புதன், 9 மார்ச், 2011

கண்ணீர்க் கடிதம்


இன்று இஸ்லாமியச் சமுதாயத்தின் நலனுக்காகப் பாடுபட பல்வேறு முஸ்லிம் கட்சிகள் இருந்தாலும் இஸ்லாமிய மக்களுக்காகப் பாடுபட வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் முதன் முதலில் தொடங்கப்பட்ட கட்சி முஸ்லிம் லீக் என்று அனைவருக்கும் தெரியும். 1948-ஆம் வருடம் மார்ச் மாதம் 10ஆம் தேதி சென்னை இராஜாஜி மண்டபத்தில் கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் முஹம்மது இஸ் மாயீல் அவர்களால் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தொடங்கப்பட்டது.

கண்ணியத்துக்குரிய காயிதே மில்லத் அவர்கள் இருந்த வரை முஸ்லிம் லீக் கட்சிக்கு பெருமதிப்பும் மரியாதையும் இருந்தன. அவர்களின் மறைவுக்குப் பிறகு அப்துஸ் ஸமது, அப்துல் லத்தீப், பனாத்வாலா உள்ளிட்டோர் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கை வழிநடத்திச் சென்றனர். ஆனால் தற்போது முஸ்லிம் லீக் கட்சி சிதறுண்டு கிடக்கிறது.

இக்கட்சி என்னுடைய தாத்தா காயிதே மில்லத் அவர்களால் தொடங்கப்பட்டது. எனவே அவர்களுக்குப் பிறகு இக்கட்சியின் தலைமைப் பொறுப்பு எனக்கே உரியது என்று கூறி தாவூத் மியாகான் தொடுத்துள்ள வழக்கு உச்சநீதி மன்றத்தில் உள்ளது. இதனால் முஸ்லிம் லீக் கட்சி தற்போது `இல்லாத கட்சியாகவே அரசியல் தலைவர்களால் கருதப்படுகிறது.

இதனால்தான், இன்று திமுகவுடன் கூட்டணி சேர்ந்துள்ள பல கட்சிகள் தமக்கென நிறையத் தொகுதிகளைக் கேட்டுப் பெறுகின்றன. ஈராண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட கொ.மு.க. கூட 7 தொகுதிகளைப் பெற்றுள்ளது. ஆனால் முஸ்லிம் லீக் கட்சிக்கு இரண்டே இரண்டு தொகுதிகளே ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த இழிநிலைக்குக் காரணம் என்ன? இதற்கு யார் பொறுப்பேற்றுக்கொள்வார்?

சமுதாயத்திற்காகப் பாடுபட வேண்டும் என்ற எண்ணம் அற்றுப் போனதால்தான் நம்மிடையே பதவிச் சண்டைகள் மேலோங்குகின்றன; பிரிவினைகள் தோன்றுகின்றன; இறுதியில் நீதி மன்றப் படிக்கட்டுகளை மிதிக்க வேண்டிய நிலை ஏற்படுகின்றது. ஒற்றுமை எனும் கயிற்றைப் பற்றிப் பிடிக்காததால் நம்மைக் கூறுபோடும் சக்திகளுக்கு நாம் இரையாகிக் கொண்டிருக்கிறோம் என்பதை எப்போது உணரப்போகிறோம்?

70 இலட்சத்துக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் வாழ்கின்ற தமிழ்நாட்டில் சட்டப் பேரவைத் தொகுதியில் அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட தொகுதிகள் இரண்டே இரண்டு என்றால் என்ன நியாயம்? இதற்குத் தீர்வு என்னவெனில், நீதிமன்றத்தில் உள்ள வழக்கைத் திரும்பப் பெற்றுக்கொண்டு ஒரே அணியாக முஸ்லிம் லீக் உருவாக வேண்டும். அல்லாஹ்வுக்காக மனக்கசப்புகளை மறந்து ஓரணியில் ஒன்றிணைய வேண்டும். முஸ்லிம் லீக் தனக்கென ஒதுக்கப்பட்டுள்ள பிறைச் சின்னத்தில் போட்டியிட வேண்டும். அப்போதுதான் முஸ்லிம்களின் பிரதிநிதிகள் சட்டப்பேரவையில் மிகுதியாக முடியும். நம் சமுதாயத்தின் முன்னேற்றத்திற்காகக் குரல்கொடுக்க முடியும்.

இரண்டு நபர்களுடைய மனக்கசப்பின் காரணமாக இஸ்லாமியச் சமுதாயம் இதுவரை இழந்தது போதும். இனியாகிலும் ஒரு முடிவு ஏற்பட முடிந்தவரை முயல்வோம். அல்லாஹ் அதற்கான வழியை ஏற்படுத்துவான். இன்ஷா அல்லாஹ்.

கருத்துகள் இல்லை: