ஞாயிறு, 21 ஜூலை, 2024

அன்பை விதைப்போம்!

 

-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.

 

இன்றைய செயற்கை நுண்ணறிவு யுகத்தில் எங்கு நோக்கினும் வன்மம், பகைமை, பொறாமை, கோபம் முதலானவையே பெரும்பாலான மனிதர்களிடம் பரவலாகக் காணப்படுகின்றன. அன்பு, சாந்தம், பொறுமை, சகிப்புத்தன்மை முதலான இனிய பண்புள்ளோரைக் காண்பது அரிதிலும் அரிதாக உள்ளது.

 

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கோபமும் வன்மமுமே ஆட்கொண்டுள்ளன.  யாரிடமும் அன்பு இருப்பதாகத் தெரியவில்லை. மனித நெஞ்சங்களில் அன்புக்குப் பஞ்சம் ஏற்பட்டுள்ளதை நம் அன்றாட வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் காணநேரிடுகிறது.

 

பெற்றெடுத்த தாய்-தந்தைமீது பிள்ளைகளுக்கு அன்பில்லை; உடன்பிறந்த சகோதர சகோதரிகளுக்குத் தம்முடன் பிறந்த சகோதர சகோதரிகள்மீது அன்பில்லை; மணந்துகொண்ட கணவன்மீது மனைவிக்கு அன்பில்லைமனைவிமீது கணவனுக்கு அன்பில்லை; காதலிமீது காதலனுக்கு அன்பில்லை; காதலன்மீது காதலிக்கு அன்பில்லை; மருமகளுக்கு மாமியார்மீது அன்பில்லை; மருமகள்மீது மாமியாருக்கு அன்பில்லை; சிறுவர்கள் மீது பெரியவர்கள் அன்பு காட்டுவதில்லை; பெரியவர்களுக்குச் சிறுவர்கள் மரியாதை செலுத்துவதில்லை. ஆக எங்கு நோக்கினும் அன்புக்குப் பஞ்சம் ஏற்பட்டுள்ளது.   

 

எல்லோருக்கும் சுயநலமே மிகுந்து போய்விட்டது.  நான் நல்லா இருந்தால் போதும்; பிறர் பற்றிய நலனில் எனக்கு எந்த அக்கறையும் இல்லை எனும் போக்கில் பலர் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். ஒருவர் பிறர்மீது அன்பு காட்ட வேண்டுமென்றால் மறுமையைப் பற்றிய நம்பிக்கையும் அல்லாஹ் அதற்கான பிரதிபலனை இம்மையிலும் மறுமையிலும் வழங்குவான் என்ற எதிர்பார்ப்பும் அவரின் மனத்தில் வேரூன்றி இருக்க வேண்டும். அத்தகைய ஒருவரால்தான் இவ்வுலகில் வாழுகின்ற அனைவர்மீதும் அன்பு காட்ட முடியும்.

அல்லாஹ்விற்காகப் பிறரை நேசிப்போர் மிகவும் குறைந்துபோய்விட்டனர். ஆனால் அதன் சிறப்பையும் மேன்மையையும் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியுள்ளதைப் பாருங்கள்.

 

அல்லாஹ் மறுமை நாளில், “என்னைக் கண்ணியப்படுத்துவதற்காக ஒருவரையொருவர் நேசித்துக் கொண்டவர்கள் எங்கே? எனது நிழலைத் தவிர வேறு நிழலில்லாத இன்றைய நாளில் அவர்களுக்கு நான் எனது நிழலில் நிழலளிக்கிறேன்என்று கூறுவான். (முஸ்லிம்: 5015) அல்லாஹ்விற்காகப் பிறரை நேசிக்கும்போது அவன் நாளை மறுமையில் நமக்கு அவனது நிழலைத் தர முன்வருகிறான் என்றால் அது எவ்வளவு உயர்வானது என்பதை நாம் உணர வேண்டும்.

 

கூட்டுக் குடும்பம் ஒன்றில் அண்ணன்-தம்பிகள் என மூன்று குடும்பத்தினர் ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர். அம்மூவரின் வருமானத்தில் ஏற்றத்தாழ்வு ஏற்படுகிறது. அதனால் அவர்கள் மாதந்தோறும் வழங்கும் தொகையில் வேறுபாடு உள்ளது. ஒருவர் கூடுதலாகக் கொடுப்பார்; மற்றொருவர் குறைவாகக் கொடுப்பார். அவர்களுள் ஒருவருக்கு இரண்டு பிள்ளைகள், மற்றொருவருக்கு மூன்று பிள்ளைகள், ஒருவருக்குப் பிள்ளை இல்லை. இப்போதுதான் அவர்கள் மத்தியில் சுயநலம் தலைதூக்குகிறது. நான் ஏன் அதிகமாகக் கொடுக்க வேண்டும்? நான் ஒருவன்தானே? என்று தம்பி கேட்கத் தொடங்கியதால் சிக்கல் உண்டானது. அதுவே அக்குடும்பம் தனித்தனியாகப் பிரிவதற்குக் காரணமானது. என்னுடைய அண்ணனும் தம்பியும்தானே என் பணத்தில் சாப்பிடுகிறார்கள் என்ற தயாளச் சிந்தனை வரவேண்டிய இடத்தில், என்னுடைய பணத்தில் அவர்கள் சாப்பிடுவதா, என் உழைப்பில் அவர்கள் வாழ்வதா என்ற சுயநலச் சிந்தனை தலைதூக்கியதால் கூட்டுக் குடும்பம் சிதறுண்டது. இத்தகைய சிந்தனையுடையோர்  எவ்வாறு ஏழைகளுக்கும் இல்லாதோருக்கும் தர்மம் செய்வார்கள்?

 

தன்னைவிடப் பிறரின் தேவையைத்தான் முற்படுத்த வேண்டும் என்ற அன்பின் மேலீட்டால்தானே நபியவர்களின் காலத்தில், ஒரே ஓர் ஆட்டுத்தலை ஏழு வீடு சுற்றி வந்ததுதம்மைவிடப் பிறர் நலன்தான் முக்கியம் என்ற சிந்தனைதானே, போர்க்களத்தில் வெட்டுண்டு குற்றுயிராகக் கிடந்த ஒருவர் தண்ணீர் கேட்ட நேரத்தில், அதைக் கொண்டுவந்தவரிடம், தமக்கு அருகே மற்றொருவர் தண்ணீர் கேட்டதை அறிந்து, “அவருக்குக் கொடுங்கள்என்று சைகை செய்யத் தூண்டியது? இதுதானே அன்பின் வெளிப்பாடு? இத்தகைய சமூகத்தில் பிறந்த நமக்கு, சுயநலச் சிந்தனை ஏற்படலாமா?

 

தந்தை இறந்தபின் அவர் விட்டுச் சென்ற நிலம், அண்ணன்-தம்பி இருவருக்கும் பாகப் பிரிவினை செய்யப்படுகிறது. அதில் முற்பகுதியை அண்ணன் எடுத்துக்கொண்டு பின்னால் உள்ள பகுதியைத் தன் தம்பிக்குக் கொடுத்தான். அப்போது அவ்விருவருக்கிடையே பிரச்சனை ஏற்பட்டது. சாலையின் முற்பகுதியில் உள்ளதை உனக்கு எடுத்துக்கொண்டு, பிற்பகுதியை எனக்கு ஒதுக்கிவிட்டாயா? இதை நான் ஏற்க முடியாது என்று தம்பி சண்டைபோடுகிறான். இங்கு எங்கே அன்பு உள்ளது? இருவரும் தத்தமது நலத்தைத்தானே நாடுகிறார்கள்? இருவரும் கலந்து ஆலோசனை செய்து, எது உனக்கு வேண்டும் என்று ஒருவருக்கொருவர் கேட்டுக்கொண்டு, இருவரும் மனத்திருப்தியோடு பிரித்துக்கொண்டிருந்தால் பிரச்சனை இருந்திருக்காது.

 

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்: உங்களுள் ஒருவர் தமக்கு விரும்புவதையே தம் சகோதரனுக்கும் விரும்பாத வரை (முழுமையான) இறைநம்பிக்கை கொண்டவர் ஆக மாட்டார். (புகாரீ: 13) தமக்கு விரும்புவதைத் தம் சகோதரருக்கே விரும்பாத ஒருவர் எப்படி அதைப் பிறருக்கு விரும்புவார்? தம் சகோதரரே நன்றாக இருக்கட்டும் என்று எண்ணாதவர் எப்படிப் பிறர் நன்றாக இருக்கட்டும் என்று எண்ணுவார்?  

 

பெற்றெடுத்த தாய்-தந்தைமீது பிள்ளைகளுக்கு அன்பில்லை என்பதைப் பற்பல குடும்பங்களில் கண்டுவருகிறோம். பிள்ளைகள் மூவர் இருக்கின்றார்கள் என்றால், இந்த மாதம் என் வீட்டில், அடுத்த மாதம் உன் வீட்டில், அதற்கடுத்த மாதம் கடைசி மகன் வீட்டில் என நிர்ணயம் செய்துகொள்கிறார்கள்.  அதன்படி அந்த மூவரின் வீட்டிலும் மாறி மாறித் தங்கிவருகின்றார்கள். அப்போது அவர்களுள் யாராவது ஒருவருக்கு ஒரு மாதம் பொருளாதார நெருக்கடி என்றால், “இந்த மாதம் நீயே பார்த்துக்கொள்; நான் மிகவும் நொடித்துப் போயுள்ளேன்என்று கூறினால், அப்போதுதான் அவர்கள் மத்தியில் பிரச்சனை  வெடிக்கும். இதில் அவர்களுக்குப் பெற்றோர்மீது எங்கே அன்பு உள்ளது? எங்கே பாசம் உள்ளது?

 

 

மாமியாருக்கு மருமகள்மீதோ, மருமகளுக்கு மாமியார்மீதோ அன்பில்லை. சின்னச் சின்ன விஷயங்களுக்கெல்லாம் தம் மருமகளைத் திட்டித் தீர்ப்பதை மாமியார் தம் உரிமையாகக் கருதுகிறார்.  இன்னொரு வீட்டிலிருந்து தம் வீட்டிற்கு வாழ வந்தவளாயிற்றே, அவள் நிம்மதியாக வாழ்ந்துவிட்டுப் போகட்டுமே என்று நினைப்பதில்லை. அதுபோலவே ஒரு மருமகள் தன் மாமியாரிடம் மிகவும் வன்மையாக நடந்து கொள்கிறாள். கணவனை இழந்து, முதுமையின் கடைசிப் பொழுதில் வாழ்ந்து கொண்டிருக்கிற மாமியாருக்கு உரிய நேரத்தில் உணவு வழங்காமல் இழுத்தடிப்பது எவ்வளவு பெரிய கொடுமை? அவள் தன் மாமியாரைத் தன் தாயைப் போல் அன்பாகப் பார்த்திருந்தால் இவ்வாறு செய்வாளா?

 

இவ்வாறு எங்கு நோக்கினும் அன்புக்குப் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. அண்மையில் மதுரையில் ஒரு மத்ரஸாவில் தங்கிப் படித்துக் கொண்டிருந்த பதின்மூன்று வயதுச் சிறுவன் தன்னுடன் படித்துக்கொண்டிருந்த ஒன்பது வயதுச் சிறுவனைக் கத்தியால் குத்திக் கொலை செய்திருக்கிறான். பென்சில் சீவுவதற்கு பிளேடை எடுத்துச் சரியாகப் பயன்படுத்தத் தெரியாத வயதில் கத்தியை எடுத்துத் தன்னோடு படிக்கிறவனைக் கொலை செய்திருக்கிறான் என்றால், இந்தச் சமூகம் அவர்களுக்கு எதைக் கற்றுக்கொடுத்திருக்கிறது என்பதை நாம் புரிந்துகொள்ளலாம். பொறுமை, சகிப்புத்தன்மை, அன்பு, சக மனிதர்களை நேசித்தல் முதலான எதையும் கற்றுக்கொடுக்கவில்லை. வன்மம், கோபம், பழிதீர்த்தல் போன்றவற்றையே பார்த்து வளர்கின்ற பிள்ளைகளின் மனங்களிலும் அவை ஆழமாகப் பதிந்துவிடுகின்றன.

 

ஒருவர்மீது நமக்கு அன்பு ஏற்பட வேண்டுமானால் நமக்கு மன்னிக்கும் பண்பு மிகுதியாக இருக்க வேண்டும். தம் சகோதரர்கள் தமக்குப் பல்வேறு தொல்லைகள் கொடுத்தபோதும் அவற்றையெல்லாம் மன்னித்து, தம் சகோதரர்களுக்காக அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரிய இறைத்தூதர் யூசுஃப் அலைஹிஸ் ஸலாம் அவர்களைப் போன்ற மன்னிக்கும் பண்பு யாரிடமெல்லாம் இருக்கிறதோ, தம் சிறிய தந்தையைக் கொன்ற வஹ்ஷியையும் கொல்லத் தூண்டிய ஹிந்தாவையும் மன்னித்த இறைத்தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அன்பு நெஞ்சம் யாருக்கெல்லாம் இருக்கிறதோ அவர்களெல்லாம் இந்தப் புவியில் நிம்மதியாக வாழ்ந்து, அன்பையும் பாசத்தையும் மக்கள்மீது பொழிவார்கள். அத்தகையோரிடம் நட்பு வைத்துக்கொண்டு, அந்த நல்ல பண்புகளைக் கடைப்பிடித்து நாமும் அன்போடு வாழ்ந்து பிறரின் உள்ளங்களிலும் அன்பை விதைப்போம்.

=========================



புதன், 3 ஜூலை, 2024

விவாதமேடை (26. 06. 2024) தினமணி

 

________
#கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய உயிரிழப்புகளுக்குக் காவல்துறை மற்றும் பிற அரசுத்துறைகளின் மெத்தனமே காரணம் என்பதில் இருவேறு கருத்துகளுக்கு இடமில்லை. ஏற்கெனவே #தினமணி ஆசிரியர் சொன்னதுபோல், கடந்த காலங்களில் மது விற்பனையைத் தனியார் செய்து வந்ததால், அதன் முதலாளிகள் அவ்வப்போது காவல்துறையைக் கவனித்துக்கொண்டனர். ஆனால் தற்போது அரசாங்கமே மது விற்பனை செய்வதால் #காவல்துறையைக் கவனிப்பார் இல்லை. எனவே அவர்கள் கள்ளச்சாராய விற்பனையைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டால், அதன் முதலாளிகள் அவர்களைக் கவனித்துக்கொள்வார்கள். இதுதான் நிதர்சன உண்மை. கள்ளச் சாராய விற்பனை கள்ளக்குறிச்சியில் மட்டுமின்றிப் பல்வேறு ஊர்களிலும் நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கிறது. அதிகமான உயிரிழப்புகள் ஏற்பட்டதால் இப்போது இந்த ஊர் ஊடகக் கண்ணுக்குத் தெரிகிறது. ஆக காவல்துறை நினைத்தால் கள்ளச்சாராய விற்பனை, போதைப் பொருள்கள் விற்பனை, கள்ளக் கடத்தல் உள்ளிட்ட குற்றச் செயல்களைத் தடுத்து நிறுத்தலாம்.

- நூ. அப்துல் ஹாதி பாகவி
பட்டினப்பாக்கம், சென்னை-28
====================




https://www.facebook.com/abdul.hadi.986227


திங்கள், 24 ஜூன், 2024

நாய் வளர்க்கலாமா?

 

-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.

இமாம் மதீனா பள்ளிவாசல், பட்டினம்பாக்கம் சென்னை-28 

 

இன்றைய நவீனக் காலத்தில் நாய் வளர்ப்பது ஒரு பொழுதுபோக்காக மாறிவருகிறது. கடந்த காலங்களில் ஆடு, மாடு, கோழி ஆகியவற்றை வளர்த்து வந்தார்கள். அதனால் அம்மக்கள் தாமும் பயன்பெற்று பிறரும் பயன்பெறுமாறு செய்துவந்தார்கள். அவற்றின்மூலம் வருமானத்தையும் ஈட்டினார்கள். ஆடு, மாடுகளின் மூலம் பால் விற்பனையும், கோழிகள் மூலம் முட்டை விற்பனையும் நடைபெற்றன. அத்தோடு அவற்றின் மூலம் மனிதர்களுக்குத் தொல்லை எதுவும் இருந்ததில்லை. ஆனால் இன்று நகரங்களில் வசிப்போர் பலர் தம் வீடுகளில் அயல்நாட்டு நாய்களை வாங்கி வளர்க்கின்றார்கள். அவற்றோடு தம் பொழுதுகளைக் கழிக்கின்றார்கள். அதனால் மக்களுக்கு எந்தப் பயனும் இல்லை. மாறாக அந்த நாய்களால் பொதுமக்களுக்குத் தொல்லைதான் ஏற்படுகிறது.

 

அண்மைக்காலமாக நாம் நாளிதழ்களில் நாய்க்கடி குறித்த செய்திகளை அதிகமாகக் காண்கிறோம். நாய் கடித்து சிறுவர் பலி, ‘நாய் கடித்து சிறுமி மருத்துவமனையில் அனுமதி என்பதே அன்றாடச் செய்தி. வீட்டுக்குள்ளேயே வளரும் நாயை வெளியே அழைத்து வரும்போது, மனிதர்களைப் பார்த்துப் பீதியடைகிறது; அச்சம் கொள்கிறது. எல்லோரையும் அந்நியர்களாகக் காண்கிறது. எனவேதான் தன் அருகில் வருவோரைத் திடீரெனத் தாக்கிவிடுகிறது; கடித்துவிடுகிறது. எனவே தெரு நாய்களைவிட, வீட்டு வளர்ப்பு நாய்களே மனிதர்களுக்கு மிகவும் ஆபத்தானவை.

 

வானவர்களின் வருகை தடைபடுதல்: வானவர்கள்மூலமே அல்லாஹ் ஒவ்வொரு கட்டளையையும் செயல்படுத்துகிறான்; மனிதர்களின் தேவைகளை நிறைவேற்றுகிறான். அதன்படி ஒரு வீட்டிற்குக் கிடைக்க வேண்டிய அருள்வளம் (பரக்கத்), வாழ்வாதாரம் (ரிஸ்க்) உள்ளிட்டவை வானவர்கள்மூலமே வழங்கப்படுகின்றன. நாயும் உருவப் படமும் உள்ள வீட்டில் வானவர்கள் வருவதில்லை என்பதால் அவ்வீட்டிற்குக் கிடைக்க வேண்டிய வாழ்வாதாரம், அருள்வளம் முதலானவை தடைபடுகின்றன என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். 

ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா கூறியதாவது: வானவர் ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் ஒரு (குறிப்பிட்ட) நேரத்தில் வருவதாக வாக்களித்திருந்தார்கள். ஆனால், அந்த நேரம் வந்தும் ஜிப்ரீல் வரவில்லை.

 

அப்போது அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது கையில் குச்சியொன்று இருந்தது. அதை அவர்கள் தூக்கியெறிந்துவிட்டு, “அல்லாஹ் தனது வாக்குறுதிக்கு மாறு செய்ய மாட்டான். அவனுடைய தூதர்களும் வாக்குறுதிக்கு மாறு செய்ய மாட்டார்கள்'' என்று கூறினார்கள். பின்னர் திரும்பிப் பார்த்தபோது, தமது கட்டிலுக்குக் கீழே நாய்க்குட்டியொன்று இருப்பதைக் கண்டார்கள்.

 

உடனே ஆயிஷா! இந்த நாய் இங்கு எப்போது நுழைந்தது?'' என்று கேட்டார்கள். நான், “அல்லாஹ்வின் மீதாணையாக! எனக்குத் தெரியவில்லை'' என்றேன். உடனே அதை அப்புறப்படுத்துமாறு உத்தரவிட்டார்கள். அவ்வாறே அப்புறப்படுத்தப்பட்ட பின் ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் வந்தார்கள்.

 

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், “நீங்கள் வருவதாகச் சொன்னீர்கள். உங்களுக்காக நான் (எதிர்பார்த்து) அமர்ந்திருந்தேன். ஆனால், நீங்கள் வரவில்லையே (ஏன்)?'' என்று கேட்டார்கள்.

 

அதற்கு ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம், “உங்கள் வீட்டினுள்ளிருந்த நாயே என(து வருகை)க்குத் தடையாக அமைந்துவிட்டது. (வானவர்களாகிய) நாங்கள் நாயும் உருவப்படமும் உள்ள வீட்டிற்குள் நுழையமாட்டோம்'' என்று சொன்னார்கள். (முஸ்லிம்: 4272)

 

நாய் வளர்த்தால் நன்மை குறையும்: ஒரு மனிதன் செய்துவரும் செயல்கள் யாவும் அவனுடைய வலப்பக்கமும் இடப்பக்கமும் உள்ள வானவர்களால் பதிவுசெய்யப்படுகின்றன. அவ்வாறு பதிவு செய்யப்பட்டுள்ள நன்மைகளிலிருந்து, நாய் வளர்ப்பவரின் நன்மைகள் ஒரு கீராத் (உஹுது மலை) அளவு குறைந்து விடுவதாக நபியவர்கள் கூறியுள்ளார்கள். இரண்டு கீராத் அளவு குறைந்து விடுவதாக மற்றொரு செய்தியும் உள்ளது.

 

கால்நடையைப் பாதுகாப்பதற்காகவோ, வேட்டையாடுவதற்காகவோ அல்லாமல் யார் நாய் வைத்திருக்கின்றாரோ அவருடைய நற்செயலி(ன் நன்மையி)லிருந்து ஒவ்வொரு நாளும் இரண்டு "கீராத்'கள் அளவு குறைந்துவிடும் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். (புகாரீ: 5480)

 

நாய் வளர்ப்பவரின் நாயால் மக்களுக்குத் தொல்லை அதிகமானால் இரண்டு கீராத் குறையும் என்றும் தொல்லை குறைவாக இருந்தால் ஒரு கீராத் குறையும் என்றும் மார்க்க அறிஞர்கள் இவ்விரண்டு நபிமொழிகளுக்கும் விளக்கமளிக்கின்றார்கள்.

 

மூன்று காரணங்களுக்காக: ஒருவர் தம் கிராமத்தில் விவசாயம் செய்துவருகிறார்; அந்த வேளாண்மையைப் பாதுகாப்பதற்காக அவர் நாயைக் காவலுக்கு வைத்திருக்கிறார் எனில், அவர் அவ்வாறு அதைப் பயன்படுத்துவது கூடும். ஒருவர் தம்முடைய கிராமத்தில் ஆடு, மாடுகளை வளர்க்கிறார். அவற்றைத் திருடர்களிடமிருந்தும் ஓநாய்களிடமிருந்தும் பாதுகாப்பதற்காக நாயை வளர்க்கிறார் என்றால் அதற்கு இஸ்லாம் அனுமதி வழங்குகிறது.  மூன்றாவதாக, ஒருவர் வேட்டையாட அனுமதிக்கப்பட்ட நாட்டில் வசிக்கிறார்; முயல், மான் உள்ளிட்ட  உண்ணத்தகுந்த பிராணிகளை வேட்டையாடுவதற்காக நாயை வளர்த்தால் குற்றமில்லை. ஆக இந்த மூன்று வகையான தேவைகளுக்காக நாயை வளர்க்கலாம் என்று நபிமொழிகளில் நாம் காண்கிறோம்.

 

மேற்கண்ட நபிமொழியின் கருத்துப்படி அறிஞர்கள் பலர், நபியவர்கள் கூறிய காரணங்களைத் தாண்டி மற்ற எதற்காகவும் நாயை வளர்க்கக்கூடாது என்று கூறுகின்றார்கள். அறிஞர்கள் சிலர் பாதுகாப்பு உள்ளிட்ட தேவையைக் கருதி நாய் வளர்க்கலாம். எந்தத் தேவையுமில்லாமல் நாய் வளர்க்கக்கூடாது என்கின்றார்கள்.

 

இமாம் நவவீ ரஹிமஹுல்லாஹ் முஸ்லிம் நூலின் விரிவுரையில் கூறியுள்ளதாவது: வீடுகளையும் பாதைகளையும் பாதுகாப்பதற்காக நாயை வளர்க்கலாமா என்ற கேள்விக்கு, ஹதீஸ்களின் வெளிப்படையான கருத்துப்படி வளர்க்கக்கூடாது என்பதுதான் சரி. இருப்பினும் ஹதீஸ்களில் கூறப்பட்டுள்ள காரணங்களை ஒப்பிட்டு ஆய்வு செய்கிறபோது, மனிதர்களின் தேவையே அவற்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் அவற்றைப் பாதுகாக்கவும் நாய் வளர்க்கலாம் என்பதே மிகச் சரியானது.

 

தற்காலத்தில் காவல் துறையில் நாய் வளர்க்கப்படுகிறது. நாய்க்கு மோப்ப ஆற்றல் மிகுதி. அது தனது மோப்ப ஆற்றலால் திருடர்களைக் கண்டுபிடித்துவிடுகிறது. எனவே அது காவல்துறையில் மோப்ப நாயாக ((Sniffer dog)) பயன்படுத்தப்படுகிறது. அந்த வகையில் காவல்துறையில் பணியாற்றுகிற முஸ்லிம் ஒருவர், அத்தகைய நோக்கத்திற்காக நாய் வளர்த்தால் அல்லது அதற்கு உணவு வழங்கினால் அது குற்றமில்லை. அவரே அதற்குப் பயிற்சியாளராக இருந்தாலும் குற்றமில்லை. 

 

நாய் வாய்வைத்த பாத்திரம்: நாயின் எச்சிலில் மனிதனுக்கு இடர்தரும் நச்சுக்கிருமிகள் உள்ளன. நாய் ஒருவரைக் கடித்துக் காயப்படுத்திவிட்டால், அதன் பற்கள் பட்ட இடத்தில் அந்தக் காயத்தின் வழியாக நச்சுக் கிருமிகள் உடலுக்குள் ஊடுருவி விடுகின்றன. அந்தக் கிருமிக்கு ரேபீஸ் (Rabies) என்று பெயர். காயம்பட்ட இடத்தை சோப்பு போட்டு அல்லது மஞ்சள் கலந்த நீரால் நன்றாகக் கழுவிச் சுத்தம் செய்துவிட்டு, அதன்பிறகு மருத்துவரைச் சந்திக்க வேண்டும். இதனால் அந்தக் கிருமிகள் உடலுக்குள் ஊடுருவுவதை உடனடியாகத் தடுத்துவிட முடியும்.

 

நாயின் எச்சிலில் இவ்வளவு தீங்குகள் உள்ளன என்பதை அண்மைக் காலத்தில்தான் அறிவியல் அறிஞர்கள் கண்டறிந்தனர். ஆனால் அறிவியல் அறிவு மனிதனுக்கு எட்டாத காலத்திலேயே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மனித சமுதாயத்திற்கு நல்வழி காட்டியுள்ளார்கள்.

 

நாய் வாய்வைத்துவிட்ட உங்களது பாத்திரத்தைச் சுத்தம் செய்யும் முறை யாதெனில், அதை ஏழு தடவை தண்ணீரால் கழுவுவதாகும். முதல் தடவை மண்ணிட்டுக் கழுவ வேண்டும் என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். (முஸ்லிம்: 279/ 471) வெறி நாயோ தெரு நாயோ, வீட்டில் வளர்க்கும் நாயோ, பூனையோ, எலியோ கடித்த இடத்தைத் தண்ணீரில் 7 முதல் 10 தடவை வரை சோப்பு போட்டுக் கழுவ வேண்டும் என்று இன்றைய மருத்துவர்கள் கூறுகின்றார்கள்.

 

நாயை விற்கலாமா?: மக்கள் நாயை வளர்த்து வருவதால் அது இன்று விற்பனைப் பொருளாக மாறிவருகிறது.  ஆனால் ஒரு முஸ்லிமைப் பொருத்த வரை, நாயை விற்பனை செய்து பொருளீட்டுவது கூடாது. அது அவருக்குத் தடை செய்யப்பட்டதாகும். அது குறித்து நபியவர்கள் கூறியுள்ள செய்தி புகாரீ எனும் நபிமொழித் தொகுப்பு நூலில் பதிவுசெய்யப்பட்டுள்ளது: நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், நாய் விற்ற கிரயத்தையும் இரத்தத்தின் கிரயத்தை (குருதி உறிஞ்சி எடுப்பதற்காகப் பெறுகின்ற கூலியை)யும் தடைசெய்தார்கள்...என்று அபூஜுஹைஃபா ரளியல்லாஹு அன்ஹு கூறினார்கள். (புகாரீ: 2086)

 

நாயைக் கொல்லுங்கள்: மனிதர்களுக்கு இடையூறும் தொல்லையும் தரக்கூடிய நாய்களைக் கொல்லுங்கள் என்பதே நபியவர்களின் வழிகாட்டல் ஆகும். மிருக வதைத் தடுப்புச் சட்டம்-1960 என்ற சட்டத்தைக் காட்டி  மிருக வதைத் தடுப்பு இயக்கத்தினர் உயிரினங்களைக் கொல்வதை, குறிப்பாக நாய்களைக் கொல்வதைத் தடைசெய்கின்றனர். அதனால் மனிதர்களுக்கு எவ்வளவு இடையூறும் தொல்லைகளும் அன்றாடம் ஏற்படுகின்றன என்பதை அந்த இயக்கத்தைச் சேர்ந்தோர் பொருட்படுத்துவதில்லை.

 

அதேநேரத்தில் எல்லா நாய்களையும் கொல்லுங்கள் என்று நபியவர்கள் கூறவில்லை. மாறாக அதில் கருப்பு நாய்களை மட்டும் கொல்லச் சொல்லியுள்ளார்கள். அது குறித்து நபியவர்கள் சொன்ன செய்தி இப்னுமாஜா நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது: திண்ணமாக நாய்கள் சமுதாயங்களுள்  ஒரு சமுதாயமாக இல்லையென்றால் அவற்றைக் கொல்லுமாறு நான் ஏவியிருப்பேன். எனவே அவற்றுள் கருப்பு நாய்களைக் கொல்லுங்கள்...என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். (இப்னுமாஜா: 3205/ 3196)

 

நாம் தெருக்களில் நடந்து செல்லும்போது வெறிபிடித்த நாய் நம்மைத் துரத்தும்; அதுபோன்ற வெறிபிடித்த நாய், கருப்பு நாய் ஆகியவற்றைக் கொல்லலாம் என்பதே இந்த ஹதீஸ் மூலம் தெரியவருகிறது. கருப்பு நாயைக் கொல்லச் சொன்னதற்கான காரணமென்ன என்று நபியவர்களிடம் கேட்கப்பட்டபோது, “அது ஷைத்தான் ஆகும் என்று கூறினார்கள். (இப்னுமாஜா: 3210/ 3201) அதாவது ஷைத்தானின் குணம் அதில் அதிகமாகக் காணப்படுகிறது.

 

தொல்லைதரும் நாயைக் கொல்லச் சொன்ன இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்தாம் உயிரினங்கள் மீது அன்பு காட்டவும் வழிகாட்டியுள்ளார்கள். அந்த வகையில் ஒரு நாய்க்கு ஒரு முஸ்லிம் தண்ணீர் வைத்தாலும் அதன் காரணமாகக்கூட அவர் சொர்க்கம் செல்ல முடியும் என்று கூறியுள்ளதன் மூலம் ஆர்வமூட்டியுள்ளார்கள்.

 

ஒரு நாய் தாகத்தால் (தவித்து) ஈர மண்ணை (நக்கி) உண்டுகொண்டிருப்பதை ஒரு மனிதர் பார்த்தார். உடனே அவர் (தாம் அணிந்திருந்த) காலுறையை எடுத்து அதில் தண்ணீர் மொண்டு அந்நாய் தாகம் தீரும் வரை கொடுத்தார். எனவே அல்லாஹ், அவருடைய நற்செயலைப் பாராட்டி அங்கீகரித்து அவரைச் சொர்க்கத்தில் நுழையச்செய்தான் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். (புகாரீ: 173)

 

ஆக தொல்லைதரும் நாய்களிடமிருந்து  நாம் எச்சரிக்கையாக இருந்துகொள்வதோடு நம் பிள்ளைகளையும்  கவனமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும்; வளர்ப்பு நாய்களிடம் சற்றுத் தூரமாகவே இருந்துகொள்வது நல்லது.  அதேநேரத்தில் கோடைக் காலத்தில் நாய், ஆடு, மாடு, பறவைகள் உள்ளிட்டவை நாவறண்டு தண்ணீருக்காக அலையும். எனவே அவற்றின்மீது இரக்கம் கொண்டு, அவற்றுக்குத் தண்ணீர் வைப்பதன்மூலம் இறையன்பைப் பெற்று இனிய சொர்க்கம் அடைவோம்.

==============================










செவ்வாய், 18 ஜூன், 2024

யார் மாற்றுவார்? எப்போது மாற்றுவார்?

 


===========

ஊர் ஊராய்ச் சுற்றிவரும்

உயர்மதிப்பு பணத்தாளை

நைலான் தாளாக 

யார் மாற்றுவார்?

எப்போது மாற்றுவார்?

 

கருவாட்டுக் கடையேறி

மீன்கடைக்குள் புகுந்து

வடைசுட்டு விற்கும்

பாட்டியின்

சுருக்குப் பையில் கசங்கி

பெண்கள் பலரின் 

முந்தானையில் சுருங்கிவரும்

உயர்மதிப்பு பணத்தாளை

நைலான் தாளாக 

யார் மாற்றுவார்?

எப்போது மாற்றுவார்?

 

 

பலப்பல கைகள் மாறி

பாரத நாட்டைச்

சுற்றிவரும்

அந்தத் தாள்

இந்தியாவின்

பொருளாதாரத்தைப்போல்.

சுருங்கி, கசங்கிக்

கிழிந்து கிடக்கிறது.

 

உயர்மதிப்பு பணத்தாளை

நைலான் தாளாக 

யார் மாற்றுவார்?

எப்போது மாற்றுவார்?

 

-நூ. அப்துல் ஹாதி பாகவி

18 06 2024





சனி, 15 ஜூன், 2024

இரத்தத்தைச் சுத்தப்படுத்துவோம்!

 

-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.

 

மனித உடல் முழுவதும் ஓடிக்கொண்டிருக்கும் குருதி தூய்மையாக இருந்தால்தான் அவனது உடல்  ஆரோக்கியமாக இருக்கும். குருதி கெட்டுவிட்டால் நோய் ஆக்கிரமித்துக்கொள்ளும். எனவே நாம் நம் குருதியைத் தூய்மையாக வைத்துக்கொள்ளும் வழிமுறைகளைத் தெரிந்துகொண்டு அதன்படி செயல்பட வேண்டும். நம் குருதியைத் தூய்மையாக வைத்துக்கொள்ள நபியவர்கள் என்னென்ன வழிமுறைகளைச் சொல்லியுள்ளார்கள் என்பதை அறிந்து அந்த வழிமுறைகளைக் கடைப்பிடித்தால் நாம் இறுதி வரை ஆரோக்கியமாக இருக்கலாம்.

 

குருதி குத்தி எடுத்துக்கொள்ளுதல்: நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் காலத்திற்கு முன்பே குருதி குத்தி எடுத்துக்கொள்ளும் சிகிச்சை முறையை அரபியர்கள் மேற்கொண்டு வந்துள்ளார்கள். அந்தச் சிகிச்சை முறையை நபியவர்கள் அங்கீகரித்ததுடன், தாமும் அந்தச் சிகிச்சையை மேற்கொண்டுள்ளார்கள். அது குறித்து அனஸ் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது: நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், “நீங்கள் எவற்றால் சிகிச்சை பெறுகிறீர்களோ அவற்றிலெல்லாம் சிறந்தது குருதி உறிஞ்சி எடுத்துக்கொள்வதும், வெண்கோஷ்டமும்தான்...’’ என்று சொன்னார்கள். (புகாரீ: 5696)

 

அது மட்டுமின்றி, வானவர்களே நபியவர்களிடம், அவர்களுடைய சமுதாய மக்களை இரத்தம் குத்தி எடுத்துக்கொள்ளக் கட்டளையிடுமாறு கேட்டுக்கொண்டார்கள். அது குறித்து நபிமொழி ஒன்று பதிவுசெய்யப்பட்டுள்ளது.  அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்: நான் விண்ணுலகப் பயணம் மேற்கொண்டபோது (வானவர்களுள்) ஒரு குழுவினரைக் கடந்து சென்றேன். அப்போது அவர்கள், “முஹம்மதே! குருதி குத்தியெடுத்துக்கொள்ளுமாறு உம்முடைய சமுதாயத்தாருக்கு ஏவுங்கள் என்று கூறாமல் (நான் கடக்கவே) இல்லை. (இப்னுமாஜா: 3479 / 3470)

 

அதாவது ஒருவர் இரத்தம் குத்தி எடுத்துக்கொள்வதால் அவருடைய உடலில் உள்ள கெட்ட இரத்தம் வெளியேறிவிடும்; அவருடைய இரத்தம் தூய்மையடையும்; பார்வை கூர்மையாகும்; இரத்த அழுத்தம் (பி.பீ.) குறையும்; இரத்த ஓட்டம் சீராகும். எனவே இந்தச் சிகிச்சையை நாம் மேற்கொள்வதால் பல்வேறு நன்மைகள் உள்ளன.

 

இரத்தத்தில் உள்ளவை: மனிதக் குருதியில் மூவகை முக்கியப் பொருள்கள் உள்ளன. அவை பிளாஸ்மா, சிவப்பணுக்கள், வெள்ளை அணுக்கள் ஆகும். பிளாஸ்மா என்பது திரவப்பகுதி ஆகும். சிவப்பணுக்கள்  நுரையீரலிலிருந்து மற்ற பகுதிகளுக்கு உயிர்வளியை (ஆக்ஸிஜனை) எடுத்துச் செல்கின்றன. வெள்ளை அணுக்கள் நோய்களை எதிர்த்துப் போராடுகின்றன.

 

இரத்த வகைகள்: அல்லாஹ் நுட்பமான படைப்பாளன் என்பதற்கு மனித உடலுக்குள் உள்ள இரத்தப் பிரிவுகள் ஒரு சான்றாகும். ஏ, ஏபி, பி, ஓ ஆகிய நான்கு வகைகள் உள்ளன. அவற்றுள் ஒவ்வொன்றிலும் பிளஸ், மைனஸ் என்ற பாகுபாடு உண்டு. ஆகவே அந்த நான்கு வகைகள் எட்டாகின்றன. இந்த எட்டு வகை இரத்தங்களுள்  சிலருக்குச் சில வகை பொருந்தும்; வேறு சிலருக்கு அவை பொருந்தா. ஒருவருக்கு விபத்து ஏற்பட்டு, மிகுதியான இரத்தம் வெளியேறிவிட்டால், அவருக்கு மற்றொருவர் இரத்தம் கொடுத்து உதவுகிறார். ஆனால் அந்த இரத்தம் அவருடைய உடலுக்கு ஏற்ற வகையைச் சார்ந்ததுதானா என்பதை ஆய்வு செய்துதான் அந்த இரத்தத்தை விபத்துக்குள்ளானவரின் உடலில் ஏற்றுவார்கள். தவறான வகை இரத்தம் ஒருவருக்கு ஏற்றப்பட்டால் அது அவருடைய உயிருக்கே ஆபத்தாக முடியலாம்.

 

இரத்தம் உறைதல்: ஒருவருக்குக் காயம் ஏற்பட்டுவிட்டால் அவரது உடலிலிருந்து உதிரம் வெளியேறும். ஆனால் அது சற்று நேரத்தில் நின்றுவிடும். அவ்வாறு நின்றுபோவதற்கான காரணம் அதில் உறைதல் தன்மை உள்ளதேயாகும். உறைதலுக்கான காரணம், அதிலுள்ள பைபிரினோஜென் எனும் பொருளாகும். உறைதல் தன்மை மட்டும் இல்லாதிருந்தால் உடலிலிருந்து எல்லாக் குருதியும் மடமடவென வெளியேறிவிடும். அதனால் மனிதன் இறந்துவிடும் நிலைகூட ஏற்படலாம். அல்லாஹ் நுட்பமான படைப்பாளன் என்பதற்கு இதுவும் ஒரு சான்றாகும்.

 

இரத்தம் அசுத்தமானது: இரத்தம் அசுத்தமானது என்பதால்தான் அதனை உட்கொள்வது நமக்குத் தடை செய்யப்பட்டுள்ளது. அல்லாஹ் கூறுகின்றான்: (இறைநம்பிக்கையாளர்களே!) தாமாகச் செத்தது, இரத்தம், பன்றியின் மாமிசம், அல்லாஹ் அல்லாத (வேறு) பெயர் கூறப்பட்டவை ஆகியவற்றைத்தான் அல்லாஹ் உங்களுக்குத் தடைசெய்துள்ளான். (2: 173) தாமாகச் செத்த பிராணியில் அதன் இரத்தம் அதனுள் தேங்கிவிடுவதால் அது தடைசெய்யப்பட்டது.

 

இரத்தம் உணவு ரீதியாகத் தடைசெய்யப்பட்டது என்பதற்கு மேற்கண்ட குர்ஆன் வசனம் ஆதாரமாகும். ஆன்மிக ரீதியாகவும் இரத்தம் அசுத்தமானதாகும். அது குறித்து ஒரு செய்தி இதோ.

அஸ்மா பின்த் அபீபக்ர் ரளியல்லாஹு அன்ஹா கூறியதாவது: ஒரு பெண்மணி, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து எங்களுள் ஒரு பெண்ணுடைய ஆடையில் மாதவிடாய் இரத்தம் பட்டு விட்டால், அவள் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டார். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் “(இரத்தம் பட்டுக் காய்ந்துவிட்ட) அந்த இடத்தைச் சுரண்ட வேண்டும்; பின்னர் அதைத் தண்ணீர்விட்டுக் கசக்கிக் கழுவ வேண்டும்; பின்னர் அந்தத் துணியுடன் தொழுதுகொள்ளலாம் என்று கூறினார்கள். (புகாரீ: 227)

 

இதயம்: இரத்தத்தை உந்தித் தள்ளும் பணியை இதயம் செய்துவருகிறது. இரத்த நாளங்கள் வழியாக அந்த இரத்தம் உடலின்  எல்லாப் பாகங்களுக்கும் சென்றுகொண்டே இருக்கிறது. இதயத்தின் பணி நிறுத்தப்பட்டால் இரத்த ஓட்டம் நின்றுபோய்விடும். இரத்த ஓட்டம் நின்றுபோய்விட்டால் மனிதன் மரணத்தையே தழுவுவான். இதையெல்லாம் உள்ளடக்கியவாறு அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஒரு செய்தியைச் சொல்லியுள்ளார்கள்: அறிந்துகொள்க: உடலில் ஒரு சதைத் துண்டு இருக்கிறது. அது சீர் பெற்றுவிட்டால் உடல் முழுவதும் சீர் பெற்றுவிடும். அது சீர்குலைந்துவிட்டால் முழு உடலும் சீர்குலைந்துவிடும். அறிந்துகொள்ளுங்கள்: அதுதான் உள்ளம். (புகாரீ: 52)   

 

இரத்தத்தைச் சுத்தப்படுத்துபவை: இரத்தம் தூய்மையாக இருந்தால் உடல் சீராக இயங்கும். உடல் ஆரோக்கியமாக இருக்கும். உடலிலுள்ள இரத்தம் கெட்டுப்போய்விட்டால் நோய் ஏற்படும். ஆகவே நம் உடலிலுள்ள இரத்தத்தைத் தூய்மையாக வைத்துக்கொள்ள நாம் என்னென்ன உட்கொள்ள வேண்டும் என்பது குறித்து நபியவர்கள் நமக்குத் தெளிவாக வழிகாட்டியுள்ளார்கள். அவற்றைப் பேணினால் நாம்  ஆரோக்கியத்தோடு வாழலாம். நீங்கள் இரண்டு நிவாரணிகளைக் கடைப்பிடியுங்கள்: (அவை) 1. தேன், 2. (திருமறைக்) குர்ஆன் என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்.  (இப்னுமாஜா: 3452/ 3443)

 

உங்கள் மருந்துகளுள் ஏதேனும் ஒன்றில் நன்மையேதும் இருக்குமானால் தேன் அருந்துதல், அல்லது குருதி உறிஞ்சும் கருவியால் (உடம்பில்) கீறி இரத்தத்தை வெளியேற்றுதல், அல்லது நெருப்பால் சூடிட்டுக்கொள்வதில்தான் அது இருக்கும். (ஆயினும்,) நான் சூடிட்டுக் கொள்வதை விரும்பவில்லை என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். (புகாரீ: 5702) குருதி குத்தி எடுத்துக்கொள்ளுதல், தேன் அருந்துதல் ஆகிய இரண்டு சிகிச்சை முறைகளை நபியவர்கள் வழிகாட்டியுள்ளார்கள். ஆக இரத்தத்தைச் சுத்தப்படுத்துவதற்கான இரண்டு வழிமுறைகளை நபியவர்கள் கூறியுள்ளார்கள். அது மட்டுமின்றி நபியவர்கள் தேனை விரும்பியுள்ளார்கள். ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா கூறியதாவது: நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இனிப்புப் பண்டத்தையும் தேனையும் விரும்பிவந்தார்கள். (புகாரீ: 5599)

 

ஆக நபியவர்கள் தேனை விரும்பியதன் நோக்கம், தேன் நம் உடலிலுள்ள இரத்தத்தைச் சுத்தப்படுத்தி, உடலைச் சீராக வைத்துக்கொள்ள உதவுகிறது. எனவே நம்முள் ஒவ்வொருவரும் அதனை உட்கொள்வது அவசியமாகும். தேனை அப்படியே உண்ண முடியாது. எனவே இளஞ்சூடான நீரில் அதனைக் கலந்து காலை, இரவு என இரண்டு தடவை அருந்துவதால் இரத்தம் தூய்மையடையும்; நோய்க் கிருமிகள் அழியும்.

உள்ளங்கையில் தேனை ஊற்றி, நாவால் சுவைத்து உமிழ்நீருடன் உட்கொள்வதால் சளி நீங்கும்; இரைப்பையின் மந்தநிலையைப் போக்கி, சுறுசுறுப்படையச் செய்யும்; கழிவுகளை வெளியேற்றும் என இப்னுல் கய்யிம் ரஹிமஹுல்லாஹ் ஸாதுல் மஆத் எனும் தமது நூலில் கூறியுள்ளார்.

 

இரத்தத்தை வெளியேற்றுதல்: கோழி, ஆடு, மாடு, ஒட்டகம் உள்ளிட்ட பிராணிகளின் இறைச்சிகளை உண்பதற்குமுன் அவற்றை, அல்லாஹ்வின் பெயர்கூறி அறுத்து, அதன் இரத்தத்தை வெளியேற்றிவிடுகிறோம். ஏனெனில் இரத்தத்தில் கிருமிகள் உள்ளன. அவை மனித உடலுக்கு ஊறு விளைவிக்கக்கூடியவை. எனவேதான் அவற்றிலிருந்து இரத்தத்தை வெளியேற்றிவிடுகிறோம்.

 

இறந்தவற்றையோ இரத்தத்தையோ சாப்பிடக்கூடாது. அவற்றை அல்லாஹ் தடைசெய்துள்ளான் என்பதை அல்பகரா அத்தியாயத்தின் 173ஆம் வசனத்தில் பார்த்தோம். மனித உடலுக்கு ஊறுவிளைவிக்கக்கூடியதையே அல்லாஹ் தடைசெய்துள்ளான் என்பதை நாம் உணர்ந்துகொள்ள வேண்டும். அதேநேரத்தில் அனுமதிக்கப்பட்ட இறந்தவையும் இரத்தங்களும் உள்ளன. அவற்றை உண்பதால் உடலுக்குத் தொல்லையோ தீங்கோ இல்லை. அதைப் பற்றித் தெரிந்துகொள்வோம். இறந்தவை இரண்டும் இரண்டு இரத்தங்களும் நமக்கு ஆகுமாக்கப்பட்டுள்ளன. அறிந்துகொள்க! இறந்தவை இரண்டு மீனும் வெட்டுக்கிளியுமாகும். அறிந்துகொள்க! இரண்டு இரத்தங்கள், கல்லீரலும் மண்ணீரலும் ஆகும் என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். (இப்னுமாஜா: 3314 / 3305)

 

இன்றைய இளைஞர்களும் இளைஞிகளும் துரித உணவு வகைகளை அதிகமாக உண்கின்றனர்.  அதில் அவர்கள் கேஎஃப்சி சிக்கனை அதிகமாக விரும்பி உண்கின்றார்கள். அந்தக் கோழியை யார் அறுத்தார் என்பது அவர்களுக்குத் தெரியுமா? முஸ்லிமா, முஸ்லிம் அல்லாதவரா? உரிய முறையில் பிஸ்மில்லாஹ்வும் தக்பீரும் சொல்லி அறுக்கப்பட்டனவா? என்பதையெல்லாம் கவனிப்பதில்லை. ஊறுவிளைவிக்கின்ற உணவுகளை மிகுதியாக உண்கின்ற இளைஞர்கள் பலர் மிகக் குறுகிய காலத்திலேயே மரணத்தைத் தழுவுகின்றனர் என்பது வருத்தத்திற்குரியது.

 

ஆகவே நம் இரத்தத்தைத் தூய்மைப்படுத்தக்கூடிய உணவுப் பொருள்களையும் மாதுளை உள்ளிட்ட பழங்களையும் உண்டு, ஹராம் எனத் தடைசெய்யப்பட்டதை விலக்கி வாழ்ந்தால் நாம் ஆரோக்கியமாக வாழலாம். ஒவ்வொரு நோய்க்கும் தனித்தனி மருந்து என்பது தேவையில்லை. இரத்தம் தூய்மையாக இருந்தாலே எல்லா நோய்களும் குணமாகிவிடும் என மனிதநேயமிக்க மருத்துவர்கள் கூறுகின்றார்கள். எனவே அதைத் தெளிவாகப் புரிந்துகொண்டு அதன்படி செயல்பட முனைவோம். 

======================================