வெள்ளி, 17 ஜனவரி, 2025

மாற்றுக் கருத்தையும் ஏற்றல் இனிது


-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.

 

நம்முள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்றைப் பற்றியும் ஒரு கருத்து உண்டு. ஒருவரின் கருத்து நம்முடைய கருத்துக்குத் தோதுவான கருத்தாக இருக்கலாம்; அல்லது எதிர்க்கருத்தாக இருக்கலாம்.  நம் கருத்துக்குத் தோதுவான கருத்தாக இருந்தால் அதை ஏற்றுக்கொள்கிற நாம், எதிராக இருந்தால்  ஏற்றுக்கொள்வதில்லை. எதிர்க்கருத்தில் உண்மை இருந்தால் ஏற்றுக்கொள்ள வேண்டும்; அதுதான் நம் அறிவு முதிர்ச்சியைக் காட்டும். உண்மையாகவே இருந்தாலும் நான் அவனது கருத்தை ஏற்க மாட்டேன் என்பதுதான் பெருமை ஆகும்.

தற்பெருமை என்பது (ஆணவத்தோடு) உண்மையை மறுப்பதும், மக்களைக் கேவலமாக மதிப்பதும்தான்என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். (முஸ்லிம்: 147)

 

 

ஒரு மேடையில் பேசுகிற வாய்ப்பு ஓர் அறிஞருக்குக் கிடைக்கிறது. அப்பகுதி மக்கள் தவறான கொள்கையைப் பின்பற்றி வருகின்றார்கள். அது அவருக்கு நன்றாகவே தெரியும். ஆனால் அது குறித்தெல்லாம் எதுவும் பேசாமல், வேறு பல செய்திகளை அம்மேடையில் பேசுகிறார் என்றால் அவர் அம்மக்களின் வெறுப்பைச் சுமந்துகொள்ள விரும்பவில்லை என்று பொருள். ஏனெனில் ஒவ்வொருவரும்  தமக்குச் சாதகமான கருத்தையே எதிர்பார்க்கின்றார்கள்; விரும்புகின்றார்கள். எதிர்க்கருத்து சொல்லப்பட்டால் அது குறித்துச் சிறிதளவும் சிந்திக்காமல், அதைச் சொன்னவரிடம் சண்டையிடுவது இன்றைய இளைஞர்களின் வழக்கமாக உள்ளது.

 

 

நம் கருத்துக்கு எதிர்க்கருத்து  கூறுபவரை அணுகி, என் கருத்தை எதனால் எதிர்க்கின்றீர் என்று கேளுங்கள். அதற்கு அவர் சரியான காரணத்தைக் கூறினால், அல்லது அதன் பின்விளைவுகள் இன்னின்னவாறு இருக்கும் என்பதைத் தெளிவுபடுத்தினால், அதை ஏற்றுக்கொண்டு உங்கள் கருத்தை மாற்றிக் கொள்ளுங்கள். ஏனெனில் நாம் வெளிப்படையாகச் சிந்தித்து ஒரு கருத்தைக் கூறுவோம். நம்மைவிட அனுபவசாலி, அதன் எதிர்விளைவுகள் என்னென்ன என்பதைச் சிந்தித்திருக்கலாம்; அதனால் நம் கருத்தை அவர் எதிர்த்திருக்கலாம். எனவே எல்லாக் கருத்துகளையும் புறந்தள்ளுவது ஏற்புடையதன்று.

 

 

இன்றைய இளைஞர்களின் பலவீனம் என்னவென்றால், தமக்கு எதிராகக் கருத்துக் கூறுவோரின் கருத்தை ஏற்றுக்கொள்ளாதது மட்டுமின்றி, அவர்களோடு பேசுவதையும் பழகுவதையும் அத்தோடு நிறுத்தி விடுகின்றார்கள். இத்தகைய போக்கு நம்மை வளர்ச்சிப் பாதைக்கு இட்டுச் செல்லாது. மாறாக நம்முடைய பின்னடைவுக்குத்தான் காரணமாகும். அதனால்தான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்: நீங்கள் ஒருவருக்கொருவர் புறக்கணித்துச் செல்லாதீர்கள்; கோபம் கொள்ளாதீர்கள். (மாறாக,) அல்லாஹ்வின் அடியார்களே! (அன்பு பாராட்டுவதில்) சகோதரர்களாய் இருங்கள். (புகாரீ: 6064)

 

 

தம்பதியர் இருவர் நீண்ட காலம் வாழ்ந்து மூன்று பிள்ளைகளையும் பெற்றெடுத்து விட்டனர். ஆனால்  அதன்பின் அந்தக் கணவர், என் மனைவியிடமிருந்து எனக்கு விடுதலை பெற்றுக்கொடுங்கள் என்று பள்ளிவாசல் ஜமாஅத்தில் வேண்டுகோள் விடுக்கிறார். அங்குள்ள இமாம், அதற்கான காரணத்தைக் கேட்டபோது, என் மனைவி தாம்பத்திய உறவுக்கு ஒத்துழைப்பதில்லை என்கிறார். சரியான காரணமாக இருந்ததால், அந்த இமாம் அந்தத் தம்பதியரைப் பிரித்துவைக்க நிர்வாகக் குழுவிடம் ஆலோசனை தெரிவிக்கிறார். இந்நிகழ்வுக்குமுன் அந்தப் பெண்மணி, அந்த இமாமைத் தம்பிஎன்று அழைத்துப் பேசுபவர். இந்த நிகழ்வுக்குப்பின், அவரிடம் பேசுவதையும் அவருக்கு ஸலாம் கூறுவதையும் நிறுத்திவிட்டார். பிறரின் உரிமைக்காகக் குரல் கொடுத்தாலும், பிறரின் நீதிக்காகக் குரல் கொடுத்தாலும் இதுதான் நிலை.

 

திருமணப் பந்தத்தில் இருந்துகொண்டு ஒரு பெண் தன் கணவனுக்குரிய உரிமையைக் கொடுக்கா விட்டால், அவள் அதற்காக மறுமையில் தண்டிக்கப்படுவாள். அதேநேரத்தில் திருமணப் பந்தத்திலிருந்து விலகிவிட்டால், அப்பெண்ணுக்குக் கணவன் குறித்த விசாரணை கிடையாது. தன்னைத் தம்பிஎன்று அழைத்த அக்காவின் மறுமை வாழ்க்கை பாதிக்கப்படக் கூடாது என்ற நல்லெண்ணத்தில்தான் அவர் அந்த யோசனையை நிர்வாகத்திற்குத் தெரிவித்தாரே தவிர அவருக்கு வேறு நோக்கம் இல்லை. ஆனால் தம்பியின் நோக்கத்தை அந்தப் பெண்மணி புரிந்துகொள்ளவில்லை.

 

ஒவ்வொருவருமே தமக்குச் சாதகமான கருத்தைத்தான் விரும்புகின்றனர்; எதிர்பார்க்கின்றனர். தமக்கு எதிராக யார் கருத்துக் கூறினாலும் அதை அவர்கள் ஏற்றுக்கொள்வதில்லை. நிர்வாகத்திற்கு எதிராக இமாம் ஒரு கருத்தைச் சொன்னாலும், அண்ணனுக்கு எதிராக ஒரு கருத்தைத் தம்பி கூறினாலும், அலுவலகத்தில் முதலாளிக்கு எதிரான கருத்தைத் தொழிலாளி கூறினாலும், ஆசிரியருக்கு எதிராக மாணவர் ஒரு கருத்தைக்  கூறினாலும், அரசியல்வாதிக்கு எதிராக மக்கள் ஒரு கருத்தைக் கூறினாலும் அவர்கள்  அதை ஏற்பதில்லை. மேலும் பெரும்பாலோர் எதிர்க்கருத்துக் கூறுவோரிடம் மீண்டும் தொடர்பு வைத்துக்கொள்வதே இல்லை.

 

 

ஒரு வீட்டில் ரஜப் மாதத்தில் பூரியான் ஃபாத்திஹா ஆண்டுதோறும் ஓதுவது அவர்களின் வழக்கம்.  நான் அந்த ஆண்டுதான் அங்கு இமாமாகச் சேர்ந்திருந்தேன். சரி, ஏதோ ஓதுகிறார்கள்; சாப்பிடுகின்றார்கள் என விட்டுவிடலாம் என்று பார்த்தால், அவர்கள் அந்த ஃபாத்திஹாவிற்காகக் கடைப்பிடித்த நிபந்தனைகள் அறிவுக்கொவ்வாதவையாக இருந்தன. பதினாறு பக்கங்கள் கொண்ட ஒரு புத்தகத்தைக் கொடுத்து, அதிலுள்ள கதையைப் படிக்கச் சொன்னார்கள். அதற்கு விறகு வெட்டியின் கதைஎன்று சொல்லப்படுகிறது. அதைப் படித்தால் அதிலுள்ள அனைத்தும் கற்பனைக் கதைகள். இமாம் ஜாஅஃபர் ஸாதிக் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் பேரில் பூரி ஃபாத்திஹா ஓதியவருக்குக்  கிடைத்த அபிவிருத்தி; அதை மறுத்தவருக்கு ஏற்பட்ட இழப்பு என அனைத்தும் அதில் கதை கதையாக இருந்தன.

 

 

எல்லாம் ஓதி முடித்தபின் அங்கு வந்திருந்த அனைவருக்கும் அந்தப் பூரியும் இனிப்புக் கஞ்சியும் வழங்கப்பட்டன. சந்தனம் தடவப்பட்ட சில மண் கலயங்களில் அந்த இனிப்புக் கஞ்சி ஊற்றிவைக்கப்பட்டிருந்தது. அதை அங்கிருந்து நகர்த்தக்கூடாதாம். அந்த உணவுப் பொருள்களை வெளியில் எங்கும் கொண்டு செல்லக்கூடாதாம். இன்னும் பற்பல நிபந்தனைகள். எல்லாச் சம்பிரதாயங்களையும் முடித்துவிட்டு, இறுதியில் நான் என்னுடைய கருத்துகளைச் சபையில் முன்வைத்தேன்.

 

 

இறந்துவிட்ட ஒருவருக்கு, அவருடைய பாவமன்னிப்பிற்காகவும் சொர்க்கத்தில் அவர்தம் உயர்பதவிக்காகவும் நாம் துஆ செய்யலாம். அதை அவருடைய பிறந்த நாளிலோ இறந்த நாளிலோதான் செய்ய வேண்டுமென்ற எந்த நிபந்தனையும் இல்லை. மேலும் இத்தகைய மூடநம்பிக்கையான கதைகளை வாசித்து, இந்த ஃபாத்திஹாமீது நம்பிக்கையை ஏற்படுத்தக்கூடாது. இவ்வாறான கற்பனைக் கதைகளை நம்பிக்கை என்ற பெயரில் நாம் வாசிக்கக் கூடாது. அல்லாஹ் தான் நாடியவருக்கு ஏராளமாகக் கொடுக்கிறான். (தான் நாடியவருக்கு) அளவோடு கொடுக்கிறான். எனினும் அவர்கள் இவ்வுலக வாழ்க்கையில் மகிழ்ச்சி அடைகிறார்கள். இவ்வுலக வாழ்க்கையோ மறுமையோடு ஒப்பிட்டால் அற்பமேயன்றி வேறில்லை (அல்குர்ஆன் 13:26) என்று அல்லாஹ் கூறுகின்றான்.  எனவே இத்தகைய மூடநம்பிக்கைகளை இன்றோடு விட்டுவிடுங்கள் என்று முடித்தேன்.

 

 

அடுத்த ஆண்டு அவர்கள் அதை விட்டுவிட்டார்களா? ஆம். என்னை விட்டுவிட்டார்கள். வேறு ஓர் இமாமை அழைத்து, அதே கதையைப் படிக்க வைத்துக் கேட்டு மகிழ்ந்தார்கள். இன்றும் அது தொடர்கிறது. பெரும்பாலோர் மார்க்க விஷயங்களில் அறிவுப்பூர்வமாகச் சிந்திப்பதே இல்லை. மூடநம்பிக்கைகளையும் தவறான விஷயங்களையும் பின்பற்றிக்கொண்டே இருக்கிறார்கள். அதை விட்டுவிட்டால் வேறு ஏதேனும் நடக்கக்கூடாதது நடந்துவிடுமோ என்று அஞ்சுகின்றார்கள். யாரேனும் ஓர் இமாம் அதை எடுத்துக் கூறினாலும் ஏற்றுக்கொள்வதில்லை. அதற்குக் காரணம் மற்றொருவர் அதைத் தயக்கமின்றிச் செய்யத் துணிவதுதான். ஒவ்வோர் இமாமும் அதைக் கண்டித்தால், கண்டிப்பாக அவர்கள் அதை ஏற்றுக்கொண்டு அதிலிருந்து விலகிவிடுவார்கள் என்பது திண்ணம். மாறாக மக்களின் அறியாமை நமக்கான வருமானம்என்று நினைப்போரால் தீமைகளும் மூடநம்பிக்கைகளும் வளரவே செய்யும்.

 

 

எதிர்க்கருத்துக் கூறியவரை, அவருடைய கருத்தை ஏற்றுக்கொள்வதோடு பாராட்டவும் செய்தால், அதுதான் அறிவு முதிர்ச்சியின் அடையாளமாகும். எத்தனையோ தருணங்களில் நபியவர்கள் தம் தோழர்கள் கூறிய கருத்தை ஏற்றுக்கொள்ளவும் பாராட்டவும் செய்திருக்கின்றார்கள். எனவே எதிர்க் கருத்தை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் பெற்றால்தான், நாம் தவறான வழியில் செல்லும்போது அதைத் திருத்திக்கொடுக்க மற்றவர்கள் முன்வருவார்கள். இல்லையேல் நமக்கு வழிகாட்ட யாரும் முன்வரமாட்டார்கள். ஆதலால் நாம் பிறரின் கருத்தை மதிக்கவும் ஏற்கவும் எப்போதும் தயாராகவே இருப்போம். அதுதான் நம் வாழ்வின் அடுத்தடுத்த வளர்ச்சிப் பாதைக்கு நம்மை அழைத்துச் செல்லும்.

---------------------------------

கருத்துகள் இல்லை: