சனி, 20 ஆகஸ்ட், 2022

உடலுறுப்புகளைத் தானம் செய்யலாமா?

 

-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.

-----------------------------

மனித உடலின் உறுப்புகள் ஒவ்வொன்றும் மிக மிக முக்கியமானவை. அவை நமக்கு இறைவனால்  அடைக்கலப்பொருள்களாக வழங்கப்பட்டுள்ளன. எனவே அவற்றைப் பேணி காப்பது நம் கடமை.  நம் உடலில் உள்ள ஓர் உறுப்பு பாதிக்கப்பட்டாலும் அதைச் சரிசெய்வது அவ்வளவு எளிதானதன்று.  இன்று இருசக்கர வாகனங்களிலும் மகிழுந்துகளிலும் பயணம் செய்யும் இளைஞர்கள் மிக வேகமாக அவற்றைச் செலுத்துவதால் அவை அவர்களின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகின்றார்கள். அதனால் உயிரிழப்புகளும் உடலுறுப்புகள் இழப்புகளும் எதிர்பாராவிதமாக ஏற்படுகின்றன. உயிரிழப்பு அடைந்தோரின் வாழ்க்கை அத்தோடு முடிந்துபோய்விடுகிறது. ஆனால் உடலுறுப்புகளை இழந்து எஞ்சிய வாழ்க்கையைக் கழிக்க மிகவும் சிரமப்படுவோரைக் காணும்போதுதான் பரிதாபமாக இருக்கிறது. அவர்கள் அடையும் வேதனையும் அனுபவிக்கும் இன்னல்களும் சொல்லி மாளாது. 

 

மற்றொரு புறம் தவறான உணவுப் பழக்கம், போதைப் பழக்கம் ஆகியவற்றால் உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டு, அறுவைச் சிகிச்சை செய்ய நேரிடுகிறது. சர்க்கரை-நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு காலை எடுக்க வேண்டிய பரிதாப நிலை ஏற்பட்டு விடுகிறது. அதன்பின் அவர்கள் தம் எஞ்சிய வாழ்க்கையை மிகவும் சிரமப்பட்டே கழிக்க வேண்டியுள்ளது. மது, புகையிலை, சிகரெட், பீடி, கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களுக்கு அடிமையாகி, அவற்றைத் தொடர்ந்து உட்கொண்டு அதனால் உடலுறுப்புகள் பாதிக்கப்பட்டு, கருகி, அழுகி விடுவதுண்டு. அவற்றை அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றி அப்புறப்படுத்திவிட்டுப் புதிய உறுப்புகள் பொருத்த வேண்டிய நிலை ஏற்படும். கணையம், கல்லீரல், சிறுநீரகம் உள்ளிட்ட உடலுறுப்புகள் அவ்வளவு எளிதில் கிடைத்துவிடுவதில்லை. அவை கிடைத்து, உரிய முறையில் பொருத்தப்பட்டாலும் மீண்டும் பழையபடி இயல்பாக வாழ முடியுமா என்பது கேள்விக்குறியே ஆகும்.

 

உடலுறுப்புகள் தானம் செய்யப்படுவதை இஸ்லாமிய மார்க்கம் ஏற்றுக்கொள்வதில்லை. ஏனெனில் மனிதன் கண்ணியமானவன். அவனுடைய உடலுறுப்புகளை அவனுடைய பயன்பாட்டிற்காகவே இறைவன் படைத்துள்ளான். அவற்றை அவன் உரிய முறையில் பயன்படுத்துவதும் பாதுகாப்பதும் அவனுடைய கடமையாகும். அவற்றைப் பிறருக்கு வழங்க அவனுக்கு அனுமதி இல்லை; எந்த உரிமையும் இல்லை.

 

இந்த வகையில் ஒருவரின் சிறுநீரகம் பழுதடைந்துவிட்டால் மற்றொருவரின் சிறுநீரகத்தை அவருக்குப் பொருத்தலாம் என்பது இன்றைய மருத்துவ அறிவியல் வளர்ச்சியாகும். ஒருவருக்கு இரண்டு சிறுநீரகங்கள் இருப்பதால் அவற்றுள் ஒன்றைத் தானமாகக் கொடுத்தாலும் அவரால் நல்லபடியாக வாழ முடியும் என்பது இன்றைய மருத்துவர்களின் வாதம். இதனால் சிறுநீரகத் தானம்  மக்கள் மத்தியில் ஊக்குவிக்கப்படுகிறது; விளம்பரப்படுத்தப்படுகிறது. ஆனால் மாற்றுச் சிறுநீரகம் பொருத்திக்கொண்டோருள் பெரும்பாலோர் சில ஆண்டுகளுக்கு மேல் வாழ முடிவதில்லை என்பதே உண்மை வரலாறு.

மாற்றுச் சிறுநீரகங்களைப் பெறுவதற்காகக் காத்திருப்போர் பலர் பல தில்லுமுல்லுகளைச் செய்துபிறருக்கு முதலில் கிடைக்க வேண்டியதைத் தமக்கு வழங்கிடுமாறு கோரி, அதற்காக மருத்துவர்களிடம் பேரம் பேசுகிறார்கள். பல இலட்சங்கள் அதற்காகக் கைமாறுகின்றன. சிலரின் ஏழ்மையைப் பயன்படுத்தி, பணத்தாசை காட்டி அவர்களிடமிருந்து சிறுநீரகங்கள் பெறப்படுகின்றன. சிலரின் உடல்களிலிருந்து சிறுநீரகங்கள் திருடப்படுகின்றன. இதன் பின்னணியில் ஒரு கள்ளச் சந்தையே நடைபெற்று வருகிறது.

 

சிறுநீரகங்களைத் தாண்டி, இன்று பல்வேறு உறுப்புகள் மாற்று அறுவைச் சிகிச்சை மூலம் பொருத்தப்படுகின்றன. ஆனால் அந்த உடலுறுப்புகள் இறந்தோரின் உடலிலிருந்து தானமாகப் பெறப்படுகின்றன. இறந்தோரின் உடலிலிருந்து மருத்துவத் துறைக்குத் தேவையான உடலுறுப்புகள்  எடுத்துக் கொள்ளப்பட்டு எஞ்சிய பாகங்களைத் தைத்துக் கொடுத்துவிடுவார்கள். உறவினர்கள் அதை வாங்கிச் சென்று, இறுதிச் சடங்குகளெல்லாம் செய்தபின் எரிப்பார்கள் அல்லது புதைப்பார்கள். இது கடந்த கால நிகழ்வு. ஆனால் இன்று உடல் முழுவதுமே மருத்துவத் துறையால் பயன்படுத்தப்படுகிறது. கை, கால், தோல், முடி உள்ளிட்ட அனைத்தும் மாற்று உறுப்புகளாகப் பயன்படுத்தப்படுகின்றன.

 

இறந்துபோகின்ற எல்லோரின் உடலும் மருத்துவத் துறைக்குத் தானமாகக் கிடைத்துவிடுவதில்லை; அதுபோலவே எல்லா உறுப்புகளும் தானமாகக் கிடைத்துவிடுவதில்லை. எனவே மனித உறுப்புகளைப் பெற, அவற்றின்மூலம் பணம் சம்பாதிக்க, மனித விரோதிகளால் மனிதர்கள் கடத்தப்படுகிறார்கள்; அவர்களிடமிருந்து உறுப்புகள் திருடப்படுகின்றன. மேலும் கொலையுண்ட அனைத்து உடல்களும் உடற்கூறாய்வு (போஸ்ட் மார்ட்டம்) மேற்கொள்ளப்படுகின்றன. அவற்றிலிருந்து உடலுறுப்புகள் எந்த அனுமதியுமின்றி எடுத்துக்கொள்ளப்படுகின்றன. இவையெல்லாம் சந்தையில் கள்ளத்தனமாக விற்கப்படுகின்றன.

 

இன்று மனித உறுப்புகளைப் பெறுவதற்காகப் பல்வேறு சதிவேலைகளும் அரங்கேற்றப்படுகின்றன.  விபத்தில் சிக்குண்டு, தலையில் அடிபட்டு நிரந்தர மயக்கநிலைக்குச் (கோமா) சென்றுவிட்டால் அவ்வளவுதான். "மூளைச்சாவு' என்ற வார்த்தையை இன்றைய மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர்.  அந்த ஒரு வார்த்தையை வைத்தே அவரின் உறவினர்களைப் பயமுறுத்திவிடுகின்றனர். இனி இவரால் எழுந்து நடக்கவோ சுயமாக இயங்கவோ முடியாது. இவரை நீங்களே வீட்டில் வைத்துப் பார்த்துக்கொள்கின்றீர்களா என்று கேட்பார்கள். உணர்வற்ற ஓர் உடலை நாள்தோறும் சுத்தப்படுத்தி, தேவையான மருத்துவ உதவிகளைச் செய்து கவனித்துக்கொள்ள இன்றைய அவசர உலகில் யார் முன்வருவார்

 

அவர்களின் தயக்கத்தைக் காணும் மருத்துவர்கள் அவர்களிடம், "மூளைச்சாவு அடைந்துள்ள உங்கள் மகன் இனி எழுந்து நடக்கப்போவதில்லை. அவனுடைய உடலுறுப்புகளைத் தானமாகக் கொடுத்தால் அதன்மூலம் பலருக்கு மறுவாழ்வு கொடுக்கலாம். உங்களுக்குப் பொருளாதார  உதவியும் கிடைக்கும்'' என்று கூறி அவர்களின் மனதை மாற்றுவார்கள். கடைசியில் மருத்துவர்கள் தம் பேச்சில் வெற்றிபெறுவார்கள். அவனைக் கருணைக்கொலை செய்ய, பெற்றோர் ஒத்துக்கொள்வார்கள். பின்னர் அவனுடைய உடலுறுப்புகள் ஒவ்வொன்றும் தனித்தனியாக எடுக்கப்பட்டு, உரியவர்களுக்குப் பொருத்தப்படும்.

 

இஸ்லாமிய மார்க்கத்தைப் பொருத்த வரை, கருணைக் கொலை என்பது அறவே கூடாது; முற்றிலும் தடை செய்யப்பட்டதாகும். ஒருவேளை அவர் இறந்துவிட்டாலும் அவருடைய உடலுறுப்புகள் வெட்டியெடுக்கப்படுவதை-அங்ககீனப்படுத்தப்படுவதை இஸ்லாம் வன்மையாகக் கண்டிக்கிறது.

 

இதற்கு மாற்று வழியை இஸ்லாம் கூறுகிறது. அதாவது மனித உடலில் ஏதேனும் உறுப்பு சிதைவடைந்துவிட்டால் அவ்வுறுப்பைச் செயற்கையாகச் செய்து பொருத்திக்கொள்ளலாம். மூக்கு, பல் உள்ளிட்ட உடலின் பாகங்கள் பாதிக்கப்பட்ட தோழர்கள் நபியவர்களிடம் இது குறித்துக் கேட்டபோது, தங்கத்தால் அல்லது வெள்ளியால் அவ்வுறுப்புகளைச் செய்து, பொருத்திக் கொள்ளலாம் என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அனுமதியளித்தார்கள்.

 

அப்துர் ரஹ்மான் பின் தரஃபா ரஹிமஹுல்லாஹ் கூறியதாவது: அறியாமைக் காலத்தில் நடந்த குலாப் போரில் என் பாட்டனார் அர்ஃபஜா பின் அஸ்அத் அவர் களது மூக்கு துண்டிக்கப்பட்டது. எனவே அவர்கள் வெள்ளியால் ஆன (செயற்கை) மூக்கு ஒன்றைச் செய்து) பொருத்திக்கொண்டார்கள். (ஆனால்) அதிலிருந்து அவர்களுக்குத் துர்நாற்றம் வீசியது. எனவே நபி  ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், (தங்க மூக்கு செய்துகொள்ள) பணித்தார்கள். அவ்வாறே, அவர்கள் தங்க மூக்கு செய்து (பொருத்திக்) கொண்டார்கள். (அபூதாவூத்: 3696)

 

இறந்தவரின் எலும்புகளை ஒடிப்பது அவர் உயிருடன் இருக்கும்போது உடைப்பதைப் போன்றதாகும் என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். (இப்னுமாஜா: 1605) இறந்த பின்னும் ஒருவரின் உடலிலிருந்து உறுப்புகளை எடுக்கக்கூடாது என்பதற்கு இதனை அறிஞர்கள் ஆதாரமாக முன்வைக்கின்றார்கள். மார்க்க அறிஞர்கள் மத்தியில் கருத்துவேறுபாடு உள்ள மிக நீண்ட விவாதத்தை உடையது இச்சட்டம்.

 

தற்காலத்தில் மருத்துவத்துறை மிகுந்த வளர்ச்சி கண்டுள்ளது. அதனடிப்படையில் சென்னை, கோவை ஆகிய நகரங்களில் செயற்கை உறுப்புகள் அரசு சார்பாகத் தயாரிக்கப்பட்டு, ஏழைகள் உள்ளிட்ட அனைவருக்கும் பொருத்தப்படுகின்றன.

 

மேலும் பிரிட்டன்-அமெரிக்கா ஆகிய இருநாட்டு விஞ்ஞானிகள் கூட்டாகச் சேர்ந்து மனிதத் திசுக்களைச் செயற்கையான முறையில் உருவாக்கியுள்ளனர். இதனால் எதிர்காலத்தில் மனித உடல் உறுப்புகளைப் புதிதாக உருவாக்க முடியும். உறுப்பு மாற்றுச் சிகிச்சைக்காக இனிச் செயற்கை உறுப்புகளை நம்பி இருக்கவோ மாற்று உறுப்புகளுக்காகக் காத்திருக்கவோ தேவையில்லை. மாறாக இந்தத் திசுக்களைக்கொண்டு புதிய உறுப்புகளை உருவாக்கிவிடலாம் என்கின்றனர்.

 

ஈரலைச் செயற்கையாக உருவாக்குவது குறித்து 2011ஆம் ஆண்டு சங்கீதா பாட்டியா என்பவர் தலைமையில் ஒரு குழுவினர் ஆய்வு செய்தனர். அதனை அடிப்படையாகக்கொண்டே தற்போது  ஆய்வுக் கூடத்தில் செயற்கைக் கல்லீரல், செயற்கை இதயம் உருவாக்கப்பட்டு வருகின்றன. அத்தோடு 3டி பிரிண்ட் செய்யப்பட்ட காதுகள், கண்கள் செயற்கையாகத் தயாரிக்கப்படுகின்றன. அதாவது பாதிக்கப்பட்ட மனிதரின் உடலிலிருந்து செல்களைப் பிரித்தெடுத்து, அதைக்கொண்டே செயற்கையான முறையில் இயற்கையான உடலுறுப்புகளைப் போன்று உருவாக்குகிறார்கள். 


ஆக இத்தனை மாற்று வழிகள் இருக்கின்றபோது இவற்றைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டுமே தவிர மனித உறுப்புகளைத் தானம் செய்யக்கூடாது. மனித உறுப்புகளைத் தானமாகப் பெறுவதற்குத் தடைவிதித்தால்தான் உடலுறுப்புகளுக்காகக் குழந்தைகள், சிறுவர்-சிறுமியர், பெண்கள் உள்ளிட்டோர் கடத்தப்படுவதும் மூளைச் சாவு எனும் பெயரில் கருணைக்கொலை செய்யப்படுவதும் குறையும்.

===============






கருத்துகள் இல்லை: