ஞாயிறு, 2 ஜூலை, 2017

நோன்பு என்னை மாற்றியதா?

முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.

இறைவனின் உவப்பையும் திருப்தியையும் நாடி ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்றோம். சுவையான உணவிருந்தும் உண்ணாமல் மனதிற்குப் பிடித்த குளிர்பானங்கள் இருந்தும் பருகாமல்  அழகான மனைவியிருந்தும் ஊடல் கொள்ளாமல் என் மனதைக் கட்டுப்படுத்தி, இறைவன் என்னைப் பார்த்துக்கொண்டிருக்கிறான் என்ற சிந்தையோடு நோன்பு நோற்ற நான் இனிவரும் காலங்களிலும்  என் மனதைக் கட்டுப்படுத்துவேனா? என்று நம்முள் ஒவ்வொருவரும் கேட்டுக்கொள்ள வேண்டும்.

நோன்பு என்பது ஒவ்வொரு மனிதனின் மனதையும் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ளப் பழக்கப்படுத்துகின்ற பயிற்சிப் பட்டறை என்று சொல்கின்ற நாம் அந்தப் பயிற்சியில் முழுமையாக வெற்றிபெற்றோமா?
நோன்பு நோற்ற நிலையில் பொய், புறம் உள்ளிட்ட தீய பேச்சுகளைப் பேசாமல் நாவைக் கட்டுப்படுத்திய நான் இனிவரும் காலங்களிலும் அவ்வாறு கட்டுப்படுத்துவேனா?

அளவை நிறுவையில் குறைவு செய்யாமல் நேர்மையாக வியாபாரம் செய்த நான் இனி எப்போதும் அவ்வாறே செய்வேனா? அதையே என் இயல்பான பழக்கமாக மாற்றிக்கொள்வேனா? என்றெல்லாம்  நம்முள் ஒவ்வொருவரும் கேட்டுக்கொள்ள வேண்டும்.

ஒரு மனிதனின் கெட்ட பழக்கங்களெல்லாம் மாறுதலுக்கு உள்ளாகி அவன் நல்ல பழக்கங்களைக் கடைப்பிடிக்கத் தொடங்கிவிட்டால் உண்மையில் நோன்பு அவனுக்கு ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்று கருதலாம். ஏற்கெனவே தவறான வழியில் வியாபாரம் செய்தவன் தன்னைத் திருத்திக்கொண்டு நேர்மையாகப் பொருளீட்டத் தொடங்கிவிட்டால் இந்த நோன்பு அவனில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்திவிட்டது என்று சொல்லலாம். புறம் பேசுவதையும் பொய் பேசுவதையும் அறவே விட்டொழித்து வாய்மையை மட்டும் பேசத் தொடங்கிவிட்டால் நோன்பு கொடுத்த பயிற்சியில் தேர்ச்சி பெற்றுவிட்டான் என்று கூறலாம்.

இப்படியான எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லையானால் நாம் நோன்பைச் சரியாக நோற்கவில்லை என்றும், நம்முடைய நோன்புக்கு அல்லாஹ்விடமிருந்து முழுமையான நற்கூலி கிடைக்கவில்லை என்றும் நாம் தீர்மானித்துக்கொள்ள வேண்டியதுதான்.

ஒரு மாதம் முழுவதும் இறையச்சத்தோடு இருந்த நாம், அவன் தடுத்துள்ளவற்றைவிட்டுத் தவிர்ந்துகொள்கின்ற நாம், அந்த ஒரு மாதம் முடிந்தவுடன் மீண்டும் நம் பழைய நிலைக்கே திரும்பிவிடுவது எவ்வகையில் நியாயம்? அந்த ஒரு மாதம் மட்டும் அல்லாஹ் நம்மை உற்றுப் பார்ப்பதாகவும் பின்னர் நம்மைப் பார்க்காமல் கண்ணை மூடிக் கொள்வதாகவும் எண்ணமா? எந்த இறைவனுக்காக நாம் ஒரு மாதம் நோன்பு நோற்றோமோ அதே இறைவன்தான் எஞ்சிய காலங்களிலும் நம்மைப் பார்த்துக்கொண்டிருக்கிறான் என்பதை ஏன் மறந்தோம்? அந்த இறைவன் மன்னிப்பவனாக இருக்கின்ற அதேநேரத்தில் தண்டிப்பவனாகவும் இருக்கின்றான் என்பதை நாம் மறக்கலாமா?

ஒரு மாதம் முழுவதும் ஐவேளைத் தொழுகையைத் தவறவிடாமல் தொழுததோடு இரவுத்தொழுகை, உபரித்தொழுகையிலும் ஈடுபட்ட நாம் இதோ ஷவ்வால் பிறந்ததும் நம் கால்கள் மஸ்ஜிதை நோக்கிச் செல்ல மறுக்கின்றனவே ஏன்? ஒவ்வொரு நாளும் ஐவேளைத் தொழுகை கட்டாயக் கடமையல்லவா? நம்மைப் படைத்த இறைவனை ஒவ்வொரு நாளும் ஐவேளை தொழுக மறக்கலாமா? இதோ லுஹ்ர் தொழுகைக்கு பாங்கு சொல்லியாயிற்று. வாருங்கள், மஸ்ஜிதை நோக்கிச் செல்வோம்!
========================




கருத்துகள் இல்லை: