செவ்வாய், 21 பிப்ரவரி, 2012

இனிய திசைகள் மாத இதழ் (பிப்ரவரி 2012)

இனிய திசைகள் மாத இதழ் (பிப்ரவரி 2012)

திங்கள், 20 பிப்ரவரி, 2012

அன்பைப் போதித்த அண்ணலார்


                                                                                          
அகிலத்தில் ஆற்றல்மிகு வார்த்தை அன்பேயாகும்’- Love is the most powerful word in the world, அன்பே கடவுள்’- Love is God  போன்ற முதுமொழிகள் அன்பின் மதிப்பையும் உயர்வையும் விளக்குகின்றன. அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் என்று தமிழ்மறை கூறுகிறது. அன்பைப் போதிக்காத சமயங்கள் இல்லை என்றே கூறலாம். அன்புதான் அனைத்து நற்செயல்களுக்கும் அடிப்படைக் காரணமாகும். சிறுவர்கள் மீது அன்பு காட்டுங்கள்; பெரியவர்களுக்கு மரியாதை செய்யுங்கள்என்பது அண்ணலாரின் அன்புக் கட்டளை.

அன்பு எனும் வேர்ச்சொல்லுக்குப் பல கிளைகள் உள்ளன. ஓர் அன்னை தன் செல்லக் குழந்தைகள்மீது காட்டும் அன்பு, ஓர் இளைஞன் தன் வயதொத்த ஓர் இளைஞியிடம் காட்டும் அன்பு, ஏழைகள் மீது காட்டும் அன்பு, இறைவன் மீது கொள்ளும் அன்பு என எல்லாமே அன்புதான். எனினும் ஒவ்வொன்றிற்கும் தனித்தனி பதத்தைத் தருகிறது தேனினுமினிய தமிழ்மொழி.


1. ஓர் அன்னை தன் செல்லக் குழந்தைகளிடம் காட்டும் அன்பும், குழந்தைகள் தம் அன்னையிடம் காட்டும் அன்பும் பாசம் (Affection) ஆகும். இதே அன்பை அரபியில் ஷஃபகத் என்று கூறப்படுகிறது.

2. ஒருவன் அல்லது ஒருத்தி தன் வயதொத்தவனிடம் அன்புகொண்டு தோழமையோடு பழகுதல் நட்பு (Friendship) ஆகும். இதே அன்பை அரபியில் ஸதாகத் என்று கூறப்படுகிறது.

3. நாம் ஏழைகளிடம் காட்டும் அன்பு இரக்கம் (Pity) ஆகும்.

4. ஒரு தொழிலாளி தன் முதலாளியிடம் காட்டும் அன்பு விசுவாசம் ஆகும்.

5. ஓர் இளைஞன் தன் வயதொத்த ஓர் இளைஞியிடம் காட்டும் அன்பு காதல் (Lust) ஆகும். இதே அன்பை அரபியில் இஷ்க் என்று கூறப்படுகிறது. கணவன்-மனைவிக்கிடையே உள்ள அன்பு காதலாகும்.

6. உறவினர்களிடம் காட்டும் அன்பு பந்தம் (Relationship) ஆகும். இதை அரபியில் ஸிலத்துர் ரஹ்ம் என்று கூறுகின்றனர்.

7. உயிரினங்களிடம் காட்டும் அன்பு ஜீவகாருண்யம் ஆகும்.

8. நாம் இறைவனிடம் காட்டும் அன்பு பக்தி (Piety) ஆகும். இதை அரபியில் தக்வா என்று கூறுகின்றனர். இதனால்தான் இறைபக்தி என்று கூறுகிறோம்.

9. இறைவன் தன் அடியார்களிடம் காட்டும் அன்பே கருணை (Mercy) ஆகும். இதை அரபியில் ரஹ்மத் என்று கூறுகின்றனர். அதனால்தான் திருக்குர்ஆனில் அல்லாஹ் தன்னை ரஹீம்-கருணையாளன் என்று கூறுகின்றான்.

10. பொருள்களின் மீது நாம் கொள்ளும் வேட்கையே ஆசை (Like) ஆகும். இதனால்தான் மண்ணாசை, பொன்னாசை என்று கூறுகிறோம்.

11. தாய் நாட்டின் மீதும் தாய்மொழியின்மீதும் நாம் கொள்ளும் அன்பு பற்று (Patriotism) ஆகும். இதை அரபியில் ஹுப்புல் வத்தன் என்று கூறுகின்றனர். இதனால்தான் நாட்டுப்பற்று, மொழிப்பற்று என்று அழைக்கிறோம்.

12. பொதுவாக ஒரு மனிதன் மற்றொரு மனிதனிடம் காட்டும் அன்பு சகோதரத்துவம் (Brotherhood) ஆகும். இதை அரபியில் உக்வத் என்று கூறுகின்றனர்.

ஆக, மேற்கண்ட பதங்கள் யாவும் அன்பு எனும் கட்டத்தைத் தாண்டியபிறகுதான் பிறக்கின்றன. மேற்கண்ட அனைத்துப் பதங்களுக்குள்ளும் அன்பு எனும் வேர் உள்ளது. ஒரு பொருளையோ மனிதனையோ நாம் பார்க்கும்போது நம் உள்ளத்தில் ஏற்படும் இயல்பான உணர்வுதான் அன்பு. அந்த அன்பு எப்பொருளை அல்லது எவ்விடத்தைச் சார்ந்து நிற்கிறதோ அதை வைத்துத்தான் அதற்குரிய பெயர் மாறுபடுகின்றது. ஆக, அன்பு என்பது ஒன்றுதான். அதன் கிளைகள்தாம் பற்பல.

தமிழில் உள்ள அன்பு எனும் பதத்திற்கு இணையாக அரபியில் ஹுப்பு எனும் பதம் உள்ளது. இந்த ஹுப்பு உடைய கிளைகள்தாம் மஹப்பத், ஷஃபகத், இஷ்க், சதாகத், உக்வத், உத்து, சிலத்து ரஹ்ம், ஹுப்புல் வத்தன், ரஹ்மத் ஆகும். மேற்காணும் பதங்கள் யாவற்றுக்கும் ஹுப்பு எனும் அன்புதான் அடிப்படை. எனவே அந்த அன்பு எங்கு பொருந்துகிறதோ அதை வைத்தே அதற்குரிய பெயர் சொல்லப்படும்.

மேற்கண்ட அனைத்து வகையான அன்பையும் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் நமக்குக் கற்றுக்கொடுத்துள்ளதோடு, அதன்படி வாழ்ந்தும் இருக்கின்றார்கள். அண்ணல் நபி (ஸல்) அவர்கள் இயற்கையாகவே அன்புமிக்கவர்களாக இருந்தார்கள். அவர்களின் நற்குணங்களும் அன்பான பேச்சும் இனிய நடைமுறைகளும்தாம் பிறரைக் கவர்ந்தன. பிறருடன் பழகும்போதும் தம் குடும்பத்தாருடன் பேசும்போதும் தம் துணைவியருடன் உரையாடும்போதும் இனிய வார்த்தைகளையே பேசினார்கள்; அன்பாகவே நடந்துகொண்டார்கள். அவர்களின் அன்பான பேச்சும் புன்னகை தவழும் முகமும் காண்போரைக் கவரும்.

அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு.

அன்பு உடையோரே உயிர் உடையோராகக் கருதப்படுவர். அது அற்றோர் உயிர் இருந்தும் உயிரற்றோரே ஆவர் என்று வள்ளுவர் கூறுகிறார். அவரின் வாய்மொழிக்கேற்ப அண்ணல் நபி (ஸல்) அவர்கள் மிகுந்த அன்புகொண்டவர்களாக வாழ்ந்து காட்டினார்கள் என்பதை நாம் வரலாற்றின் மூலம் அறிகிறோம்.

அல்லாஹ் திருக்குர்ஆனில், “இவ்வுலக மக்களுக்கு ஓர் அருட்கொடையாகவே-அன்பாளராகவே நாம் உம்மை அனுப்பியுள்ளோம்என்று கூறுகின்றான். அல்லாஹ்வின் கூற்றை மெய்ப்பிக்கும் வகையில்தான் அண்ணலார் அனைவரிடமும் அன்பாகவே நடந்துகொண்டார்கள். நாளுக்கு நாள்  பற்பல துன்பங்களும் துயரங்களும் அவர்களை வாட்டியபோதும் தம் இனிய பண்பாலும் சகிப்புத்தன்மையாலும் அவற்றைப் பொறுத்துக்கொண்டார்கள்.

தாயிஃப் நகர மக்கள் கல்லால் அடித்து அவர்களின் மேனியைக் காயப்படுத்தி, கடுஞ்சொற்களால் வதைத்து, அவர்கள்தம் நெஞ்சைப் புண்ணாக்கியபோதும் அவர்களைப் பழிவாங்க எண்ணவில்லை. கடின உளம் கொண்ட கல்நெஞ்சக்காரர்களிடமும் அண்ணலாரின் அன்பே மிகைத்து நின்றது. அம்மக்களின் நல்வழிக்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்தார்கள்.

திருக்குர்ஆனில் அல்லாஹ், தன்னுடைய இறுதித்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மக்களிடம் எவ்வளவு அன்பாக நடந்துகொண்டார்கள் என்பதைப் புகழ்ந்து கூறுகின்றான். அல்லாஹ்வின் கருணையால் அவர்களிடம் நீங்கள் மிகவும் நளினமாக நடந்துகொண்டீர்கள். நீங்கள் மட்டும் சற்றுக் கடினமானவராகவும் கல்நெஞ்சினராகவும் இருந்திருப்பின் அம்மக்கள் உம்மைவிட்டு வெருண்டோடியிருப்பார்கள். (3: 159)

அதாவது நீங்கள் மிகவும் அன்பானவர்; நளினமானவர். நீங்கள் அம்மக்களிடம் அன்பாக நடந்துகொண்டதால்தான் அவர்கள் உங்களின் இனிய பேச்சைச் செவியுற முற்பட்டனர்; பின்னர் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டனர் என்று விரித்துரைக்கின்றான்.  அவ்வளவு அன்புமிக்கவராக அண்ணல் நபியவர்கள் திகழ்ந்தார்கள். இதனால்தான் அவர்களுடன் சேர்ந்தே இருந்த ஆருயிர்த் தோழர்களைப் பற்றிப் பின்வருமாறு கூறுகின்றான்.

முஹம்மது (இவர்) அல்லாஹ்வின் தூதர். அவரோடு இருப்பவர்கள் நிராகரிப்போரிடம் கடினமானவர்களாகவும் தங்களுக்கு மத்தியில் ஒருவருக்கொருவர் அன்புமிக்கோராகவும் இருக்கின்றார்கள். (48: 29) அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அன்பைப் போதித்ததால்தான் அவர்களின் அன்புத் தோழர்கள் தங்களுக்கு மத்தியில் எவ்விதப் பிணக்குகளுமின்றி அன்பாகவும் சகோதரத்துவ உணர்வோடும் திகழ்ந்தார்கள்.
உன் உறவைத் துண்டித்தவரோடு சேர்ந்து வாழ்; உனக்கு அநீதி செய்தவரை மன்னித்துவிடு; உனக்குத் தீங்கிழைத்தவருக்கு நன்மைசெய்என்று கூறி மற்றோர்மீது அன்புடையோராக வாழ வழிகாட்டியுள்ளார்கள்.

பாசம்

நாம் நம்முடைய குழந்தைகளிடம் எவ்வாறு நடந்துகொள்கிறோம். எவ்வாறு பேணி வளர்க்கிறோம் என்று சிந்தித்துப் பார்க்கும்போது, அண்ணல் நபியின் சமுதாயத்தினர் என நாம் சொல்-க் கொள்ளவே வெட்கப்படவேண்டும். இன்றைய அவசர யுகத்தில் ஒரு தாய் தன் குழந்தைக்கு அன்பு முத்தம் கொடுப்பதற்கோ குழந்தை தன் அன்னைக்குப் பாசமுத்தம் கொடுப்பதற்கோ நேரமில்லை. வேகமாகப் புறப்படும் வேளையில், குழந்தை தன் வாயில் கைவைத்து முத்தமிட்டு, அதைத் தன் அன்னையிடம் காட்டுகிறது. அவளும் அதை (Plain Kiss) அன்புடன் ஏற்றுக்கொள்கிறாள். இந்த வேகத்தில் இன்றைய சமுதாயம் சென்றுகொண்டிருக்கிறது.

அன்னை ஆயிஷா (ரளி) அவர்கள் அறிவித்துள்ளதாவது: அண்ணல் நபி (ஸல்) அவர்கள் தம் பேரர்களைக் கொஞ்சி, முத்தமிட்டு விளையாடிக்கொண்டிருந்தனர். அச்சமயத்தில், கிராமப் புறத்தி-ருந்து நபித்தோழர் ஒருவர் வந்தார். அண்ணலாரின் இச்செயலைக் கண்டு ஆச்சரியப்பட்டு, நீங்கள் இவ்வாறு செய்கின்றீர்களா? எனக்குப் பத்துக் குழந்தைகள் உள்ளனர். நான் ஒரு நாளும் என் குழந்தைகளை முத்தமிட்டதில்லை என்று கூறினார். இதைக்கேட்ட அண்ணலார், அல்லாஹ் உன் உள்ளத்தி-ருந்து அன்பை எடுத்துவிட்டால் நானா பொறுப்பு? என்று மறுவினாத்தொடுத்தார்கள். (நூல்கள்: புகாரீ, முஸ்லிம்)

ஆக, பெற்றோர் தம் குழந்தைகளை முத்தமிட்டுக் கொஞ்சுவதும் நபிவழியேயாகும். அப்போதுதான் பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் மத்தியிலுள்ள பாசம் அதிகமாகும்.

குழலினிது யாழினிது என்ப தம்மக்கள்
மழலைமொழி கேளா தவர்.

யார் தம்  செல்லக்குழந்தைகளின் மழலைமொழிகேட்டு இரசிக்கவில்லையோ அவர்கள்தாம் குழலோசையையும் யாழிசையையும் கேட்டு இரசித்துக்கொண்டிருப்பர் என்றுரைக்கிறார் வள்ளுவர். ஆம், மழலைமொழி கேட்டு இரசிப்பதுதான் பேரின்பம். தற்காலத்திலும் தம் பிள்ளைகளிடம் கொஞ்சிப்பேசி அவர்களின் மழலைமொழி கேட்டு இரசிக்கும் அன்னைகளும் இருக்கத்தான் செய்கின்றார்கள்.  

பந்தம்

ஒருவர் தம்முடைய உறவினர்களிடம் கொள்ளும் அன்புதான் பந்தம் ஆகும். உறவு என்பது நம் வாழ்வின் முக்கிய அங்கம். உறவைப் பிரிந்து நாம் வாழ இயலாது. உறவோடு நாம் சேர்ந்து வாழும்போதுதான் மதிப்பும் மரியாதையும் கிடைக்கும். அதனால் நமக்குப் பக்கபலமும் மனதிடமும் உண்டாகின்றன. உறவை வெறுத்தொதுக்கினால் அவன் தனிமனிதனாக வாழும் நிலை ஏற்படும்.  அதனால் அவனை அவனுடைய எதிரிகள் எளிதில் வீழ்த்துவர்.

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் தம் உறவினர்களோடு சேர்ந்து வாழ்ந்திருக்கின்றார்கள். பிறருக்கும் அதையே ஏவியிருக்கின்றார்கள். உங்களைத் துண்டிப்போருடன் சேர்ந்து வாழுங்கள் என்று கூறியுள்ளார்கள்.

உறவைத் துண்டித்து வாழ்பவன் சொர்க்கத்தில் நுழையமாட்டான் என்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (நூல்கள்: புகாரீ, முஸ்லிம்)

உறவைச் சேர்ந்து வாழ்வதால் என்ன நன்மை என்பதை திருக்குர்ஆன் வாயிலாகத் தெரிந்துகொள்வோம். நபி ஷுஐப் (அலை) அவர்கள்தம் சமுதாய மக்களிடம் ஏகத்துவப் பிரச்சாரம் செய்தார்கள். அவர்களின் அழைப்பைக் கேட்டுக் கொதிப்படைந்த மக்கள், ஷுஐபே! நீர் சொல்வதில் எதுவுமே எங்களுக்குப் புரியவில்லை. உம்மை எங்களுள் பலவீனராகக் காண்கிறோம். உம் குடும்பம் மட்டும் இல்லையெனில் உம்மைக் கல்லால்  அடித்தே கொன்றிருப்போம் (11: 91) என்று கூறினர். ஆக, நபி ஷுஐப் (அலை) அவர்களுக்குப் பக்கபலமாக இருந்தது அவர்களின் குடும்பமும், அவர்களின் உறவினர்களும்தாம். அதேபோல், அண்ணல் நபி (ஸல்) அவர்கள் ஏகத்துவப் பிரச்சாரம் செய்தபோது, அவர்களுக்குப் பக்கபலமாக இருந்தவர் அவர்களுடைய பெரிய தந்தை அபூதாலிப் ஆவார் என்பதை நாம் நினைவுகூரவேண்டும்.

உயிர்பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் நேரம் கொடுமையானது என்று கூறுவர். ஏனெனில் உயிர் பிரிவதால் ஓர் உயிர் மட்டுமே பிரிகிறது. உறவு பிரிவதால் எத்தனையோ உறவினர்கள் நம்மைவிட்டுப் பிரிகின்றனர். எத்தனையோ சொந்தங்களும் பந்தங்களும் நம்மைவிட்டுப் பிரிகின்றன. எனவே உறவைப் பேணி வாழ்வது இன்றியமையாதது. ஙப்போல் வளை என்று ஆத்திச்சூடிப் பாடல் ஒன்று உண்டு. ங எனும் எழுத்தைப்போல் உறவினர்களை இணைந்து வாழவேண்டும் என்பதை இது வலியுறுத்துகிறது.

அதற்கு மேலாக அண்ணல் நபி (ஸல்) அவர்கள் வலியுறுத்துவதைப் பாருங்கள். உறவினர்கள் ஒன்றாக இருக்கும்போது சேர்ந்து வாழ்பவன் உறவை இணைப்பவன் அல்லன். ஒருவனுடைய உறவு அறுந்துவிட்ட நிலையில், தானாக முன்வந்து அவர்களிடம் சென்று சேர்ந்துகொள்பவனே உறவை இணைப்பவன் ஆவான்என்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு உமர் (ரளி) அறிவித்துள்ளார்கள். (நூல்: புகாரீ) 

ஜீவகாருண்யம்

உயிரினங்களிடம் அன்பு காட்டுவதே ஜீவகாருண்யம் ஆகும். அண்ணல் நபி (ஸல்) அவர்கள் எல்லா உயிர்களிடத்தும் அன்பு காட்டியிருக்கின்றார்கள். அவற்றிற்குரிய உரிமைகளை நிறைவேற்றியிருக்கின்றார்கள்; நிறைவேற்ற ஏவியிருக்கின்றார்கள்.  அண்ணல் நபியவர்கள் எந்த ஓர் உயிருக்கும் தீங்கிழைக்கவோ, வதை செய்யவோ அனுமதிக்கவில்லை. அண்ணல் நபியவர்களின் வாழ்வில் நடந்த எத்தனையோ நிகழ்வுகள் இதற்குச் சான்றளிக்கின்றன.

நபித்தோழர்களுள் ஒருவர், ஒரு குருவிக்கூட்டி-ருந்து ஒரு குருவிக்குஞ்சைப் பிடித்துக்கொண்டு, நபி (ஸல்) அவர்களிடம் வந்துகொண்டிருந்தபோது, அக்குஞ்சின் தாய்ப்பறவை அவரைச் சுற்றிச் சுற்றி வந்தது. அதைச் சிறிதும் பொருட்படுத்தாத அவர் நபி (ஸல்) அவர்களிடம் சென்று அமர்ந்துவிட்டார். இதைக் கண்ட நபி (ஸல்) அவர்கள், “உங்கள் கையிலுள்ள குஞ்சைப் பெற்றிடத் தாய்ப்பறவையின் ஏக்கத்தைப் பாருங்கள். நீங்கள் விளையாட அந்தக் குருவிக்குஞ்சுதான் கிடைத்ததா? அதை விட்டுவிடுங்கள். எவ்வுயிர்க்கும் நோவினை கொடுக்காதீர்கள்என்று கூறினார்கள்.

ஒரு குருவியின் ஏக்கத்தைப் புரிந்துகொண்டு அதன்மீது இரக்கம் காட்டிய அண்ணல் நபியின் ஜீவகாருண்யத்தை இங்கு நாம் நினைவுகூர வேண்டும்.

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் தம் சுயதேவையைப் பூர்த்திசெய்துகொள்ள ஒரு தோட்டத்திற்குள் சென்றார்கள். வெகுநேரமாகியும் திரும்பவில்லை. நபித்தோழர்கள் சிலர் அத்தோட்டத்திற்குள் சென்றபோது, ஓர் ஒட்டகம் அண்ணல் நபியவர்களிடம்  அழுதுகொண்டு, என் முதலாளி என்மீது அதிகச் சுமையை ஏற்றுகிறான்; எனக்குச் சரியாகத் தீனி தருவதில்லை; என்னை அடித்துத் துன்புறுத்துகிறான் என்று முறையிட்டது. இதைக் கேட்ட நபியவர்கள், இந்த ஒட்டகத்தின் உரிமையாளர் யார்? என வினவ, நான்தான் அல்லாஹ்வின் தூதரே! என ஒருவர் நபியவர்கள்முன் வந்து நின்றார். அவரை நோக்கி, இனிமேல் நீ இதை அடிக்கக்கூடாது. அதிகச் சுமைகளை ஏற்றக்கூடாது. இதற்குத் தீனி போட்ட பின்னரே நீ உண்ண வேண்டும் என்று அறிவுறுத்தினார்கள்.

உயிர் வதையை இஸ்லாம் ஒருபோதும் அனுமதிப்பதில்லை. மாறாக, எல்லா உயிர்களிடத்தும் அன்புகாட்ட வேண்டுமென்றே அண்ணல் நபியவர்கள் போதித்துள்ளார்கள். இதையே நாம் கடைப்பிடிக்க வேண்டும்.

நட்பு

தன்னுடைய இரகசியங்களைப் பரிமாறிக்கொள்ளவும், தனக்கென ஓர் உறவை ஏற்படுத்திக்கொள்ளவும் ஒருவரைத் தேர்ந்தெடுத்து அன்புடன் பழகுவதே நட்பாகும். இதைத் தோழமை, நேசம், நட்பு என்ற பெயர்களில் கூறலாம். அதிகமானோரை நண்பர்களாகப் பெருக்கிக்கொள்வதைவிட, ஒரு நண்பனாக இருப்பினும் சிறந்த நண்பனாக, உற்ற தோழனாக, சோகத்தில் ஆறுதல் கூறுபவனாக, தம் வெற்றியைப் பாராட்டுபவனாக, வழிதவறினால் சீர்படுத்துபவனாகத் தேர்ந்தெடுப்பது அவசியம்.

நண்பனுக்காக உயிரைக்கொடுப்பது எளிது
உயிரைக் கொடுப்பதற்குரிய நண்பன் கிடைப்பது அரிது.

உன் துன்பத்தைத் தன் துன்பமாகக் கருத வேண்டும். உன் இன்பத்தைத் தன் இன்பமாகக் கருதவேண்டும்.  உன் வேலைகளில் அவனும் பங்குகொள்ள வேண்டும். உனக்காக எதையும் தியாகம் செய்யக் காத்திருக்க வேண்டும். அதுதான் உண்மையான நட்பு.

இத்தகைய நட்பே அண்ணல் நபி (ஸல்) அவர்களுக்கும் அபூபக்ர் ஸித்தீக் (ரளி) அவர்களுக்கும் இடையே இருந்தது. அண்ணல் நபியின் வார்த்தைகளுக்காக ஈராண்டுகள் அபூபக்ர் ஸித்தீக் (ரளி) அவர்கள் காத்திருந்தார்கள். அவர்கள் மக்காவி-ருந்து மதீனாவுக்குப் புலம்பெயர அல்லாஹ்வின் கட்டளை வந்தபோது, நேராக அபூபக்ர் (ரளி) அவர்களின் இல்லம் வந்தார்கள். அவர்களோ அண்ணல் நபியின் வருகைக்காக விளக்கேற்றி வைத்துக்கொண்டு காத்திருந்தார்கள். இதுவே உண்மையான நட்புக்கு அடையாளம்.

அதேபோல் அண்ணல் நபியவர்களும் அபூபக்ர் ஸித்தீக் (ரளி) அவர்களும் குகைக்குள் இருந்தபோது இறைநிராகரிப்பாளர்கள் இருவரையும் தேடிக்கொண்டு குகையின் வாயில் வரை வந்துவிட்டார்கள். அந்நேரத்தில் மிகவும் அஞ்சிய தம்முடைய நண்பர் அபூபக்ர் ஸித்தீக் (ரளி) அவர்களுக்கு அண்ணல் நபியவர்கள் ஆறுதல் கூறினார்கள். அதைத் திருக்குர்ஆன் கூறுகிறது:

குகையில் இருந்த இருவருள் ஒருவராக அவர் இருந்த(போது எதிரிகள் வந்து சூழ்ந்துகொண்ட) சமயத்தில் தம்முடன் (குகையில்) இருந்த தோழ(ராகிய அபூபக்)ரை நோக்கி, நீங்கள் கவலைப்படாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் நம்முடன் இருக்கின்றான் என்று கூறியபோதும் அல்லாஹ் அவருக்குத் தன்னுடைய மனநிம்மதியை அளித்தான். (9: 40)


ஆக, அண்ணல் நபியவர்கள் எல்லாவித அன்பையும் கற்றுத்தந்துள்ளதோடு, வாழ்ந்தும் காட்டியிருக்கின்றார்கள். எனவே அன்பிற்கு எத்தனையெத்தனை வழிகள் உள்ளனவோ அத்தனை வழிகளிலும் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் வழிமுறையை நாம் கடைப்பிடித்தால், வீண்கோபம், மன இறுக்கம், படபடப்பு, பதற்றம் இவற்றிலிருந்து விடுபட்டு, சாந்தமான உள்ளத்துடனும் மனநிம்மதியுடனும் இனிய வாழ்வு வாழலாம் என்பதில் கிஞ்சிற்றும் ஐயமில்லை.


சனி, 4 பிப்ரவரி, 2012

மொபைல் பயான்!

அஸர் தொழுதுவிட்டு, ஒரு தம்ளரில் தேநீரை எடுத்துக்கொண்டு வாசலுக்கு வந்தாள் ஃபாத்திமா.
எதிர்வீட்டில் ஆமினாவும் அஸர் தொழுதுவிட்டு, கையில் தேநீரை எடுத்துக்கொண்டு வாசலுக்கு வந்தாள்.

ஏன்டி ஆமினா,  அஸர் தொழுதுட்டியா?

ஆமாக்கா, இப்பத்தான் தொழுதுட்டு வெளியே வாறேன்.

இன்னைக்கு நம்ம ஊர் அசரத்து சொன்ன பயான கேட்டியா? நம்ம வீட்டுப் பெண் பிள்ளைங்க சிலபேர் வேறு சாதிப் பசங்களோட காதல் வலையில சிக்கி, அவங்களோட வார்த்தையில மயங்கி அவங்களோடவே ஓடிப்போறாங்களாம். இது மாதிரி நம்ம பெண் பிள்ளைங்க கெட்டுப் போறதுக்குக் காரணம் அவங்களோட வறுமையும், தகாத பழக்க வழக்கமும்தானாம்.

வேறு என்ன சொன்னாங்க ஃபாத்திமாக்கா?

இத ஒழிக்கிறதுக்கு எத்தனையோ வழிமுறைகளைப் பலரும் சொல்றாங்களாம். ஆனா, அதையெல்லாம் விட பெற்றோருடைய கவுன்சிலிங் மூலமாத்தான் இத நம்ம பெண் பிள்ளைகளுக்குப் புரிய வைக்க முடியும்னு சொல்றாங்க.

எப்படிக்கா கவுன்சிலிங் செய்யுறது?

அதுக்கு நாமதான் ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக்கணும். இரவு சாப்புடும்போது, ஒவ்வொரு பெற்றோரும் தம் பிள்ளைகளோட  ஒண்ணா உட்கார்ந்து சாப்புடுற பழக்கத்த ஏற்படுத்திக்கணும். அந்த நேரத்துல ஒவ்வொருவரும் காலை முதல் மாலை வரை நடந்த விசயங்களை ஒருத்தருக்கொருத்தர் பரிமாறிக்கணும். இப்படிப் பேசினா, ஒவ்வொருவருக்கும் என்ன பிரச்சனை இருக்கு என்பதை மற்றவர் புரிந்துகொள்வதோட தாய்-தந்தை அதற்குத் தீர்வையும் சொல்லலாம்.

அந்த நேரத்துல, ஒரு தந்தை அன்பா பேசுற பேச்சும், அவர் ஊட்டுற இஸ்லாமிய விசயங்களும் நம்ம பெண்பிள்ளைங்க மனசுல ஆழமாப் பதிஞ்சிடும். அதன் பிறகு பொறுக்கிப் பசங்க என்னதான் காதல் வார்த்தயப் பேசுனாலும் அவங்கள வழிகெடுக்கவே முடியாது. இத ஒவ்வொரு பெற்றோரும் பின்பற்றணும்னு நம்ம அசரத்து பயான முடிச்சாங்க.

ஏக்கா, நீங்க ஜும்ஆ தொழுகை, வீட்லதானே தொழுதீங்க? பிறகெப்படி அசரத்து பயான கேட்டீங்க?

அதுவா, என்னோட வீட்டுக்காரர் பள்ளிக்குப் போயி, அசரத்து பயான் பேச ஆரம்பிச்சதும் என்னோட மொபைலுக்கு அழைப்பாரு. நான் அத எடுத்து, ஆன் செய்துட்டு சப்தமா (லவ்டு ஸ்பீக்கர்) வச்சிடுவேன். அவ்வளவுதான். எங்க வீட்ல உள்ள எல்லோரும் அசரத்து பயான லைவா கேட்டுக்குவோம்.

இந்த விசயம் எனக்குத் தெரியாமப் போச்சே.அடுத்த வாரமே நானும் என் வீட்டுக்காரரிடம் சொல்லி, பயான் கேக்க ஆரம்பிச்சுடுறேன்.






இந்தச் சிறுகதை இந்நேரம் டாட் காமிலும் இடம்பெற்றுள்ளது. 

வியாழன், 19 ஜனவரி, 2012

இனியதிசைகள் (ஜனவரி 2012)


இனியதிசைகள் (ஜனவரி 2012)


படிக்க இங்கே சொடுக்குக

புதன், 18 ஜனவரி, 2012

இஸ்லாமிய இல்லறம்

ஆங்கிலம்: முஹம்மது முஸ்தஃபா அல்ஜிபாலீ
தமிழாக்கம்: நூ. அப்துல் ஹாதி பாகவி, எம்.ஏ., எம்.ஃபில்.

 திருமணம் என்பது ஒரு மனிதனின் விருப்பத்தை சட்டமுறைப்படி நிறைவேற்றிக் கொள்ளுதல் மட்டுமில்லை. மாறாக ஒருவரின் நற்செயல்களை அதிகப்படுத்திக் கொள்ளவும் வழிவகுக்கிறது. அபூதர்ரு (ரளி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: நபித்தோழர்களுள் சிலர் இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் முறையிட்டார்கள். அல்லாஹ்வின் தூதரே! பணக்காரர்கள் எல்லாவித நன்மைகளையும் அடைந்து கொள்கின்றார்கள். நாங்கள் தொழுவதைப் போன்று அவர்களும் தொழுகின்றார்கள்; நாங்கள் நோன்பு நோற்பதைப்போல் அவர்களும் நோன்பு நோற்கின்றார்கள்; மேலும், அவர்களின் (உபரியான) செல்வத்திலிருந்து தர்மமும் செய்கின்றார்கள். (எங்களுக்கு அதுபோன்று இல்லையே?)

அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்: ஏன், நீங்கள் தர்மமாகக் கொடுப்பதற்கு அல்லாஹ் எதையும் உங்களுக்கு வழங்கவில்லையா? நிச்சயமாக, ஒவ்வொரு தஸ்பீஹும் (சுப்ஹானல்லாஹ் சொல்வது) தர்மமாகும். ஒவ்வொரு தக்பீரும் (அல்லாஹு அக்பர் சொல்வது) தர்மமாகும். ஒவ்வொரு தஹ்லீலும் (லாயிலாஹ இல்லல்லாஹ்’சொல்வது) தர்மமாகும். ஒவ்வொரு தஹ்மீதும் (அல்ஹம்துலில்லாஹ் சொல்வது) தர்மமாகும். நன்மையை ஏவுவதும் தர்மமாகும். தீமையைத் தடுப்பதும் தர்மமாகும். (உன் மனைவியுடன்) உடலுறவு கொள்வதும் தர்மமாகும். அத்தோழர்கள் கேட்டனர்: “அல்லாஹ்வின் தூதரே! ஒரு மனிதன் தன் சுய விருப்பத்தைத் தீர்த்துக் கொள்வதற்கும் நன்மை உண்டா?” அப்போது, இறைத்தூதர் (ஸல்) அவர்கள், ஒருவன் தன் விருப்பத்தை நிறைவேற்றிக்கொள்ள தடுக்கப்பட்ட (ஹராமான) வழியைக் கையாண்டால் அது அவனுக்குப் பாவம் இல்லையா? என்று மறுவினாத் தொடுத்தார்கள். ”

 “ஆம்! நிச்சயமாக!’என்று அவர்கள் பதிலளித்தார்கள். அப்போது, இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இறுதியாகச் சொன்னார்கள்: “அவ்வாறே அவன் தன் விருப்பத்தை நிறைவேற்றிக்கொள்ள ஹலாலான (ஆகுமான) வழியைக் கையாண்டால் அது அவனுக்கு நன்மையாகும்.” பிறகு, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தர்மங்களை உண்டாக்குகின்ற பல விசயங்களைக் குறிப்பிட்டார்கள். இறுதியாகச் சொன்னார்கள்: இவை அனைத்தையும் முற்பகல் (ளுஹா) தொழுகை உள்ளடக்கியுள்ளது.” (நூல்கள்: முஸ்லிம், அஹ்மது)

 அல்பானீ (ரஹ்) இதற்கு விளக்கம் கூறுகிறார்: சுயூத்தி இமாம் அவர்கள், “இத்காருல் அத்கார்” எனும் தம்முடைய நூலில், ஒருவன்(தன் மனைவியுடன்) உடலுறவு கொள்வது தர்மமாகும். அவன் அதுபற்றித் தன் மனதில் எதையும் எண்ணாமல் இருப்பினும் சரியே! ஒவ்வொரு தடவை உடலுறவு கொள்ளும்போதும் இந்நன்மை நிச்சயம் உண்டு என்பதே என் கருத்தாகும். ஆனால், குறைந்தபட்சம், அவன் அவளை மணமுடிக்கின்றபோது அது பற்றிய எண்ணம் அவனுள் இருந்திருக்க வேண்டும். மேலும் அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்’என்று கூறுகின்றார். (நூல்: ஆதாபுஸ்ஸிஃபாப், பக்கம்-138)

 இது போன்றதொரு விசயத்தை இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக அபூதர் (ரளி) அறிவிக்கின்றார்கள்: ஒவ்வொரு மனிதரும் ஒவ்வொரு நாளும் (ஏதேனும்) ஒரு தர்மம் செய்வது அவசியமாகும்.” இதைக் கேட்ட அபூதர் (ரளி) அவர்கள், அல்லாஹ்வின் தூதரே! என்னிடம் எந்தப் பணமும் இல்லாத நிலையில் நான் எப்படி ஒவ்வொரு நாளும் தர்மம் செய்ய முடியும்? என்று வினவினார்கள். அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்: ஏனெனில் தர்மத்தின் வாசல்கள் பல உள்ளன.

அவை: தக்பீர் (அல்லாஹு அக்பர்) சொல்வது,“சுப்ஹானல்லாஹ் சொல்வது,“அல்ஹம்து லில்லாஹ் சொல்வது,“லாயிலாஹ இல்லல்லாஹ் சொல்வது,“அஸ்தஃக்ஃபிருல்லாஹ் சொல்வது, நன்மை செய்வது, தீமையைத் தடுப்பது, மக்கள் நடமாடும் பாதையில் முட்கள், எலும்புகள், கற்கள் ஆகியவற்றை நீக்குவது, பார்வையற்றவருக்கு வழிகாட்டுவது, செவிடர் செவியுறுவதற்கும் ஊமை விளங்குவதற்கும் உதவி செய்வது, ஒருவர் தாம் தொலைத்துவிட்ட பொருளைத் தேடிக் கொண்டிருக்கின்ற போது அவ்விடம் உனக்குத் தெரிந்தால் அவருக்கு அறிவிப்பது, உதவி கேட்டுக் கூக்குரலிடுகின்ற அப்பாவிக்கு உதவி செய்ய ஓடுவது, பலவீனமானவருக்கு, அவரின் பொருளை உன் கரங்களால் தூக்கிவிடுவது, உன் மனைவியுடன் உடலுறவு கொள்வது- இவை அனைத்திற்கும் உனக்கு நன்மை உண்டு. தர்மத்தை உண்டாக்குகின்ற மேற்கூறிய அனைத்தும் உனக்காக நீ சம்பாதிப்பவையாகும்.

இதைச் செவியுற்ற அபூதர் (ரளி) அவர்கள், என் விருப்பத்தை நிறைவேற்றிக்கொள்வதற்கு எப்படி எனக்கு நன்மை வழங்கப்படும்?’என்று வினவினார்கள். அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்: உனக்கொரு குழந்தை இருக்கிறது; (நீ அதை வளர்த்து வருகிறாய்;) அது பருவ வயதடைகிறது; அக்குழந்தையிடமிருந்து நிறைய நன்மைகளை நீ எதிர்பார்க்கிறாய். ஆனால் அது (திடீரென) இறந்துவிட்டது. (அப்போது) நீ அதற்காக நன்மையைக் கேட்பாயா? (என்று வினவினார்கள்.) ஆம்!’என அபூதர் (ரளி) அவர்கள் பதிலளித்தார்கள்.

அப்போது, இறைத்தூதர் (ஸல்) அவர்கள், நீ அந்தக் குழந்தையைப் படைத்தாயா? என்று வினவினார்கள். இல்லை! அல்லாஹ்தான் அதைப் படைத்தான்’என்று கூறினார்கள். நீ அக்குழந்தைக்கு நல்வழி காட்டினாயா?’என்று வினவினார்கள். “இல்லை! அல்லாஹ்தான் நல்வழிகாட்டினான் என்று கூறினார்கள். “நீ அக்குழந்தைக்கு உணவு கொடுத்தாயா? என்று மீண்டும் வினவினார்கள். இல்லை! அல்லாஹ்தான் உணவு கொடுத்தான் என்று பதிலளித்தார்கள். பின்னர் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:அவ்வாறே, உன் விதையை அனுமதிக்கப்பட்ட இடத்தில் (உன் மனைவியிடம்)வை. தடுக்கப்பட்ட இடத்தை விட்டு (விபசாரம்) தவிர்ந்து கொள். பிறகு அல்லாஹ் நாடினால் அதற்கு உயிர் கொடுப்பான்; மேலும், அவன் நாடினால் அதை மரணிக்கச் செய்வான். (இவ்விரு நிலைகளிலும்) நீ நன்மை வழங்கப்படுவாய். (நூல்கள் :இப்னு ஹிப்பான், நசயீ)

-இஸ்லாமிய இல்லறம் எனும் நூலிலிருந்து.





செவ்வாய், 20 டிசம்பர், 2011

சமய நல்லிணக்க கிறிஸ்துமஸ் பெருவிழா




சமய நல்லிணக்க கிறிஸ்துமஸ் பெருவிழா 
பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக நடைபெற்ற இந்த விழாவில் நான் கலந்துகொண்டு இஸ்லாமியக் கருத்துகளைக் கூறக்கூடிய ஒரு வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. 

இது ஆழ்வார்பேட்டையில் உள்ள மாநகராட்சி சமூகநலக் கூடத்தில் டிசம்பர் 17 ஆம் தேதி, காலை 11 மணிக்கு நடைபெற்றது. 
மாலை மலர் வெளியிட்ட  புகைப்படம்.   


பாட்டாளி மக்கள் கட்சித் தலைவருக்கு அருகில் நான். (மாலைமலர்)

அழைப்பிதழில் என் பெயர் இடம்பெற்றுள்ளது. 

வெள்ளி, 16 டிசம்பர், 2011

இனிய திசைகள் (டிசம்பர் மாத இதழ் )

இனிய திசைகள் (டிசம்பர் இதழ் 15-14.01.12)

படிக்க இங்கே சொடுக்குக:

திரைப்படங்களும் முஸ்லிம்களும்

‘முஸ்லிம்’ என்ற வார்த்தையைக் கேட்டாலே ஓர் ஒவ்வாமை நிலையை உருவாக்கப் பல்வேறு கோணங்களில் தீய சக்திகள் தொடர்ந்து முயற்சி செய்துகொண்டிருக்கின்றன. “அவன் கெட்டவன்”, “நாட்டுக்கு விரோதி”, “தேசத் துரோகி” என்ற மனப்பான்மையை மக்கள் மனங்களில் பதிய வைக்க அவை போட்டிபோடுகின்றன.

 மக்களை வெகுவாகச் சென்றடையக்கூடியதும் அவர்களை எளிதில் கவரக்கூடியதும் திரைப்படம். அதைக் கேளிக்கையாகப் பார்த்து, விளையாட்டாக விட்டுவிடக்கூடிய நிலையில் உருவாகி வந்த திரைப்படங்கள் இன்று முஸ்லிம்களைக் குறிவைத்துத் தாக்குவதற்காகவும் அவர்கள் கெட்டவர்கள், தீவிரவாதிகள் என்ற பொய்யான கருத்தாக்கத்தை ஏற்படுத்தவுமே தயாரிக்கப்படுகின்றன.

 தமிழக மக்களைப் பொறுத்தவரை, எதன்மூலமும் சாதிக்க முடியாததைத் திரைப்படத்தின் வாயிலாகச் சாதித்துவிடலாம். இந்தத் தமிழகத்தை இதுவரை ஆண்டவர்கள், மக்கள் சேவை செய்வதைப் போன்ற திரைப்படக் காட்சிகளால் மக்களைக் கவர்ந்ததாலேயே ஆட்சிக்கு வந்தார்கள். அத்தகைய மாபெரும் மாற்றத்தைத் திரைப்படங்கள் செய்துவருகின்றன.

 ஆகவேதான் முஸ்லிம்களுக்கு எதிரான தீயசக்திகள் முஸ்லிம்களைக் கெட்டவர்களாகக் காட்டத் திரைப்படத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்திவருகின்றார்கள். முஸ்லிம்கள் திரைப்படத்துறையைக் கையிலெடுக்கமாட்டார்கள் என்பதை நன்றாகத் தெரிந்துகொண்டுதான் அவர்கள் மிகத் துணிவோடு இவ்வழியைக் கையாள்கிறார்கள்.

 ரோஜா எனும் திரைப்படம் முதல் பம்பாய் எனும் திரைப்படம் வரை எடுத்தவர்கள், தொடர்ந்து அவ்வப்போது முஸ்லிம் பெயர்கள் தாங்கிய கதாபாத்திரங்களைத் தேசத்துரோகிகளாகக் காட்டிக்கொண்டே இருக்கின்றார்கள். குண்டு வைப்பவர்களும், தேசத்தைக் காட்டிக்கொடுப்பவர்களும் முஸ்லிம் கதாபாத்திரங்கள். அவர்களைக் காப்பாற்றப் போராடுபவர்களும், அதற்காக முயற்சிசெய்பவர்களும் இந்துக் கதாபாத்திரங்கள். இப்படிப்பட்ட திரைப்படங்கள் அன்று முதல் இன்று வரை தொடர்ந்துகொண்டேதான் இருக்கின்றன. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க யாரும் இதுவரை முன்வரவில்லை. அதற்கான வழியையும் இதுவரை நம்முள் யாரும் யோசிக்கவும் இல்லை.

 அண்மையில் வெளிவந்துள்ள இரண்டு திரைப்படங்கள் அத்தகைய திரைப்படங்களே. வானம் எனும் திரைப்படம் ஐந்து கதைக்கருவைக் கொண்டுள்ளது. அதில் ஒன்று இளவயதில் வீட்டைவிட்டுச் சென்றவன் தீவிரவாதக் கும்பலுடன் சேர்ந்து சமூக விரோதியாக மாறுவதாகச் கதை அமைந்துள்ளது.

 விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின்போது முஸ்லிமை (அண்ணன்) வீண் வம்புக்கிழுத்து இந்துக்கள் அடிக்கின்றபோது, அதைத் தடுக்கத் தம்பி ஓடி வருகிறான். இருவரையும் அவர்கள் கண்டபடி தாக்குகின்றபோது, ஒரு காவலர் வந்து அதைத் தடுத்து அனுப்பி வைப்பதாகக் காட்சி அமைந்துள்ளது. அதில் மனமுடைந்த தம்பி வீட்டைவிட்டே சென்றுவிடுகிறான். அவனைத் தேடித்தான் அண்ணன் சென்னைக்குச் செல்கிறான்.

 அங்கு அவன் சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்படுகிறான். அங்கு ஏற்கெனவே கைதுசெய்யப்பட்டு இருக்கின்ற முஸ்லிம் கதாபாத்திரங்கள் தீவிரவாதிகளாகக் காட்டப்படுகின்றனர். அவர்களுள் ஒருவன், “அழுதுகொண்டே இருக்கக்கூடாது. அழ வைக்கணும். மற்ற இடங்களில் குண்டு வைத்தால் மருத்துவமனைகளில் வந்து பிழைத்துக்கொள்வார்கள். மருத்துவமனையிலேயே குண்டு வைத்தால் யாரும் பிழைக்க முடியாது” என்று கூறுகிறான். ஒரு முஸ்லிம் கதாபாத்திரம் சொல்வதாக அமைந்துள்ள இந்தக் காட்சி முற்றிலும் அப்பட்டமானது. எந்த முஸ்லிமுடைய சிந்தனையிலும் தோன்றாதது. இப்படிக் குரூரமாகச் சிந்தித்து, அதை முஸ்லிம் கதாபாத்திரம் பேசுவதாகக் கதை அமைத்திருப்பது கடும் கண்டனத்துக்குரியது.

 இறுதியில், காணாமல் போன தம்பியைத் தேடிச் சென்ற முஸ்லிம் கதாபாத்திரம் குர்ஆனைக் கையில் பிடித்துக்கொண்டு, துப்பாக்கியால் சுட்டுக்கொண்டிருக்கின்ற தீவிரவாதிகளைப் பார்த்து, “அல்முஸ்லிமு மன் சலிமல் முஸ்லிமூன மின் லிசானிஹி வயதிஹி” (தம் நாவாலும் கையாலும் பிற முஸ்லிம்கள் பாதுகாப்புப்பெற்றவர்களாக இருக்கக் காரணமானவரே உண்மையான முஸ்லிம்) என்ற நபிமொழியையும், “லைசஷ் ஷதீதுல்லதீ யக்த்துலு...” (போர்க்களத்தில் எதிரிகளை வெட்டுபவன் வீரன் அல்லன். மாறாக, தம் கோபத்தைக் கட்டுப்படுத்துபவனே வீரன்) என்ற நபிமொழியையும் உரத்து உச்சரிக்கிறது.

 முஸ்லிம் சமுதாயம் படித்துவருகின்ற நபி (ஸல்) அவர்களின் அறிவுரைகளை அவர்களுக்கே எடுத்துக்காட்டுகின்றார்களா? அல்லது அதையெல்லாம் அவர்கள் மறந்துவிட்டார்கள் என்று எண்ணிக்கொண்டு ஞாபகப்படுத்த முனைகின்றார்களா?ஆக, இதில் “முஸ்லிம்கள் தீவிரவாதிகள்” என்று அப்பட்டமாகக் காட்டத் தவறவில்லை.

 இரண்டாவது திரைப்படம் வேலாயுதம். பேரைக் கேட்டாலே அதில் எந்த அளவு இந்துத்துவம் உள்ளது என்பதை நாம் விளங்கிக்கொள்ளலாம். இந்தத் திரைப்படத்தின் தொடக்கமே பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லையில்தான். அங்கே ஒரு முஸ்லிம் பெரியவர், உர்தூ மொழியில் பேச, அதை மற்றொருவர் தமிழாக்கம் செய்கிறார். “இந்தியாவின் அமைதியைக் கெடுக்க வேண்டும். அதற்குச் சென்னையில் ஆங்காங்கே குண்டுகள் வெடிக்க வேண்டும்.”

 அந்தத் தீவிரவாதக் குழுவுக்குத் தமிழக உள்துறை அமைச்சர் விலைபோகிறார். இப்படித் தொடங்குகின்ற இந்தத் திரைப்படத்தில், அவ்வப்போது குண்டுகள் வெடிக்கின்றன. வேலாயுதம் எனும் பெயரில் கதாநாயகன் அதைத் தடுக்கிறார். அவர் எதார்த்தமாகச் செய்வது மக்களுக்கு நன்மையாக ஆகிவிடுகிறது. எனவே மக்கள் மத்தியில் “வேலாயுதம் காப்பாற்றுவார்” எனும் நம்பிக்கை வளர்ந்துவருகிறது. இறுதியில் அந்த நம்பிக்கையைத் தகர்த்தெறிய பாகிஸ்தான்காரன் ஜிஹாத் என்று சொல்லிக்கொண்டு வருகிறான்.

 வேலாயுதத்தை மக்களுக்கு அறிமுகப்படுத்தப்போவதாக உள்துறை அமைச்சர் கூற, அதைக் கேட்டு ஆவலோடு மக்கள் திரண்டு வருகின்றனர். மக்கள் நிறைந்துள்ள அத்திடலைச் சுற்றி குண்டுகளை வைத்துத் தகர்க்க எதிரி திட்டமிடுகிறான். “நான்தான் வேலாயுதம்” என்று அவன் தன்னை அறிமுகப்படுத்தும்போது அவனது பொய்முகம் கிழிகிறது. அப்போது அவன், “இந்தத் திடலைச் சுற்றிக் குண்டு வைத்துள்ளோம். யாரும் இங்கிருந்து தப்பிச் செல்ல முடியாது” என்று அறைகூவல் விடுக்கும்போது, உண்மையான வேலாயுதம் அதை முறியடித்து, மக்களைக் காப்பாற்றி, சில வசனங்களைப் பேசுகிறார். ஒவ்வொருவரும் வேலாயுதமாக மாறவேண்டும் என்று துணிவை வரவழைக்கிறார்.

 இத்திரைப்படம் முழுக்க முழுக்க முஸ்லிம்களுக்கு எதிரானதாகும். இப்படத்தில் பாகிஸ்தான் முஸ்லிம்களைக் காட்டினாலும், அது முஸ்லிம்கள் என்ற பொதுவான பார்வையைத்தான் குறிக்குமே தவிர பிரித்துப் பார்க்க முடியாது. இத்தகைய இத்திரைப்படத்துக்கு நம் சமுதாயத்தில் யாரும் எதிர்ப்போ, கண்டனமோ தெரிவிக்கவில்லை. இதிலிருந்தே “முஸ்லிம்கள் சாந்தமானவர்கள்” என்பதைத் தீயசக்திகள் உணர்ந்துகொள்ள வேண்டும்.

 “இத்திரைப்படத்தில் வருகின்ற கதை, காட்சிகள், வசனங்கள் யாவும் கற்பனையே. இவை யாரையும், எதையும் குறிப்பிடுவன அல்ல” என்று திரைப்படம் தொடங்குமுன்னரே குறிப்பிட வேண்டும். இது திரைப்படத்தின் விதிகளுள் ஒன்றாகும். மேற்கூறப்பட்ட இரண்டு திரைப்படங்களிலும் அந்த வாசகம் இடம்பெறவே இல்லை.

 ஊடகங்கள் மூலம் முஸ்லிம்களைக் கெட்டவர்களாகவும் சமூக விரோதிகளாகவும் தேசத்துரோகிகளாகவும் கற்பனை செய்து காட்டுவது நீண்டகாலமாகத் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. இதனால் பல்வேறு கோணங்களில் முஸ்லிம்கள் சிரமத்திற்கும் துன்பத்திற்கும் உள்ளாக்கப்படுகிறார்கள். முஸ்லிம்கள் என்றாலே தீவிரவாதிகள் என்ற போக்கு காணப்படுகிறது. இதனால் வீடு வாடகைக்குப் பெறுவதுகூட மிகச்சிரமமாக உள்ளது.

 இதைக் களைய நாம் செய்ய வேண்டியதென்ன? நம்முடைய எதிர்ப்பைக் காட்டுவதோ, அதேபோல் திரைப்படம் எடுப்பதோ இல்லை. மாறாக, கதாசிரியர்களையும் தயாரிப்பாளர்களையும் நம்முள் ஒரு குழு சந்திக்க வேண்டும். அதுவே இஸ்லாமிய அழைப்புப் பணிக்குழு. அக்குழு நேரடியாக அவர்களைச் சந்தித்து, இஸ்லாம் என்ன சொல்கிறது; அது எதை நோக்கி அழைக்கிறது; திருக்குர்ஆனில் என்ன உள்ளது என்பதைத் தெளிவாக எடுத்துரைக்க வேண்டும். இதுவே நாம் செய்ய வேண்டிய மிக முக்கியமான பணி. திருக்குறளின் கூற்றுகள் பதிந்துள்ள அளவுக்குத் திருக்குர்ஆனின் கூற்றுகள் மனித நெஞ்சங்களில் பதியவில்லையே ஏன்? அதைப் புனிதமாகக் கருதி, அது முஸ்லிம்களுக்கு மட்டுமே சொந்தம் என்று ஒதுக்கி வைத்ததால்தான் நம்முள் பலருக்கு அதன் அர்த்தம்கூடத் தெரியவில்லை. நமக்கே அதைப் பற்றி முழுமையாகத் தெரியாதபோது, பிறருக்கு எப்படித் தெரியும்?

 எனவே திருக்குர்ஆனின் கூற்றுகளை மற்றவர்களுக்கு எடுத்துரைப்போம்! அதன் கருத்துகளைப் பல்வேறு கோணங்களில் பரப்புரை செய்வோம்! திண்ணமாக, காலப்போக்கில் ‘முஸ்லிம்கள் சாந்தமானவர்கள்; அவர்கள் நம்முடைய நண்பர்கள்’ எனும் உண்மை உலகுக்குப் புரியும். அந்த நிலை இன்ஷா அல்லாஹ் கூடியவிரைவில் வரும். அதற்காகப் பாடுபட நாம் யாவரும் நம்மால் இயன்ற அளவு முனைவோம்!




இஸ்லாமிய இல்லறம் (நூல் விமர்சனம்)

  இஸ்லாமிய இல்லறம் (நூல் விமர்சனம்)

புதன், 16 நவம்பர், 2011

இனியதிசைகள் மாதஇதழ் (நவம்பர் 2011)

இனியதிசைகள் மாதஇதழ் (நவம்பர் 2011)

படிக்க இங்கே சொடுக்குக 

இனியதிசைகள் மாதஇதழ் (நவம்பர் 2011)