சனி, 2 ஏப்ரல், 2011

இப்ராஹீம் நபியின் வரலாறு (தொடர் 19)


தொன்மையான இறையாலயத்தைக் கட்டுதல்

* அல்லாஹ் கூறுகின்றான்: நாம் இப்ராஹீமுக்குப் புனித ஆலயத்தின் இடத்தை நிர்ணயித்து `நீர் எனக்கு எவரையும் இணைவைக்காதீர்; என்னுடைய  (இந்த) ஆலயத்தைச் சுற்றி வருவோருக்கும், அதில் நிற்போருக்கும், குனிந்தும் (ருகூஉ) , சிரம்பணிந்தும் (சுஜூத்) வணங்குவோருக்கும்- தூய்மையாக்கிவைப்பீராக! என்று சொல்லியதை (நபியே!) நீர் எண்ணிப்பார்ப்பீராக!  ஹஜ்ஜைப் பற்றி மக்களுக்கு அறிவிப்பீராக! அவர்கள் நடந்தவர்களாக உம்மிடம் வருவார்கள்; இன்னும், மெலிந்த எல்லா ஒட்டகத்தின் மீதும் (வருவார்கள்); அவை வெகுதூரமான எல்லா வழிகளிலிருந்தும் (அவர்களைக் கொண்டு)வரும். (22: 26-27)

* அருள்வளமிக்கதாகவும் அகிலத்தாருக்கு வழிகாட்டியாகவும் மனிதர்களுக்காக அமைக்கப்பெற்ற முதல் (இறை) ஆலயம் `பக்கா (மக்கா)வில் உள்ளதுதான். அதில் தெளிவான சான்றுகளும் `மகாமு இப்ராஹீமும் உள்ளன. மக்களுள் அங்குச் சென்றுவரச் சக்திபெற்றோர் அல்லாஹ்வுக்காக அவ்வில்லத்தை `ஹஜ் செய்வது கடமையாகும். யார் மறுத்தாரோ (அதனால் அல்லாஹ்வுக்கு இழப்பில்லை. ஏனெனில்,) அல்லாஹ் அகிலத்தாரிடம் தேவையற்றவன் ஆவான்.  (03: 96-97)

* இப்ராஹீமை அவருடைய இறைவன் பல கட்டளைகள் மூலம் சோதித்ததை எண்ணிப்பாருங்கள். அவர் அவற்றை முழுமையாக நிறைவேற்றினார். (அதனால்,) உம்மை மனிதர்களுக்குத் தலைவராக ஆக்கப்போகிறேன் என்று அல்லாஹ் கூறினான். என்னுடைய வழித்தோன்றல்களிலும் (தலைவர்களை உருவாக்குவாயாக!) என்று அவர் கோரினார். (அதற்கு, ஆம்! அப்படியே செய்கிறேன். ஆனால்,) எனது வாக்குறுதி (உம்முடைய வழித்தோன்றல்களுள்) அநீதி இழைத்தோரைச் சேராது என்று அவன் கூறினான். இந்த (கஅபா) ஆலயத்தை ஒன்றுகூடுமிடமாகவும், அபய பூமியாகவும் மக்களுக்கு நாம் ஆக்கியதை நீங்கள் எண்ணிப்பாருங்கள். இப்ராஹீம் நின்ற இடத்தை நீங்கள் தொழுமிடமாக ஆக்கிக்கொள்ளுங்கள். (தவாஃப்) சுற்றுவோருக்காகவும், தங்கி வழிபாடு (இஃதிகாஃப்) செய்வோருக்காகவும், குனிந்தும் சிரம்பணிந்தும் வணங்குவோருக்காகவும் என்னுடைய (இந்த) ஆலயத்தை நீங்கள் இருவரும் தூய்மைப்படுத்துங்கள் என்று இப்ராஹீமிடமும் இஸ்மாயீலிடமும் நாம்  உறுதிமொழி வாங்கினோம்.

என் இறைவா! இதைப் பாதுகாப்பளிக்கும் நகரமாக ஆக்குவாயாக! இந்நகரவாசிகளில் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டோருக்குக் கனிகளை வழங்குவாயாக! என்று இப்ராஹீம் வேண்டியதை எண்ணிப்பாருங்கள். அப்போது அல்லாஹ், (என்னை) நிராகரிப்பவனுக்கும் சிறிது காலம் நான் வசதிகளை வழங்குவேன்; பின்னர் நரக வேதனைக்கு அவனை ஆட்படுத்துவேன்; போய்ச் சேர்கின்ற இடங்களில் அது மிகவும் மோசமானது என்று கூறினான்.

இப்ராஹீமும் இஸ்மாயீலும் அந்த ஆலயத்தின் அடித்தளங்களை உயர்த்திக் கட்டியபோது, எங்கள் இறைவா! எங்களிடமிருந்து (இப்பணியை) ஏற்பாயாக! நீயே நன்கு செவியுறுவோனும் நன்கறிந்தோனும் ஆவாய் (என்று பிரார்த்தனை செய்தனர்). எங்கள் இறைவா! எங்களை உனக்குக் கட்டுப்பட்டவர்களாக ஆக்குவாயாக! எங்கள் வழித்தோன்றல்களுள் உனக்குக் கட்டுப்பட்ட ஒரு சமுதாயத்தாரையும் (உருவாக்குவாயாக)! எங்களுக்கு எங்களது வழிபாட்டு முறைகளைக் காட்டுவாயாக! எங்களை மன்னிப்பாயாக!  நீயே மிகவும் மன்னிப்பவனும் மிகுந்த கருணையாளனும் ஆவாய் (என்றும் அவர்கள் பிரார்த்தனை செய்தார்கள்). எங்கள் இறைவா! அவர்களுக்காக அவர்களிலிருந்து ஒரு தூதரை நீ அனுப்புவாயாக! அவர் உன் வசனங்களை அவர்களுக்கு ஓதிக்காட்டுவார்; வேதத்தையும் ஞானத்தையும் அவர்களுக்குக் கற்றுக்கொடுப்பார்; அவர்களைத் தூய்மைப்படுத்தவும் செய்வார். நீயே வல்லமை படைத்தோனும் ஞானம்  நிறைந்தோனும் ஆவாய் (என்றும் பிரார்த்தனை செய்தார்கள்).  (2: 124-129)

தொன்மையான வீட்டைக் கட்டுதல்

அல்லாஹ்வின் அடியார், அவனுடைய தூதர், அவனுடைய நண்பர், நல்லோர்களின் இமாம், இறைத்தூதர்களின் தந்தை இப்ராஹீம் (அலை) அவர்கள் தொன்மையான வீட்டைக் கட்டினார் என்று அல்லாஹ் கூறுகின்றான். அதுதான் மக்கள் அனைவருக்காகவும் நிர்மாணிக்கப்பட்ட  உலகின் முதல் இறையாலயம் ஆகும். அதில் அவர்கள் அல்லாஹ்வை வழிபடுகின்றார்கள். அல்லாஹ் அவ்விடத்தை அவருக்கு வழிகாட்டினான்; அங்குக் கட்டச் சொல்லி அறிவித்தான். அவ்விடத்தில் கட்டுவதற்கு அல்லாஹ் இப்ராஹீம் நபிக்கு வேத அறிவிப்புச் செய்தான் என்று இறைநம்பிக்கையாளர்களின் தலைவர் அலீ பின் அபீதாலிப்  (ரளி) மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. (நூல்: தாரீக் தப்ரீ)

வானங்களைப் படைத்துள்ள விதம் தொடர்பாக நாம் கூறியுள்ளோம். நிச்சயமாக கஅபா `பைத்துல் மஅமூருக்கு*1 நேராக உள்ளது. அதாவது அந்த `பைத்துல் மஅமூர் விழுந்தால் கஅபா மீதுதான் விழும். அதேபோலவே ஏழு வானங்களின் வழிபாட்டுத்தலங்களும் கஅபாவுக்கு நேராக அமைந்துள்ளன. ஒவ்வொரு வானத்திலும் ஓர் இறையில்லம் உள்ளது. அதில் அந்தந்த வானத்திலுள்ளவர்கள்  அதை முன்னோக்கியே அல்லாஹ்வை வணங்குகின்றார்கள். அது புவியிலுள்ளோர்க்கு உள்ள கஅபாவைப் போன்றே அமைந்துள்ளது என்று முற்கால அறிஞர்கள் சிலர் கூறியுள்ளனர்.

வானங்களில் வானவர்களுக்கு உள்ள வழிபாட்டுத் தலங்களைப் போன்றே புவியிலுள்ளோர்க்கு ஓர் இறையாலயத்தைக் கட்டுவதற்கு அல்லாஹ் இப்ராஹீம் (அலை) அவர்களுக்குக் கட்டளையிட்டான்.  வானங்களையும் பூமியையும் படைத்ததிலிருந்தே அதற்காக ஒதுக்கப்பட்ட அந்த இடத்தை அல்லாஹ் இப்ராஹீம் (அலை) அவர்களுக்குக்  காண்பித்தான். இது பற்றிய நபிமொழி புகாரீ-முஸ்லிம் இரண்டு நூல்களிலும் பதிவாகியுள்ளது.

 வானங்களையும் பூமியையும் அல்லாஹ் படைத்த நாளிலேயே இந்த ஊரை அவன் கண்ணியப்படுத்திவிட்டான். எனவே, இந்த ஊர் அல்லாஹ்வின் கண்ணியத்தால் மறுமை நாள் வரை கண்ணியமானதாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.  (நூல்கள்: புகாரீ, முஸ்லிம்)

மக்களுக்கான முதல் இறையாலயம்

இப்ராஹீம் (அலை) அவர்களுக்கு முன்னரே கஅபா கட்டப்பட்டிருந்தது என்று கூறுவதற்கு ஆதாரப்பூர்வமான எந்த நபிமொழியும் இல்லை. மகானல் பைத் என்ற வார்த்தையை வைத்துக்கொண்டு, கஅபா ஏற்கெனவே கட்டப்பட்டுவிட்டது என்று கூறுவது தவறான செய்தியாகும். இவ்வசனம் எவ்விதத்திலும் ஆதாரமாக அமையாது.  ஏனென்றால், இவ்வசனத்தின் நோக்கம், அல்லாஹ்வின் ஞானத்தில் ஏற்கெனவே நிர்ணயிக்கப்பட்ட இடம்; அவனுடைய விதியில் நிர்ணயிக்கப்பட்ட இடம்; ஆதம் நபியின் காலம் தொட்டு இப்ராஹீம் நபியின் காலம்வரை இறைத்தூதர்களிடம் மகிமைவாய்ந்த இடம் அவ்விடமே  என்பதாகும்.

நிச்சயமாக ஆதம் (அலை) அவர்கள்தாம் அதன்மீது ஒரு குப்பாவை அமைத்தார். வானவர்கள் அவரிடம், உமக்கு முன் நாங்கள்தாம் இவ்வீட்டைச் சுற்றிவந்துள்ளோம் என்று கூறினார்கள். நூஹ் (அலை) அவர்களின் கப்பல் இவ்வீட்டை நாற்பது (அல்லது அதைவிடக் கூடுதல்,குறைவான) நாள்கள் சுற்றிவந்தது. எனினும் மேற்கண்ட அனைத்தும் பனூஇஸ்ரவேலர்களிடமிருந்து கிடைத்த செய்திகளாகும். எனவே, அவற்றை நாம் பொய்மைப்படுத்தவோ உண்மைப்படுத்தவோ ஆதாரமாக எடுத்துக்கொள்ளவோ மாட்டோம். உண்மையான கூற்றுக்கு அவை முரணாக இருந்தால், அவற்றை நிராகரித்துவிடுவோம்.

*அருள்வளமிக்கதாகவும் அகிலத்தாருக்கு வழிகாட்டியாகவும் மனிதர்களுக்காக அமைக்கப்பெற்ற முதல் (இறை) ஆலயம் `பக்கா (மக்கா)வில் உள்ளதுதான். (3: 96) அதாவது பொதுமக்களுக்காக அருள்வளமிக்கதாகவும் அகிலத்தாருக்கு வழிகாட்டியாகவும் முதன் முதலில் உருவாக்கப்பட்ட இறையாலயம் அதுதான். அது பக்கா (மக்கா)வில் அமைந்துள்ளது. அது கஅபா அமைந்துள்ள இடத்தைக் குறிக்கிறது என்று கூறப்பட்டுள்ளது. அதில் தெளிவான சான்றுகள் உள்ளன என்பது, நிச்சயமாக அந்த ஆலயத்தை இப்ராஹீம் நபி கட்டினார்; அவர்தாம் அவருக்குப் பின்னுள்ள இறைத்தூதர்களுக்குத் தந்தையாக உள்ளார்; அவருடைய பிள்ளையிலிருந்து வருகின்ற நல்லோர்களின் தலைவர்; அவர்கள் அவரைப் பின்பற்றுவார்கள்; அவருடைய வழிகாட்டுதல்களைப் பேணுவார்கள்-போன்ற விளக்கங்களைப் பொதிந்துள்ளது.

இதனால்தான் அல்லாஹ், `இப்ராஹீம் நின்ற இடம் என்று கூறியுள்ளான். அதாவது அவர் கஅபாவைக் கட்டியபோது, அக்கட்டடம் அவருடைய உயரத்தைத் தாண்டிச் சென்றபோது, அவர் அதைத் தொடர்ந்து கட்டுவதற்காகப் பயன்படுத்திய கல்; அதன் மீது ஏறி நின்றுகொண்டு அவர் அக்கட்டடத்தைக் கட்டுவதற்காக அவருடைய மகனார் வைத்த பிரபலமான கல் ஆகும். இது பற்றிய நீண்ட நபிமொழி ஒன்றை இப்னு அப்பாஸ் (ரளி) அறிவித்துள்ளார்கள். பழங்காலத்திலிருந்து உமர் பின் அல்கத்தாப் (ரளி) அவர்களின் காலம் வரை அந்தக்கல் கஅபாவோடு சேர்ந்தே இருந்தது. உமர் (ரளி) அவர்கள், அக்கல்லை கஅபாவைவிட்டுச் சற்று நகர்த்திவைத்தார்கள். ஏனென்றால், கஅபாவைச் சுற்றிவருபவர்கள் தொழுபவர்களின் கவனத்தைத் திசைதிருப்பாமல் இருப்பதற்காகவே அவ்வாறு செய்தார்கள். இவ்விசயத்தில் உமர் (ரளி) அவர்களின் கருத்து ஏற்கப்பட்டுள்ளது. 

அல்லாஹ்  பல்வேறு விசயங்களில் அவருடைய கருத்தை வரவேற்றுள்ளான். அவற்றுள் சில:  அவர் இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம், இப்ராஹீம் நபி நின்ற இடத்தை நாம் தொழுமிடமாக ஆக்கிக்கொள்ளலாமே! என்று கருத்துக் கூறினார். உடனே, அல்லாஹ்  பின்வருகின்ற வசனத்தை இறக்கினான்.

இப்ராஹீம் நின்ற இடத்தை நீங்கள் தொழுமிடமாக ஆக்கிக்கொள்ளுங்கள். (2: 125) ஸ்லாமின் தொடக்கக்காலம் வரை அக்கல் மீது இப்ராஹீம் நபியின் இரண்டு கால்களின் தடங்களும் பதிந்திருந்தன.
அபூதாலிப் அவர்கள் தம்முடைய பிரபலமான லாமிய்யா கவிதையில் பின்வருமாறு பாடியுள்ளார்:
ஸவ்ர் குகை மீது சத்தியமாக!
எவன் ஸபீர் எனும் மலையை அதன் இடத்தில் நட்டுவைத்தானோ
அவன் மீது சத்தியமாக!
ஹிரா மலை மீது ஏறுவதற்காகவும் இறங்குவதற்காகவும்
மக்காவின் நடுவே அமைந்துள்ள உண்மையான அவ்வீட்டின் மீது சத்தியமாக!
அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நிச்சயமாக அல்லாஹ் கவனக்குறைவானவன் இல்லை. முற்பகலிலும் மாலைப்பொழுதிலும் சூழ்ந்து தடவக்கூடிய ஹஜ்ருல் அஸ்வத் மீது சத்தியமாக!
இப்ராஹீம் நபி அக்கல் மீது ஏறியபோது பதிந்த தடம் இன்னும் ஈரமாக இருக்கிறது.(அழியாமல் இருக்கிறது). அவர் அதன் மீது காலணியில்லாமல் வெற்றுக்காலில் நின்றார்.

அதாவது அவருடைய கண்ணியமான கால்கள் அக்கல்லில் பதிந்துவிட்டன. அவருடைய அந்தக் கால்களின் அளவுக்கு அக்கல்லில் தடம் பதிந்துவிட்டது. அவை வெற்றுக்கால்களாகவே இருந்தன; காலணி அணியப்பட்டவையாக இல்லை. இதனால்தான் அல்லாஹ் கூறுகின்றான்.
இப்ராஹீமும் இஸ்மாயீலும் அந்த ஆலயத்தின் அடித்தளங்களை உயர்த்திக் கட்டியபோது, எங்கள் இறைவா! எங்களிடமிருந்து (இப்பணியை) ஏற்பாயாக! நீயே நன்கு செவியுறுபவனும் நன்கறிந்தோனும் ஆவாய் (என்று பிரார்த்தனை செய்தார்கள்). (2: 127) 

இப்ராஹீம்-இஸ்மாயீல் (அலைஹிமஸ்ஸலாம்) இருவரும் ஆழ்ந்த மனத்தூய்மையுடனும் அல்லாஹ்வுக்குப்  பணிந்தும் இருந்தனர். அவ்விருவரும் அல்லாஹ்வுக்குச் செலுத்திய ஆழ்ந்த பணிவையும் நன்றிசெலுத்துதலையும் அவ்விருவரிடமிருந்து ஏற்றுக்கொள்ளுமாறு மிகுந்த தாழ்மையுடன் கோரினர். மேலும் அவ்விருவரும் கோரினர்: எங்கள் இறைவா! எங்களை உனக்குக் கட்டுப்பட்டவர்களாக ஆக்குவாயாக! எங்கள் வழித்தோன்றல்களுள் உனக்குக் கட்டுப்பட்ட ஒரு சமுதாயத்தாரையும் (உருவாக்குவாயாக)! எங்களுக்கு எங்களது வழிபாட்டு முறைகளைக் காட்டுவாயாக! எங்களை மன்னிப்பாயாக!  நீயே மிகவும் மன்னிப்போனும்  மிகுந்த கருணையாளனும் ஆவாய் (என்று பிரார்த்தனை செய்தார்கள்).

----------------அடிக்குறிப்பு------------------------

*1 (அ.கு.) பைத்துல் மஅமூர் என்பது ஏழாம் வானத்தில் வானவர்கள் முன்னோக்கித் தொழுகின்ற ஆலயமாகும். அதில் ஒவ்வொரு நாளும் எழுபதாயிரம் வானவர்கள் வந்து அல்லாஹ்வை வணங்குகின்றார்கள். பின்னர்அவர்கள் மறுமை நாள் வரை ஒருபோதும் அங்கு மீண்டும் வரவே மாட்டார்கள்.


அரபி:           அல்பிதாயா வந்நிஹாயா (இமாம் இப்னு கஸீர்- ரஹ்) 
தமிழாக்கம்: நூ. அப்துல் ஹாதி பாகவி M.A., M.Phil.

சனி, 19 மார்ச், 2011

நூல் முகம்- நபிமார்கள் வரலாறு!



நபிமார்கள் வரலாறு!

பேரறிஞர் பெருந்தகை இமாம் இப்னு கஸீர் (ரஹ்) அவர்களுடைய மிகச் சிறந்த வரலாற்று ஆராய்ச்சி நூல் `முதலும் முடிவும் என்ற பொருள் கொண்ட `அல்பிதாயா வந்நிஹாயா எனும் அரபி நூலாகும். இதன் தமிழாக்கம் வெளிவராதா என்று ஏக்கம் கொண்டிருந்த இஸ்லாமியத் தமிழ்கூறு நல்லுலகத்தின் வாட்டத்தைப் போக்கும் வண்ணம் அதன் ஒரு பகுதி இப்போது `நபிமார்கள் வரலாறு-முதல் பாகம் எனும் நூலாக வெளிவந்துள்ளது.

`இமாதுத்தீன் (மார்க்கத்தின் தூண்) என்று போற்றப்பெற்ற இஸ்மாயீல் பின் கஸீர் என்ற இயற்பெயருடைய அல்ஹாஃபிழ் இப்னு கஸீர் (ரஹ்) அவர்கள் இறைமறைக்குச் சிறந்த விரிவுரை எழுதியவர்; ஹதீஸ் கலையில் மாபெரும் வல்லுநர்; ஃபிக்ஹ் கலையில் தலை சிறந்த புலமையாளர்; வாதப் பிரதிவாதங்களோடு அணுகி நுணுகி ஆய்ந்து கருத்துகளை வெளிப்படுத்துவதில் மகா வல்லமையாளர்; அத்தகைய மாபெரும் ஞான அறிவாளரின் நூலிலிருந்து ஆதம் (அலை), இத்ரீஸ் (அலை), நூஹ் (அலை), ஹூத் (அலை), ஸாலிஹ் (அலை), இப்ராஹீம் (அலை) ஆகிய ஆறு இறைத்தூதர்களின் வரலாறு பற்றிய பகுதி இந்நூலில் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது.

தமிழாக்கத்தை மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி மிகச் சிறப்பாகச் செய்துள்ளார். தமிழ், அரபி இரண்டிலும் புலமைமிக்க அப்துல் ஹாதி அவர்களின் தமிழாக்கம் நல்ல நடையில் சுவைமிக்கதாக அமைவதோடு தெள்ளத் தெளிவாகக் கருத்துகளை எடுத்து வைப்பதாகவும் அமைந்துள்ளது பாராட்டுக்குரியது.

மௌலவி டாக்டர் பி.எ. செய்யிது மஸ்வூது ஜமாலி, மௌலவி அ.முஹம்மது கான் பாகவி, மௌலவி ஏ. முஹம்மது இல்யாஸ் பாகவி ஆகியோரின் அணிந்துரைகள் இந்நூலுக்கு உள்ளபடியே அணிசேர்க்கின்றன. மூல நூலாசிரியரின் வாழ்க்கைக் குறிப்பையும் தவறாமல் சேர்த்திருப்பது தமிழாக்க ஆசிரியரின் திறமைக்குச் சான்றாகும்.

அரிய அரபி நூலின் தமிழாக்கத்தில் முதல் பகுதியை இந்நூலின் மூலமாகத் தந்துள்ள ஆயிஷா பதிப்பகத்தின் எம். சாதிக் பாட்சா, ஜே. இக்பால்கான் இருவரையும் , தமிழாக்கம் செய்த மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி அவர்களையும் இஸ்லாமியத் தமிழுலகம் நன்றியோடு என்றென்றும் பாராட்டும். இது ஒவ்வொருவரும் படித்துப் பாதுகாத்துப் பயன்பெற வேண்டிய அருமையான நூல் ஆகும்.

நூல்: நபிமார்கள் வரலாறு அரபியில்: அபுல்ஃபிதா இஸ்மாயீல் பின் கஸீர் அத்திமஷ்கீ (ரஹ்)

தமிழில்: மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி, எம்.ஏ., எம்.ஃபில்.,
 பக்கம்: 454        விலை: ரூ. 175/-
கிடைக்குமிடம்: ஆயிஷா பதிப்பகம், 78, பெரிய தெரு, திருவல்லிக்கேணி, சென்னை-600005 போன்: 044-4356 8745
                                                                                                                  -சே மு மு 




எண்ணம்போல் வாழ்வு!



செயல்கள் யாவும் எண்ணங்களுக்கேற்பவே (அமையும்) என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்கள்: புகாரீ, முஸ்லிம்)

ஒருவன்,  தான் எப்படி ஆக வேண்டுமென்று தன் ஆழ்மனதுக் குள் எண்ணுகின்றானோ அப்படியே அவன் ஆகிவிடுகின்றான். ஒருவன் ஒரு குறிப்பிட்ட இலக்கை அடைய வேண்டுமாயின் அதற்கான முயற்சியில் அவன் தொடர்ந்து ஈடுபட வேண்டும். அவ்வாறு அவன் தொடர்ந்து, தான் அடைய வேண்டிய இலக்கை நோக்கி முயன்றுகொண்டே இருந்தால், இறுதியில் தன் இலக்கை அவன் அடைந்தே விடுகின்றான். அது நன்மையாக இருப்பினும் தீமையாக இருப்பினும் மனிதனின் ஆழ்மனத்தினுள் எது பதியவைக்கப்படுகின்றதோ அதுவே செயலாக வெளிப்படுகிறது. அதைத்தான் மனத்திட்பம் என்று கூறுகின்றார்கள்.

ஒரு குறிப்பிட்ட இலட்சியத்தை, குறிக்கோளை அடைய வேண்டுமென்ற எண்ணத்தை மனத்தினுள் ஆழமாகப் பதிய வைத்துக்கொண்டு தொடர்ந்து ஒருவன் செயல்பட்டால் அதுவே அவ்விலக்கை அடைவதற்கான வழியாகும்.

இதற்கு மாறாக, ஒருவனுக்கு ஏதோ ஒன்றை அடைய வேண்டுமென்ற எண்ணம் இருக்கிறது.  ஆனால் அது என்ன என்பதைப் பற்றிய தெளிவு இல்லை. அல்லது அந்த இலக்கை அவன் தன் மனத்தினுள் ஆழமாகப் பதியவைக்கவில்லை. அல்லது மனத்தினுள் ஆழமாகப் பதியவைத்தான். ஆனால் அதை அடைவதற்கான முயற்சியோ செயல்பாடோ இல்லை. மேற்கண்ட எந்த விதத்திலும் ஒருவன் தன் இலக்கை அடைய முடியாது.

ஆக, நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடைய பொய்யாமொழியி லிருந்து நாம் விளங்கவேண்டியது யாதெனில், ஓர் இலக்கை மனத்தினுள் பதிய வைத்துக்கொண்டு அதை அடைவதற்கான முயற்சியில் தொடர்ந்து ஒருவன் ஈடுபட்டால் திண்ணமாக அவனுடைய அவ்வெண்ணம் நிறைவேறும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.

அந்த இலக்கு மிகச் சிறிதாகவும் இருக்கலாம். அல்லது மிகப்பெரிதாகவும் இருக்கலாம். அது அவரவர் எண்ணத்தைப் பொறுத்தது. ஒருவர் மிகப்பெரிய இலக்கைக்கூட மிக எளிதாக அடைந்துவிடலாம். மற்றொருவர் மிகச்சிறிய இலக்கைக்கூட மிகச் சிரமப்பட்டுத்தான் அடைய வேண்டியிருக்கும். உதாரணமாக, பள்ளியில் கல்வி பயில்கின்ற ஒரு மாணவன், இவ்வாண்டு இறுதித் தேர்வில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுவிட வேண்டும் என்று எண்ணுகிறான். அதைத் தன் மனத்தினுள் ஆழமாகப் பதியவைத்துக்கொண்டு அதற்கான முயற்சியில் தொடர்ந்து ஈடுபடுகிறான். அதேபோல் இறுதியில் அவன் அதை எளிதாகப் பெற்றுவிடுகின்றான்.

மற்றொருவன் எப்படியாவது முப்பத்தைந்து மதிப்பெண்கள் பெற்றுத் தேர்ச்சிபெற்றுவிட வேண்டும் என்று எண்ணுகிறான். அதையே தன் மனத்தினுள் பதிய வைத்துக்கொண்டு அதற்கான முயற்சியில் ஈடுபடுகிறான். இறுதியில் அவன் எண்ணியதைப்போலவே முப்பத்தைந்து மதிப்பெண்கள் பெற்றுத் தேர்ச்சிபெற்றுவிடுகிறான்.

இங்கே நாம் கவனிக்க வேண்டியது யாதெனில், ஒருவர் எந்த அளவுக்கு இலட்சியத்தைக் கொண்டிருக்கிறாரோ அதற்கேற்பவே அவருடைய செயல்பாடு அமையும். அதற்கேற்பவே அவர் பெற முடியும். குறுகிய எண்ணம்கொண்டால் குறைவானதையே அடைய முடியும். உயரிய எண்ணம்கொண்டால் உயர்வானதை அடைய முடியும். இதுவே மனோ எண்ணத்தின் வெளிப்பாடு. இதனால்தான் எண்ணம்போல் வாழ்வுஎன்று முதியோர் கூறினர்.

இதுபற்றி வள்ளுவர் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்:
வெள்ளத் தனையது மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனையது உயர்வு.
குளத்தில் உள்ள நீரின் அளவுக்கேற்ப அதிலுள்ள மலர்த்தண்டு நீண்டு காணப்படும். தண்ணீர் குறையக் குறைய மலர்த்தண்டும் உள்ளே சென்றுகொண்டேயிருக்கும். ஆக ஒருவன் எந்த அளவுக்கு உயரிய எண்ணம் கொள்கின்றானோ அந்த அளவுக்கு உயர்வடைகின்றான். அதே நேரத்தில் அதற்கான செயல்பாடு மிகமிக அவசியம்.

இதன் விளக்கமாகவே அல்லாஹ்வின் கூற்றைக் காண்கிறோம். நான் என்னுடைய அடியான் என்னை எவ்வாறு எண்ணுகின்றானோ அவ்வாறே நடந்துகொள்வேன் என்று அல்லாஹ் கூறுவதாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (நூல்: பைஹகீ)

அதாவது, ஓர் அடியான், அல்லாஹ் என்னை இந்த அளவுக்கு உயர்த்துவான் என்று எண்ணினால் அவன் நினைக்கின்ற அளவுக்கு அவனை உயர்த்துவான். மாறாக, அல்லாஹ் என்னை இந்த அளவுக்கு மட்டும் உயர்த்தினால் போதும் என்று எண்ணினால் அவனுடைய உயர்வு ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் முடிந்துவிடும்.

ஒருவன், இந்தத் தொகுதிக்கு நான் சட்டமன்ற உறுப்பினராக வேண்டுமென்று எண்ணுகிறான். அவன்  அதற்கான முயற்சியிலும் ஈடுபட்டு, இறுதியில் அவன் அடைந்துவிடுகிறான். ஒருவன் மத்திய அமைச்சரவையில் இடம் பெற வேண்டும் என்று எண்ணுகிறான். அதற்கான முயற்சியில் ஈடுபட்டு, இறுதியில் அதை அடைந்துவிடுகின்றான். ஆக, இங்கு இருவருமே தம் இலக்கைத் தம் மனத்தினுள்  ஆழமாகப் பதியவைத்துக்கொண்டே செயல்பட்டனர். அதற்காக உழைத்தனர். இறுதியில் அதை அடைந்துவிட்டனர். ஆனால் இருவருள் ஒருவர் உயர்வெண்ணம்கொண்டார். அதையே அடைந்தார். மற்றொருவரோ மிகக் குறைவானதை எண்ணினார். அவர் எண்ணப்படி எதை விரும்பினாரோ அதையே அவர் அடைந்துகொண்டார். எனவே நம் இலட்சியமும் இலக்கும் மிக உயர்வானதாகவும் விசாலமானதாகவும் இருக்க வேண்டும்.

மனத்தினுள் ஆழமான எண்ணம் பதிவாகிவிட்டால் அது திண்ணமாக செயல்வடிவமாகவே வெளிப்படும். இமயமலையில் ஏறநினைப்பவன் அந்த எண்ணத்தைத் தன் மனத்தினுள் மிக ஆழமாகப் பதித்திருக்க வேண்டும். இல்லையேல் அதில் அவன் வெற்றிக்கனியைப் பறிக்கவே முடியாது. அதேபோல் ஒருவன் ஓர் உயரிய இலட்சியத்தை அடைய வேண்டுமாயின் அது அவனுடைய மனத்தினுள் மிக ஆழமாகப் பதிந்திருக்க வேண்டும். அப்போதுதான் அவன் அந்த இலட்சியத்தை எளிதாக அடைய முடியும். எந்த அளவுக்கு ஆழமாகவும் அழுத்தமாகவும் அது அவனுடைய மனதில் பதிந்திருக்கிறதோ அதற்கேற்பவே அவனுடைய செயல்பாடு அமையும்.

இஸ்லாத்தின் கடமைகள் யாவும் எண்ணத்தின் அடிப்படையிலேயே நிறைவேற்றப்படுகின்றன. ஒருவர் ளுஹர் தொழுவதற்கு முன் தம்முடைய மனத்தினுள் அதற்கான எண்ணத்தை ஆழமாகப் பதிவுசெய்துகொண்டிருக்க வேண்டும். அந்த எண்ணமே இல்லாமல் அவர் செயல்பட்டால் அவருடைய தொழுகை நிறைவேறாது. அதுபோல் நோன்பு, ஸகாத், ஹஜ் ஆகிய அனைத்துக் கடமைகளுக்கும் எண்ணம் அவசியமாகும். ஆக இஸ்லாத்தின் கடமைகள் யாவும் எண்ணத்தின் அடிப்படையிலேயே அமைகின்றன.

நான் என் கல்வியின் மூலம் இந்த ஊருக்குச் சேவை செய்தால் போதும் என்று ஒருவர் எண்ணினால் அவருடைய கல்வி அவ்வூர் மக்களுக்கு மட்டுமே பயனளிக்கும். அதையே அவர், என் கல்வி உலக மக்கள் அனைவருக்கும் பயனளிக்க வேண்டும் என்று எண்ணினால், அதற்கான முயற்சியில் அவர் ஈடுபட்டால் திண்ணமாக அவருடைய கல்வியால் உலக மக்கள் யாவரும் பயனடைவர். இதுவே முற்றிலும் உண்மை.

இதற்கான எல்லாவித சாத்தியக்கூறுகளும் இன்றைய நவீன உலகில் உள்ளன. அறிவியல் வளர்ச்சியே இல்லாத காலத்தில் தொகுக்கப்பட்ட புகாரீ நூல் இன்று உலகிலுள்ள முஸ்லிம்கள் அனைவரையும் சென்றடைந்து, அவர்களுக்குப் பயனளிக்கிறது என்றால், இது முஹம்மது பின் இஸ்மாயீல் (ரஹ்) அவர்களின் உயர்வான எண்ணம் அல்லாமல் வேறென்ன?

அறிவியல் விண்ணைத் தாண்டி வளர்ச்சி பெற்றுள்ள இக்காலத்தில் ஒருவர் கற்றுள்ள நற்கல்வி உலக மக்கள் யாவரையும் சென்றடைய முடியும். அதற்குத் தேவை பரந்த எண்ணமும் அதற்கான செயல்பாடுமே ஆகும்.

மனிதனுடைய இந்த எண்ணமே நன்மைக்கும் தீமைக்கும் மிகப்பெரும் காரணமாகும். ஒருவன் தன் உள்ளத்தில் நல்லெண்ணம் கொண்டால் அவனுடைய செயல்கள் நல்லவையாகவும் தீயெண்ணம் கொண்டால் அவனுடைய செயல்கள் தீயவையாகவும் வெளிப்படும்.

அல்லாஹ் கூறுவதைப் பாருங்கள்! ஒவ்வொருவரும் தம் எண்ணப்படியே செயல்படுகிறார்கள். (17: 84) எனவே நாம் பரந்த, உயரிய, விசாலமான நல்லெண்ணம் கொள்வோம். நம் வாழ்வை உயர்வானதாகவும் பயனுள்ளதாகவும் ஆக்கிக்கொள்வோம். உயர்ந்தோன் அல்லாஹ் அதற்கு உதவிபுரிவானாக!    
 
  


வியாழன், 17 மார்ச், 2011

எது அறிவு?


வியாழன், 10 மார்ச், 2011

ஒன்றிணைக்கும் முயற்சி

பிரிந்து கிடக்கின்ற முஸ்லிம் லீக் கட்சியை ஒன்றிணைக்கும் கவலை சமுதாய அக்கறையுள்ள ஆலிம்களுக்கே இருக்க முடியும். எனவே தமிழ்நாடு உலமா சபையிலுள்ள ஆலிம்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஒரு தீர்மானம் நிறைவேற்றி, `முஸ்லிம் லீக்கை' ஒன்றிணைக்கும் நாளை எப்போது வைத்துக்கொள்ளலாம் என்று முடிவெடுப்போம்.

தமிழ்நாட்டிலுள்ள ஆலிம்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஓரணியில் நின்று நம்மைப் பின்பற்றித் தொழும் முஸ்லிம்களை ஒன்றிணைப்போம். முதலில் முஸ்லிக் லீக் கட்சியை ஒரே கொடியின் கீழ் கொண்டுவந்து, பின்னர் முஸ்லிம் கட்சிகள் அனைத்தையும் ஒரு குடையின்கீழ் கொண்டுவரப் பாடுபடுவோம்.

சட்டப்பேரவைத் தேர்தல் நாளுக்கு இன்னும் ஒரு மாதம் இருக்கிறது. அதற்குள் நாம் நினைத்தால் என்னென்னவோ செய்ய முடியும். சமுதாய அக்கறையுள்ள உள்ளங்கள் வெகுண்டெழுந்தால் ஒரு மாற்றத்தை உருவாக்க முடியும். இன்ஷா அல்லாஹ் மாற்றம் விரைவில் ஏற்படலாம். விரைந்து வாருங்கள்! முடிவு செய்வோம்!

புதன், 9 மார்ச், 2011

கண்ணீர்க் கடிதம்


இன்று இஸ்லாமியச் சமுதாயத்தின் நலனுக்காகப் பாடுபட பல்வேறு முஸ்லிம் கட்சிகள் இருந்தாலும் இஸ்லாமிய மக்களுக்காகப் பாடுபட வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் முதன் முதலில் தொடங்கப்பட்ட கட்சி முஸ்லிம் லீக் என்று அனைவருக்கும் தெரியும். 1948-ஆம் வருடம் மார்ச் மாதம் 10ஆம் தேதி சென்னை இராஜாஜி மண்டபத்தில் கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் முஹம்மது இஸ் மாயீல் அவர்களால் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தொடங்கப்பட்டது.

கண்ணியத்துக்குரிய காயிதே மில்லத் அவர்கள் இருந்த வரை முஸ்லிம் லீக் கட்சிக்கு பெருமதிப்பும் மரியாதையும் இருந்தன. அவர்களின் மறைவுக்குப் பிறகு அப்துஸ் ஸமது, அப்துல் லத்தீப், பனாத்வாலா உள்ளிட்டோர் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கை வழிநடத்திச் சென்றனர். ஆனால் தற்போது முஸ்லிம் லீக் கட்சி சிதறுண்டு கிடக்கிறது.

இக்கட்சி என்னுடைய தாத்தா காயிதே மில்லத் அவர்களால் தொடங்கப்பட்டது. எனவே அவர்களுக்குப் பிறகு இக்கட்சியின் தலைமைப் பொறுப்பு எனக்கே உரியது என்று கூறி தாவூத் மியாகான் தொடுத்துள்ள வழக்கு உச்சநீதி மன்றத்தில் உள்ளது. இதனால் முஸ்லிம் லீக் கட்சி தற்போது `இல்லாத கட்சியாகவே அரசியல் தலைவர்களால் கருதப்படுகிறது.

இதனால்தான், இன்று திமுகவுடன் கூட்டணி சேர்ந்துள்ள பல கட்சிகள் தமக்கென நிறையத் தொகுதிகளைக் கேட்டுப் பெறுகின்றன. ஈராண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட கொ.மு.க. கூட 7 தொகுதிகளைப் பெற்றுள்ளது. ஆனால் முஸ்லிம் லீக் கட்சிக்கு இரண்டே இரண்டு தொகுதிகளே ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த இழிநிலைக்குக் காரணம் என்ன? இதற்கு யார் பொறுப்பேற்றுக்கொள்வார்?

சமுதாயத்திற்காகப் பாடுபட வேண்டும் என்ற எண்ணம் அற்றுப் போனதால்தான் நம்மிடையே பதவிச் சண்டைகள் மேலோங்குகின்றன; பிரிவினைகள் தோன்றுகின்றன; இறுதியில் நீதி மன்றப் படிக்கட்டுகளை மிதிக்க வேண்டிய நிலை ஏற்படுகின்றது. ஒற்றுமை எனும் கயிற்றைப் பற்றிப் பிடிக்காததால் நம்மைக் கூறுபோடும் சக்திகளுக்கு நாம் இரையாகிக் கொண்டிருக்கிறோம் என்பதை எப்போது உணரப்போகிறோம்?

70 இலட்சத்துக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் வாழ்கின்ற தமிழ்நாட்டில் சட்டப் பேரவைத் தொகுதியில் அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட தொகுதிகள் இரண்டே இரண்டு என்றால் என்ன நியாயம்? இதற்குத் தீர்வு என்னவெனில், நீதிமன்றத்தில் உள்ள வழக்கைத் திரும்பப் பெற்றுக்கொண்டு ஒரே அணியாக முஸ்லிம் லீக் உருவாக வேண்டும். அல்லாஹ்வுக்காக மனக்கசப்புகளை மறந்து ஓரணியில் ஒன்றிணைய வேண்டும். முஸ்லிம் லீக் தனக்கென ஒதுக்கப்பட்டுள்ள பிறைச் சின்னத்தில் போட்டியிட வேண்டும். அப்போதுதான் முஸ்லிம்களின் பிரதிநிதிகள் சட்டப்பேரவையில் மிகுதியாக முடியும். நம் சமுதாயத்தின் முன்னேற்றத்திற்காகக் குரல்கொடுக்க முடியும்.

இரண்டு நபர்களுடைய மனக்கசப்பின் காரணமாக இஸ்லாமியச் சமுதாயம் இதுவரை இழந்தது போதும். இனியாகிலும் ஒரு முடிவு ஏற்பட முடிந்தவரை முயல்வோம். அல்லாஹ் அதற்கான வழியை ஏற்படுத்துவான். இன்ஷா அல்லாஹ்.

வியாழன், 3 மார்ச், 2011

இப்ராஹீம் நபியின் வரலாறு (தொடர் 18)

மற்றொரு சான்று

நிச்சயமாக அறுக்கப்பட்டவர் இஸ்மாயீல் நபிதான் என்று முஹம்மத் பின் கஅப் அல்குரழீ உள்ளிட்டவர்கள் கூறுகின்றனர். மேலும், நிச்சயமாக இஸ்ஹாக்கை அறுக்க ஏவ முடியாது. ஏனெனில், அல்லாஹ் அவருடைய பிறப்பைப் பற்றியும் அவருக்குப்பின் பிறக்கவுள்ள மகன் யஅகூபைப் பற்றியும் நற்செய்தி கூறிவிட்டான்.

வந்திருந்த வானவர்களுக்கு இப்ராஹீம் நபியவர்கள் இளம் கன்றைப் பொரித்துக் கொண்டுவந்து வைத்தார். அத்துடன் மக்கா நகர் ரொட்டி, நெய், பால் போன்றவையும் இருந்தன. அவர்கள் அவற்றை உண்டார்கள் என்று வேதக்காரர்கள் கூறுகின்றனர். இது முற்றிலும் தவறானதாகும். வானவர்கள் சாப்பிடுவதாகவும் ஆனால், அந்த உணவு காற்றில் கரைந்துவிடுவதாகவும் அவர்கள் கருதிக்கொண்டிருந்தனர் என்று கூறப்பட்டுள்ளது.

அல்லாஹ் இப்ராஹீம் நபியிடம் சொன்னான்: சாரா உம்முடைய மனைவி ஆவார். அவருடைய பெயர் சாரா இல்லை. மாறாக, அவருடைய பெயர் `சார்ரா ஆகும். அவர் மீது நான் அருள்புரிகிறேன். அவர் மூலம் ஒரு மகனை நான் உமக்குக் கொடுக்கிறேன். அந்த மகனுக்கும் நான் அருள்புரிகிறேன். அவர் மூலம் பற்பல வமிசத்தினர் தோன்றுவர். அந்த வமிசங்களிலிருந்து அரசர்கள் தோன்றுவார்கள். இத்தகவலை வேதக்காரர்கள் கூறியுள்ளனர். இதைக் கேட்ட இப்ராஹீம் (அலை) அவர்கள் அல்லாஹ்வுக்கு நன்றிசெலுத்தும்விதமாக சிரம் பணிந்தார். அவர் தம் மனதுக்குள், நூறு வயதுக்குப் பிறகா எனக்குக் குழந்தை பிறக்கப்போகிறது? மேலும், தொண்ணூறு வயதிலா சார்ரா ஒரு குழந்தையைப் பெற்றெடுக்கப்போகின்றார்? என்று கூறிக்கொண்டார்.

இஸ்மாயீல் உன் முன்னிலையில் வாழ வேண்டுமென நான் விரும்புகிறேன் என்று இப்ராஹீம் (அலை) அல்லாஹ்விடம் கூறினார். அப்போது அல்லாஹ், நிச்சயமாக உம் மனைவி சார்ரா ஒரு குழந்தையைப் பெற்றெடுக்கப்போகிறார். எதிர்வரும் ஆண்டின் இந்நேரத்தில் அவர் ஒரு குழந்தையைப் பெற்றெடுத்து அதனை இஸ்ஹாக் என்று அழைத்துக்கொண்டிருப்பார். என்னுடைய வாக்குறுதியை காலம் முழுவதும் அவருக்கும் அவரது சந்ததியினருக்கும்நான் நிறைவேற்றுவேன். நான் இஸ்மாயீல் விசயத்தில் உமது பிரார்த்தனையை ஏற்றுக்கொண்டேன்; அவர் மீது நான் அருள்புரிந்தேன்; அவரைப் பெரியவராக ஆக்கினேன்; அவரை நான் நன்றாக வளர்த்தேன்; அவருக்குப் பன்னிரண்டு குழந்தைகள் பிறப்பார்கள். மிகப்பெரும் சமுதாயத்திற்கு அவரை நான் தலைவராக ஆக்குவேன் என்று கூறினான்.*

அவருக்கு நாம் இஸ்ஹாக்கைப் பற்றியும் இஸ்ஹாக்குக்குப்பின் (பேரர்) யஅகூபைப் பற்றியும் நற்செய்தி கூறினோம். (11: 71) நிச்சயமாக சார்ரா அம்மையார், தமக்கு இஸ்ஹாக் எனும் பெயருடைய மகன் பிறப்பதன் மூலம் மகிழ்வார்; பேருவகை கொள்வார் என்பதற்கு இந்த வசனமே தக்க ஆதாரமாகும். இஸ்ஹாக்குக்குப் பின்னர், அவருடைய மகன் யஅகூப் (இப்ராஹீமின் பேரர்) பிறப்பார். அதாவது இப்ராஹீம்-சார்ரா இருவருடைய வாழ்நாளிலேயே யஅகூபும் பிறப்பார். சார்ரா அம்மையாரும் இப்ராஹீம் (அலை) அவர்களும் இஸ்ஹாக் பிறந்ததின் மூலம் அடைந்த மகிழ்ச்சியைப்போல் தம்முடைய பேரர் மூலமும் மகிழ்ச்சியடைவர்.
இவையெல்லாம் நடக்காது என்றிருந்தால், இந்த வசனத்தில் அல்லாஹ் யஅகூபையும், இஸ்ஹாக்குடைய மற்ற சந்ததிகளையும் விட்டுவிட்டு, யஅகூப் எனும் சந்ததியை மட்டும் குறிப்பிட்டுக் கூறியிருப்பதில் எந்தப் பயனும் இல்லை. மேலும், யஅகூப் என்று குறிப்பிட்டுக் கூறப்பட்டிருப்பதால், அவ்விருவரும் அக்குழந்தை மூலம் மகிழ்ச்சியடைவார்கள் என்றே இவ்வசனம் தெரிவிக்கிறது.

அதாவது இதற்கு முன்பு யஅகூப் உடைய தந்தை இஸ்ஹாக் பிறந்தபோது, இப்ராஹீம்-சார்ரா இருவரும் மகிழ்ந்தார்கள். அதைப்போலவே, யஅகூப் மூலம் சார்ரா-இஸ்ஹாக் மகிழ்ச்சியடைவார்கள். அல்லாஹ் கூறுகின்றான்: `(இப்ராஹீமாகிய) அவருக்கு இஸ்ஹாக்கையும் யஅகூபையும் பரிசளித்தோம். (அவர்கள்) அனைவருக்கும் நல்வழி காட்டினோம். (7: 84) மேலும் அல்லாஹ் கூறுகின்றான்: (இவ்வாறு) அவர் அவர்களையும், அவர்கள் வழிபட்டுக்கொண்டிருந்த அல்லாஹ் அல்லாதவற் றையும் விலக்கிக் கொண்டபோது, இஸ்ஹாக்கையும் யஅகூபையும் அவருக்கு நாம் பரிசளித்தோம். (19: 49)

மஸ்ஜிதுல் அக்ஸாவைக் கட்டுதல்

இறைத்தூதரே! எந்த மஸ்ஜித் முதன் முதலில் கட்டப்பட்டது? என்று நான் கேட்டேன். அல்மஸ்ஜிதுல் ஹராம்-மக்காவிலுள்ள இறையாலயம் ஆகும் என்று பதிலளித்தார்கள். பிறகு எது? என்று நான் கேட்டேன். அல்மஸ்ஜிதுல் அக்ஸா என்று பதிலளித்தார்கள். அவ்விரண்டுக்கும் இடையே உள்ள காலம் எவ்வளவு? என்று நான் வினவினேன். நாற்பது ஆண்டுகள் என்று பதிலளித்தார்கள். பிறகு எது? என்று நான் கேட்டேன். நீர் எங்கு தொழுகையை அடைந்துகொள்கின்றீரோ அங்கு தொழுது கொள்வீர்! ஏனெனில், அவை அனைத்தும் (சம மதிப்புள்ள) மஸ்ஜிதுகள் ஆகும் என்று பதிலளித்தார்கள் என அபூதர் (ரளி) அவர்கள் அறிவித்துள்ளார்கள். (நூல்கள்: புகாரீ, முஸ்லிம்)
நிச்சயமாக யஅகூப் நபிதான் அல்மஸ்ஜிதுல் அக்ஸாவுக்கு அடித்தளமிட்டார். அதுதான் ஈலியா மஸ்ஜித் என்றும் பைத்துல் மக்திஸ் மஸ்ஜித் என்றும் அழைக்கப்படுகிறது என்று வேதக்காரர்கள் கூறுகின்றனர்.

இது ஏற்கத்தக்கதுதான். இதற்கு, மேலே நாம் எடுத்துக்கூறிய நபிமொழியே ஆதாரமாகும். இதன்படி, இப்ராஹீம்-இஸ்மாயீல் (அலைஹிமஸ்ஸலாம்) இருவரும் இணைந்து மக்காவில் அமைந்துள்ள இறையாலயத்தைக் கட்டி முடித்த நாற்பது ஆண்டுகளுக்குப் பின்னர்தான், யஅகூப் (அலை) மஸ்ஜிதுல் அக்ஸாவைக் கட்டினார். இப்ராஹீம்-இஸ்மாயீல் (அலைஹிமஸ்ஸலாம்) இருவரும் இணைந்து கட்டிய இறையாலயம், நபி இஸ்ஹாக் (அலை) அவர்கள் பிறந்த பின்பே ஆகும். ஏனெனில், இறையாலயத்தைக் கட்டி முடித்த பின்னர், இப்ராஹீம் (அலை) அவர்கள் தமக்குப் பிள்ளைகள் வேண்டும் என்று அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யவில்லை. அவர்கள் செய்த பிரார்த்தனையை அல்லாஹ்வே கூறுகின்றான்.

என் இறைவா! இவ்வூரைப் பாதுகாப்பு அளிக்கக்கூடியதாக ஆக்குவாயாக! என்னையும் என் பிள்ளைகளையும் சிலைகளை வழிபடுவதிலிருந்து விலக்கிவைப்பாயாக என்று இப்ராஹீம் வேண்டியதை எண்ணிப்பாருங்கள். என் இறைவா! நிச்சயமாக அவை மனிதர்களுள் பெரும்பாலோரை வழிதவறச் செய்துவிட்டன. எனவே, என்னைப் பின்பற்றியவர் என்னைச் சேர்ந்தவர் ஆவார். எனக்கு யாரேனும் மாறுசெய்தால், நிச்சயமாக நீ மிகவும் மன்னிப்பவனும் மிகுந்த கருணையாளனும் ஆவாய் (என்றும் இப்ராஹீம் கூறினார்).

எங்கள் இறைவா! நான் என்னுடைய வழித்தோன்றல்களுள் சிலரைப் பயிரற்ற பள்ளத்தாக்கு ஒன்றில், உனது புனித ஆலயத்திற்கு அருகே குடியமர்த்தியுள்ளேன். எங்கள் இறைவா! இவர்கள் தொழுகையைக் கடைப்பிடிப்பதற்காகவே (இவ்வாறு செய்தேன்). எனவே, மக்களுள் சிலருடைய இதயங்களை இவர்களின்பால் கவரச்செய்வாயாக! இவர்களுக்குக் கனிகளை உணவாக வழங்குவாயாக! (இதன் மூலம் ) இவர்கள் நன்றி செலுத்துவோர் ஆகலாம் (என்றும் இப்ராஹீம் பிரார்த்தனை செய்தார்).
எங்கள் இறைவா! நாங்கள் மறைப்பதையும் நாங்கள் வெளிப்படுத்துவதையும் நிச்சயமாக நீ அறிகின்றாய்; பூமியிலும் வானத்திலும் அல்லாஹ்வுக்கு எதுவும் மறைந்ததன்று (என்றும் இப்ராஹீம் கூறினார்).

எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே உரியன; அவனே எனக்கு முதுமையிலும் இஸ்மாயீலையும் இஸ்ஹாக்கையும் (குழந்தைகளாக) வழங்கினான்; நிச்சயமாக என் இறைவன் பிரார்த்தனையைச் செவியேற்பவன் ஆவான் (என்றும் இப்ராஹீம் கூறினார்).
என் இறைவா! என்னையும் என் வழித்தோன்றல்களையும் தொழுகையைக் கடைப்பிடிப்பவர்களாக ஆக்குவாயாக! எங்கள் இறைவா! என் பிரார்த்தனையை ஏற்பாயாக! (என்றும் இப்ராஹீம் கூறினார்). எங்கள் இறைவா! விசாரணை நடைபெறும் நாளில் எனக்கும் என் பெற்றோருக்கும் இறைநம்பிக்கை கொண்டோருக்கும் மன்னிப்பு வழங்குவாயாக! (என்றும் இப்ராஹீம் கூறினார்). (14: 35-41)

சுலைமான் பின் தாவூத் (அலை) அவர்கள் பைத்துல் மக்திஸைக் கட்டி முடித்தபோது, அவர் தம் இறைவனிடம் மூன்று விசயங்களைக் கேட்டார். அவர் செய்த பிரார்த்தனையை அல்லாஹ் கூறுகின்றான்: என் இறைவா! என்னை மன்னிப்பாயாக! மேலும்,பின்னர் எவருமே அடையமுடியாத ஓர் அரசாங்கத்தை எனக்கு நீ நன்கொடையளிப்பாயாக (38: 35) அதாவது 1. மன்னித்தல், 2. ஆட்சியை வழங்குதல், 3. அதுபோன்ற ஆட்சியைப் பிறருக்கு வழங்காதிருத்தல் ஆகிய மூன்றாகும். இது பற்றிய விளக்கத்தை சுலைமான் (அலை) அவர்களின் வரலாற்றில் நாம் தெளிவாகக் கூறுவோம். அவர் கேட்டதன் நோக்கம் என்ன என்பதை அல்லாஹ்வே நன்கறிந்தவன்.

மேற்கண்ட நபிமொழியிலிருந்து, பைத்துல் முகத்தசை சுலைமான் (அலை) கட்டினார் என்பதன் நோக்கம், அவர் அதனைப் புதுப்பித்துக் கட்டினார் என்பதாகும். கஅபாவிற்கும் பைத்துல் முகத்தசுக்கும் இடையே உள்ள கால அளவு நாற்பது ஆண்டுகளாகும் எனும் நபிமொழியிலிருந்து இதனை நாம் விளங்க முடியும். சுலைமான் நபிக்கும் இப்ராஹீம் நபிக்கும் இடையே நாற்பது ஆண்டுகளே இடைவெளி இருந்தன என்று இப்னு ஹிப்பான் (ரஹ்) தவிர யாரும் சொல்லவில்லை. அவருடைய இக்கூற்று நபிமொழிக்கு எதிராக உள்ளது. இக்கருத்தை வேறு யாரும் கூறவில்லை. உயர்ந்தோன் அல்லாஹ்வே நன்கறிந்தவன்.

----------------அடிக்குறிப்பு------------------------

* இது பற்றி விரிவாக நாம் ஏற்கெனவே கூறிவிட்டோம். அல்லாஹ்வே நன்கறிபவன்.

அரபி:           அல்பிதாயா வந்நிஹாயா (இமாம் இப்னு கஸீர்- ரஹ்) 
தமிழாக்கம்: நூ. அப்துல் ஹாதி பாகவி M.A., M.Phil.

வியாழன், 24 பிப்ரவரி, 2011

யாருக்கு உங்கள் வாக்கு?

இலட்சியத்தூது மாத இதழில் ஐந்தாண்டுகளுக்கு முன்பு நான் எழுதிய கட்டுரையின் கருத்து இன்றும் பொருந்துகிறது. எனவே நான் அதை இங்கு வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகிறேன்.







புதன், 23 பிப்ரவரி, 2011

வெளிவந்துவிட்டது


முஹம்மது முஸ்தபா அல்ஜிபாலீ ஆங்கிலத்தில் எழுதிய முஸ்லிம் பேமிலி எனும் நூலை   இஸ்லாமிய இல்லறம் எனும் தலைப்பில் நான் (நூ அப்துல் ஹாதி பாகவி) 
 தமிழாக்கம் செய்துள்ளேன். படிக்கப் படிக்கச் சுவையான தமிழ் நூல்.

 சென்னையில் உள்ள சாஜிதா பதிப்பகம் இந்நூலை வெளியிட்டுள்ளது.  இந்நூலில் கணவன் மனைவி ஒருவருக்கொருவர் செய்ய வேண்டிய கடமைகள், திருமணம் தொடர்பான அனைத்துத் தகவல்களும் திருக்குர்ஆன் மற்றும் நபிமொழிகளின் ஆதாரங்களோடு அ முதல் ஃ வரை கூறப்பட்டுள்ளன. தம்பதிகள் அனைவரும் அவசியம் படிக்க வேண்டிய அரிய நூல். 
 பக்கங்கள்:  448  விலை:  ரூ. 170/-   நூலைப்பெற தொடர்புகொள்ள வேண்டிய செல்பேசி எண்:  9840977758




திங்கள், 14 பிப்ரவரி, 2011

இப்ராஹீம் நபியின் வரலாறு (தொடர் 17)

இஸ்ஹாக் நபியின் பிறப்பு

அல்லாஹ் கூறுகின்றான்: நல்லோர்களிலுள்ள நபியாக இஸ்ஹாக்கை அவருக்கு (மகனாகத் தருவதாக) நாம் நற்செய்தி கூறினோம். இன்னும் நாம் அவர்மீதும், இஸ்ஹாக்மீதும் பாக்கியங்கள் பொழிந்தோம். மேலும், அவ்விருவருடைய சந்ததியருள் நன்மை செய்பவர்களும் இருக்கின்றார்கள். மேலும், தமக்குத்தாமே பகிரங்கமாக அநியாயம் செய்துகொள்வோரும் இருக்கின்றனர். (37: 112-113)

வானவர்கள், லூத் (அலை) அவர்களுடைய சமுதாய மக்களின் இறைமறுப்பாலும் வரம்பு மீறிய பாவத்தாலும் அவர்களை அழிப்பதற்காக இப்ராஹீம் மற்றும் சார்ரா அம்மையாரைக் கடந்துசென்ற வேளையில், அவர்கள் அவ்விருவரையும் சந்தித்து மேற்கண்ட நற்செய்தியைத் தெரிவித்தனர். லூத் (அலை) அவர்களுடைய சமுதாயத்தினர் பற்றி-இன்ஷா அல்லாஹ்-வரும் பக்கங்களில் காணலாம்.

* அல்லாஹ் கூறுகின்றான்: நம் தூதர்கள், (இறைத்தூதர்) இப்ராஹீமிடம் நற்செய்தி கொண்டுவந்து, (உம்மீது) சாந்தி நிலவட்டுமாக! என்று கூறினார்கள். அவரும் (பதிலுக்கு) (உங்கள்மீதும்) சாந்தி உண்டாவதாக! என்று கூறினார். பின்னர் சற்று நேரத்திற்குள், பொரித்த (இளம்) கன்று ஒன்றை அவர் கொண்டுவந்(து அவர்களுக்கு விருந்தளித்)தார்.

அவர்களின் கைகள் அதை நோக்கி நீளாததை அவர் கண்டபோது, அவர்களைப் புதிராகப் பார்த்தார். மனத்துக்குள் அவர்களைப் பற்றி அவர் அஞ்சினார். அப்போது அவர்கள், நீர் அஞ்சாதீர்; நிச்சயமாக நாங்கள் லூத்தின் சமூகத்தாரிடம் அனுப்பப்பட்டுள்ளோம் என்று கூறினார்கள். (அங்கு) அவருடைய துணைவியும் நின்றிருந்தார். அவர் (இதைக் கேட்டதும்) சிரித்தார். நாம் அவருக்கு இஸ்ஹாக் (பிறக்கப்போவது) குறித்தும், இஸ்ஹாக்குக்குப் பின்னர் (பேரர்) யஅகூப் குறித்தும் நற்செய்தி கூறினோம்.

அதற்கு அவர் (துணைவி), அந்தோ! துயரமே! நானும் முதியவளாகி, இதோ என் கணவரும் மூப்படைந்துவிட்ட நிலையில் எனக்குக் குழந்தை பிறக்குமா? நிச்சயமாக இது வியப்பான விஷயம்தான்! என்று கூறினார். அதற்கு அவர்கள், அல்லாஹ்வின் முடிவு குறித்தா நீர் வியப்படைகிறீர்? (நபியின்) குடும்பத்தாரே! இறையருளும் அவன் வளங்களும் உங்களுக்குக் கிடைக்கட்டும்! நிச்சயமாக அவன் புகழுக்குரியோனும் மகத்துவமிக்கோனும் ஆவான் என்று கூறினார்கள்.(11: 69-73)

* (நபியே!) இப்ராஹீமின் விருந்தினர்கள் பற்றி அவர்களுக்கு எடுத்துரைப்பீராக! அவர்கள் அவரிடம் வந்ததும், சாந்தி உண்டாகட்டும்! என்று (முகமன்) கூறினார்கள். (அதற்கு) அவர், உங்களைக் குறித்து நாம் அச்சமடைகிறோம் என்று கூறினார். நீர் அஞ்சாதீர்! நிச்சயமாக நாங்கள், உமக்கு அறிவார்ந்த ஆண் குழந்தை (பிறக்கப்போவது) குறித்து நற்செய்தி கூறுகிறோம் என்று அவர்கள் கூறினர். என்னை முதுமை வந்தடைந்துவிட்ட நிலையில் எனக்கு நற்செய்தி கூறுகின்றீர்களா? எந்த அடிப்படையில் நற்செய்தி கூறுகிறீர்கள்? என்று (இப்ராஹீம்) வினவினார்.

உண்மையாகவே, உமக்கு நாங்கள் நற்செய்தி கூறுகிறோம். எனவே, அவநம்பிக்கை கொள்வோருள் ஒருவராக நீர் ஆகிவிடாதீர்! என்று அவர்கள் கூறினர். (அதற்கு இப்ராஹீம்), வழிதவறியோர் தவிர வேறு யார் தம் இறைவனின் அருள்மீது அவநம்பிக்கை கொள்வார்? என்று கூறினார். (15: 51-56)
* இப்ராஹீமின் கண்ணியமான விருந்தினர்களின் செய்தி உமக்கு வந்ததா? அவர்கள், அவரிடம் நுழைந்தபோது, (அவரை நோக்கி, உங்கள் மீது) சாந்தி உண்டாவதாக! என்று கூறினார்கள். (அதற்கவர், உங்கள் மீது) சாந்தி உண்டாவதாக! என்று (பதில்) கூறினார். இவர்கள் (நமக்கு) அறிமுகமில்லா சமூகத்தாராக இருக்கின்றார்களே (என்று எண்ணிக்கொண்டார்). எனினும், அவர் தம் குடும்பத்தாரிடம் விரைந்து சென்று, ஒரு கொழுத்த காளைக் கன்றை(ப் பொரித்து)க் கொண்டுவந்தார்.

அதை அவர்கள் முன்வைத்து, நீங்கள் உண்ணமாட்டீர்களா? என்று கேட்டார். (அவர்கள் அதை உண்ணாததால்) அவர்களைப் பற்றிய பயத்தை உணர்ந்தார். (இதனை அறிந்த) அவர்கள் `பயப்படாதீர்! எனக் கூறினர். மேலும், அவருக்கு அறிவுமிக்க குழந்தை (பிறக்கப்போகிறது) என்ற நற்செய்தியைக் கூறினர். பின்னர், இதைக் கேட்ட அவருடைய மனைவி சப்தமிட்டவராக (அவர்கள்) எதிரில் வந்து, தம் முகத்தில் அடித்துக்கொண்டு நான் குழந்தைப்பேறற்ற முதியவளாயிற்றே! என்று கூறினார். அதற்கு அவர்கள், இவ்வாறே, உம் இறைவன் கூறினான். திண்ணமாக அவன் ஞானம் மிக்கோனும், (யாவற்றையும்) நன்கறிந்தோனும் ஆவான் என்று கூறினார்கள். (51: 24-30)
அல்லாஹ் மேற்கண்ட வசனங்களில் கூறியுள்ள வானவர்கள் மூவர் என்று அறிஞர்கள் பலர் கூறியுள்ளனர். அவர்கள், ஜிப்ரீல், மீகாயீல், இஸ்ராஃபீல் ஆகியோர் ஆவர். இம்மூவரும் இப்ராஹீம் நபியிடம் வந்தபோது, அவர்களை விருந்தினர்கள் என்றே முதலில் அவர் நினைத்தார். எனவே, விருந்தினர்களைக் கவனிப்பதைப் போன்றே அவர் அவர்களைக் கவனித்தார். அவருடைய மாடுகளுள் கொழுத்த கன்றுக்குட்டி ஒன்றைத் தேர்ந்தெடுத்து அதை அவர்களுக்காகப் பொரித்தார். அதைக் கொண்டுவந்து அவர்கள் முன்னிலையில் வைத்தார்.

அவர்கள் அதைச் சாப்பிடத் தம் கைகளை நீட்டாதபோது, அவர்களிடம், நீங்கள் சாப்பிடமாட்டீர்களா? என்று வினவினார். முற்றிலும் சாப்பிடத் தயங்குபவர்களாக அவர்களைக் கண்டார். ஏனென்றால், வானவர்களுக்கு உண்கின்ற ஆசையோ தேவையோ இல்லை. வந்தவர்கள் சாப்பிடாமல் இருந்ததைக் கண்ட இப்ராஹீம் (அலை) அதிருப்தியடைந்தார். அதன் பின்னர், அவர்களைப் பற்றிய பயத்தையும் அவர் (தம்) மனதில் உணர்ந்தார். (ஆனால்) அவர்களோ (அவரைப் பார்த்து) பயப்படாதீர்! நிச்சயமாக நாங்கள் லூத் சமுதாயத்தாரிடம் அனுப்பப்பட்டுள்ளோம் என்று கூறினார்கள். (11: 70)

அந்நேரத்தில் அல்லாஹ் கோபம் கொண்டுள்ள அவர்களை நினைத்து சார்ரா அம்மையார் மகிழ்ந்தார். அரபியர்கள் மற்றும் மற்றவர்களின் பழக்கத்தைப் போன்றே அவர் திண்ணையில் உறங்கிக்கொண்டிருந்தார். அந்த நற்செய்தியைக் கேட்டவுடன் அவர் சிரித்தார். அப்போது அல்லாஹ் கூறுகின்றான்: அவருக்கு நாம் இஸ்ஹாக்கைக் குறித்தும் இஸ்ஹாக்குக்குப்பின் யஅகூபையும் நற்செய்தி கூறினோம். (11: 71) அதாவது வந்திருந்த வானவர்கள் அவருக்கு அந்த நற்செய்தியைக் கூறினார்கள்.

இதைக் கேட்ட அவருடைய துணைவி சப்தமிட்டவராக (அவர்கள்) எதிரில் வந்து, தம் முகத்தில் அடித்துக்கொண்டார். (51: 29) அதாவது ஆச்சரியமான செய்தியைக் கேட்டு, பெண்கள் செய்வதைப் போன்று செய்தார். அந்தோ! துயரமே! நானும் முதியவளாகி, இதோ என் கணவரும் மூப்படைந்துவிட்ட நிலையில் எனக்குக் குழந்தை பிறக்குமா? என்று கேட்டார்.(11: 72) அதாவது முதியவளாகவும் குழந்தை பெறமுடியாத மலடியாகவும் இருக்கின்ற என்னைப் போன்றவர் எப்படிக் குழந்தை பெற முடியும் என வினவினார். இவர் என்னுடைய கணவர்; இவர் முதியவர். இந்நிலையில் குழந்தை பிறக்குமா என்று அவர் ஆச்சரியப்பட்டார். இதனால்தான் அவர், ‘நிச்சயமாக இது வியப்பான விஷயம்தான்!’ என்று கூறினார். அதற்கு அவர்கள், அல்லாஹ்வின் முடிவு குறித்தா நீர் வியப்படைகிறீர்? (நபியின்) குடும்பத்தாரே! இறையருளும் அவன் வளங்களும் உங்களுக்குக் கிடைக்கட்டும்! நிச்சயமாக, அவன் புகழுக்குரியோனும் மகத்துவமிக்கோனும் ஆவான் என்று கூறினார்கள். (11: 72-73)

இப்ராஹீம் (அலை) அவர்களின் ஆச்சரியம்

அதேபோலவே, இப்ராஹீம் நபியும் இந்த நற்செய்தியைக் கேட்டு, அதை உறுதிப்படுத்திக்கொண்டு, அதன் மூலம் ஆச்சரியப்பட்டார்; அவர் மகிழ்ந்தார். என்னை முதுமை வந்தடைந்துவிட்ட நிலையில் எனக்கு நற்செய்தி கூறுகின்றீர்களா? எந்த அடிப்படையில் நற்செய்தி கூறுகிறீர்கள்? என்று (இப்ராஹீம்) வினவினார்.

உண்மையாகவே, உமக்கு நாங்கள் நற்செய்தி கூறுகிறோம். எனவே, அவநம்பிக்கை கொள்வோருள் ஒருவராக நீர் ஆகிவிடாதீர்! என்று அவர்கள் கூறினர். (15: 54-55) இந்த நற்செய்தி மூலம் அவர்கள் அச்செய்தியை உறுதிப்படுத்தினார்கள். அவ்விருவருக்கும் அவர்கள் அறிவுமிக்க ஒரு குழந்தை பிறக்கப்போகிறது என்ற நற்செய்தியைக் கூறினர். அவர்தாம் இஸ்மாயீலின் சகோதரர் இஸ்ஹாக் ஆவார். அவர் அறிவுமிக்க குழந்தை ஆவார்; அவர் உயர்வுக்கும் பொறுமைக்கும் உகந்தவர். அவர் தம் வாக்குறுதியை உண்மைப்படுத்துவதிலும் பொறுமையைக் கடைப்பிடிப்பதிலும் இவ்வாறுதான் அல்லாஹ் அவரை வர்ணிக்கின்றான். அல்லாஹ் மற்றொரு வசனத்தில் கூறுகின்றான்: அவருக்கு நாம் இஸ்ஹாக்கைப் பற்றியும் இஸ்ஹாக்குக்குப்பின் யஅகூபைப் பற்றியும் நற்செய்தி கூறினோம். (11: 71)


அரபி:           அல்பிதாயா வந்நிஹாயா (இமாம் இப்னு கஸீர்- ரஹ்) 
தமிழாக்கம்: நூ. அப்துல் ஹாதி பாகவி M.A., M.Phil.