“ரமளானின் கடைசிப் பத்து
நாள்களில் உள்ள ஒற்றைப்படை இரவுகளில் லைலத்துல் கத்ரைத் தேடுங்கள்” என அல்லாஹ்வின் தூதர்
(ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: புகாரீ: 2017)
கடைசிப் பத்து இரவுகளில் லைலத்துல் கத்ரைத் தேடி நல்லறங்கள் செய்ய மக்களைத் தூண்டாமல்
நாங்கள் பேசுவதை நீங்கள் கேட்டுக்கொண்டே இருங்கள் என்று அடிப்படையில் ஆங்காங்கே பயான்
நிகழ்வுகள் நடத்தப்படுகின்றன. பயான் தேவைதான். எந்த நேரத்தில் அது தேவையோ அப்போது மட்டுமே
அதை வழங்க வேண்டும். எப்போது பார்த்தாலும் பயான்தானா?
சில பள்ளிகளில் ஒற்றைப்படை இரவுகளில் பயான், சில பள்ளிகளில் கடைசிப் பத்து இரவுகளும் பயான் என்று வைப்பது எவ்வகையில் நபிகளாரின்
கூற்றை நடைமுறைப்படுத்தியதாக அமையும்? ஒற்றைப்படை இரவுகளில் தனிமனிதச் செயல்பாடுகளே அவரவரின் வினைச்சுவடியை நிரப்பும்.
நன்மைகளை அறுவடை செய்ய வேண்டிய இரவுகள் அவை. நன்மைகளை ஈட்டத் தூண்ட வேண்டியவர்கள், நாங்கள் பேசுவதை நீங்கள்
கேட்டுக்கொண்டிருந்தால் போதும் என்ற நிலைக்கு மக்களைத் தள்ளுவது நியாயமா?
உபரித் தொழுகை (நஃபில்) தொழுதல், தஸ்பீஹ் தொழுகை தொழுதல், குர்ஆன் ஓதுதல், குர்ஆனைக் கற்பித்தல், திக்ர் செய்தல், துஆச் செய்தல் உள்ளிட்ட
தனிமனித நல்லறங்களே கடைசிப் பத்து இரவுகளில் ஒவ்வோர் ஆணும் பெண்ணும் செய்ய வேண்டும்.
இதை விட்டு விட்டு பயான் கேட்டுக் கொண்டிருப்பது நபிவழி ஆகாது. அந்தந்தப்
பள்ளியில் அந்தந்த இமாம் செய்கின்ற பயானே போதுமானது.
சஹர் நேர பயான் எவ்வாறு தனிமனித நல்லறங்களைத் தடுக்கிறதோ அதுபோலவே ஒற்றைப்படை இரவு
பயான்களும் கடைசிப் பத்து இரவுகளின் பயான்களும் தனிமனித நல்லறங்களைத் தடுப்பதில்
பெரும்பங்கு வகிக்கின்றன.
எனவே நாம் அனைவரும் நம்மால் இயன்ற வரை தனிமனித நல்லறங்கள் செய்து நம்முடைய நன்மைத்
தட்டைக் கனக்கச் செய்வதற்கான முயற்சியில் ஈடுபடுவோமாக.
-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி
==================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக