புதன், 8 அக்டோபர், 2025

தீரமிக்கோர் யார்?

 

-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.

இமாம் மதீனா பள்ளிவாசல், பட்டினம்பாக்கம் சென்னை-28   

 

இன்று நாம் காணும் இடமெல்லாம் குற்றங்கள் மலிந்து காணப்படுகின்றன. திருட்டு, மோசடி, ஏமாற்றுதல், வன்புணர்வு, பெண்சீண்டல், விபச்சாரம், கொலை முதலிய பாவச் செயல்களும் குற்றங்களும் நிறைந்துவிட்டன.  நாள்தோறும் இச்செய்திகளின்றி நாளிதழ்கள் இல்லை எனும் நிலை உருவாகிவிட்டது. அத்தோடு புகைபிடித்தல்மது அருந்துதல், போதை ஊசி ஏற்றிக்கொள்ளுதல், போதை மருந்துகளை உட்கொள்ளுதல் முதலான குற்றச் செயல்களையும் ஒரு சாரார் செய்துகொண்டிருக்கின்றார்கள். இவ்வளவு தீயச் செயல்களும் குற்றச் செயல்களும் பெருகியதன் காரணம் என்ன? குற்றம் நடைபெறுகிறபோது அதைத் தட்டிக்கேட்போர் இல்லை; அல்லது குறைந்து விட்டனர் என்பதே.

 

குற்றச் செயல்களில் ஈடுபடுவது பாவம் என ஊட்டி வளர்க்கப்படாத சிறுவர்கள் பெரியவர்களாக வளர்ந்ததும் அவற்றைச் செய்யத் தொடங்கிவிடுகின்றார்கள். அவர்களுக்கு அவை குற்றச் செயலாகத் தோன்றாமல் சாதாரண செயல்களாகவே தெரிகின்றன. மேலும் திரைப்படங்கள், தொலைக்காட்சிப் பெட்டிகள் மூலம் குற்றச் செயல்கள் ஊக்குவிக்கப்படுகின்றன. அக்காட்சிகளைப் பார்க்கின்ற அந்த இளைஞர்களின் மனங்களில் அவை மிக எளிதாகப் பதிவாகிவிடுகின்றன. எனவே அவர்களும் அவற்றைச் செய்யும்போது அவர்களுக்கு எந்தவித வருத்தமும் ஏற்படுவதில்லை.

 

இதனால் குற்றங்கள் குறித்தும் அவற்றைச் செய்தல் பாவம் என்பது குறித்தும் இளம் பருவத்திலேயே பதிவு செய்ய வேண்டியது பெற்றோரின் கடமையாகும். நாம் செய்யும் குற்றங்களை இறைவன் பார்த்துக் கொண்டிருக்கின்றான்; நாளை மறுமையில் அது குறித்து நம்மை விசாரிப்பான் என்றும் இளவயதிலேயே பெற்றோர் தம் பிள்ளைகளுக்குச் சொல்லிக்கொடுக்க வேண்டும். தந்தை லுக்மான் அலைஹிஸ்ஸலாம் தம் பிள்ளைக்குச் சொன்ன அறிவுரையை நாம் திருக்குர்ஆனில் பார்க்கலாம்: (லுக்மான் தம் மகனை நோக்கி) "என் அருமை மகனே! (நன்மையோ தீமையோ) அது ஒரு கடுகின் விதை அளவுக்கு இருந்தாலும் சரி, அது (கரும்) பாறைகளுக்குள்ளோ, வானத்திலோ, பூமியின் ஆழத்திலோ (மறைந்து) இருந்தபோதிலும் (உங்களிடம் கணக்குக் கேட்கும்போது) நிச்சயமாக அல்லாஹ் அதையும் கொண்டு வந்துவிடுவான். ஏனென்றால், நிச்சயமாக அல்லாஹ் வெகு நுட்பமான அறிவுடையவனாகவும் (அனைத்தையும்) நன்கு தெரிந்து வைத்திருப்பவனாகவும் இருக்கிறான். (31: 16)

 

பாவம் குறித்த அச்சத்தையும் இறைவனின் ஆற்றலையும் இது உணர்த்துகிறது. மிகச் சிறிய பாவமாயினும் அதை எங்கிருந்துகொண்டு செய்தாலும், அதை உயர்ந்தோன் அல்லாஹ் அறிவான்; நாளை அதை விசாரணைக்குக் கொண்டுவருவான் என்ற அச்சம் ஒருவனின் மனத்தில் ஆழமாகப் பதிந்துவிட்டால் எந்தத் தீங்கையும் அவன் ஒருபோதும் செய்யமாட்டான்.

 

தீரமிக்கோர்: பெற்றோர் தம் பிள்ளைகளின் மனங்களில் இளம் வயதிலேயே பதியவைக்க வேண்டிய மற்றொரு செய்தி, ‘நன்மையை ஏவு; தீமையைத் தடு’ என்பதுதான். இன்று பெரும்பாலோர் இந்த நற்செயலைக் கைவிட்டுவிட்டனர். தீமையைக் கண்டவுடன் அதைத் தடுக்க முற்பட வேண்டும். அதைத் தடுக்க முற்படாததாலேயே, ‘நம்மைக் கேட்க யார் இருக்கிறார்?’ என்ற துணிவு அவர்களுக்கு ஏற்பட்டுவிடுகிறது. ஒருவன் தவறு செய்யும்போது, நான்கு பேர் அவனை எதிர்த்துக் குரல் கொடுத்தால், அவன் அடுத்த தடவை அந்தத் தவறைச் செய்ய அஞ்சுவான். இல்லையேல் முதல் தடவை அச்சத்தோடு செய்தவன், அடுத்தடுத்த தடவைகளில் துணிவோடு செய்யத் தொடங்கிவிடுவான்.

 

எனவேதான் பெற்றோர் தம் பிள்ளைகளுக்கு இளம் வயதிலேயே பதிய வைக்க வேண்டிய ஓர் அறிவுரையை நபி லுக்மான் அலைஹிஸ்ஸலாம் மூலம் நமக்கு அல்லாஹ் உணர்த்துகிறான்: “என்னருமை மகனே! தொழுகையைக் கடைப்பிடி, நன்மையான செயல்களை ஏவி, தீமையான செயல்களிலிருந்து (மனிதர்களை) விலக்கி வா. உனக்கேற்படும் சிரமங்களைப் பொறுமையுடன் நீ சகித்துக்கொள். நிச்சயமாக இது தீரமிக்கச் செயல்களுள் ஒன்றாகும்.” (31: 17) 

 

நன்மையை ஏவித் தீமையைத் தடுக்கும் நற்பணியை எல்லோரும் அவ்வளவு எளிதாகச் செய்துவிட முடியாது.  ஏனெனில் அதைச் செய்யும்போது அவர்கள் எதிர்வினைகளைச் சந்திக்க வேண்டிவரும். அவ்வாறு அவர்கள்  எதிர்வினைகளை எதிர்கொள்ள நேரிடும்போது அவர்கள் பொறுமையை மேற்கொள்ள வேண்டும். பொறுமை இல்லையேல் இந்த நற்பணியைச் செய்ய இயலாது. பொறுமையோடு மீண்டும் மீண்டும் செய்தால்தான் தவறுகளையும் குற்றங்களையும் தடுத்து நிறுத்த முடியும். இதனால்தான் அல்லாஹ் அந்த வசனத்தின்  இறுதியில், “இது தீரமிக்கச் செயல்களுள் ஒன்றாகும்” என்று கூறுகின்றான்.

 

தடுக்கும் உணர்வு வேண்டும்: தீமையைக் கண்டவுடன் அதைத் துணிவுடன் தடுக்கும் உணர்வு பிறக்க வேண்டும். அந்நேரத்தில் தனிப்பட்டதொரு துணிவு ஏற்பட வேண்டும். துணிவில்லாதோர் தீமையைத் தடுக்க முடியாது. கீழ்க்காணும் நபிமொழி அதை உறுதிப்படுத்துகிறது:

 

“உங்களுள் ஒருவர் ஒரு தீமையை (-மார்க்கத்திற்கு முரணான ஒரு செயலை)க் கண்டால் அவர் அதைத் தமது கையால் தடுக்கட்டும். இயலா விட்டால் தமது நாவால் (சொல்லித் தடுக்கட்டும்). அதுவும் இயலாவிட்டால் தமது உள்ளத்தால் (அதை வெறுத்து ஒதுக்கட்டும்). இந்த (இறுதி) நிலையானது இறைநம்பிக்கையின் பலவீனமா(ன நிலையா)கும்” என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். (முஸ்லிம்: 78)

 

ஓர் இளைஞன் சிகரெட் புகைப்பதைப் பார்க்கும் நாம் அந்த சிகரெட்டை அவனுடைய கையிலிருந்து தட்டிவிட்டு, “சிகரெட் புகைத்தல் கூடாது, அது ஒரு முஸ்லிமின் பண்புக்கு எதிரானது” என்றெல்லாம் அறிவுரை சொல்ல வேண்டும். இதை நாம் ஒரு தடவை துணிவோடு செய்துவிட்டால், அடுத்த தடவை அவன் சிகரெட் புகைக்கப் பயப்படுவான். பின்னர் அப்பழக்கத்தை அவன் விட்டுவிடலாம். மாறாக அவன் சிகரெட் புகைப்பதை நாம் பார்த்துவிட்டு, கண்டுகொள்ளாமல் இருந்துவிட்டால், பின்னொரு காலத்தில் அவன் மதுக் கடையில் நிற்பான். ஆக குற்றங்கள் பெருகுவதற்கு நாம்தாம் காரணம்; நம் இயலாமைதான் காரணம்.

 

நாம் செய்யும் உதவி: ‘நமக்கேன் வம்பு’ என்று பொறுப்புணர்வற்றுச் செல்வது நம்முடைய இயலாமையாகும். அதேநேரத்தில் குற்றம் செய்பவனை, அக்குற்றத்தைச் செய்யவிடாமல் தடுத்து நிறுத்துவது நாம் அவனுக்குச் செய்யும் உதவியாகும். இத்தகைய மாற்றுச் சிந்தனையை அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நமக்குக் கற்றுத் தந்துள்ளார்கள்.

 

(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், “உன் சகோதரன் அநியாயக்காரனாக இருந்தாலும் அநீதி இழைக்கப்பட்டவனாக இருந்தாலும் அவனுக்கு நீ உதவிசெய்'' என்று சொன்னார்கள். அப்போது ஒரு மனிதர், “அல்லாஹ்வின் தூதரே! அநீதி இழைக்கப்பட்டவனுக்கு நான் உதவி செய்வேன். (அது சரிதான்.) அநியாயக்காரனுக்கு எப்படி நான் உதவி செய்வேன்? கூறுங்கள்!'' என்றார். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், “அவனை அநியாயம் செய்ய விடாமல் நீ தடுப்பாயாக! இதுவே நீ அநீதியாளனுக்குச் செய்யும் உதவியாகும்'' என்றார்கள். (புகாரீ: 6952)

 

தீமையைத் தடுக்காவிட்டால்: அநியாயத்தை நாம் தடுக்க முன்வரவில்லையென்றால் ஒரு நாள் அதன் தாக்கம் நம்மீதும் ஏற்படும் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். சான்றாக, ஃபலஸ்தீன் நாட்டில் ஃகாஸா நகரில் இஸ்ரேல் இராணுவத்தால் முஸ்லிம்கள் இனப்படுகொலை செய்யப்படுவதைக் கண்டு அண்டையிலுள்ள முஸ்லிம் நாடுகள் எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் இது நாள் வரை அமைதி காத்து வந்தன. அதனால் தற்போது அது கத்தார் நாட்டின்மீதும் தாக்குதல் தொடுத்துள்ளது. அதன் பின்னர்தான் அரபு நாடுகளெல்லாம் ஒன்று சேர்ந்து இனி வரும் காலங்களில் இது மாதிரியான தாக்குதல் எந்த நாட்டின்மீதும் நடத்தக்கூடாது என்று அமெரிக்காவிடம் கோரிக்கை வைத்துள்ளன.

 

ஆசிரியராகவே இருந்தாலும்...: தவறு செய்வோர் நம்மைவிட இளையோராக இருந்தால் நாம் எதையும் யோசிக்காமல் எளிதாகத் தடுத்த நிறுத்தத் துணிந்துவிடுவோம். ஆனால் தவறு செய்வோர் நம்மைவிட வயதில் மூத்தவராகவோ நமக்குக் கற்பிக்கும் ஆசிரியராகவோ இருந்தால் அவரை எதிர்த்துப் பேச, அவர் செய்வதைத் தடுக்க நமக்குத் துணிவு ஏற்படுமா? ஆழமான இறைநம்பிக்கையே ஆசிரியரானாலும் தட்டிக்கேட்கத் தூண்டும்.  அதேநேரத்தில் அவரின் வயதுக்கு மதிப்பளித்து மிகக் கண்ணியமாக அவரிடம் நடந்துகொள்ள வேண்டும்.

 

வரலாற்று நிகழ்வு ஒன்று திருக்குர்ஆனில் கூறப்படுகிறது. அது ஆசிரியருக்கும் மாணவருக்கும் இடையே நடைபெற்றது. ஹிள்ரு அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் கல்வி கற்கச் சென்ற மூஸா அலைஹிஸ்ஸலாம் தம் ஆசிரியரிடம், ‘உங்களுக்கு அல்லாஹ் கற்றுக்கொடுத்தவற்றிலிருந்து உங்களிடம் நான் கற்றுக்கொள்ள வந்துள்ளேன்’ என்று கூற, ‘நீர் என்னிடம் பொறுமையாக இருப்பீரா?’ என்று கேட்கிறார். ‘ஆம்! நான் இன் ஷாஅல்லாஹ் பொறுமையாகவே இருப்பேன்’ என்று கூறுகிறார். ‘நானாக எதையும் கூறாத வரை நீர் எதையும் என்னிடம் கேட்கக்கூடாது’ என்ற நிபந்தனையோடு இருவரும் செல்கின்றார்கள்.

 

முதலில் அவ்விருவரும் கப்பலில் பயணம் செல்கின்றார்கள். அப்போது அவர் அக்கப்பலைத் துளையிடுகிறார். அதைக் கண்ட மூஸா அலைஹிஸ்ஸலாம் இருவருக்கிடையே உள்ள நிபந்தனையை மறந்துவிட்டு, தவறு என்று தெரிந்தவுடன், “கப்பலில் துளையிடுகின்றீரே, அதில் பயணம் செய்யும் நாம் மூழ்கி இறந்துவிடுவோமே?” என்று கூறினார். அதற்கு அந்த ஆசிரியர், “நீர் என்னுடன் பொறுமையாக இருக்க மாட்டீர் என்று நான் ஏற்கெனவே சொன்னேன் அல்லவா?” என்றார். “நான் அதை மறந்துவிட்டேன். அதற்காக என்னைத் தண்டித்துவிடாதீர்” என்று கூறினார். பின்னர் இருவரும் ஒரு பகுதியில் நடந்துசென்று கொண்டிருந்தனர். அங்குச் சிறுவர்கள் விளையாடிக்கொண்டிருந்தார்கள். அவர்களுள் ஒரு சிறுவரின் தலையைத் திருகி, அவரைக் கொன்றுவிட்டார்.

 

அதைப் பார்த்துக் கொதித்தெழுந்த மூஸா அலைஹிஸ்ஸலாம் தம் ஆசிரியரிடம், “எந்தப் பாவமும் செய்யாத பச்சிளம் பாலகரை இப்படி அநியாயமாகக் கொன்றுவிட்டீரே?” என்றார். அதற்கு அவர், “நீர் என்னுடன் பொறுமையாக இருக்க மாட்டீர் என்று நான் ஏற்கெனவே சொன்னேன் அல்லவா?” என்றார். அதற்கு அவர், “இனி ஒரு தடவை நான் உம்மிடம் எதையேனும் கேட்டால் அதுதான் நாம் பிரிந்துசெல்லும் நேரமாகும். எனவே இனி நான் உம்மிடம் எதையும் கேட்க மாட்டேன்” என்றார்.

 

பின்னர் அவ்விருவரும் ஒரு சிற்றூருக்குச் சென்றனர். அங்கு அவர்களுக்கு யாரும் உணவு கொடுத்து உபசரிக்கவில்லை. திரும்பி வந்துகொண்டிருந்தபோது அங்கு ஒரு சுவர் கீழே விழுந்துவிடும் நிலையில் இருந்தது.  அதைத் தாங்கிப் பிடித்துச் செப்பனிட்டு நிலைநிறுத்தினார் ஆசிரியர். அதைக் கண்ட மூஸா அலைஹிஸ்ஸலாம் தம் ஆசிரியரிடம், “உணவு கொடுத்து உபசரிக்காத ஊரார்க்கு ஒன்றுமே இன்றிச் செப்பனிட்டுக் கொடுத்துள்ளீரே. அவர்களிடம் சொல்லிவிட்டுச் செய்திருந்தால் அவர்கள் ஏதேனும் கூலி கொடுத்திருப்பார்கள். அதை வைத்து நான் உணவு சாப்பிட்டிருக்கலாம் அல்லவா?” என்றார். அதைக் கேட்ட அந்த ஆசிரியர், “இதுதான் நாம் இருவரும் பிரியும் நேரம் ஆகும். இருப்பினும் உம்மால் பொறுமையாக இருக்க முடியாத என்னுடைய அச்செயல்களுக்கான விளக்கத்தை உமக்குச் சொல்லிவிடுகிறேன்” என்று அதற்கான விளக்கத்தைக் கூறலானார்.

 

“முதலில் நான் கப்பலில் ஏன் துளையிட்டேன் என்றால், அக்கரையில் உள்ள ஓர் அரசன், அங்கு வருகின்ற நல்ல கப்பல்களையெல்லாம் அபகரித்துக்கொள்கிறான். அவ்வாறு இந்தக் கப்பலையும் அபகரித்துக்கொண்டுவிடக் கூடாது என்பதற்காகவே நான் அவ்வாறு செய்தேன். இரண்டாவது, அந்தச் சிறுவனை நான் ஏன் கொலை செய்தேன் என்றால், அவன் வளர்ந்து பெரியவனாகித் தம் பெற்றோரை இறைமறுப்புக்குத் திருப்பும் நிலை உண்டாகும். எனவேதான் அவனைக் கொலை செய்தேன். மூன்றாவது, அந்தச் சிற்றூரில் இருந்த சுவரைச் செப்பனிட்டு நிறுத்தினேன். ஏனென்றால் அச்சுவருக்குக் கீழ் ஒரு புதையல் உள்ளது. அது அநாதைச் சிறுவர்கள் இருவருக்குரியது. அவர்கள் பெரியவர்களாகின்ற வரை அச்சுவர் பாதுகாப்பாக நிற்க வேண்டும் என்பதற்காகவே அவ்வாறு செய்தேன். ஆக இவற்றையெல்லாம் நான் என் விருப்பப்படி செய்யவில்லை. மாறாக என் இறைவனின் கட்டளைப்படியே செய்தேன்” என்றார்.

 

இந்நிகழ்வு சுட்டிக்காட்டுவது என்னவெனில், தீமையைச் செய்தவர் யாராக இருந்தாலும் அதைத் தட்டிக் கேட்க வேண்டும் என்பதைத்தான். முன் நிபந்தனையிட்டுக் கல்வி கற்கச் சென்றாலும், அதையெல்லாம் ஒருபுறம் வைத்துவிட்டு, கண்முன்னே ஒருவர் செய்யும் தீமையைக் கண்டுவிட்டு எப்படி ஒருவரால் அமைதியாக இருக்க முடியும் என்ற உணர்வைத்தான் அந்த நிகழ்வுகள் மூஸா நபிக்கு ஊட்டின. எனவே அவர் உடனுக்குடன் அதை எதிர்த்துக் குரல் கொடுத்தார்.

 

“(நம்பிக்கையாளர்களே!) உங்களுள் ஒரு கூட்டத்தார் (மனிதர்களைச்) சிறந்ததன் பக்கம் அழைத்து நன்மையைச் செய்யும்படி ஏவி, பாவமான செயல்களிலிருந்து அவர்களை விலக்கிக் கொண்டு இருக்கட்டும். இத்தகையோர்தாம் வெற்றி பெற்றவர்கள்” (3: 104) என்று உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்.

 

ஆகவே நம் கண்முன் நடைபெறும் தீமை எத்தகையதாக இருந்தாலும் அதைச் செய்வோர் யாராக இருந்தாலும் அவரைத் தடுத்து நிறுத்த வேண்டும். அதுதான் நம்முடைய வலுவான இறைநம்பிக்கையின் அடையாளமாகும். அத்தகைய துணிவையும் இறைநம்பிக்கையையும் ஏக இறைவன் அல்லாஹ் நமக்கு அருள்வானாக. நன்மையை ஏவித் தீமையைத் தடுக்கும் சிறந்த சமுதாயமாக நம்மை அவன் வாழ வைப்பானாக. 

=======================










புதன், 17 செப்டம்பர், 2025

கூர்ந்து கவனிப்போம்!


-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.

 

நாம் பார்ப்பதை, கேட்பதை, பிறர் சொல்வதை நினைவில் வைத்துக்கொள்ள முடியாமல் அவ்வப்போது மறந்துவிடுகிறோம். இரண்டிரண்டு இலக்கமாகச் சொல்லப்பட்ட செல்பேசி எண்ணை, ‘நான்  ஒரு தடவை சொல்றேன்; சரியான்னு பாருங்க’ என்கிறோம். அவ்வப்போது ‘மறந்துவிட்டேன்’ என்ற வார்த்தையைச் சொல்லிக்கொண்டே இருக்கிறோம். அல்லது செய்யக்கூடாததைச் செய்துவிட்டு, ‘சாரி’ என்கிறோம். இவையெல்லாம் நம் கவனச் சிதறல்களால் ஏற்படுபவை.

 

இந்தக் கவனச் சிதறல் நாம் செய்யும் பல்வேறு செயல்களில் ஏற்படுகிறது. அதனால்தான் நாம் எந்தச் செயலையும் வெற்றிகரமாகச் செய்து முடிக்க இயலுவதில்லை. இந்தக் கவனச் சிதறல்தான் நாம் தொழுகின்ற தொழுகையிலும் ஏற்படுகிறது. நாம் தொழுகின்றபோது, ஏற்கெனவே மனனம் செய்துவைத்துள்ள அல்ஹம்து அத்தியாயத்தையும் பிற அத்தியாயங்களையும் நம்மையறியாமலேயே ஓதிவிடுகிறோம். நாம் அவற்றை ஓதுகிறபோது அதன் ஒவ்வொரு வார்த்தைக்கும் பொருள் என்ன என்று யோசித்திருக்கிறோமா? பொருள் உணர்ந்து ஓதியுள்ளோமா? அல்லாஹ்வைப் புகழ்வதும் நமக்கான பிரார்த்தனையும் அல்ஹம்து அத்தியாயத்தில் உள்ளன. அவற்றை உணர்ந்து நாம் ஓதியுள்ளோமா? இல்லை என்பதே நம்முள் பெரும்பாலோரின் பதிலாகும்.

 

அதுபோலவே அதில் ஒவ்வொரு தடவையும் நாம் சொல்கிற ‘அல்லாஹு அக்பர்’ என்பதன் பொருள் உணர்ந்து சொல்லியுள்ளோமா? ருகூஉ, சஜ்தாவில் ஓதுகிற துதிச் சொற்களைப் பொருள் உணர்ந்து சொல்லியுள்ளோமா? தொழுகையின் இறுதியில் ஓதுகிற அத்தஹிய்யாத், தரூதே இப்ராஹீம், துஆ ஆகியவற்றைப் பொருள் உணர்ந்து ஓதியுள்ளோமா? எல்லாமே நாம் மனனம் செய்துவைத்துள்ளதால்  அவை அப்படியே, தானியங்கி இயந்திரம்போல் இயல்பாக ஓடிக்கொண்டே இருக்கின்றன. இறுதியில் ஸலாம் சொல்லித் தொழுகையை முடித்துவிடுகிறோம். ஆனால் நாம் தொழுத அந்தத் தொழுகை நமக்கு மனஅமைதியைத் தந்ததா? அதன்மூலம் நமக்கு முழுமையான நன்மை கிடைக்குமா என்றெல்லாம் நாம் சிந்திப்பதே இல்லை. 

 

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அம்மார் பின் யாசிர் அறிவித்துள்ளதாவது: ஒருவர் தமது தொழுகையை முடித்துக்கொண்டு (வீடு) திரும்புகிறார். அப்போது (தொழுததற்காகக் கிடைக்கும் நன்மையில்) பத்தில் ஒன்று, ஒன்பதில் ஒன்று, எட்டில் ஒன்று, ஏழில் ஒன்று, ஆறில் ஒன்று, ஐந்தில் ஒன்று, நான்கில் ஒன்று, மூன்றில் ஒன்று, பாதி இவற்(றில் ஒன்)றைத் தவிர வேறெதுவும் அவருக்கு எழுதப்படுவதில்லை. (அபூதாவூத்:, 796/ 675)

 

இந்த நபிமொழி நம் தொழுகையைக் குறித்து நம்மைச் சிந்திக்க வைக்கிறது. நாம் தொழுத தொழுகைக்கு நமக்கு முழுமையான நன்மை கிடைப்பதில்லை. காரணம், நாம் தொழுகின்றபோது நம் கவனம் முற்றிலுமாக அல்லாஹ்வை நோக்கியதாகவோ அவனைப் பற்றி மட்டுமே சிந்திப்பதாகவோ இருப்பதில்லை. நாம் என்ன ஓதுகிறோமோ அவற்றில் நம் கவனத்தைச் செலுத்துவதில்லை.  ஒவ்வொரு  தடவை நாம் கூறும் அல்லாஹு அக்பர் - அல்லாஹ் மிகப்பெரியவன் என்பதன் பொருள் என்ன, அவன் எவ்வளவு பெரியவன் என்பதையெல்லாம் நாம் சிந்திப்பதே இல்லை.

 

அதாவது ஒருவர் தாம் தொழும் தொழுகைக்கு அவரது கூரிய கவனம், இறையச்சம், மனஓர்மை ஆகியவற்றைப் பொருத்துதான் நன்மையைப் பெற முடியும். இவை இல்லாமல் தொழுதோர்  அவர்களின் நிற்றல், குனிதல், சிரம் பணிதல், அமர்தல் ஆகியவற்றிற்கான நன்மையை மட்டுமே பெறுகிறார்கள். அதன்படி அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தொழுதோரின் நன்மையைக் கொஞ்சம் கொஞ்சமாக உயர்த்திக்கொண்டே செல்கிறார்கள். பத்தில் ஒன்று என்பது நூற்றுக்குப் பத்து மதிப்பெண்கள்ஒன்பதில் ஒன்று என்பது நூற்றுக்குப் பதினொன்று சொச்சம் மதிப்பெண்கள்; எட்டில் ஒன்று என்பது நூற்றுக்கு 12.5 மதிப்பெண்கள்; ஏழில் ஒன்று என்பது நூற்றுக்குப் பதினான்கு சொச்சம் மதிப்பெண்கள் என்று பொருள். இப்படியே படிப்படியாகக் கூடி, மிகுந்த கவனக் குவிப்போடு தொழுதவர் பாதி நன்மையைப் பெறுகிறார். அதாவது நூற்றுக்கு ஐம்பது மதிப்பெண்கள். இதுதான் நம் கூரிய கவனத்திற்கும் கவனச் சிதறல்களுக்கும் இடையே உள்ள வித்தியாசம் ஆகும்.

 

பள்ளிவாசலில் சிலர் தொழுகின்றார்கள். அவர்களுடைய உடல் மட்டுமே அங்கே உள்ளது.  அவர்களின் உள்ளமோ உலகெல்லாம் உலா வந்துகொண்டிருக்கிறது. கூட்டுத் தொழுகையில் கலந்துகொண்டுள்ள அவர்கள், இமாம் என்ன ஓதுகிறார்; எத்தனை ரக்அத் தொழுவிக்கிறார்; இது எத்தனையாவது ரக்அத் என்பதையெல்லாம் அறிவதில்லை. அல்லாஹு அக்பர் என்றவுடன் குனிவது, நிமிர்வது, சிரம் பணிவது, அமர்வது என்று ஒன்றன்பின் ஒன்றாகச் செய்வது அல்லது பக்கத்திலுள்ளவர் செய்வதைப் போன்று செய்வது. இதுதான் பெரும்பாலோரின் நிலை. இத்தகையோரின் தொழுகையைக் குறித்துதான், “தொழுகையில் அறவே கவனம் இல்லாமலிருந்தால் அந்தத் தொழுகை அவன் முகத்திலேயே வீசியெறியப்படும்” என்று வேறொரு நபிமொழி கூறுகிறது. (அத்துர்ருல் மன்ளூத்)

 

தொழுகையில் நம் கவனத்தைச் சிதறடிக்கக்கூடிய பல்வேறு சாதனங்கள் இன்றைய செயற்கை நுண்ணறிவு உலகில் உள்ளன. பற்பல திரைப்படக் காட்சிகள், இசைகள், பாடல்கள், வியாபாரச் சிந்தனைகள், அலுவலகச் சிந்தனைகள், இஎம்ஐ கடன் தொல்லைகள் உள்ளிட்ட பல்வேறு குறுக்கீடுகள் உள்ளன. அதையெல்லாம் தாண்டித்தான் நாம் தொழ வேண்டியுள்ளது. பல்வேறு காட்சிகள் நிறைந்த இந்தக் காலத்திலும் கூரிய கவனத்துடனும் மனஓர்மையுடனும் இறையச்சத்துடனும் தொழுவோரே  பாதி நன்மையைப் பெறுகின்றனர்.                                            

அனஸ் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது: ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களிடம் உருவப்படங்கள் பொறித்த திரைச் சீலை ஒன்று இருந்தது. அதனைக்கொண்டு வீட்டின் ஒரு பகுதி(யிலிருந்த அலமாரி)யை அவர்கள் மறைத்திருந்தார்கள். (அதை நோக்கித் தொழுத) நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், “இந்தத் திரைச் சீலையை நம்மிடமிருந்து அகற்றிவிடு! ஏனெனில் இதிலுள்ள உருவப்படங்கள் என் தொழுகையில் (என்னிடம்) குறுக்கிட்டுக்கொண்டேயிருக்கின்றன” என்று சொன்னார்கள். (புகாரீ: 374)

 

திரைப்படப் பாடல்களோ காட்சிகளோ இல்லாத நபியவர்களின் காலத்தில் ஒரே ஒரு திரைச்சீலையில் பொறிக்கப்பட்டிருந்த உருவப்படங்கள் அவர்களின் கவனத்தைத் திருப்புவதாக உணர்ந்தார்கள் என்றால் எந்த அளவுக்குத் தொழுகையில் மனஓர்மையை விரும்பியுள்ளார்கள் என்பதை நாம் புரிந்துகொள்ளலாம். ஆனால் இன்று நாம் திரும்பும் திசையெங்கும் காட்சிகள், படங்கள், இசை ஆகியவற்றையே பார்க்கிறோம்; செவியுறுகின்றோம். அதையும் தாண்டி நம் கைகளிலேயே தவழ்ந்துகொண்டிருக்கிற அறிதிறன்பேசியில் நாம் காணும் காட்சிகள் ஏராளம். இதன்பிறகு நாம் தொழுகையில் நின்றால் நம்முடைய மனக்கண் என்ன தோன்றும்? இறைவனைப் பற்றிய சிந்தனையா, நாம் பார்த்த காட்சிகளின் பிம்பங்களா?

 

தொழுகையில் மட்டுமின்றிச் செய்யும் செயலில் மனத்தை ஒருமுகப்படுத்தி, கூர்ந்து கவனம் செலுத்துவோர் மற்றோரை வென்றுவிடுகின்றனர். திருக்குர்ஆன் மனனம் செய்யும் வகுப்பிலுள்ள இருபது மாணவர்களுள் சிலர் மட்டும் ஈராண்டுகளில் அதை மனனம் செய்துவிடுகின்றனர். அவர்களுள் சிலர் நான்காண்டுகளாகியும் மனனம் செய்து முடிப்பதில்லை. இது அவ்விரு சாராரின் நினைவாற்றலையும் கவனக் குவிப்பையும் வேறுபடுத்திக் காட்டுகிறது.

 

சாலையில் வாகனம் ஓட்டுவோருள் சிலர் பல ஆண்டுகளாக எந்த விபத்துமின்றி ஓட்டிவருகின்றனர். வேறு சிலர் அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றனர். தம்முடைய நூறு சதவிகிதக் கவனத்தையும் சாலையில் செலுத்தி வாகனத்தை இயக்குவோர் விபத்தின்றிக் கடந்து சென்றுகொண்டிருக்கின்றனர். சாலையில் கவனத்தைச் சிதற விடுவோர் விபத்தில் சிக்கிக்கொள்கின்றனர். பத்து, பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதுவோர் பலர் ஒரே தடவையில் தேர்ச்சி பெற்றுவிடுகின்றனர். வேறு சிலர் விடுபட்ட பாடங்களை மீண்டும் மீண்டும் எழுதியும் தேக்கமடைகின்றனர். தம்முடைய முழுக் கவனத்தையும் பாடத்தில் செலுத்துவோர் வெற்றிபெறுகின்றனர்; கவனச் சிதறலுக்குள்ளானோர் தோல்வியடைகின்றனர்.

 

தள்ளுவண்டியில் வியாபாரத்தைத் தொடங்கி, பின்னர் சிறிதாக ஒரு கடையை வாடகைக்குப் பிடித்துகொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி இன்று நகரத்தில் மிகப்பெரிய வணிக வளாகத்தையே நடத்துகின்ற அளவுக்கு உயர்ந்திருக்கிறார் என்றால் அவர்தம் வியாபாரத்தில் செலுத்திய நூறு சதவிகிதக் கவனம், உழைப்பு, தன்முனைப்பு ஆகியவையே ஆகும். ஆக ஒவ்வொரு துறையிலும் செயலாற்றுகின்ற அனைவரின் நிலையும் இதுதான். அவர்களுள் மிகுந்த கவனத்தோடும் தன்முனைப்போடும் செயல்படுவோர் வெற்றியடைகின்றனர்; எடுத்துக்கொண்ட செயலில் முழுமையான கவனம் செலுத்தாதோர் தோல்வியடைகின்றனர்; அல்லது பின்தங்கியே இருக்கின்றனர்.

 

எனவே நம்முடைய செயல்பாடுகளில் வெற்றியடைய வேண்டுமெனில் ஆழ்ந்த கவனம் செலுத்துவதோடு தன்முனைப்போடும் செயல்பட வேண்டும். அது தொழுகையானாலும் தொழிலானாலும் சரியே! தொழுகின்ற நேரத்தில் அதில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும்; தொழில்  செய்கின்றபோது அதில் மட்டும் முனைப்போடு ஈடுபட வேண்டும். அதுதான் நமக்கு வெற்றியைத் தரும். அவ்வாறு ஈடுபட்டால்தான் முழுமையான நன்மையையும் இலாபத்தையும் பெற முடியும்.

=====================







செவ்வாய், 16 செப்டம்பர், 2025

தீர விசாரிப்பதே மெய்...

 

-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.

இமாம் மதீனா பள்ளிவாசல், பட்டினம்பாக்கம் சென்னை-28   

செயற்கை நுண்ணறிவால் (ஆர்ட்டிஃபிசியல் இன்டலிஜென்ஸ்-ஏஐ) இயங்கக்கூடிய மாய உலகில் நாம் தற்போது வாழ்ந்துகொண்டிருக்கிறோம். இங்கு நாம் பார்க்கும் காணொலிகள், படங்கள், குரல்கள் ஆகியவற்றுள் பெரும்பாலானவை பொய்யானவை ஆகும். இவ்வுலகில் பொய் குறித்து எச்சரிக்காதோர் இல்லை. அறிஞர்கள், முன்னோர்கள், தீர்க்கதரிசிகள் அனைவரும் பொய் குறித்து எச்சரிக்கை செய்துள்ளனர். அந்த வகையில் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் பொய் குறித்து எச்சரிக்கை செய்துள்ளார்கள்.

 

மனிதர்களை ஏமாற்றிப் பிழைப்போர் மிகுந்த காலமிது. எவ்வளவுதான் எச்சரிக்கையாக இருந்தாலும் எப்படியாவது நம்மை ஏமாற்றிவிடுகின்றார்கள். படித்தவர்களே பல தடவை ஏமாறியிருக்கின்றார்கள்; தாம் பாடுபட்டுச் சேமித்த பணத்தை இழந்திருக்கின்றார்கள். நாம் ஏதேனும் பொருள் வாங்குவதாக நம் நண்பர்களிடம் பேசியிருப்போம்; ஆலோசனை செய்திருப்போம். அல்லது நாம் குறிப்பிட்ட ஒரு பாடத்தைப் படிக்கப்போவதாக நம் நண்பர்களிடம், உறவினர்களிடம், பெற்றோரிடம் சொல்லியிருப்போம். அல்லது குறிப்பிட்ட வேலைக்கு விண்ணப்பம் செய்திருப்போம். அதை எப்படியோ தெரிந்துகொண்டு அதற்குத் தோதுவாகச் சில இணைப்புகளை நம்முடைய செல்பேசிக்கு அனுப்பி, நீங்கள் விரும்பிய பொருளைக் குறைந்த விலையில் வாங்க, நீங்கள் விரும்பிய பாடத்தைக் குறைந்த கட்டணத்தில் படிக்க, நீங்கள் இந்த வேலையைப் பெற இங்கு க்ளிக் செய்யுங்கள் என்று சொல்லியிருப்பார்கள். அதை நாம் தொட்டுவிட்டால் அவ்வளவுதான். உள்ளே சென்றவுடன் நாம் அவர்களுடைய அடிமையைப் போல் அவர்கள் சொன்னதையெல்லாம் செய்வோம். கடைசியில் நாம் நம் பணத்தை இழப்போம். இதுதான் இன்றைய ஏமாற்றுக்காரர்களின் மிக எளிமையான தந்திரம்.

 

காணொலிகளை உருவாக்குதல்: இன்றைய இளம் தலைமுறையினர் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்திப் பல்வேறு முன்னேற்றங்களை அடைகின்றார்கள்; மிக எளிதாகத் தம் செயல்திட்டங்களைச் செய்துமுடிக்கின்றார்கள் என்பது வரவேற்புக்குரியது.  ஆனால் மக்களை ஏமாற்றுவதற்காகவே எங்கோ ஓரிடத்தில் அமர்ந்துகொண்டு இந்தச் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி வருகின்றார்கள் சிலர். அவர்களிடம்தான் நாம் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இன்று நாம் காணுகின்ற காணொலிகள் பல உண்மைக்கு முரணானவை. யானை, குதிரை, சிங்கம் போன்ற விலங்குகள்  மிதிவண்டி ஓட்டுவதைப் போல காணொலிகள் புலனத்தில் (வாட்ஸ்அப்) வலம் வந்தன. பார்த்தோர் சிரித்துவிட்டு, நகர்ந்துவிட்டனர். காரணம் இதெல்லாம் சாத்தியமற்றது; ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கியிருக்கின்றார்கள் என்பதைப் புரிந்துகொண்டு கடந்துசென்று விடுகின்றார்கள். ஆனால் அந்தத் தொழில்நுட்பத்தை வேறு பல கோணங்களில் பயன்படுத்தி காணொலிகளை உருவாக்கி வருகின்றனர். அத்தகைய காணொலிகளை நாம் இனம் காண முடியாது.

 

ஏமாற்றுக்காரர்கள் உருவாக்கக்கூடிய காணொலிகள் நம்மை மிக எளிதாக ஏமாறச் செய்துவிடும். சான்றாக அதில் பேசுபவர் மிகப்பெரும் தொழிலதிபராக இருப்பார். அவர் பொய் சொல்ல வேண்டிய அவசியமில்லை என்பது நமக்கும் தெரியும். எனவே அவர்தாம் பேசுகிறார் என்று நம்பிவிடுவோம். “என்னுடைய நிறுவனத்தின் பங்குகளை விற்பதாக உள்ளேன். அதன் பங்குகளை வாங்குவதன்மூலம் அதில் நீங்களும் பங்குதாரர் ஆகலாம். ஒரு பங்கின் விலை இவ்வளவு, நீங்கள் எத்தனைப் பங்குகளை வாங்க விரும்புகிறீர்களோ அத்தனைப் பங்குகளை வாங்கிக்கொள்ளலாம். நீங்கள் பணம் செலுத்த வேண்டிய வங்கிக் கணக்கு எண் இதோ கீழே தரப்பட்டுள்ளது” என்று அவர் அந்தக் காணொலியில் பேசுவார். ஆனால் அந்தக் காணொலி ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அவரது குரலில் உருவாக்கப்பட்டது என்பதைப் பலர் அறிய மாட்டார்கள். அதனால் அதில் பணத்தைச் செலுத்தி ஏமாறுவார்கள்.

 

அதாவது அந்தக் காணொலி எவ்வாறு உருவாக்கப்படுகிறதென்றால், அவர் எங்கோ பேசிய காணொலிக் காட்சியின் ஒளிப்படக் காட்சியை மட்டும் எடுத்து வைத்துக்கொண்டு, அதன் பின்னணியில் அவர்கள்  விரும்புவதைச் சேர்த்துவிடுவார்கள். அவரது குரலில் பேசுவதற்கு, அதற்கென உள்ள செயலியில் (ஆப்) அவரது குரலைப் பதிவு செய்துவிட்டால், நாம் கொடுக்கின்ற வாக்கியங்களை அவரது குரலில் பதிவு செய்து தந்துவிடும். பின்னர் அவ்விரண்டையும் இணைத்து ஒரு காணொலியை மிக எளிதாக உருவாக்கிவிடுவார்கள். பின்னர் அதைச் சமூக ஊடகங்களில் உலாவ விடுவார்கள். அதைக் காணுகின்ற பலர் அதை உண்மையென நம்பித் தம் பணத்தைச் செலுத்தத் தொடங்குவார்கள். இறுதியில்தான் தாம் ஏமாற்றப்பட்டுள்ளோம் என்பதை அவர்கள் அறிவார்கள்.

          

படங்களைப் பேச வைத்தல்: கடந்த கால அல்லது நிகழ்காலப் படம் ஒன்றைப் பதிவேற்றம் செய்து, அதிலுள்ளவரைப் பேசுமாறு செய்யலாம். அந்த அடிப்படையில் இறந்துபோன நம்முடைய பெற்றோர், முன்னோர்மூத்த தலைவர்கள் ஆகியோரைப் பேச வைக்கலாம். இவ்வாறு செய்யும்போது யாராவது மூத்த அறிஞர் ஒருவரை ஏதாவது முக்கிய விஷயங்களைப் பேசவைத்து, யூடியூபில் பதிவேற்றம் செய்துவிட்டால் பிற்காலத்தில் அந்தக் காணொலியைக் காணுகின்றவர்கள், ஏதேனும் தகவலைத் தேடுகிறபோது அந்தக் காணொலி தென்பட்டு, அதில் சொல்லப்படுகிற தவறான தகவலைக்கூட உண்மையென நம்பி வழிகெடும் நிலை உண்டாகலாம். எனவே காணொலி குறித்து மிகுந்த எச்சரிக்கை வேண்டும். மேலும் பேச இயலாதவரின் நிழற்படத்தைப் பதிவேற்றம் செய்து, அதைப் பேசுமாறு உருவாக்கி, அவர் இயல்பாகப் பேசக்கூடியவர்தாம் என்று பிறரை நம்ப வைக்கலாம்.

 

உருவங்களை மாற்றுதல்: இது தொன்றுதொட்டு இருந்து வருகிற ஒரு பழக்கம்தான். இறைவன் படைத்த உருவங்களை மனிதன் தன் மனத்தில் தோன்றும் கற்பனைத்திறனுக்கேற்ப மாற்றியமைக்கிறான். முற்கால மனிதன், கடவுள் என்றால் மனிதனைப் போன்று இருக்கக்கூடாது. அவர் மனிதனைவிட வித்தியாசமாக இருக்க வேண்டும் என்று நினைத்தான். எனவே கடவுளுக்குப் பத்துத் தலைகள் இருபது கைகள் எனக் கற்பனை செய்து, அத்தகைய ஒரு தோற்றத்தை உருவாக்கி, அதற்கு ‘இராவணன்’ எனப் பெயரிட்டான். அது போலவே ஆறு தலைகளை உடைய கடவுளுக்கு ‘ஆறுமுகம்’ எனப் பெயரிட்டான். மேலும் வெட்டி ஒட்டும் கலையின் அடிப்படையில் மனிதனுக்கு யானைத் தலையை வெட்டி, ஒட்டி அதற்கு ‘விநாயகர்’ என்று பெயரிட்டான்.

 

வெட்டி, ஒட்டும் தொழில்நுட்பம்தான் இன்று பரவலாகக் காணப்படுகிறது. மனிதத் தலையை வெட்டி எடுத்துவிட்டு, அவ்விடத்தில் வேறொரு மனிதனின் தலையை ஒட்டிவிடுகிறான். அரசியல் தலைவர்களை, நடிகர்களை, பிரபலமானவர்களைக் கேலி கிண்டல் செய்வதற்காக இவ்வாறு உருவங்களை மாற்றியமைக்கிறார்கள்.   மனித உருவங்களைச் சிதைத்து புதிய புதிய உருவங்களை உருவாக்குகிறார்கள். இதை ‘மார்ஃபிங்’ என்று அழைக்கிறார்கள். ஆனால் அதையும் தாண்டி, சமூக ஊடகங்களில் பதிவிடப்படுகிற அழகிய முகங்களை உடைய பெண்களின் நிழற்படங்களைச் சேர்த்து, அவற்றிலுள்ள தலைகளை மட்டும் வெட்டியெடுத்து நிர்வாணப் பெண்களின் உடலில் வைத்து, புதிய புதிய படங்களை உருவாக்கி, அவற்றை அதற்கென உள்ள  இணையதளங்களில் விற்பனை செய்துவிடுகின்றார்கள். எனவே சமூக ஊடகங்களில் தம்முடைய நிழற்படத்தைப்  பதிவேற்றம் செய்கின்ற பெண்கள் அதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

 

மேலும் ஆணின் படத்தைப் பெண்ணைப் போலவும் பெண்ணின் படத்தை ஆணைப் போலவும் உருமாற்றம் செய்கின்றார்கள். இவ்வாறு உருமாற்றம் செய்வது ஷைத்தானின் செயலாகும். அவன் அல்லாஹ்விடம் அறைகூவல் விட்டு வந்துள்ளான். “நிச்சயமாக நான் அவர்களை வழிகெடுப்பேன். அவர்களுக்கு வீண் நம்பிக்கைகளை உண்டு பண்ணி (பிசாசுகளுக்காக பிரார்த்தனை செய்து விடப்பட்ட) ஆடு, மாடுகளின் காதுகளை அறுத்து விடும்படியும் அவர்களை ஏவுவேன். அல்லாஹ்வின் படைப்பினங்(களின் தோற்றங்)களை மாற்றும் படியாகவும் நிச்சயமாக நான் அவர்களை ஏவுவேன்'' (என்று கூறினான்.) ஆகவே, அல்லாஹ்வையன்றி (இத்தகைய) ஷைத்தானை (தனக்கு)ப் பாதுகாவலனாக எடுத்துக்கொண்டவன் பகிரங்கமான நஷ்டத்தை அடைந்துவிட்டான். (4: 119)

 

பழையதைப் புதிதாக மாற்றுதல்: புதிய படங்களைப் பழையதாக மாற்றுதல், பழைய படங்களைப் புதிதாக மாற்றுதல் ஆகிய இரண்டு வகையான தொழில்நுட்பங்களும் தற்காலத்தில் உள்ளன. நம்முடைய மூதாதையரின்  பழைய நிழற்படத்தைப் புதிதுபோல் மாற்றியமைத்துக்கொள்ள முடியும். புதிய நிழற்படங்களைப் பழையதைப் போல் மாற்றியமைத்துக்கொள்ளவும் முடியும். இதைச் சாதாரணமாகச் செய்துகொள்வதில் எந்தச் சிக்கலும் இல்லை. ஆனால் குறுமதிகொண்ட மனிதன், குறுக்கு வழியில் சம்பாதிக்க நினைக்கிறான். எனவே சொத்துப் பத்திரம் ஒன்றைப் பழையதைப்போல் உருவாக்கி, இந்த இடம் என்னுடையதுதான் என்று சொல்லி, யாரோ ஒருவரிடம் விற்றுவிடுகிறான். அந்நிலத்தை வாங்கியவன் பிற்காலத்தில் தான் ஏமாற்றப்பட்டுவிட்டோம் என்பதை உணர்கிறான்.  ஆகவே சொத்து வாங்குவோர் மிகுந்த எச்சரிக்கையோடு இருக்க வேண்டியது கட்டாயமாகும்.

 

பிறரைப் போலப் பேசுதல்: குரலை மாற்றிப் பிறர் பேசுவதைப்போல் பேசுவதை இன்று ஒரு கலைத்திறனாகக் காண்கின்றார்கள். அக்கலையில் ஈடுபடுவோருக்கு ‘மிமிக்ரி ஆர்டிஸ்ட்’ (பல குரலில் பேசுபவர்) என்று பெயர்சூட்டியுள்ளார்கள். அக்கலையில் தேர்ச்சி பெற்றோருக்குப் ‘பல குரல் மன்னன்’ என்று பட்டமும் கொடுக்கின்றார்கள். அத்தகையோர் மேடைகளில் மக்கள் முன்னிலையில் பல குரல்களில் பேசுகிறபோது அதைக் கேட்டு அவர்கள் இரசித்துவிட்டுச் சென்றுவிடுவார்கள். அதில் சிக்கல் ஏதும் இல்லை. ஆனால் குயுக்திகொண்ட மனிதர்கள் சிலர் மக்களை ஏமாற்ற இக்கலையைப் பயன்படுத்துகின்றார்கள். அதுதான் ஆபத்தானது.

 

அன்னை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா கூறியதாவது: நான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்களிடம் ஒரு மனிதரைப் போல (ஏளனமாக) நடித்துக் காட்டிப் பேசினேன். அப்போது நபி  ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், “எனக்கு இன்னின்ன (செல்வங்கள்) கிடைக்கும் என்றிருந்தாலும் ஒரு மனிதரைப் போல (ஏளனமாக) நடித்துக் காட்டிப் பேசுவதை நான் விரும்பமாட்டேன்” என்று கூறினார்கள். (அபூதாவூத்: 4875/ 4232)

 

இன்று பெரும்பாலான தகவல் பரிமாற்றங்கள் புலனத்தில் (வாட்ஸ்அப்) நடைபெறுகின்றன. நமக்கு நெருங்கிய நண்பர் அல்லது உறவினரின் குரலில், “எனக்கு அவசரமாக இவ்வளவு தொகை வேண்டும்; உடனடியாக ஜீ-பே மூலம் இந்த எண்ணுக்கு அனுப்பு; என்னுடைய செல்லுக்குத் தொடர்புகொள்ள வேண்டாம். என்னுடைய செல் சார்ஜ் இல்லாமல் அணைந்துவிட்டது” என்று நமக்கு ஒரு குரல் பதிவு வரும். அதைக் கேட்கின்ற நாம், நண்பர் ஏதோ அவசரத்தில் இருக்கிறார்போலும் என நினைத்துக்கொண்டு அதில் குறிப்பிடப்பெற்ற தொகையை அந்த எண்ணுக்கு அனுப்பிவைப்போம். பிறகு நேரடியாக நண்பரைச் சந்திக்கின்றபோது நடந்ததைச் சொல்வோம். அவர் அதை மறுப்பார். பிறகு நாம் அந்தக் குரல் பதிவை அவருக்குக் காட்டுவோம். இறுதியில் நாம் ஏமாற்றப்பட்டுள்ளோம் என்பதை உணர்வோம்.

 

அந்தக் குரல் பதிவில் ‘என்னுடைய செல்லுக்குத் தொடர்புகொள்ள வேண்டாம்’ என்று இருந்தாலும் நாம்  ஒரு தடவை நம்முடைய நண்பரைத் தொடர்புகொண்டு விசாரிக்க முயல வேண்டும். அவ்வாறு தொடர்புகொண்டிருந்தால் நமக்கு உண்மை புலப்பட்டிருக்கும். ஆனால் செய்தியைக் கேட்டவுடன் பதற்றமடைகிற நாம், உடனடியாகப் பணத்தை அனுப்பிவிடுவதால்தான் இத்தகைய ஏமாற்றத்தை அனுபவிக்கிறோம். இவ்வாறு பற்பல வகைகளில் ஏமாற்றுவோர் நம்மைச் சுற்றி உள்ளனர்.  எனவே நாம் மிகுந்த எச்சரிக்கையோடு நடைபோட வேண்டும்.

 

இந்த ஏஐ தொழில்நுட்பம் மனிதர்கள் தம் செயல்திட்டங்களை மிக எளிதில் செய்துகொள்ள வேண்டும் எனும் உயரிய நோக்கில்தான் கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் குறுக்குப் புத்தியுடையோர் இதை வைத்து மனிதர்களை எவ்வாறு ஏமாற்றலாம் என்று யோசித்து, அதற்கான வேலைகளைச் செய்துவருகின்றார்கள். எனவே நாம் மிகுந்த எச்சரிக்கை உணர்வுடன் இருப்பதோடு நம்மைச் சார்ந்தவர்களையும் எச்சரிக்கை செய்ய வேண்டும். எந்த விஷயமாக இருந்தாலும் உடனடியாக நம்பிவிடாமல், சற்று ஆழ்ந்து சிந்தித்து, தெரிந்தவர்களிடம் ஆலோசனை செய்து, தீர விசாரித்து முடிவெடுக்க வேண்டும். எதையும் வாங்குவதானாலும் கொடுப்பதானாலும் பணத்தைச்  செலுத்துவதானாலும் நிதானம் தேவை; ஆலோசனை அவசியம் தேவை. அதுவே நம்மை ஏமாற்றத்திலிருந்து தடுக்கும்.

====================================











சனி, 6 செப்டம்பர், 2025

கூட்டு வியாபாரம்-இஸ்லாமிய வங்கி

  

     

-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.

இமாம் மதீனா பள்ளிவாசல், பட்டினம்பாக்கம் சென்னை-28  

 


 இஸ்லாத்தின் பார்வையில் கூட்டு வியாபாரம் (Partnership Business) என்பது "முஷாரகா’ என்ற ஆக்கப்பூர்வமான வடிவத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளது. இஸ்லாமியப் பொருளாதாரக் கொள்கையின் அடிப்படையில், கூட்டு வியாபாரம் சில நிபந்தனைகளுக்கும் நெறிமுறைகளுக்கும் உட்பட்டது.

 

 முஷாரகா என்றால் என்ன?: முஷாரகா என்பது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டோர் அல்லது நிறுவனங்கள் ஒன்றாக முதலீடு செய்து, இலாபத்தையும் இழப்பையும் ஓர் ஒப்பந்தத்தின் அடிப்படையில் பகிர்ந்து கொள்ளும் வியாபார வடிவம் ஆகும்.

 

முஷாரகா எனும் கூட்டு வியாபாரத்தில் ஈடுபடுவோர் நியாயமாகவும் நேர்மையாகவும் ஒப்பந்தம் செய்துகொள்ள வேண்டும். ஒவ்வொருவரின் முதலீடும் தெளிவாக இருக்க வேண்டும். ஒப்பந்தம் எழுத்துப்பூர்வமாக இருக்க வேண்டும். அனைத்துப் பங்காளிகளும் எவ்வளவு இலாபத்தை எதிர்பார்க்கிறார்கள் என்பதை ஒப்பந்தத்தில் வரையறுக்க வேண்டும்.

 

இலாபப் பங்கீடு (Profit Sharing): முதலீட்டின் அடிப்படையில் அல்லது இருவரும் ஏற்றுக்கொள்ளும் விகிதத்தில் இலாபம் பகிர்ந்துகொள்ளப்படும். ஆனால், உத்தரவாத இலாபம் (Guaranteed Profit) என்பது ஹராம் ஆகும். அதாவது வருகின்ற இலாபத்தில் இவ்வளவு ரூபாய் எனக்குக் கொடுத்துவிட வேண்டும் என்று யாரும் நிபந்தனை விதிக்க முடியாது.

 

இழப்புப் பங்கீடு (Loss Sharing): ஒருவேளை கூட்டு வியாபாரத்தில் எதிர்பாரா விதமாக இழப்பு ஏற்பட்டுவிட்டால், முதலீட்டின் விகிதத்துக்கு ஏற்ப இழப்பு பங்காளிகள் மத்தியில் பகிரப்படும். ஒருவரே எல்லா இழப்புகளையும் ஏற்க முடியாது; அது நீதியுமன்று.

 

ஹலால் வியாபாரம்: கூட்டுவியாபாரத்தில் ஈடுபடுவோர் இஸ்லாத்தின் சட்டங்களுக்கு எதிரான வியாபாரங்களில் ஈடுபடக் கூடாது. சான்றாக மதுவிற்பனை, சூதாட்டம், வட்டி சம்பந்தப்பட்ட தொழில்கள் போன்றவற்றில் ஈடுபடக்கூடாது. அது முற்றிலும் ஹராம் ஆகும். மாறாக ஹலாலான வியாபாரங்களில் மட்டுமே ஈடுபட வேண்டும். 

 

நம்பகத்தன்மை (அமானத்) முக்கியம்: ஒவ்வொரு பங்காளியும் நேர்மையோடும் நம்பகத்தன்மையோடும் பொறுப்புணர்வோடும் செயல்பட வேண்டும்.  குறிப்பாக இறையச்சத்தோடு இதில் ஈடுபட வேண்டும்.

 

முஷாரகாவின் அடிப்படையில் வியாபாரம்: நால்வர் ஒன்றாகச் சேர்ந்து ஒவ்வொருவரும் இரண்டு இலட்சம் எனச் சமமான தொகையை முதலீடாகப் போட்டு, கேஎஃப்சி மாதிரி ஒரு சிக்கன் கடை தொடங்கினார்கள். நால்வரும் மிகுந்த ஆர்வத்தோடு அத்தொழிலைச் செய்துவந்தார்கள். ஆண்டின் இறுதியில் இலாபத்தைக் கணக்கிட்டார்கள். அதை நான்கு பங்காகப் பிரித்து தலா ஒவ்வொரு பங்கை எடுத்துக்கொண்டார்கள். இதுதான் கூட்டு வியாபாரத்தின் பயன்.

 

அதன்பின் அந்நால்வரும் ஒன்றாகச் சேர்ந்து ஈட்டிய இலாபத்தில் நடுத்தரமான நிறுவனங்களைத் தேர்ந்தெடுத்து, அதில் கூட்டாக முதலீடு செய்தார்கள். ஈராண்டுகள் கழித்து அதில் கிடைத்த இலாபத்தைச் சமமாகப் பங்கிட்டுக் கொண்டார்கள். பின்னர் இஸ்லாமிய வங்கிகளில் கூட்டாக முதலீடு செய்தார்கள். அதில் ஓராண்டின் இறுதியில்  கிடைத்த தொகையைச் சமமாகப் பங்கிட்டுக்கொண்டார்கள். இவ்வாறு நால்வர் சேர்ந்து, இணைந்து தொடங்கிய ஒரு தொழில் வளர்ந்து பல்வேறு தளங்களில் முதலீடு செய்யுமளவிற்கு வளரலாம். இது கூட்டு முயற்சிக்குக் கிடைக்கும் வெற்றி எனலாம்.

 

இஸ்லாமிய வங்கி முறை: இது, பாரம்பரிய வங்கியியலிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு சமூகப் பொருளாதார அமைப்பாகும். இது வட்டி (interest) அடிப்படையிலான பணப் பரிமாற்றத்தை முற்றிலும் தவிர்த்து, இலாபப்பகிர்வு (profit-sharing) மற்றும் நேரடி முதலீட்டு முறைமைகளைப் பயன்படுத்துகிறது. இம்முறை இஸ்லாமிய ஷரீஅத் சட்டத்தின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ளதால், இது நியாயமானதொரு பொருளாதார மாற்றாகவும், சமூக நலனைப் பாதுகாக்கும் நடைமுறையாகவும் திகழ்கிறது.

 

இஸ்லாமிய வங்கியின் செயல்பாடு: இஸ்லாமிய வங்கிகள் பொதுமக்களிடமிருந்து பெறும் முதலீட்டு நிதியை, ‘முளாரபா’ எனப்படும் கூட்டாண்மை வணிக ஒப்பந்தத்தின் அடிப்படையில் வாங்குகின்றன. இதில் முதலீட்டாளர்கள் தங்கள் பணத்தை வங்கிக்கே ஒப்படைக்கின்றனர். வங்கி, அந்த நிதியைத் தொழில், வர்த்தகம் அல்லது சொத்துப் பரிமாற்றம் போன்ற முறைகளில் முதலீடு செய்து இலாபத்தை ஈட்டுகிறது.

 

இது தவிர, வங்கியின் வெற்றியும், நட்டமும் முதலீட்டாளர்களுடன் பகிர்ந்துகொள்ளப்படும். எனவே வட்டி விகிதம் என்ற உறுதியான தொகை இல்லாமல், உண்மையான வருமான அடிப்படையில் இலாபம் பகிர்ந்துகொடுக்கப்படும். இந்த முறையில் இலாபம் அதிகமாக இருந்தால், முதலீட்டாளருக்கு அதிக வருவாய் கிடைக்கும். குறைவாக இருந்தால், அவர் பெற்ற தொகையும் குறைவாகவே இருக்கும். ஒருவேளை நட்டம் ஏற்பட்டால், முதலீட்டாளருக்கும் அது உரிய பங்காகப் பகிரப்படும். இது ஒரு நெகிழ்வான முறைமையாக இருக்கின்றது. வங்கியில் வட்டியைப் பெறுவதைவிட இது மிகவும் நியாயமானது, ஏனெனில் இது ஒருவரின் நிலையான வருமானத்திற்காக மட்டும் பாடுபடுகிறதே தவிர மற்றொருவருக்கு நட்டத்தை ஏற்படுத்த முனைவதில்லை.

 

இஸ்லாமிய வங்கி எங்கு உள்ளது?: இஸ்லாமிய வங்கிகள் பெரும்பாலும் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள நாடுகளில் பரவலாக இயங்கி வருகின்றன. சவூதி அரேபியா, மலேசியா, இந்தோனேசியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளில் இவை வழக்கமான வங்கி முறையாகவே செயல்படுகின்றன. இந்தியாவை எடுத்துக்கொண்டால், இஸ்லாமிய வங்கிக்கு முழுமையான அரசு அனுமதி இன்னும் கிடைக்கவில்லை. ஆனால் இஸ்லாமிய வங்கி அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள இஸ்லாமியக் கூட்டுறவு வங்கிகள் (ஜன்சேவா கோ-ஆப்ரேட்டிவ் க்ரெடிட் சொசைட்டி) தற்போது இந்தியாவின் பல இடங்களில் இயங்கிக்கொண்டிருக்கின்றன. அது மும்பையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டுவருகிறது.

 

இந்தியா முழுவதும் தற்போது முப்பதுக்கும் மேற்பட்ட கிளைகள் உள்ளன, தமிழ்நாட்டின் முக்கிய இஸ்லாமிய நகரங்களான வாணியம்பாடி, திருநெல்வேலி, காயல்பட்டணம், மதுரை, லால்பேட்டை, நாகர்கோயில், இராமநாதபுரம் ஆகிய இடங்களில் கிளைகள் உள்ளன. மேலும் சென்னையின் திருவல்லிக்கேணி பகுதியில் ஒரு கிளை செயல்பட்டு வருகிறது. சென்னையிலுள்ளோர் அங்குச் சென்று வங்கிக் கணக்கைத் தொடங்கலாம். மேலும் தகவலுக்கு 9840550709 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். அதன் வலைப்பக்க முகவரி: www.janseva.in

 

ஃபிக்ஹ் சட்ட அடிப்படை - முளாரபா: இஸ்லாமிய வங்கி முறை முளாரபா எனும் ஃபிக்ஹ் (இஸ்லாமியச் சட்டம்) அடிப்படையில் இயங்குகிறது. இதில் இரண்டு முக்கியமான தரப்புகள் உள்ளன. முதலீட்டாளர் (Rabbul-Maal) என்பவர் பணம் கொடுப்பவர். முதலீட்டுப் பயனாளர் (Mudarib) என்பவர் பணத்தைக் கொண்டு வியாபாரம் செய்பவர். முதலீட்டாளர், தமது பணத்தை ஒப்பந்தத்தின் அடிப்படையில் மற்றொருவரிடம் கொடுக்கிறார். முதலீட்டுப் பயனாளர் அந்தப் பணத்தில் தொழில் செய்து வருமானம் ஈட்டுகிறார். இலாபத்தில், ஒப்பந்தத்தின்படி ஒரு பங்கை முதலீட்டாளருக்கு வழங்குகிறார். இதில் பணம் கொடுப்பவர் வியாபாரத்தில் நேரடியாக ஈடுபடுவதில்லை, ஆனால் இலாபத்தில் பங்கு பெறுகிறார். நட்டமடைந்தால், அவருடைய முதலீட்டில் ஒரு பங்கு குறையும்.

 

வட்டி இல்லா வணிகம்: இஸ்லாமிய வங்கியின் ஒரு முக்கியமான நோக்கம் - வட்டியை முற்றிலும் தவிர்ப்பதே ஆகும். இது நேரடியாகத் திருக்குர்ஆனின் கட்டளையைப் பின்பற்றுவதாகும். “அல்லாஹ் வியாபாரத்தை ஆகுமாக்கி, வட்டியைத் தடை செய்துள்ளான்.”  (அல்குர்ஆன் 2: 275) இதன்படி, வட்டி அடிப்படையில் கிடைக்கும் வருவாயை இஸ்லாம் சட்ட விரோதமாகக் கருதுகிறது. எனவே, இஸ்லாமிய வங்கி முறையில் வட்டி இல்லை; அதன் மாற்றாக இலாபப் பகிர்வு மட்டுமே உள்ளது.

 

ஏன் இதனைப் பயன்படுத்த வேண்டும்?: இஸ்லாமிய வங்கி முறை நியாயமானது; சமுதாயத்தில் சமூக நலனையும் பொருளாதார நலனையும் கட்டியெழுப்புகிறது; வட்டி எனும் அநீதியான சூழ்நிலைகளிலிருந்து பாதுகாக்கிறது; இலாபத்தில் பங்கு கொடுக்கின்றது. இத்தனை நன்மைகள் உள்ளபோதும், நாம் இதைப் பயன்பாட்டில் கொண்டுவராமல் இருப்பது ஏன்? முஸ்லிம்கள் மட்டுமின்றி, நியாயமான, மாறுபட்ட முதலீட்டு வாய்ப்புகளை நாடும் யாரும் இதைப் பயன்படுத்த முடியும். பயன்படுத்தியும் வருகின்றார்கள் என்பதே நிதர்சன உண்மை.

 

முடிவு: இஸ்லாமிய வங்கி முறை என்பது நவீனக் காலத்திலும் இஸ்லாமியச் சட்டத்தைப் பின்பற்றும் வகையில் பொருளாதார வளர்ச்சியையும் நலனையும் இலக்காகக் கொண்ட ஒரு முறையாகும். இது வட்டி இல்லாததுடன், நெகிழ்வான, நியாயமான வணிக முறைமையாக இருப்பதால், நம்மைப் பொருளாதாரச் சுமைகளிலிருந்து விடுவிக்கக் கூடியதாகும். இம்முறையை இன்னும் விரிவாக அறிந்து, பயன்படுத்திக் கொள்ளும்போது நம் சமூகத்தின் வளர்ச்சிக்கு இது ஒரு வலிமையான அடித்தளம் ஆகும்.

================================