சனி, 17 செப்டம்பர், 2022

உள்நாட்டில் கால் பதிப்போம்!

 -முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.

அண்மையில் வாட்ஸ்அப்பில், தமிழகத்தைச் சார்ந்த அயல்நாட்டுப் பயணி ஒருவரின் குரல்வழிச் செய்தியைக் கேட்க நேர்ந்தது. அதில் அவர் தம் நாற்பதாண்டு கால அயல்நாட்டு வாழ்க்கையால் இல்வாழ்வை இழந்ததையும், பணத்திற்காக வாழ்க்கையைத் தொலைத்துவிட்டோமே என்றும் புலம்புகிறார். நாம் ஏன் உள்நாட்டிலேயே சம்பாதித்திருக்கக்கூடாது? நாம் ஏன் சொகுசு வாழ்க்கை வாழ ஆசைப்பட வேண்டும்? இல்வாழ்க்கையை இழந்தாலும் பணத்தோடும் பகட்டோடும் வாழ வேண்டுமென எண்ணுகிற நம் குடும்பப் பெண்களின் மனப்போக்கை எவ்வாறு மாற்றப்போகிறோம் என்றெல்லாம் தம் வருத்தங்களை அதில் பதிவு செய்துள்ளார்.

மூன்று, நான்கு தலைமுறைகளாக நம் சகோதரர்கள் அயல்நாடு சென்று சம்பாதிப்பதில் ஆர்வம் காட்டி வருவதை நாம் கண்டுவருகிறோம். ஆண்பிள்ளை வளர்ந்து வருகின்றபோதே அவர்கள்தம்  அன்னையர் அயல்நாட்டுச் சம்பாத்தியத்தின் முக்கியத்துவத்தை எடுத்துக்கூறி அவர்களைத் தயார்படுத்தும் நிலை, கடற்கரை ஓரங்களில் வாழ்கின்ற பெரும்பாலான முஸ்லிம் ஊர்களில் காணப்படுகிறது. அயல் நாட்டில் சம்பாதித்தால்தான் கைநிறையச் சம்பாதிக்கலாம் என்ற எண்ணம் ஊட்டப்படுகிறது. அன்னையரின் அறிவுரை ஆண்களின் மூளையில் அப்படியே இறங்கி அழுத்தமாக அமர்ந்துகொள்கிறது. இது  தலைமுறை தலைமுறையாகப் பின்பற்றப்பட்டு வருகிறது.

முற்காலங்களில் வாழ்ந்த நம் முன்னோர்களும் கடல் தாண்டி அயல்நாடுகளுக்குச் சென்று சம்பாதித்து வந்துள்ளனர் என்பது வரலாறு. ஆனால் அவர்கள் சம்பாதித்ததற்கும் தற்போதைய இளைஞர்கள் சென்று சம்பாதிப்பதற்கும் மிகப்பெரிய வித்தியாசம் உண்டு. அன்றைய முஸ்லிம்கள் வியாபார நோக்கில் அயல்நாடுகளுக்குச் சென்றார்கள். இங்குள்ள தரமான பொருள்களை அயல்நாடுகளுக்குக் கொண்டு சென்று வியாபாரம் செய்து சம்பாதித்து, சம்பாதித்த பணத்தில் அங்குள்ள பொருள்களை வாங்கிக் கொண்டு ஓரிரு மாதங்களில் தாயகம் திரும்புவார்கள்.  பிறகு சில காலம் கழித்து மீண்டும் செல்வார்கள். இது அவர்களின் வழக்கமாக இருந்தது. இதனால் அவர்களின் இல்வாழ்வு பாதிக்கப்படவில்லை.

ஆனால் தற்கால இளைஞர்கள் திருமணத்திற்குப்பின் அயல்நாடு சென்றால் பதினோரு மாதங்கள் கழித்துத்தான் தாயகம் திரும்ப முடியும். சிலர் ஈராண்டுகள் ஒப்பந்தத்தில் செல்கிறார்கள். அவர்கள் ஈராண்டுகள் கழித்துத்தான் தாயகம் திரும்ப முடியும். அது வரை தம்பதியர் ஒருவரையொருவர் பிரிந்துதான் இருக்க வேண்டும். இது இருவருக்கும் எவ்வளவு  மன அழுத்தத்தையும் ஏக்கத்தையும் உருவாக்குகிறது என்பதைப் பெற்றோர் புரிந்துகொள்ள வேண்டும்.

நம் சகோதரர்கள் பொருளீட்ட அயல்நாடுகளுக்குச் சென்றுவிடுவதால் நம்மவர்கள் இழந்தவை ஏராளம். ஒரு பெண் தன் கணவனுடன் தாம்பத்திய வாழ்க்கையை இழந்துவிடுகிறாள்; ஓர் ஆண் தன் மனைவியோடு கூடிக் குலாவி மெய்யோடு மெய் சேர்ந்து துயில்கொள்ளும் இன்பத்தை இழந்து விடுகின்றான்; பிள்ளைகள் தம் தந்தையின் அரவணைப்பையும் அறிவுசார் கருத்துகளையும் இழந்துவிடுகின்றனர்; உறவினர்கள் உறவை இழந்துவிடுகின்றார்கள்; சுக-துக்க நிகழ்வுகளில் கலந்துகொண்டு, ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்ளும் அன்பையும் ஆறுதல் வார்த்தைகளையும் பெற முடியாமல் இழந்துவிடுகின்றான்; நோயுற்றபோது அன்போடும் ஆதரவோடும் ஆறுதல் வார்த்தைகள் பேசித் தேற்றுவதற்கும் பணிவிடைகள் செய்வதற்கும் துணைவியின்றி எல்லாச் சுகங்களையும் இழந்துவிடுகின்றான்; ஒவ்வொரு நாளும் சுவையான உணவின்றிக் கிடைத்ததைத் தின்று காலம் கழிப்பதால் பலவற்றை இழந்துவிடுகின்றான்.

உள்நாட்டில் நன்றாகப் படித்து, ஓர் அரசுப் பணியில் சேர்ந்து காலம் முழுவதும் சுகமாகவும் சுதந்திரமாகவும் வாழும் வாழ்க்கையை இழந்தான்; தேர்தல் வருகின்றபோதெல்லாம் நல்ல ஆட்சியாளரைத் தேர்ந்தெடுக்க வாய்ப்பின்றி வாக்குரிமையை இழந்தான்; வாழும் காலமெல்லாம் ஓய்வின்றி உழைத்து மிகைநேரப் பணி (ஓவர்டைம் ஒர்க்) செய்து பணம் அனுப்பி வைக்கிற ஏடிஎம்  எந்திரமாக மாறிப்போனதால் தன் வாழ்வில் நிம்மதி இழந்தான்; பல்லாண்டு காலம் பாலைவன நாட்டில் தனிமையில் வாழ்ந்தவன், தன் இளமை முழுவதையும் அயல்நாட்டுப் பணத்திற்கு விற்றுவிட்டு, முதுமையின் கடைநிலையில் உள்ளூரில் அமைந்துள்ள மஸ்ஜிதின் திண்ணையில் ஓர் ஒதுங்குமிடம் தேடி ஓய்வெடுக்கிறான்.

நன்றாகப் படித்து, பட்டங்கள் பெற்று ஓர் உயரிய பதவியில் அயல்நாட்டில் பணி கிடைத்து, தன் துணைவியோடு அங்கு உழைத்து வாழ்கிறான் என்றால் அதை நாம் வரவேற்போம். அதற்கு எந்தத் தடையுமில்லை. மாறாக அரைகுறைப் படிப்போடு அயல்நாட்டு மோகத்தில் கடவுச் சீட்டுக்கு விண்ணப்பிக்கும் இளைஞர்கள்மீதே நான் சினம் கொள்கிறேன். ஓர் இளங்கலைப் பட்டமோ முதுகலைப் பட்டமோ இன்றி அயல்நாடு சென்று நீ உன் இளமையை இழக்க வேண்டுமா? நீ நன்றாகப் படித்துப் பட்டம்பெற்று, டிஎன்பிஎஸ்சி, யுபிஎஸ்சி உள்ளிட்ட ஏதேனும் அரசுத் தேர்வெழுதி உயர் பதவியில் அமர்ந்து காலம் முழுவதும் இல்வாழ்வு எனும் அறம் பேணி வாழ்வதை நீ ஏன் இழக்க வேண்டும்? இன்றைய இளைஞர்கள் பலர் அயல்நாடு சென்றுவிடுவதால் நமக்காக ஒதுக்கப்பட்டுள்ள 3.5 சதவிகிதத்திற்கும் உரிய ஆளின்றி வேறு யார் யாரோ அதையெல்லாம் அடைந்துகொள்கிறார்கள்.

அயல்நாட்டில் அயராது உழைக்கும் நீ உள்நாட்டில் உழைத்திருந்தால் இப்போது நீ ஒரு கடைக்கோ, ஒரு நிறுவனத்திற்கோ முதலாளி ஆகியிருப்பாய்; உனக்குக் கீழ் சிலர் வேலை செய்துகொண்டிருந்திருப்பார்கள். உன் இல்வாழ்வும் தொலைந்துபோயிருக்காது; உன் இளமையும் வீணாகியிருக்காது. இப்போது நீ உன் முதுமையில் புலம்புவதைப்போல் புலம்பிடத் தேவையிருந்திருக்காது. உன் மனைவி சிக்கன வாழ்வைக் கற்றுக்கொண்டிருந்திருப்பாள். உள்நாட்டில் உன் இருப்பு நிலைத்திருக்கும். அந்தோ! யாவும் தொலைந்தனவே!

இளைஞர்களே! அயல்நாட்டுக் கனவை ஓர் ஓரமாக ஒதுக்கிவையுங்கள். "திரை கடலோடியும் திரவியம் தேடு'' எனும் முதுமொழி இருந்தாலும், "உள்நாட்டில் உழை; அதுவே உயர்நிலை'' எனும் புதுமொழியை மனதில் கொண்டு உள்நாட்டில் உழைத்து முன்னேறப் பாடுபடு; சுயதொழில் தொடங்கு அல்லது அரசு வேலையைப் போராடிப் பெறு. உள்நாட்டில் பணியாற்றுவதால் எத்தனையெத்தனை நன்மைகள்! உன் பெற்றோருடனும் பிள்ளைகளுடனும் உறவினர்களோடும்  உவகை பொங்க வாழலாம். அன்பான மனைவியைவிட்டுப் பிரிந்து சென்று, வாட்ஸ்அப்பில் குடும்பம் நடத்த வேண்டிய அவசியமில்லை. உறவுகளோடு சின்னச் சின்னச் சண்டைகள் போட்டு பிணங்கிக் கொண்டாலும் காலப் போக்கில் ஒருவருக்கொருவர் இணங்கிக்கொள்ளலாம்.

நன்றாகப் படித்து, உயர் பதவியொன்று அயல்நாட்டில் அமைந்து, துணைவியோடு சேர்ந்து செல்லும் வாய்ப்புக் கிடைக்கப்பெற்றால் அப்போது அயல்நாட்டில் பணியாற்றுவதில் குற்றமில்லை.  அதுவன்றித் தனியாகச் சென்று அடிமட்டப் பணிசெய்து பொருளீட்ட எண்ணாதே! அதனால் உன் இல்வாழ்வையும் இழந்து, உன்னை நம்பி வந்தவளின் தாம்பத்திய வாழ்வையும் பறித்துக்கொண்டு எதைச் சாதிக்கப்போகிறாய்? ஒரு வாழ்க்கையைத் தொலைத்தபின் உனக்கு மட்டும் இன்னொரு வாழ்க்கையா கிடைக்கப்போகிறது?

ஒருக்கால் உள்நாட்டில் உன்னுடைய சம்பாத்தியம் மட்டும் போதவில்லை என்று எண்ணினால் உன் மனைவியையும் நல்லதொரு பணிக்கு அனுப்பலாம். அவளும் சம்பாதிக்கலாம். இருவரும் சம்பாதித்து இனிமையாகக் குடும்ப வாழ்க்கையை நடத்தலாமே? நம் சமுதாயப் பெண்கள் பலர் இளநிலையோ முதுகலையோ படித்துவிட்டுச் சும்மாதானே இருக்கிறார்கள்? அவர்களுடைய பெற்றோர் திருமணப் பத்திரிகையில் போடுவதற்காக மட்டுமா அவர்களைப் படிக்க வைத்தார்கள்? பெண்களுக்கான எத்தனையோ பணி வாய்ப்புகள் இருக்கின்றன. பெண்கள் மட்டுமே பணியாற்ற வேண்டிய எத்தனையோ துறைகள் இருக்கின்றன. அது மட்டுமின்றிப் பெண்களுக்கான அரசு ஒதுக்கீடு (கோட்டா) வேறு உண்டு. பெண்களுக்குத் தோதுவான ஆசிரியப் பணி, மருத்துவப் பணி, மருந்தாளர் பணி, செவிலியர் பணி உள்ளிட்டவை உள்ளன. இத்தகைய ஏதாவது பணியை மேற்கொண்டு உள்நாட்டிலேயே சம்பாதிப்பதற்கான வழிகள் ஏராளம் இருக்கும்போது ஏன் அயல்நாடு சென்று, இரண்டும் கெட்டான் வாழ்க்கை வாழ வேண்டும்?

அயல்நாட்டில் பல்லாண்டுகள் பணி செய்த நண்பர் ஒருவர், இனியாவது நாம் உள்நாட்டிலேயே ஏதாவது பணி செய்துகொண்டு, தம் குடும்பத்தாரோடு சேர்ந்து வாழலாம் என்று முடிவெடுத்து, அயல்நாட்டுப் பணியை முடித்துக்கொள்ளப்போவதாகத் தம் மனைவியிடம் கூறியிருக்கிறார். ஆனால் அவர்தம் மனைவி அதற்கு ஒத்துக்கொள்ளவில்லை. மிக நீண்ட போராட்டத்திற்குப் பின்னரே அவர் உறுதியாக முடிவெடுத்து, அயல்நாட்டுப் பணியை முடித்துக்கொண்டு தற்போது உள்நாட்டில் பணியாற்றிவருகிறார். மாதந்தோறும் கைநிறையப் பணத்தைப் பார்த்த நம் பெண்கள் அப்பணத்திற்கே அடிமையாகிவிட்டதையே இந்நிகழ்வு காட்டுகிறது. தன் கணவனோடு ஒன்றாக வாழ்வதைவிடப் பணத்தோடு வாழ்வதே சிலருக்கு இனிக்கிறது. 

இளைஞர்களே, சிந்தனை செய்யுங்கள். உங்கள் வாழ்க்கை உங்கள் கையில் உள்ளது. எதிர்கால வாழ்க்கையைத் திட்டமிட்டு அமைத்துக்கொள்வது உங்கள் பொறுப்பு. இனியாவது மாற்றி யோசியுங்கள். உள்நாட்டில் கால்பதிக்க முயலுங்கள்.

=====================






கருத்துகள் இல்லை: