அதனால்தான் அதை ஆலிம்களுள் ஒரு குழுவினர் வரவேற்றனர். ஆனால் பட்டம் பெற்று வெளியேறிய ஆலிம்களின் சேவை சமுதாயத்திற்குக் கிடைக்கப் பெறாதபோது நவீனக் கல்லூரிகளை ஆதரித்த ஆலிம்கள் பலர் முகம் சுழிக்கத் தொடங்கிவிட்டனர்.

ஐந்தாண்டுகள் பயின்று, அதன் பின் ஓராண்டுப் பயிற்சிக்குப்பின் பட்டம் பெற்று வெளிவருகின்ற ஒரு மருத்துவர் மருத்துவப் பணியை மேற்கொள்ளாமல் அரிசி வியாபாரம் செய்வதிலும் ஏற்றுமதிலிஇறக்குமதித் தொழிலிலும் ஈடுபட்டால் அவரால் சமுதாயத்திற்கு நன்மையா? ஒரு வழக்கறிஞர் தம் தொழிலை விட்டுவிட்டு செல்போன் விற்பனை செய்யத் தொடங்கினால் அவரால் சமுதாயத்திற்குக் கிடைக்க வேண்டிய பயன் கிடைக்காமல் போய்விடுகின்றதல்லவா!

திருக்குர்ஆன் விரிவுரையையும் நபிமொழி விளக்கங்களையும் இஸ்லாமியச் சட்ட நுட்பங்களையும் கசடறக் கற்று, மொழிப்புலமையோடு வெளிவருகின்ற ஒருவர் ஒரு மஸ்ஜிதில் இமாமாகச் சேர்ந்து மக்களைச் சீர்திருத்தம் செய்யும் பணியில் ஈடுபடுதல், ஓர் அரபுக் கல்லூரியில் சேர்ந்து, கற்ற கல்வியைச் சிறப்பாகக் கற்பித்து திறன்மிகு மாணவர்களை உருவாக்குவதில் தம்மை அர்ப்பணித்துக்கொள்ளுதல், அரபுமொழி நூல்களைத் தாய்மொழியில் மொழியாக்கம் செய்யும் பணியில் ஈடுபடுதல், பாலர்களுக்கான குர்ஆன் வகுப்புகளைத் தொடங்கி நடத்துதல், இஸ்லாமிய அழைப்புப் பணியில் ஈடுபடுதல் உள்ளிட்ட நேரடி இறைப்பணிகளில் ஈடுபட வேண்டும். அல்லது இறைப்பணி சார்ந்த வேறு சமுதாயப் பணிகளில் ஈடுபடவே ஆலிம்கள் தேவை. அதற்காகத்தான் சமுதாயம் ஆலிம்களை எதிர்பார்க்கிறது. இவைபோன்ற பணிகளுக்குத்தான் ஆள் பற்றாக்குறை உள்ளது. இவற்றையெல்லாம் விட்டுவிட்டு, நான் ஒரு பி.காம். பட்டதாரி; எம்.காம். முடித்துவிட்டு ஒரு நிறுவனத்தில் கணக்கராகப் பணியாற்றவுள்ளேன் என்ற எண்ணத்தோடு வெளிவரும் ஆலிம்களை அரபுக் கல்லூரிகள் உற்பத்தி செய்தால் திருக்குர்ஆனைப் போதிப்பதற்கும் அதன் விளக்கங்களை மக்களுக்கு எடுத்துச் சொல்வதற்கும் யார் முன்வருவார்?

ஆலிம்களுக்கு ஆங்கிலம் தெரியாது என்ற குறையைப் போக்க வீரியம் கொண்டெழுந்த நவீன மத்ரஸாக்கள் ஆங்கிலம், கணினிப்பாடம் உள்ளிட்டவற்றை இணைத்து இரட்டைக் கல்வி முறையை அறிமுகப்படுத்தின. இந்தப் புதுமையைக் கண்ட அறிஞர்கள், இச்சமுதாயத்திற்கு மிகுந்த பயனை வழங்கக்கூடிய நவீன ஆலிம்கள் உருவாகி வரப்போகின்றார்கள் என்ற கனவோடு இருந்தார்கள். ஆனால் அவர்களின் கனவு பகற்கனவாகப் பொய்த்துப் போனது. ஆம். அவர்கள் தாம் பணியாற்றத் தேர்ந்தெடுத்துக்கொண்ட தளங்கள் அரபுக் கல்லூரியில் கற்ற மார்க்கக் கல்வியோடு தொடர்பில்லாதவை. எனவே நவீன அரபுக் கல்லூரியை நடத்துகின்ற நிர்வாகிகளும் முதல்வர்களும் தம் கல்வித் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளார்கள். சமுதாயத்திற்குச் சேவை செய்யும் ஆலிம்களை உருவாக்குவதற்குப் பதிலாக, நன்றாகச் சம்பாதிக்கக்கூடிய இளைஞர்களை உருவாக்கியுள்ளார்கள் என்றுதான் ஆலிம்கள் விமர்சனம் செய்கின்றார்கள். ஆகவே மார்க்கக் கல்வி கற்பதன் அடிப்படை நோக்கம் சிதைவுற்ற பிறகு பாடத்திட்டம் குறித்து மறுபரிசீலனை செய்வது காலத்தின் கட்டாயமே.

என்னதான் தீர்வு? பி.காம்., பி.சி.ஏ. போன்ற தொழில்சார் பட்டப் படிப்புகளைக் கொடுக்காமல் பி.ஏ. தமிழ், பி.ஏ. ஆங்கிலம், பி.ஏ. அரபி என மொழி சார்ந்த பட்டப் படிப்புகளை வழங்கினால் ஓர் ஆலிம் தமிழ் அல்லது ஆங்கில இலக்கணத்தைத் தெளிவாக அறிந்து வெளியே வருவார். இறைப்பணியாற்றும்போது அது அவருடைய சொற்பொழிவுக்கும் எழுத்துக்கும் மிகுந்த பயனாகவும் உறுதுணையாகவும் இருக்கும். தமிழ்வழி பயின்று வருவோருக்குத் தமிழ் பி.ஏ.வும், ஆங்கில வழி பயின்று வருவோருக்கு ஆங்கில பி.ஏ.வும் வழங்கினால் அது அவர்கள் உலகின் எந்த மூலைக்குச் சென்றாலும் இறைப்பணியாற்ற, சொற்பொழிவாற்ற, பத்திரிகைகளில் எழுத, அரபு நூல்களை மொழியாக்கம் செய்யப் பேருதவியாக இருக்கும். மேற்படிப்பை விரும்புவோர் எம்.ஏ., எம்.ஃபில்., பிஎச்.டி. வரை செல்ல எந்தத் தடையும் இல்லை. இத்தகைய ஆலிம்களால் சமுதாயம் மிகுந்த பயனடையும் என்று நம்பலாம்.

ஓர் ஆலிம் கணினியை இயக்கப் பழகுவது இறைப்பணிக்கு உறுதுணையாக இருக்க வேண்டுமே தவிர அதை வைத்து வாழ்வாதாரத்தை மட்டும் ஈட்டும் பணியில் ஈடுபடக் கூடாது. அரபு நூல்களைக் கணினியில் பார்க்க, கட்டுரைகள், கடிதங்கள் உள்ளிட்டவற்றைச் சுயமாகத் தட்டச்சு செய்ய, இன்னபிற தேவைகளுக்காக அதைக் கற்றுக்கொள்வதில் தவறில்லை. எத்தனைதான் கற்றாலும் அதையெல்லாம் வைத்து, இறைப்பணியை மேற்கொள்ள வேண்டுமே தவிர தாம் மட்டும் நல்லபடியாக வாழ்ந்தால் போதும் என்ற எண்ண ஓட்டத்தோடு பெரும் நிறுவனங்களுக்குச் சம்பாதிக்கப் புறப்பட்டுவிட்டால் இச்சமுதாயத்திற்குச் சேவை செய்பவர் யார்? கல்வியையும் திறமையையும் உறுதுணையாகக் கொண்டு வாழ்வாதாரத்தைச் சம்பாதிக்க வேண்டாம் என்று சொல்லவில்லை. மாறாக, அரபுக் கல்லூரியிலிருந்து வெளியே வருவோரின் அடிப்படைப் பணி இறைப்பணியாக இருக்க வேண்டும் என்றுதான் சொல்கிறேன்.

இறைப்பணியைச் செய்துகொண்டே அவரவர் தத்தம் திறமையைக்கொண்டு உபதொழிலாக எதை வேண்டுமானாலும் செய்துதமக்கான வாழ்வாதாரத்தை ஈட்டிக்கொள்ளலாம். அதில் தவறில்லை. அதேநேரத்தில் இறைப்பணியை உதறித் தள்ளிவிட்டு, வாழ்வாதாரம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு வேறு பணிக்குச் செல்வதைத்தான் ஆலிம்கள் விமர்சனம் செய்கின்றார்கள்.    

அக்காலக் கட்டத்தில் ஹைதராபாத் சமஸ்தானத்தில் மவ்லவிகளுக்கு அவரவரின் தகுதிக்கேற்ப அரசுப் பதவி கொடுக்கப்பட்டு வந்தது.  அப்போதைய ஹைதராபாத் நவாப் நிஜாமுல் முல்க் அஃப்ளலுத்தவ்லா ஸாலார் ஜங்க் பஹாதுர், மார்க்கம் அறிந்த உலமா பெருமக்களை மிகவும் கண்ணியப்படுத்துபவராகத் திகழ்ந்தார். அந்த அடிப்படையில் அண்ணல் அஃலா ஷாஹ் அப்துல் வஹ்ஹாப் அல்காதிரீ (ரஹ்) அவர்களுக்கு உதவி ஆட்சியர் (சப் கலெக்டர்) பதவி தேடி வந்தது. இருப்பினும் அப்பதவியை ஏற்க மறுத்த ஹள்ரத் அவர்கள், இப்பதவியை ஏற்பதால் உலகியல் ஆதாயம் கிடைக்குமே தவிர நாம் கற்ற கல்வியின் மூலம் நமது சமுதாயத்திற்கு என்ன பலன் விளைவிக்க முடியும் என்ற கோணத்தில் சிந்தித்தார்கள்.

அதன்பின்னரே ஹள்ரத் அவர்கள் அல்பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் அரபுக் கல்லூரியை வேலூரில் உருவாக்கினார்கள். அந்தத் தாய்க் கல்லூரியிலிருந்து வெளிவந்தோர்தாம் இன்று தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு மத்ரஸாக்களை உருவாக்கி நடத்திக் கொண்டிருக்கின்றார்கள். அவர்களின் தியாகம் மட்டும் இல்லையென்றால் இன்று இவ்வளவு ஆலிம்களைக் கண்டிருக்க முடியாது என்பதை இன்றைய இளைய தலைமுறையினர் எண்ணிப் பார்க்க வேண்டும். சுயநலத்தைவிடப் பொதுநலமே ஆக்கத்திற்கும் நன்மைக்கும் காரணமாக அமையும் என்பதையும் மனத்தில் பதிய வைத்துக்கொள்ள வேண்டும்.

எனவே எதிர்வரும் காலங்களில் அரபுக் கல்லூரியிலிருந்து வெளிவரும் ஆலிம்கள் பல்வேறு திறமைகளைக் கொண்டிருந்தாலும் "அத்தனை திறமைகளையும் அல்லாஹ்வின் பாதையில்தான் செலவழிப்பேன்'' என்ற வைராக்கியத்தோடு வெளிவருவார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்.

=============================================






கருத்துகள் இல்லை: