செவ்வாய், 18 ஜூலை, 2017

இறைநம்பிக்கையை வலுப்படுத்திக்கொள்வோம்!


-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.

இந்திய அளவிலும் உலக அளவிலும் முஸ்லிம்களுக்கு எதிராக உருவாக்கப்பட்டுள்ள அச்சவுணர்வைக் கண்டு பலர் பீதியில் உறைந்துள்ளனர்; வெளியே தனியாகச் செல்ல அஞ்சுகின்றனர்.  ஆனால் இத்தகைய நிலை குறித்து முஸ்லிம்கள் யாரும் அஞ்சவோ பீதியடையவோ தேவையில்லை. இது முஸ்லிம்களுக்கு எதிராக உருவாக்கப்பட்டுள்ள செயற்கையான சூழ்நிலைதான்.

முஸ்லிம்கள் என்ற பெயரைக் கேட்டவுடனே பிற சமுதாய மக்கள் மனங்களில் அவர்களைப் பற்றிய கசப்பான உணர்வு ஏற்பட எதிரிகள் செய்துவருகின்ற செயற்கையான சூழ்ச்சி வலை இது.  மாட்டுக்கறி என்றோ, தீவிரவாதி என்றோ எதையாவது சொல்லி அவர்களை அடித்தால் பொதுமக்கள் கண்டுகொள்ளாத மனிதாபிமானமற்ற சூழ்நிலையை உண்டாக்கி வைத்துள்ளார்கள்.  இதைக் கண்டு முஸ்லிம்கள் கலக்கமுறத் தேவையில்லை. ஷைத்தானின் சித்துவிளையாட்டுகளுள் இதுவும் ஒன்று.
இத்தகைய சூழ்ச்சி வலை பின்னப்பட்டுள்ள இத்தருணத்தில் முஸ்லிம்களாகிய நாம் அனைவரும் இறைநம்பிக்கையை வளர்த்துக்கொண்டு இறையச்ச உணர்வை மேம்படுத்திக்கொள்ள வேண்டும். அசைக்க முடியாத இறைநம்பிக்கை ஒன்றுதான் எதையும் கண்டு கலக்கமடையாத மனப்பான்மையை உருவாக்கும். அது ஒன்றே இறைவனுக்கு மட்டும் அஞ்ச வேண்டிய அவசியத்தைத் தெளிவாக்கும்.  அவனுக்கு மட்டுமே அஞ்சுவோர் யாருக்கும் அஞ்சத் தேவையில்லை என்பதை உணர்த்தும்.

அதனால்தான் நபி (ஸல்) அவர்கள் தம்மோடு பயணம் செய்த சிறுவரான அனஸ் (ரளி) அவர்களைப் பார்த்து, இவ்வாறு அறிவுரை நல்கினார்கள்: 
நான் ஒரு நாள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குப் பின்னால் (வாகனத்தில் அமர்ந்து) இருந்தேன். அப்போது அவர்கள், "சிறுவனே! நான் உனக்குச் சில விஷயங்களைக் கற்றுத் தருகிறேன். (அவற்றை நீ நினைவில் வைத்துக்கொள்.) நீ அல்லாஹ்(வின் உத்தர)வைப் பேணிக்காத்திடு. அவன் உன்னைப் பேணிக் காப்பான். நீ அல்லாஹ்வை (அவனுடைய கடமைகளை)ப் பேணி நடந்துகொள்.  அவனை உனக்கு முன்பாக நீ காண்பாய். நீ யாசித்தால் அல்லாஹ்விடமே யாசிப்பாயாக. உதவி கோரினால் அல்லாஹ்விடமே உதவி கோருவாயாக.
அறிந்துகொள்! உனக்கு நன்மை செய்ய ஒட்டுமொத்தச் சமுதாயமும் ஒன்றுசேர்ந்தாலும் உனக்கென அல்லாஹ் எதை எழுதிவிட்டானோ அதைத் தவிர வேறெந்த நன்மையையும் அவர்களால் உனக்குச் செய்ய இயலாது. (அவ்வாறே) உனக்கு ஏதேனும் தீங்கிழைக்க அவர்கள் அனைவரும் ஒன்றுதிரண்டாலும் உனக்கெதிராக அல்லாஹ் எதை எழுதிவிட்டானோ அதைத் தவிர வேறெந்தத் தீங்கும் அவர்களால் உனக்கு இழைத்திட இயலாது. (விதி எழுதிய) பேனாக்கள் உயர்த்தப்பட்டுவிட்டன. (விதி எழுதப்பெற்ற) ஏடுகள் உலர்ந்துவிட்டன'' என்று கூறினார்கள்.   (நூல்: திர்மிதீ: 2440)

 ஒரு மனிதன் தன் இறைநம்பிக்கையை வலுப்படுத்திக்கொள்ளத் தேவையான எல்லா அறிவுரைகளும் இந்த நபிமொழியில் உள்ளன. அல்லாஹ்வின் கடமைகளைச் செவ்வனே நிறைவேற்றுவதன்மூலம் அவனை நாம் நம் மனத்தில் பாதுகாத்தால் அவன் நம்மைப் பாதுகாப்பான் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையை இளநெஞ்சில் விதைக்கின்றார்கள். எப்போது உதவி கேட்டாலும் அல்லாஹ்விடமே உதவி கேட்க வேண்டும் என்பதையும் ஆழமாகப் பதியச் செய்கிறார்கள். இவ்வுலகமே சேர்ந்து நமக்கு எதிராகச் சூழ்ச்சி செய்தாலும், அல்லாஹ் விதிக்காத தீமையை அவர்கள் ஒருபோதும் நமக்குச் செய்துவிட முடியாது என்ற திடமான நம்பிக்கையை வளர்க்கின்றார்கள். எல்லாமே எழுதப்பட்டுவிட்டது. அதன்படியே நடப்பவை யாவும் நடக்கும். இனி கவலைப்பட ஒன்றும் இல்லை என்பதை உணர்த்துகிறார்கள்.

ஆகவே முஸ்லிம்களே, நாம் கவலைப்படவோ கலக்கமுறவோ ஒன்றும் இல்லை. நடப்பவை எல்லாம் நல்லவையாகவே நடக்கும் என்ற திடமான இறைநம்பிக்கையே நம்மைக் காத்துக்கொள்ளும் கேடயமாகும். கொஞ்சம் கொஞ்சமாக நம் அடையாளத்தை மாற்றிக்கொள்ள நம் மனத்தை மாற்றும் வேலைதான் இப்போது நடந்துகொண்டிருக்கிறது. நாம் நம்முடைய புற அடையாளத்தை மாற்றிக்கொள்ள முனைந்துவிட்டால் அக அடையாளமான இறைநம்பிக்கையையும் (ஈமானையும்) தளர்த்திக்கொள்ள முனைந்துவிட்டோம் என்று பொருள். எனவே எவ்வளவுதான் சோதனை வந்தாலும் புற அடையாளத்தையும் அக அடையாளத்தையும் இழந்துவிடவே கூடாது.

முந்நூற்றுப் பதின்மூன்று பேர் ஆயிரம் பேரை வெற்றிகொள்ள உதவிய உயர்ந்தோன் அல்லாஹ் நமக்கு உதவமாட்டானா? ஆயிரம் பேரை எதிர்க்கும் வீரமும் பலமும் எங்கிருந்து அவர்களுக்கு வந்தது? அவர்களுடைய இறைநம்பிக்கையின் ஆழமும் அழுத்தமும்தான் காரணம். பன்னிரண்டு ஆண்டுக்கால ஆட்சியில் பல்வேறு மன்னர்களை எதிர்த்து, வெற்றிகொண்டு இஸ்லாமிய மார்க்கத்தைப் பரப்பும் துணிவு உமர் (ரளி) அவர்களுக்கு எவ்வாறு வந்தது? அசைக்க முடியாத இறைநம்பிக்கையின் பலம் அல்லவா?

இப்படிப் பல்வேறு இறைநம்பிக்கையாளர்களைச் சான்றாகக் காட்டிக்கொண்டே செல்லலாம். இஸ்லாமிய வரலாறு நெடுக அசைக்க முடியாத இறைநம்பிக்கையை மனத்தில் கொண்டவர்கள் மட்டுமே வெற்றிகண்டுள்ளார்கள் என்பதைச் சொல்லவும் வேண்டுமா? ஆகவே இவர்களுடைய சூழ்ச்சியைக் கண்டு கலங்காத மனம் கொண்டவர்களாகத் திகழ வேண்டுமானால் அது நம்முடைய அசைக்க முடியாத இறைநம்பிக்கையால் மட்டுமே முடியும். எனவே அதை வளர்த்துக்கொள்வதற்கான முயற்சியில் மட்டுமே நாம் கவனம் செலுத்த வேண்டும்.

எதிரிகளின் செயல்பாடுகளைக் கண்டு அச்சமடையத் தேவையில்லை. அது ஷைத்தானின் சூழ்ச்சி வலைகளுள் ஒன்றாகும். நம்முடைய இறைநம்பிக்கையைச் சிதைப்பதற்காக அவன் ஏவிவிடும் அடியாட்கள்தாம் அவர்கள். நம்மை இப்போது மோடி ஆளவில்லை. மோடியை ஆள்பவர்கள் யூதர்கள்.  அவர்கள்தாம் உலகம் முழுவதையும் ஆட்டிப் படைக்கின்றார்கள். அவர்களை ஆட்டிப் படைப்பவன்தான் அவர்கள் கடவுளாக வழிபடும் ஷைத்தான். ஆம், அவர்கள் ஷைத்தானைத்தான் வழிபடுகின்றார்கள். அவன்தான் அவர்களின் கடவுள். அவர்கள் ஒற்றைக் கண்ணனான தஜ்ஜாலை எதிர்நோக்கிக் காத்திருக்கின்றார்கள். அமெரிக்காவின் பணத்தில் பொறிக்கப்பட்டுள்ள பிரமிட் படத்தின் மேலே பாருங்கள் ஒற்றைக் கண் தெரியும். அதுதான் அவர்கள் எதிர்பார்த்து வழிபட்டுக்கொண்டுள்ள ஒற்றைக் கண்ணன் தஜ்ஜால். அந்த மனித ஷைத்தானைத்தான் அவர்கள் வழிபட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

எனவே நாம் அல்லாஹ்வுக்கு உதவி செய்தால் அவன் நமக்கு நிச்சயம் உதவி செய்வான். நாம்  அல்லாஹ்வுக்கு எவ்வாறு உதவி செய்வது? அவனுடைய கடமைகளைச் செவ்வனே நிறைவேற்றுவதுதான் நாம் அவனுக்குச் செய்யும் உதவியாகும். அக்கடமைகளுள் முதலாவது தொழுகையாகும். ஒவ்வொரு தடவை பாங்கு சொல்லப்படும்போதும் அதைக் காதில் கேட்காதவர்களைப்போல் நாம் அலட்சியப்படுத்துகிறோமே அதனால்தான் அல்லாஹ் இத்தகைய சோதனையை நம்மீது சாட்டியுள்ளான். நாம் அவன்மீதே நம்பிக்கை வைத்து அவனை மட்டும் வழிபட்டு வந்தால் நிச்சயமாக அவன் நம் எதிரிகளை எதிர்கொள்ளும் ஆற்றலை நமக்கு வழங்கி உதவி செய்வான் என்பது திண்ணம்.
திருக்குர்ஆனில் அல்லாஹ் கூறுவதைப் பாருங்கள்: தனக்கு உதவி செய்வோருக்கு அல்லாஹ்வும் நிச்சயமாக உதவுவான். நிச்சயமாக அல்லாஹ் ஆற்றல் உடையோனும் வல்லமை மிக்கோனும் ஆவான்.  பூமியில் அவர்களுக்கு நாம் வாய்ப்பை வழங்கினால் அவர்கள் தொழுகையைக் கடைப்பிடிப்பார்கள்... (22: 40-41)

அவன்மீதே நம்பிக்கை கொள்ள வேண்டும் என்றும் அவன்மீதே பொறுப்பை ஒப்படைக்க வேண்டும் என்றும் அல்லாஹ் பல இடங்களில் கூறுகின்றான்:

(இறைநம்பிக்கை கொண்டோரே!) அல்லாஹ் உங்களுக்கு உதவி புரிந்தால் உங்களை வெற்றி கொள்பவர்கள் ஒருவருமில்லை. உங்களை அவன் (கை) விட்டு விட்டாலோ அதற்குப் பின்னர் உங்களுக்கு யார்தாம் உதவி செய்ய முடியும்? ஆதலால், அல்லாஹ்வின் மீதே நம்பிக்கையாளர்கள் நம்பிக்கை கொள்ளட்டும். (3: 160)

 அவன்மீதே நம்பிக்கை வைத்திருப்பதற்கான அடையாளம்தான் தொழுகை. அதைச் செவ்வனே நாம் நிறைவேற்றினால்தான் அவனது உதவி நமக்குக் கிடைக்கும். அவனது உதவி கிடைத்துவிட்டால் நம்மை அச்சுறுத்தவோ வெல்லவோ யாருமில்லை. ஆகவே நம்பிக்கையை அவன்மீதே வைக்க வேண்டும். சுட்டெரிக்கின்ற சூரியக் கதிர்கள் காகிதத்தை எரித்துவிடுவதில்லை. அதேநேரத்தில் அந்தக் கதிர்களை ஒரு புள்ளியில் குவிக்கின்ற குவியாடி (லென்ஸ்) அந்தக் காகிதத்தைப் பொசுக்கிவிடுகிறது. அதுபோலவே இங்கு கொஞ்சம், அங்கு கொஞ்சம், பொருளாதாரத்தில் கொஞ்சம், வியாபாரத்தில் கொஞ்சம் என நம்முடைய நம்பிக்கை பலவற்றின்மீதும் சிதறிக் கிடக்கிறது. அவற்றையெல்லாம் குவித்து அல்லாஹ் ஒருவன்மீதான நம்பிக்கையாக நம் உள்ளத்தை மாற்றிவிட்டால் அவ்வுள்ளம் எதையும் எதிர்கொள்ளும் ஆற்றல்மிக்கதாக மாறிப்போகும். அதன்பின்னர் யாரும் நம்மை அச்சமூட்டவோ அச்சுறுத்தவோ முடியாது. மேலும் இறையச்சம் மட்டுமே நம் உள்ளம் முழுவதும் பரவியிருக்கும்போது வேறு எந்த அச்சமும் நம் உள்ளத்தில் தோன்றாது. 

எனவே அன்பான முஸ்லிம் சகோதர, சகோதரிகளே! நாம் அனைவரும் நம் நம்பிக்கையை ஒருமுகப்படுத்தி வலுப்படுத்த வேண்டும். அந்த இறைநம்பிக்கை ஒன்றுதான் நாம் வாழும் இம்மை-மறுமை வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக மாற்றிக்கொள்வதற்கான வழியாகும். அதுதான் தற்காலத்தில் நிகழ்ந்துகொண்டிருக்கிற நமக்கெதிரான அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதற்கான மாற்று மருந்தாகும். ஆகவே நம் இறைநம்பிக்கையைச் செம்மைப்படுத்திக்கொண்டு, இறையச்சத்தோடு வாழ்ந்தால் நாம் பயமோ அச்சமோ இன்றி இவ்வுலகில் வாழலாம். அத்தகைய முயற்சியை மேற்கொள்ள நாம் அனைவரும் விரைவோம்.
===============================




திங்கள், 17 ஜூலை, 2017

முனைவர் பட்டம் பெற்றபோது...

சென்னைப் பல்கலைக்கழகத்தில் 15 07 2017 அன்று நடைபெற்ற 159ஆவது பட்டமளிப்பு விழாவில் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் துரைசாமி அவர்களிடமிருந்து நான் முனைவர் பட்டம் பெற்றபோது...

-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.


ஞாயிறு, 2 ஜூலை, 2017

நோன்பு என்னை மாற்றியதா?

முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.

இறைவனின் உவப்பையும் திருப்தியையும் நாடி ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்றோம். சுவையான உணவிருந்தும் உண்ணாமல் மனதிற்குப் பிடித்த குளிர்பானங்கள் இருந்தும் பருகாமல்  அழகான மனைவியிருந்தும் ஊடல் கொள்ளாமல் என் மனதைக் கட்டுப்படுத்தி, இறைவன் என்னைப் பார்த்துக்கொண்டிருக்கிறான் என்ற சிந்தையோடு நோன்பு நோற்ற நான் இனிவரும் காலங்களிலும்  என் மனதைக் கட்டுப்படுத்துவேனா? என்று நம்முள் ஒவ்வொருவரும் கேட்டுக்கொள்ள வேண்டும்.

நோன்பு என்பது ஒவ்வொரு மனிதனின் மனதையும் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ளப் பழக்கப்படுத்துகின்ற பயிற்சிப் பட்டறை என்று சொல்கின்ற நாம் அந்தப் பயிற்சியில் முழுமையாக வெற்றிபெற்றோமா?
நோன்பு நோற்ற நிலையில் பொய், புறம் உள்ளிட்ட தீய பேச்சுகளைப் பேசாமல் நாவைக் கட்டுப்படுத்திய நான் இனிவரும் காலங்களிலும் அவ்வாறு கட்டுப்படுத்துவேனா?

அளவை நிறுவையில் குறைவு செய்யாமல் நேர்மையாக வியாபாரம் செய்த நான் இனி எப்போதும் அவ்வாறே செய்வேனா? அதையே என் இயல்பான பழக்கமாக மாற்றிக்கொள்வேனா? என்றெல்லாம்  நம்முள் ஒவ்வொருவரும் கேட்டுக்கொள்ள வேண்டும்.

ஒரு மனிதனின் கெட்ட பழக்கங்களெல்லாம் மாறுதலுக்கு உள்ளாகி அவன் நல்ல பழக்கங்களைக் கடைப்பிடிக்கத் தொடங்கிவிட்டால் உண்மையில் நோன்பு அவனுக்கு ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்று கருதலாம். ஏற்கெனவே தவறான வழியில் வியாபாரம் செய்தவன் தன்னைத் திருத்திக்கொண்டு நேர்மையாகப் பொருளீட்டத் தொடங்கிவிட்டால் இந்த நோன்பு அவனில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்திவிட்டது என்று சொல்லலாம். புறம் பேசுவதையும் பொய் பேசுவதையும் அறவே விட்டொழித்து வாய்மையை மட்டும் பேசத் தொடங்கிவிட்டால் நோன்பு கொடுத்த பயிற்சியில் தேர்ச்சி பெற்றுவிட்டான் என்று கூறலாம்.

இப்படியான எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லையானால் நாம் நோன்பைச் சரியாக நோற்கவில்லை என்றும், நம்முடைய நோன்புக்கு அல்லாஹ்விடமிருந்து முழுமையான நற்கூலி கிடைக்கவில்லை என்றும் நாம் தீர்மானித்துக்கொள்ள வேண்டியதுதான்.

ஒரு மாதம் முழுவதும் இறையச்சத்தோடு இருந்த நாம், அவன் தடுத்துள்ளவற்றைவிட்டுத் தவிர்ந்துகொள்கின்ற நாம், அந்த ஒரு மாதம் முடிந்தவுடன் மீண்டும் நம் பழைய நிலைக்கே திரும்பிவிடுவது எவ்வகையில் நியாயம்? அந்த ஒரு மாதம் மட்டும் அல்லாஹ் நம்மை உற்றுப் பார்ப்பதாகவும் பின்னர் நம்மைப் பார்க்காமல் கண்ணை மூடிக் கொள்வதாகவும் எண்ணமா? எந்த இறைவனுக்காக நாம் ஒரு மாதம் நோன்பு நோற்றோமோ அதே இறைவன்தான் எஞ்சிய காலங்களிலும் நம்மைப் பார்த்துக்கொண்டிருக்கிறான் என்பதை ஏன் மறந்தோம்? அந்த இறைவன் மன்னிப்பவனாக இருக்கின்ற அதேநேரத்தில் தண்டிப்பவனாகவும் இருக்கின்றான் என்பதை நாம் மறக்கலாமா?

ஒரு மாதம் முழுவதும் ஐவேளைத் தொழுகையைத் தவறவிடாமல் தொழுததோடு இரவுத்தொழுகை, உபரித்தொழுகையிலும் ஈடுபட்ட நாம் இதோ ஷவ்வால் பிறந்ததும் நம் கால்கள் மஸ்ஜிதை நோக்கிச் செல்ல மறுக்கின்றனவே ஏன்? ஒவ்வொரு நாளும் ஐவேளைத் தொழுகை கட்டாயக் கடமையல்லவா? நம்மைப் படைத்த இறைவனை ஒவ்வொரு நாளும் ஐவேளை தொழுக மறக்கலாமா? இதோ லுஹ்ர் தொழுகைக்கு பாங்கு சொல்லியாயிற்று. வாருங்கள், மஸ்ஜிதை நோக்கிச் செல்வோம்!
========================




செவ்வாய், 27 ஜூன், 2017

மனத்துணிவை இழந்துவிடாதீர்!


ஹாஃபிழ் ஜுனைத் ஷஹீதாக்கப்பட்ட பின், ஒருவர் தம் ஆற்றாமையையும் தம் எதிர்பார்ப்பெல்லாம் வீணாகி நிராசையாகிவிட்டதையும் மனம் நொந்து எழுதியிருந்தார். அவரது மனவேதனையை நாம் அனைவரும் உணர்கிறோம். முஸ்லிம்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்பதை உணர்கிறோம்.

ஆனால் இந்த நேரத்தில் நாம் மனத்துணிவை இழந்துவிடக்கூடாது. ஷைத்தானின் சூழ்ச்சி விளையாட்டைக் கண்டு நாம் நிராசையாகிவிடக் கூடாது. இப்போதுதான் நாம் நம்முடைய இறைநம்பிக்கையை வலுப்படுத்திக்கொள்ள வேண்டிய நேரம். அசைக்க முடியாத இறைநம்பிக்கையோடு ஷைத்தான்களை எதிர்கொண்டால் இறையுதவி மிக அருகிலேயே உள்ளது என்பதை நாம் ஒருபோதும் மறந்துவிட வேண்டாம். பல உயிர்களை இழந்துதான் இந்த இஸ்லாமிய மார்க்கம் தலைநிமிர்ந்து நிற்கிறது. இனி இந்த மார்க்கத்திற்குத்தான் மிகப் பெரிய வெற்றி. உலகெங்கும் இஸ்லாமிய மார்க்கத்தை ஊன்றிப் படிக்கக்கூடிய சூழ்நிலையும் கூர்ந்து கவனிக்கக்கூடிய நிலையும் பரவலாகக் காணப்படுகிறது.

இத்தருணத்தில் நாம் செய்ய வேண்டியவை, இறைவழிபாடும், பிரார்த்தனையும், கூடி வாழ்தலுமே ஆகும். சாதி, சமய வேறுபாடின்றி ஒருவருக்கொருவர் உதவி செய்யும் மனப்பான்மை கொண்ட நம்மை அல்லாஹ் ஒருபோதும் கைவிட மாட்டான். யாரும் மனத்துணிவை இழந்துவிடாதீர்கள்.


-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி 

வியாழன், 15 ஜூன், 2017

ஒற்றைப் படை இரவுகளும் நாமும்


 ரமளானின் கடைசிப் பத்து நாள்களில் உள்ள ஒற்றைப்படை இரவுகளில் லைலத்துல் கத்ரைத் தேடுங்கள்என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: புகாரீ: 2017)

கடைசிப் பத்து இரவுகளில் லைலத்துல் கத்ரைத் தேடி நல்லறங்கள் செய்ய மக்களைத் தூண்டாமல் நாங்கள் பேசுவதை நீங்கள் கேட்டுக்கொண்டே இருங்கள் என்று அடிப்படையில் ஆங்காங்கே பயான் நிகழ்வுகள் நடத்தப்படுகின்றன. பயான் தேவைதான். எந்த நேரத்தில் அது தேவையோ அப்போது மட்டுமே அதை வழங்க வேண்டும். எப்போது பார்த்தாலும் பயான்தானா?

சில பள்ளிகளில் ஒற்றைப்படை இரவுகளில் பயான், சில பள்ளிகளில் கடைசிப் பத்து இரவுகளும் பயான் என்று வைப்பது எவ்வகையில் நபிகளாரின் கூற்றை நடைமுறைப்படுத்தியதாக அமையும்? ஒற்றைப்படை இரவுகளில் தனிமனிதச் செயல்பாடுகளே அவரவரின் வினைச்சுவடியை நிரப்பும். நன்மைகளை அறுவடை செய்ய வேண்டிய இரவுகள் அவை. நன்மைகளை ஈட்டத் தூண்ட வேண்டியவர்கள், நாங்கள் பேசுவதை நீங்கள் கேட்டுக்கொண்டிருந்தால் போதும் என்ற நிலைக்கு மக்களைத் தள்ளுவது நியாயமா?

உபரித் தொழுகை (நஃபில்) தொழுதல், தஸ்பீஹ் தொழுகை தொழுதல், குர்ஆன் ஓதுதல், குர்ஆனைக் கற்பித்தல், திக்ர் செய்தல், துஆச் செய்தல் உள்ளிட்ட தனிமனித நல்லறங்களே கடைசிப் பத்து இரவுகளில் ஒவ்வோர் ஆணும் பெண்ணும் செய்ய வேண்டும். இதை விட்டு விட்டு பயான் கேட்டுக் கொண்டிருப்பது நபிவழி ஆகாது. அந்தந்தப் பள்ளியில் அந்தந்த இமாம் செய்கின்ற பயானே போதுமானது.  
சஹர் நேர பயான் எவ்வாறு தனிமனித நல்லறங்களைத் தடுக்கிறதோ அதுபோலவே ஒற்றைப்படை இரவு பயான்களும் கடைசிப் பத்து இரவுகளின் பயான்களும் தனிமனித நல்லறங்களைத் தடுப்பதில் பெரும்பங்கு வகிக்கின்றன.      

எனவே நாம் அனைவரும் நம்மால் இயன்ற வரை தனிமனித நல்லறங்கள் செய்து நம்முடைய நன்மைத் தட்டைக் கனக்கச் செய்வதற்கான முயற்சியில் ஈடுபடுவோமாக.

-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி

==================


ஜெர்னலிஸ்ட் வாய்ஸ் ஜூன் 2017

துணை ஆசிரியராகப் பணியாற்றத் தொடங்கிய பின் வருகின்ற இரண்டாவது இதழ் இது.

நல்ல பல கட்டுரைகளை எழுத துஆ செய்யுங்கள்.



சனி, 10 ஜூன், 2017

ஸகாத் பெட்டி

 
-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.

இமாமாக உள்ள ஒவ்வொருவரும் தாம் பணியாற்றும் பள்ளிவாசலில் அவ்வப்போது ஏதாவது அறிவிப்புச் செய்யாமல் இருக்க முடியாது. ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை கூட்டுத் தொழுகைக்குப் பிறகு அறிவிப்புச் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படும். மத்ரஸா வசூல், திருமண உதவி, ஏழைகளின் மருத்துவ உதவி இன்னபிற அறிவிப்புகள் தொடரும். பள்ளி நிர்வாகம் சார்ந்த அறிவிப்புகளும் மஹல்லா மக்கள் சார்ந்த அறிவிப்புகளும் அவ்வப்போது உண்டு. ஆனால் இவ்வளவு அறிவிப்புகளிலும் எனக்குப் பிடித்த அறிவிப்பு ஒன்று உண்டு. அது ரமளானில் நான் செய்த அறிவிப்பு ஆகும்.

“மக்களே, நீங்கள் உங்களுடைய ஸகாத், ஸதகா ஆகிய எதையும் இப்பள்ளியின் இமாமாகிய எனக்குக் கொடுக்க வேண்டாம். நான் ஸகாத், ஸதகா வாங்கமாட்டேன். அன்பளிப்பை மட்டுமே ஏற்றுக்கொள்வேன். எனவே அவற்றை உங்களின் நெருங்கிய உறவினர்களுள் யாரேனும் ஏழைகளுக்குக் கொடுங்கள்; அல்லது உங்கள் வீட்டுக்கருகில், உங்கள் தெருவில் உள்ள ஏழைகளுக்குக் கொடுங்கள்.  அப்படி ஏழைகள் யாரும் உங்களுக்குத் தென்படவில்லையானால், இதோ நம் பள்ளியில் உள்ள ‘ஸகாத் பெட்டி’யில் உங்கள் பணத்தைப் போடுங்கள். அதில் போடப்படுகின்ற பணம் அனைத்தும் நம் மஹல்லாவில் உள்ள ஏழைகளுக்கும் கணவனை இழந்த கைம்பெண்களுக்கும் அநாதைகளுக்கும்  பிரித்துக்கொடுக்கப்படும்” என்று அறிவிப்புச் செய்தேன்.

இவ்வாறு அறிவிப்புச் செய்தபின் ஸகாத், ஸதகா இரண்டுமாக ஒரு பெருந்தொகை சேர்ந்தது. அதை எங்கள் மஹல்லாவில் உள்ள ஏழைப்பெண்களுக்கும் கணவனை இழந்த பெண்களுக்கும் பிரித்துக்கொடுத்தோம். ஏழைகள் வாழ்த்தினார்கள். துஆ செய்தார்கள்.

ஒவ்வொரு மஹல்லாவிலும் ஸகாத் கடமையானவர்கள் பலர் இருக்கின்றார்கள். அவர்களுள் சிலர்தாம் முறைப்படி கணக்கிட்டு ஸகாத்தை வழங்கி வருகின்றார்கள். அவர்களுள் பலர் தம் மஹல்லாவில் பணியாற்றுகின்ற இமாம், முஅத்தினிடம் பெருநாள் அன்று கைலாகு (முஸாஃபஹா) செய்யும்போது நூறு, இருநூறு, ஐந்நூறு என வைத்துவிட்டுச் சென்றுவிடுகின்றார்கள். இதுதான் அவர்கள் வழங்கும் ஸகாத். இது முறையா?

இதற்கு முறையான வழிகாட்டுதலை யார் காட்ட வேண்டும்? ஒவ்வொரு பள்ளியிலும் ‘ஸகாத் பெட்டி’ உண்டா? இத்தகைய அறிவிப்பு உண்டா? மக்கள் வழங்கும் ஸகாத், ஸதகாவை ஆலிம்கள் பலர் தாமே வாங்கிக்கொள்கின்றார்கள். சரி, அவர்களுள் மிகவும் ஏழைகளாக உள்ளவர்கள் வாங்கிக்கொண்டால் பரவாயில்லை. அவர்களுள் ஸகாத் வழங்கும் தகுதியில் உள்ளோரும் எதுவும் பேசாமல் வாங்கிக்கொள்கிறார்களே, ஏன்?

ஐவேளைத் தொழுகை ஒவ்வொரு பள்ளியிலும் முறைப்படி நடைபெறுவதைப்போலவே ஒவ்வொரு பள்ளியிலும் ‘ஸகாத் பெட்டி’ ஒன்று இருக்கத்தான் வேண்டும். அதுதான் முறை. ஏனென்றால் தொழுகை, ஸகாத் இரண்டும் ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள். அவ்விரண்டையும் பிரிக்கக் கூடாது. தொழுகைக்கு எவ்வாறு முக்கியத்துவம் கொடுக்கின்றோமோ அதுபோலவே ஸகாத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அதை ஆலிம்கள்தாம் முன்னின்று செய்ய வேண்டும். ஒவ்வோர் ஆலிமும் ஒவ்வொரு பள்ளியிலும், “நான் ஸகாத் வாங்க மாட்டேன். உங்கள் ஸகாத்தை இதோ இந்த ‘ஸகாத் பெட்டி’யில் போடுங்கள்” என்று அறிவிப்புச் செய்து பாருங்கள். அதன்பின் சமுதாயத்தில் ஒரு மறுமலர்ச்சி ஏற்படுவதோடு உங்கள் வாழ்க்கையிலும் ஒரு திருப்பம் ஏற்படும்.

சேர்ந்த பணத்தை ஒன்றுதிரட்டி, அந்தந்த மஹல்லாவில் வாழ்கின்ற ஏழைகளுக்கும்,  பொருளாதாரச் சிக்கலில் மாட்டிக்கொண்டு தவிக்கின்ற பெண்களுக்கும், கணவனை இழந்தோருக்கும் பிரித்துக் கொடுங்கள். அவர்கள் உங்களை வாழ்த்துவார்கள். கொடுத்தோருக்கும் கொடுக்க ஏற்பாடு செய்தோருக்கும் ஈருலகிலும் நன்மை உண்டு என்பதை நினைவில் நிறுத்துங்கள். இவ்வாறு செய்வதால் ஊர் ஊராகச் சென்று பிச்சையெடுப்போரைக் குறைக்கலாம்; பொருளாதாரத்திற்காகக் கற்புநெறி தவறுவோரைக் காப்பாற்றலாம்; உரிய திறமை இருந்தும் பொருளாதாரச் சிக்கலால் படிக்க இயலாதோருக்குக் கல்வியுதவி செய்யலாம். இன்னும் எத்தனையோ திட்டங்களைச் செயல்படுத்தலாம்.

ஒரு மஹல்லாவில் உள்ள எல்லோரும் பொருளாதாரத்தில் தன்னிறைவு பெற்றவர்களாக இருந்தால் அதை ஒரு தனிப்பட்ட நிதியாக வைத்துக்கொண்டு கல்வி, திருமணம், மருத்துவம் உள்ளிட்டவற்றிற்கு உதவி செய்யலாம். மேலும் அந்த மஹல்லாவை நாடி வருவோருக்கு உதவி செய்யலாம்; அவர்கள்  வெளியூரிலிருந்து வந்து பிறரிடம் கையேந்துவதைத் தடுக்கலாம்.
சமுதாய மக்கள் அனைவரும் பொருளாதாரத்தில் தன்னிறைவு அடைவதற்கான வழிமுறைகளையும்  பொருளாதாரச் சிக்கலைப் போக்குவதற்கான நெறிமுறைகளையும் ஆலிம்கள்தாம் காட்ட வேண்டும்.  ஒவ்வொரு மஹல்லாவிலும் உள்ள இமாமும் அப்பள்ளியின் தலைவரும் இணைந்து ஒரு கூட்டுத் திட்டத்தை உருவாக்கிப் பொருளாதாரத்தில் நலிந்தோருக்கு உதவி செய்தால் ரமளான் காலத்திலும் பிற காலங்களிலும் பிச்சையெடுக்க ஊர் ஊராகப் படையெடுக்கின்ற ஏழைகளைக் குறைத்துவிடலாம்;  அவர்கள் அனைவரும் தன்மான உணர்வோடு வாழ வழிவகுக்கலாம்.

நம்முடைய ஸகாத் பணம் அனைத்தும் ஆங்காங்கே சிறுசிறு தூறல்களாக விழுவதால் மிக மிகக் குறைந்த பயனையே சமுதாயம் அனுபவிக்கிறது. அதேநேரத்தில் ஒரு மஹல்லா மக்களின் ஒட்டுமொத்த ஸகாத் பணமும் ஒரே பெட்டியில் போடப்பட்டு, அதை உரியவர்களுக்குப் பிரித்துக்கொடுத்தால் அதனால் விளையும் பயன்கள் ஏராளம்.

நம்முடைய ஸகாத், ஸதகா ஆகியவற்றை உரிய முறையில் வசூல் செய்து உரியவர்களிடம் வழங்காததால் எத்தனையோ பேர் உயர்கல்வி படிக்க இயலவில்லை. எத்தனையோ பேர் தொழிலில் நலிவடைந்து இருக்கின்றார்கள். எத்தனையோ முதிர்கன்னிகள் திருமணம் செய்யப்படாமல் காத்திருக்கின்றார்கள். எத்தனையோ பேர் வட்டிக்குக் கடன் வாங்கி, அந்த வட்டியைச் செலுத்த முடியாமல் திக்குமுக்காடுகின்றார்கள். இப்படி எத்தனையோ சிக்கல்கள் சமுதாயத்தில் பரவிக்கிடக்கின்றன. இவை அனைத்தும் அல்லாஹ் கட்டளையிட்ட பொருளாதாரத் திட்டத்தை நாம் நடைமுறைப்படுத்தாததால் விளைந்துள்ள தீமைகளாகும்.

தற்போது நாம் அனைவரும் ஒருங்கிணைந்து ஓர் உறுதிமொழி ஏற்க வேண்டும். “நான் எந்த இயக்கத்திற்கும் என்னுடைய ஸகாத்தையோ ஸதகாவையோ வழங்க மாட்டேன். என்னுடைய நெருங்கிய உறவினர் அல்லது என்னுடைய அண்டை வீட்டார் அல்லது  என் தெருவிலுள்ளோர் அல்லது என் மஹல்லாவில் உள்ள ஏழைகளுக்கு மடடுமே கொடுப்பேன். அல்லது என் மஹல்லாவில் உள்ள பள்ளிவாசல் சார்பாக ஸகாத் வசூல் செய்யப்பட்டால் அங்கு வழங்குவேன்.” இந்த உறுதிமொழியை ஒவ்வொருவரும் எடுத்துக்கொண்டால் நம்முடைய ஸகாத் நிறைய ஏழைகளைச் சென்றடையும். அதிகமானோர் பயன்பெறுவார்கள் என்பது திண்ணம்.

“தொழுகையைக் கடைப்பிடியுங்கள். ஸகாத் (எனும் கட்டாயக் கொடையை) வழங்குங்கள்” (2: 43) என்று அல்லாஹ் திருக்குர்ஆனின் பல இடங்களில் இரண்டையும் ஒன்றாக இணைத்துக் கூறியுள்ளதைக் கூர்ந்து கவனியுங்கள்.

முஆத் (ரளி) அவர்கள் யமன் நாட்டிற்கு ஆளுநராகப் பயணம் புறப்பட்ட நேரத்தில், நபி (ஸல்) அவர்கள்  சொன்ன அறிவுரைகள் நினைவுகூரத்தக்கன. அவற்றுள் ஒன்று, “நிச்சயமாக அல்லாஹ் அவர்கள்மீது ஸகாத்தைக் கடமையாக்கியுள்ளான். அது அவர்களிலுள்ள செல்வந்தர்களிடமிருந்து பெறப்பட்டு, அவர்களிலுள்ள ஏழைகளுக்கு விநியோகிக்கப்பட வேண்டும் என அவர்களுக்கு அறிவிப்பீராக!” (நூல்: புகாரீ: 1496)

முஆத் (ரளி) அவர்களுக்குக் கட்டளையிடப்பட்ட இந்தப் பணியை யார் செய்ய வேண்டும்? ஒவ்வொரு மஹல்லாவிலும் உள்ள இமாமும் பள்ளி நிர்வாகமும்தான் செய்ய வேண்டும். அங்குள்ள செல்வந்தர்களைக் கணக்கிட்டு அவர்களிடம் உரிய முறையில் ஸகாத்தைப் பெற்று அதை அங்குள்ள ஏழைகளுக்கு விநியோகம் செய்ய வேண்டிய பொறுப்பு அவர்களுக்குத்தான் உள்ளது. பள்ளிவாசலில் ஓர் இமாமை நியமித்து, ஐவேளையும் கூட்டுத் தொழுகை நடைபெற நிர்வாகத்தினர் எவ்வாறு பணியாற்றுகின்றார்களோ அதுபோலவே ஸகாத்தை வசூல் செய்ய ஆள் நியமித்து அல்லது பள்ளிவாசலில் அதற்கான ஏற்பாட்டைச் செய்து வசூல் செய்வதும், அதை உரிய முறையில் ஏழைகளுக்குப் பங்கிட்டு வழங்குவதும் அவர்களையே சாரும்.  இப்பொறுப்பை யாரும் தட்டிக் கழிக்க முடியாது.  இரண்டு கடமைகளுள் ஒன்றைச் செயல்படுத்துகின்ற அவர்களுக்கு இன்னொன்றைச் செயல்படுத்த என்ன தடை?

எனவே இந்த ஆண்டுமுதல் இந்த இரட்டைக் கடமைகளையும் ஒவ்வொரு மஹல்லா இமாமும் நிர்வாகமும் சேர்ந்து செயல்படுத்தத் தொடங்கட்டும். அதன் பயனாக நம்மிடையே உள்ள ஏழைகளின் பொருளாதாரச் சிக்கல் தீரட்டும். சமுதாய மறுமலர்ச்சி தோன்றட்டும். உயர்ந்தோன் அல்லாஹ் அதற்கான நல்வாய்ப்பை நமக்கு வழங்குவானாக.
=============================================================





   

வெள்ளி, 9 ஜூன், 2017

இறைப்பணியாற்றும் ஆலிம்களை உருவாக்குவோம்!


-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.

தமிழ்நாட்டின் பாரம்பரிய மத்ரஸாக்கள் பல இருக்க அவற்றுக்கு மத்தியில் இரட்டைக் கல்வி வழங்கும் நவீன மத்ரஸாக்கள் காலத்தின் தேவை கருதி ஆங்காங்கே புதிதாகத் தோன்றின. காலச் சூழலின் மாற்றத்தால் பாரம்பரிய மத்ரஸாக்கள் சில நவீன மத்ரஸாக்களாக மாற்றப்பட்டன. நவீன மத்ரஸாக்கள் சில ஒருங்கிணைந்த ஐந்தாண்டுப் பாடத்திட்டத்தையும், சில ஏழாண்டுப் பாடத்திட்டத்தையும் கொண்டு செயல்பட்டு வருகின்றன. சென்னையில் மட்டும் ஏழெட்டு நவீன மத்ரஸாக்கள் உள்ளன.

இரட்டைக் கல்வி வழங்கும் நவீன மத்ரஸாக்கள் தோன்றியபோது பாரம்பரிய மத்ரஸாக்களில் பணியாற்றுகின்ற பேராசிரியர்களும் மற்ற ஆலிம்களும் அவற்றை விமர்சனம் செய்தார்கள். அரபுக் கல்லூரிக்குள் உலகக் கல்வியும், கணினிக் கல்வியும், ஆங்கிலமும் நுழையும்போது மார்க்கக் கல்வியின் மாண்பு குறையும்; சிதைக்கப்படும் என்றெல்லாம் கருத்துக் கூறினார்கள். இரண்டு கல்வியையும் ஒருசேரப் படிக்க முடியாது என்று தெரிவித்தார்கள். அவர்களெல்லாம் மூக்கில் விரல் வைக்கும் அளவிற்கு மாணவர்களை உருவாக்கி இரட்டைக் கல்வியையும் வழங்கி, இரண்டு மூன்று பட்டங்களைக் கையில் கொடுத்து அனுப்பினார்கள்; அனுப்பிக் கொண்டிருக்கின்றார்கள். அவர்கள் நடத்திய பட்டமளிப்பு விழாக்களைக் கண்டு சமுதாயத் தலைவர்கள் பாராட்டினார்கள். ஆனால் இரண்டு மூன்று பட்டங்களைப் பெற்று நவீன மத்ரஸாக்களிலிருந்து வெளியேறிய ஆலிம்கள் என்ன செய்துகொண்டிருக்கின்றார்கள்? இந்தச் சமுதாயம் பயன்பெறும் வகையில் பணியாற்றிக்கொண்டிருக்கின்றார்களா?

ஆலிம் பட்டத்தோடு பி.காம்., அல்லது பி.சி.ஏ. பட்டம் பெற்ற பலர் பெரும் பெரும் நிறுவனங்களில் பணி வாய்ப்பைப் பெற்றுச் சம்பாதிக்கத் தொடங்கினார்கள். கணினித் துறையில் கிடைத்த பணியில் அமர்ந்தார்கள். தட்டச்சர்களாகவும் டிசைனர்களாகவும் பணியில் சேர்ந்தார்கள். இதுதான் சமுதாயப் பணியா? இதுதான் ஓர் ஆலிம் மேற்கொள்ள வேண்டிய இறைப்பணியா?
ஒருவர் தட்டச்சராக, கணக்கராக, டிசைனராக, நூல் வடிவமைப்பாளராகப் பணியாற்ற அரபுக் கல்லூரியில் ஐந்தாண்டுகளோ, ஏழாண்டுகளோ படித்து, ஆலிம் பட்டம் பெற வேண்டிய அவசியமில்லை. இதையெல்லாம் ஆலிம் அல்லாதவர்களே செய்வார்கள். ஆலிம்களுக்கான பணி என்ன?

திருக்குர்ஆனோடும் நபிமொழியோடும் தொடர்புடைய பணிகளை ஆற்றுவதற்கு ஆள் பற்றாக்குறை உள்ளது. அதனைப் போக்குவதற்குத்தான் அரபுக் கல்லூரிகள் உருவாக்கப்பட்டன. மரபுவழி அரபுக் கல்லூரிகளுக்கு மாணவர்களின் வருகை குறைவாக இருந்ததால்தான் ஆங்கிலக் கல்வியையும் கணினிக் கல்வியையும் இணைத்து, மாணவர்களை ஈர்க்க வேண்டிய தேவை ஏற்பட்டது. அதனால்தான் அதை ஆலிம்களுள் ஒரு குழுவினர் வரவேற்றனர். ஆனால் பட்டம் பெற்று வெளியேறிய ஆலிம்களின் சேவை சமுதாயத்திற்குக் கிடைக்கப் பெறாதபோது நவீனக் கல்லூரிகளை ஆதரித்த ஆலிம்கள் பலர் முகம் சுழிக்கத் தொடங்கிவிட்டனர்.

ஐந்தாண்டுகள் பயின்று, அதன் பின் ஓராண்டுப் பயிற்சிக்குப்பின் பட்டம் பெற்று வெளிவருகின்ற ஒரு மருத்துவர் மருத்துவப் பணியை மேற்கொள்ளாமல் அரிசி வியாபாரம் செய்வதிலும் ஏற்றுமதிலிஇறக்குமதித் தொழிலிலும் ஈடுபட்டால் அவரால் சமுதாயத்திற்கு நன்மையா? ஒரு வழக்கறிஞர் தம் தொழிலை விட்டுவிட்டு செல்போன் விற்பனை செய்யத் தொடங்கினால் அவரால் சமுதாயத்திற்குக் கிடைக்க வேண்டிய பயன் கிடைக்காமல் போய்விடுகின்றதல்லவா!

திருக்குர்ஆன் விரிவுரையையும் நபிமொழி விளக்கங்களையும் இஸ்லாமியச் சட்ட நுட்பங்களையும் கசடறக் கற்று, மொழிப்புலமையோடு வெளிவருகின்ற ஒருவர் ஒரு மஸ்ஜிதில் இமாமாகச் சேர்ந்து மக்களைச் சீர்திருத்தம் செய்யும் பணியில் ஈடுபடுதல், ஓர் அரபுக் கல்லூரியில் சேர்ந்து, கற்ற கல்வியைச் சிறப்பாகக் கற்பித்து திறன்மிகு மாணவர்களை உருவாக்குவதில் தம்மை அர்ப்பணித்துக்கொள்ளுதல், அரபுமொழி நூல்களைத் தாய்மொழியில் மொழியாக்கம் செய்யும் பணியில் ஈடுபடுதல், பாலர்களுக்கான குர்ஆன் வகுப்புகளைத் தொடங்கி நடத்துதல், இஸ்லாமிய அழைப்புப் பணியில் ஈடுபடுதல் உள்ளிட்ட நேரடி இறைப்பணிகளில் ஈடுபட வேண்டும். அல்லது இறைப்பணி சார்ந்த வேறு சமுதாயப் பணிகளில் ஈடுபடவே ஆலிம்கள் தேவை. அதற்காகத்தான் சமுதாயம் ஆலிம்களை எதிர்பார்க்கிறது. இவைபோன்ற பணிகளுக்குத்தான் ஆள் பற்றாக்குறை உள்ளது. இவற்றையெல்லாம் விட்டுவிட்டு, நான் ஒரு பி.காம். பட்டதாரி; எம்.காம். முடித்துவிட்டு ஒரு நிறுவனத்தில் கணக்கராகப் பணியாற்றவுள்ளேன் என்ற எண்ணத்தோடு வெளிவரும் ஆலிம்களை அரபுக் கல்லூரிகள் உற்பத்தி செய்தால் திருக்குர்ஆனைப் போதிப்பதற்கும் அதன் விளக்கங்களை மக்களுக்கு எடுத்துச் சொல்வதற்கும் யார் முன்வருவார்?

ஆலிம்களுக்கு ஆங்கிலம் தெரியாது என்ற குறையைப் போக்க வீரியம் கொண்டெழுந்த நவீன மத்ரஸாக்கள் ஆங்கிலம், கணினிப்பாடம் உள்ளிட்டவற்றை இணைத்து இரட்டைக் கல்வி முறையை அறிமுகப்படுத்தின. இந்தப் புதுமையைக் கண்ட அறிஞர்கள், இச்சமுதாயத்திற்கு மிகுந்த பயனை வழங்கக்கூடிய நவீன ஆலிம்கள் உருவாகி வரப்போகின்றார்கள் என்ற கனவோடு இருந்தார்கள். ஆனால் அவர்களின் கனவு பகற்கனவாகப் பொய்த்துப் போனது. ஆம். அவர்கள் தாம் பணியாற்றத் தேர்ந்தெடுத்துக்கொண்ட தளங்கள் அரபுக் கல்லூரியில் கற்ற மார்க்கக் கல்வியோடு தொடர்பில்லாதவை. எனவே நவீன அரபுக் கல்லூரியை நடத்துகின்ற நிர்வாகிகளும் முதல்வர்களும் தம் கல்வித் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளார்கள். சமுதாயத்திற்குச் சேவை செய்யும் ஆலிம்களை உருவாக்குவதற்குப் பதிலாக, நன்றாகச் சம்பாதிக்கக்கூடிய இளைஞர்களை உருவாக்கியுள்ளார்கள் என்றுதான் ஆலிம்கள் விமர்சனம் செய்கின்றார்கள். ஆகவே மார்க்கக் கல்வி கற்பதன் அடிப்படை நோக்கம் சிதைவுற்ற பிறகு பாடத்திட்டம் குறித்து மறுபரிசீலனை செய்வது காலத்தின் கட்டாயமே.

என்னதான் தீர்வு? பி.காம்., பி.சி.ஏ. போன்ற தொழில்சார் பட்டப் படிப்புகளைக் கொடுக்காமல் பி.ஏ. தமிழ், பி.ஏ. ஆங்கிலம், பி.ஏ. அரபி என மொழி சார்ந்த பட்டப் படிப்புகளை வழங்கினால் ஓர் ஆலிம் தமிழ் அல்லது ஆங்கில இலக்கணத்தைத் தெளிவாக அறிந்து வெளியே வருவார். இறைப்பணியாற்றும்போது அது அவருடைய சொற்பொழிவுக்கும் எழுத்துக்கும் மிகுந்த பயனாகவும் உறுதுணையாகவும் இருக்கும். தமிழ்வழி பயின்று வருவோருக்குத் தமிழ் பி.ஏ.வும், ஆங்கில வழி பயின்று வருவோருக்கு ஆங்கில பி.ஏ.வும் வழங்கினால் அது அவர்கள் உலகின் எந்த மூலைக்குச் சென்றாலும் இறைப்பணியாற்ற, சொற்பொழிவாற்ற, பத்திரிகைகளில் எழுத, அரபு நூல்களை மொழியாக்கம் செய்யப் பேருதவியாக இருக்கும். மேற்படிப்பை விரும்புவோர் எம்.ஏ., எம்.ஃபில்., பிஎச்.டி. வரை செல்ல எந்தத் தடையும் இல்லை. இத்தகைய ஆலிம்களால் சமுதாயம் மிகுந்த பயனடையும் என்று நம்பலாம்.

ஓர் ஆலிம் கணினியை இயக்கப் பழகுவது இறைப்பணிக்கு உறுதுணையாக இருக்க வேண்டுமே தவிர அதை வைத்து வாழ்வாதாரத்தை மட்டும் ஈட்டும் பணியில் ஈடுபடக் கூடாது. அரபு நூல்களைக் கணினியில் பார்க்க, கட்டுரைகள், கடிதங்கள் உள்ளிட்டவற்றைச் சுயமாகத் தட்டச்சு செய்ய, இன்னபிற தேவைகளுக்காக அதைக் கற்றுக்கொள்வதில் தவறில்லை. எத்தனைதான் கற்றாலும் அதையெல்லாம் வைத்து, இறைப்பணியை மேற்கொள்ள வேண்டுமே தவிர தாம் மட்டும் நல்லபடியாக வாழ்ந்தால் போதும் என்ற எண்ண ஓட்டத்தோடு பெரும் நிறுவனங்களுக்குச் சம்பாதிக்கப் புறப்பட்டுவிட்டால் இச்சமுதாயத்திற்குச் சேவை செய்பவர் யார்? கல்வியையும் திறமையையும் உறுதுணையாகக் கொண்டு வாழ்வாதாரத்தைச் சம்பாதிக்க வேண்டாம் என்று சொல்லவில்லை. மாறாக, அரபுக் கல்லூரியிலிருந்து வெளியே வருவோரின் அடிப்படைப் பணி இறைப்பணியாக இருக்க வேண்டும் என்றுதான் சொல்கிறேன்.

இறைப்பணியைச் செய்துகொண்டே அவரவர் தத்தம் திறமையைக்கொண்டு உபதொழிலாக எதை வேண்டுமானாலும் செய்துதமக்கான வாழ்வாதாரத்தை ஈட்டிக்கொள்ளலாம். அதில் தவறில்லை. அதேநேரத்தில் இறைப்பணியை உதறித் தள்ளிவிட்டு, வாழ்வாதாரம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு வேறு பணிக்குச் செல்வதைத்தான் ஆலிம்கள் விமர்சனம் செய்கின்றார்கள்.    

அக்காலக் கட்டத்தில் ஹைதராபாத் சமஸ்தானத்தில் மவ்லவிகளுக்கு அவரவரின் தகுதிக்கேற்ப அரசுப் பதவி கொடுக்கப்பட்டு வந்தது.  அப்போதைய ஹைதராபாத் நவாப் நிஜாமுல் முல்க் அஃப்ளலுத்தவ்லா ஸாலார் ஜங்க் பஹாதுர், மார்க்கம் அறிந்த உலமா பெருமக்களை மிகவும் கண்ணியப்படுத்துபவராகத் திகழ்ந்தார். அந்த அடிப்படையில் அண்ணல் அஃலா ஷாஹ் அப்துல் வஹ்ஹாப் அல்காதிரீ (ரஹ்) அவர்களுக்கு உதவி ஆட்சியர் (சப் கலெக்டர்) பதவி தேடி வந்தது. இருப்பினும் அப்பதவியை ஏற்க மறுத்த ஹள்ரத் அவர்கள், இப்பதவியை ஏற்பதால் உலகியல் ஆதாயம் கிடைக்குமே தவிர நாம் கற்ற கல்வியின் மூலம் நமது சமுதாயத்திற்கு என்ன பலன் விளைவிக்க முடியும் என்ற கோணத்தில் சிந்தித்தார்கள்.

அதன்பின்னரே ஹள்ரத் அவர்கள் அல்பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் அரபுக் கல்லூரியை வேலூரில் உருவாக்கினார்கள். அந்தத் தாய்க் கல்லூரியிலிருந்து வெளிவந்தோர்தாம் இன்று தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு மத்ரஸாக்களை உருவாக்கி நடத்திக் கொண்டிருக்கின்றார்கள். அவர்களின் தியாகம் மட்டும் இல்லையென்றால் இன்று இவ்வளவு ஆலிம்களைக் கண்டிருக்க முடியாது என்பதை இன்றைய இளைய தலைமுறையினர் எண்ணிப் பார்க்க வேண்டும். சுயநலத்தைவிடப் பொதுநலமே ஆக்கத்திற்கும் நன்மைக்கும் காரணமாக அமையும் என்பதையும் மனத்தில் பதிய வைத்துக்கொள்ள வேண்டும்.

எனவே எதிர்வரும் காலங்களில் அரபுக் கல்லூரியிலிருந்து வெளிவரும் ஆலிம்கள் பல்வேறு திறமைகளைக் கொண்டிருந்தாலும் "அத்தனை திறமைகளையும் அல்லாஹ்வின் பாதையில்தான் செலவழிப்பேன்'' என்ற வைராக்கியத்தோடு வெளிவருவார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்.

=============================================






வியாழன், 8 ஜூன், 2017

ஸகாத் கொடுப்போர் கவனத்திற்கு


நீங்கள் உங்கள் ஸகாத்தை வேட்டி, சேலை உள்ளிட்ட ஆடைகளாகத்தான் கொடுக்க வேண்டும் என்ற அவசியமில்லை. நீங்கள் ஏழைகளாகக் காணும் நபர்களுக்குப் பணமாகவே கொடுக்கலாம்.

நீங்கள் ஸகாத் வழங்கும்போது, அதை யாருக்கு வழங்குகின்றீர்களோ அவர் அதற்குத் தகுதியானவரா என்பதையும் கவனித்து வழங்குங்கள். நம் பொறுப்பு முடிந்துவிட வேண்டும் என்பதற்காக யார் யாருக்கோ கொடுத்து விடாதீர்கள்.

நீங்கள் உங்கள் மஹல்லா இமாமுக்கு ஸகாத் கொடுத்தால் அவர் அதை வாங்கத் தகுதியானவரா என்று பார்த்துக் கொடுங்கள். இமாம்கள் சிலர் நல்ல வசதியாகவே வாழ்கிறார்கள். அவர்களுக்கும் நீங்கள் ஸகாத் வழங்குவது முறையில்லை. அவர்களுடைய அன்பைப் பெற வேண்டுமென்பதற்காக அவர்களுக்கு வழங்க நினைத்தால், உங்களுடைய ஸகாத் அல்லாத பணத்தை அன்பளிப்பாக வழங்குங்கள்.

ஆங்காங்கே பணியாற்றக்கூடிய ஆலிம்கள் -ஸகாத் வாங்கத் தகுதியில்லாத வசதியானவர்கள்- “எங்களுக்கு நீங்கள் உங்களின் ஸகாத்தை அன்பளிப்பாகக் கொடுக்காதீர்கள். உங்களின் ஸகாத் அல்லாத பணத்தையே அன்பளிப்பாக நாங்கள் ஏற்றுக்கொள்வோம்” என்று பொது அறிவிப்புச் செய்தால் அத்தகைய இமாம்கள்மீது மக்களுக்கு ஒரு மரியாதை ஏற்படுவதோடு  நாமும் நம் பொறுப்பைச் சரியாக நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணம் மக்களுக்கு ஏற்படும்.

சமுதாய இயக்கங்களுக்குக் கொடுப்பதைத் தவிர்த்து அக்கம் பக்கம்  உள்ள ஏழைகளைப் பார்த்து உங்கள் ஸகாத்தை வழங்குங்கள். கல்வியுதவி, திருமண உதவி, மருத்துவ உதவி உள்ளிட்டவற்றிற்காகவும் உங்கள் ஸகாத் பயன்படட்டும்.

அல்லாஹ் விதித்த ஸகாத்தை நாம் உரிய முறையில் வழங்கி, பயனுள்ள மழையை அவனிடமிருந்து பெறுவோமாக.

-மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி


திங்கள், 5 ஜூன், 2017

ஜன்னத்துல் ஆலியா மகளிர் கல்லூரி பட்டமளிப்பு விழா



சென்னை மணலியில் அமைந்துள்ள ஜன்னத்துல் ஆலியா மகளிர் அரபுக் கல்லூரியின் முதல் பட்டமளிப்பு விழா 06 05 2017 அன்று திருஞான சம்பந்தம் திருமண மஹாலில் நடைபெற்றது. மௌலவி ஹாஃபிழ் கே. அப்துல் காதர் ஜெய்லானி ரப்பானி கிராஅத் ஓதி நிகழ்வைத் தொடங்கிவைத்தார். கே.எஸ். இஸ்மாயில் சிராஜி நபிபுகழ் கீதம் இசைத்தார். மௌலவி அப்துல்லாஹ் அல்தாஃபி வரவேற்புரை நிகழ்த்திய பின், இனிய திசைகள் துணை ஆசிரியர் முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி துவக்கவுரையாற்றினார்.

அதன்பின் முனைவர் மௌலவி வி.எஸ். அன்வர் பாதுஷாஹ் உலவி, ஜமாலிய்யா அரபுக் கல்லூரி முதல்வர் மௌலவி சையது நியாஸ் அஹ்மத் ஜமாலி ஆகியோர் சிறப்புரை நிகழ்த்தினர். ஆலிம்கள் பலர் வாழ்த்துரை வழங்கிய பின், இக்கல்லூரி முதல்வர் எஸ். எம். ஜாஹிர் ஹுஸைன் மிஸ்பாஹி பாகவி ஆண்டறிக்கை வாசித்தார். அதன்பின், மௌலவி ஓ.எம். அப்துல் காதிர் பாகவி, எம். நூருஷ் ஷிஃபானா, எஸ். ரம்ஜான், ஜே. ரம்ஜான் பேகம், ஏ. ரஜியா பேகம், ஏ. காதர்மா ஆகிய ஐந்து மாணவிகளுக்கு அவர்கள்தம் தந்தையரிடம் பட்டம் வழங்கிப் பேருரை நிகழ்த்தினார். இக்கல்லூரியின் பொறுப்பாளர் மௌலவி என். முஹம்மது இத்ரீஸ் ஜமாலி நன்றி நவில, துஆவுடன் நிகழ்வு இனிதே நிறைவுற்றது.
-தகவல்: பாகவியார்
======================