சனி, 19 மார்ச், 2011

எண்ணம்போல் வாழ்வு!



செயல்கள் யாவும் எண்ணங்களுக்கேற்பவே (அமையும்) என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்கள்: புகாரீ, முஸ்லிம்)

ஒருவன்,  தான் எப்படி ஆக வேண்டுமென்று தன் ஆழ்மனதுக் குள் எண்ணுகின்றானோ அப்படியே அவன் ஆகிவிடுகின்றான். ஒருவன் ஒரு குறிப்பிட்ட இலக்கை அடைய வேண்டுமாயின் அதற்கான முயற்சியில் அவன் தொடர்ந்து ஈடுபட வேண்டும். அவ்வாறு அவன் தொடர்ந்து, தான் அடைய வேண்டிய இலக்கை நோக்கி முயன்றுகொண்டே இருந்தால், இறுதியில் தன் இலக்கை அவன் அடைந்தே விடுகின்றான். அது நன்மையாக இருப்பினும் தீமையாக இருப்பினும் மனிதனின் ஆழ்மனத்தினுள் எது பதியவைக்கப்படுகின்றதோ அதுவே செயலாக வெளிப்படுகிறது. அதைத்தான் மனத்திட்பம் என்று கூறுகின்றார்கள்.

ஒரு குறிப்பிட்ட இலட்சியத்தை, குறிக்கோளை அடைய வேண்டுமென்ற எண்ணத்தை மனத்தினுள் ஆழமாகப் பதிய வைத்துக்கொண்டு தொடர்ந்து ஒருவன் செயல்பட்டால் அதுவே அவ்விலக்கை அடைவதற்கான வழியாகும்.

இதற்கு மாறாக, ஒருவனுக்கு ஏதோ ஒன்றை அடைய வேண்டுமென்ற எண்ணம் இருக்கிறது.  ஆனால் அது என்ன என்பதைப் பற்றிய தெளிவு இல்லை. அல்லது அந்த இலக்கை அவன் தன் மனத்தினுள் ஆழமாகப் பதியவைக்கவில்லை. அல்லது மனத்தினுள் ஆழமாகப் பதியவைத்தான். ஆனால் அதை அடைவதற்கான முயற்சியோ செயல்பாடோ இல்லை. மேற்கண்ட எந்த விதத்திலும் ஒருவன் தன் இலக்கை அடைய முடியாது.

ஆக, நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடைய பொய்யாமொழியி லிருந்து நாம் விளங்கவேண்டியது யாதெனில், ஓர் இலக்கை மனத்தினுள் பதிய வைத்துக்கொண்டு அதை அடைவதற்கான முயற்சியில் தொடர்ந்து ஒருவன் ஈடுபட்டால் திண்ணமாக அவனுடைய அவ்வெண்ணம் நிறைவேறும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.

அந்த இலக்கு மிகச் சிறிதாகவும் இருக்கலாம். அல்லது மிகப்பெரிதாகவும் இருக்கலாம். அது அவரவர் எண்ணத்தைப் பொறுத்தது. ஒருவர் மிகப்பெரிய இலக்கைக்கூட மிக எளிதாக அடைந்துவிடலாம். மற்றொருவர் மிகச்சிறிய இலக்கைக்கூட மிகச் சிரமப்பட்டுத்தான் அடைய வேண்டியிருக்கும். உதாரணமாக, பள்ளியில் கல்வி பயில்கின்ற ஒரு மாணவன், இவ்வாண்டு இறுதித் தேர்வில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுவிட வேண்டும் என்று எண்ணுகிறான். அதைத் தன் மனத்தினுள் ஆழமாகப் பதியவைத்துக்கொண்டு அதற்கான முயற்சியில் தொடர்ந்து ஈடுபடுகிறான். அதேபோல் இறுதியில் அவன் அதை எளிதாகப் பெற்றுவிடுகின்றான்.

மற்றொருவன் எப்படியாவது முப்பத்தைந்து மதிப்பெண்கள் பெற்றுத் தேர்ச்சிபெற்றுவிட வேண்டும் என்று எண்ணுகிறான். அதையே தன் மனத்தினுள் பதிய வைத்துக்கொண்டு அதற்கான முயற்சியில் ஈடுபடுகிறான். இறுதியில் அவன் எண்ணியதைப்போலவே முப்பத்தைந்து மதிப்பெண்கள் பெற்றுத் தேர்ச்சிபெற்றுவிடுகிறான்.

இங்கே நாம் கவனிக்க வேண்டியது யாதெனில், ஒருவர் எந்த அளவுக்கு இலட்சியத்தைக் கொண்டிருக்கிறாரோ அதற்கேற்பவே அவருடைய செயல்பாடு அமையும். அதற்கேற்பவே அவர் பெற முடியும். குறுகிய எண்ணம்கொண்டால் குறைவானதையே அடைய முடியும். உயரிய எண்ணம்கொண்டால் உயர்வானதை அடைய முடியும். இதுவே மனோ எண்ணத்தின் வெளிப்பாடு. இதனால்தான் எண்ணம்போல் வாழ்வுஎன்று முதியோர் கூறினர்.

இதுபற்றி வள்ளுவர் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்:
வெள்ளத் தனையது மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனையது உயர்வு.
குளத்தில் உள்ள நீரின் அளவுக்கேற்ப அதிலுள்ள மலர்த்தண்டு நீண்டு காணப்படும். தண்ணீர் குறையக் குறைய மலர்த்தண்டும் உள்ளே சென்றுகொண்டேயிருக்கும். ஆக ஒருவன் எந்த அளவுக்கு உயரிய எண்ணம் கொள்கின்றானோ அந்த அளவுக்கு உயர்வடைகின்றான். அதே நேரத்தில் அதற்கான செயல்பாடு மிகமிக அவசியம்.

இதன் விளக்கமாகவே அல்லாஹ்வின் கூற்றைக் காண்கிறோம். நான் என்னுடைய அடியான் என்னை எவ்வாறு எண்ணுகின்றானோ அவ்வாறே நடந்துகொள்வேன் என்று அல்லாஹ் கூறுவதாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (நூல்: பைஹகீ)

அதாவது, ஓர் அடியான், அல்லாஹ் என்னை இந்த அளவுக்கு உயர்த்துவான் என்று எண்ணினால் அவன் நினைக்கின்ற அளவுக்கு அவனை உயர்த்துவான். மாறாக, அல்லாஹ் என்னை இந்த அளவுக்கு மட்டும் உயர்த்தினால் போதும் என்று எண்ணினால் அவனுடைய உயர்வு ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் முடிந்துவிடும்.

ஒருவன், இந்தத் தொகுதிக்கு நான் சட்டமன்ற உறுப்பினராக வேண்டுமென்று எண்ணுகிறான். அவன்  அதற்கான முயற்சியிலும் ஈடுபட்டு, இறுதியில் அவன் அடைந்துவிடுகிறான். ஒருவன் மத்திய அமைச்சரவையில் இடம் பெற வேண்டும் என்று எண்ணுகிறான். அதற்கான முயற்சியில் ஈடுபட்டு, இறுதியில் அதை அடைந்துவிடுகின்றான். ஆக, இங்கு இருவருமே தம் இலக்கைத் தம் மனத்தினுள்  ஆழமாகப் பதியவைத்துக்கொண்டே செயல்பட்டனர். அதற்காக உழைத்தனர். இறுதியில் அதை அடைந்துவிட்டனர். ஆனால் இருவருள் ஒருவர் உயர்வெண்ணம்கொண்டார். அதையே அடைந்தார். மற்றொருவரோ மிகக் குறைவானதை எண்ணினார். அவர் எண்ணப்படி எதை விரும்பினாரோ அதையே அவர் அடைந்துகொண்டார். எனவே நம் இலட்சியமும் இலக்கும் மிக உயர்வானதாகவும் விசாலமானதாகவும் இருக்க வேண்டும்.

மனத்தினுள் ஆழமான எண்ணம் பதிவாகிவிட்டால் அது திண்ணமாக செயல்வடிவமாகவே வெளிப்படும். இமயமலையில் ஏறநினைப்பவன் அந்த எண்ணத்தைத் தன் மனத்தினுள் மிக ஆழமாகப் பதித்திருக்க வேண்டும். இல்லையேல் அதில் அவன் வெற்றிக்கனியைப் பறிக்கவே முடியாது. அதேபோல் ஒருவன் ஓர் உயரிய இலட்சியத்தை அடைய வேண்டுமாயின் அது அவனுடைய மனத்தினுள் மிக ஆழமாகப் பதிந்திருக்க வேண்டும். அப்போதுதான் அவன் அந்த இலட்சியத்தை எளிதாக அடைய முடியும். எந்த அளவுக்கு ஆழமாகவும் அழுத்தமாகவும் அது அவனுடைய மனதில் பதிந்திருக்கிறதோ அதற்கேற்பவே அவனுடைய செயல்பாடு அமையும்.

இஸ்லாத்தின் கடமைகள் யாவும் எண்ணத்தின் அடிப்படையிலேயே நிறைவேற்றப்படுகின்றன. ஒருவர் ளுஹர் தொழுவதற்கு முன் தம்முடைய மனத்தினுள் அதற்கான எண்ணத்தை ஆழமாகப் பதிவுசெய்துகொண்டிருக்க வேண்டும். அந்த எண்ணமே இல்லாமல் அவர் செயல்பட்டால் அவருடைய தொழுகை நிறைவேறாது. அதுபோல் நோன்பு, ஸகாத், ஹஜ் ஆகிய அனைத்துக் கடமைகளுக்கும் எண்ணம் அவசியமாகும். ஆக இஸ்லாத்தின் கடமைகள் யாவும் எண்ணத்தின் அடிப்படையிலேயே அமைகின்றன.

நான் என் கல்வியின் மூலம் இந்த ஊருக்குச் சேவை செய்தால் போதும் என்று ஒருவர் எண்ணினால் அவருடைய கல்வி அவ்வூர் மக்களுக்கு மட்டுமே பயனளிக்கும். அதையே அவர், என் கல்வி உலக மக்கள் அனைவருக்கும் பயனளிக்க வேண்டும் என்று எண்ணினால், அதற்கான முயற்சியில் அவர் ஈடுபட்டால் திண்ணமாக அவருடைய கல்வியால் உலக மக்கள் யாவரும் பயனடைவர். இதுவே முற்றிலும் உண்மை.

இதற்கான எல்லாவித சாத்தியக்கூறுகளும் இன்றைய நவீன உலகில் உள்ளன. அறிவியல் வளர்ச்சியே இல்லாத காலத்தில் தொகுக்கப்பட்ட புகாரீ நூல் இன்று உலகிலுள்ள முஸ்லிம்கள் அனைவரையும் சென்றடைந்து, அவர்களுக்குப் பயனளிக்கிறது என்றால், இது முஹம்மது பின் இஸ்மாயீல் (ரஹ்) அவர்களின் உயர்வான எண்ணம் அல்லாமல் வேறென்ன?

அறிவியல் விண்ணைத் தாண்டி வளர்ச்சி பெற்றுள்ள இக்காலத்தில் ஒருவர் கற்றுள்ள நற்கல்வி உலக மக்கள் யாவரையும் சென்றடைய முடியும். அதற்குத் தேவை பரந்த எண்ணமும் அதற்கான செயல்பாடுமே ஆகும்.

மனிதனுடைய இந்த எண்ணமே நன்மைக்கும் தீமைக்கும் மிகப்பெரும் காரணமாகும். ஒருவன் தன் உள்ளத்தில் நல்லெண்ணம் கொண்டால் அவனுடைய செயல்கள் நல்லவையாகவும் தீயெண்ணம் கொண்டால் அவனுடைய செயல்கள் தீயவையாகவும் வெளிப்படும்.

அல்லாஹ் கூறுவதைப் பாருங்கள்! ஒவ்வொருவரும் தம் எண்ணப்படியே செயல்படுகிறார்கள். (17: 84) எனவே நாம் பரந்த, உயரிய, விசாலமான நல்லெண்ணம் கொள்வோம். நம் வாழ்வை உயர்வானதாகவும் பயனுள்ளதாகவும் ஆக்கிக்கொள்வோம். உயர்ந்தோன் அல்லாஹ் அதற்கு உதவிபுரிவானாக!    
 
  


கருத்துகள் இல்லை: