-முனைவர்
மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.
இமாம்
மதீனா பள்ளிவாசல், பட்டினம்பாக்கம் சென்னை-28
இன்று
நாம் காணும் இடமெல்லாம் குற்றங்கள் மலிந்து காணப்படுகின்றன. திருட்டு, மோசடி, ஏமாற்றுதல், வன்புணர்வு, பெண்சீண்டல், விபச்சாரம், கொலை முதலிய பாவச் செயல்களும்
குற்றங்களும் நிறைந்துவிட்டன. நாள்தோறும்
இச்செய்திகளின்றி நாளிதழ்கள் இல்லை எனும் நிலை உருவாகிவிட்டது. அத்தோடு
புகைபிடித்தல், மது அருந்துதல், போதை ஊசி ஏற்றிக்கொள்ளுதல், போதை மருந்துகளை
உட்கொள்ளுதல் முதலான குற்றச் செயல்களையும் ஒரு சாரார் செய்துகொண்டிருக்கின்றார்கள்.
இவ்வளவு தீயச் செயல்களும் குற்றச் செயல்களும் பெருகியதன் காரணம் என்ன? குற்றம் நடைபெறுகிறபோது
அதைத் தட்டிக்கேட்போர் இல்லை; அல்லது குறைந்து விட்டனர் என்பதே.
குற்றச்
செயல்களில் ஈடுபடுவது பாவம் என ஊட்டி வளர்க்கப்படாத சிறுவர்கள் பெரியவர்களாக
வளர்ந்ததும் அவற்றைச் செய்யத் தொடங்கிவிடுகின்றார்கள். அவர்களுக்கு அவை குற்றச்
செயலாகத் தோன்றாமல் சாதாரண செயல்களாகவே தெரிகின்றன. மேலும் திரைப்படங்கள், தொலைக்காட்சிப் பெட்டிகள்
மூலம் குற்றச் செயல்கள் ஊக்குவிக்கப்படுகின்றன. அக்காட்சிகளைப் பார்க்கின்ற அந்த
இளைஞர்களின் மனங்களில் அவை மிக எளிதாகப் பதிவாகிவிடுகின்றன. எனவே அவர்களும்
அவற்றைச் செய்யும்போது அவர்களுக்கு எந்தவித வருத்தமும் ஏற்படுவதில்லை.
இதனால்
குற்றங்கள் குறித்தும் அவற்றைச் செய்தல் பாவம் என்பது குறித்தும் இளம்
பருவத்திலேயே பதிவு செய்ய வேண்டியது பெற்றோரின் கடமையாகும். நாம் செய்யும்
குற்றங்களை இறைவன் பார்த்துக் கொண்டிருக்கின்றான்; நாளை மறுமையில் அது குறித்து
நம்மை விசாரிப்பான் என்றும் இளவயதிலேயே பெற்றோர் தம் பிள்ளைகளுக்குச்
சொல்லிக்கொடுக்க வேண்டும். தந்தை லுக்மான் அலைஹிஸ்ஸலாம் தம் பிள்ளைக்குச் சொன்ன
அறிவுரையை நாம் திருக்குர்ஆனில் பார்க்கலாம்: (லுக்மான் தம் மகனை நோக்கி)
"என் அருமை மகனே! (நன்மையோ தீமையோ) அது ஒரு கடுகின் விதை அளவுக்கு
இருந்தாலும் சரி, அது (கரும்) பாறைகளுக்குள்ளோ, வானத்திலோ, பூமியின் ஆழத்திலோ
(மறைந்து) இருந்தபோதிலும் (உங்களிடம் கணக்குக் கேட்கும்போது) நிச்சயமாக அல்லாஹ்
அதையும் கொண்டு வந்துவிடுவான். ஏனென்றால், நிச்சயமாக அல்லாஹ் வெகு
நுட்பமான அறிவுடையவனாகவும் (அனைத்தையும்) நன்கு தெரிந்து வைத்திருப்பவனாகவும்
இருக்கிறான். (31: 16)
பாவம்
குறித்த அச்சத்தையும் இறைவனின் ஆற்றலையும் இது உணர்த்துகிறது. மிகச் சிறிய
பாவமாயினும் அதை எங்கிருந்துகொண்டு செய்தாலும், அதை உயர்ந்தோன் அல்லாஹ்
அறிவான்; நாளை அதை விசாரணைக்குக் கொண்டுவருவான் என்ற அச்சம்
ஒருவனின் மனத்தில் ஆழமாகப் பதிந்துவிட்டால் எந்தத் தீங்கையும் அவன் ஒருபோதும்
செய்யமாட்டான்.
தீரமிக்கோர்:
பெற்றோர் தம் பிள்ளைகளின் மனங்களில் இளம் வயதிலேயே பதியவைக்க வேண்டிய மற்றொரு
செய்தி, ‘நன்மையை ஏவு; தீமையைத் தடு’ என்பதுதான்.
இன்று பெரும்பாலோர் இந்த நற்செயலைக் கைவிட்டுவிட்டனர். தீமையைக் கண்டவுடன் அதைத்
தடுக்க முற்பட வேண்டும். அதைத் தடுக்க முற்படாததாலேயே, ‘நம்மைக் கேட்க யார்
இருக்கிறார்?’ என்ற துணிவு அவர்களுக்கு ஏற்பட்டுவிடுகிறது. ஒருவன்
தவறு செய்யும்போது, நான்கு பேர் அவனை எதிர்த்துக் குரல் கொடுத்தால், அவன் அடுத்த தடவை அந்தத்
தவறைச் செய்ய அஞ்சுவான். இல்லையேல் முதல் தடவை அச்சத்தோடு செய்தவன், அடுத்தடுத்த தடவைகளில்
துணிவோடு செய்யத் தொடங்கிவிடுவான்.
எனவேதான்
பெற்றோர் தம் பிள்ளைகளுக்கு இளம் வயதிலேயே பதிய வைக்க வேண்டிய ஓர் அறிவுரையை நபி
லுக்மான் அலைஹிஸ்ஸலாம் மூலம் நமக்கு அல்லாஹ் உணர்த்துகிறான்: “என்னருமை மகனே!
தொழுகையைக் கடைப்பிடி, நன்மையான செயல்களை ஏவி, தீமையான செயல்களிலிருந்து
(மனிதர்களை) விலக்கி வா. உனக்கேற்படும் சிரமங்களைப் பொறுமையுடன் நீ
சகித்துக்கொள். நிச்சயமாக இது தீரமிக்கச் செயல்களுள் ஒன்றாகும்.” (31: 17)
நன்மையை
ஏவித் தீமையைத் தடுக்கும் நற்பணியை எல்லோரும் அவ்வளவு எளிதாகச் செய்துவிட
முடியாது. ஏனெனில் அதைச் செய்யும்போது
அவர்கள் எதிர்வினைகளைச் சந்திக்க வேண்டிவரும். அவ்வாறு அவர்கள் எதிர்வினைகளை எதிர்கொள்ள நேரிடும்போது
அவர்கள் பொறுமையை மேற்கொள்ள வேண்டும். பொறுமை இல்லையேல் இந்த நற்பணியைச் செய்ய
இயலாது. பொறுமையோடு மீண்டும் மீண்டும் செய்தால்தான் தவறுகளையும் குற்றங்களையும்
தடுத்து நிறுத்த முடியும். இதனால்தான் அல்லாஹ் அந்த வசனத்தின் இறுதியில், “இது தீரமிக்கச் செயல்களுள்
ஒன்றாகும்” என்று கூறுகின்றான்.
தடுக்கும்
உணர்வு வேண்டும்: தீமையைக் கண்டவுடன் அதைத் துணிவுடன் தடுக்கும் உணர்வு பிறக்க
வேண்டும். அந்நேரத்தில் தனிப்பட்டதொரு துணிவு ஏற்பட வேண்டும். துணிவில்லாதோர்
தீமையைத் தடுக்க முடியாது. கீழ்க்காணும் நபிமொழி அதை உறுதிப்படுத்துகிறது:
“உங்களுள்
ஒருவர் ஒரு தீமையை (-மார்க்கத்திற்கு முரணான ஒரு செயலை)க் கண்டால் அவர் அதைத் தமது
கையால் தடுக்கட்டும். இயலா விட்டால் தமது நாவால் (சொல்லித் தடுக்கட்டும்).
அதுவும் இயலாவிட்டால் தமது உள்ளத்தால் (அதை வெறுத்து ஒதுக்கட்டும்). இந்த (இறுதி)
நிலையானது இறைநம்பிக்கையின் பலவீனமா(ன நிலையா)கும்” என்று அல்லாஹ்வின் தூதர்
ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். (முஸ்லிம்: 78)
ஓர்
இளைஞன் சிகரெட் புகைப்பதைப் பார்க்கும் நாம் அந்த சிகரெட்டை அவனுடைய கையிலிருந்து
தட்டிவிட்டு, “சிகரெட் புகைத்தல் கூடாது, அது ஒரு முஸ்லிமின்
பண்புக்கு எதிரானது” என்றெல்லாம் அறிவுரை சொல்ல வேண்டும். இதை நாம் ஒரு தடவை
துணிவோடு செய்துவிட்டால், அடுத்த தடவை அவன் சிகரெட் புகைக்கப் பயப்படுவான்.
பின்னர் அப்பழக்கத்தை அவன் விட்டுவிடலாம். மாறாக அவன் சிகரெட் புகைப்பதை நாம்
பார்த்துவிட்டு, கண்டுகொள்ளாமல் இருந்துவிட்டால், பின்னொரு காலத்தில் அவன்
மதுக் கடையில் நிற்பான். ஆக குற்றங்கள் பெருகுவதற்கு நாம்தாம் காரணம்; நம் இயலாமைதான் காரணம்.
நாம்
செய்யும் உதவி: ‘நமக்கேன் வம்பு’ என்று பொறுப்புணர்வற்றுச் செல்வது நம்முடைய
இயலாமையாகும். அதேநேரத்தில் குற்றம் செய்பவனை, அக்குற்றத்தைச் செய்யவிடாமல்
தடுத்து நிறுத்துவது நாம் அவனுக்குச் செய்யும் உதவியாகும். இத்தகைய மாற்றுச்
சிந்தனையை அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நமக்குக் கற்றுத்
தந்துள்ளார்கள்.
(ஒரு
முறை) அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், “உன் சகோதரன் அநியாயக்காரனாக
இருந்தாலும் அநீதி இழைக்கப்பட்டவனாக இருந்தாலும் அவனுக்கு நீ உதவிசெய்'' என்று சொன்னார்கள்.
அப்போது ஒரு மனிதர், “அல்லாஹ்வின் தூதரே! அநீதி இழைக்கப்பட்டவனுக்கு நான்
உதவி செய்வேன். (அது சரிதான்.) அநியாயக்காரனுக்கு எப்படி நான் உதவி செய்வேன்? கூறுங்கள்!'' என்றார். நபி ஸல்லல்லாஹு
அலைஹி வஸல்லம், “அவனை அநியாயம் செய்ய விடாமல் நீ தடுப்பாயாக! இதுவே நீ
அநீதியாளனுக்குச் செய்யும் உதவியாகும்'' என்றார்கள். (புகாரீ: 6952)
தீமையைத்
தடுக்காவிட்டால்: அநியாயத்தை நாம் தடுக்க முன்வரவில்லையென்றால் ஒரு நாள் அதன்
தாக்கம் நம்மீதும் ஏற்படும் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். சான்றாக, ஃபலஸ்தீன் நாட்டில் ஃகாஸா
நகரில் இஸ்ரேல் இராணுவத்தால் முஸ்லிம்கள் இனப்படுகொலை செய்யப்படுவதைக் கண்டு
அண்டையிலுள்ள முஸ்லிம் நாடுகள் எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் இது நாள் வரை அமைதி
காத்து வந்தன. அதனால் தற்போது அது கத்தார் நாட்டின்மீதும் தாக்குதல்
தொடுத்துள்ளது. அதன் பின்னர்தான் அரபு நாடுகளெல்லாம் ஒன்று சேர்ந்து இனி வரும்
காலங்களில் இது மாதிரியான தாக்குதல் எந்த நாட்டின்மீதும் நடத்தக்கூடாது என்று
அமெரிக்காவிடம் கோரிக்கை வைத்துள்ளன.
ஆசிரியராகவே
இருந்தாலும்...: தவறு செய்வோர் நம்மைவிட இளையோராக இருந்தால் நாம் எதையும் யோசிக்காமல்
எளிதாகத் தடுத்த நிறுத்தத் துணிந்துவிடுவோம். ஆனால் தவறு செய்வோர் நம்மைவிட
வயதில் மூத்தவராகவோ நமக்குக் கற்பிக்கும் ஆசிரியராகவோ இருந்தால் அவரை
எதிர்த்துப் பேச, அவர் செய்வதைத் தடுக்க நமக்குத் துணிவு ஏற்படுமா? ஆழமான இறைநம்பிக்கையே
ஆசிரியரானாலும் தட்டிக்கேட்கத் தூண்டும்.
அதேநேரத்தில் அவரின் வயதுக்கு மதிப்பளித்து மிகக் கண்ணியமாக அவரிடம்
நடந்துகொள்ள வேண்டும்.
வரலாற்று
நிகழ்வு ஒன்று திருக்குர்ஆனில் கூறப்படுகிறது. அது ஆசிரியருக்கும் மாணவருக்கும்
இடையே நடைபெற்றது. ஹிள்ரு அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் கல்வி கற்கச் சென்ற மூஸா
அலைஹிஸ்ஸலாம் தம் ஆசிரியரிடம், ‘உங்களுக்கு அல்லாஹ் கற்றுக்கொடுத்தவற்றிலிருந்து
உங்களிடம் நான் கற்றுக்கொள்ள வந்துள்ளேன்’ என்று கூற, ‘நீர் என்னிடம் பொறுமையாக
இருப்பீரா?’ என்று கேட்கிறார். ‘ஆம்! நான் இன் ஷாஅல்லாஹ் பொறுமையாகவே இருப்பேன்’ என்று கூறுகிறார்.
‘நானாக எதையும் கூறாத வரை நீர் எதையும் என்னிடம் கேட்கக்கூடாது’ என்ற
நிபந்தனையோடு இருவரும் செல்கின்றார்கள்.
முதலில்
அவ்விருவரும் கப்பலில் பயணம் செல்கின்றார்கள். அப்போது அவர் அக்கப்பலைத்
துளையிடுகிறார். அதைக் கண்ட மூஸா அலைஹிஸ்ஸலாம் இருவருக்கிடையே உள்ள நிபந்தனையை
மறந்துவிட்டு, தவறு என்று தெரிந்தவுடன், “கப்பலில் துளையிடுகின்றீரே, அதில் பயணம் செய்யும் நாம்
மூழ்கி இறந்துவிடுவோமே?” என்று கூறினார். அதற்கு அந்த ஆசிரியர், “நீர் என்னுடன் பொறுமையாக
இருக்க மாட்டீர் என்று நான் ஏற்கெனவே சொன்னேன் அல்லவா?” என்றார். “நான் அதை
மறந்துவிட்டேன். அதற்காக என்னைத் தண்டித்துவிடாதீர்” என்று கூறினார். பின்னர்
இருவரும் ஒரு பகுதியில் நடந்துசென்று கொண்டிருந்தனர். அங்குச் சிறுவர்கள்
விளையாடிக்கொண்டிருந்தார்கள். அவர்களுள் ஒரு சிறுவரின் தலையைத் திருகி, அவரைக் கொன்றுவிட்டார்.
அதைப்
பார்த்துக் கொதித்தெழுந்த மூஸா அலைஹிஸ்ஸலாம் தம் ஆசிரியரிடம், “எந்தப் பாவமும் செய்யாத
பச்சிளம் பாலகரை இப்படி அநியாயமாகக் கொன்றுவிட்டீரே?” என்றார். அதற்கு அவர், “நீர் என்னுடன் பொறுமையாக
இருக்க மாட்டீர் என்று நான் ஏற்கெனவே சொன்னேன் அல்லவா?” என்றார். அதற்கு அவர், “இனி ஒரு தடவை நான் உம்மிடம்
எதையேனும் கேட்டால் அதுதான் நாம் பிரிந்துசெல்லும் நேரமாகும். எனவே இனி நான்
உம்மிடம் எதையும் கேட்க மாட்டேன்” என்றார்.
பின்னர்
அவ்விருவரும் ஒரு சிற்றூருக்குச் சென்றனர். அங்கு அவர்களுக்கு யாரும் உணவு கொடுத்து
உபசரிக்கவில்லை. திரும்பி வந்துகொண்டிருந்தபோது அங்கு ஒரு சுவர் கீழே
விழுந்துவிடும் நிலையில் இருந்தது. அதைத்
தாங்கிப் பிடித்துச் செப்பனிட்டு நிலைநிறுத்தினார் ஆசிரியர். அதைக் கண்ட மூஸா
அலைஹிஸ்ஸலாம் தம் ஆசிரியரிடம், “உணவு கொடுத்து உபசரிக்காத ஊரார்க்கு ஒன்றுமே இன்றிச்
செப்பனிட்டுக் கொடுத்துள்ளீரே. அவர்களிடம் சொல்லிவிட்டுச் செய்திருந்தால்
அவர்கள் ஏதேனும் கூலி கொடுத்திருப்பார்கள். அதை வைத்து நான் உணவு
சாப்பிட்டிருக்கலாம் அல்லவா?” என்றார். அதைக் கேட்ட அந்த ஆசிரியர், “இதுதான் நாம் இருவரும்
பிரியும் நேரம் ஆகும். இருப்பினும் உம்மால் பொறுமையாக இருக்க முடியாத என்னுடைய
அச்செயல்களுக்கான விளக்கத்தை உமக்குச் சொல்லிவிடுகிறேன்” என்று அதற்கான
விளக்கத்தைக் கூறலானார்.
“முதலில்
நான் கப்பலில் ஏன் துளையிட்டேன் என்றால், அக்கரையில் உள்ள ஓர் அரசன், அங்கு வருகின்ற நல்ல கப்பல்களையெல்லாம்
அபகரித்துக்கொள்கிறான். அவ்வாறு இந்தக் கப்பலையும் அபகரித்துக்கொண்டுவிடக்
கூடாது என்பதற்காகவே நான் அவ்வாறு செய்தேன். இரண்டாவது, அந்தச் சிறுவனை நான் ஏன்
கொலை செய்தேன் என்றால், அவன் வளர்ந்து பெரியவனாகித் தம் பெற்றோரை
இறைமறுப்புக்குத் திருப்பும் நிலை உண்டாகும். எனவேதான் அவனைக் கொலை செய்தேன்.
மூன்றாவது, அந்தச் சிற்றூரில் இருந்த சுவரைச் செப்பனிட்டு
நிறுத்தினேன். ஏனென்றால் அச்சுவருக்குக் கீழ் ஒரு புதையல் உள்ளது. அது அநாதைச்
சிறுவர்கள் இருவருக்குரியது. அவர்கள் பெரியவர்களாகின்ற வரை அச்சுவர் பாதுகாப்பாக
நிற்க வேண்டும் என்பதற்காகவே அவ்வாறு செய்தேன். ஆக இவற்றையெல்லாம் நான் என்
விருப்பப்படி செய்யவில்லை. மாறாக என் இறைவனின் கட்டளைப்படியே செய்தேன்” என்றார்.
இந்நிகழ்வு
சுட்டிக்காட்டுவது என்னவெனில், தீமையைச் செய்தவர் யாராக இருந்தாலும் அதைத் தட்டிக்
கேட்க வேண்டும் என்பதைத்தான். முன் நிபந்தனையிட்டுக் கல்வி கற்கச் சென்றாலும், அதையெல்லாம் ஒருபுறம்
வைத்துவிட்டு, கண்முன்னே ஒருவர் செய்யும் தீமையைக் கண்டுவிட்டு
எப்படி ஒருவரால் அமைதியாக இருக்க முடியும் என்ற உணர்வைத்தான் அந்த நிகழ்வுகள் மூஸா
நபிக்கு ஊட்டின. எனவே அவர் உடனுக்குடன் அதை எதிர்த்துக் குரல் கொடுத்தார்.
“(நம்பிக்கையாளர்களே!)
உங்களுள் ஒரு கூட்டத்தார் (மனிதர்களைச்) சிறந்ததன் பக்கம் அழைத்து நன்மையைச்
செய்யும்படி ஏவி, பாவமான செயல்களிலிருந்து அவர்களை விலக்கிக் கொண்டு
இருக்கட்டும். இத்தகையோர்தாம் வெற்றி பெற்றவர்கள்” (3: 104) என்று உயர்ந்தோன்
அல்லாஹ் கூறுகின்றான்.
ஆகவே நம்
கண்முன் நடைபெறும் தீமை எத்தகையதாக இருந்தாலும் அதைச் செய்வோர் யாராக இருந்தாலும்
அவரைத் தடுத்து நிறுத்த வேண்டும். அதுதான் நம்முடைய வலுவான இறைநம்பிக்கையின்
அடையாளமாகும். அத்தகைய துணிவையும் இறைநம்பிக்கையையும் ஏக இறைவன் அல்லாஹ் நமக்கு
அருள்வானாக. நன்மையை ஏவித் தீமையைத் தடுக்கும் சிறந்த சமுதாயமாக நம்மை அவன் வாழ
வைப்பானாக.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக