வெள்ளி, 9 செப்டம்பர், 2022
நல்ல நேரம் - கெட்ட நேரம் எது? which is a good time and bad time?
வியாழன், 8 செப்டம்பர், 2022
பிரார்த்தனையின் பலன்கள்-12
-மௌலவி முனைவர் நூ. அப்துல் ஹாதி பாகவி
(இமாம், மதீனா மஸ்ஜித்-பட்டினப்பாக்கம்,
சென்னை)
----------------------
வீட்டிற்குள் நுழையும்போது
வீட்டிற்குள் நுழையும்போது
வீட்டிலுள்ளோருக்கு முகமன் (ஸலாம்) சொல்லிவிட்டுச் செல்ல வேண்டும் என்பது
நம்முள் பலருக்குத் தெரியும். ஆனால் வீட்டிற்குள் நுழையும்போது என்ன துஆ ஓத
வேண்டும் என்று நம்முள் பலருக்குத் தெரியாது. ஏனெனில் நம்முள் பலர் அதைக்
கற்றுக்கொள்ளாததே காரணமாகும்.
வீட்டினுள் நாம் நுழையும்போது மகிழ்ச்சியும்
மனஅமைதியும் நமக்குக் கிடைக்கவேண்டுமே தவிர சண்டை சச்சரவுகள் வாக்குவாதங்கள்
ஏற்படக்கூடாது. ஏனெனில் நாம் வீட்டினுள் நுழைகிறபோது ஸலாம் கூறவில்லையெனில் ஷைத்தானுக்கு
நம் வீட்டினுள் தங்குவதற்கு இடம் கிடைத்துவிடுகிறது. நாம் உண்ணுமுன் பிஸ்மில்லாஹ்
கூறாவிட்டால் அவனுக்கு உணவும் கிடைத்துவிடுகிறது. எனவே நாம் ஷைத்தானை நம்
வீட்டிலிருந்து விரட்டிவிட வேண்டுமெனில் நாம் அவ்வப்போது ஓத வேண்டிய துஆக்களை
மறவாமல் ஓதிக்கொள்ள வேண்டும்.
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
கூறினார்கள்: ஒருவர் தம் வீட்டிற்குள்
நுழைந்தால்,
اللَّهُمَّ إِنِّيْ أَسْأَلُكَ خَيْرَ الْمَوْلَجِ، وَخَيْرَ الْمَخْرَجِ،
بِسْمِ اللهِ وَلَجْنَا، وَبِسْمِ اللهِ خَرَجْنَا، وَعَلَى اللهِ رَبِّنَا
تَوَكَّلْنَا
அல்லாஹும்ம இன்னீ அஸ்அலுக கைரல் மவ்லஜி வ
கைரல் மக்ரஜி, பிஸ்மில்லாஹி வலஜ்னா
வபிஸ்மில்லாஹி கரஜ்னா வஅலல்லாஹி ரப்பினா தவக்கல்னா என்று சொல்லட்டும். பிறகு தமது
வீட்டார்களுக்கு முகமன் (ஸலாம்) சொல்லட்டும்.
பொருள்: இறைவா! சிறந்த நுழைவிடத்தையும்,
சிறந்த
வெளியேறுமிடத்தையும் நான் உன்னிடம் கோருகின்றேன். அல்லாஹ்வின் திருப்பெயரால்
நாங்கள் (வீட்டிற்குள்) நுழைந்தோம். அல்லாஹ்வின் திருப்பெயரால் வெளியே சென்றோம்.
எங்கள் இறைவனாகிய அல்லாஹ்வையே முற்றிலும் சார்ந்துள்ளோம்.) (அபூதாவூத்: 4432)
அதேபோல் நாம் நம் வீட்டிலிருந்து வெளியே
புறப்படுகின்றபோதும் அதற்குரிய பிரார்த்தனையை ஓதிக்கொள்ள வேண்டும். அதையும் நபி
ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நமக்குக் கற்றுத் தந்துள்ளார்கள். இதோ அந்த நபிமொழி.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்:
ஒரு மனிதர் தமது வீட்டிலிருந்து புறப்படும்போது,
بِسْمِ اللَّهِ تَوَكَّلْتُ عَلَى اللَّهِ، لَا
حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ
'பிஸ்மில்லாஹி
தவக்கல்து அலல்லாஹி லாஹவ்ல வலா குவ்வத இல்லா பில்லாஹி" (பொருள்: அல்லாஹ்வின்
பெயரால் புறப்படுகின்றேன். நான் அல்லாஹ்வையே முழுமையாகச் சார்ந்துள்ளேன்.
அல்லாஹ்வின் உதவியின்றிப் பாவங்களிலிருந்து விலகிடவும் முடியாது. நல்லறங்கள் புரிய
ஆற்றல் பெறவும் முடியாது) என்று கூறினால் அவரிடம் (உமது அலுவல்களில் உமக்கு நேரான
வழிகாட்டுதல் வழங்கப்பட்டுவிட்டது, போதுமான
அளவு உதவிகள் பெற்றுக்கொண்டீர் (பகைவர்களின் தீங்கிலிருந்து) உமக்குத் தகுந்த
பாதுகாப்பு கிடைத்துவிட்டது என்று (வானவர்களின் வாயிலாக உறுதிமொழி) கூறப்படும்.
மேலும் ஷைத்தான்கள் அவரிடமிருந்து தூரமாகிவிடுவார்கள்.
அப்போது வேறொரு ஷைத்தான்,
‘நேர்வழியையும் போதுமான உதவிகளையும்,
தகுந்த
பாதுகாப்பையும் (இறைவனிடமிருந்து) பெற்றுக்கொண்ட ஒரு மனிதரை உன்னால் எவ்விதம்
வழிகெடுக்க முடியும்?" என்று
மற்றொரு ஷைத்தானிடம் கேட்பான். (அபூதாவூத்: 4431) ஆக இந்தப் பிரார்த்தனையை நாம்
வழமையாக ஓதிக்கொள்வதால் ஷைத்தானிடமிருந்து பாதுகாப்புப் பெறுவதோடு நம்முடைய மனித
எதிரிகளிடமிருந்தும் பாதுகாப்பைப் பெறுகிறோம்.
காற்று அல்லாஹ்வின் அருளில் உள்ளதாகும்.
(சிலநேரம்) அல்லாஹ்வின் அருளாகிய காற்று அருளையே கொண்டுவரும். (சிலநேரம் அல்லாஹ்வின்)
வேதனையைக் கொண்டுவரும். எனவே நீங்கள் காற்று வீசுவதைக் கண்டால் அதைத்
திட்டாதீர்கள். (மாறாக) அதனுடைய நன்மையை அல்லாஹ்விடம் கேளுங்கள். அதனுடைய
தீங்கைவிட்டு அல்லாஹ்விடம் பாதுகாவல் கோருங்கள் என்று அல்லாஹ்வின் தூதர்
ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். (அபூதாவூத்: 4433) எனவே நாம் காற்றைத்
திட்டக்கூடாது. மாறாக அதன் நன்மையைக் கேட்பதோடு அதன் தீங்கிலிருந்து பாதுகாப்பைத்
தேடிக்கொள்ள வேண்டும்.
அன்னை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அறிவித்துள்ள
நபிமொழி ஒன்று முஸ்லிம் எனும் நபிமொழித்தொகுப்பு நூலில் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
அதில் சூறாவளிக் காற்று வீசினால் நபியவர்கள் இந்த துஆவைத்தான் ஓதுவார்கள் எனக்
காணப்படுகிறது:
اللهُمَّ إِنِّي أَسْأَلُكَ خَيْرَهَا، وَخَيْرَ مَا فِيهَا، وَخَيْرَ مَا
أُرْسِلَتْ بِهِ، وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّهَا، وَشَرِّ مَا فِيهَا، وَشَرِّ مَا أُرْسِلَتْ
بِهِ
அல்லாஹும்ம இன்னீ அஸ்அலுக்க கைரஹா வ கைர மா
ஃபீஹா வ கைர மா உர்சிலத் பிஹி, வ
அஊது பிக மின் ஷர்ரிஹா வ ஷர்ரி மா ஃபீஹா வ ஷர்ரி மா உர்சிலத் பிஹி.
பொருள்: இறைவா, இந்தக்
காற்றின் நன்மையையும் அதனுள் மறைந்திருக்கும் நன்மையையும் அது எதனுடன் அனுப்பப்பெற்றுள்ளதோ
அதன் நன்மையையும் உன்னிடம் வேண்டுகிறேன். இந்தக் காற்றின் தீங்கிலிருந்தும்,
அதனுள்
மறைந்திருக்கும் தீங்கிலிருந்தும், அது
எதனுடன் அனுப்பப்பெற்றுள்ளதோ அதன் தீங்கிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புக்
கோருகிறேன். (முஸ்லிம்: 1640)
இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அறிவித்துள்ள
நபிமொழி ஒன்று தப்ரானீயில் பதிவுசெய்யப்பட்டுள்ளது. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்,
காற்றுவீசுவதைக்
கண்டால் அதனை முன்னோக்கியவாறு முழங்காலிட்டு இவ்வாறு ஓதுவார்கள்:
اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ مِنْ خَيْرِ هَذِهِ الرِّيحِ وَخَيْرِ مَا أُرْسِلَتْ
بِهِ، وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّهَا وَشَرِّ مَا أُرْسِلَتْ بِهِ، اللَّهُمَّ
اجْعَلْهَا رِيَاحًا وَلَا تَجْعَلْهَا رِيحًا، اللَّهُمَّ اجْعَلْهَا رَحْمَةً
وَلَا تَجْعَلْهَا عَذَابًا
அல்லாஹும்ம இன்னீ அஸ்அலுக்க மின் கைரி
ஹாதிஹிர் ரீஹி வ கைரி மா உர்சிலத் பிஹி, வ
அஊது பிக மின் ஷர்ரிஹா வ ஷர்ரி மா உர்சிலத் பிஹி. அல்லாஹும்மஜ்அல்ஹா ரியாஹன் வலா
தஜ்அல்ஹா ரீஹன். அல்லாஹும்மஜ்அல்ஹா ரஹ்மத்தன் வலா தஜ்அல்ஹா அதாபன்.
பொருள்: இறைவா, இந்தக்
காற்றின் நன்மையையும் இது எதனுடன் அனுப்பப்பெற்றுள்ளதோ அதன் நன்மையையும் உன்னிடம்
வேண்டுகிறேன். இந்தக் காற்றின் தீங்கிலிருந்தும், இது
எதனுடன் அனுப்பப்பெற்றுள்ளதோ அதன் தீங்கிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புக்
கோருகிறேன். இறைவா, இதை
மழைதரும் காற்றாக ஆக்கிவிடு. வேதனை தரும் (வறண்ட) காற்றாக ஆக்கிவிடாதே. இறைவா,
இதனை
அருளாக ஆக்கிவிடு. வேதனையாக ஆக்கிவிடாதே. (தப்ரானீ: 977)
மனிதர்களுடைய பாவங்களின் காரணமாக மழை பொழிவதை
அல்லாஹ் நிறுத்திவிடுகிறான். மனிதர்கள் தம் பாவங்களுக்காக இறைவனிடம் மன்னிப்புக்
கேட்டு மன்றாடுகிறபோது அவர்களை மன்னித்து மழையைப் பொழியச் செய்கிறான். அம்மழை
நீர் மூலம் செடி கொடிகளையும் பயிர்களையும் முளைக்கச் செய்கிறான்.
இது குறித்து நூஹ் அலைஹிஸ்ஸலாம் தம்
சமுதாயத்திற்குச் சொன்ன செய்தியை அல்லாஹ் திருக்குர்ஆனில் பதிவுசெய்துள்ளான்: “உங்கள்
இறைவனிடம் மன்னிப்பைக் கோருங்கள். நிச்சயமாக அவன் மிகவும் மன்னிக்கக்கூடியவன்''
என்றும்
கூறினேன். (அவ்வாறு செய்தால், தடைபட்டிருக்கும்)
மழையை உங்களுக்குத் தொடர்ச்சியாக அனுப்புவான். பொருள்களையும்,
மக்களையும்
கொடுத்து, உங்களுக்கு
உதவிபுரிவான்; உங்களுக்குத்
தோட்டங்களையும் உற்பத்தி செய்து, அவற்றில்
ஆறுகளையும் ஓடச் செய்வான். (71: 10-12)
அல்லாஹ்வின் அருள்நிறைந்த மழைநீர் மூலமே
எல்லாப் பயிர்களும் விளைகின்றன. எல்லா மரங்களும் பூத்துக் குலுங்குகின்றன.
அவன்தான் அந்த மழைநீர் மூலம் புவியிலுள்ள எல்லா உயிரினங்களையும் வாழச்
செய்கின்றான். அது குறித்துப் பின்வரும் வசனம் கூறுவதைப் பாருங்கள்.
மேகத்திலிருந்து மிக பாக்கியமுள்ள மழையை நாம்
பொழியச் செய்து, அதனைக்
கொண்டு பல சோலைகளையும் (விவசாயிகள்) அறுவடை செய்யும் தானியங்களையும் உற்பத்தி
செய்கின்றோம். அடுக்கடுக்காய் (கனிகள்) நிறைந்த குலைகளையுடைய நீண்டு வளரும்
பேரீச்ச மரங்களையும் (முளைப்பிக்கச் செய்து), அதனை
(நம்) அடியார்களுக்கு உணவாக்கி, அவற்றைக்கொண்டு
வறண்டுபோன நிலத்தை நாம் உயிர்ப்பிக்கின்றோம்... (50: 9-11)
மழையை நிறுத்திவிட்டால் படைப்பினங்கள் யாவும்
சிரமப்படும் என்பதைப் படைத்தோன் அல்லாஹ் அறிந்தே இருக்கின்றான். எனவேதான்
மனிதர்கள் பாவமன்னிப்புக் கேட்டுவிட்டால் அதை அவன் ஏற்றுக்கொண்டு அவர்களை
மன்னித்து, உடனடியாக மழையைப்
பொழிவிக்கத் தயாராகவே இருக்கின்றான். ஆகவே நாம் அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு
கேட்பதோடு மழையைப் பொழியச் செய்யுமாறும் கேட்க வேண்டும். அதற்கான துஆவை நபி
ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நமக்குக் கற்றுத் தந்துள்ளார்கள். இதோ அந்த துஆ:
«اللَّهُمَّ اسْقِنَا غَيْثًا مُغِيثًا، مَرِيئًا مَرِيعًا، نَافِعًا غَيْرَ
ضَارٍّ، عَاجِلًا غَيْرَ آجِلٍ
அல்லாஹும்மஸ்கினா ஃகைஸன் முஃகீஸன் மரீஅன்
மரீஅன் நாஃபிஅன் ஃகைர ளார்ரின் ஃஆஜிலன் ஃகைர ஆஜில்.
பொருள்: அல்லாஹ்வே! எங்களுக்கு உதவிகரமான,
மகிழ்ச்சிகரமான,
பசுமையை
ஏற்படுத்தக்கூடிய மழையைப் பொழியச் செய்வாயாக! நன்மை தரக்கூடிய நட்டம் ஏற்படுத்தாத
விரைவான, தாமதமாகாத மழையைப்
பொழியச் செய்வாயாக! (அபூதாவூத்: 1169)
இந்த துஆவின்மூலம் அல்லாஹ்விடம் நாம் பயனுள்ள
மழையைக் கேட்கிறோம். அந்த மழை எங்களுக்கு உதவிபுரிவதாக இருக்க வேண்டும்.
மகிழ்ச்சியளிக்கக்கூடியதாக இருக்க வேண்டும். அது யாருக்கும் எந்த இடையூறையும்
ஏற்படுத்தாதவண்ணம் இருக்க வேண்டும். அத்தகைய மழையை நீ துரிதமாகத் தர வேண்டும்;
தாமதமாக்கிவிடாதே
என்றெல்லாம் பல்வேறு பொருள்களை இந்தப் பிரார்த்தனை பொதிந்துள்ளது.
நாம் செய்கின்ற துஆவை ஏற்றுக்கொண்டு அல்லாஹ்
நமக்கு மழையைப் பொழியச் செய்துவிட்டால், மழை
பொழிகின்ற அந்நேரத்தில், «اللهُمَّ أَغِثْنَا، اللهُمَّ أَغِثْنَا، اللهُمَّ أَغِثْنَا
“அல்லாஹும்ம அஃகிஸ்னா,
அல்லாஹும்ம
அஃகிஸ்னா, அல்லாஹும்ம அஃகிஸ்னா”
என்று
ஓத வேண்டும்.
பொருள்: அல்லாஹ்வே! மழையை (நன்றாக)ப்
பொழியச் செய்வாயாக! அல்லாஹ்வே! மழையை (நன்றாக)ப் பொழியச் செய்வாயாக! அல்லாஹ்வே!
மழையை (நன்றாக)ப் பொழியச் செய்வாயாக! (புகாரீ: 1014, முஸ்லிம்:
897)
ஒருவேளை மழை நன்றாகப் பொழிந்து,
அடைமழையாக
மாறி, தொடர்ந்து பெய்துகொண்டிருந்தால்
அதுவும் மக்களுக்குச் சிரமம்தான். அதுபோன்று நபியவர்களின் காலத்தில் கடுமழை
தொடர்படியாக ஏழு நாள்களாகப் பெய்துகொண்டிருந்தது. அப்போது நபித்தோழர் ஒருவர்
வந்து நபியவர்களிடம் முறையிட்டார். அச்சமயத்தில் நபியவர்கள் செய்த துஆ இதோ:
«اللَّهُمَّ حَوَالَيْنَا وَلاَ عَلَيْنَا، اللَّهُمَّ عَلَى الآكَامِ
وَالظِّرَابِ، وَبُطُونِ الأَوْدِيَةِ، وَمَنَابِتِ الشَّجَرِயு
அல்லாஹும்ம ஹவாலைனா வலா அலைனா,
அல்லாஹும்ம
அலல் ஆகாமி வழ்ழிராபி, வ
புத்தூனில் அவ்தியத்தி வ மனாபித்திஷ் ஷஜர்.
“இறைவா! எங்கள் சுற்றுப் புறங்களுக்கு
(இம்மழையைத் திருப்பிவிடுவாயாக!) எங்களுக்குப் பாதகமாக இதை நீ ஆக்கிவிடாதே! இறைவா!
குன்றுகள், மலைகள்,
ஓடைகள்
விளை நிலங்கள் ஆகியவற்றின் மீது (இம்மழையைப் பொழியச் செய்வாயாக!)''
என்று
பிரார்த்தனை செய்தார்கள். உடனே மழை நின்றது. நாங்கள் வெயிலில் நடந்து சென்றோம்.
(புகாரீ: 1014, முஸ்லிம்: 897)
ஆக இவைபோன்ற துஆக்களை நாம் மனனம்
செய்துகொண்டு நம்முடைய தேவைக்கேற்ப ஓதி வர வேண்டும். எப்போதும் நாம் இறைவனை
நினைவுகூர்ந்தவர்களாகவும் அவனோடு தொடர்புடையவர்களாகவும் இருக்க வல்லோன் அல்லாஹ்
அருள்புரிவானாக.
-பிரார்த்தனை
தொடரும்
====================
வெள்ளி, 2 செப்டம்பர், 2022
கருப்பைவாய் புற்றுநோய் எதனால்?
உங்கள் வீட்டுப் பெண்களுக்கான பதிவு
கருப்பைவாய் புற்றுநோய் எதனால்?
-------------------------
கருப்பைவாய் புற்றுநோய் வராமல் தடுப்பதற்காக உள்நாட்டிலேயே முதல்முறையாக உருவாக்கப்பட்டுள்ள செர்வாவேக் தடுப்பூசி சில மாதங்களில் மிகக் குறைந்த விலைக்குக் கிடைக்க உள்ளதாக ஒன்றிய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
பெண்களுக்கு ஏற்படுகின்ற கருப்பைவாய் புற்றுநோய்க்கு என்ன காரணம் என்று உங்களுக்குத் தெரியுமா? யாரேனும் மருத்துவர் உங்களுக்குச் சொல்லியுள்ளாரா? கடந்த பத்தாண்டுகளாகத்தான் இந்நோய் அதிகமாகக் காணப்படுகிறது. இந்தப் புற்றுநோயால் ஆண்டுதோறும் 75 ஆயிரம் பெண்கள் இறப்பதாகத் தகவல் தெரிவிக்கிறது.
நீண்ட ஆய்வுக்குப் பின், பெண்கள் தம் மாதாந்திர உதிரப்போக்கின்போது பயன்படுத்தக்கூடிய நாப்கின்களால்தான் இப்புற்றுநோய் அவர்களுக்கு ஏற்படுகிறது என்று கண்டறிந்துள்ளனர். அத்தோடு வெள்ளைப்படுதல் எனும் நோயும் இதனால் ஏற்படுகிறது. எனவே கருப்பைவாய் புற்றுநோய் அறவே வராமல் தடுக்க வேண்டுமெனில் மாதாந்திர உதிரப்போக்கின்போது நாப்கின்களுக்கு மாற்றாகப் பருத்தித் துணிகளையே பயன்படுத்த வேண்டும்.
பெண்கள் பலர் வேலைக்குச் செல்வதாலும் அவ்வப்போது மாற்ற வேண்டிய தேவை ஏற்படும் என்பதாலும் பயன்படுத்த எளிதாக உள்ள நாப்கின்களையே தேர்வு செய்கின்றார்கள்; அவ்வப்போது துணியை மாற்றிக்கொள்வதைச் சங்கடமாக உணர்கின்றார்கள். ஆனால் நாளடைவில் அதனால் உடல் பாதிக்கப்படுகின்றபோது அது எதனால் ஏற்பட்டது; எதனால் புற்றுநோய் உண்டானது என்பதை அறியாமலேயே இறந்துபோய்விடுகின்றார்கள்.
மனசாட்சியுள்ள மருத்துவர்கள் நினைத்திருந்தால் இதை மக்களுக்கு எடுத்துச் சொல்லி விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கலாம். ஆனால் அத்தகைய மருத்துவர்கள் மிக மிக அரிதாகத்தானே இருக்கின்றார்கள். அவர்கள் வெளிப்படையாக எடுத்துச் சொன்னாலும், அவர்களுடைய செய்திகளெல்லாம் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குமேல் பரவாமல், காணாமல்போய்விடும். விளம்பர உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிற மக்களுக்கு எதையுமே ஒரு நடிகரோ ஒரு நடிகையோ திரையில் தோன்றி சொன்னால்தான் நம்புவார்கள்.
கார்ப்பரேட் கம்பெனி முதலாளிகள் முதலில் ஒரு பொருளை மக்களுக்கு அறிமுகப்படுத்தி விற்பனை செய்து பணத்தை அள்ளுவார்கள். பிறகு அதனால் ஏற்படும் தொல்லைகளுக்கும் நோய்களுக்கும் மருந்தைக் கண்டுபிடித்து, அதையும் விற்றுப் பணத்தை அள்ளுவார்கள். அந்த வகையில் நாப்கின்கள் மூலம் கோடிக்கணக்கான பணத்தை அள்ளியவர்கள், இப்போது அதனால் ஏற்படும் நோய்க்கான மருந்தைக் கண்டறிந்து அதை விற்றுப் பணத்தை அள்ள இருக்கின்றார்கள். ஆகவே அவர்கள் எதை அறிமுகப்படுத்தினாலும் பணத்தை அள்ளுவதே அவர்களின் நோக்கமாகும். நாம்தாம் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும்; எது நமக்கு நல்லது என்பதை உய்த்துணர்ந்து பயன்படுத்த வேண்டும்.
தற்போது வரவிருக்கிற தடுப்பூசியின் விலை ரூ. 200 முதல் 400 வரை இருக்கலாம் என்று சொல்கிறார்கள். மிகக் குறைந்த விலைதான். ஆனால் இதன்மூலம் புற்றுநோய் அறவே வராமல் தடுக்க முடியுமா? இனி அறவே வராது என்று உறுதியாகக் கூற முடியுமா?
அதற்குப் பதிலாக நம் பெண்கள் சிரமம் பாராமல் இயற்கைக்கு மாறினால் எந்தத் தொல்லையுமின்றி நிம்மதியாக வாழலாம். பல்வேறு கம்பெனிகள் விற்பனை செய்கிற இரசாயன நாப்கின்களைப் பயன்படுத்துவதை விட்டுவிட்டு, பருத்தித் துணியையே பயன்படுத்தட்டும். அல்லது தற்போது சந்தையில் விற்பனைக்கு வந்துள்ள பருத்தித் துணியால் செய்யப்பட்ட நாப்கின்கள் (Cotton Cloth Sanitary Napkins), இரசாயனக் கலப்பற்ற மூலிகை நாப்கின்கள் (Organic napkins) ஆகியவற்றைப் பயன்படுத்தட்டும்.
எல்லோரும் இயற்கையோடு ஒன்றி, ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்பதே எமது எண்ணம்.
அன்புடன்
நூ. அப்துல் ஹாதி பாகவி
02 09 2022
04 02 1444
கூடுதல் தகவலுக்கு இங்கே சொடுக்குக:
வியாழன், 25 ஆகஸ்ட், 2022
பிரார்த்தனையின் பலன்கள்-11
பிரார்த்தனையின் பலன்கள்-11
-மௌலவி முனைவர் நூ. அப்துல் ஹாதி பாகவி
(இமாம், மதீனா மஸ்ஜித்-பட்டினப்பாக்கம்,
சென்னை)
---------------------
தொழுகைக்குப்பின்
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
கடமையான ஒவ்வொரு தொழுகைக்குப் பின்னரும் பல்வேறு பிரார்த்தனைகளைச்
செய்துள்ளார்கள். ஆனால் இன்றைய மக்களுள் பெரும்பாலோர் தொழுது முடித்ததும் அவசர
அவசரமாகப் பள்ளியைவிட்டுப் புறப்பட்டுச் செல்கின்றார்கள். அவர்கள் தொழுத
தொழுகையில் முழுமையான அமைதி கிடைத்ததா என்றுகூட அவர்களுக்குத் தெரியாது. தம்முடைய
நாட்டங்களையும் தேவைகளையும் நிறைவேற்றித் தருமாறு படைத்த அல்லாஹ்விடம் கெஞ்சிக்
கேட்க வேண்டும் என்பதைச் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை; அதற்காக
அவர்கள் நேரம் ஒதுக்குவதே இல்லை.
கடமையான தொழுகையை முடித்தபின் பல்வேறு
பிரார்த்தனைகளையும் திக்ருகளையும் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
கேட்டுள்ளார்கள்; ஓதியுள்ளார்கள்.
அவற்றை நாம் மனனம் செய்துவைத்துக்கொண்டு நம்மால் இயன்ற அளவு நாள்தோறும் ஓதிவர
வேண்டும். அதைத் தெரிவிப்பதே இக்கட்டுரையின் நோக்கம்.
முஆத் பின் ஜபல் ரளியல்லாஹு அன்ஹு
கூறுகிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் எனது கையைப் பிடித்து,
“முஆதே அல்லாஹ்வின் மீதாணையாக நான் உன்னை நேசிக்கின்றேன்.
அல்லாஹ்வின் மீதாணையாக நான் உன்னை நேசிக்கின்றேன். முஆதே ஒவ்வொரு தொழுகைக்குப்
பிறகும்
اَللَّهُمَّ أَعِنِّيْ
عَلَى ذِكْرِكَ، وَشُكْرِكَ، وَحُسْنِ عِبَادَتِكَ
அல்லாஹும்ம அஇன்னீ அலா திக்ரிக வஷுக்ரிக
வஹுஸ்னி இபாததிக (இறைவா உன்னை நினைப்பதற்கும் உனக்கு நன்றி செலுத்துவதற்கும் அழகிய
முறையில் உன்னை வணங்குவதற்கும் எனக்கு உதவிபுரிவாயாக) என்று கூறுவதை நீ
விட்டுவிடாதே என உனக்கு நான் வலியுறுத்துகிறேன்” என்று
கூறினார்கள். (அபூதாவூத்: 1301)
அல்லாஹ்வை நினைவுகூர்தல்,
அவனுக்கு
நன்றி செலுத்துதல், அவனை
நல்ல முறையில் வழிபடுதல் ஆகியவற்றை நபியவர்கள் கேட்டுள்ளார்கள். நம்முடைய ஒவ்வொரு
கணமும் பொழுதும் நம்மைப் பரிபாலித்துப் பாதுகாக்கின்ற இறைவனுக்கு நாம் நன்றி
செலுத்துபவர்களாக இருக்க வேண்டும். அந்த நன்றியுணர்வைத்தான் இறைவன் நம்மிடமிருந்து
எதிர்பார்க்கிறான். நாம் அவனுக்கு நன்றி செலுத்துவோராக இருந்தால் அவன் நமக்கு
மேன்மேலும் வழங்குவதாகக் கூறியுள்ளான்: “நீங்கள்
(எனக்கு) நன்றி செலுத்தினால் நிச்சயமாக நான் உங்களுக்கு (என் அருட்கொடைகளை) அதிகப்படுத்துவேன்.”
(14: 7)
அவ்வாறு நன்றியுடையோராக இருப்பதும்
இறைவனிடமிருந்தே நமக்குக் கிடைக்க வேண்டிய பெரும்பாக்கியமாகும். எனவேதான் தொழுது
முடித்ததும் அவனிடமே அத்தகைய பாக்கியத்தைக் கேட்கிறோம். மேலும் நல்ல முறையில்
அவனை வழிபடுவதையும் அவனிடமே கேட்கிறோம். அவனை நல்ல முறையில் வழிபடுகின்ற
பாக்கியத்தையும் அவனே நமக்கு வழங்க வேண்டும். அவனுடைய கருணையின்றி அவனை நாம் நல்ல
முறையில் வணங்கிவிட முடியாது.
ஸவ்பான் ரளியல்லாஹு அன்ஹு அறிவித்துள்ளார்கள்:
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தொழுகையை முடித்துவிட்டால்,
மூன்று
தடவை அஸ்த்தஃக்ஃபிருல்லாஹ் (அல்லாஹ்விடம் நான் பாவமன்னிப்புத் தேடுகிறேன்) என்று
கூறுவார்கள். பின்னர்,
اَللَّهُمَّ أَنْتَ
السَّلَامُ وَمِنْكَ السَّلَامُ، تَبَارَكْتَ ذَا الْجَلَالِ وَالْإِكْرَامِ
அல்லாஹும்ம அன்த்தஸ் ஸலாம் வமின்கஸ் ஸலாம்
தபாரக்த்த யாதல் ஜலாலி வல்இக்ராம் (பொருள்: (இறைவா, நீ
சாந்தியளிப்பவன். உன்னிடமிருந்தே சாந்தி ஏற்படுகிறது. வலிமையும் மேன்மையும்
உடையவனே! நீ சுபிட்சமிக்கவன்) என்று கூறுவார்கள். (இப்னுமாஜா: 918)
அல்லாஹ்தான் மக்களுக்கு அமைதியையும்
நிம்மதியையும் வழங்குகிறான். அவனிடமிருந்தே அவை கிடைக்கப்பெறுகின்றன. எனவே அவனிடமே
நாம் மனஅமைதியையும் நிம்மதியையும் கேட்க வேண்டும். அதையே ஒவ்வொரு தொழுகைக்குப்
பிறகும் கேட்பதால் நமக்கு மனஅமைதி கிடைக்கிறது. அந்த மனஅமைதிக்காகத்தான் நாம் அவனை
ஒவ்வொரு நாளும் ஐவேளை தொழுது வணங்குகிறோம். எனவே இந்தக் கீர்த்தனையை (திக்ரை)
நாம் மனனம் செய்துகொண்டு ஓதி வரவேண்டும்.
உம்முஸலமா ரளியல்லாஹு அன்ஹா
அறிவித்துள்ளார்கள்: நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அதிகாலைத் தொழுகையை
முடித்துவிட்டு, ஸலாம் கூறியபின்,
اَللَّهُمَّ إِنِّيْ
أَسْأَلُكَ عِلْمًا نَافِعًا، وَرِزْقًا طَيِّبًا، وَعَمَلًا مُتَقَبَّلًا
அல்லாஹும்ம இன்னீ அஸ்அலுக்க இல்மன் நாஃபிஅவ்
வரிஸ்கன் தய்யிபவ் வஅமலம் முத்தகப்பலா (பொருள்: இறைவா! நான் உன்னிடம் பயனுள்ள
கல்வியையும், தூய்மையான
வாழ்வாதாரத்தையும், ஏற்றுக்கொள்ளத்தக்க
செயல்பாடுகளையும் கேட்கிறேன்) என்று கூறுபவர்களாக இருந்தார்கள். (இப்னுமாஜா: 915)
இதில் மிக முக்கியமான மூன்று விஷயங்களை நபி
ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கேட்டுள்ளார்கள். பயனுள்ள கல்வி, தூய்மையான
வாழ்வாதாரம், ஏற்றுக்கொள்ளத்தக்க
செயல்பாடு ஆகியவையே அவை. இம்மூன்றும் ஒவ்வொருவருக்கும் இன்றியமையாதவை ஆகும்.
ஒவ்வொருவரும் கேட்க வேண்டியவை ஆகும்.
பயனுள்ள கல்வியைக் கற்பதன்மூலம் நன்மை;
அதனைக்
கற்பிப்பதன் மூலம் நன்மை; அதை
மக்கள் மத்தியில் பரப்புவதன்மூலம் நன்மை. இப்படிப் பலவிதமான நன்மைகளை உள்ளடக்கிய
பயன்மிகு கல்வியை நபியவர்கள் கேட்டுள்ளார்கள். எனவே நாமும் பயனுள்ள கல்வியை
இறைவனிடம் கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும்.
இரண்டாவது ‘தூய்மையான
வாழ்வாதாரம்’ மிக முக்கியமானது.
எப்படி வேண்டுமானாலும் சம்பாதித்து எதை வேண்டுமானாலும் சாப்பிடுதல் எனும் தீய
பழக்கத்திலிருந்து விலகி, நியாயமாகச்
சம்பாதித்து, தூய்மையான உணவை
மட்டுமே உண்ண வேண்டும் என்ற நல்லெண்ணத்தை மனத்தில் பதிய வைத்துக்கொள்ளும்
பொருட்டு தூய்மையான வாழ்வாதாரத்தை அல்லாஹ்விடம் கேட்டுள்ளார்கள். அதை நமக்கான
பாடமாக விட்டுச் சென்றுள்ளார்கள். நாமும் அத்தகைய தூய்மையான வாழ்வாதாரத்தை
அல்லாஹ்விடம் கேட்கும்போது நமக்கு அவன் தூய்மையான வாழ்வாதாரத்தை வழங்குவான்.
தூய்மையான உணவை உண்பதால் நற்சிந்தனைகளும் நல்லெண்ணங்களும் நமக்குள் ஏற்படுவதோடு
இறையச்சமும் பெருகும்.
‘ஏற்றுக்கொள்ளத்தக்க
செயல்பாடு’ முற்றிலும்
முக்கியமானதாகும். ஏனெனில் நாம் பல்வேறு முயற்சிகள் செய்து ஏராளமான நல்லறங்களைச்
செய்கிறோம். அவை அல்லாஹ்விற்காகவே செய்யப்பட்டவையாக இருக்க வேண்டும். அவற்றை அவன்
ஏற்றுக்கொண்டு நமக்கு அவற்றிற்கான நற்கூலியை மறுமையில் முழுமையாகத் தரவேண்டும்.
மாறாக நம்முடைய செயல்பாடுகள் அல்லாஹ்விடம் ஏற்கப்படாமல் போய்விட்டால் நாளை
மறுமையில் நாம் நன்மை ஏதும் இல்லாதவர்களாக நிற்கவேண்டிய பரிதாப நிலை
ஏற்பட்டுவிடும். எனவே ‘அல்லாஹ்வே
எங்களின் நல்லறங்களை ஏற்றுக்கொள்வாயாக’ என்று
நாம் ஒவ்வொரு நாளும் அவனிடம் பிரார்த்தனை செய்ய வேண்டும்.
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
கூறியதாக அப்துல்லாஹ் பின் அம்ர் ரளியல்லாஹு அன்ஹு அறிவித்துள்ளதாவது: இரண்டு
நற்குணங்கள் உள்ளன. அவ்விரண்டையும் பின்பற்றி நடப்பவர் சொர்க்கத்தில் நுழையாமல்
இருக்கமாட்டார். அவ்விரண்டும் எளிதானது.
(ஆனால்) அவற்றைச் செயல்படுத்துபவர் குறைவு. ஒவ்வொரு தொழுகைக்குப் பிறகும்,
பத்துத்
தடவை ஸுப்ஹானல்லாஹ், பத்துத்
தடவை அல்லாஹு அக்பர், பத்துத்
தடவை அல்ஹம்து லில்லாஹ் என்று கூறவேண்டும். (அதைக் கூறியபோது) அல்லாஹ்வின் தூதர்
ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தம் கைவிரலில் அதை எண்ணிக்காட்டியதை நான் பார்த்தேன். ஆக,
அவற்றை
நாவில் சொல்ல (ஐந்து தொழுகைகளுக்கும் சேர்த்து) நூற்றைம்பது தடவையாகும்.
தராசிலோ ஆயிரத்து ஐந்நூறு தடவையாகும்... (நூல்: இப்னுமாஜா: 916)
இந்த நபிமொழியின் அடிப்படையில் ஒவ்வொரு
தொழுகைக்குப் பின்பும் பத்துப் பத்துத் தடவை ஸுப்ஹானல்லாஹ்,
அல்ஹம்து
லில்லாஹ், அல்லாஹு அக்பர் கூற
வேண்டும் என்பதை நாம் அறிகிறோம். மற்றொரு நபிமொழியின் அடிப்படையில் மேற்கண்ட
திக்ருகள் ஒவ்வொன்றையும் முப்பத்து மூன்று தடவை கூற வேண்டுமெனப் பதிவு
செய்யப்பட்டுள்ளது. ஆக இந்த நபிமொழியையும் நம்முள் பெரும்பாலோர் ஒவ்வொரு நாளும்
செயல்படுத்திக்கொண்டிருக்கிறோம்.
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
ஒவ்வொரு தொழுகைக்குப் பின்னரும் பின்வரும் பிரார்த்தனையைச் செய்துள்ளார்கள்.
முஃகீரா பின் ஷுஅபா ரளியல்லாஹு அன்ஹு
அவர்களின் முன்னாள் அடிமை வர்ராத் ரஹிமஹுல்லாஹ் அறிவித்துள்ளார்கள்: முஃகீரா
ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் முஆவியா பின் அபீசுஃப்யான் ரளியல்லாஹு அன்ஹு
அவர்களுக்குக் கடிதம் எழுதினார்கள். அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
(தொழுகையை முடித்து) ஸலாம் உரைத்தால் ஒவ்வொரு தொழுகைக்குப் பின்னரும்,
لاَ إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لاَ شَرِيْكَ لَهُ، لَهُ الْـمُلْكُ،
وَلَهُ الْحَمْدُ، وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيْرٌ، اَللَّهُمَّ لاَ مَانِعَ
لِمَا أَعْطَيْتَ، وَلاَ مُعْطِيَ لِمَا مَنَعْتَ، وَلاَ يَنْفَعُ ذَا الْجَدِّ
مِنْكَ الجَدُّ.
லாஇலாஹ இல்லல்லாஹ் வஹ்தஹு லாஷரீக்க லஹு,
லஹுல்
முல்கு வலஹுல் ஹம்து வஹுவ அலா குல்லி ஷையின் கதீர். அல்லாஹும்ம லா மானிஅ லிமா
அஉதைத்த வலா முஉத்திய லிமா மனஅத்த வலா யன்ஃபஉ தல் ஜத்தி மின்கல் ஜத்து.
(பொருள்: வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத்
தவிர வேறு யாருமில்லை; அவன்
தனித்தவன்; அவனுக்கு யாதோர்
இணையுமில்லை; அவனுக்கே அரசாட்சி;
அவனுக்கே
புகழ் யாவும்; அவன் எல்லாப்
பொருளின்மீதும் ஆற்றல்மிக்கவன். இறைவா! நீ கொடுக்க நினைத்ததைத் தடுப்போர்
யாருமில்லை; நீ தடுக்க
நினைத்ததைக் கொடுப்போர் யாருமில்லை; முயற்சியுடையோரின்
எந்த முயற்சியும் உன்னையன்றி எப்பயனுமளிக்காது) என்று ஓதுபவர்களாக இருந்தார்கள்.
(நூல்: புகாரீ: 844)
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
கடமையான தொழுகையை முடித்ததும் மேற்கண்ட பிரார்த்தனைகளை ஓதக்
கற்றுக்கொடுத்துள்ளதன் மூலம், ஒவ்வொருவரும்
தத்தம் இறைநம்பிக்கையைப் புதுப்பித்துக்கொள்வதோடு, அல்லாஹ்வின்
ஆற்றலை மீறி எதுவும் நடந்துவிடாது என்ற நம்பிக்கையையும் மனதில் பதியவைத்துக்கொள்ள
வழிகாட்டியுள்ளார்கள். எனவே நம்முள் ஒருவர் இந்தப் பிரார்த்தனையைச் செய்கின்றபோது
அவரின் இறைநம்பிக்கை மேன்மேலும் வலுப்படுகிறது; அது
மனதில் ஆழமாகப் பதிந்துவிடுகிறது. அத்தகைய இறைநம்பிக்கை தொழுகின்ற ஒவ்வொருவரின்
உள்ளத்திலும் ஆணித்தரமாகப் பதிய வேண்டும்.
மேற்கண்ட பிரார்த்தனையின் உட்கருத்து
அல்குர்ஆனில் காணப்படுகிறது. அல்லாஹ் மக்களுக்குத் திறக்கின்ற எந்த அருளையும்,
அதைத்
தடுத்து நிறுத்துகின்றவர் யாருமில்லை. அவன் தடுத்து நிறுத்துவதை அதன் பிறகு
அனுப்புபவன் யாருமில்லை. (35: 2)
ஆக இவ்வாறு பல்வேறு திக்ருகளை நபியவர்கள்
ஓதியுள்ளார்கள். நாமும் அவற்றை ஓதி நம்முடைய இறைநம்பிக்கையை
வலுப்படுத்திக்கொள்வோமாக.
சனி, 20 ஆகஸ்ட், 2022
உடலுறுப்புகளைத் தானம் செய்யலாமா?
-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி
பிஎச்.டி.
-----------------------------
மனித உடலின் உறுப்புகள் ஒவ்வொன்றும் மிக மிக
முக்கியமானவை. அவை நமக்கு இறைவனால்
அடைக்கலப்பொருள்களாக வழங்கப்பட்டுள்ளன. எனவே அவற்றைப் பேணி காப்பது நம்
கடமை. நம் உடலில் உள்ள ஓர் உறுப்பு
பாதிக்கப்பட்டாலும் அதைச் சரிசெய்வது அவ்வளவு எளிதானதன்று. இன்று இருசக்கர வாகனங்களிலும் மகிழுந்துகளிலும்
பயணம் செய்யும் இளைஞர்கள் மிக வேகமாக அவற்றைச் செலுத்துவதால் அவை அவர்களின்
கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகின்றார்கள். அதனால் உயிரிழப்புகளும்
உடலுறுப்புகள் இழப்புகளும் எதிர்பாராவிதமாக ஏற்படுகின்றன. உயிரிழப்பு அடைந்தோரின்
வாழ்க்கை அத்தோடு முடிந்துபோய்விடுகிறது. ஆனால் உடலுறுப்புகளை இழந்து எஞ்சிய
வாழ்க்கையைக் கழிக்க மிகவும் சிரமப்படுவோரைக் காணும்போதுதான் பரிதாபமாக
இருக்கிறது. அவர்கள் அடையும் வேதனையும் அனுபவிக்கும் இன்னல்களும் சொல்லி
மாளாது.
மற்றொரு புறம் தவறான உணவுப் பழக்கம்,
போதைப்
பழக்கம் ஆகியவற்றால் உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டு, அறுவைச்
சிகிச்சை செய்ய நேரிடுகிறது. சர்க்கரை-நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு காலை
எடுக்க வேண்டிய பரிதாப நிலை ஏற்பட்டு விடுகிறது. அதன்பின் அவர்கள் தம் எஞ்சிய
வாழ்க்கையை மிகவும் சிரமப்பட்டே கழிக்க வேண்டியுள்ளது. மது,
புகையிலை,
சிகரெட்,
பீடி,
கஞ்சா
உள்ளிட்ட போதைப் பொருள்களுக்கு அடிமையாகி, அவற்றைத்
தொடர்ந்து உட்கொண்டு அதனால் உடலுறுப்புகள் பாதிக்கப்பட்டு,
கருகி,
அழுகி
விடுவதுண்டு. அவற்றை அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றி அப்புறப்படுத்திவிட்டுப் புதிய
உறுப்புகள் பொருத்த வேண்டிய நிலை ஏற்படும். கணையம், கல்லீரல்,
சிறுநீரகம்
உள்ளிட்ட உடலுறுப்புகள் அவ்வளவு எளிதில் கிடைத்துவிடுவதில்லை. அவை கிடைத்து,
உரிய
முறையில் பொருத்தப்பட்டாலும் மீண்டும் பழையபடி இயல்பாக வாழ முடியுமா என்பது
கேள்விக்குறியே ஆகும்.
உடலுறுப்புகள் தானம் செய்யப்படுவதை இஸ்லாமிய
மார்க்கம் ஏற்றுக்கொள்வதில்லை. ஏனெனில் மனிதன் கண்ணியமானவன். அவனுடைய
உடலுறுப்புகளை அவனுடைய பயன்பாட்டிற்காகவே இறைவன் படைத்துள்ளான். அவற்றை அவன் உரிய
முறையில் பயன்படுத்துவதும் பாதுகாப்பதும் அவனுடைய கடமையாகும். அவற்றைப் பிறருக்கு
வழங்க அவனுக்கு அனுமதி இல்லை; எந்த
உரிமையும் இல்லை.
இந்த வகையில் ஒருவரின் சிறுநீரகம்
பழுதடைந்துவிட்டால் மற்றொருவரின் சிறுநீரகத்தை அவருக்குப் பொருத்தலாம் என்பது
இன்றைய மருத்துவ அறிவியல் வளர்ச்சியாகும். ஒருவருக்கு இரண்டு சிறுநீரகங்கள்
இருப்பதால் அவற்றுள் ஒன்றைத் தானமாகக் கொடுத்தாலும் அவரால் நல்லபடியாக வாழ
முடியும் என்பது இன்றைய மருத்துவர்களின் வாதம். இதனால் சிறுநீரகத் தானம் மக்கள் மத்தியில் ஊக்குவிக்கப்படுகிறது;
விளம்பரப்படுத்தப்படுகிறது.
ஆனால் மாற்றுச் சிறுநீரகம் பொருத்திக்கொண்டோருள் பெரும்பாலோர் சில
ஆண்டுகளுக்கு மேல் வாழ முடிவதில்லை என்பதே உண்மை வரலாறு.
மாற்றுச் சிறுநீரகங்களைப் பெறுவதற்காகக்
காத்திருப்போர் பலர் பல தில்லுமுல்லுகளைச் செய்து, பிறருக்கு முதலில் கிடைக்க
வேண்டியதைத் தமக்கு வழங்கிடுமாறு கோரி, அதற்காக
மருத்துவர்களிடம் பேரம் பேசுகிறார்கள். பல இலட்சங்கள் அதற்காகக் கைமாறுகின்றன.
சிலரின் ஏழ்மையைப் பயன்படுத்தி, பணத்தாசை
காட்டி அவர்களிடமிருந்து சிறுநீரகங்கள் பெறப்படுகின்றன. சிலரின் உடல்களிலிருந்து
சிறுநீரகங்கள் திருடப்படுகின்றன. இதன் பின்னணியில் ஒரு கள்ளச் சந்தையே நடைபெற்று
வருகிறது.
சிறுநீரகங்களைத் தாண்டி,
இன்று
பல்வேறு உறுப்புகள் மாற்று அறுவைச் சிகிச்சை மூலம் பொருத்தப்படுகின்றன. ஆனால்
அந்த உடலுறுப்புகள் இறந்தோரின் உடலிலிருந்து தானமாகப் பெறப்படுகின்றன.
இறந்தோரின் உடலிலிருந்து மருத்துவத் துறைக்குத் தேவையான உடலுறுப்புகள் எடுத்துக் கொள்ளப்பட்டு எஞ்சிய பாகங்களைத்
தைத்துக் கொடுத்துவிடுவார்கள். உறவினர்கள் அதை வாங்கிச் சென்று,
இறுதிச்
சடங்குகளெல்லாம் செய்தபின் எரிப்பார்கள் அல்லது புதைப்பார்கள். இது கடந்த கால
நிகழ்வு. ஆனால் இன்று உடல் முழுவதுமே மருத்துவத் துறையால் பயன்படுத்தப்படுகிறது.
கை, கால்,
தோல்,
முடி
உள்ளிட்ட அனைத்தும் மாற்று உறுப்புகளாகப் பயன்படுத்தப்படுகின்றன.
இறந்துபோகின்ற எல்லோரின் உடலும் மருத்துவத்
துறைக்குத் தானமாகக் கிடைத்துவிடுவதில்லை; அதுபோலவே
எல்லா உறுப்புகளும் தானமாகக் கிடைத்துவிடுவதில்லை. எனவே மனித உறுப்புகளைப் பெற,
அவற்றின்மூலம்
பணம் சம்பாதிக்க, மனித
விரோதிகளால் மனிதர்கள் கடத்தப்படுகிறார்கள்; அவர்களிடமிருந்து
உறுப்புகள் திருடப்படுகின்றன. மேலும் கொலையுண்ட அனைத்து உடல்களும் உடற்கூறாய்வு
(போஸ்ட் மார்ட்டம்) மேற்கொள்ளப்படுகின்றன. அவற்றிலிருந்து உடலுறுப்புகள் எந்த
அனுமதியுமின்றி எடுத்துக்கொள்ளப்படுகின்றன. இவையெல்லாம் சந்தையில் கள்ளத்தனமாக
விற்கப்படுகின்றன.
இன்று மனித உறுப்புகளைப் பெறுவதற்காகப்
பல்வேறு சதிவேலைகளும் அரங்கேற்றப்படுகின்றன.
விபத்தில் சிக்குண்டு, தலையில்
அடிபட்டு நிரந்தர மயக்கநிலைக்குச் (கோமா) சென்றுவிட்டால் அவ்வளவுதான்.
"மூளைச்சாவு' என்ற
வார்த்தையை இன்றைய மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர். அந்த ஒரு வார்த்தையை வைத்தே அவரின்
உறவினர்களைப் பயமுறுத்திவிடுகின்றனர். இனி இவரால் எழுந்து நடக்கவோ சுயமாக
இயங்கவோ முடியாது. இவரை நீங்களே வீட்டில் வைத்துப் பார்த்துக்கொள்கின்றீர்களா
என்று கேட்பார்கள். உணர்வற்ற ஓர் உடலை நாள்தோறும் சுத்தப்படுத்தி,
தேவையான
மருத்துவ உதவிகளைச் செய்து கவனித்துக்கொள்ள இன்றைய அவசர உலகில் யார் முன்வருவார்?
அவர்களின் தயக்கத்தைக் காணும் மருத்துவர்கள்
அவர்களிடம், "மூளைச்சாவு
அடைந்துள்ள உங்கள் மகன் இனி எழுந்து நடக்கப்போவதில்லை. அவனுடைய உடலுறுப்புகளைத்
தானமாகக் கொடுத்தால் அதன்மூலம் பலருக்கு மறுவாழ்வு கொடுக்கலாம். உங்களுக்குப்
பொருளாதார உதவியும் கிடைக்கும்''
என்று
கூறி அவர்களின் மனதை மாற்றுவார்கள். கடைசியில் மருத்துவர்கள் தம் பேச்சில்
வெற்றிபெறுவார்கள். அவனைக் கருணைக்கொலை செய்ய, பெற்றோர்
ஒத்துக்கொள்வார்கள். பின்னர் அவனுடைய உடலுறுப்புகள் ஒவ்வொன்றும் தனித்தனியாக
எடுக்கப்பட்டு, உரியவர்களுக்குப்
பொருத்தப்படும்.
இஸ்லாமிய மார்க்கத்தைப் பொருத்த வரை,
கருணைக்
கொலை என்பது அறவே கூடாது; முற்றிலும்
தடை செய்யப்பட்டதாகும். ஒருவேளை அவர் இறந்துவிட்டாலும் அவருடைய உடலுறுப்புகள்
வெட்டியெடுக்கப்படுவதை-அங்ககீனப்படுத்தப்படுவதை இஸ்லாம் வன்மையாகக் கண்டிக்கிறது.
இதற்கு மாற்று வழியை இஸ்லாம் கூறுகிறது.
அதாவது மனித உடலில் ஏதேனும் உறுப்பு சிதைவடைந்துவிட்டால் அவ்வுறுப்பைச் செயற்கையாகச்
செய்து பொருத்திக்கொள்ளலாம். மூக்கு, பல்
உள்ளிட்ட உடலின் பாகங்கள் பாதிக்கப்பட்ட தோழர்கள் நபியவர்களிடம் இது குறித்துக்
கேட்டபோது, தங்கத்தால் அல்லது
வெள்ளியால் அவ்வுறுப்புகளைச் செய்து, பொருத்திக்
கொள்ளலாம் என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அனுமதியளித்தார்கள்.
அப்துர் ரஹ்மான் பின் தரஃபா ரஹிமஹுல்லாஹ்
கூறியதாவது: அறியாமைக் காலத்தில் நடந்த குலாப் போரில் என் பாட்டனார் அர்ஃபஜா பின்
அஸ்அத் அவர் களது மூக்கு துண்டிக்கப்பட்டது. எனவே அவர்கள் வெள்ளியால் ஆன (செயற்கை)
மூக்கு ஒன்றைச் செய்து) பொருத்திக்கொண்டார்கள். (ஆனால்) அதிலிருந்து
அவர்களுக்குத் துர்நாற்றம் வீசியது. எனவே நபி
ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், (தங்க
மூக்கு செய்துகொள்ள) பணித்தார்கள். அவ்வாறே, அவர்கள்
தங்க மூக்கு செய்து (பொருத்திக்) கொண்டார்கள். (அபூதாவூத்: 3696)
இறந்தவரின் எலும்புகளை ஒடிப்பது அவர் உயிருடன்
இருக்கும்போது உடைப்பதைப் போன்றதாகும் என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி
வஸல்லம் கூறினார்கள். (இப்னுமாஜா: 1605) இறந்த பின்னும் ஒருவரின் உடலிலிருந்து
உறுப்புகளை எடுக்கக்கூடாது என்பதற்கு இதனை அறிஞர்கள் ஆதாரமாக முன்வைக்கின்றார்கள்.
மார்க்க அறிஞர்கள் மத்தியில் கருத்துவேறுபாடு உள்ள மிக நீண்ட விவாதத்தை உடையது
இச்சட்டம்.
தற்காலத்தில் மருத்துவத்துறை மிகுந்த வளர்ச்சி
கண்டுள்ளது. அதனடிப்படையில் சென்னை, கோவை
ஆகிய நகரங்களில் செயற்கை உறுப்புகள் அரசு சார்பாகத் தயாரிக்கப்பட்டு,
ஏழைகள்
உள்ளிட்ட அனைவருக்கும் பொருத்தப்படுகின்றன.
மேலும் பிரிட்டன்-அமெரிக்கா ஆகிய இருநாட்டு
விஞ்ஞானிகள் கூட்டாகச் சேர்ந்து மனிதத் திசுக்களைச் செயற்கையான முறையில்
உருவாக்கியுள்ளனர். இதனால் எதிர்காலத்தில் மனித உடல் உறுப்புகளைப் புதிதாக
உருவாக்க முடியும். உறுப்பு மாற்றுச் சிகிச்சைக்காக இனிச் செயற்கை உறுப்புகளை
நம்பி இருக்கவோ மாற்று உறுப்புகளுக்காகக் காத்திருக்கவோ தேவையில்லை. மாறாக
இந்தத் திசுக்களைக்கொண்டு புதிய உறுப்புகளை உருவாக்கிவிடலாம் என்கின்றனர்.
ஈரலைச் செயற்கையாக உருவாக்குவது குறித்து
2011ஆம் ஆண்டு சங்கீதா பாட்டியா என்பவர் தலைமையில் ஒரு குழுவினர் ஆய்வு செய்தனர்.
அதனை அடிப்படையாகக்கொண்டே தற்போது
ஆய்வுக் கூடத்தில் செயற்கைக் கல்லீரல், செயற்கை
இதயம் உருவாக்கப்பட்டு வருகின்றன. அத்தோடு 3டி பிரிண்ட் செய்யப்பட்ட காதுகள்,
கண்கள்
செயற்கையாகத் தயாரிக்கப்படுகின்றன. அதாவது பாதிக்கப்பட்ட மனிதரின் உடலிலிருந்து
செல்களைப் பிரித்தெடுத்து, அதைக்கொண்டே
செயற்கையான முறையில் இயற்கையான உடலுறுப்புகளைப் போன்று உருவாக்குகிறார்கள்.
ஆக இத்தனை மாற்று வழிகள் இருக்கின்றபோது
இவற்றைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டுமே தவிர மனித உறுப்புகளைத் தானம்
செய்யக்கூடாது. மனித உறுப்புகளைத் தானமாகப் பெறுவதற்குத் தடைவிதித்தால்தான்
உடலுறுப்புகளுக்காகக் குழந்தைகள், சிறுவர்-சிறுமியர்,
பெண்கள்
உள்ளிட்டோர் கடத்தப்படுவதும் மூளைச் சாவு எனும் பெயரில் கருணைக்கொலை
செய்யப்படுவதும் குறையும்.














