வெள்ளி, 21 பிப்ரவரி, 2025

எல்லோரும் நல்லோரே!

 


-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.

 

இந்தக் காலத்தில் நல்லவர்களைப் பார்ப்பதே அரிதாகிவிட்டதுஎன்று சிலர் அங்கலாய்த்துக் கொள்வதைக் கேட்டிருப்பீர்கள். அவர்களைச் சொல்லிக் குற்றமில்லை. காட்சி ஊடகங்களும் அச்சு ஊடகங்களும் குற்றச் செய்திகளை மிகைப்படுத்தி வெளியிடுவதே அவ்வாறு நினைக்கத் தூண்டுகிறது.

 

 

இயல்புக்கு மாறாகவும் எதிராகவும் நடப்பதே செய்தி என்கிறோம். எனவே இயல்புக்கு மாறாக நடக்கின்ற எல்லாக் குற்றச் செயல்களையும் செய்தித்தாள்களில் வெளியிடுகின்றனர். காட்சி ஊடகங்களில்  ஒளிபரப்புகின்றனர்.  அவற்றைப் பார்க்கின்ற, கேட்கின்ற நாம் எல்லோரும் கெட்டவர்கள் அல்லது கெட்டவர்கள் அதிகரித்துவிட்டனர் என்ற மாய எண்ணத்திற்கு ஆளாகின்றோம்.

 

 

ஆனால் உண்மையில் பத்திலிருந்து இருபது சதவிகிதத்தினர் மட்டுமே இறைவிதிக்கு எதிரான குற்றங்களைச் செய்துகொண்டிருக்கின்றார்கள். அந்தச் செய்திகள் தொடர்ந்து வந்துகொண்டே இருப்பதால் குற்றங்கள் பெருகிவிட்டதைப் போலவும்  எல்லோரும் கெட்டவர்கள் என்ற எண்ணத்தையும் தோற்றுவிக்கிறது. மாறாக எண்பது சதவிகிதத்தினர் இறைவனுக்குப் பயந்து நேர்மையாகவும் நீதியாகவும்  வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். மத வேறுபாடின்றி  எல்லா மதங்களிலும்  நல்லோர் பலர் இருக்கவே செய்கின்றார்கள். சிற்சிலரே தவறுகளையும் குற்றச் செயல்களையும் செய்துகொண்டிருக் கின்றார்கள். அவர்களும் திருந்த வாய்ப்புண்டு.

 

 

எனவே எல்லோரும் குற்றம் செய்கின்றார்கள்; நாம் செய்தால் என்ன என்ற தவறான முடிவுக்கு வந்துவிடக் கூடாது. மீண்டும் சொல்கிறேன்- தவறு செய்வோர் மிக மிகக் குறைவு. குற்றச் செய்திகள் மீண்டும் மீண்டும் சுழற்சி முறையில் வந்துகொண்டே இருப்பதால் தவறுகளும் குற்றங்களும் பெருகிவிட்டதைப் போன்ற மாயத்தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

 

நாம் ஒருவரைப் பார்க்கும்போது தவறான கண்ணோட்டத்திலேயே பார்க்கிறோம். அதனால்தான் பிறரைப் பார்த்து அஞ்சுகிறோம். பிற மனிதர்களிடமிருந்து பாதுகாப்பைப் பெறுவதற்காகப் பல்வேறு பாதுகாப்புகளைக் கையாள்கிறோம். வீட்டைப் பூட்டுகிறோம்; வாகனத்தைப் பூட்டுகிறோம். வீட்டின் முன்பகுதியில் சுழல் கேமரா பொருத்துகிறோம். இவை அனைத்தும் அந்தப் பத்துச் சதவிகித மனிதர்களிடமிருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்ளத்தானே தவிர, எல்லா மனிதர்களிடமிருந்து  தற்காத்துக்கொள்ள அன்று என்பதை நாம் உணர வேண்டும்.

 

 

ஒருவரைப் பார்த்தவுடன், இவர் நம் பொருள்களைத் திருடிச் சென்று விடுவாரோ, நம்மை ஏமாற்றிவிடுவாரோ, நம்மிடம் உள்ளதைப் பிடுங்கிக்கொள்வாரோ என்று எண்ணுகிறோம். இது தவறான எண்ணம். இப்படி ஓர் இறைநம்பிக்கையாளரை எண்ணக்கூடாதென நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தடுத்துள்ளார்கள். ஒருவர் தம் சகோதர முஸ்லிமைக் கேவலப்படுத்துவதே அவருடைய தீமைக்குப் போதிய சான்றாகும்.” (முஸ்லிம்: 5010)

 

 

ஒருவன் தன் சகோதரனைக் கேவலமாகக் கருதுவதே அவனுடைய பாவத்திற்குப் போதுமானதாகும். அதாவது ஒருவன் பாவம் செய்துவிட்ட பாவி என்று சொல்வதற்கு, அவன் பிறரைக் கேவலமாகக் கருதுவதே போதுமானதாகும். அதுவே அவனுக்கு அப்பெயரைப் பெற்றுத்தந்துவிடும். எனவே ஒரு மனிதரைப் பார்த்ததும் அவரை நல்லவராகவே கருத வேண்டும். அதைத்தான் பின்வரும் நபிமொழி உணர்த்துகிறது.

 

 

ஓர் இறைநம்பிக்கையாளரை நல்லவராகவே தவிர எண்ண வேண்டாம்என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியுள்ளார்கள். (இப்னுமாஜா: 3922)

 

 

பிறர் பொருளைத் திருடாத, பிறரை ஏமாற்றாத, நற்குணமுடையவன்தான் பிறரைப் பற்றி நல்லவிதமாக நினைப்பான். தவறுகளும் குற்றங்களும் செய்துகொண்டே இருப்பவன்தான் தன்னைப் போலவே பிறரும் இருப்பார்கள் என்று அஞ்சுவான். குற்றங்களோ தவறுகளோ செய்யாதவன் பிறரைப் பார்க்கும் பார்வையே வேறு. அவன் எல்லோரையும் நல்லவர்களாகவே பார்ப்பான்.

 

 

அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்; காமாலைக் கண்ணுக்குக் காண்பதெல்லாம் மஞ்சள் ஆகிய பழமொழிகள் உணர்த்துவது, நாம் யாரை எந்தக் கோணத்தில் பார்க்கின்றோமோ அவ்வாறுதான் அவர்கள் தெரிவார்கள்; நம் உள்ளத்தில் கசடு இருந்தால் பார்ப்போரையெல்லாம் அந்த எண்ணத்தோடுதான் பார்க்கத் தூண்டும். நம் உள்ளம் தூய்மையாக இருந்தால் பார்ப்போரையெல்லாம் நல்லோராகப் பார்ப்போம். எனவே முதலில் தூய்மைப்படுத்த வேண்டியது நம் உள்ளத்தைதான்.

 

 

அப்படித்தான் இன்று பல்வேறு கோணங்களில் பயம் படரவிடப்பட்டுள்ளது. யாரைப் பார்த்தாலும் பயம். தொடரியில் பயணிக்கும்போது, எவ்வளவுதான் தாகம் ஏற்பட்டாலும் பக்கத்தில் உள்ளோரிடம் தண்ணீர் வாங்கிக் குடிக்க மாட்டோம்; எவ்வளவுதான் பசி ஏற்பட்டாலும் அருகில் உள்ளோரிடம் பிஸ்கட் வாங்கிச் சாப்பிட மாட்டோம்; அவர்களே தாமாக முன்வந்து கொடுத்தாலும் நாம் அதை வாங்கிக்கொள்ள மாட்டோம். எல்லாமே பயம்தான்; சந்தேகம்தான். திருடனாக இருப்பானோ, நம் பணத்தை அபகரித்துக்கொள்வானோ என்ற அச்சம்தான்.

 

 

ஊடகங்களின் அதீத வளர்ச்சியாலும் துரிதச் செய்திகளாலும் மனித உள்ளங்களில் பெருமளவில் பயம் விதைக்கப்பட்டுள்ளது. அவை பிற மனிதர்களின் மீதான நம்பிக்கையைக் கெடுத்துள்ளன; குறைத்துள்ளன. யாரைப் பார்த்தாலும் தவறாக எண்ணும் போக்கையே வளர்த்துள்ளன. இந்நிலையிலிருந்து வெளியேறி, யாரையும் தவறாகவோ இழிவாகவோ எண்ணாமல், இயல்பான வாழ்க்கை வாழ நாம் முற்பட வேண்டும்.

 

 

அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறுகின்றான்: இறைநம்பிக்கைகொண்டோரே! மிகுதியான சந்தேகங்களிலிருந்து நீங்கள் விலகிக் கொள்ளுங்கள். ஏனென்றால், நிச்சயமாகச் சந்தேகங்களில் சில பாவமானவையாக இருக்கின்றன. (எவருடைய குற்றத்தையும்) நீங்கள் துருவித்துருவி விசாரித்துக் கொண்டிருக்க வேண்டாம்... (49: 12)

 

 

ஆசிரியரைப் பார்க்கும் பார்வை மரியாதையான பார்வையாக இருக்க வேண்டும். அவர்மீது மரியாதை இருந்தால்தான் அவர் கற்றுத் தருவதை நாம் கவனிக்க முடியும்; அதை உள்வாங்க முடியும். ஆசிரியர்மீது மரியாதை கலந்த பயம் இருந்தால்தான் நாம் அவர் சொல்லித் தருவதைக் கற்றுக்கொள்ள முடியும். இப்படி ஒவ்வொருவர்மீதும் மரியாதையும் அன்பும் இருந்தால்தான் நாம் காண்போர்மீது மரியாதை செலுத்தத் தோன்றும். ஆகவே நாம் காணும் எல்லோரும் நல்லோரே என்று எண்ணுவோம். நம் எண்ணத்திற்கேற்பவே இறைவன் நம் செயல்பாடுகளை அமைப்பான்.

==========================

செவ்வாய், 11 பிப்ரவரி, 2025

இந்தக் காலத்தில் இப்படியும் ஒருவரா?!

 


--------------------------------------------------

எனக்குத் தெரிந்த ஒருவர் (இப்ராஹீம்) நேற்று (10.02.2025) என்னை அலைப்பேசியில் தொடர்புகொண்டு பேசினார்.

 

நான் 45 ஆண்டுகளுக்குமுன் அரிசி வியாபாரம் செய்துகொண்டிருந்தபோது, அதே தொழிலைச் செய்துவந்த ஒருவரோடு எனக்குப் பழக்கம் ஏற்பட்டது. அப்போது எனக்கு 18 அல்லது இருபது வயது இருக்கும். அவருக்கு அப்போது 45 வயது இருக்கும். அவரும் நானும் தொழில் செய்து வந்த வேளையில், ஒரு நாள் நான் அவரிடம்  இருபது ரூபாய் கடன் வாங்கினேன். பிறகு அதைத் திருப்பிச் செலுத்த மறந்துவிட்டேன்.

 

இப்போது நான் என்னுடைய 66ஆம் அகவையில் ஓய்வுக் கட்டிலில் படுத்துக்கொண்டு, பழைய நினைவுகளை அசைபோட்டுக்கொண்டிருந்தபோது, அது என் நினைவுக்கு வந்தது. உடனடியாக எழுந்து அமர்ந்துகொண்டு, அதைத் திருப்பிக் கொடுப்பது பற்றிச் சிந்தித்தேன். அந்தத் தொகையை எடுத்துக்கொண்டு, என் மகனுடைய துணையோடு அவருடைய மஹல்லாவிற்கு, அவரைத் தேடிச் சென்று விசாரித்தேன். அவருடைய பெயரைச் சொல்லி (உஸ்மான்), அவர் இருக்கின்றாரா அல்லது அவர்தம் உறவினர்கள் யாரேனும் இருக்கின்றாரா என்றெல்லாம் விசாரித்துப் பார்த்தேன். அந்தப் பெயரில் வயதான யாரும் இங்கு இல்லை என்று சொல்லிவிட்டார்கள். அந்தத் தொகையைத் திருப்பிச் செலுத்த முடியவில்லையே என்ற மனவருத்தத்தோடு திரும்பி வந்துவிட்டேன்.

 

பிறகு ஆலிம்கள் சிலரிடம் இதற்கான தீர்வு கேட்டேன். திருப்தியான பதில் இல்லை. அதனால் உங்களிடம் கேட்டால் ஒரு தீர்வு கிடைக்குமே என்ற எண்ணத்தில்தான் உங்களை அழைத்தேன் என்றார்.

 

எப்போது, எவ்வளவு கடன் வாங்கினீர் என்று விசாரித்தேன்.

 

1980ஆம் ஆண்டு இருக்கலாம்; இருபது ரூபாய் மட்டும் கடன் வாங்கினேன் என்றார்.

 

இப்போது எவ்வளவு அவருக்குக் கொடுக்கப்போகிறீர்?”

 

கணக்குப் பார்த்ததில் 2700 ரூபாய் சொச்சம் வருது. முழுமையாக 3000 ரூபாய் கொடுத்துவிடலாம் என்று முடிவு செய்துள்ளேன்.

 

எப்படிக் கணக்குப் போட்டீங்க?”

 

அன்றைய தங்கத்தின் விலையையும் இன்றைய விலையையும் ஒப்பிட்டுக் கணக்கிட்டேன் என்றார்.

 

அப்படியா? சரியாகத்தான் கணக்குப் போட்டுள்ளீர் என்றேன்.

சரி ஹஜ்ரத், அந்தத் தொகையை நான் எப்படி அவருக்குக் கொடுப்பது? அதற்கான தீர்வைச் சொல்லுங்க என்றார்.

 

அதற்கு ஒரு வழி இருக்கு. அதாவது அவருடைய பெயரில் (நிய்யத் வைத்து) யாரேனும் ஓர் ஏழைக்கு அந்தத்  தொகையைத் தர்மம் செய்துவிடுங்கள். அல்லாஹ் அதற்கான நன்மையை அவருடைய கணக்கில் சேர்த்துவிடுவான்; உங்களுக்கும் நன்மை உண்டு என்றேன்.

 

அதைக் கேட்ட மகிழ்ச்சியில், “அல்ஹம்து லில்லாஹ் என்றார். நீங்க இந்தத் தீர்வைச் சொன்ன பிறகுதான் என்னுடைய கவலை நீங்கியது. ரொம்ப ஷுக்ரியா (நன்றி) ஹஜ்ரத் என்றார்.

 

என் பதிலைக் கேட்டு மனத்திருப்தியடைந்த அவரைப் பார்த்து நான் பெருவியப்படைந்தேன். இந்தக் காலத்தில் இப்படியும் ஒருவரா!

 

எத்தனையோ பேர் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்தாமல் இழுத்தடிக்கிறார்கள்; இறுதி வரை திருப்பிச் செலுத்தாமல் ஏமாற்றிவிடுகின்றார்கள். அப்படிப்பட்ட காலத்தில், தம் நினைவுகளை அசைபோட்டு, தாம் வாங்கிய இருபது ரூபாயை நினைவில் கொண்டுவந்து, அதை இன்றைய மதிப்பிற்கேற்ப நிறைவேற்ற வழிதேடுகிறாரே என்று வியந்தேன்.  

    

இறுதி இறைத்தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் போதித்த போதனைகளைப் பின்பற்றுவதில் எவ்வளவு ஆர்வமுடையவராய் இருக்கின்றார்! மறுமையை எண்ணி எவ்வளவு அஞ்சுகிறார்!

 

அடியார்கள் தனக்குச் செய்ய வேண்டிய கடமைகளில் குறை செய்துவிட்டால் அதை அல்லாஹ்  மன்னித்துவிடுவான். ஆனால் ஓர் அடியார் மற்றோர் அடியாருக்குக் கொடுக்க வேண்டிய உரிமைகளில் குறை செய்தால் அதற்கான தீர்வை அந்த அடியாரிடம்தான் பெற வேண்டும். ஒருக்கால் அந்த அடியாரிடம் அவர் மன்னிப்புக் கேட்கலாம். பாதிக்கப்பட்ட அடியார் இறந்துபோயிருந்தால், அவருக்காகவும் தமக்காகவும் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரலாம். அது தொகையாக இருக்கும் பட்சத்தில், அந்தத் தொகையை அந்த அடியார் பெயரில் யாரேனும் ஏழைக்குத் தர்மம் செய்துவிடலாம். இதை இன்றைய மனிதர்கள் உணர வேண்டும்.

 

இல்லையேல் மறுமையில் - தீர்ப்பு நாளில் அவ்விருவருக்கிடையே அல்லாஹ் தீர்ப்பு வழங்குவான். அங்கே பாதிக்கப்பட்ட மனிதருக்கு நியாயத் தீர்ப்பு வழங்கப்படும். உரிமை மீறலில் ஈடுபட்டவருடைய நன்மை பாதிக்கப்பட்டவருக்குக் கொடுக்கப்படும் என்பதை நினைவில் கொள்வோம்.

 

கடன் வாங்கியோர் இயன்ற அளவிற்குத் துரிதமாக அதனைத் திருப்பிச் செலுத்த முயலுங்கள்.


 ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தொழுகையில் துஆ செய்யும் போது, "இறைவா! பாவத்திலிருந்தும், கடனிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்'' என்று கூறுவார்கள்.  (இதைச் செவியுற்ற) ஒருவர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம், "அல்லாஹ்வின் தூதரே!  தாங்கள் கடன் படுவதிலிருந்து இவ்வளவு அதிகமாகப் பாதுகாப்புத் தேடுவதற்குக் காரணம் என்ன?'' என்று கேட்டார். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், "மனிதன் கடன்படும் போது பொய் பேசுகிறான்; வாக்குறுதி தந்து (அதற்கு) மாறு செய்கிறான்'' என்று பதிலளித்தார்கள். (புகாரீ: 2397)

 

அன்புடன்

மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி

11 02 2025

=============================

புதன், 29 ஜனவரி, 2025

உங்கள் எழுத்துகள் படிப்போரின் உள்ளத்தில் உவகையை ஏற்படுத்தட்டும்


-------------------------------
ஒவ்வொரு செயலுக்கும் ஓர் எதிர்வினை உண்டு. நாம் ஒரு நகைச்சுவை சொன்னால் சிரிப்பார்கள்; துக்கமான செய்தியைச் சொன்னால் வருத்தப்படுவார்கள்; நாம் பிறரைத் திட்டினால் அவர்கள் நம்மைத் திட்டுவார்கள்; நாம் அடித்தால் அவர்கள் நம்மை அடிப்பார்கள்; நாம் பிறரிடம் மரியாதையாகவும் ஒழுக்கமாகவும் நடந்துகொண்டால் அவர்கள் நம்மை மரியாதையாக நடத்துவார்கள். நாம் அன்பாக நடந்துகொண்டால் அவர்களும் நம்மிடம் அன்பாக நடந்துகொள்வார்கள். இப்படி ஒவ்வொரு செயலுக்கும் ஓர் எதிர்வினை உண்டு. ஆனால் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு ஒருவர் நன்மை செய்தாலும் தீமை செய்தாலும் அவருக்கு அவர்கள் நன்மையே செய்வார்கள். அதுதான் அவர்களின் எதிர்வினை.
நான் அல்லாஹ்வின் தூதரைப் பின்பற்றுகிற ஒரு முஸ்லிம் என்று சொல்லிக்கொள்வதில் நாம் பெருமிதமடைகிறோம். ஆனால் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், தம்மை எதிர்த்தவனை என்ன செய்தார்கள்? தம்மைக் கொல்ல வந்தவனை என்ன செய்தார்கள்? தம்மைத் திட்டியவனை என்ன செய்தார்கள்? மன்னித்தார்கள். அந்தப் பண்பு நம்மிடம் இல்லையே.

நம்மைத் திட்டியவனைத் திட்டுவதைக்கூட நாம் ஒருபுறம் வைத்துவிடுவோம். நம்மை எதிர்த்தவனைக்கூட, நாம் திட்டித்தீர்க்கின்றோமே இது எந்த வகையில் நியாயம்?
இன்று சமூக வலைத்தளங்களில் அடுத்தவனைத் திட்டுவதும், அவனுடைய தனிப்பட்ட செய்திகளை அம்பலப்படுத்துவதுமான பதிவுகள்தாமே நிறைந்து கிடக்கின்றன? அடுத்தவனின் இதயத்தைக் கீறிக் கிழிக்கும் பதிவுகள், அந்தரங்கப் பதிவுகள் ஆகியவைதாமே மலிந்து கிடக்கின்றன?

நமக்கு நன்மை செய்தவனுக்கு ஒரு நன்மை செய்வது பெரிதன்று. நமக்குத் தீங்கு செய்தவனுக்கு நன்மை செய்வதுதான் பெரிதிலும் பெரிது.

உக்பா பின் ஆமிர் ரளியல்லாஹு அன்ஹு அறிவித்துள்ளதாவது: நான் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைச் சந்தித்தேன். அப்போது அவர்கள் என்னிடம், “உக்பா பின் ஆமிரே! உன் உறவைத் துண்டித்தவரோடு நீ சேர்ந்து வாழ்; உனக்குத் (தராமல்) தடுத்துக்கொண்டவருக்கு நீ கொடு; உனக்கு அநியாயம் செய்தவரை மன்னித்துவிடு” என்று கூறினார்கள். (முஸ்னது அஹ்மத்: 17452)

உங்கள் எழுத்துகள் பிறரின் உள்ளத்தைக் கீறிக்கிழித்துவிட வேண்டா.
மாறாக உங்கள் எழுத்துகள்
படிப்போரின் உள்ளத்தில் உவகையை ஏற்படுத்தட்டும்.
முடங்கியோரின் வாழ்க்கையை முன்னுக்குக் கொண்டுவரட்டும்.

துவண்டுபோனோரின் உள்ளத்தில் துணிவை ஏற்படுத்தட்டும்.

சோர்ந்து போனோருக்கு ஆறுதலாக அமையட்டும்.

எழுதினால் அப்படி எழுதுங்கள். இல்லையேல் அமைதியாக இருங்கள்.

பேசினால் நல்லதைப் பேசுங்கள். இல்லையேல் அமைதியாக இருங்கள்.

-மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி
29 01 2025

சனி, 25 ஜனவரி, 2025

உங்கள் கைப்பேசியை அமைதி நிலையில் வையுங்கள்

 



தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டதும்,

"உங்கள் ஸஃப்பு (அணி)களைச் சரி செய்து கொள்ளுங்கள்" என்று இமாம் அறிவிப்புச் செய்வது வழக்கம்.


தற்காலத்தில் "உங்கள் கைப்பேசியை அமைதி நிலையில் (Silent mode) வைத்துக் கொள்ளுங்கள்" என்று ஒவ்வொரு தொழுகைக்கும் இமாம் சொல்ல வேண்டிய நிர்ப்பந்த நிலை ஏற்பட்டுள்ளது.


அதைச் சொன்னாலும் சிலர் அமைதி நிலையில் வைக்க மறந்து விடுகின்றார்கள். அதனால் அது ஒரு பக்கம் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. நிம்மதியாகத் தொழ முடியவில்லை. 


"தொழுகையில் இருக்கும்போது கைப்பேசி ஒலித்தால், அதை உடனே அமைதிப் படுத்துங்கள்; அதனால் உங்கள் தொழுகை முறியாது" என்றெல்லாம் சொல்லிப் பார்த்துவிட்டோம். ஆனாலும் சிலருக்கு அச்சட்டம் புரிவதில்லை. முழுமையாக ஒலித்து அடங்கும் வரை அவர்கள் அதை எதுவும் செய்வதில்லை.


மன ஓர்மையோடும் மனநிம்மதியோடும் தொழுவதற்காகத்தான் பள்ளிவாசலுக்குச் செல்கின்றோம். அங்கும் அமைதியான சூழல் இல்லையென்றால் வேறு எங்குதான் அமைதியைத் தேடுவது?


சில பள்ளிவாசல்களில், "படைத்தவனோடு தொடர்பு கொள்ளும் போது படைப்புகளோடு தொடர்பைத் துண்டியுங்கள்" என்று அதன் நுழைவாயிலில் எழுதி வைத்திருக்கின்றார்கள்.


ஆகவே இனி வரும் காலங்களில் நாம் ஒவ்வொருவரும் பள்ளிவாசலுக்குள் நுழையும்போதே நம் கைப்பேசியை அமைதி நிலையில் வைப்பதை உறுதி செய்து கொள்வோம்; அவசரத்தில் அதைச் செய்ய மறந்துவிட வேண்டாம். 


அன்புடன்

நூ.அப்துல் ஹாதி பாகவி

25.01.2025


#silentmode 

#switchoffyourmobile

#besilent

புதன், 22 ஜனவரி, 2025

இது சுன்னத் என்றால் அது சுன்னத் இல்லையா?

 


----------------------

முதல் மனைவி மணவிலக்கு அல்லது மரணம் அல்லது குலா உள்ளிட்ட ஏதேனும் காரணத்திற்காக ஆண்கள் மறுமணம் செய்துகொள்ள நாடுகின்றார்கள். அப்போது அவர்கள் தம்முடைய சுயவிவரக் குறிப்புகளை வாட்ஸ் அப் தளத்தில் பகிர்கின்றார்கள். அதில் அவர்கள் விதிக்கின்ற நிபந்தனைகளுள் ஒன்று நபிவழிக்கு முரணானது என்பதை அவர்கள் உணர்வதே இல்லை. அதாவது “முப்பது வயதுக்குட்பட்ட, குழந்தை இல்லாத பெண்ணாக இருக்க வேண்டும்” என்பதே அந்த நிபந்தனை. இந்த நிபந்தனையை ஆலிம்கள் அல்லாதோர் விதிப்பதில் வியப்பில்லை. ஆனால் ஆலிம்களும் தம் சுயவிவரக் குறிப்பில் தவறாமல் அந்த நிபந்தனையைச் சேர்ப்பதைக் கண்டு நான் பெரிதும் வியப்படைகிறேன். (இது குறித்து நான் ஏற்கெனவே எழுதியும் இருக்கிறேன்.)

 

இவ்வுலகில் பிறந்த ஒவ்வொருவருக்கும் வாழ்வாதாரம் (ரிஸ்க்) வழங்குவது இறைவனின் பொறுப்பாகும். அது மனிதனின் பொறுப்பன்று. திண்ணமாக வாழ்வாதாரம் (ரிஸ்க்) ஒரு மனிதனை மரணம் தேடி வருவதைப் போன்று வருகிறது (ஷுஅபுல் ஈமான்: 1147) என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியுள்ளதை நாம் நினைவில் கொள்வோம்.

 

நம் பிள்ளைகள் நம்மோடு வளர்வதால் அவர்களுக்கு நாம் உணவூட்டுவதாக எண்ணிக்கொள்கிறோம். அது உண்மையில்லை. மாறாக நம் மூலம் அவர்களுக்கு அல்லாஹ்வே உணவளிக்கிறான். இந்த உண்மையைப் புரிந்துகொண்டால், “எவனோ பெற்ற பிள்ளைக்கு நான் உணவு கொடுக்க வேண்டுமா?” என்ற எண்ணம் தோன்றாது.

 

மறுமணம் செய்துகொள்வது நபிவழி என்றால், அந்தப் பெண்ணின் முந்தைய கணவனின் பிள்ளைகளோடு  ஏற்றுக்கொள்வதும் நபிவழிதானே? அதை ஏன் அவர்கள் உணர்வதில்லை?

 

நபித்தோழர் அபூசலமா ரளியல்லாஹு அன்ஹு இறந்தபின் உம்முசலமா ரளியல்லாஹு அன்ஹா தம்முடைய மூன்று பிள்ளைகளோடு இத்தா (காத்திருப்புக் காலம்) இருந்தபோது, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  தமக்காக அவரைப் பெண்கேட்டு அவரிடம் தூது அனுப்பினார்கள். அது குறித்த நபிமொழி இதோ.

 

உம்மு சலமா ரளியல்லாஹு அன்ஹா கூறியதாவது: என்னுடைய இத்தா முடிந்தபோது அபூபக்ர் ரளியல்லாஹு அன்ஹு தமக்காக என்னைப் பெண்கேட்டு ஆள் அனுப்பினார்கள். நான் அவர்களை மணமுடித்துக்கொள்ளவில்லை. பின்னர் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உமர் பின் கத்தாப் ரளியல்லாஹு அன்ஹு அவர்களை என்னிடம் அனுப்பித் தமக்காகப் பெண்கேட்டார்கள். நான் (கடுமையாகக் கோபம் கொள்கின்ற) ரோஷக்காரி. மேலும் (முந்தைய கணவர் மூலம்) எனக்குப் பிள்ளைகள் உள்ளனர். என்னுடைய (வலீ) பொறுப்பாளர்களுள் யாரும் ஊரில் இல்லை என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்குத் தெரிவியுங்கள் என்று சொல்லியனுப்பினேன்.

 

அவர் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் சென்று, (நான் சொல்லியனுப்பிய) அதைக் கூறினார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், “அவரிடம் திரும்பச்சென்று, ‘நான் (கடுமையாகக் கோபம் கொள்கின்ற) ரோஷக்காரி’ என்று நீங்கள் கூறியதற்காக, தாம் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்வதாகவும் அவன் உங்களின் ரோஷத்தை நீக்கிவிடுவான் என்றும் ‘(முந்தைய கணவர் மூலம்) எனக்குப் பிள்ளைகள் உள்ளனர்’ எனக் கூறியதற்காக, நீங்களே உங்கள் பிள்ளைகளை (உங்களுடன் வைத்து)க் கவனித்துக்கொள்ளலாம் (அல்லாஹ் போதுமானவன்) என்றும், ‘என்னுடைய (வலீ) பொறுப்பாளர்களுள் யாரும் ஊரில் இல்லை’ என்று கூறியதற்காக, ஊரில் உள்ள அல்லது ஊரில் இல்லாத உங்களுடைய பொறுப்பாளர்களுள் யாரும் இதை வெறுக்கப்போவதில்லை என்றும் கூறுமாறு சொல்லியனுப்பினார்கள்... (நஸாயீ: 3202)

 

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உம்மு சலமாவை ஹிஜ்ரீ 4ஆம் ஆண்டு மணந்து கொண்டபோது அவருக்கு முப்பது வயது. அவருக்கு சலமா, உமர், ஸைனப் ஆகிய மூன்று பிள்ளைகள் இருந்தார்கள்.  அவரை அவருடைய பிள்ளைகளோடுதான் நபியவர்கள் மணமுடித்துக்கொண்டார்கள். நபியவர்களின் வீட்டில்தான் அக்குழந்தைகள் வளர்ந்தார்கள் என்பது வரலாறு.  

 

ஆகவே இனிவரும் காலங்களில் மறுமணம் முடிப்போர் தமக்கான துணையைத் தேடும்போது, “குழந்தை இல்லாத பெண் வேண்டும்என்ற நிபந்தனையை விதிக்காதீர். வாழ்வாதாரத்தை வழங்குபவன் வல்லோன் அல்லாஹ் என்பதை அறவே மறக்காதீர்.

                       

-மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி

22 01 2025

வெள்ளி, 17 ஜனவரி, 2025

மாற்றுக் கருத்தையும் ஏற்றல் இனிது


-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.

 

நம்முள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்றைப் பற்றியும் ஒரு கருத்து உண்டு. ஒருவரின் கருத்து நம்முடைய கருத்துக்குத் தோதுவான கருத்தாக இருக்கலாம்; அல்லது எதிர்க்கருத்தாக இருக்கலாம்.  நம் கருத்துக்குத் தோதுவான கருத்தாக இருந்தால் அதை ஏற்றுக்கொள்கிற நாம், எதிராக இருந்தால்  ஏற்றுக்கொள்வதில்லை. எதிர்க்கருத்தில் உண்மை இருந்தால் ஏற்றுக்கொள்ள வேண்டும்; அதுதான் நம் அறிவு முதிர்ச்சியைக் காட்டும். உண்மையாகவே இருந்தாலும் நான் அவனது கருத்தை ஏற்க மாட்டேன் என்பதுதான் பெருமை ஆகும்.

தற்பெருமை என்பது (ஆணவத்தோடு) உண்மையை மறுப்பதும், மக்களைக் கேவலமாக மதிப்பதும்தான்என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். (முஸ்லிம்: 147)

 

 

ஒரு மேடையில் பேசுகிற வாய்ப்பு ஓர் அறிஞருக்குக் கிடைக்கிறது. அப்பகுதி மக்கள் தவறான கொள்கையைப் பின்பற்றி வருகின்றார்கள். அது அவருக்கு நன்றாகவே தெரியும். ஆனால் அது குறித்தெல்லாம் எதுவும் பேசாமல், வேறு பல செய்திகளை அம்மேடையில் பேசுகிறார் என்றால் அவர் அம்மக்களின் வெறுப்பைச் சுமந்துகொள்ள விரும்பவில்லை என்று பொருள். ஏனெனில் ஒவ்வொருவரும்  தமக்குச் சாதகமான கருத்தையே எதிர்பார்க்கின்றார்கள்; விரும்புகின்றார்கள். எதிர்க்கருத்து சொல்லப்பட்டால் அது குறித்துச் சிறிதளவும் சிந்திக்காமல், அதைச் சொன்னவரிடம் சண்டையிடுவது இன்றைய இளைஞர்களின் வழக்கமாக உள்ளது.

 

 

நம் கருத்துக்கு எதிர்க்கருத்து  கூறுபவரை அணுகி, என் கருத்தை எதனால் எதிர்க்கின்றீர் என்று கேளுங்கள். அதற்கு அவர் சரியான காரணத்தைக் கூறினால், அல்லது அதன் பின்விளைவுகள் இன்னின்னவாறு இருக்கும் என்பதைத் தெளிவுபடுத்தினால், அதை ஏற்றுக்கொண்டு உங்கள் கருத்தை மாற்றிக் கொள்ளுங்கள். ஏனெனில் நாம் வெளிப்படையாகச் சிந்தித்து ஒரு கருத்தைக் கூறுவோம். நம்மைவிட அனுபவசாலி, அதன் எதிர்விளைவுகள் என்னென்ன என்பதைச் சிந்தித்திருக்கலாம்; அதனால் நம் கருத்தை அவர் எதிர்த்திருக்கலாம். எனவே எல்லாக் கருத்துகளையும் புறந்தள்ளுவது ஏற்புடையதன்று.

 

 

இன்றைய இளைஞர்களின் பலவீனம் என்னவென்றால், தமக்கு எதிராகக் கருத்துக் கூறுவோரின் கருத்தை ஏற்றுக்கொள்ளாதது மட்டுமின்றி, அவர்களோடு பேசுவதையும் பழகுவதையும் அத்தோடு நிறுத்தி விடுகின்றார்கள். இத்தகைய போக்கு நம்மை வளர்ச்சிப் பாதைக்கு இட்டுச் செல்லாது. மாறாக நம்முடைய பின்னடைவுக்குத்தான் காரணமாகும். அதனால்தான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்: நீங்கள் ஒருவருக்கொருவர் புறக்கணித்துச் செல்லாதீர்கள்; கோபம் கொள்ளாதீர்கள். (மாறாக,) அல்லாஹ்வின் அடியார்களே! (அன்பு பாராட்டுவதில்) சகோதரர்களாய் இருங்கள். (புகாரீ: 6064)

 

 

தம்பதியர் இருவர் நீண்ட காலம் வாழ்ந்து மூன்று பிள்ளைகளையும் பெற்றெடுத்து விட்டனர். ஆனால்  அதன்பின் அந்தக் கணவர், என் மனைவியிடமிருந்து எனக்கு விடுதலை பெற்றுக்கொடுங்கள் என்று பள்ளிவாசல் ஜமாஅத்தில் வேண்டுகோள் விடுக்கிறார். அங்குள்ள இமாம், அதற்கான காரணத்தைக் கேட்டபோது, என் மனைவி தாம்பத்திய உறவுக்கு ஒத்துழைப்பதில்லை என்கிறார். சரியான காரணமாக இருந்ததால், அந்த இமாம் அந்தத் தம்பதியரைப் பிரித்துவைக்க நிர்வாகக் குழுவிடம் ஆலோசனை தெரிவிக்கிறார். இந்நிகழ்வுக்குமுன் அந்தப் பெண்மணி, அந்த இமாமைத் தம்பிஎன்று அழைத்துப் பேசுபவர். இந்த நிகழ்வுக்குப்பின், அவரிடம் பேசுவதையும் அவருக்கு ஸலாம் கூறுவதையும் நிறுத்திவிட்டார். பிறரின் உரிமைக்காகக் குரல் கொடுத்தாலும், பிறரின் நீதிக்காகக் குரல் கொடுத்தாலும் இதுதான் நிலை.

 

திருமணப் பந்தத்தில் இருந்துகொண்டு ஒரு பெண் தன் கணவனுக்குரிய உரிமையைக் கொடுக்கா விட்டால், அவள் அதற்காக மறுமையில் தண்டிக்கப்படுவாள். அதேநேரத்தில் திருமணப் பந்தத்திலிருந்து விலகிவிட்டால், அப்பெண்ணுக்குக் கணவன் குறித்த விசாரணை கிடையாது. தன்னைத் தம்பிஎன்று அழைத்த அக்காவின் மறுமை வாழ்க்கை பாதிக்கப்படக் கூடாது என்ற நல்லெண்ணத்தில்தான் அவர் அந்த யோசனையை நிர்வாகத்திற்குத் தெரிவித்தாரே தவிர அவருக்கு வேறு நோக்கம் இல்லை. ஆனால் தம்பியின் நோக்கத்தை அந்தப் பெண்மணி புரிந்துகொள்ளவில்லை.

 

ஒவ்வொருவருமே தமக்குச் சாதகமான கருத்தைத்தான் விரும்புகின்றனர்; எதிர்பார்க்கின்றனர். தமக்கு எதிராக யார் கருத்துக் கூறினாலும் அதை அவர்கள் ஏற்றுக்கொள்வதில்லை. நிர்வாகத்திற்கு எதிராக இமாம் ஒரு கருத்தைச் சொன்னாலும், அண்ணனுக்கு எதிராக ஒரு கருத்தைத் தம்பி கூறினாலும், அலுவலகத்தில் முதலாளிக்கு எதிரான கருத்தைத் தொழிலாளி கூறினாலும், ஆசிரியருக்கு எதிராக மாணவர் ஒரு கருத்தைக்  கூறினாலும், அரசியல்வாதிக்கு எதிராக மக்கள் ஒரு கருத்தைக் கூறினாலும் அவர்கள்  அதை ஏற்பதில்லை. மேலும் பெரும்பாலோர் எதிர்க்கருத்துக் கூறுவோரிடம் மீண்டும் தொடர்பு வைத்துக்கொள்வதே இல்லை.

 

 

ஒரு வீட்டில் ரஜப் மாதத்தில் பூரியான் ஃபாத்திஹா ஆண்டுதோறும் ஓதுவது அவர்களின் வழக்கம்.  நான் அந்த ஆண்டுதான் அங்கு இமாமாகச் சேர்ந்திருந்தேன். சரி, ஏதோ ஓதுகிறார்கள்; சாப்பிடுகின்றார்கள் என விட்டுவிடலாம் என்று பார்த்தால், அவர்கள் அந்த ஃபாத்திஹாவிற்காகக் கடைப்பிடித்த நிபந்தனைகள் அறிவுக்கொவ்வாதவையாக இருந்தன. பதினாறு பக்கங்கள் கொண்ட ஒரு புத்தகத்தைக் கொடுத்து, அதிலுள்ள கதையைப் படிக்கச் சொன்னார்கள். அதற்கு விறகு வெட்டியின் கதைஎன்று சொல்லப்படுகிறது. அதைப் படித்தால் அதிலுள்ள அனைத்தும் கற்பனைக் கதைகள். இமாம் ஜாஅஃபர் ஸாதிக் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் பேரில் பூரி ஃபாத்திஹா ஓதியவருக்குக்  கிடைத்த அபிவிருத்தி; அதை மறுத்தவருக்கு ஏற்பட்ட இழப்பு என அனைத்தும் அதில் கதை கதையாக இருந்தன.

 

 

எல்லாம் ஓதி முடித்தபின் அங்கு வந்திருந்த அனைவருக்கும் அந்தப் பூரியும் இனிப்புக் கஞ்சியும் வழங்கப்பட்டன. சந்தனம் தடவப்பட்ட சில மண் கலயங்களில் அந்த இனிப்புக் கஞ்சி ஊற்றிவைக்கப்பட்டிருந்தது. அதை அங்கிருந்து நகர்த்தக்கூடாதாம். அந்த உணவுப் பொருள்களை வெளியில் எங்கும் கொண்டு செல்லக்கூடாதாம். இன்னும் பற்பல நிபந்தனைகள். எல்லாச் சம்பிரதாயங்களையும் முடித்துவிட்டு, இறுதியில் நான் என்னுடைய கருத்துகளைச் சபையில் முன்வைத்தேன்.

 

 

இறந்துவிட்ட ஒருவருக்கு, அவருடைய பாவமன்னிப்பிற்காகவும் சொர்க்கத்தில் அவர்தம் உயர்பதவிக்காகவும் நாம் துஆ செய்யலாம். அதை அவருடைய பிறந்த நாளிலோ இறந்த நாளிலோதான் செய்ய வேண்டுமென்ற எந்த நிபந்தனையும் இல்லை. மேலும் இத்தகைய மூடநம்பிக்கையான கதைகளை வாசித்து, இந்த ஃபாத்திஹாமீது நம்பிக்கையை ஏற்படுத்தக்கூடாது. இவ்வாறான கற்பனைக் கதைகளை நம்பிக்கை என்ற பெயரில் நாம் வாசிக்கக் கூடாது. அல்லாஹ் தான் நாடியவருக்கு ஏராளமாகக் கொடுக்கிறான். (தான் நாடியவருக்கு) அளவோடு கொடுக்கிறான். எனினும் அவர்கள் இவ்வுலக வாழ்க்கையில் மகிழ்ச்சி அடைகிறார்கள். இவ்வுலக வாழ்க்கையோ மறுமையோடு ஒப்பிட்டால் அற்பமேயன்றி வேறில்லை (அல்குர்ஆன் 13:26) என்று அல்லாஹ் கூறுகின்றான்.  எனவே இத்தகைய மூடநம்பிக்கைகளை இன்றோடு விட்டுவிடுங்கள் என்று முடித்தேன்.

 

 

அடுத்த ஆண்டு அவர்கள் அதை விட்டுவிட்டார்களா? ஆம். என்னை விட்டுவிட்டார்கள். வேறு ஓர் இமாமை அழைத்து, அதே கதையைப் படிக்க வைத்துக் கேட்டு மகிழ்ந்தார்கள். இன்றும் அது தொடர்கிறது. பெரும்பாலோர் மார்க்க விஷயங்களில் அறிவுப்பூர்வமாகச் சிந்திப்பதே இல்லை. மூடநம்பிக்கைகளையும் தவறான விஷயங்களையும் பின்பற்றிக்கொண்டே இருக்கிறார்கள். அதை விட்டுவிட்டால் வேறு ஏதேனும் நடக்கக்கூடாதது நடந்துவிடுமோ என்று அஞ்சுகின்றார்கள். யாரேனும் ஓர் இமாம் அதை எடுத்துக் கூறினாலும் ஏற்றுக்கொள்வதில்லை. அதற்குக் காரணம் மற்றொருவர் அதைத் தயக்கமின்றிச் செய்யத் துணிவதுதான். ஒவ்வோர் இமாமும் அதைக் கண்டித்தால், கண்டிப்பாக அவர்கள் அதை ஏற்றுக்கொண்டு அதிலிருந்து விலகிவிடுவார்கள் என்பது திண்ணம். மாறாக மக்களின் அறியாமை நமக்கான வருமானம்என்று நினைப்போரால் தீமைகளும் மூடநம்பிக்கைகளும் வளரவே செய்யும்.

 

 

எதிர்க்கருத்துக் கூறியவரை, அவருடைய கருத்தை ஏற்றுக்கொள்வதோடு பாராட்டவும் செய்தால், அதுதான் அறிவு முதிர்ச்சியின் அடையாளமாகும். எத்தனையோ தருணங்களில் நபியவர்கள் தம் தோழர்கள் கூறிய கருத்தை ஏற்றுக்கொள்ளவும் பாராட்டவும் செய்திருக்கின்றார்கள். எனவே எதிர்க் கருத்தை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் பெற்றால்தான், நாம் தவறான வழியில் செல்லும்போது அதைத் திருத்திக்கொடுக்க மற்றவர்கள் முன்வருவார்கள். இல்லையேல் நமக்கு வழிகாட்ட யாரும் முன்வரமாட்டார்கள். ஆதலால் நாம் பிறரின் கருத்தை மதிக்கவும் ஏற்கவும் எப்போதும் தயாராகவே இருப்போம். அதுதான் நம் வாழ்வின் அடுத்தடுத்த வளர்ச்சிப் பாதைக்கு நம்மை அழைத்துச் செல்லும்.

---------------------------------