----------------------
முதல் மனைவி மணவிலக்கு அல்லது மரணம் அல்லது குலா உள்ளிட்ட ஏதேனும் காரணத்திற்காக
ஆண்கள் மறுமணம் செய்துகொள்ள நாடுகின்றார்கள். அப்போது அவர்கள் தம்முடைய சுயவிவரக்
குறிப்புகளை வாட்ஸ் அப் தளத்தில் பகிர்கின்றார்கள். அதில் அவர்கள் விதிக்கின்ற நிபந்தனைகளுள்
ஒன்று நபிவழிக்கு முரணானது என்பதை அவர்கள் உணர்வதே இல்லை. அதாவது “முப்பது வயதுக்குட்பட்ட,
குழந்தை இல்லாத பெண்ணாக
இருக்க வேண்டும்” என்பதே அந்த நிபந்தனை. இந்த நிபந்தனையை ஆலிம்கள் அல்லாதோர் விதிப்பதில்
வியப்பில்லை. ஆனால் ஆலிம்களும் தம் சுயவிவரக் குறிப்பில் தவறாமல் அந்த நிபந்தனையைச்
சேர்ப்பதைக் கண்டு நான் பெரிதும் வியப்படைகிறேன். (இது குறித்து நான் ஏற்கெனவே எழுதியும்
இருக்கிறேன்.)
இவ்வுலகில் பிறந்த ஒவ்வொருவருக்கும் வாழ்வாதாரம் (ரிஸ்க்) வழங்குவது இறைவனின்
பொறுப்பாகும். அது மனிதனின் பொறுப்பன்று. “திண்ணமாக வாழ்வாதாரம் (ரிஸ்க்)
ஒரு மனிதனை மரணம் தேடி வருவதைப் போன்று வருகிறது”
(ஷுஅபுல் ஈமான்: 1147)
என்று அல்லாஹ்வின் தூதர்
ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியுள்ளதை நாம் நினைவில் கொள்வோம்.
நம் பிள்ளைகள் நம்மோடு வளர்வதால் அவர்களுக்கு நாம் உணவூட்டுவதாக எண்ணிக்கொள்கிறோம்.
அது உண்மையில்லை. மாறாக நம் மூலம் அவர்களுக்கு அல்லாஹ்வே உணவளிக்கிறான். இந்த உண்மையைப்
புரிந்துகொண்டால், “எவனோ பெற்ற பிள்ளைக்கு நான் உணவு கொடுக்க வேண்டுமா?” என்ற எண்ணம் தோன்றாது.
மறுமணம் செய்துகொள்வது நபிவழி என்றால், அந்தப் பெண்ணின் முந்தைய கணவனின்
பிள்ளைகளோடு ஏற்றுக்கொள்வதும் நபிவழிதானே?
அதை ஏன் அவர்கள் உணர்வதில்லை?
நபித்தோழர் அபூசலமா ரளியல்லாஹு அன்ஹு இறந்தபின் உம்முசலமா ரளியல்லாஹு அன்ஹா தம்முடைய
மூன்று பிள்ளைகளோடு இத்தா (காத்திருப்புக் காலம்) இருந்தபோது, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தமக்காக அவரைப் பெண்கேட்டு அவரிடம் தூது அனுப்பினார்கள்.
அது குறித்த நபிமொழி இதோ.
உம்மு சலமா ரளியல்லாஹு அன்ஹா கூறியதாவது: என்னுடைய இத்தா முடிந்தபோது அபூபக்ர்
ரளியல்லாஹு அன்ஹு தமக்காக என்னைப் பெண்கேட்டு ஆள் அனுப்பினார்கள். நான் அவர்களை மணமுடித்துக்கொள்ளவில்லை.
பின்னர் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உமர் பின் கத்தாப் ரளியல்லாஹு
அன்ஹு அவர்களை என்னிடம் அனுப்பித் தமக்காகப் பெண்கேட்டார்கள். நான் (கடுமையாகக் கோபம்
கொள்கின்ற) ரோஷக்காரி. மேலும் (முந்தைய கணவர் மூலம்) எனக்குப் பிள்ளைகள் உள்ளனர்.
என்னுடைய (வலீ) பொறுப்பாளர்களுள் யாரும் ஊரில் இல்லை என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு
அலைஹி வஸல்லம் அவர்களுக்குத் தெரிவியுங்கள் என்று சொல்லியனுப்பினேன்.
அவர் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் சென்று, (நான் சொல்லியனுப்பிய) அதைக்
கூறினார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், “அவரிடம் திரும்பச்சென்று,
‘நான் (கடுமையாகக் கோபம்
கொள்கின்ற) ரோஷக்காரி’ என்று நீங்கள் கூறியதற்காக, தாம் அல்லாஹ்விடம் பிரார்த்தனை
செய்வதாகவும் அவன் உங்களின் ரோஷத்தை நீக்கிவிடுவான் என்றும் ‘(முந்தைய கணவர் மூலம்) எனக்குப்
பிள்ளைகள் உள்ளனர்’ எனக் கூறியதற்காக, நீங்களே உங்கள் பிள்ளைகளை (உங்களுடன் வைத்து)க் கவனித்துக்கொள்ளலாம்
(அல்லாஹ் போதுமானவன்) என்றும், ‘என்னுடைய (வலீ) பொறுப்பாளர்களுள் யாரும் ஊரில் இல்லை’ என்று கூறியதற்காக, ஊரில் உள்ள அல்லது ஊரில் இல்லாத
உங்களுடைய பொறுப்பாளர்களுள் யாரும் இதை வெறுக்கப்போவதில்லை என்றும் கூறுமாறு சொல்லியனுப்பினார்கள்...
(நஸாயீ: 3202)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உம்மு சலமாவை ஹிஜ்ரீ 4ஆம் ஆண்டு மணந்து கொண்டபோது
அவருக்கு முப்பது வயது. அவருக்கு சலமா, உமர், ஸைனப் ஆகிய மூன்று பிள்ளைகள் இருந்தார்கள்.
அவரை அவருடைய பிள்ளைகளோடுதான் நபியவர்கள் மணமுடித்துக்கொண்டார்கள். நபியவர்களின்
வீட்டில்தான் அக்குழந்தைகள் வளர்ந்தார்கள் என்பது வரலாறு.
ஆகவே இனிவரும் காலங்களில் மறுமணம் முடிப்போர் தமக்கான துணையைத் தேடும்போது,
“குழந்தை இல்லாத பெண்
வேண்டும்” என்ற நிபந்தனையை விதிக்காதீர். வாழ்வாதாரத்தை வழங்குபவன் வல்லோன் அல்லாஹ் என்பதை
அறவே மறக்காதீர்.
-மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி
22 01 2025
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக