வியாழன், 11 மே, 2017

சமச்சீர்க் கல்வி சாத்தியமே!


-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.


கற்றலும் கற்பித்தலும் ஆதி காலந்தொட்டு வாழையடி வாழையாக நடைபெற்று வருகின்றன. ஒவ்வொரு காலத்திலும் கற்றல்-கற்பித்தல் முறைகள் மாறிக்கொண்டே இருக்கின்றன. தொடக்கக் காலத்தில் குருவுக்கும் சீடனுக்கும் நூல்களோ எழுதுகோல்களோ எதுவும் இருந்ததில்லை. சீடர்கள் வந்து தம் குருமுன் பணிவோடு அமர்வார்கள். குருவோ தமக்குத் தெரிந்ததையெல்லாம் சொல்லிக் கொடுப்பார். எழுத்துகளைக் கற்பிக்க அவர்களின் முதுகில் எழுதும் பழக்கம் இருந்தது. பின்னர் மண்ணில் எழுதினார்கள். அடுத்தக் காலக்கட்டத்தில் குரு கற்பிப்பதை மாணவர்கள் எழுதுகோல்களால் எழுதிக்கொண்டார்கள். அவர்கள் தம்மிடருந்த எழுத்தாணிகளால் பனையோலைகளிலும் காய்ந்த தோல்களிலும் எழுதிக்கொண்டார்கள். அடுத்தக் காலக்கட்டத்தில் மையைத் தொட்டு இறகுகளாலும் மூங்கில் குச்சிகளாலும் எழுதிக்கொண்டார்கள். இப்படியே வளர்ச்சியடைந்து காகிதத்தில் கரிக்கோல்களால் (பென்சில்) எழுதும் நிலைக்கு உயர்ந்தான். பேனாவில் மை ஊற்றி எழுதும் நிலையை அடைந்து, எழுதுவதற்கென ஆயத்த நிலையில் உள்ள பந்துமுனைப் பேனாவைப் பயன்படுத்தும் காலத்தை எய்தினான். அத்தோடு தட்டச்சு எந்திரத்தின்மூலம் எழுதத் தொடங்கி, அதுவும் பழையதாகிவிட்டதால் கணினித் தட்டச்சுக்கு இப்போது மனிதன் மாறிவிட்டான். அதையும் தாண்டி வார்த்தையைச் சொல்லச் சொல்லத் தானாகவே எழுதிக்கொள்ளும் தொழில்நுட்பத்தையும் கண்டுபிடித்துவிட்டான். இவ்வாறு ஒன்றுக்குள்ளேயே முடங்கிக் கிடக்காமல், படிப்படியாக நகர்ந்து அடுத்தடுத்தக் கட்டத்தை அடைவதுதான் வளர்ச்சி. 


ஆசிரியர் கற்பிப்பதை நேரடியாகக் கேட்டு, மாணவர்கள் தம் ஐயங்களை உடனுக்குடன் தீர்த்துக்கொள்ளும் கற்பித்தல் முறைக்கு இணையே கிடையாது. தம் பாடத்தில் நன்கு தேர்ச்சிபெற்ற ஆசிரியர்கள்தாம் அந்தப் பாடத்தை எளியமுறையில் மாணவர்களுக்குக் கற்பிக்கவும் விளக்கிக் கூறவும் முடியும். அத்தகைய ஆசிரியர்கள் எல்லா மாணவர்களுக்கும் கிடைப்பது அரிது. 


தமிழ், ஆங்கிலம், கணிதம், புவியியல், வரலாறு ஆகிய ஐந்து பாடங்களைக் கற்கின்ற மாணவனிடம், உனக்கு எந்தப் பாடம் மிகவும் பிடிக்கும்? என்று கேட்டால், எந்தப் பாடத்தை நன்றாகப் புரிந்துகொள்ளும்படி ஆசிரியர் நடத்தினாரோ அந்தப் பாடத்தைத்தான் கூறுவான். மற்ற பாடங்கள் அவ்வளவாகப் பிடிக்காமல் போனதற்குக் காரணம் அந்தப் பாடங்களை அவன் விளங்கிக்கொள்ளுமாறு செவ்வனே நடத்துகின்ற ஆசிரியர்கள் அவனுக்குக் கிடைக்கவில்லை என்பதே பொருள். ஒரு பள்ளியில் +2 கணிதவியலில் மிகுதியான மதிப்பெண்கள் பெறுகின்ற மாணவர்கள் மற்றொரு பள்ளியில் அதே கணிதவியல் பாடத்தில் குறைந்த மதிப்பெண்கள் பெறுகின்றார்கள். ஏன்? அவர்களுக்கு அப்பாடத்தை அவர்களின் மனதில் பதியுமாறு திறம்பட நடத்துகின்ற ஆசிரியர் கிடைத்தார்; இவர்களுக்குக் கிடைக்கவில்லை. இதுதான் மாணவர்களுக்கு மத்தியில் மதிப்பெண் வேறுபாடு ஏற்பட முக்கியக் காரணம். 
அப்படியென்றால் திறன்மிகு ஆசிரியர்கள் சிலர்தாம் இருப்பார்கள்; அவர்கள் எல்லா இடங்களுக்கும் சென்று பாடம் நடத்துவது சாத்தியமா? ஆனால் தற்காலக் கணினி யுகத்தில் அனைவருக்கும் ஓர் ஆசிரியர் பாடம் நடத்துவது சாத்தியமாகியுள்ளது. அத்தகைய அறிவியல் தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்த யுகத்தில் நாம் வாழ்கிறோம். அதற்கான வாய்ப்பு எளிதாக இருந்தும் அதைப் பயன்படுத்திக்கொள்ளும் திட்டம்தான் நம்மிடம் இல்லை. 


இன்று ஸ்மார்ட் கிளாஸ் என்று சிலபல பள்ளிக்கூடங்களில் அதிகமான கல்விக் கட்டணத்துடன் நடைபெறுகின்ற கணினிவழிக் கல்வியின் இன்னொரு கோணம்தான் காணொலிக் குறுவட்டுத் திட்டம் (டிவிடி). இத்திட்டத்தின்படி ஒவ்வொரு பாடத்திலும் நன்கு தேர்ச்சிபெற்ற ஆசிரியர்களைத் தேர்வுசெய்து, அவர்களை அந்தந்த வகுப்புப் பாடத்தை நடத்தச் செய்து, அதை அப்படியே காணொலியாகப் பதிவு செய்துவிட வேண்டும். பின்னர் அதைக் காணொலிக் குறுவட்டுகளாக உருவாக்கி ஒவ்வொரு பள்ளிக்கூடத்திற்கும் வழங்கி அந்தந்த வகுப்பில் அந்தப் பாடத்தைக் கணினியின்மூலம் வெண்திரையில் காண்பிக்க வேண்டும். இதனால் குறிப்பிட்ட அளவே உள்ள திறன்மிக்க ஆசிரியர்களின் அறிவு எல்லாப் பள்ளி மாணவர்களுக்கும் சமச்சீரான வகையில் கிடைக்கும். 


ஓர் ஆசிரியர் தம் மாணவர்கள் முன்னிலையில் நேரடியாக நடத்துவதைவிட, அப்பாடத்தையே அவர்கள் திரையில் காணும்போது இன்னும் சற்று ஆவலாகப் பாடத்தைக் கவனிப்பார்கள். அது மட்டுமின்றிக் காட்சிவடிவில் பாடத்தைக் காணும்போது அது அவர்களின் உள்ளத்தில் எளிதாகப் பதியும் என்று சொல்ல வேண்டிய அவசியமில்லை. இவ்வாறு செய்வதால் தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாணவ, மாணவியர்க்கும் சமச்சீரான கல்வி சென்றடையும் என்பதில் கிஞ்சிற்றும் ஐயமில்லை. 


அப்படியானால் அங்கங்குள்ள மற்ற ஆசிரியர்கள் என்ன செய்வார்கள்? மாணவர்கள் தம் பாடத்தைக் குறிப்பெடுக்கின்றார்களா என்று கவனிப்பதும், அவர்களை வீட்டுப்பாடம் செய்துவருமாறு கூறி, அதை மறுநாள் திருத்திக்கொடுப்பதும் அப்பாடம் தொடர்பான அவர்களின் ஐயங்களைக் கேட்டு, அவற்றைத் தீர்த்து வைப்பதும், அவ்வப்போது சின்னச்சின்ன சோதனை (டெஸ்ட்) செய்து மாணாக்கர்களின் பாடத்திறனை அறிந்துகொள்வதும் அவர்களின் அன்றாடப் பணிகளாகும்.  அந்தந்தப் பாடத்தில் தேர்ச்சிபெற்ற ஆசிரியர்களால்தாம் அந்தப் பணியைச் செவ்வனே நிறைவேற்ற முடியும். ஆதலால் அவர்கள் அங்கு இருப்பது இன்றியமையாததாகும். 


இதன் நீட்சியாக, தமிழக அரசு நடத்துகின்ற போட்டித் தேர்வுகளுக்கான பாடத்திட்டத்தை, அதில் நன்கு தேர்ச்சிபெற்ற பேராசிரியர்கள்மூலம் அப்படியே காணொலிக் குறுவட்டில் பதிவுசெய்து, தேர்வில் கலந்துகொள்ள விண்ணப்பிக்கும் ஒவ்வொரு தேர்வருக்கும் வழங்கிவிட்டால் எல்லோரும் சமவாய்ப்பைப் பெறுவார்கள். தற்போதைய சூழலில் போட்டித் தேர்வுகள் பலவற்றில் நகரத்தில் உள்ளவர்களைப் போன்று கிராமங்களில் உள்ளவர்களால் தேர்ச்சிபெற முடியவில்லை என்றொரு குறை உண்டு. அதற்கான முக்கியக் காரணம், படிப்பகங்களும் பயிற்சி நிலையங்களும் நகரத்தில் உள்ள அளவிற்குக் கிராமத்தில் இல்லை என்பதுதான். இதை முற்றிலும் துடைத்தெறிந்து அனைவருக்கும் சமவாய்ப்பை வழங்கும் திட்டம்தான் காணொலிக் குறுவட்டுத் திட்டம். 


ஏழை, செல்வர், உயர்சாதி, கீழ்ச்சாதி என்ற எந்தப் பாகுபாடுமின்றி அனைவருக்கும் சமச்சீரான கல்வியை வழங்கி, வேலைவாய்ப்பிலும் சமவாய்ப்பை ஏற்படுத்தும் தொழில்நுட்பமும் அதற்கான வழியும் இருக்கும்போது இன்னும் ஏன் அதற்கான தீர்வை நோக்கி நகராமல் பழைய ஓலைச்சுவடிக் காலத்திலேயே நாம் முடங்கிக் கிடக்க வேண்டும்?============




கருத்துகள் இல்லை: