-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.
“இந்தக் காலத்தில் நல்லவர்களைப் பார்ப்பதே அரிதாகிவிட்டது” என்று சிலர் அங்கலாய்த்துக் கொள்வதைக் கேட்டிருப்பீர்கள்.
அவர்களைச் சொல்லிக் குற்றமில்லை. காட்சி ஊடகங்களும் அச்சு ஊடகங்களும் குற்றச் செய்திகளை
மிகைப்படுத்தி வெளியிடுவதே அவ்வாறு நினைக்கத் தூண்டுகிறது.
இயல்புக்கு மாறாகவும் எதிராகவும் நடப்பதே செய்தி என்கிறோம். எனவே இயல்புக்கு மாறாக
நடக்கின்ற எல்லாக் குற்றச் செயல்களையும் செய்தித்தாள்களில் வெளியிடுகின்றனர். காட்சி
ஊடகங்களில் ஒளிபரப்புகின்றனர். அவற்றைப் பார்க்கின்ற, கேட்கின்ற நாம் எல்லோரும் கெட்டவர்கள் அல்லது கெட்டவர்கள்
அதிகரித்துவிட்டனர் என்ற மாய எண்ணத்திற்கு ஆளாகின்றோம்.
ஆனால் உண்மையில் பத்திலிருந்து இருபது சதவிகிதத்தினர் மட்டுமே இறைவிதிக்கு எதிரான
குற்றங்களைச் செய்துகொண்டிருக்கின்றார்கள். அந்தச் செய்திகள் தொடர்ந்து வந்துகொண்டே
இருப்பதால் குற்றங்கள் பெருகிவிட்டதைப் போலவும்
எல்லோரும் கெட்டவர்கள் என்ற எண்ணத்தையும் தோற்றுவிக்கிறது. மாறாக எண்பது சதவிகிதத்தினர்
இறைவனுக்குப் பயந்து நேர்மையாகவும் நீதியாகவும்
வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். மத வேறுபாடின்றி எல்லா மதங்களிலும் நல்லோர் பலர் இருக்கவே செய்கின்றார்கள். சிற்சிலரே
தவறுகளையும் குற்றச் செயல்களையும் செய்துகொண்டிருக் கின்றார்கள். அவர்களும் திருந்த வாய்ப்புண்டு.
எனவே எல்லோரும் குற்றம் செய்கின்றார்கள்; நாம் செய்தால் என்ன என்ற தவறான முடிவுக்கு வந்துவிடக்
கூடாது. மீண்டும் சொல்கிறேன்- தவறு செய்வோர் மிக மிகக் குறைவு. குற்றச் செய்திகள்
மீண்டும் மீண்டும் சுழற்சி முறையில் வந்துகொண்டே இருப்பதால் தவறுகளும் குற்றங்களும்
பெருகிவிட்டதைப் போன்ற மாயத்தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாம் ஒருவரைப் பார்க்கும்போது தவறான கண்ணோட்டத்திலேயே பார்க்கிறோம். அதனால்தான்
பிறரைப் பார்த்து அஞ்சுகிறோம். பிற மனிதர்களிடமிருந்து பாதுகாப்பைப் பெறுவதற்காகப்
பல்வேறு பாதுகாப்புகளைக் கையாள்கிறோம். வீட்டைப் பூட்டுகிறோம்; வாகனத்தைப் பூட்டுகிறோம். வீட்டின் முன்பகுதியில் சுழல்
கேமரா பொருத்துகிறோம். இவை அனைத்தும் அந்தப் பத்துச் சதவிகித மனிதர்களிடமிருந்து
நம்மைப் பாதுகாத்துக்கொள்ளத்தானே தவிர, எல்லா மனிதர்களிடமிருந்து தற்காத்துக்கொள்ள
அன்று என்பதை நாம் உணர வேண்டும்.
ஒருவரைப் பார்த்தவுடன், இவர் நம் பொருள்களைத் திருடிச் சென்று விடுவாரோ, நம்மை ஏமாற்றிவிடுவாரோ, நம்மிடம் உள்ளதைப் பிடுங்கிக்கொள்வாரோ என்று எண்ணுகிறோம்.
இது தவறான எண்ணம். இப்படி ஓர் இறைநம்பிக்கையாளரை எண்ணக்கூடாதென நபி ஸல்லல்லாஹு அலைஹி
வஸல்லம் தடுத்துள்ளார்கள். “ஒருவர் தம் சகோதர முஸ்லிமைக் கேவலப்படுத்துவதே அவருடைய தீமைக்குப் போதிய சான்றாகும்.” (முஸ்லிம்: 5010)
ஒருவன் தன் சகோதரனைக் கேவலமாகக் கருதுவதே அவனுடைய பாவத்திற்குப் போதுமானதாகும்.
அதாவது ஒருவன் பாவம் செய்துவிட்ட பாவி என்று சொல்வதற்கு, அவன் பிறரைக் கேவலமாகக் கருதுவதே போதுமானதாகும். அதுவே
அவனுக்கு அப்பெயரைப் பெற்றுத்தந்துவிடும். எனவே ஒரு மனிதரைப் பார்த்ததும் அவரை நல்லவராகவே
கருத வேண்டும். அதைத்தான் பின்வரும் நபிமொழி உணர்த்துகிறது.
“ஓர் இறைநம்பிக்கையாளரை நல்லவராகவே தவிர எண்ண வேண்டாம்” என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியுள்ளார்கள்.
(இப்னுமாஜா: 3922)
பிறர் பொருளைத் திருடாத, பிறரை ஏமாற்றாத, நற்குணமுடையவன்தான் பிறரைப் பற்றி நல்லவிதமாக நினைப்பான். தவறுகளும் குற்றங்களும்
செய்துகொண்டே இருப்பவன்தான் தன்னைப் போலவே பிறரும் இருப்பார்கள் என்று அஞ்சுவான்.
குற்றங்களோ தவறுகளோ செய்யாதவன் பிறரைப் பார்க்கும் பார்வையே வேறு. அவன் எல்லோரையும்
நல்லவர்களாகவே பார்ப்பான்.
அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்; காமாலைக் கண்ணுக்குக் காண்பதெல்லாம் மஞ்சள் ஆகிய பழமொழிகள்
உணர்த்துவது, நாம் யாரை எந்தக் கோணத்தில்
பார்க்கின்றோமோ அவ்வாறுதான் அவர்கள் தெரிவார்கள்; நம் உள்ளத்தில் கசடு இருந்தால் பார்ப்போரையெல்லாம் அந்த
எண்ணத்தோடுதான் பார்க்கத் தூண்டும். நம் உள்ளம் தூய்மையாக இருந்தால் பார்ப்போரையெல்லாம்
நல்லோராகப் பார்ப்போம். எனவே முதலில் தூய்மைப்படுத்த வேண்டியது நம் உள்ளத்தைதான்.
அப்படித்தான் இன்று பல்வேறு கோணங்களில் பயம் படரவிடப்பட்டுள்ளது. யாரைப் பார்த்தாலும்
பயம். தொடரியில் பயணிக்கும்போது, எவ்வளவுதான் தாகம் ஏற்பட்டாலும் பக்கத்தில் உள்ளோரிடம் தண்ணீர் வாங்கிக் குடிக்க
மாட்டோம்; எவ்வளவுதான் பசி ஏற்பட்டாலும்
அருகில் உள்ளோரிடம் பிஸ்கட் வாங்கிச் சாப்பிட மாட்டோம்; அவர்களே தாமாக முன்வந்து கொடுத்தாலும் நாம் அதை வாங்கிக்கொள்ள
மாட்டோம். எல்லாமே பயம்தான்; சந்தேகம்தான். திருடனாக இருப்பானோ, நம் பணத்தை அபகரித்துக்கொள்வானோ என்ற அச்சம்தான்.
ஊடகங்களின் அதீத வளர்ச்சியாலும் துரிதச் செய்திகளாலும் மனித உள்ளங்களில் பெருமளவில்
பயம் விதைக்கப்பட்டுள்ளது. அவை பிற மனிதர்களின் மீதான நம்பிக்கையைக் கெடுத்துள்ளன; குறைத்துள்ளன. யாரைப் பார்த்தாலும் தவறாக எண்ணும் போக்கையே
வளர்த்துள்ளன. இந்நிலையிலிருந்து வெளியேறி, யாரையும் தவறாகவோ இழிவாகவோ எண்ணாமல், இயல்பான வாழ்க்கை வாழ நாம் முற்பட வேண்டும்.
அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறுகின்றான்: இறைநம்பிக்கைகொண்டோரே! மிகுதியான சந்தேகங்களிலிருந்து
நீங்கள் விலகிக் கொள்ளுங்கள். ஏனென்றால், நிச்சயமாகச் சந்தேகங்களில் சில பாவமானவையாக இருக்கின்றன.
(எவருடைய குற்றத்தையும்) நீங்கள் துருவித்துருவி விசாரித்துக் கொண்டிருக்க வேண்டாம்...
(49: 12)
ஆசிரியரைப் பார்க்கும் பார்வை மரியாதையான பார்வையாக இருக்க வேண்டும். அவர்மீது
மரியாதை இருந்தால்தான் அவர் கற்றுத் தருவதை நாம் கவனிக்க முடியும்; அதை உள்வாங்க முடியும். ஆசிரியர்மீது மரியாதை கலந்த பயம்
இருந்தால்தான் நாம் அவர் சொல்லித் தருவதைக் கற்றுக்கொள்ள முடியும். இப்படி ஒவ்வொருவர்மீதும்
மரியாதையும் அன்பும் இருந்தால்தான் நாம் காண்போர்மீது மரியாதை செலுத்தத் தோன்றும்.
ஆகவே நாம் காணும் எல்லோரும் நல்லோரே என்று எண்ணுவோம். நம் எண்ணத்திற்கேற்பவே இறைவன்
நம் செயல்பாடுகளை அமைப்பான்.
==========================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக