திங்கள், 24 ஜூன், 2024

நாய் வளர்க்கலாமா?

 

-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.

இமாம் மதீனா பள்ளிவாசல், பட்டினம்பாக்கம் சென்னை-28 

 

இன்றைய நவீனக் காலத்தில் நாய் வளர்ப்பது ஒரு பொழுதுபோக்காக மாறிவருகிறது. கடந்த காலங்களில் ஆடு, மாடு, கோழி ஆகியவற்றை வளர்த்து வந்தார்கள். அதனால் அம்மக்கள் தாமும் பயன்பெற்று பிறரும் பயன்பெறுமாறு செய்துவந்தார்கள். அவற்றின்மூலம் வருமானத்தையும் ஈட்டினார்கள். ஆடு, மாடுகளின் மூலம் பால் விற்பனையும், கோழிகள் மூலம் முட்டை விற்பனையும் நடைபெற்றன. அத்தோடு அவற்றின் மூலம் மனிதர்களுக்குத் தொல்லை எதுவும் இருந்ததில்லை. ஆனால் இன்று நகரங்களில் வசிப்போர் பலர் தம் வீடுகளில் அயல்நாட்டு நாய்களை வாங்கி வளர்க்கின்றார்கள். அவற்றோடு தம் பொழுதுகளைக் கழிக்கின்றார்கள். அதனால் மக்களுக்கு எந்தப் பயனும் இல்லை. மாறாக அந்த நாய்களால் பொதுமக்களுக்குத் தொல்லைதான் ஏற்படுகிறது.

 

அண்மைக்காலமாக நாம் நாளிதழ்களில் நாய்க்கடி குறித்த செய்திகளை அதிகமாகக் காண்கிறோம். நாய் கடித்து சிறுவர் பலி, ‘நாய் கடித்து சிறுமி மருத்துவமனையில் அனுமதி என்பதே அன்றாடச் செய்தி. வீட்டுக்குள்ளேயே வளரும் நாயை வெளியே அழைத்து வரும்போது, மனிதர்களைப் பார்த்துப் பீதியடைகிறது; அச்சம் கொள்கிறது. எல்லோரையும் அந்நியர்களாகக் காண்கிறது. எனவேதான் தன் அருகில் வருவோரைத் திடீரெனத் தாக்கிவிடுகிறது; கடித்துவிடுகிறது. எனவே தெரு நாய்களைவிட, வீட்டு வளர்ப்பு நாய்களே மனிதர்களுக்கு மிகவும் ஆபத்தானவை.

 

வானவர்களின் வருகை தடைபடுதல்: வானவர்கள்மூலமே அல்லாஹ் ஒவ்வொரு கட்டளையையும் செயல்படுத்துகிறான்; மனிதர்களின் தேவைகளை நிறைவேற்றுகிறான். அதன்படி ஒரு வீட்டிற்குக் கிடைக்க வேண்டிய அருள்வளம் (பரக்கத்), வாழ்வாதாரம் (ரிஸ்க்) உள்ளிட்டவை வானவர்கள்மூலமே வழங்கப்படுகின்றன. நாயும் உருவப் படமும் உள்ள வீட்டில் வானவர்கள் வருவதில்லை என்பதால் அவ்வீட்டிற்குக் கிடைக்க வேண்டிய வாழ்வாதாரம், அருள்வளம் முதலானவை தடைபடுகின்றன என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். 

ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா கூறியதாவது: வானவர் ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் ஒரு (குறிப்பிட்ட) நேரத்தில் வருவதாக வாக்களித்திருந்தார்கள். ஆனால், அந்த நேரம் வந்தும் ஜிப்ரீல் வரவில்லை.

 

அப்போது அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது கையில் குச்சியொன்று இருந்தது. அதை அவர்கள் தூக்கியெறிந்துவிட்டு, “அல்லாஹ் தனது வாக்குறுதிக்கு மாறு செய்ய மாட்டான். அவனுடைய தூதர்களும் வாக்குறுதிக்கு மாறு செய்ய மாட்டார்கள்'' என்று கூறினார்கள். பின்னர் திரும்பிப் பார்த்தபோது, தமது கட்டிலுக்குக் கீழே நாய்க்குட்டியொன்று இருப்பதைக் கண்டார்கள்.

 

உடனே ஆயிஷா! இந்த நாய் இங்கு எப்போது நுழைந்தது?'' என்று கேட்டார்கள். நான், “அல்லாஹ்வின் மீதாணையாக! எனக்குத் தெரியவில்லை'' என்றேன். உடனே அதை அப்புறப்படுத்துமாறு உத்தரவிட்டார்கள். அவ்வாறே அப்புறப்படுத்தப்பட்ட பின் ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் வந்தார்கள்.

 

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், “நீங்கள் வருவதாகச் சொன்னீர்கள். உங்களுக்காக நான் (எதிர்பார்த்து) அமர்ந்திருந்தேன். ஆனால், நீங்கள் வரவில்லையே (ஏன்)?'' என்று கேட்டார்கள்.

 

அதற்கு ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம், “உங்கள் வீட்டினுள்ளிருந்த நாயே என(து வருகை)க்குத் தடையாக அமைந்துவிட்டது. (வானவர்களாகிய) நாங்கள் நாயும் உருவப்படமும் உள்ள வீட்டிற்குள் நுழையமாட்டோம்'' என்று சொன்னார்கள். (முஸ்லிம்: 4272)

 

நாய் வளர்த்தால் நன்மை குறையும்: ஒரு மனிதன் செய்துவரும் செயல்கள் யாவும் அவனுடைய வலப்பக்கமும் இடப்பக்கமும் உள்ள வானவர்களால் பதிவுசெய்யப்படுகின்றன. அவ்வாறு பதிவு செய்யப்பட்டுள்ள நன்மைகளிலிருந்து, நாய் வளர்ப்பவரின் நன்மைகள் ஒரு கீராத் (உஹுது மலை) அளவு குறைந்து விடுவதாக நபியவர்கள் கூறியுள்ளார்கள். இரண்டு கீராத் அளவு குறைந்து விடுவதாக மற்றொரு செய்தியும் உள்ளது.

 

கால்நடையைப் பாதுகாப்பதற்காகவோ, வேட்டையாடுவதற்காகவோ அல்லாமல் யார் நாய் வைத்திருக்கின்றாரோ அவருடைய நற்செயலி(ன் நன்மையி)லிருந்து ஒவ்வொரு நாளும் இரண்டு "கீராத்'கள் அளவு குறைந்துவிடும் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். (புகாரீ: 5480)

 

நாய் வளர்ப்பவரின் நாயால் மக்களுக்குத் தொல்லை அதிகமானால் இரண்டு கீராத் குறையும் என்றும் தொல்லை குறைவாக இருந்தால் ஒரு கீராத் குறையும் என்றும் மார்க்க அறிஞர்கள் இவ்விரண்டு நபிமொழிகளுக்கும் விளக்கமளிக்கின்றார்கள்.

 

மூன்று காரணங்களுக்காக: ஒருவர் தம் கிராமத்தில் விவசாயம் செய்துவருகிறார்; அந்த வேளாண்மையைப் பாதுகாப்பதற்காக அவர் நாயைக் காவலுக்கு வைத்திருக்கிறார் எனில், அவர் அவ்வாறு அதைப் பயன்படுத்துவது கூடும். ஒருவர் தம்முடைய கிராமத்தில் ஆடு, மாடுகளை வளர்க்கிறார். அவற்றைத் திருடர்களிடமிருந்தும் ஓநாய்களிடமிருந்தும் பாதுகாப்பதற்காக நாயை வளர்க்கிறார் என்றால் அதற்கு இஸ்லாம் அனுமதி வழங்குகிறது.  மூன்றாவதாக, ஒருவர் வேட்டையாட அனுமதிக்கப்பட்ட நாட்டில் வசிக்கிறார்; முயல், மான் உள்ளிட்ட  உண்ணத்தகுந்த பிராணிகளை வேட்டையாடுவதற்காக நாயை வளர்த்தால் குற்றமில்லை. ஆக இந்த மூன்று வகையான தேவைகளுக்காக நாயை வளர்க்கலாம் என்று நபிமொழிகளில் நாம் காண்கிறோம்.

 

மேற்கண்ட நபிமொழியின் கருத்துப்படி அறிஞர்கள் பலர், நபியவர்கள் கூறிய காரணங்களைத் தாண்டி மற்ற எதற்காகவும் நாயை வளர்க்கக்கூடாது என்று கூறுகின்றார்கள். அறிஞர்கள் சிலர் பாதுகாப்பு உள்ளிட்ட தேவையைக் கருதி நாய் வளர்க்கலாம். எந்தத் தேவையுமில்லாமல் நாய் வளர்க்கக்கூடாது என்கின்றார்கள்.

 

இமாம் நவவீ ரஹிமஹுல்லாஹ் முஸ்லிம் நூலின் விரிவுரையில் கூறியுள்ளதாவது: வீடுகளையும் பாதைகளையும் பாதுகாப்பதற்காக நாயை வளர்க்கலாமா என்ற கேள்விக்கு, ஹதீஸ்களின் வெளிப்படையான கருத்துப்படி வளர்க்கக்கூடாது என்பதுதான் சரி. இருப்பினும் ஹதீஸ்களில் கூறப்பட்டுள்ள காரணங்களை ஒப்பிட்டு ஆய்வு செய்கிறபோது, மனிதர்களின் தேவையே அவற்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் அவற்றைப் பாதுகாக்கவும் நாய் வளர்க்கலாம் என்பதே மிகச் சரியானது.

 

தற்காலத்தில் காவல் துறையில் நாய் வளர்க்கப்படுகிறது. நாய்க்கு மோப்ப ஆற்றல் மிகுதி. அது தனது மோப்ப ஆற்றலால் திருடர்களைக் கண்டுபிடித்துவிடுகிறது. எனவே அது காவல்துறையில் மோப்ப நாயாக ((Sniffer dog)) பயன்படுத்தப்படுகிறது. அந்த வகையில் காவல்துறையில் பணியாற்றுகிற முஸ்லிம் ஒருவர், அத்தகைய நோக்கத்திற்காக நாய் வளர்த்தால் அல்லது அதற்கு உணவு வழங்கினால் அது குற்றமில்லை. அவரே அதற்குப் பயிற்சியாளராக இருந்தாலும் குற்றமில்லை. 

 

நாய் வாய்வைத்த பாத்திரம்: நாயின் எச்சிலில் மனிதனுக்கு இடர்தரும் நச்சுக்கிருமிகள் உள்ளன. நாய் ஒருவரைக் கடித்துக் காயப்படுத்திவிட்டால், அதன் பற்கள் பட்ட இடத்தில் அந்தக் காயத்தின் வழியாக நச்சுக் கிருமிகள் உடலுக்குள் ஊடுருவி விடுகின்றன. அந்தக் கிருமிக்கு ரேபீஸ் (Rabies) என்று பெயர். காயம்பட்ட இடத்தை சோப்பு போட்டு அல்லது மஞ்சள் கலந்த நீரால் நன்றாகக் கழுவிச் சுத்தம் செய்துவிட்டு, அதன்பிறகு மருத்துவரைச் சந்திக்க வேண்டும். இதனால் அந்தக் கிருமிகள் உடலுக்குள் ஊடுருவுவதை உடனடியாகத் தடுத்துவிட முடியும்.

 

நாயின் எச்சிலில் இவ்வளவு தீங்குகள் உள்ளன என்பதை அண்மைக் காலத்தில்தான் அறிவியல் அறிஞர்கள் கண்டறிந்தனர். ஆனால் அறிவியல் அறிவு மனிதனுக்கு எட்டாத காலத்திலேயே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மனித சமுதாயத்திற்கு நல்வழி காட்டியுள்ளார்கள்.

 

நாய் வாய்வைத்துவிட்ட உங்களது பாத்திரத்தைச் சுத்தம் செய்யும் முறை யாதெனில், அதை ஏழு தடவை தண்ணீரால் கழுவுவதாகும். முதல் தடவை மண்ணிட்டுக் கழுவ வேண்டும் என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். (முஸ்லிம்: 279/ 471) வெறி நாயோ தெரு நாயோ, வீட்டில் வளர்க்கும் நாயோ, பூனையோ, எலியோ கடித்த இடத்தைத் தண்ணீரில் 7 முதல் 10 தடவை வரை சோப்பு போட்டுக் கழுவ வேண்டும் என்று இன்றைய மருத்துவர்கள் கூறுகின்றார்கள்.

 

நாயை விற்கலாமா?: மக்கள் நாயை வளர்த்து வருவதால் அது இன்று விற்பனைப் பொருளாக மாறிவருகிறது.  ஆனால் ஒரு முஸ்லிமைப் பொருத்த வரை, நாயை விற்பனை செய்து பொருளீட்டுவது கூடாது. அது அவருக்குத் தடை செய்யப்பட்டதாகும். அது குறித்து நபியவர்கள் கூறியுள்ள செய்தி புகாரீ எனும் நபிமொழித் தொகுப்பு நூலில் பதிவுசெய்யப்பட்டுள்ளது: நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், நாய் விற்ற கிரயத்தையும் இரத்தத்தின் கிரயத்தை (குருதி உறிஞ்சி எடுப்பதற்காகப் பெறுகின்ற கூலியை)யும் தடைசெய்தார்கள்...என்று அபூஜுஹைஃபா ரளியல்லாஹு அன்ஹு கூறினார்கள். (புகாரீ: 2086)

 

நாயைக் கொல்லுங்கள்: மனிதர்களுக்கு இடையூறும் தொல்லையும் தரக்கூடிய நாய்களைக் கொல்லுங்கள் என்பதே நபியவர்களின் வழிகாட்டல் ஆகும். மிருக வதைத் தடுப்புச் சட்டம்-1960 என்ற சட்டத்தைக் காட்டி  மிருக வதைத் தடுப்பு இயக்கத்தினர் உயிரினங்களைக் கொல்வதை, குறிப்பாக நாய்களைக் கொல்வதைத் தடைசெய்கின்றனர். அதனால் மனிதர்களுக்கு எவ்வளவு இடையூறும் தொல்லைகளும் அன்றாடம் ஏற்படுகின்றன என்பதை அந்த இயக்கத்தைச் சேர்ந்தோர் பொருட்படுத்துவதில்லை.

 

அதேநேரத்தில் எல்லா நாய்களையும் கொல்லுங்கள் என்று நபியவர்கள் கூறவில்லை. மாறாக அதில் கருப்பு நாய்களை மட்டும் கொல்லச் சொல்லியுள்ளார்கள். அது குறித்து நபியவர்கள் சொன்ன செய்தி இப்னுமாஜா நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது: திண்ணமாக நாய்கள் சமுதாயங்களுள்  ஒரு சமுதாயமாக இல்லையென்றால் அவற்றைக் கொல்லுமாறு நான் ஏவியிருப்பேன். எனவே அவற்றுள் கருப்பு நாய்களைக் கொல்லுங்கள்...என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். (இப்னுமாஜா: 3205/ 3196)

 

நாம் தெருக்களில் நடந்து செல்லும்போது வெறிபிடித்த நாய் நம்மைத் துரத்தும்; அதுபோன்ற வெறிபிடித்த நாய், கருப்பு நாய் ஆகியவற்றைக் கொல்லலாம் என்பதே இந்த ஹதீஸ் மூலம் தெரியவருகிறது. கருப்பு நாயைக் கொல்லச் சொன்னதற்கான காரணமென்ன என்று நபியவர்களிடம் கேட்கப்பட்டபோது, “அது ஷைத்தான் ஆகும் என்று கூறினார்கள். (இப்னுமாஜா: 3210/ 3201) அதாவது ஷைத்தானின் குணம் அதில் அதிகமாகக் காணப்படுகிறது.

 

தொல்லைதரும் நாயைக் கொல்லச் சொன்ன இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்தாம் உயிரினங்கள் மீது அன்பு காட்டவும் வழிகாட்டியுள்ளார்கள். அந்த வகையில் ஒரு நாய்க்கு ஒரு முஸ்லிம் தண்ணீர் வைத்தாலும் அதன் காரணமாகக்கூட அவர் சொர்க்கம் செல்ல முடியும் என்று கூறியுள்ளதன் மூலம் ஆர்வமூட்டியுள்ளார்கள்.

 

ஒரு நாய் தாகத்தால் (தவித்து) ஈர மண்ணை (நக்கி) உண்டுகொண்டிருப்பதை ஒரு மனிதர் பார்த்தார். உடனே அவர் (தாம் அணிந்திருந்த) காலுறையை எடுத்து அதில் தண்ணீர் மொண்டு அந்நாய் தாகம் தீரும் வரை கொடுத்தார். எனவே அல்லாஹ், அவருடைய நற்செயலைப் பாராட்டி அங்கீகரித்து அவரைச் சொர்க்கத்தில் நுழையச்செய்தான் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். (புகாரீ: 173)

 

ஆக தொல்லைதரும் நாய்களிடமிருந்து  நாம் எச்சரிக்கையாக இருந்துகொள்வதோடு நம் பிள்ளைகளையும்  கவனமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும்; வளர்ப்பு நாய்களிடம் சற்றுத் தூரமாகவே இருந்துகொள்வது நல்லது.  அதேநேரத்தில் கோடைக் காலத்தில் நாய், ஆடு, மாடு, பறவைகள் உள்ளிட்டவை நாவறண்டு தண்ணீருக்காக அலையும். எனவே அவற்றின்மீது இரக்கம் கொண்டு, அவற்றுக்குத் தண்ணீர் வைப்பதன்மூலம் இறையன்பைப் பெற்று இனிய சொர்க்கம் அடைவோம்.

==============================










கருத்துகள் இல்லை: