-ஜியாஉஸ் சலாம்
சமீபத்தில் ஹைதராபாதில் நடந்த பாரதீய ஜனதா கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில், சிறுபான்மையினரின் விளிம்பு நிலை மற்றும் நலிந்த பிரிவினரை அணுகுமாறு கட்சித் தொண்டர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தினார். பஸ்மாந்தா முஸ்லிம் சமூகத்தை வென்றெடுப்பதற்கான கட்சியின் முதல் உத்தியோகப்பூர்வ முயற்சி இதுவாகும். இது உத்தரப்பிரதேசம் மற்றும் பீகாரில் உள்ள பஸ்மாந்தா முஸ்லிம் தலைவர்களால் முன்கூட்டியே வரவேற்கப்பட்டதுதான், ஆனால் இது முஸ்லிம் சமூகம் முழுவதும் அலைகளையும் அதிர்வுகளையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் மிகப்பெரும் சிறுபான்மையினரான முஸ்லிம்களின் ஒற்றுமையை உடைக்கும் அரசின் முயற்சியாகவே பலரும் இதைக் கருதுகின்றனர். சிறுபான்மைச் சமூகத்தில் மிகப்பெரும் சமூகமாகிய இஸ்லாத்தில் சாதி அமைப்பு இல்லை என்று கூறிக்கொண்டே சாதி அடிப்படையிலான பிளவுகள் இருப்பதைச் சுட்டிக்காட்டி அவர்களுள் சிலர் கேலி செய்தார்கள், இவ்வாறு கூறித் தாழ்த்தப்பட்டோர் பலரைத் தம்மோடு சேர்த்துக்கொள்ள முயல்வது, கட்சியின் வாக்கு வங்கியைப் பெருக்கிக்கொள்வதற்கான தந்திரங்களே என்றும் சுட்டிக்காட்டினர்.
வேதங்கள் என்ன சொல்கின்றன? : அவர்களின் கூற்றுக்கள் இஸ்லாத்தின் கொள்கைகளால் தாங்கப்படுகின்றன. இஸ்லாம் வழங்கிய சாதியற்ற, வர்க்கமற்ற சமூக அமைப்புதான் தாழ்த்தப்பட்ட இந்துக்கள் பலரை இஸ்லாத்திற்கு ஈர்த்தது. உண்மையில், இஸ்லாம் பிறப்பு, சாதி அல்லது வர்க்கத்தின் அடிப்படையில் எந்த வேறுபாட்டையும் அங்கீகரிக்கவில்லை; அதன் முழக்கம் முழுவதும் உலகளாவிய சமத்துவம் பற்றியதுதான். இறுதி இறைத்தூதர் முஹம்மத் நபி தமது கடைசிச் சொற்பொழிவில், “அரபியருக்கு அரபியல்லாதவர்களைவிட அல்லது வெள்ளையர்களுக்குக் கறுப்பினத்தைவிட எந்த மேன்மையும் இல்லை, இறையச்சத்தின் ஏற்றத்தாழ்வுகளைத் தவிர” என்று கூறினார்கள்.
இன்றுவரை, முஸ்லிம்கள் உலகெங்கிலும் உள்ள மசூதிகளில் தோளோடு தோள் சேர்ந்து தொழுகையில் ஒன்றாக நிற்கிறார்கள். ஒருவரின் இடது அல்லது வலது அல்லது முன்னால் யார் நிற்கிறார் என்பது கவனிக்கப்படாது. தொழுகையை நடத்துகிற இமாமும் சமூகத்தின் எந்தப் பிரிவைச் சார்ந்தவராகவும் இருக்கலாம். இனம் அல்லது மத வேறுபாடுகள் ஒருபோதும் ஒற்றுமையைக் குலைக்கவில்லை. சாரே ஜஹான் சே அச்சா எனும் தேசியப் பாடலை எழுதிய பிரபல கவிஞர் முஹம்மத் இக்பால், "ஏக் ஹீ சஃப் மேன் கடே ஹோ கயே மஹ்மூதோ அயாஸ்/ ந கோயி பந்தா ரஹா, ந கோயி பந்தனவாஸ் (சுல்தான் மற்றும் அடிமை அருகருகே நின்றனர்/ அப்போது வேலைக்காரனோ எஜமானனோ எந்த வேறுபாடும் இல்லை; எதுவும் அவர்களைப் பிரித்துவிடவில்லை).” “எல்லா முஸ்லிம்களும் ஒரே உடலைப் போன்றவர்கள்: உடலின் ஏதாவது உறுப்புக்கு வலி ஏற்பட்டாலும் முழு உடலும் அந்த வலியை உணர வேண்டும்” என்று ஒரு நபிமொழி கூறுகிறது. திருக்குர்ஆனில் அல்ஹுஜுராத் எனும் அத்தியாயத்தின் 10ஆம் வசனம், “முஸ்லிம்கள் அனைவரும் சகோதரர்கள்” என அழைக்கிறது. அவர்களுள் இருவர் சண்டையிட்டுக்கொண்டால் அவர்களுக்கிடையே சமாதானம் செய்துவைக்குமாறு கட்டளையிடுகிறது.
ஒரு தனித்துவமான வகை: அழகாகவும், உத்வேகம் தருவதாகவும் இருந்தாலும், இது பெரும்பாலும் வேதவசனங்களுக்குள் மட்டுமே இருக்கிறது. தற்கால இந்திய முஸ்லிம் சமுதாயம் நபியவர்களால் எதிர்பார்க்கப்பட்ட ஒரு பிரதி அல்ல. தொழுகை-நோன்பு-ஹஜ் போன்ற விஷயங்களில் மதநம்பிக்கையின் அனைத்துக் கோட்பாடுகளையும் அது நிலைநிறுத்த முற்படும் அதே வேளையில், சமூக-வரலாற்றுக் காரணிகள் இந்திய இஸ்லாத்தை ஒரு தனித்துவமான வகையாக ஆக்குகின்றன, அங்கு அறியாமலேயே இந்துப் பாரம்பரியமும் இஸ்லாமிய மதிப்பும் இணக்கமாக உள்ளன. நிச்சயமாக, பெரும்பான்மைச் சமூகத்தின் அதீத மேன்மை இதில் ஒரு முக்கியப் பங்கைக் கொண்டுள்ளது. இந்திய முஸ்லிம்களில் மில்லியன் கணக்கானவர்கள் தங்கள் மதத்தை மாற்றிக்கொண்டனர், ஆனால் அவர்கள் தங்கள் சமூக-கலாச்சார நடைமுறைகளைத் தம்மோடு அப்புதிய நம்பிக்கைக்குக் கொண்டுவந்தனர்.
உண்மையில், இந்துக்களிடையே உள்ள ‘தெஹ்ர்வீ' (13வது நாள்) சடங்கைப் போலவே, இந்திய முஸ்லிம்களும் ‘தீஸ்ரா’ மற்றும் 'சாலீஸ்வா' (இறந்தவர்களுக்குத் துக்கம் அனுசரிக்கும் மூன்றாவது மற்றும் 40ஆம் நாள்) போன்ற சடங்குகளைக் கொண்டுள்ளனர். இந்துப் பெண்கள் பெரும்பாலும் திருமணத்திற்கு முன்பு தங்கள் பெயருடன் 'குமாரி' என்ற பின்னொட்டையும், பின்னர் 'தேவி' என்ற பின்னொட்டையும் சேர்த்துக்கொண்டால், (வட இந்திய) முஸ்லிம் பெண்கள் 'ஜஹான்' அல்லது ‘பர்வீன்' போன்ற பின்னொட்டுகளைக் கொண்டுள்ளனர், ஆனால் அவர்கள் தம் தந்தையின் பெயர் அல்லது குடும்பப்பெயரை அரிதாகவே பயன்படுத்துகிறார்கள்.
முஸ்லிம்கள் ஷீஆ, சன்னி என இருபெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளனர். ஹனஃபி, (இந்திய முஸ்லிம்களில் பெரும்பான்மையானவர்கள் இந்தப் பிரிவுச் சட்டத்தைப் பின்பற்றுவோர்), ஹன்பலி, மாலிகி, ஷாஃபிஈ போன்ற மேலும் துணைப் பிரிவுகளைக் கொண்டுள்ளனர்.
பெரும்பாலான கருத்து வேறுபாடுகள் ஷரீஆ பற்றிய அவர்களின் விளக்கத்துடன் தொடர்புடையவை.
அவர்களுக்கிடையேயான அனைத்து வேறுபாடுகளும் கருத்தியல் ரீதியாகவும், சில வழிகளில், உலகளாவியவையாகவும் இருந்தாலும், இந்திய முஸ்லிம்கள் மத்தியில் சாதி இருப்பதுதான் அவர்கள் ‘தனித்த இந்தியர்கள்’ என்று காட்டுகிறது. அவர்கள் சொல்வதுபோல், இந்தியாவில் நீங்கள் உங்கள் மதத்தை மாற்றிக்கொள்ளலாம். ஆனால் உங்கள் சாதியை மாற்ற முடியாது. தலித் சீக்கியர்கள், தலித் கிறிஸ்தவர்கள் போன்ற சொற்களின் முரண்பாட்டை நாம் கொண்டுள்ளோம், இருப்பினும் இரு மதங்களும் சாதி அமைப்பை ஏற்படுத்தவில்லை.
முஸ்லிம்களில், ‘இஸ்லாமியப் பிராமணர்கள்’ என்று அழைக்கப்படும் பத்து சையதுகள் எங்களிடம் உள்ளனர். அவர்கள் தங்கள் வம்சாவளியை நபிகள் நாயகத்தின் குடும்பத்தில் வைத்துள்ளனர். ஷேகுகள், முகலாயர்கள், பதான்கள் மற்றும் பிறருடன் சேர்ந்து, அவர்கள் அரபுத் தீபகற்பம் அல்லது மத்திய ஆசியாவில் இருந்து வந்ததாகக் கூறப்படும் சிறப்புவாய்ந்த முஸ்லிம்கள் அஷ்ரஃப் பிரிவினரை வளர்க்கிறார்கள். எங்களிடம் அஜ்லாஃப்கள் அல்லது பொது மக்கள், பொதுவாக மதம் மாறுபவர்கள் உள்ளனர்.
இறுதியாக, சில சமூகவியலாளர்கள் தலித்துகளுடன் ஒப்பிடும் அர்ஸல்கள் எங்களிடம் உள்ளனர் என்றும் கூறுகின்றனர்.
சமூக அடுக்குமுறை: இந்து சாதி அமைப்பை ஆதார மாதிரியாக வைத்து ஒப்பிடும்போது, முஸ்லிம்கள் மத்தியில் உள்ள சாதிய அமைப்பு முறைகேடுகளைவிட்டு வெகு தொலைவில் உள்ளது. “நாங்கள் தூயோர்; நீங்கள் மாசுபடிந்தோர்” என்று சொல்கிற மாதிரி பெரும்பாலும் இல்லை. உதாரணமாக, ஒருவர் விரும்பிய கல்வி நிறுவனத்தில் கல்வியைத் தொடர்வதற்கோ குறிப்பிட்ட இடத்தில் வீடு வாங்குவதற்கோ எந்தத் தடையும் இல்லை. சைஃபி (தச்சர்) அல்லது அன்சாரி (நெசவாளர்) அல்லது சல்மானி (ஹஜ்ஜாம் - முடிதிருத்துபவர்) - ஒரு பஸ்மாந்தா முஸ்லிம் அல்லது ஒரு முஸ்லிம் ஓபிசி, ஒரு சையத் அல்லது ஷேக் மற்றும் கான் என அனைவரும் ஒரே பள்ளிவாசலில் தொழுகையில் கலந்துகொள்ள முடியும். இந்தப் பிரிவுகளைச் சேர்ந்த ஆண்கள் சையது அல்லது ஷேக் பிரிவைச் சேர்ந்த பெண்களைத் திருமணம் செய்துகொள்ள வேண்டுமானால் போராட வேண்டியது ஏற்படலாம். அதேபோல் சையத் அல்லது ஷேக் ஆண் பஸ்மாந்தா பெண்ணை மணந்தால் விதிகள் வேறு. ஆண் மேலாதிக்கத்தின் அதே நெறிமுறைகள் இந்து மதத்தைப் போலவே பொருந்தும், அங்கும் ஒரு தலித் ஆணுக்கு ஒரு பிராமணப் பெண்ணைத் திருமணம் செய்வதைவிட உயர் சாதி ஆணுக்குத் தாழ்ந்த சாதிப் பெண்ணைத் திருமணம் செய்வது எளிது.
உண்மையில், இந்திய முஸ்லிம்கள் மத்தியில் இந்து மதத்தின் கலாச்சாரச் செல்வாக்கிற்கான ஒரு தெளிவான உதாரணத்தைச் செய்தித்தாள்களில் வருகிற திருமண விளம்பரங்களில் காணலாம், அங்கு “ஒரு சையது குடும்பம் தன்னுடைய ஆண்பிள்ளைக்குத் தோதுவான வரன் தேடுகிறது” அல்லது “ஒரு ஷேக் குடும்பம் தன்னுடைய பெண்ணுக்குப் பொருத்தமான ஒரு வரன் தேடுகிறது” என்பதுபோன்ற விளம்பரங்களைச் சுருக்கமான வார்த்தைகளில் கொடுத்துவிடுவதைப் பார்த்திருக்கலாம். அவர்கள் விரும்பும் தனித்தன்மைகள் அதில் விவரிக்கப்படுவதில்லை. அதாவது அதே செல்வாக்கு உடையவராகவும் அதே குடும்பத்தில் பிறந்தவராகவும் இருக்க வேண்டும். பிற சமூக அடுக்குகளில் இருந்து வருபவர்கள் தொடர்புகொள்ள வேண்டாம் என்பதெல்லாம் உள்ளே மறைந்திருக்கின்றன. இதுதான் இஸ்லாமிய அடையாளமும் இந்துச் சமூக நடைமுறையும் ஒன்றாகக் கலந்த கலவையாகும்.
நிச்சயமாக, இந்தச் சமூக அடுக்கு பரவலாக ஆங்காங்கே காணப்பட்டாலும் மேற்கு பெங்கால்-பீகார்-ஜார்கண்ட்-கிழக்கு உத்தரப்பிரதேசப் பகுதிகளில் மிகவும் பரவலாகக் காணப்படுகிறது. இங்கே, ஒருவர் மற்றொருவரை முதன்முதலில் சந்திக்கும்போது தமது ஆரம்பப் பெயரைச் சொன்னால், 'இஸ் கே ஆஹே க்யா லஹாத்தே ஹைன் (உங்கள் பெயருக்குப் பின்னால் நீங்கள் என்ன பயன்படுத்துகிறீர்கள்)' என்று கேட்பது வழக்கம். இது ஒருவனின் சாதி, தோற்றம் பற்றித் தெரிந்துகொள்ளத் தொடுக்கப்படுகின்ற நுட்பமான கேள்வி. பீகாரில், சாதி சார்ந்த கல்லறைகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. டெல்லி போன்ற மலைப்பகுதிகளிலும், உத்தரப் பிரதேச நகரங்களிலும் கல்லறை 'இட ஒதுக்கீடு' நுட்பமானது. நாட்டின் சில பகுதிகளைச் சேர்ந்த மக்கள் அல்லது சில தொழில்கள் செய்வோர் மட்டுமே இவ்விடங்களில் அடக்கம் செய்யப்படுகின்றனர். மற்றவர்கள் அவ்விடங்களில் அடக்கம் செய்யப்பட மறுக்கப்படுகிறது.
பல்வேறு சூழ்நிலைகளின்கீழ், கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கு முன்பே பஸ்மாந்தா முஸ்லிம்கள் ‘அகில இந்திய பஸ்மாந்தா முஸ்லிம் மஹஸ்’, ‘அகில இந்திய முஸ்லிம் ஓபிசி அமைப்பு’, ‘அகில இந்திய பின்தங்கிய முஸ்லிம் மோர்ச்சா’ போன்ற பதாகைகளின்கீழ் ஒன்றிணையத் தொடங்கிவிட்டனர்.
அகில இந்திய பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் மோர்ச்சா, 32 பிற்படுத்தப்பட்ட இனங்களுக்கான ஒரே குடை அமைப்பாகக் கூறப்படுகிறது. சச்சார் கமிட்டி அறிக்கையின்படி, 40% இந்திய முஸ்லிம்கள் 'பஸ்மாந்தா' ஆவர். அதே நேரத்தில், 'தலித் பிச்டா ஏக் சமன், ஹிந்து ஹோ யா முசல்மான் (அனைத்து தலித்துகளும் இந்துவாக இருந்தாலும் சரி, முஸ்லிமாக இருந்தாலும் சரி)' என்ற முழக்கத்தைத் தொடங்கிவிட்டனர்.
இந்தப் பிளவைத்தான் பாஜக ஊக்குவிக்கவும் சுரண்டவும் முயல்கிறது. அதேநேரத்தில் 2014ஆம் ஆண்டு முதல் அரசின் சில கொள்கைகளும் வலதுசாரிக் கட்சியின் அடிவருடிகளும் இந்திய முஸ்லிம்களை முன்பு எப்போதோ ஒருங்கிணைத்துவிட்டனர். ஒருபுறம், முஸ்லிம் பெண்கள் குடியுரிமை எதிர்ப்பு (திருத்தம்) சட்டப் போராட்டங்களுக்கு எப்படித் தலைமை தாங்கினார்கள் என்பதை நாம் பார்த்தோம். நாடு முழுவதும் அவர்களின் சாதி, பூர்வீகம் குறித்து எந்தக் கேள்வியும் கேட்கப்படவில்லை.
மற்றொருபுறம் முஸ்லிம் பால் பண்ணையாளர்கள் மற்றும் கால்நடைகளை ஏற்றிச் செல்வோர் மீது மீண்டும் மீண்டும் தாக்குதல்கள் நடத்தப்பட்டதைக் கண்டோம், சையதுகள், சைஃபிகள் மட்டும் அல்லாமல், ஷீஆக்களும் சன்னிகளும்கூட ஒருவரையொருவர் அவர்களுள் இறந்தோரை புதைத்துக்கொண்டும், ஒருவரோடொருவர் பேசிக்கொண்டும் இருந்ததைக் கண்டோம். எதிரிக்கும்பல் உங்கள் பிரிவையோ, சாதியையோ கேட்பதில்லை. தாக்கப்படுபவர் ஒரு முஸ்லிமாக இருந்தால் போதும்.
நமக்கான இன்றைய பெரிய கேள்வி என்னவென்றால், “நாம் அனைவரும் முஸ்லிமாக இருந்தால் போதுமா? அல்லது, பிஜேபி வலியுறுத்துவதுபோல், இன்றைய பஸ்மாந்தா முஸ்லிம்களாகவே இருக்கப்போகிறோமா?” எதிரிக்கும்பல் நம்மைத் தாக்கும்போது நம் பிரிவையோ, சாதியையோ கேட்கப்போவதில்லை. முஸ்லிமா என்று பார்த்துத்தான் தாக்குகின்றார்கள். எனவே நாம் அனைவரும் முஸ்லிம்களாக இருந்தால்போதும் என்று ஒருவருக்கொருவர் சொல்லிக் கொள்வோம்.
தமிழாக்கம்: டாக்டர் நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி
தி இந்து ஆங்கில நாளிதழ் (07 08 2022)
===========================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக