வியாழன், 8 செப்டம்பர், 2022

பிரார்த்தனையின் பலன்கள்-12

  


-மௌலவி முனைவர் நூ. அப்துல் ஹாதி பாகவி (இமாம், மதீனா மஸ்ஜித்-பட்டினப்பாக்கம், சென்னை)

----------------------

 

வீட்டிற்குள் நுழையும்போது

வீட்டிற்குள் நுழையும்போது வீட்டிலுள்ளோருக்கு முகமன் (ஸலாம்) சொல்லிவிட்டுச் செல்ல வேண்டும் என்பது நம்முள் பலருக்குத் தெரியும். ஆனால் வீட்டிற்குள் நுழையும்போது என்ன துஆ ஓத வேண்டும் என்று நம்முள் பலருக்குத் தெரியாது. ஏனெனில் நம்முள் பலர் அதைக் கற்றுக்கொள்ளாததே காரணமாகும்.

 

வீட்டினுள் நாம் நுழையும்போது மகிழ்ச்சியும் மனஅமைதியும் நமக்குக் கிடைக்கவேண்டுமே தவிர சண்டை சச்சரவுகள் வாக்குவாதங்கள் ஏற்படக்கூடாது. ஏனெனில் நாம் வீட்டினுள் நுழைகிறபோது ஸலாம் கூறவில்லையெனில் ஷைத்தானுக்கு நம் வீட்டினுள் தங்குவதற்கு இடம் கிடைத்துவிடுகிறது. நாம் உண்ணுமுன் பிஸ்மில்லாஹ் கூறாவிட்டால் அவனுக்கு உணவும் கிடைத்துவிடுகிறது. எனவே நாம் ஷைத்தானை நம் வீட்டிலிருந்து விரட்டிவிட வேண்டுமெனில் நாம் அவ்வப்போது ஓத வேண்டிய துஆக்களை மறவாமல் ஓதிக்கொள்ள வேண்டும்.   

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்: ஒருவர் தம் வீட்டிற்குள்

நுழைந்தால்,

اللَّهُمَّ إِنِّيْ أَسْأَلُكَ خَيْرَ الْمَوْلَجِ، وَخَيْرَ الْمَخْرَجِ، بِسْمِ اللهِ وَلَجْنَا، وَبِسْمِ اللهِ خَرَجْنَا، وَعَلَى اللهِ رَبِّنَا تَوَكَّلْنَا

 

அல்லாஹும்ம இன்னீ அஸ்அலுக கைரல் மவ்லஜி வ கைரல் மக்ரஜி, பிஸ்மில்லாஹி வலஜ்னா வபிஸ்மில்லாஹி கரஜ்னா வஅலல்லாஹி ரப்பினா தவக்கல்னா என்று சொல்லட்டும். பிறகு தமது வீட்டார்களுக்கு முகமன் (ஸலாம்) சொல்லட்டும்.

பொருள்: இறைவா! சிறந்த நுழைவிடத்தையும், சிறந்த வெளியேறுமிடத்தையும் நான் உன்னிடம் கோருகின்றேன். அல்லாஹ்வின் திருப்பெயரால் நாங்கள் (வீட்டிற்குள்) நுழைந்தோம். அல்லாஹ்வின் திருப்பெயரால் வெளியே சென்றோம். எங்கள் இறைவனாகிய அல்லாஹ்வையே முற்றிலும் சார்ந்துள்ளோம்.) (அபூதாவூத்: 4432)

 

அதேபோல் நாம் நம் வீட்டிலிருந்து வெளியே புறப்படுகின்றபோதும் அதற்குரிய பிரார்த்தனையை ஓதிக்கொள்ள வேண்டும். அதையும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நமக்குக் கற்றுத் தந்துள்ளார்கள். இதோ அந்த நபிமொழி.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்: ஒரு மனிதர் தமது வீட்டிலிருந்து புறப்படும்போது,

 

بِسْمِ اللَّهِ تَوَكَّلْتُ عَلَى اللَّهِ، لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ

 

 'பிஸ்மில்லாஹி தவக்கல்து அலல்லாஹி லாஹவ்ல வலா குவ்வத இல்லா பில்லாஹி" (பொருள்: அல்லாஹ்வின் பெயரால் புறப்படுகின்றேன். நான் அல்லாஹ்வையே முழுமையாகச் சார்ந்துள்ளேன். அல்லாஹ்வின் உதவியின்றிப் பாவங்களிலிருந்து விலகிடவும் முடியாது. நல்லறங்கள் புரிய ஆற்றல் பெறவும் முடியாது) என்று கூறினால் அவரிடம் (உமது அலுவல்களில் உமக்கு நேரான வழிகாட்டுதல் வழங்கப்பட்டுவிட்டது, போதுமான அளவு உதவிகள் பெற்றுக்கொண்டீர் (பகைவர்களின் தீங்கிலிருந்து) உமக்குத் தகுந்த பாதுகாப்பு கிடைத்துவிட்டது என்று (வானவர்களின் வாயிலாக உறுதிமொழி) கூறப்படும். மேலும் ஷைத்தான்கள் அவரிடமிருந்து தூரமாகிவிடுவார்கள். 

 

அப்போது வேறொரு ஷைத்தான், ‘நேர்வழியையும் போதுமான உதவிகளையும், தகுந்த பாதுகாப்பையும் (இறைவனிடமிருந்து) பெற்றுக்கொண்ட ஒரு மனிதரை உன்னால் எவ்விதம் வழிகெடுக்க முடியும்?" என்று மற்றொரு ஷைத்தானிடம் கேட்பான். (அபூதாவூத்: 4431) ஆக இந்தப் பிரார்த்தனையை நாம் வழமையாக ஓதிக்கொள்வதால் ஷைத்தானிடமிருந்து பாதுகாப்புப் பெறுவதோடு நம்முடைய மனித எதிரிகளிடமிருந்தும் பாதுகாப்பைப் பெறுகிறோம்.

 

காற்று அல்லாஹ்வின் அருளில் உள்ளதாகும். (சிலநேரம்) அல்லாஹ்வின் அருளாகிய காற்று அருளையே கொண்டுவரும். (சிலநேரம் அல்லாஹ்வின்) வேதனையைக் கொண்டுவரும். எனவே நீங்கள் காற்று வீசுவதைக் கண்டால் அதைத் திட்டாதீர்கள். (மாறாக) அதனுடைய நன்மையை அல்லாஹ்விடம் கேளுங்கள். அதனுடைய தீங்கைவிட்டு அல்லாஹ்விடம் பாதுகாவல் கோருங்கள் என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். (அபூதாவூத்: 4433) எனவே நாம் காற்றைத் திட்டக்கூடாது. மாறாக அதன் நன்மையைக் கேட்பதோடு அதன் தீங்கிலிருந்து பாதுகாப்பைத் தேடிக்கொள்ள வேண்டும்.

 

அன்னை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அறிவித்துள்ள நபிமொழி ஒன்று முஸ்லிம் எனும் நபிமொழித்தொகுப்பு நூலில் பதிவுசெய்யப்பட்டுள்ளது. அதில் சூறாவளிக் காற்று வீசினால் நபியவர்கள் இந்த துஆவைத்தான் ஓதுவார்கள் எனக் காணப்படுகிறது:

 

اللهُمَّ إِنِّي أَسْأَلُكَ خَيْرَهَا، وَخَيْرَ مَا فِيهَا، وَخَيْرَ مَا أُرْسِلَتْ بِهِ، وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّهَا، وَشَرِّ مَا فِيهَا، وَشَرِّ مَا أُرْسِلَتْ بِهِ

 

அல்லாஹும்ம இன்னீ அஸ்அலுக்க கைரஹா வ கைர மா ஃபீஹா வ கைர மா உர்சிலத் பிஹி, வ அஊது பிக மின் ஷர்ரிஹா வ ஷர்ரி மா ஃபீஹா வ ஷர்ரி மா உர்சிலத் பிஹி.

பொருள்: இறைவா, இந்தக் காற்றின் நன்மையையும் அதனுள் மறைந்திருக்கும் நன்மையையும் அது எதனுடன் அனுப்பப்பெற்றுள்ளதோ அதன் நன்மையையும் உன்னிடம் வேண்டுகிறேன். இந்தக் காற்றின் தீங்கிலிருந்தும், அதனுள் மறைந்திருக்கும் தீங்கிலிருந்தும், அது எதனுடன் அனுப்பப்பெற்றுள்ளதோ அதன் தீங்கிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன். (முஸ்லிம்: 1640)

 

இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அறிவித்துள்ள நபிமொழி ஒன்று தப்ரானீயில் பதிவுசெய்யப்பட்டுள்ளது. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், காற்றுவீசுவதைக் கண்டால் அதனை முன்னோக்கியவாறு முழங்காலிட்டு இவ்வாறு ஓதுவார்கள்: 

اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ مِنْ خَيْرِ هَذِهِ الرِّيحِ وَخَيْرِ مَا أُرْسِلَتْ بِهِ، وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّهَا وَشَرِّ مَا أُرْسِلَتْ بِهِ، اللَّهُمَّ اجْعَلْهَا رِيَاحًا وَلَا تَجْعَلْهَا رِيحًا، اللَّهُمَّ اجْعَلْهَا رَحْمَةً وَلَا تَجْعَلْهَا عَذَابًا

அல்லாஹும்ம இன்னீ அஸ்அலுக்க மின் கைரி ஹாதிஹிர் ரீஹி வ கைரி மா உர்சிலத் பிஹி, வ அஊது பிக மின் ஷர்ரிஹா வ ஷர்ரி மா உர்சிலத் பிஹி. அல்லாஹும்மஜ்அல்ஹா ரியாஹன் வலா தஜ்அல்ஹா ரீஹன். அல்லாஹும்மஜ்அல்ஹா ரஹ்மத்தன் வலா தஜ்அல்ஹா அதாபன்.

 

பொருள்: இறைவா, இந்தக் காற்றின் நன்மையையும் இது எதனுடன் அனுப்பப்பெற்றுள்ளதோ அதன் நன்மையையும் உன்னிடம் வேண்டுகிறேன். இந்தக் காற்றின் தீங்கிலிருந்தும், இது எதனுடன் அனுப்பப்பெற்றுள்ளதோ அதன் தீங்கிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன். இறைவா, இதை மழைதரும் காற்றாக ஆக்கிவிடு. வேதனை தரும் (வறண்ட) காற்றாக ஆக்கிவிடாதே. இறைவா, இதனை அருளாக ஆக்கிவிடு. வேதனையாக ஆக்கிவிடாதே. (தப்ரானீ: 977)  

 

மனிதர்களுடைய பாவங்களின் காரணமாக மழை பொழிவதை அல்லாஹ் நிறுத்திவிடுகிறான். மனிதர்கள் தம் பாவங்களுக்காக இறைவனிடம் மன்னிப்புக் கேட்டு மன்றாடுகிறபோது அவர்களை மன்னித்து மழையைப் பொழியச் செய்கிறான். அம்மழை நீர் மூலம் செடி கொடிகளையும் பயிர்களையும் முளைக்கச் செய்கிறான்.

இது குறித்து நூஹ் அலைஹிஸ்ஸலாம் தம் சமுதாயத்திற்குச் சொன்ன செய்தியை அல்லாஹ் திருக்குர்ஆனில் பதிவுசெய்துள்ளான்: உங்கள் இறைவனிடம் மன்னிப்பைக் கோருங்கள். நிச்சயமாக அவன் மிகவும் மன்னிக்கக்கூடியவன்'' என்றும் கூறினேன். (அவ்வாறு செய்தால், தடைபட்டிருக்கும்) மழையை உங்களுக்குத் தொடர்ச்சியாக அனுப்புவான். பொருள்களையும், மக்களையும் கொடுத்து, உங்களுக்கு உதவிபுரிவான்; உங்களுக்குத் தோட்டங்களையும் உற்பத்தி செய்து, அவற்றில் ஆறுகளையும் ஓடச் செய்வான். (71: 10-12)

அல்லாஹ்வின் அருள்நிறைந்த மழைநீர் மூலமே எல்லாப் பயிர்களும் விளைகின்றன. எல்லா மரங்களும் பூத்துக் குலுங்குகின்றன. அவன்தான் அந்த மழைநீர் மூலம் புவியிலுள்ள எல்லா உயிரினங்களையும் வாழச் செய்கின்றான். அது குறித்துப் பின்வரும் வசனம் கூறுவதைப் பாருங்கள்.

 

மேகத்திலிருந்து மிக பாக்கியமுள்ள மழையை நாம் பொழியச் செய்து, அதனைக் கொண்டு பல சோலைகளையும் (விவசாயிகள்) அறுவடை செய்யும் தானியங்களையும் உற்பத்தி செய்கின்றோம். அடுக்கடுக்காய் (கனிகள்) நிறைந்த குலைகளையுடைய நீண்டு வளரும் பேரீச்ச மரங்களையும் (முளைப்பிக்கச் செய்து), அதனை (நம்) அடியார்களுக்கு உணவாக்கி, அவற்றைக்கொண்டு வறண்டுபோன நிலத்தை நாம் உயிர்ப்பிக்கின்றோம்... (50: 9-11)

 

மழையை நிறுத்திவிட்டால் படைப்பினங்கள் யாவும் சிரமப்படும் என்பதைப் படைத்தோன் அல்லாஹ் அறிந்தே இருக்கின்றான். எனவேதான் மனிதர்கள் பாவமன்னிப்புக் கேட்டுவிட்டால் அதை அவன் ஏற்றுக்கொண்டு அவர்களை மன்னித்து, உடனடியாக மழையைப் பொழிவிக்கத் தயாராகவே இருக்கின்றான். ஆகவே நாம் அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு கேட்பதோடு மழையைப் பொழியச் செய்யுமாறும் கேட்க வேண்டும். அதற்கான துஆவை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நமக்குக் கற்றுத் தந்துள்ளார்கள். இதோ அந்த துஆ:

«اللَّهُمَّ اسْقِنَا غَيْثًا مُغِيثًا، مَرِيئًا مَرِيعًا، نَافِعًا غَيْرَ ضَارٍّ، عَاجِلًا غَيْرَ آجِلٍ

அல்லாஹும்மஸ்கினா ஃகைஸன் முஃகீஸன் மரீஅன் மரீஅன் நாஃபிஅன் ஃகைர ளார்ரின் ஃஆஜிலன் ஃகைர ஆஜில்.

பொருள்: அல்லாஹ்வே! எங்களுக்கு உதவிகரமான, மகிழ்ச்சிகரமான, பசுமையை ஏற்படுத்தக்கூடிய மழையைப் பொழியச் செய்வாயாக! நன்மை தரக்கூடிய நட்டம் ஏற்படுத்தாத விரைவான, தாமதமாகாத மழையைப் பொழியச் செய்வாயாக!  (அபூதாவூத்: 1169)

 

இந்த துஆவின்மூலம் அல்லாஹ்விடம் நாம் பயனுள்ள மழையைக் கேட்கிறோம். அந்த மழை எங்களுக்கு உதவிபுரிவதாக இருக்க வேண்டும். மகிழ்ச்சியளிக்கக்கூடியதாக இருக்க வேண்டும். அது யாருக்கும் எந்த இடையூறையும் ஏற்படுத்தாதவண்ணம் இருக்க வேண்டும். அத்தகைய மழையை நீ துரிதமாகத் தர வேண்டும்; தாமதமாக்கிவிடாதே என்றெல்லாம் பல்வேறு பொருள்களை இந்தப் பிரார்த்தனை பொதிந்துள்ளது.

 

நாம் செய்கின்ற துஆவை ஏற்றுக்கொண்டு அல்லாஹ் நமக்கு மழையைப் பொழியச் செய்துவிட்டால், மழை பொழிகின்ற அந்நேரத்தில், «اللهُمَّ أَغِثْنَا، اللهُمَّ أَغِثْنَا، اللهُمَّ أَغِثْنَا

அல்லாஹும்ம அஃகிஸ்னா, அல்லாஹும்ம அஃகிஸ்னா, அல்லாஹும்ம அஃகிஸ்னாஎன்று ஓத வேண்டும்.

பொருள்: அல்லாஹ்வே! மழையை (நன்றாக)ப் பொழியச் செய்வாயாக! அல்லாஹ்வே! மழையை (நன்றாக)ப் பொழியச் செய்வாயாக! அல்லாஹ்வே! மழையை (நன்றாக)ப் பொழியச் செய்வாயாக! (புகாரீ: 1014, முஸ்லிம்: 897)

 

ஒருவேளை மழை நன்றாகப் பொழிந்து, அடைமழையாக மாறி, தொடர்ந்து பெய்துகொண்டிருந்தால் அதுவும் மக்களுக்குச் சிரமம்தான். அதுபோன்று நபியவர்களின் காலத்தில் கடுமழை தொடர்படியாக ஏழு நாள்களாகப் பெய்துகொண்டிருந்தது. அப்போது நபித்தோழர் ஒருவர் வந்து நபியவர்களிடம் முறையிட்டார். அச்சமயத்தில் நபியவர்கள் செய்த துஆ இதோ:

 

«اللَّهُمَّ حَوَالَيْنَا وَلاَ عَلَيْنَا، اللَّهُمَّ عَلَى الآكَامِ وَالظِّرَابِ، وَبُطُونِ الأَوْدِيَةِ، وَمَنَابِتِ الشَّجَرِயு

 

அல்லாஹும்ம ஹவாலைனா வலா அலைனா, அல்லாஹும்ம அலல் ஆகாமி வழ்ழிராபி, வ புத்தூனில் அவ்தியத்தி வ மனாபித்திஷ் ஷஜர். 

இறைவா! எங்கள் சுற்றுப் புறங்களுக்கு (இம்மழையைத் திருப்பிவிடுவாயாக!) எங்களுக்குப் பாதகமாக இதை நீ ஆக்கிவிடாதே! இறைவா! குன்றுகள், மலைகள், ஓடைகள் விளை நிலங்கள் ஆகியவற்றின் மீது (இம்மழையைப் பொழியச் செய்வாயாக!)'' என்று பிரார்த்தனை செய்தார்கள். உடனே மழை நின்றது. நாங்கள் வெயிலில் நடந்து சென்றோம். (புகாரீ: 1014, முஸ்லிம்: 897)

 

ஆக இவைபோன்ற துஆக்களை நாம் மனனம் செய்துகொண்டு நம்முடைய தேவைக்கேற்ப ஓதி வர வேண்டும். எப்போதும் நாம் இறைவனை நினைவுகூர்ந்தவர்களாகவும் அவனோடு தொடர்புடையவர்களாகவும் இருக்க வல்லோன் அல்லாஹ் அருள்புரிவானாக. 

                                           -பிரார்த்தனை தொடரும்

====================








கருத்துகள் இல்லை: