-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.
இன்றைய செயற்கை நுண்ணறிவு யுகத்தில் எங்கு நோக்கினும் வன்மம், பகைமை, பொறாமை, கோபம் முதலானவையே பெரும்பாலான
மனிதர்களிடம் பரவலாகக் காணப்படுகின்றன. அன்பு, சாந்தம், பொறுமை, சகிப்புத்தன்மை முதலான இனிய பண்புள்ளோரைக்
காண்பது அரிதிலும் அரிதாக உள்ளது.
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கோபமும் வன்மமுமே ஆட்கொண்டுள்ளன. யாரிடமும் அன்பு இருப்பதாகத் தெரியவில்லை. மனித நெஞ்சங்களில் அன்புக்குப் பஞ்சம் ஏற்பட்டுள்ளதை நம் அன்றாட வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் காணநேரிடுகிறது.
பெற்றெடுத்த தாய்-தந்தைமீது பிள்ளைகளுக்கு அன்பில்லை; உடன்பிறந்த சகோதர சகோதரிகளுக்குத் தம்முடன் பிறந்த சகோதர சகோதரிகள்மீது அன்பில்லை; மணந்துகொண்ட கணவன்மீது மனைவிக்கு அன்பில்லை; மனைவிமீது கணவனுக்கு அன்பில்லை; காதலிமீது காதலனுக்கு அன்பில்லை; காதலன்மீது காதலிக்கு அன்பில்லை; மருமகளுக்கு மாமியார்மீது அன்பில்லை; மருமகள்மீது மாமியாருக்கு அன்பில்லை; சிறுவர்கள் மீது பெரியவர்கள் அன்பு காட்டுவதில்லை; பெரியவர்களுக்குச் சிறுவர்கள் மரியாதை செலுத்துவதில்லை. ஆக எங்கு நோக்கினும் அன்புக்குப் பஞ்சம் ஏற்பட்டுள்ளது.
எல்லோருக்கும் சுயநலமே மிகுந்து போய்விட்டது. நான் நல்லா இருந்தால் போதும்; பிறர் பற்றிய நலனில் எனக்கு எந்த அக்கறையும் இல்லை எனும் போக்கில் பலர் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். ஒருவர் பிறர்மீது அன்பு காட்ட வேண்டுமென்றால் மறுமையைப் பற்றிய நம்பிக்கையும் அல்லாஹ் அதற்கான பிரதிபலனை இம்மையிலும் மறுமையிலும் வழங்குவான் என்ற எதிர்பார்ப்பும் அவரின் மனத்தில் வேரூன்றி இருக்க வேண்டும். அத்தகைய ஒருவரால்தான் இவ்வுலகில் வாழுகின்ற அனைவர்மீதும் அன்பு காட்ட முடியும்.
அல்லாஹ்விற்காகப் பிறரை நேசிப்போர் மிகவும் குறைந்துபோய்விட்டனர். ஆனால் அதன் சிறப்பையும் மேன்மையையும் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியுள்ளதைப் பாருங்கள்.
அல்லாஹ் மறுமை நாளில், “என்னைக் கண்ணியப்படுத்துவதற்காக ஒருவரையொருவர் நேசித்துக் கொண்டவர்கள் எங்கே? எனது நிழலைத் தவிர வேறு நிழலில்லாத இன்றைய நாளில் அவர்களுக்கு நான் எனது நிழலில் நிழலளிக்கிறேன்” என்று கூறுவான். (முஸ்லிம்: 5015) அல்லாஹ்விற்காகப் பிறரை நேசிக்கும்போது அவன் நாளை மறுமையில் நமக்கு அவனது நிழலைத் தர முன்வருகிறான் என்றால் அது எவ்வளவு உயர்வானது என்பதை நாம் உணர வேண்டும்.
கூட்டுக் குடும்பம் ஒன்றில் அண்ணன்-தம்பிகள் என மூன்று குடும்பத்தினர் ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர். அம்மூவரின் வருமானத்தில் ஏற்றத்தாழ்வு ஏற்படுகிறது. அதனால் அவர்கள் மாதந்தோறும் வழங்கும் தொகையில் வேறுபாடு உள்ளது. ஒருவர் கூடுதலாகக் கொடுப்பார்; மற்றொருவர் குறைவாகக் கொடுப்பார். அவர்களுள் ஒருவருக்கு இரண்டு பிள்ளைகள், மற்றொருவருக்கு மூன்று பிள்ளைகள், ஒருவருக்குப் பிள்ளை இல்லை. இப்போதுதான் அவர்கள் மத்தியில் சுயநலம் தலைதூக்குகிறது. நான் ஏன் அதிகமாகக் கொடுக்க வேண்டும்? நான் ஒருவன்தானே? என்று தம்பி கேட்கத் தொடங்கியதால் சிக்கல் உண்டானது. அதுவே அக்குடும்பம் தனித்தனியாகப் பிரிவதற்குக் காரணமானது. என்னுடைய அண்ணனும் தம்பியும்தானே என் பணத்தில் சாப்பிடுகிறார்கள் என்ற தயாளச் சிந்தனை வரவேண்டிய இடத்தில், என்னுடைய பணத்தில் அவர்கள் சாப்பிடுவதா, என் உழைப்பில் அவர்கள் வாழ்வதா என்ற சுயநலச் சிந்தனை தலைதூக்கியதால் கூட்டுக் குடும்பம் சிதறுண்டது. இத்தகைய சிந்தனையுடையோர் எவ்வாறு ஏழைகளுக்கும் இல்லாதோருக்கும் தர்மம் செய்வார்கள்?
தன்னைவிடப் பிறரின் தேவையைத்தான் முற்படுத்த வேண்டும் என்ற அன்பின் மேலீட்டால்தானே நபியவர்களின் காலத்தில், ஒரே ஓர் ஆட்டுத்தலை ஏழு வீடு சுற்றி வந்தது? தம்மைவிடப் பிறர் நலன்தான் முக்கியம் என்ற சிந்தனைதானே, போர்க்களத்தில் வெட்டுண்டு குற்றுயிராகக் கிடந்த ஒருவர் தண்ணீர் கேட்ட நேரத்தில், அதைக் கொண்டுவந்தவரிடம், தமக்கு அருகே மற்றொருவர் தண்ணீர் கேட்டதை அறிந்து, “அவருக்குக் கொடுங்கள்” என்று சைகை செய்யத் தூண்டியது? இதுதானே அன்பின் வெளிப்பாடு? இத்தகைய சமூகத்தில் பிறந்த நமக்கு, சுயநலச் சிந்தனை ஏற்படலாமா?
தந்தை இறந்தபின் அவர் விட்டுச் சென்ற நிலம், அண்ணன்-தம்பி இருவருக்கும் பாகப்
பிரிவினை செய்யப்படுகிறது. அதில் முற்பகுதியை அண்ணன் எடுத்துக்கொண்டு பின்னால் உள்ள
பகுதியைத் தன் தம்பிக்குக் கொடுத்தான். அப்போது அவ்விருவருக்கிடையே பிரச்சனை ஏற்பட்டது.
சாலையின் முற்பகுதியில் உள்ளதை உனக்கு எடுத்துக்கொண்டு, பிற்பகுதியை எனக்கு ஒதுக்கிவிட்டாயா?
இதை நான் ஏற்க முடியாது
என்று தம்பி சண்டைபோடுகிறான். இங்கு எங்கே அன்பு உள்ளது? இருவரும் தத்தமது நலத்தைத்தானே
நாடுகிறார்கள்? இருவரும் கலந்து ஆலோசனை செய்து, எது உனக்கு வேண்டும் என்று ஒருவருக்கொருவர் கேட்டுக்கொண்டு,
இருவரும் மனத்திருப்தியோடு
பிரித்துக்கொண்டிருந்தால் பிரச்சனை இருந்திருக்காது.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்: உங்களுள் ஒருவர் தமக்கு விரும்புவதையே தம் சகோதரனுக்கும் விரும்பாத வரை (முழுமையான) இறைநம்பிக்கை கொண்டவர் ஆக மாட்டார். (புகாரீ: 13) தமக்கு விரும்புவதைத் தம் சகோதரருக்கே விரும்பாத ஒருவர் எப்படி அதைப் பிறருக்கு விரும்புவார்? தம் சகோதரரே நன்றாக இருக்கட்டும் என்று எண்ணாதவர் எப்படிப் பிறர் நன்றாக இருக்கட்டும் என்று எண்ணுவார்?
பெற்றெடுத்த தாய்-தந்தைமீது பிள்ளைகளுக்கு அன்பில்லை என்பதைப் பற்பல குடும்பங்களில் கண்டுவருகிறோம். பிள்ளைகள் மூவர் இருக்கின்றார்கள் என்றால், இந்த மாதம் என் வீட்டில், அடுத்த மாதம் உன் வீட்டில், அதற்கடுத்த மாதம் கடைசி மகன் வீட்டில் என நிர்ணயம் செய்துகொள்கிறார்கள். அதன்படி அந்த மூவரின் வீட்டிலும் மாறி மாறித் தங்கிவருகின்றார்கள். அப்போது அவர்களுள் யாராவது ஒருவருக்கு ஒரு மாதம் பொருளாதார நெருக்கடி என்றால், “இந்த மாதம் நீயே பார்த்துக்கொள்; நான் மிகவும் நொடித்துப் போயுள்ளேன்” என்று கூறினால், அப்போதுதான் அவர்கள் மத்தியில் பிரச்சனை வெடிக்கும். இதில் அவர்களுக்குப் பெற்றோர்மீது எங்கே அன்பு உள்ளது? எங்கே பாசம் உள்ளது?
மாமியாருக்கு மருமகள்மீதோ, மருமகளுக்கு மாமியார்மீதோ அன்பில்லை. சின்னச் சின்ன விஷயங்களுக்கெல்லாம் தம் மருமகளைத் திட்டித் தீர்ப்பதை மாமியார் தம் உரிமையாகக் கருதுகிறார். இன்னொரு வீட்டிலிருந்து தம் வீட்டிற்கு வாழ வந்தவளாயிற்றே, அவள் நிம்மதியாக வாழ்ந்துவிட்டுப் போகட்டுமே என்று நினைப்பதில்லை. அதுபோலவே ஒரு மருமகள் தன் மாமியாரிடம் மிகவும் வன்மையாக நடந்து கொள்கிறாள். கணவனை இழந்து, முதுமையின் கடைசிப் பொழுதில் வாழ்ந்து கொண்டிருக்கிற மாமியாருக்கு உரிய நேரத்தில் உணவு வழங்காமல் இழுத்தடிப்பது எவ்வளவு பெரிய கொடுமை? அவள் தன் மாமியாரைத் தன் தாயைப் போல் அன்பாகப் பார்த்திருந்தால் இவ்வாறு செய்வாளா?
இவ்வாறு எங்கு நோக்கினும் அன்புக்குப் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. அண்மையில் மதுரையில் ஒரு மத்ரஸாவில் தங்கிப் படித்துக் கொண்டிருந்த பதின்மூன்று வயதுச் சிறுவன் தன்னுடன் படித்துக்கொண்டிருந்த ஒன்பது வயதுச் சிறுவனைக் கத்தியால் குத்திக் கொலை செய்திருக்கிறான். பென்சில் சீவுவதற்கு பிளேடை எடுத்துச் சரியாகப் பயன்படுத்தத் தெரியாத வயதில் கத்தியை எடுத்துத் தன்னோடு படிக்கிறவனைக் கொலை செய்திருக்கிறான் என்றால், இந்தச் சமூகம் அவர்களுக்கு எதைக் கற்றுக்கொடுத்திருக்கிறது என்பதை நாம் புரிந்துகொள்ளலாம். பொறுமை, சகிப்புத்தன்மை, அன்பு, சக மனிதர்களை நேசித்தல் முதலான எதையும் கற்றுக்கொடுக்கவில்லை. வன்மம், கோபம், பழிதீர்த்தல் போன்றவற்றையே பார்த்து வளர்கின்ற பிள்ளைகளின் மனங்களிலும் அவை ஆழமாகப் பதிந்துவிடுகின்றன.
ஒருவர்மீது நமக்கு அன்பு ஏற்பட வேண்டுமானால் நமக்கு மன்னிக்கும் பண்பு மிகுதியாக இருக்க வேண்டும். தம் சகோதரர்கள் தமக்குப் பல்வேறு தொல்லைகள் கொடுத்தபோதும் அவற்றையெல்லாம் மன்னித்து, தம் சகோதரர்களுக்காக அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரிய இறைத்தூதர் யூசுஃப் அலைஹிஸ் ஸலாம் அவர்களைப் போன்ற மன்னிக்கும் பண்பு யாரிடமெல்லாம் இருக்கிறதோ, தம் சிறிய தந்தையைக் கொன்ற வஹ்ஷியையும் கொல்லத் தூண்டிய ஹிந்தாவையும் மன்னித்த இறைத்தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அன்பு நெஞ்சம் யாருக்கெல்லாம் இருக்கிறதோ அவர்களெல்லாம் இந்தப் புவியில் நிம்மதியாக வாழ்ந்து, அன்பையும் பாசத்தையும் மக்கள்மீது பொழிவார்கள். அத்தகையோரிடம் நட்பு வைத்துக்கொண்டு, அந்த நல்ல பண்புகளைக் கடைப்பிடித்து நாமும் அன்போடு வாழ்ந்து பிறரின் உள்ளங்களிலும் அன்பை விதைப்போம்.
=========================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக