சனி, 2 ஏப்ரல், 2011

இப்ராஹீம் நபியின் வரலாறு (தொடர் 19)


தொன்மையான இறையாலயத்தைக் கட்டுதல்

* அல்லாஹ் கூறுகின்றான்: நாம் இப்ராஹீமுக்குப் புனித ஆலயத்தின் இடத்தை நிர்ணயித்து `நீர் எனக்கு எவரையும் இணைவைக்காதீர்; என்னுடைய  (இந்த) ஆலயத்தைச் சுற்றி வருவோருக்கும், அதில் நிற்போருக்கும், குனிந்தும் (ருகூஉ) , சிரம்பணிந்தும் (சுஜூத்) வணங்குவோருக்கும்- தூய்மையாக்கிவைப்பீராக! என்று சொல்லியதை (நபியே!) நீர் எண்ணிப்பார்ப்பீராக!  ஹஜ்ஜைப் பற்றி மக்களுக்கு அறிவிப்பீராக! அவர்கள் நடந்தவர்களாக உம்மிடம் வருவார்கள்; இன்னும், மெலிந்த எல்லா ஒட்டகத்தின் மீதும் (வருவார்கள்); அவை வெகுதூரமான எல்லா வழிகளிலிருந்தும் (அவர்களைக் கொண்டு)வரும். (22: 26-27)

* அருள்வளமிக்கதாகவும் அகிலத்தாருக்கு வழிகாட்டியாகவும் மனிதர்களுக்காக அமைக்கப்பெற்ற முதல் (இறை) ஆலயம் `பக்கா (மக்கா)வில் உள்ளதுதான். அதில் தெளிவான சான்றுகளும் `மகாமு இப்ராஹீமும் உள்ளன. மக்களுள் அங்குச் சென்றுவரச் சக்திபெற்றோர் அல்லாஹ்வுக்காக அவ்வில்லத்தை `ஹஜ் செய்வது கடமையாகும். யார் மறுத்தாரோ (அதனால் அல்லாஹ்வுக்கு இழப்பில்லை. ஏனெனில்,) அல்லாஹ் அகிலத்தாரிடம் தேவையற்றவன் ஆவான்.  (03: 96-97)

* இப்ராஹீமை அவருடைய இறைவன் பல கட்டளைகள் மூலம் சோதித்ததை எண்ணிப்பாருங்கள். அவர் அவற்றை முழுமையாக நிறைவேற்றினார். (அதனால்,) உம்மை மனிதர்களுக்குத் தலைவராக ஆக்கப்போகிறேன் என்று அல்லாஹ் கூறினான். என்னுடைய வழித்தோன்றல்களிலும் (தலைவர்களை உருவாக்குவாயாக!) என்று அவர் கோரினார். (அதற்கு, ஆம்! அப்படியே செய்கிறேன். ஆனால்,) எனது வாக்குறுதி (உம்முடைய வழித்தோன்றல்களுள்) அநீதி இழைத்தோரைச் சேராது என்று அவன் கூறினான். இந்த (கஅபா) ஆலயத்தை ஒன்றுகூடுமிடமாகவும், அபய பூமியாகவும் மக்களுக்கு நாம் ஆக்கியதை நீங்கள் எண்ணிப்பாருங்கள். இப்ராஹீம் நின்ற இடத்தை நீங்கள் தொழுமிடமாக ஆக்கிக்கொள்ளுங்கள். (தவாஃப்) சுற்றுவோருக்காகவும், தங்கி வழிபாடு (இஃதிகாஃப்) செய்வோருக்காகவும், குனிந்தும் சிரம்பணிந்தும் வணங்குவோருக்காகவும் என்னுடைய (இந்த) ஆலயத்தை நீங்கள் இருவரும் தூய்மைப்படுத்துங்கள் என்று இப்ராஹீமிடமும் இஸ்மாயீலிடமும் நாம்  உறுதிமொழி வாங்கினோம்.

என் இறைவா! இதைப் பாதுகாப்பளிக்கும் நகரமாக ஆக்குவாயாக! இந்நகரவாசிகளில் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டோருக்குக் கனிகளை வழங்குவாயாக! என்று இப்ராஹீம் வேண்டியதை எண்ணிப்பாருங்கள். அப்போது அல்லாஹ், (என்னை) நிராகரிப்பவனுக்கும் சிறிது காலம் நான் வசதிகளை வழங்குவேன்; பின்னர் நரக வேதனைக்கு அவனை ஆட்படுத்துவேன்; போய்ச் சேர்கின்ற இடங்களில் அது மிகவும் மோசமானது என்று கூறினான்.

இப்ராஹீமும் இஸ்மாயீலும் அந்த ஆலயத்தின் அடித்தளங்களை உயர்த்திக் கட்டியபோது, எங்கள் இறைவா! எங்களிடமிருந்து (இப்பணியை) ஏற்பாயாக! நீயே நன்கு செவியுறுவோனும் நன்கறிந்தோனும் ஆவாய் (என்று பிரார்த்தனை செய்தனர்). எங்கள் இறைவா! எங்களை உனக்குக் கட்டுப்பட்டவர்களாக ஆக்குவாயாக! எங்கள் வழித்தோன்றல்களுள் உனக்குக் கட்டுப்பட்ட ஒரு சமுதாயத்தாரையும் (உருவாக்குவாயாக)! எங்களுக்கு எங்களது வழிபாட்டு முறைகளைக் காட்டுவாயாக! எங்களை மன்னிப்பாயாக!  நீயே மிகவும் மன்னிப்பவனும் மிகுந்த கருணையாளனும் ஆவாய் (என்றும் அவர்கள் பிரார்த்தனை செய்தார்கள்). எங்கள் இறைவா! அவர்களுக்காக அவர்களிலிருந்து ஒரு தூதரை நீ அனுப்புவாயாக! அவர் உன் வசனங்களை அவர்களுக்கு ஓதிக்காட்டுவார்; வேதத்தையும் ஞானத்தையும் அவர்களுக்குக் கற்றுக்கொடுப்பார்; அவர்களைத் தூய்மைப்படுத்தவும் செய்வார். நீயே வல்லமை படைத்தோனும் ஞானம்  நிறைந்தோனும் ஆவாய் (என்றும் பிரார்த்தனை செய்தார்கள்).  (2: 124-129)

தொன்மையான வீட்டைக் கட்டுதல்

அல்லாஹ்வின் அடியார், அவனுடைய தூதர், அவனுடைய நண்பர், நல்லோர்களின் இமாம், இறைத்தூதர்களின் தந்தை இப்ராஹீம் (அலை) அவர்கள் தொன்மையான வீட்டைக் கட்டினார் என்று அல்லாஹ் கூறுகின்றான். அதுதான் மக்கள் அனைவருக்காகவும் நிர்மாணிக்கப்பட்ட  உலகின் முதல் இறையாலயம் ஆகும். அதில் அவர்கள் அல்லாஹ்வை வழிபடுகின்றார்கள். அல்லாஹ் அவ்விடத்தை அவருக்கு வழிகாட்டினான்; அங்குக் கட்டச் சொல்லி அறிவித்தான். அவ்விடத்தில் கட்டுவதற்கு அல்லாஹ் இப்ராஹீம் நபிக்கு வேத அறிவிப்புச் செய்தான் என்று இறைநம்பிக்கையாளர்களின் தலைவர் அலீ பின் அபீதாலிப்  (ரளி) மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. (நூல்: தாரீக் தப்ரீ)

வானங்களைப் படைத்துள்ள விதம் தொடர்பாக நாம் கூறியுள்ளோம். நிச்சயமாக கஅபா `பைத்துல் மஅமூருக்கு*1 நேராக உள்ளது. அதாவது அந்த `பைத்துல் மஅமூர் விழுந்தால் கஅபா மீதுதான் விழும். அதேபோலவே ஏழு வானங்களின் வழிபாட்டுத்தலங்களும் கஅபாவுக்கு நேராக அமைந்துள்ளன. ஒவ்வொரு வானத்திலும் ஓர் இறையில்லம் உள்ளது. அதில் அந்தந்த வானத்திலுள்ளவர்கள்  அதை முன்னோக்கியே அல்லாஹ்வை வணங்குகின்றார்கள். அது புவியிலுள்ளோர்க்கு உள்ள கஅபாவைப் போன்றே அமைந்துள்ளது என்று முற்கால அறிஞர்கள் சிலர் கூறியுள்ளனர்.

வானங்களில் வானவர்களுக்கு உள்ள வழிபாட்டுத் தலங்களைப் போன்றே புவியிலுள்ளோர்க்கு ஓர் இறையாலயத்தைக் கட்டுவதற்கு அல்லாஹ் இப்ராஹீம் (அலை) அவர்களுக்குக் கட்டளையிட்டான்.  வானங்களையும் பூமியையும் படைத்ததிலிருந்தே அதற்காக ஒதுக்கப்பட்ட அந்த இடத்தை அல்லாஹ் இப்ராஹீம் (அலை) அவர்களுக்குக்  காண்பித்தான். இது பற்றிய நபிமொழி புகாரீ-முஸ்லிம் இரண்டு நூல்களிலும் பதிவாகியுள்ளது.

 வானங்களையும் பூமியையும் அல்லாஹ் படைத்த நாளிலேயே இந்த ஊரை அவன் கண்ணியப்படுத்திவிட்டான். எனவே, இந்த ஊர் அல்லாஹ்வின் கண்ணியத்தால் மறுமை நாள் வரை கண்ணியமானதாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.  (நூல்கள்: புகாரீ, முஸ்லிம்)

மக்களுக்கான முதல் இறையாலயம்

இப்ராஹீம் (அலை) அவர்களுக்கு முன்னரே கஅபா கட்டப்பட்டிருந்தது என்று கூறுவதற்கு ஆதாரப்பூர்வமான எந்த நபிமொழியும் இல்லை. மகானல் பைத் என்ற வார்த்தையை வைத்துக்கொண்டு, கஅபா ஏற்கெனவே கட்டப்பட்டுவிட்டது என்று கூறுவது தவறான செய்தியாகும். இவ்வசனம் எவ்விதத்திலும் ஆதாரமாக அமையாது.  ஏனென்றால், இவ்வசனத்தின் நோக்கம், அல்லாஹ்வின் ஞானத்தில் ஏற்கெனவே நிர்ணயிக்கப்பட்ட இடம்; அவனுடைய விதியில் நிர்ணயிக்கப்பட்ட இடம்; ஆதம் நபியின் காலம் தொட்டு இப்ராஹீம் நபியின் காலம்வரை இறைத்தூதர்களிடம் மகிமைவாய்ந்த இடம் அவ்விடமே  என்பதாகும்.

நிச்சயமாக ஆதம் (அலை) அவர்கள்தாம் அதன்மீது ஒரு குப்பாவை அமைத்தார். வானவர்கள் அவரிடம், உமக்கு முன் நாங்கள்தாம் இவ்வீட்டைச் சுற்றிவந்துள்ளோம் என்று கூறினார்கள். நூஹ் (அலை) அவர்களின் கப்பல் இவ்வீட்டை நாற்பது (அல்லது அதைவிடக் கூடுதல்,குறைவான) நாள்கள் சுற்றிவந்தது. எனினும் மேற்கண்ட அனைத்தும் பனூஇஸ்ரவேலர்களிடமிருந்து கிடைத்த செய்திகளாகும். எனவே, அவற்றை நாம் பொய்மைப்படுத்தவோ உண்மைப்படுத்தவோ ஆதாரமாக எடுத்துக்கொள்ளவோ மாட்டோம். உண்மையான கூற்றுக்கு அவை முரணாக இருந்தால், அவற்றை நிராகரித்துவிடுவோம்.

*அருள்வளமிக்கதாகவும் அகிலத்தாருக்கு வழிகாட்டியாகவும் மனிதர்களுக்காக அமைக்கப்பெற்ற முதல் (இறை) ஆலயம் `பக்கா (மக்கா)வில் உள்ளதுதான். (3: 96) அதாவது பொதுமக்களுக்காக அருள்வளமிக்கதாகவும் அகிலத்தாருக்கு வழிகாட்டியாகவும் முதன் முதலில் உருவாக்கப்பட்ட இறையாலயம் அதுதான். அது பக்கா (மக்கா)வில் அமைந்துள்ளது. அது கஅபா அமைந்துள்ள இடத்தைக் குறிக்கிறது என்று கூறப்பட்டுள்ளது. அதில் தெளிவான சான்றுகள் உள்ளன என்பது, நிச்சயமாக அந்த ஆலயத்தை இப்ராஹீம் நபி கட்டினார்; அவர்தாம் அவருக்குப் பின்னுள்ள இறைத்தூதர்களுக்குத் தந்தையாக உள்ளார்; அவருடைய பிள்ளையிலிருந்து வருகின்ற நல்லோர்களின் தலைவர்; அவர்கள் அவரைப் பின்பற்றுவார்கள்; அவருடைய வழிகாட்டுதல்களைப் பேணுவார்கள்-போன்ற விளக்கங்களைப் பொதிந்துள்ளது.

இதனால்தான் அல்லாஹ், `இப்ராஹீம் நின்ற இடம் என்று கூறியுள்ளான். அதாவது அவர் கஅபாவைக் கட்டியபோது, அக்கட்டடம் அவருடைய உயரத்தைத் தாண்டிச் சென்றபோது, அவர் அதைத் தொடர்ந்து கட்டுவதற்காகப் பயன்படுத்திய கல்; அதன் மீது ஏறி நின்றுகொண்டு அவர் அக்கட்டடத்தைக் கட்டுவதற்காக அவருடைய மகனார் வைத்த பிரபலமான கல் ஆகும். இது பற்றிய நீண்ட நபிமொழி ஒன்றை இப்னு அப்பாஸ் (ரளி) அறிவித்துள்ளார்கள். பழங்காலத்திலிருந்து உமர் பின் அல்கத்தாப் (ரளி) அவர்களின் காலம் வரை அந்தக்கல் கஅபாவோடு சேர்ந்தே இருந்தது. உமர் (ரளி) அவர்கள், அக்கல்லை கஅபாவைவிட்டுச் சற்று நகர்த்திவைத்தார்கள். ஏனென்றால், கஅபாவைச் சுற்றிவருபவர்கள் தொழுபவர்களின் கவனத்தைத் திசைதிருப்பாமல் இருப்பதற்காகவே அவ்வாறு செய்தார்கள். இவ்விசயத்தில் உமர் (ரளி) அவர்களின் கருத்து ஏற்கப்பட்டுள்ளது. 

அல்லாஹ்  பல்வேறு விசயங்களில் அவருடைய கருத்தை வரவேற்றுள்ளான். அவற்றுள் சில:  அவர் இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம், இப்ராஹீம் நபி நின்ற இடத்தை நாம் தொழுமிடமாக ஆக்கிக்கொள்ளலாமே! என்று கருத்துக் கூறினார். உடனே, அல்லாஹ்  பின்வருகின்ற வசனத்தை இறக்கினான்.

இப்ராஹீம் நின்ற இடத்தை நீங்கள் தொழுமிடமாக ஆக்கிக்கொள்ளுங்கள். (2: 125) ஸ்லாமின் தொடக்கக்காலம் வரை அக்கல் மீது இப்ராஹீம் நபியின் இரண்டு கால்களின் தடங்களும் பதிந்திருந்தன.
அபூதாலிப் அவர்கள் தம்முடைய பிரபலமான லாமிய்யா கவிதையில் பின்வருமாறு பாடியுள்ளார்:
ஸவ்ர் குகை மீது சத்தியமாக!
எவன் ஸபீர் எனும் மலையை அதன் இடத்தில் நட்டுவைத்தானோ
அவன் மீது சத்தியமாக!
ஹிரா மலை மீது ஏறுவதற்காகவும் இறங்குவதற்காகவும்
மக்காவின் நடுவே அமைந்துள்ள உண்மையான அவ்வீட்டின் மீது சத்தியமாக!
அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நிச்சயமாக அல்லாஹ் கவனக்குறைவானவன் இல்லை. முற்பகலிலும் மாலைப்பொழுதிலும் சூழ்ந்து தடவக்கூடிய ஹஜ்ருல் அஸ்வத் மீது சத்தியமாக!
இப்ராஹீம் நபி அக்கல் மீது ஏறியபோது பதிந்த தடம் இன்னும் ஈரமாக இருக்கிறது.(அழியாமல் இருக்கிறது). அவர் அதன் மீது காலணியில்லாமல் வெற்றுக்காலில் நின்றார்.

அதாவது அவருடைய கண்ணியமான கால்கள் அக்கல்லில் பதிந்துவிட்டன. அவருடைய அந்தக் கால்களின் அளவுக்கு அக்கல்லில் தடம் பதிந்துவிட்டது. அவை வெற்றுக்கால்களாகவே இருந்தன; காலணி அணியப்பட்டவையாக இல்லை. இதனால்தான் அல்லாஹ் கூறுகின்றான்.
இப்ராஹீமும் இஸ்மாயீலும் அந்த ஆலயத்தின் அடித்தளங்களை உயர்த்திக் கட்டியபோது, எங்கள் இறைவா! எங்களிடமிருந்து (இப்பணியை) ஏற்பாயாக! நீயே நன்கு செவியுறுபவனும் நன்கறிந்தோனும் ஆவாய் (என்று பிரார்த்தனை செய்தார்கள்). (2: 127) 

இப்ராஹீம்-இஸ்மாயீல் (அலைஹிமஸ்ஸலாம்) இருவரும் ஆழ்ந்த மனத்தூய்மையுடனும் அல்லாஹ்வுக்குப்  பணிந்தும் இருந்தனர். அவ்விருவரும் அல்லாஹ்வுக்குச் செலுத்திய ஆழ்ந்த பணிவையும் நன்றிசெலுத்துதலையும் அவ்விருவரிடமிருந்து ஏற்றுக்கொள்ளுமாறு மிகுந்த தாழ்மையுடன் கோரினர். மேலும் அவ்விருவரும் கோரினர்: எங்கள் இறைவா! எங்களை உனக்குக் கட்டுப்பட்டவர்களாக ஆக்குவாயாக! எங்கள் வழித்தோன்றல்களுள் உனக்குக் கட்டுப்பட்ட ஒரு சமுதாயத்தாரையும் (உருவாக்குவாயாக)! எங்களுக்கு எங்களது வழிபாட்டு முறைகளைக் காட்டுவாயாக! எங்களை மன்னிப்பாயாக!  நீயே மிகவும் மன்னிப்போனும்  மிகுந்த கருணையாளனும் ஆவாய் (என்று பிரார்த்தனை செய்தார்கள்).

----------------அடிக்குறிப்பு------------------------

*1 (அ.கு.) பைத்துல் மஅமூர் என்பது ஏழாம் வானத்தில் வானவர்கள் முன்னோக்கித் தொழுகின்ற ஆலயமாகும். அதில் ஒவ்வொரு நாளும் எழுபதாயிரம் வானவர்கள் வந்து அல்லாஹ்வை வணங்குகின்றார்கள். பின்னர்அவர்கள் மறுமை நாள் வரை ஒருபோதும் அங்கு மீண்டும் வரவே மாட்டார்கள்.


அரபி:           அல்பிதாயா வந்நிஹாயா (இமாம் இப்னு கஸீர்- ரஹ்) 
தமிழாக்கம்: நூ. அப்துல் ஹாதி பாகவி M.A., M.Phil.

கருத்துகள் இல்லை: