வெளிநாட்டு மாப்பிள்ளை எனும் வெளிப்புறப் பகட்டோடு கோலாகலமாய்த் திருமணம் முடிந்தது. மணமுடிந்து இரண்டே மாதங்கள் இல்லாளோடு இனிய வாழ்க்கை. இனிதே கழிந்தன நாள்கள். பகலவனைக்
கண்டதும் பனித்துளிகள் காய்ந்து விடுவதைப்போல தேய்ந்து போயின நாள்கள். ஆசைப்பட்டுக் கேட்ட ஆரஞ்சு மிட்டாயை வாங்கிக் கொடுத்துவிட்டுத் தட்டிப் பறித்துக்கொண்டதைப்போல் உணர்ந்தேன் விடுமுறை முடிந்ததை எண்ணி... கட்டிய கன்னியைத் தனியே விட்டுவிட்டுப் புறப்பட்டேன் அயல்நாடு. ஈராண்டுகளுக்கு ஒரு முறை எனத் திரும்பினேன் தாயகம். விடுமுறை நாள்கள் பனிக்கட்டியாய்க் கரைந்ததும் மீண்டும் அயலகம். இதோ நாற்பது ஆண்டுகள் கடந்து முடிந்தன வாழ்ந்த நாள்களோ மிகக் குறைவு. அன்றாட வாழ்க்கையில் அன்பான மனைவியோடு குழைந்து
உறவாடி கூடிக் குலாவி தினம் மெய்யோடு மெய்சேர்த்து ஒன்றாகத் துயில்கொள்ளும் தாம்பத்திய இன்பத்தை இழந்தேன். அவளுக்கு நானூட்ட எனக்கு அவளூட்ட அன்றாடம் அனுபவிக்கும் பேரின்பம் இழந்தேன். தந்தை எனும் பொறுப்பில் அரவணைப்பையும் அறிவுசார் கருத்துகளையும் என் பிள்ளைகளுக்கு வழங்கும் வாய்ப்பினை இழந்தேன். உறவினர்கள் திருமணத்திற்கு உயிருக்கு உயிரான – என் உயிரோடு கலந்த இல்லாளை அழைத்துச்சென்று இன்புற்று மகிழும் நல் வாய்ப்பினை இழந்தேன். உறவினர்கள் யாரேனும் உயிர்துறந்து விட்டாலும் அருகில் இருந்து ஆறுதல் கூறும் நல் வாய்ப்பினை இழந்தேன். உறவினர் பலரின் சுக-துக்க நிகழ்வுகளில் கலந்துகொண்டு ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்ளும் அன்பையும் ஆறுதலையும் பெற முடியா த துர்பாக்கியசாலி ஆனேன். நோயுற்றபோது அன்போடும் ஆதரவோடும் ஆறுதல் வார்த்தைகள் பேசித் தேற்றவும் ஆற்றுப்படுத்தவும் அருகில் துணைவியின்றி எல்லாச் சுகங்களையும் இழந்தேன். நாள்தோறும் நாவிற்கினிய சுவையான உணவின்றிக் கிடைத்ததைத் தின்று காலம் கழித்தேன். உள்நாட்டில் நன்றாகப் படித்து, அரசுப் பணியில் சேர்ந்து காலம் முழுவதும் சுகமாகவும் சுதந்திரமாகவும் வாழும் வாழ்க்கையை இழந்தேன். வாழும் காலமெல்லாம் ஓய்வின்றி உழைத்து மிகைநேரப் பணி செய்து மிகுதியாய் உழைத்து மாதந்தோறும் பணம் அனுப்பி வைக்கிற ஏடிஎம்
எந்திரமாய் மாறிப்போனேன். பல்லாண்டு காலம் பாலைவன நாட்டில் தனிமையில் வாழ்ந்து என் இளமை முழுவதையும் அயல்நாட்டுப் பணத்திற்கு விற்றுவிட்டு, முதுமையின் இறுதியில் உள்ளூரில் அமைந்துள்ள மஸ்ஜிதின் திண்ணையில் ஓர் ஒதுங்குமிடம் தேடி ஓய்வெடுக்கிறேன். அன்புடன் கவிஞர் நூ. அப்துல் ஹாதி பாகவி 18 09 2022 20 02 1444 ------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக