திங்கள், 25 மே, 2026

கழுதைகள் கூறும் பாடம்

 

-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி. 


ஒவ்வோராண்டும் மே 8ஆம் நாள் உலக கழுதைகள் நாள் அனுசரிக்கப்படுகிறது. டாக்டர் அப்துல் ராஸிக் என்பவரின் முயற்சியால்தான் இந்நாள் நடைமுறைக்கு வந்தது. 2018ஆம் ஆண்டு இது தொடங்கியது. இவர் பாலைவன விலங்குகள் குறித்து ஆய்வு செய்து, முனைவர் பட்டம் பெற்றுள்ளார். மனிதர்களுக்குப் பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக உதவியாளராக இருந்து வரும் கழுதைகளின் கடின உழைப்பை அங்கீகரிக்கவும், அவற்றின் பாதுகாப்பை வலியுறுத்தவும் இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.


பொதுவாக மனிதன் கழுதையைப் பயணம் செய்வதற்கும் பொதிகளைச் சுமந்து செல்வதற்கும் பயன்படுத்தினான்; இன்றும் கிராமங்களில் மக்கள் அவற்றைப் பயன்படுத்திவருகின்றார்கள். அது அவனோடு ஒன்றி இருக்கக்கூடிய சாதுவான பிராணியாகும். கழுதை குறித்துப் பேசும்போது அதை இகழ்ச்சிக்கான குறியீடாகத்தான் பெரும்பாலும் பயன்படுத்துவார்கள். கழுதை போல் கத்தாதே, கழுதை கெட்டால் குட்டிச் சுவர், கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசம், கழுதை தேய்ந்து கட்டெறும்பானது, வர வர மாமியார் கழுதை போல ஆனாளாம் உள்ளிட்ட ஏராளமான பழமொழிகள் சொல்லப்படுகின்றன. அந்த வகையில் திருக்குர்ஆனில் அல்லாஹ்வும் அதை இகழ்ச்சிக்கான குறியீடாகவே உதாரணம் காட்டுகிறான்.


வேதம் கொடுக்கப்பட்ட யூதர்கள் அதை உரிய முறையில் பின்பற்றாமல் வழிதவறிச் சென்றார்கள். அத்தகையோரைப் பொதி சுமக்கும் கழுதையைப் போன்றவர்கள் என்று சொல்கின்றான். இதோ அந்த வசனம்: ‘தவ்றாத்’ என்னும் வேதத்தைச் சுமந்து கொண்டு, அதிலுள்ளபடி நடக்காதவர்களின் உதாரணம், புத்தகங்களைச் சுமக்கும் கழுதையின் உதாரணத்தை ஒத்திருக்கின்றது. அல்லாஹ்வுடைய வசனங்களைப் பொய்யாக்கும் மக்களின் இவ்வுதாரணம் மகா கெட்டது. அல்லாஹ் இத்தகைய அநியாயக்கார மக்களை நேரான வழியில் செலுத்தமாட்டான். (62: 5) சிந்திக்காத மனிதர்களை எதைப் பற்றியும் சிந்திக்காத கழுதையைப் போலத்தான் என்கிறான். 


இறைமறுப்பாளர்கள் இறைவசனங்களையும் நல்லுரைகளையும் செவியுறுகின்றபோது அதைக் கேட்டுவிடாதவாறு ஓடுகின்றார்கள். அதை ஓர் உதாரணத்தின் மூலம் அல்லாஹ் ஒப்பிட்டுக் கூறுகின்றான்.  அவர்களுக்கு என்ன நேர்ந்தது? இந்நல்லுபதேசத்தை (இவ்வாறு) புறக்கணிக்கின்றனர். சிங்கத்தைக் கண்டு வெருண்டோடும் (காட்டுக்) கழுதையைப் போல் அவர்கள் இருக்கின்றனர்!  (74: 49-51)


கழுதையின் சத்தம்: பொதுவாக மிகுந்த சத்தத்தோடு பேசுவோரை, ‘கழுதை மாதிரி கத்தாதே’ என்று சொல்வார்கள். அதுபோலவே லுக்மான் அலைஹிஸ் ஸலாம் தம் மகனுக்கு அறிவுரை கூறியபோது, “உன் சத்தத்தை-குரலைத் தாழ்த்திக்கொள்; திண்ணமாகச் சத்தங்களில் மிகவும் வெறுக்கத்தக்கது கழுதையின் சத்தமாகும்” (31: 19) என்றார்கள். 


பொதுவாக மனிதனுடைய பார்வைக்குப் புலப்படாதவை மற்ற உயிரினங்களுக்கும் விலங்கினங்களுக்கும் புலப்படுகின்றன. அந்த வகையில் கழுதையின் பார்வைக்கு ஷைத்தான் புலப்படுகின்றான் என்பதை நபியவர்கள் கூறுவதோடு, நல்லதொரு செய்தியையும் அத்தோடு கூறுகின்றார்கள்: 


நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்: நீங்கள் சேவல்கள் கூவுகின்ற சத்தத்தைக் கேட்டால் அல்லாஹ்விடம் அவனது அருளைக் கேளுங்கள்: ஏனெனில், அவை வானவரைப் பார்த்தி ருக்கின்றன. (அதனால்தான் கூவுகின்றன.) கழுதை கத்தும் சத்தத்தை நீங்கள் கேட்டால் ஷைத்தானிடமிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருங்கள். ஏனெனில், அது ஷைத்தானைப் பார்த்திருக்கின்றது. (அதனால்தான் கத்துகின்றது.) (புகாரீ:  3303)


ஆகவே கழுதையின் கண்களுக்கு ஷைத்தான் புலப்படுகிறான். அவனைப் பார்த்ததும் அது கத்துகிறது. எனவே அந்த நேரத்தில் நாம் ஷைத்தானிடமிருந்து பாதுகாக்குமாறு அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்ய வேண்டும். அதேநேரத்தில் சேவலின் கண்களுக்கு வானவர் தென்படுகிறார். அவரைப் பார்த்ததும் அது கூவுகிறது. அந்த நேரத்தில் அல்லாஹ்வின் அருளைக் கேட்டுப் பிரார்த்தனை செய்துகொள்ள வேண்டும். 


இறந்த கழுதையை உயிர்ப்பித்தல்: உஸைர் நபி ஒரு நாள் தமது தோட்டத்தைக் கவனிக்கப் புறப்பட்டுச் சென்றார். நண்பகல் வேளையில் வெப்பம் கடுமையாகத் தாக்கியதால் வழியில் ஓரிடத்தில் பாழடைந்து கிடந்த வீட்டுக்குள் நுழைந்தார். அவர்தம் கழுதையுடனே அவ்வீட்டுக்குள் நுழைந்து, அந்தக் கழுதையிலிருந்து இறங்கினார். அவர் தம்முடன் ஒரு கூடையில் அத்திப்பழமும் மற்றொரு கூடையில் திராட்சையும் வைத்திருந்தார். பாழடைந்த அந்த வீட்டின் நிழலில் இருந்துகொண்டு தம்முடன் வைத்திருந்த ஒரு தட்டை எடுத்து, கூடையிலிருந்த திராட்சையை எடுத்துச் சாறுபிழிந்தார்.

 

அவர் வைத்திருந்த காய்ந்த ரொட்டியை எடுத்து, சாப்பிடுவதற்கு எளிதாக இருப்பதற்காக,  பிழிந்து வைத்திருந்த திராட்சைச் சாற்றினுள் அதைப் போட்டார். அவர்தம் பிடரியைக் கீழே வைத்தவராகத் தரையில் படுத்தார்; தம் இரண்டு கால்களையும் சுவரில் முட்டுக்கொடுத்த நிலையில், முகட்டைப் பார்த்தார். அவை அடியோடு வீழ்ந்து கிடந்தன. அதன் ஊர்வாசிகளோ அழிந்துபோய்விட்டனர். 


மக்கிப்போன எலும்புகளைக் கண்டார். அப்போது அவர், “(மடிந்துவிட்ட இந்த ஊரை) அது மடிந்தபின் எவ்வாறு அல்லாஹ் உயிர்ப்பிக்கப்போகிறான்?” என்று கூறினார். (2: 259) அல்லாஹ் அதை உயிர்ப்பிப்பான் என்பதில் அவர் சந்தேகம் கொள்ளவில்லை. எனினும் அவர் ஆச்சரியமாகவே அவ்வாறு கூறினார். எனவே அல்லாஹ், உயிரைக் கைப்பற்றும் வானவரை அனுப்பினான். அவர் அவருடைய உயிரைக் கைப்பற்றினார். அவ்வாறே அல்லாஹ் அவரை நூறாண்டுகள் வரை மரணிக்கச் செய்தான். 


நூறாண்டுகள் கடந்தபோது, இஸ்ரவேலர்களிடம் பல்வேறு மாற்றங்களும் நடந்தேறிவிட்டன.  அச்சமயத்தில் அல்லாஹ் உஸைரிடம் ஒரு வானவரை அனுப்பி, அவருடைய உள்ளத்தைப் படைத்தான். அதன் மூலம் அவரது உள்ளம் அறிந்துகொள்ளும்; இறந்தவர்களை அல்லாஹ் எவ்வாறு உயிர்ப்பிக்கிறான் என்பதை அவருடைய இரண்டு கண்களும் பார்ப்பதற்காக அவற்றையும் படைத்தான்.


பின்னர், அவர் பார்க்கும் நிலையிலேயே அவரது உடலை இணைத்தான். அதன்பின், அவருடைய எலும்புகளைச் சதையாலும் முடியாலும் தோலாலும் போர்த்தினான். பின்னர், அதனுள் உயிரை ஊதினான். அவை அனைத்தையும் அவர் பார்த்து விளங்கிக்கொண்டார்; அதன்பின் எழுந்து அமர்ந்துகொண்டார்.

அப்போது அந்த வானவர் அவரிடம், “எவ்வளவு காலம் (இங்கே) தங்கியிருந்தீர்?” என்று வினவினார். “ஒரு நாள், அல்லது ஒரு நாளில் சிறு பகுதி நான் தங்கியிருந்தேன்” என்று கூறினார். ஏனென்றால், அவர் நண்பகலில்தான் அங்கு வந்து படுத்தார். பிற்பகல் வேளையில் எழுப்பப்பட்டார்; அப்போது சூரியன் மறையவில்லை. அப்போது அந்த வானவர், “மாறாக, நூறாண்டுகள் நீர் தங்கியுள்ளீர்; இதோ உம் உணவையும் பானத்தையும் பாரீர்!” என்று கூறினார். 


அவ்விரண்டும் அதே நிலையிலேயே இருந்தன. பழச்சாறு மாற்றமடையவில்லை; காய்ந்த ரொட்டியும் அப்படியே இருந்தது. அதைத்தான் அல்லாஹ், “அவை கெட்டுப்போகவில்லை” என்று குறிப்பிடுகின்றான். அதேபோல் அத்திப்பழமும் திராட்சையும் அப்படியே  இருந்தன. அவற்றின் நிலை சற்றும் மாறவில்லை.

அவர் மறுப்பதைப் போன்று காணப்பட்டார். அப்போது அவ்வானவர், “நான் சொல்வதை நீர் மறுக்கின்றீரா? அப்படியானால், நீர் உம்முடைய கழுதையைப் பாரீர்!” என்று கூறினார்.  அவர் கூறியதும், கழுதையைப் பார்த்தார். அதன் எலும்புகள் மக்கிப்போய் எலும்புக்கூடாகக் காட்சியளித்தது. அப்போது அந்த வானவர், அக்கழுதையின் எலும்பை அழைத்தார்; அது பதிலளித்தது; எல்லாப் புறமும் எழுந்து அவரை முன்னோக்கின. அந்த வானவர், அதை இணைத்தார்; அதை அவர் பார்த்துக்கொண்டிருந்தார். பின்னர், அதற்குத் தசைகளையும் நரம்புகளையும் அளித்து, தோலால் அதைப் போர்த்தினார். 


பின்னர், அதனுள் உயிரை ஊதினார்; உடனே அக்கழுதை தன் தலையை உயர்த்தியவாறும், காதுகளை வானத்தை நோக்கிய நிலையிலும் மறுமைநாள் நிகழ்ந்துவிட்டதோ என்று  கனைத்துக் கத்திக்கொண்டே எழுந்தது. அதைத்தான் அல்லாஹ் கூறுகிறான்: (செத்துப்போன) உமது கழுதையையும் காண்பீராக! மக்களுக்கு உம்மை ஒரு சான்றாக நாம் ஆக்குவதற்காகவே (இவ்வாறு செய்தோம்.) இன்னும் (அக்கழுதையின்) எலும்புகளை நாம் எவ்வாறு இணைத்து, பின்னர் அவற்றில் சதையை அளிக்கிறோம் என்பதைக் கவனிப்பீராக! (2: 259)


அவருக்கு இது தெளிவானபோது, “அல்லாஹ் அனைத்துப் பொருள்கள்மீதும் ஆற்றலுடையவன் என்பதை நான் அறிகிறேன்” என்று கூறினார். (2: 259) அதாவது ‘மரணித்ததை உயிர்ப்பிப்பது உள்ளிட்ட விஷயங்களை நான் அறிந்துகொண்டேன்’ என்று கூறினார். ஆக இறந்துபோன கழுதையை உயிர்ப்பிப்பதைப் போலத்தான் இறந்துவிட்ட மனிதர்களை அவன் உயிர்ப்பிப்பான் என்பதை நேரடிச் சான்றாக அல்லாஹ் உஸைர் நபிக்குக் காட்டினான். 


கழுதையைப் போல்: எதிர்மறையான, கீழ்த்தரமானவற்றிற்கு உதாரணம் கூறினாலும், அதனிடம் பற்பல பாடங்கள் மனிதனுக்கு உண்டு. வண்ணான் ஒருவன் அழுக்கு மூட்டைகளை கழுதையின் முதுகில் வைத்துக்கொண்டு ஆற்றங்கரை சென்று அவற்றைத் துவைத்துத் தூய்மையாக்கி, காயவைத்து மாலையில் அவற்றைக் கட்டி, அதே கழுதையின் முதுகில் வைத்தவாறு தன் வீடு வந்து சேர்கிறான். 


காலையில் வைக்கப்பட்ட அழுக்கு மூட்டையாக இருந்தாலும் மாலையில் வைக்கப்பட்ட சுத்தமான மூட்டையாக இருந்தாலும் அது எந்த உணர்ச்சியையும் காட்டுவதில்லை. அழுக்கு மூட்டையை வைத்துவிட்டானே என்று சங்கடப்படுவதுமில்லை; தூய்மையான மூட்டையை வைத்துவிட்டானே என்று நினைத்து மகிழ்ச்சி அடைவதுமில்லை. அதனைப் பொருத்த வரை இரண்டுமே சுமைதான். அந்த வகையில் பார்க்கும்போது, மனிதன் அதனிடம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். துன்பம் வரும்போது துவண்டுவிடுவதோ இன்பம் வரும்போது மகிழ்ச்சியில் துள்ளுவதோ கூடாது. இரண்டும் இறைவன் கொடுத்தவை. இரு நிலைகளையும் சமமாக ஏற்றுக்கொள்ளும் பக்குவம் வேண்டும். அவன்தான் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க முடியும்.

======================











கருத்துகள் இல்லை: