வியாழன், 25 ஆகஸ்ட், 2022

பிரார்த்தனையின் பலன்கள்-11

  

பிரார்த்தனையின் பலன்கள்-11

-மௌலவி முனைவர் நூ. அப்துல் ஹாதி பாகவி (இமாம், மதீனா மஸ்ஜித்-பட்டினப்பாக்கம், சென்னை)

---------------------

தொழுகைக்குப்பின்

 

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கடமையான ஒவ்வொரு தொழுகைக்குப் பின்னரும் பல்வேறு பிரார்த்தனைகளைச் செய்துள்ளார்கள். ஆனால் இன்றைய மக்களுள் பெரும்பாலோர் தொழுது முடித்ததும் அவசர அவசரமாகப் பள்ளியைவிட்டுப் புறப்பட்டுச் செல்கின்றார்கள். அவர்கள் தொழுத தொழுகையில் முழுமையான அமைதி கிடைத்ததா என்றுகூட அவர்களுக்குத் தெரியாது. தம்முடைய நாட்டங்களையும் தேவைகளையும் நிறைவேற்றித் தருமாறு படைத்த அல்லாஹ்விடம் கெஞ்சிக் கேட்க வேண்டும் என்பதைச் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை; அதற்காக அவர்கள் நேரம் ஒதுக்குவதே இல்லை. 

 

கடமையான தொழுகையை முடித்தபின் பல்வேறு பிரார்த்தனைகளையும் திக்ருகளையும் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கேட்டுள்ளார்கள்; ஓதியுள்ளார்கள். அவற்றை நாம் மனனம் செய்துவைத்துக்கொண்டு நம்மால் இயன்ற அளவு நாள்தோறும் ஓதிவர வேண்டும். அதைத் தெரிவிப்பதே இக்கட்டுரையின் நோக்கம்.    

 

முஆத் பின் ஜபல் ரளியல்லாஹு அன்ஹு கூறுகிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் எனது கையைப் பிடித்து, “முஆதே அல்லாஹ்வின் மீதாணையாக நான் உன்னை நேசிக்கின்றேன். அல்லாஹ்வின் மீதாணையாக நான் உன்னை நேசிக்கின்றேன். முஆதே ஒவ்வொரு தொழுகைக்குப் பிறகும்

اَللَّهُمَّ أَعِنِّيْ عَلَى ذِكْرِكَ، وَشُكْرِكَ، وَحُسْنِ عِبَادَتِكَ

 

அல்லாஹும்ம அஇன்னீ அலா திக்ரிக வஷுக்ரிக வஹுஸ்னி இபாததிக (இறைவா உன்னை நினைப்பதற்கும் உனக்கு நன்றி செலுத்துவதற்கும் அழகிய முறையில் உன்னை வணங்குவதற்கும் எனக்கு உதவிபுரிவாயாக) என்று கூறுவதை நீ விட்டுவிடாதே என உனக்கு நான் வலியுறுத்துகிறேன்என்று கூறினார்கள். (அபூதாவூத்: 1301)

 

அல்லாஹ்வை நினைவுகூர்தல், அவனுக்கு நன்றி செலுத்துதல், அவனை நல்ல முறையில் வழிபடுதல் ஆகியவற்றை நபியவர்கள் கேட்டுள்ளார்கள். நம்முடைய ஒவ்வொரு கணமும் பொழுதும் நம்மைப் பரிபாலித்துப் பாதுகாக்கின்ற இறைவனுக்கு நாம் நன்றி செலுத்துபவர்களாக இருக்க வேண்டும். அந்த நன்றியுணர்வைத்தான் இறைவன் நம்மிடமிருந்து எதிர்பார்க்கிறான். நாம் அவனுக்கு நன்றி செலுத்துவோராக இருந்தால் அவன் நமக்கு மேன்மேலும் வழங்குவதாகக் கூறியுள்ளான்: நீங்கள் (எனக்கு) நன்றி செலுத்தினால் நிச்சயமாக நான் உங்களுக்கு (என் அருட்கொடைகளை) அதிகப்படுத்துவேன்.” (14: 7)

 

அவ்வாறு நன்றியுடையோராக இருப்பதும் இறைவனிடமிருந்தே நமக்குக் கிடைக்க வேண்டிய பெரும்பாக்கியமாகும். எனவேதான் தொழுது முடித்ததும் அவனிடமே அத்தகைய பாக்கியத்தைக் கேட்கிறோம். மேலும் நல்ல முறையில் அவனை வழிபடுவதையும் அவனிடமே கேட்கிறோம். அவனை நல்ல முறையில் வழிபடுகின்ற பாக்கியத்தையும் அவனே நமக்கு வழங்க வேண்டும். அவனுடைய கருணையின்றி அவனை நாம் நல்ல முறையில் வணங்கிவிட முடியாது.

 

ஸவ்பான் ரளியல்லாஹு அன்ஹு அறிவித்துள்ளார்கள்: அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தொழுகையை முடித்துவிட்டால், மூன்று தடவை அஸ்த்தஃக்ஃபிருல்லாஹ் (அல்லாஹ்விடம் நான் பாவமன்னிப்புத் தேடுகிறேன்) என்று கூறுவார்கள். பின்னர்,

اَللَّهُمَّ أَنْتَ السَّلَامُ وَمِنْكَ السَّلَامُ، تَبَارَكْتَ ذَا الْجَلَالِ وَالْإِكْرَامِ

அல்லாஹும்ம அன்த்தஸ் ஸலாம் வமின்கஸ் ஸலாம் தபாரக்த்த யாதல் ஜலாலி வல்இக்ராம் (பொருள்: (இறைவா, நீ சாந்தியளிப்பவன். உன்னிடமிருந்தே சாந்தி ஏற்படுகிறது. வலிமையும் மேன்மையும் உடையவனே! நீ சுபிட்சமிக்கவன்) என்று கூறுவார்கள். (இப்னுமாஜா: 918)

 

அல்லாஹ்தான் மக்களுக்கு அமைதியையும் நிம்மதியையும் வழங்குகிறான். அவனிடமிருந்தே அவை கிடைக்கப்பெறுகின்றன. எனவே அவனிடமே நாம் மனஅமைதியையும் நிம்மதியையும் கேட்க வேண்டும். அதையே ஒவ்வொரு தொழுகைக்குப் பிறகும் கேட்பதால் நமக்கு மனஅமைதி கிடைக்கிறது. அந்த மனஅமைதிக்காகத்தான் நாம் அவனை ஒவ்வொரு நாளும் ஐவேளை தொழுது வணங்குகிறோம். எனவே இந்தக் கீர்த்தனையை (திக்ரை) நாம் மனனம் செய்துகொண்டு ஓதி வரவேண்டும்.

 

உம்முஸலமா ரளியல்லாஹு அன்ஹா அறிவித்துள்ளார்கள்: நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அதிகாலைத் தொழுகையை முடித்துவிட்டு, ஸலாம் கூறியபின்,

اَللَّهُمَّ إِنِّيْ أَسْأَلُكَ عِلْمًا نَافِعًا، وَرِزْقًا طَيِّبًا، وَعَمَلًا مُتَقَبَّلًا

 

அல்லாஹும்ம இன்னீ அஸ்அலுக்க இல்மன் நாஃபிஅவ் வரிஸ்கன் தய்யிபவ் வஅமலம் முத்தகப்பலா (பொருள்: இறைவா! நான் உன்னிடம் பயனுள்ள கல்வியையும், தூய்மையான வாழ்வாதாரத்தையும், ஏற்றுக்கொள்ளத்தக்க செயல்பாடுகளையும் கேட்கிறேன்) என்று கூறுபவர்களாக இருந்தார்கள். (இப்னுமாஜா: 915)

 

இதில் மிக முக்கியமான மூன்று விஷயங்களை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கேட்டுள்ளார்கள். பயனுள்ள கல்வி, தூய்மையான வாழ்வாதாரம், ஏற்றுக்கொள்ளத்தக்க செயல்பாடு ஆகியவையே அவை. இம்மூன்றும் ஒவ்வொருவருக்கும் இன்றியமையாதவை ஆகும். ஒவ்வொருவரும் கேட்க வேண்டியவை ஆகும்.

 

பயனுள்ள கல்வியைக் கற்பதன்மூலம் நன்மை; அதனைக் கற்பிப்பதன் மூலம் நன்மை; அதை மக்கள் மத்தியில் பரப்புவதன்மூலம் நன்மை. இப்படிப் பலவிதமான நன்மைகளை உள்ளடக்கிய பயன்மிகு கல்வியை நபியவர்கள் கேட்டுள்ளார்கள். எனவே நாமும் பயனுள்ள கல்வியை இறைவனிடம் கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும். 

 

இரண்டாவது தூய்மையான வாழ்வாதாரம்மிக முக்கியமானது. எப்படி வேண்டுமானாலும் சம்பாதித்து எதை வேண்டுமானாலும் சாப்பிடுதல் எனும் தீய பழக்கத்திலிருந்து விலகி, நியாயமாகச் சம்பாதித்து, தூய்மையான உணவை மட்டுமே உண்ண வேண்டும் என்ற நல்லெண்ணத்தை மனத்தில் பதிய வைத்துக்கொள்ளும் பொருட்டு தூய்மையான வாழ்வாதாரத்தை அல்லாஹ்விடம் கேட்டுள்ளார்கள். அதை நமக்கான பாடமாக விட்டுச் சென்றுள்ளார்கள். நாமும் அத்தகைய தூய்மையான வாழ்வாதாரத்தை அல்லாஹ்விடம் கேட்கும்போது நமக்கு அவன் தூய்மையான வாழ்வாதாரத்தை வழங்குவான். தூய்மையான உணவை உண்பதால் நற்சிந்தனைகளும் நல்லெண்ணங்களும் நமக்குள் ஏற்படுவதோடு இறையச்சமும் பெருகும். 

 

 

ஏற்றுக்கொள்ளத்தக்க செயல்பாடுமுற்றிலும் முக்கியமானதாகும். ஏனெனில் நாம் பல்வேறு முயற்சிகள் செய்து ஏராளமான நல்லறங்களைச் செய்கிறோம். அவை அல்லாஹ்விற்காகவே செய்யப்பட்டவையாக இருக்க வேண்டும். அவற்றை அவன் ஏற்றுக்கொண்டு நமக்கு அவற்றிற்கான நற்கூலியை மறுமையில் முழுமையாகத் தரவேண்டும். மாறாக நம்முடைய செயல்பாடுகள் அல்லாஹ்விடம் ஏற்கப்படாமல் போய்விட்டால் நாளை மறுமையில் நாம் நன்மை ஏதும் இல்லாதவர்களாக நிற்கவேண்டிய பரிதாப நிலை ஏற்பட்டுவிடும். எனவே அல்லாஹ்வே எங்களின் நல்லறங்களை ஏற்றுக்கொள்வாயாகஎன்று நாம் ஒவ்வொரு நாளும் அவனிடம் பிரார்த்தனை செய்ய வேண்டும்.  

 

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அப்துல்லாஹ் பின் அம்ர் ரளியல்லாஹு அன்ஹு அறிவித்துள்ளதாவது: இரண்டு நற்குணங்கள் உள்ளன. அவ்விரண்டையும் பின்பற்றி நடப்பவர் சொர்க்கத்தில் நுழையாமல் இருக்கமாட்டார். அவ்விரண்டும் எளிதானது.  (ஆனால்) அவற்றைச் செயல்படுத்துபவர் குறைவு. ஒவ்வொரு தொழுகைக்குப் பிறகும், பத்துத் தடவை ஸுப்ஹானல்லாஹ், பத்துத் தடவை அல்லாஹு அக்பர், பத்துத் தடவை அல்ஹம்து லில்லாஹ் என்று கூறவேண்டும். (அதைக் கூறியபோது) அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தம் கைவிரலில் அதை எண்ணிக்காட்டியதை நான் பார்த்தேன். ஆக, அவற்றை நாவில் சொல்ல (ஐந்து தொழுகைகளுக்கும் சேர்த்து) நூற்றைம்பது தடவையாகும். தராசிலோ ஆயிரத்து ஐந்நூறு தடவையாகும்... (நூல்: இப்னுமாஜா: 916)

 

இந்த நபிமொழியின் அடிப்படையில் ஒவ்வொரு தொழுகைக்குப் பின்பும் பத்துப் பத்துத் தடவை ஸுப்ஹானல்லாஹ், அல்ஹம்து லில்லாஹ், அல்லாஹு அக்பர் கூற வேண்டும் என்பதை நாம் அறிகிறோம். மற்றொரு நபிமொழியின் அடிப்படையில் மேற்கண்ட திக்ருகள் ஒவ்வொன்றையும் முப்பத்து மூன்று தடவை கூற வேண்டுமெனப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆக இந்த நபிமொழியையும் நம்முள் பெரும்பாலோர் ஒவ்வொரு நாளும் செயல்படுத்திக்கொண்டிருக்கிறோம்.

 

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஒவ்வொரு தொழுகைக்குப் பின்னரும் பின்வரும் பிரார்த்தனையைச் செய்துள்ளார்கள்.

முஃகீரா பின் ஷுஅபா ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் முன்னாள் அடிமை வர்ராத் ரஹிமஹுல்லாஹ் அறிவித்துள்ளார்கள்: முஃகீரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் முஆவியா பின் அபீசுஃப்யான் ரளியல்லாஹு அன்ஹு அவர்களுக்குக் கடிதம் எழுதினார்கள். அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் (தொழுகையை முடித்து) ஸலாம் உரைத்தால் ஒவ்வொரு தொழுகைக்குப் பின்னரும்,

لاَ إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لاَ شَرِيْكَ لَهُ، لَهُ الْـمُلْكُ، وَلَهُ الْحَمْدُ، وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيْرٌ، اَللَّهُمَّ لاَ مَانِعَ لِمَا أَعْطَيْتَ، وَلاَ مُعْطِيَ لِمَا مَنَعْتَ، وَلاَ يَنْفَعُ ذَا الْجَدِّ مِنْكَ الجَدُّ.

லாஇலாஹ இல்லல்லாஹ் வஹ்தஹு லாஷரீக்க லஹு, லஹுல் முல்கு வலஹுல் ஹம்து வஹுவ அலா குல்லி ஷையின் கதீர். அல்லாஹும்ம லா மானிஅ லிமா அஉதைத்த வலா முஉத்திய லிமா மனஅத்த வலா யன்ஃபஉ தல் ஜத்தி மின்கல் ஜத்து.

 

(பொருள்: வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை; அவன் தனித்தவன்; அவனுக்கு யாதோர் இணையுமில்லை; அவனுக்கே அரசாட்சி; அவனுக்கே புகழ் யாவும்; அவன் எல்லாப் பொருளின்மீதும் ஆற்றல்மிக்கவன். இறைவா! நீ கொடுக்க நினைத்ததைத் தடுப்போர் யாருமில்லை; நீ தடுக்க நினைத்ததைக் கொடுப்போர் யாருமில்லை; முயற்சியுடையோரின் எந்த முயற்சியும் உன்னையன்றி எப்பயனுமளிக்காது) என்று ஓதுபவர்களாக இருந்தார்கள். (நூல்: புகாரீ: 844)

 

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கடமையான தொழுகையை முடித்ததும் மேற்கண்ட பிரார்த்தனைகளை ஓதக் கற்றுக்கொடுத்துள்ளதன் மூலம், ஒவ்வொருவரும் தத்தம் இறைநம்பிக்கையைப் புதுப்பித்துக்கொள்வதோடு, அல்லாஹ்வின் ஆற்றலை மீறி எதுவும் நடந்துவிடாது என்ற நம்பிக்கையையும் மனதில் பதியவைத்துக்கொள்ள வழிகாட்டியுள்ளார்கள். எனவே நம்முள் ஒருவர் இந்தப் பிரார்த்தனையைச் செய்கின்றபோது அவரின் இறைநம்பிக்கை மேன்மேலும் வலுப்படுகிறது; அது மனதில் ஆழமாகப் பதிந்துவிடுகிறது. அத்தகைய இறைநம்பிக்கை தொழுகின்ற ஒவ்வொருவரின் உள்ளத்திலும் ஆணித்தரமாகப் பதிய வேண்டும்.

 

மேற்கண்ட பிரார்த்தனையின் உட்கருத்து அல்குர்ஆனில் காணப்படுகிறது. அல்லாஹ் மக்களுக்குத் திறக்கின்ற எந்த அருளையும், அதைத் தடுத்து நிறுத்துகின்றவர் யாருமில்லை. அவன் தடுத்து நிறுத்துவதை அதன் பிறகு அனுப்புபவன் யாருமில்லை. (35: 2)

 

ஆக இவ்வாறு பல்வேறு திக்ருகளை நபியவர்கள் ஓதியுள்ளார்கள். நாமும் அவற்றை ஓதி நம்முடைய இறைநம்பிக்கையை வலுப்படுத்திக்கொள்வோமாக.

=================






கருத்துகள் இல்லை: